ஆசியா மைனரில் கிறிஸ்தவம் பரவுகிறது
ஆ சியா மைனரில் (முக்கியமாக, இன்றைய துருக்கியில்) பொ.ச. முதல் நூற்றாண்டில் அநேக கிறிஸ்தவ சபைகள் செழித்தோங்கின. ஏராளமான யூதர்களும் புறதேசத்தாரும் கிறிஸ்தவர்கள் பிரசங்கித்த நற்செய்திக்குச் செவிசாய்த்தார்கள். பைபிள் அகராதி ஒன்று இவ்வாறு சொல்கிறது: “சிரியா-பாலஸ்தீனாவைத் தவிர ஆசியா மைனரில்தான் வெகு முன்னதாகவும் வெகு விரிவாகவும் கிறிஸ்தவ அமைப்பு வளர்ச்சி அடைந்தது.”
பலதரப்பட்ட ஆதாரங்களிலிருந்து தகவல்களைத் திரட்டுவதன்மூலம் இந்தப் பகுதியில் கிறிஸ்தவம் பரவியதைப்பற்றி நாம் முழுமையாக அறிந்துகொள்ளலாம். கிடைத்திருக்கிற தகவல்களிலிருந்து நாம் எப்படிப் பயன் அடையலாம் என்பதைக் கவனிப்போம்.
ஆசியா மைனரில் முதன்முதலாக கிறிஸ்தவர்கள்
ஆசியா மைனரில் கிறிஸ்தவம் பரவுவதற்கு வழிவகுத்த முதல் முக்கியச் சம்பவம் பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளன்று நடந்தது. அப்பொழுது, பாலஸ்தீனாவுக்கு வெளியே குடியிருந்த யூதர்கள், யூத மதத்திற்கு மாறிய புறதேசத்தார் உட்பட பல மொழிகளைப் பேசியவர்கள் கூட்டமாக எருசலேமில் கூடியிருந்தார்கள். இவர்களுக்கு இயேசுவின் அப்போஸ்தலர்கள் நற்செய்தியைப் பிரசங்கித்தார்கள். பல்வேறுபட்ட நபர்கள் கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா,a பிரிகியா, பம்பிலியா ஆகிய பகுதிகளிலிருந்து வந்தார்களென சரித்திரப் பதிவு காட்டுகிறது; இவை ஆசியா மைனரை ஆக்கிரமித்திருக்கும் பெரும்பான்மையான பகுதிகளாகும். வந்திருந்தவர்களில் சுமார் 3,000 பேர் கிறிஸ்தவர்கள் பிரசங்கித்த நற்செய்தியை ஏற்றுக்கொண்டு முழுக்காட்டுதல் பெற்றார்கள். புதிதாய் பெற்ற நம்பிக்கையோடு அவர்கள் வீடு திரும்பினார்கள்.—அப்போஸ்தலர் 2:5-11, 41.
அடுத்தத் தகவலை, ஆசியா மைனரில் அப்போஸ்தலன் பவுல் மேற்கொண்ட முதல் மிஷனரி பயணத்தைப் பற்றிய பைபிள் பதிவிலிருந்து அறிகிறோம். பொ.ச. 47/48 வாக்கில் பவுலும் அவருடைய கூட்டாளிகளும் முதல் மிஷனரி பயணத்தைத் துவங்கினார்கள்; அப்போது, சீப்புருவிலிருந்து ஆசியா மைனருக்கு கப்பலில் சென்று, பம்பிலியாவிலுள்ள பெர்கே பட்டணத்தில் கரையிறங்கினார்கள். பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியா நகரில் அவர்கள் பிரசங்கித்த செய்திக்கு அநேகர் செவிசாய்த்ததைக் கண்டு பொறாமையால் பொங்கியெழுந்த யூதர்கள் அவர்களை எதிர்த்தார்கள். தென்கிழக்கிலுள்ள இக்கோனியா பட்டணத்திற்கு பவுல் சென்றபோது இந்த மிஷனரிகளைக் கொடூரமாக நடத்துவதற்கு மற்ற யூதர்கள் திட்டம் தீட்டினார்கள். அருகிலுள்ள பட்டணமாகிய லீஸ்திராவின் மக்கள் முதலில் உணர்ச்சிவசப்பட்டு பவுலை ஒரு கடவுள் என்று சொன்னார்கள். ஆனால், அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலும் எதிர்த்த யூதர்கள் இங்கு வந்தபோது அந்தக் கும்பலைச் சேர்ந்தோர் பவுல்மீது கல்லெறிய ஆரம்பித்தார்கள், சாகும்படி அவரை அம்போவென விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு பவுலும் பர்னபாவும் தெர்பைக்குப் புறப்பட்டுப் போனார்கள். ரோமர்களின் ஆட்சிக்குட்பட்ட கலாத்தியாவில் உள்ள தெர்பையில் இருந்தவர்கள் லிக்கவோனியா மொழி பேசினார்கள். சபைகள் ஒழுங்கமைக்கப்பட்டன, மூப்பர்கள் நியமிக்கப்பட்டார்கள். இவ்வாறு, பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிறகு சுமார் 15 ஆண்டுகள் கழித்து ஆசியா மைனரில் கிறிஸ்தவம் நன்கு வேரூன்றியது.—அப்போஸ்தலர் 13:13–14:26.
பொ.ச. 49-லிருந்து 52 வாக்கில் தன்னுடைய இரண்டாவது பயணத்தின்போது பவுலும் அவரோடு சென்றவர்களும் தரைமார்க்கமாக லீஸ்திராவுக்கு முதலில் பயணப்பட்டார்கள்; பெரும்பாலும் அவர்கள் பவுலுடைய சொந்த ஊரான சிலிசியா நாட்டிலுள்ள தர்சு பட்டணம் வழியாகப் போயிருக்கலாம். மீண்டும் லீஸ்திராவிலுள்ள சகோதரர்களைப் பார்த்துவிட்டு வடக்கே சென்ற பிறகு, பித்தினியாவிலும் ஆசியாவிலும் “வசனத்தைச் சொல்ல” பவுல் முயற்சி செய்தார். என்றாலும், பரிசுத்த ஆவி அவரைத் தடுத்தது. ஏனெனில், அந்தப் பகுதிகளில் பிற்பாடு நற்செய்தி பிரசங்கிக்கப்படவிருந்தது. அதற்குப் பதிலாக, ஆசியா மைனரின் வடமேற்குப் பகுதிகள் வழியாக கடலோரப் பட்டணமான துரோவாவுக்கு அவரை கடவுள் வழிநடத்தினார். பிறகு, ஒரு தரிசனத்தின்மூலம் ஐரோப்பாவில் நற்செய்தியை பவுல் பிரசங்கிக்கும்படி செய்தார்.—அப்போஸ்தலர் 16:1-12; 22:3.
பொ.ச. 52-லிருந்து 56 வாக்கில் பவுலின் மூன்றாவது மிஷனரி பயணத்தின்போது அவர் மீண்டும் ஆசியா மைனர் வழியாகச் சென்று ஆசியாவின் முக்கியத் துறைமுகப் பட்டணமான எபேசுவை அடைந்தார். முன்பு, தன்னுடைய இரண்டாவது மிஷனரி பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய சமயத்தில் அவர் அங்கு தங்கியிருந்தார். அந்தப் பட்டணத்தில் ஒரு கிறிஸ்தவ தொகுதியினர் ஊழியத்தில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வந்தார்கள்; பவுலும் அவரைச் சேர்ந்தவர்களும் அவர்களோடுகூட சுமார் மூன்று வருடங்கள் தங்கியிருந்தார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் பல விதமான பிரச்சினைகளும் ஆபத்துகளும் குறுக்கிட்டன; எபேசியர்களுக்கு மதத்தின் பெயரில் கொள்ளை லாபத்தைப் பெற்றுத்தந்த வியாபாரத்தைக் கட்டிக்காப்பதற்காக அந்தப் பட்டணத்தைச் சேர்ந்த தட்டான்கள் தூண்டிவிட்ட கலகம் அவற்றுள் ஒன்று.—அப்போஸ்தலர் 18:19-26; 19:1, 8-41; 20:31.
எபேசுவில் மிஷனரி ஊழியம் செய்தது பெருமளவு பலன்களைத் தந்தது தெளிவாகத் தெரிகிறது. “ஆசியாவில் குடியிருந்த யூதரும் கிரேக்கருமாகிய எல்லாரும் கர்த்தராகிய இயேசுவின் வசனத்தைக் கேட்டார்கள்” என்று அப்போஸ்தலர் 19:10 சொல்கிறது.
ஆசியா மைனரில் ஏற்பட்ட முன்னேற்றங்கள்
எபேசுவில் பவுல் தங்கியிருந்த காலம் முடிவடையப்போகும் சமயத்தில் கொரிந்தியர்களுக்கு அவர் இவ்வாறு எழுதினார்: “ஆசியா நாட்டிலுள்ள சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள்.” (1 கொரிந்தியர் 16:19) எந்தச் சபைகளை பவுல் மனதில் வைத்து அதை எழுதினார்? பெரும்பாலும் கொலோசே, லவோதிக்கேயா, எராப்போலியா ஆகியவற்றில் இருந்த சபைகளை அவர் உட்படுத்தியிருக்கலாம். (கொலோசெயர் 4:12-16) “முயற்சி எடுத்து எபேசுவில் மிஷனரி ஊழியம் செய்ததால், சிமிர்னா, பெர்கமு, சர்தை, பிலதெல்பியா ஆகியவற்றில் சபைகள் உருவாயின எனச் சொல்வது நியாயமாகத் தெரிகிறது. . . . இவையெல்லாம், எபேசுவிலிருந்து 192 கிலோமீட்டர் தொலைவுக்குள்தான் இருந்தன; அருமையான சாலைகளால் இணைக்கப்பட்டிருந்தன” என்று பவுலும் அவருடைய சரித்திரமும் என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது.
இதனால், பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிறகு சுமார் 20 ஆண்டுகள் கழித்து ஆசியா மைனரின் தெற்கிலும் மேற்கிலும் ஏராளமான கிறிஸ்தவ சபைகள் இருந்தன. அதன் பிற பகுதிகளைப்பற்றி என்ன சொல்லலாம்?
பேதுருவின் கடிதங்களைப் பெற்றவர்கள்
சில வருடங்களுக்குப் பிறகு, சுமார் பொ.ச. 62-லிருந்து 64 வரையான ஆண்டுகளில், கடவுளுடைய ஆவியின் வழிநடத்துதலால் தன்னுடைய முதல் கடிதத்தை அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். அவர், பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா ஆகியவற்றிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அதை எழுதினார். பெரும்பாலும் இந்தப் பகுதிகளில் கிறிஸ்தவ சபைகள் இருந்திருக்கலாம் என்பதையும், அவற்றின் மூப்பர்கள், ‘மந்தையை மேய்ப்பதற்கு’ அறிவுறுத்தப்பட்டார்கள் என்பதையும் அவருடைய கடிதம் சுட்டிக்காட்டுகிறது. எப்பொழுது இந்தச் சபைகள் பிறந்தன?—1 பேதுரு 1:1; 5:1-3.
பேதுருவின் கடிதங்களைப் பெற்றவர்கள் வாழ்ந்த சில பகுதிகளில், அதாவது ஆசியா, கலாத்தியா போன்ற பகுதிகளில், பவுல் நற்செய்தியைப் பிரசங்கித்திருந்தார். என்றாலும், கப்பத்தோக்கியாவிலோ பித்தினியாவிலோ அவர் பிரசங்கிக்கவில்லை. இந்தப் பகுதிகளில் கிறிஸ்தவம் எவ்வாறு பரவியது என்பதை பைபிள் நமக்குச் சொல்வதில்லை. ஆனால், யூதர்களும் யூத மதத்திற்கு மாறியவர்களும் பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளன்று எருசலேமில் கூடியிருந்தார்கள்; பிறகு, தங்கள் வீடுகளுக்குத் திரும்பினார்கள். இவர்கள் மூலமாக அங்கே கிறிஸ்தவம் பரவியிருக்கலாம். எவ்வாறாயினும், பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிறகு, சுமார் 30 ஆண்டுகள் கழித்து, தன்னுடைய கடிதங்களை பேதுரு எழுதியபோது, சபைகள் “ஆசியா மைனர் முழுவதும் பரவிக் கிடந்தன” என்று ஓர் அறிஞர் சொன்னது எவ்வளவு உண்மை என்பது தெளிவாகப் புலப்படுகிறது.
வெளிப்படுத்துதலில் குறிப்பிடப்பட்ட ஏழு சபைகள்
ரோமர்களுக்கு எதிராக யூதர்கள் செய்த கலகம் பொ.ச. 70-ல் எருசலேம் அழிக்கப்படுவதற்கு வழிவகுத்தது. இதில் தப்பியோடிய சில யூத கிறிஸ்தவர்கள் ஆசியா மைனரில் அடைக்கலம் புகுந்திருக்கலாம்.b
கிட்டத்தட்ட பொ.ச. முதல் நூற்றாண்டின் முடிவில் இயேசு கிறிஸ்து ஆசியா மைனரிலிருந்த ஏழு சபைகளுக்கு அப்போஸ்தலன் யோவான் மூலமாகக் கடிதங்களை அனுப்பினார். எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா ஆகிய சபைகளுக்கு இந்தக் கடிதங்களை அனுப்பினார். ஆசியா மைனரின் இந்தப் பகுதியில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் ஒழுக்கக்கேடு, பிரிவினை, விசுவாச துரோகம் போன்ற பல்வேறு ஆபத்துகளை ஏற்கெனவே சந்தித்து வந்தார்கள் என்பதும் அந்தக் கடிதங்களிலிருந்து தெரிகிறது.—வெளிப்படுத்துதல் 1:9, 11; 2:14, 15, 20.
பணிவான, மனமார்ந்த சேவை
அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தில் நாம் வாசிப்பதைவிட அதிக விஷயங்கள் முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவம் பரவுதற்குக் காரணமாய் இருந்தன. அப்போஸ்தலர் புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ள சம்பவங்களில் யாவரும் அறிந்த அப்போஸ்தலர்களான பேதுருவும் பவுலும் இடம்பெறுகிறார்கள்; ஆனால், இன்னாரென்று பெயர் குறிப்பிடப்படாத இன்னும் அநேகர் எங்கும் பிரசங்கித்து வந்தார்கள். ஆசியா மைனரில் காணப்பட்ட முன்னேற்றங்கள், ஆரம்பகால கிறிஸ்தவர்கள் இயேசுவின் பின்வரும் கட்டளையை மனதில் பதித்திருந்தார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன: ‘ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்.’—மத்தேயு 28:19, 20.
அதேபோல இன்றும், உலகம் முழுவதிலும் யெகோவாவின் சாட்சிகளுடைய உண்மையுள்ள செயல்களில் மிகக் குறைந்தளவு மட்டுமே உலகளாவிய சகோதரத்துவத்திற்குத் தெரிய வருகிறது. முதல் நூற்றாண்டில் ஆசியா மைனரிலிருந்த உண்மையுள்ள மற்ற அநேக சுவிசேஷகர்களைப் போலவே, இன்றும் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் பெரும்பாலோரும் நன்கு அறியப்படாதவர்களாகவே இருக்கிறார்கள். என்றாலும், மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்படுகிறார்கள், அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்கிறார்கள், மேலும், மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக தாழ்மையோடு தங்களையே அர்ப்பணிப்பதில் பரமதிருப்தி காண்கிறார்கள்.—1 தீமோத்தேயு 2:3-6.
[அடிக்குறிப்புகள்]
a கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்திலும் இந்தக் கட்டுரையிலும் “ஆசியா” என்பது ஆசியா மைனரின் மேற்குப் பகுதியான ரோம மாகாணத்தைக் குறிக்கிறது, ஆசியா கண்டத்தை அல்ல.
b பொ.ச. 66-க்கு சற்று முன்பாக, “அப்போஸ்தலர்களைக் கொலை செய்ய சதா திட்டம் தீட்டப்பட்டதால் யூதேயாவை விட்டு அவர்கள் வெளியேறினார்கள். ஆனால், அவர்கள் சென்ற இடங்களிலெல்லாம் கிறிஸ்துவின் பலத்தால் நற்செய்தியைப் பிரசங்கித்தார்கள்” என்று சரித்திர ஆசிரியரான ஜொஸிஃபஸ் (பொ.ச. 260-340) கூறுகிறார்.
[பக்கம் 11-ன் பெட்டி]
பித்தினியாவிலும் பொந்துவிலும் ஆரம்பகால கிறிஸ்தவம்
பித்தினியா, பொந்துவின் ஒருங்கிணைந்த பகுதி ஆசியா மைனரின் கருங்கடல் ஓரத்தில் இருந்தது. இங்கு வாழ்ந்தவர்களின் அன்றாட வாழ்க்கையைப்பற்றி இந்தப் பகுதியைச் சேர்ந்த ஓர் அரசாங்க அதிகாரியான பிளினி இளையவர், ரோமப் பேரரசர் டிராஜனுக்கு எழுதிய கடிதத்திலிருந்து அதிகத்தைத் தெரிந்துகொள்ளலாம்.
இந்தப் பகுதியில் இருந்த சபைகளுக்கு பேதுருவின் கடிதங்கள் அனுப்பப்பட்டு சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, கிறிஸ்தவர்களை எவ்வாறு நடத்த வேண்டுமென்று டிராஜனிடம் பிளினி ஆலோசனை கேட்டார். “கிறிஸ்தவர்கள் சோதிக்கப்பட்டதை நான் நேரடியாகப் பார்த்ததே இல்லை. அதனால் அவர்களைத் தண்டிப்பதற்கு நிலையான விதிமுறைகள் எனக்குத் தெரியவில்லை. எல்லா வயதுகளிலும் அந்தஸ்துகளிலும் உள்ள ஆண்களும் பெண்களுமான ஏராளமானோர் சோதிக்கப்படுவதற்குக் கொண்டுவரப்படுகிறார்கள்; இது தொடருமென்று தெரிகிறது. நகரங்கள் மாத்திரமல்ல கிராமங்களும், நாட்டுப்புற பகுதிகளும்கூட படுமோசமான இந்தச் சமயக்கோட்பாட்டினால் கெட்டுப்போயிருக்கின்றன” என்று பிளினி எழுதினார்.
[பக்கம் 9-ன் படம்/தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
பவுலின் பயணங்கள்
முதலாம் மிஷனரி பயணம்
சீப்புரு
பம்பிலியா
பெர்கே
(பிசீதியாவின்) அந்தியோகியா
இக்கோனியா
லீஸ்திரா
தெர்பை
இரண்டாம் மிஷனரி பயணம்
சிலிசியா
தர்சு
தெர்பை
லீஸ்திரா
இக்கோனியா
(பிசீதியாவின்) அந்தியோகியா
பிரிகியா
கலாத்தியா
துரோவா
மூன்றாம் மிஷனரி பயணம்
சிலிசியா
தர்சு
தெர்பை
லீஸ்திரா
இக்கோனியா
(பிசீதியாவின்) அந்தியோகியா
எபேசு
ஆசியா
துரோவா
[ஏழு சபைகள்]
பெர்கமு
தியத்தீரா
சர்தை
சிமிர்னா
எபேசு
பிலதெல்பியா
லவோதிக்கேயா
[மற்ற இடங்கள்]
எராப்போலியா
கொலோசே
லீசியா
பித்தினியா
பொந்து
கப்பத்தோக்கியா
[பக்கம் 9-ன் படம்]
அந்தியோகியா
[பக்கம் 9-ன் படம்]
துரோவா
[படத்திற்கான நன்றி]
© 2003 BiblePlaces.com
[பக்கம் 10-ன் படம்]
எபேசுவிலுள்ள அரங்கசாலை. —அப்போஸ்தலர் 19:29
[பக்கம் 10-ன் படம்]
பெர்கமுவில் யூப்பித்தர் தெய்வத்திற்கு ஏற்படுத்தப்பட்ட பலிபீடத்தின் அடிப்பகுதி. இந்த நகரத்திலிருந்த கிறிஸ்தவர்கள், ‘சாத்தானுடைய சிங்காசனமிருந்த இடத்தில்’ குடியிருந்தார்கள்.—வெளிப்படுத்துதல் 2:13
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.