‘யெகோவாவே, என்னைச் சோதித்துப்பாரும்’
‘இ ருதயங்களைச் சோதிக்கிறவர் கர்த்தர் [அதாவது, யெகோவா].’ (நீதிமொழிகள் 17:3) இது நமக்கு மிகுந்த ஆறுதலை அளிக்க வேண்டும். ஏன்? ஏனென்றால், கண்களால் பார்ப்பதை மட்டும் வைத்து நியாயம் தீர்க்கும் மனிதர்களைப்போல் அல்லாமல் நம்முடைய பரலோகத் தகப்பன் “இருதயத்தைப் பார்க்கிறார்.”—1 சாமுவேல் 16:7.
நம்முடைய உள்ளார்ந்த எண்ணங்களையும் விருப்பங்களையும் அறிந்திருக்கிற மிகச் சிறந்த மதிப்பீட்டாளர்கள் என நம்மைப்பற்றி நாமே சொல்லிக்கொள்ள முடியாது. ஏன்? ஏனென்றால், ‘எல்லாவற்றைப் பார்க்கிலும் நம்முடைய இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?’ என்றாலும், கடவுள் அதை அறிந்திருக்கிறார், “கர்த்தராகிய நானே . . . இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்” என்று அவர் சொல்கிறார். (எரேமியா 17:9, 10) ஆம், யெகோவா நம்முடைய உள்ளான எண்ணங்கள் உட்பட நம் ‘இருதயத்தையும்,’ ஆழமான சிந்தனைகளும் உணர்ச்சிகளுமான ‘உள்ளிந்திரியங்களையும்’ புரிந்திருக்கிறார்.
சோதனை ஏன்?
ஆகவே, பூர்வத்தில் வாழ்ந்த தாவீது ராஜா இப்படிக் கடவுளிடம் சொன்னதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. “கர்த்தாவே [அதாவது, யெகோவாவே], என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; என் உள்ளிந்திரியங்களையும் என் இருதயத்தையும் புடமிட்டுப்பாரும்.” (சங்கீதம் 26:2) சொல்லிலும் செயலிலும் தாவீது அப்பழுக்கற்று சுத்தமாக இருந்ததால் யெகோவா தன்னைச் சோதிப்பதில் தனக்குப் பயமில்லை என்று நினைத்தாரா? நிச்சயமாகவே அப்படி நினைக்கவில்லை. நம்மைப் போலவே தாவீது அபூரணராக இருந்தார், கடவுளுடைய நெறிமுறைகளுக்கு இசைய பூரணமாய் நடந்துகொள்ள முடியாதவராய் இருந்தார். தன்னுடைய பலவீனங்களினால் அவர் மோசமான பல தவறுகளைச் செய்தார்; ஆனாலும், அவர் ‘மன உத்தமமாய்’ நடந்துகொண்டார். (1 இராஜாக்கள் 9:4) எப்படி? கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொண்டு, தன்னுடைய வழியை சரிப்படுத்திக்கொண்டார். கடவுளுக்கு அவர் காட்டிய பக்தி முழுமையாக இருந்தது.
இன்று நம்மைப்பற்றி என்ன சொல்லலாம்? நாம் அபூரணர்கள் என்பதையும் சொல்லாலும் செயலாலும் தவறுகள் செய்யலாம் என்பதையும் யெகோவா அறிந்திருக்கிறார். என்றாலும், எதிர்காலத்தை அறியும் அவருடைய திறமையைப் பயன்படுத்தி நம்முடைய வாழ்க்கை முறையை அவர் தீர்மானிப்பதில்லை. சுதந்திரமாய் தேர்ந்தெடுக்கும் உரிமையோடு அவர் நம்மைப் படைத்திருக்கிறார்; கருணையோடு அவர் கொடுத்திருக்கும் இந்தப் பரிசுக்கு மரியாதை காட்டுகிறார்.
என்றாலும், சில சமயங்களில் நம்முடைய எண்ணங்கள் உட்பட நம் உள்ளான மனிதனை யெகோவா ஓரளவு சோதிக்கிறார் என்றே சொல்லலாம். நம்முடைய இருதய நிலையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்புகளை அனுமதிப்பதன்மூலம் அவர் இதைச் செய்யலாம். மேலும், நம் மனதுக்குள் புதைந்திருக்கிற விருப்பங்களை வெளிப்படுத்துவதற்குப் பல்வேறு சூழ்நிலைகளையோ சோதனைகளையோகூட அவர் அனுமதிக்கலாம். நாம் யெகோவாவுக்கு எவ்வளவு பக்தியோடும் உண்மையோடும் இருக்கிறோமெனக் காட்டுவதற்கு இது நமக்கு வாய்ப்பளிக்கிறது. நம்முடைய விசுவாசத்தின் தரத்தையும், நாம் “ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும்” இருக்கிறோமா என்பதையும் நிரூபிப்பதற்கு யெகோவா இதுபோன்ற சோதனைகளை அனுமதிக்கிறார்.—யாக்கோபு 1:2-4.
பூர்வகால விசுவாச சோதனை
யெகோவாவின் ஊழியர்களின் விசுவாசத்திற்கும் உள்ளெண்ணங்களுக்கும் வரும் சோதனைகள் ஒன்றும் புதிதல்ல. உதாரணத்திற்கு, முற்பிதாவான ஆபிரகாமை எடுத்துக்கொள்வோம். “தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்.” (ஆதியாகமம் 22:1) இந்த வார்த்தைகள் சொல்லப்பட்டபோது, கடவுள்மீது ஆபிரகாமுக்கு இருந்த விசுவாசம் ஏற்கெனவே சோதிக்கப்பட்டிருந்தது. பல வருடங்களுக்கு முன்னால், செல்வச் செழிப்புமிக்க ஊர் என்ற பட்டணத்தைவிட்டு முன்பின் தெரியாத இடத்திற்குப் புறப்பட்டுச் செல்லும்படி ஆபிரகாமை யெகோவா கேட்டுக்கொண்டார். (ஆதியாகமம் 11:31; அப்போஸ்தலர் 7:2-4) ஊர் பட்டணத்தில் வீடு வாசல்களோடு வசதியாய் வாழ்ந்த ஆபிரகாம், கானான் தேசத்தில் பல பத்தாண்டுகள் வசித்தபோதிலும் சொந்தமாக எந்த நிலத்தையும் வாங்கவில்லை. (எபிரெயர் 11:9) அவர் நாடோடியாக வாழ்ந்ததால் அவரும் அவருடைய குடும்பத்தாரும் பஞ்சத்தாலும் ஆயுதம் ஏந்திய கும்பல்களாலும் அந்தப் பகுதியை ஆண்ட பொய் மத அரசர்களாலும் சில ஆபத்துகளை எதிர்ப்பட வாய்ப்பிருந்தது. நாடோடியாய் வாழ்ந்த காலம் முழுவதும் அவருடைய விசுவாசம் மிகச் சிறந்ததென நிரூபிக்கப்பட்டது.
பிறகு, யெகோவா மிகப் பெரிய சோதனை ஒன்றை ஆபிரகாமுக்கு வைத்தார். “உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, . . . அவனைத் தகனபலியாகப் பலியிடு” என்று அவரிடம் யெகோவா சொன்னார். (ஆதியாகமம் 22:2) ஆபிரகாமுக்கு ஈசாக்கு ஒரு சாதாரண மகனல்ல. ஆபிரகாமுக்கும் அவருடைய மனைவி சாராளுக்கும் பிறந்த ஒரே செல்லப் பிள்ளை அவர்தான். கடவுளுடைய வாக்குறுதியின்படி, ஆபிரகாமுடைய “புத்திரசந்தானம்” கானான் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும், அதே சமயத்தில் அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்கும்; வாக்குத்தத்தத்தின் பிள்ளையான இந்த ஈசாக்கு மூலமாகவே இவையெல்லாம் நிறைவேறுமென ஆபிரகாம் முழுமையாய் நம்பியிருந்தார். உண்மையில், ஆபிரகாம் எதிர்பார்த்தவரும், கடவுளின் அற்புதத்திற்குப் பிறகு பிறந்தவருமான ஈசாக்குதான் அந்த மகன்.—ஆதியாகமம் 15:2-4, 7.
யெகோவாவின் இந்தக் கட்டளையைப் புரிந்துகொள்வது ஆபிரகாமுக்கு இடியாப்பச் சிக்கலைப்போல் படுகஷ்டமாக இருந்திருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறது, அல்லவா? மனித பலியை யெகோவா கேட்பாரா? வாழ்க்கை அஸ்தமிக்கும் காலத்தில் குழந்தை பாக்கியத்தை அனுபவிக்கும் ஓர் இன்பத்தை ஆபிரகாமுக்குக் கொடுத்துவிட்டு, பிறகு அந்த மகனையே பலியிடும்படி யெகோவா ஏன் சொன்னார்?a
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தெளிவான எந்தவொரு பதிலும் இல்லாமலேயே ஆபிரகாம் உடனடியாகக் கீழ்ப்படிந்தார். கடவுள் சொன்ன மலைக்குச் செல்ல அவருக்கு மூன்று நாட்கள் ஆயின. அங்கே அவர் ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதன் மேல் விறகுக் கட்டைகளை அடுக்கினார். இப்பொழுது அந்தச் சோதனை இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. வெட்டுவதற்கான கத்தியை ஆபிரகாம் கையிலெடுத்து தன் மகனை கொல்லப்போகிற சமயத்தில் ஒரு தேவதூதன் மூலமாக யெகோவா அவரைத் தடுத்து நிறுத்தி, “நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன்” என்று சொன்னார். (ஆதியாகமம் 22:3, 11, 12) இந்த வார்த்தைகளைக் கேட்ட ஆபிரகாம் மகிழ்ச்சியில் எவ்வளவாய் பூரிப்படைந்திருப்பாரென நினைத்துப் பாருங்கள்! ஆபிரகாமின் விசுவாசத்தைப்பற்றி யெகோவா முன்பு கணித்தது சரியாகவே இருந்தது. (ஆதியாகமம் 15:5, 6) அதன்பின், ஈசாக்குக்குப் பதிலாக ஓர் ஆட்டுக்கடாவை ஆபிரகாம் அங்கு பலியிட்டார். பின்பு, ஆபிரகாமின் வித்து பற்றிய வாக்குறுதிகளின் உடன்படிக்கையை யெகோவா உறுதிசெய்தார். யெகோவாவின் நண்பரென ஆபிரகாம் ஏன் அழைக்கப்பட்டாரென இப்பொழுது புரிந்துகொள்ள முடிகிறது.—ஆதியாகமம் 22:13-18; யாக்கோபு 2:21-23.
நம் விசுவாசமும் சோதிக்கப்படுகிறது
இன்று கடவுளுடைய ஊழியர்களும் சோதனைகளை எதிர்ப்பட்டே தீரவேண்டுமென நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். என்றாலும், நம்முடைய விஷயத்தில், யெகோவா செய்யச் சொல்லியதில் இருப்பதைவிட அவர் நடப்பதற்கு அனுமதித்திருப்பதில் அதிகமான சோதனை இருக்கலாம்.
“கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (2 தீமோத்தேயு 3:12) பள்ளித் தோழர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் உறவினர்களிடமிருந்தும் அக்கம்பக்கத்தாரிடமிருந்தும் தவறான செய்திகளைப் பெறும் அரசாங்க அதிகாரிகளிடமிருந்தும் இதுபோன்ற துன்புறுத்தல்கள் வரலாம். இது திட்டுவதையும் உடல்ரீதியான துன்புறுத்தலையும் அதோடு ஒரு கிறிஸ்தவருடைய வாழ்க்கையைப் பாதிக்கும் அளவுக்கு அதில் தலையிடுவதையும் உள்ளடக்குகிறது. பொதுவாக எல்லாருக்கும் வரும் நோய்கள், ஏமாற்றங்கள், அநியாயங்கள் போன்ற பிரச்சினைகளையும் உண்மைக் கிறிஸ்தவர்கள் எதிர்ப்படுகிறார்கள். இதுபோன்ற எல்லாத் துன்பங்களும் ஒருவருடைய விசுவாசத்தைச் சோதிக்கின்றன.
ஒருவருடைய விசுவாசம் சோதிக்கப்படுவதால் விளையும் நன்மைகளை அப்போஸ்தலன் பேதுரு வலியுறுத்தினார். “பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்” என்று அவர் சொன்னார். (1 பேதுரு 1:6, 7) ஆம், சோதனைகளின் விளைவுகள் பொன்னை நெருப்பில் புடமிடுவதற்கு ஒப்பாய் இருக்கின்றன. பொன்னைப் புடமிடுகையில் கசடுகள் நீக்கப்பட்டு, சொக்கத் தங்கம் இன்னதென்று தெரியவருகிறது. இதே போன்றுதான் நாம் சோதனைகளை எதிர்ப்படும்போது நம்முடைய விசுவாசமும் புடமிடப்படுகிறது.
உதாரணமாக, விபத்தோ இயற்கைப் பேரழிவோ நம் துன்பங்களுக்குக் காரணமாகலாம். என்றாலும், விசுவாசத்தில் உண்மையாய் நிலைத்திருப்பவர்கள் கப்பலே கவிழ்ந்ததைப்போல் மட்டுக்குமீறிய கவலைக்கு இடங்கொடுக்க மாட்டார்கள். “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என்ற யெகோவாவின் வாக்குறுதியில் அவர்கள் ஆறுதல் காண்கிறார்கள். (எபிரெயர் 13:5) அவர்கள் தொடர்ந்து ஆன்மீகக் காரியங்களுக்கு முதலிடம் கொடுக்கிறார்கள், தங்களுக்கு உண்மையில் தேவைப்படுகிறவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு எடுக்கும் முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிப்பார் என்று அவர்கள் உறுதியாய் நம்புகிறார்கள். கஷ்டகாலங்களில் அவர்களுடைய விசுவாசம் அவர்களைத் தாங்குகிறது, தேவையற்ற கவலையால் சூழ்நிலை மேலும் மோசமாகிவிடாதபடி அவர்களைப் பாதுகாக்கிறது.
உண்மை என்னவென்றால், நம் விசுவாசத்தில் எங்கு குறைவுபட்டிருக்கிறோம் என்பதை சோதனைகள் வெளிப்படுத்துகின்றன, அவற்றைச் சரிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தால் அவை நமக்கு நன்மையாய் முடிகின்றன. ஒருவர் தன்னையே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘என்னுடைய விசுவாசத்தை எவ்வாறு பலப்படுத்திக் கொள்வது? கடவுளுடைய வார்த்தையைக் கவனமாகப் படிப்பதிலும் அவற்றைத் தியானிப்பதிலும் அதிக நேரம் செலவிடுவதற்கு அவசியம் இருக்கிறதா? சகோதர சகோதரிகளுடன் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகளை நான் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்கிறேனா? என்னுடைய கவலைகளைப்பற்றி யெகோவா தேவனிடம் சொல்வதற்குப் பதிலாக என்னையே முழுமையாய் சார்ந்திருக்கிறேனா?’ என்றாலும், இதுபோன்ற சுயபரிசோதனை ஆரம்பம் மட்டுமே.
தன் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்வதற்கு ஆன்மீகப் பசியை முன்னேற்றுவிப்பது ஒருவருக்குத் தேவைப்படலாம்; அதற்கு அவர், ‘திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையைக்’ காட்ட வேண்டும். (1 பேதுரு 2:3; எபிரெயர் 5:12-14) “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்” என்று சங்கீதக்காரன் விளக்கிச் சொன்ன மனுஷனைப்போல நாம் இருப்பதற்குக் கடும் முயற்சிசெய்ய வேண்டும்.—சங்கீதம் 1:2.
இதற்கு பைபிளைப் படித்தால் மட்டும் போதாது, அதிகத்தைச் செய்ய வேண்டும். கடவுளுடைய வார்த்தை நமக்கு என்ன சொல்கிறது என்பதை சிந்திப்பதும் அதன் அறிவுரைகளை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதும் முக்கியமானதாய் இருக்கிறது. (யாக்கோபு 1:22-25) இதன் மூலமாக, கடவுள் மீதுள்ள நம் அன்பு வளரும், நம் ஜெபங்கள் குறிப்பானவையாகவும் இருதயப்பூர்வமானவையாகவும் இருக்கும்; அதோடு, அவர் மீதுள்ள நம்முடைய விசுவாசம் பலப்படும்.
சோதிக்கப்பட்ட விசுவாசத்தின் மதிப்பு
நாம் யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு விசுவாசம் முற்றிலும் இன்றியமையாதது என அறிவதே அதைப் பலப்படுத்திக்கொள்ள பெரும் தூண்டுதலாய் அமைகிறது. “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்” என்று பைபிள் நமக்கு நினைப்பூட்டுகிறது. (எபிரெயர் 11:6) எனவே, “என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்” என்று இயேசுவிடம் கெஞ்சிய அந்த மனிதனைப்போலவே நாமும் உணர வேண்டும்.—மாற்கு 9:24.
நம்முடைய விசுவாசம் சோதிக்கப்படுவது மற்றவர்களுக்கும் உதவும். உதாரணமாக, ஒரு கிறிஸ்தவர் தனக்கு அன்பான ஒருவரை மரணத்தில் பறிகொடுக்கும்போது, கடவுளுடைய வாக்குறுதியான உயிர்த்தெழுதலில் அவர் வைத்திருக்கிற அசைக்க முடியாத விசுவாசம் அவரைத் தாங்கிப் பலப்படுத்துகிறது. அவர் அதிக துக்கப்பட்டாலும், ‘நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கிப்பது’ இல்லை. (1 தெசலோனிக்கேயர் 4:13, 14) ஒரு கிறிஸ்தவருடைய விசுவாசம் அவரைத் தாங்கிப் பலப்படுத்துவதைப் பார்க்கும் மற்றவர்கள், உண்மையில் மதிப்பு வாய்ந்த ஏதோவொன்று அவரிடம் இருப்பதை உணருகிறார்கள். தாங்களும் அத்தகைய விசுவாசத்தைப் பெற்றுக்கொள்ள அது அவர்களுடைய இருதயங்களை தூண்டுகிறது; கடவுளுடைய வார்த்தையைக் கற்றுக்கொள்ளவும் இயேசு கிறிஸ்துவுக்கு சீஷராகவும் வேண்டுமென அவர்களை உந்துவிக்கிறது.
சோதிக்கப்பட்ட விசுவாசம் மிகவும் மதிப்பு வாய்ந்தது என்பதை யெகோவா அறிந்திருக்கிறார். கூடுதலாக, நம் விசுவாசம் உண்மையில் தாங்கிப் பலப்படுத்தும் சக்தி படைத்ததா என்பதைக் காண விசுவாச சோதனைகள் நமக்கு உதவுகின்றன. அவை, நம்முடைய விசுவாசம் எங்கு குறைவுபட்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கவும், காரியங்களைச் சரிசெய்துகொள்ளவும் நமக்கு உதவுகின்றன. கடைசியாக, சோதனைகளை நாம் வெற்றிகரமாய் சமாளிப்பது மற்றவர்கள் இயேசுவின் சீஷர்களாவதற்கு உதவலாம். எனவே, அடுக்கடுக்கான சோதனைகளால் பரீட்சிக்கப்பட்ட பலமான விசுவாசத்தைக் காத்துக்கொள்ள நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோமாக; அப்படிச் செய்தால், அந்த விசுவாசம், “இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது . . . புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.”—1 பேதுரு 1:7.
[அடிக்குறிப்பு]
a ஈசாக்கினுடைய “பலியின்” அடையாளப்பூர்வ முக்கியத்துவத்தைத் தெரிந்துகொள்வதற்கு, 1989, ஜூலை 1 தேதியிட்ட ஆங்கில காவற்கோபுரம், பக்கம் 22-ஐக் காண்க.
[பக்கம் 13-ன் படம்]
ஆபிரகாமின் விசுவாச செயல்கள் அவரை யெகோவாவின் நண்பராக்கின
[பக்கம் 15-ன் படம்]
நம் விசுவாசம் உண்மையில் தாங்கிப் பலப்படுத்தும் சக்தி படைத்ததா என்பதைச் சோதனைகள் நிரூபிக்கலாம்
[பக்கம் 12-ன் படத்திற்கான நன்றி]
From the Illustrated Edition of the Holy Scriptures by Cassell, Petter, & Galpin