அநியாயத்தை உங்களால் சகித்துக்கொள்ள முடியும்
வா ழ்நாளில் அநியாயத்தை எதிர்ப்படாதவர்கள் யாராவது இருக்க முடியுமா? சில அநியாயங்கள் கற்பனையாக மட்டுமே இருக்கலாம், ஆனால், மற்றவை நிஜமானவையாய் இருக்கின்றன.
நமக்கு அநியாயம் இழைக்கப்படும்போது உணர்ச்சியில் நாம் புண்படுகிறோம், ஆன்மீகத் தீங்கும் நமக்கு ஏற்படலாம். சூழ்நிலையைச் சரிப்படுத்த வேண்டுமென்ற தணியாத தாகம் நமக்கு இருக்கலாம். ஏன்? ஒரு காரணம், “நியாயக்கேடில்லாத” நம் படைப்பாளரான யெகோவா தேவன் நியாயம் என்ற ஆலமரத்தின் விதையை நம் இருதயத்திற்குள் விதைத்திருக்கிறார். (உபாகமம் 32:4; ஆதியாகமம் 1:26) என்றாலும், அநியாயம் என்று நாம் நினைக்கிற சூழ்நிலைகளை ஒருவேளை எதிர்ப்படலாம். முற்காலத்தில் வாழ்ந்த ஞானமுள்ள ஒரு நபர் இப்படிச் சொன்னார்: “நான் சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கொடுமைகளையெல்லாம் சிந்தித்துப்பார்த்தேன்; இதோ, ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுவாரில்லை; ஒடுக்குகிறவர்கள் பட்சத்தில் பெலம் இருந்தது, அப்படியிருந்தும் தேற்றுவாரில்லை.” (பிரசங்கி 4:1) அப்படியானால், அநியாயத்தை நாம் எவ்வாறு சகிப்பது?
உண்மையில் அநியாயம் என்பது என்ன?
அநியாயம் என்பது, நியாயமான நெறிமுறைகளை மீறும் நிலை அல்லது பழக்கம். எவை மனிதர்களுக்கான நியாயமான நெறிமுறைகளாய் இருக்கும்? நியாயம் எது அநியாயம் எது என்ற நெறிமுறைகளை வகுக்கும் உரிமை உண்மையில் நீதியுள்ளவராயும், மாறாதவராயும் உள்ள நம் படைப்பாளருக்கே இருக்கிறது. அவருடைய நோக்குநிலையில் நியாயம் என்பது, ‘அநியாயம் செய்யாமல்’ “ஜீவப்பிரமாணங்களில்” நடப்பதை உட்படுத்துகிறது. (எசேக்கியேல் 33:15) எனவே, முதல் மனிதனை அகக்குரலாயிருக்கிற மனசாட்சியோடு யெகோவா படைத்தார்; சரியானதையும் தவறானதையும் வேறுபடுத்திப் பார்க்க அது அவனுக்கு உதவியது. (ரோமர் 2:14, 15) கூடுதலாக, தம்முடைய வார்த்தையாகிய பைபிளில் நியாயம் அல்லது அநியாயம் பற்றிய கருத்துகளை யெகோவா விளக்கியிருக்கிறார்.
நமக்கு அநியாயம் இழைக்கப்பட்டதாக நாம் நினைத்தால் என்ன செய்வது? உண்மையிலேயே அநியாயம் இழைக்கப்பட்டதா இல்லையா என்பதைக் காண அந்த விஷயத்தை பாரபட்சமின்றி ஆராய்ந்து பார்ப்பது சிறந்ததாயிருக்கும். உதாரணத்திற்கு, எபிரெய தீர்க்கதரிசியான யோனா எதிர்ப்பட்ட சூழ்நிலையைக் கவனியுங்கள். நினிவே நகருக்கு வரவிருந்த அழிவைப் பற்றிய செய்தியை அறிவிக்கும் வேலையை யெகோவா அவருக்குக் கொடுத்தார். அதை செய்யாமல் முதலில் அவர் தப்பி ஓடிவிட்டார். என்றாலும் கடைசியாக, அவர் நினிவேக்குச் சென்றார், வரவிருந்த அழிவைக் குறித்து அந்த நகரவாசிகளை எச்சரித்தார். அவர்கள் மனந்திரும்பியதால், அந்த நகரத்தையும் அதில் குடியிருந்தவர்களையும் காப்பாற்ற யெகோவா முடிவு செய்தார். ஆனால், யோனா எவ்வாறு உணர்ந்தார்? ‘யோனாவுக்கு இது மிகவும் விசனமாயிருந்தது; அவர் கடுங்கோபங்கொண்டார்.’ (யோனா 4:1) அதை தனக்கு யெகோவா இழைத்த படுமோசமான அநியாயம் என அவர் நினைத்தார்.
இருதயங்களை ஆராய்கிறவரும், ‘நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறவருமான’ யெகோவா தவறிழைக்க மாட்டாரென நமக்கு நன்றாகவே தெரியும். (சங்கீதம் 33:5) யெகோவாவின் தீர்மானம் அவருடைய பரிபூரண நியாயத்திற்கு இசைவாய் இருந்ததை யோனா கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. நமக்கு அநியாயம் இழைக்கப்பட்டதாக நினைக்கும்போது, ‘இதை யெகோவா வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கிறாரோ?’ என்று நம்மையே கேட்டுக்கொள்ளலாம்.
மல்லுக்கட்டும் அநியாயம்
அநியாயத்தால் அவதிப்பட்டவர்களின் அநேக உதாரணங்கள் பைபிளில் காணப்படுகின்றன. சிக்கலான பிரச்சினைகளை அவர்கள் எவ்வாறு சமாளித்தார்கள் என்பதை ஆராய்வதிலிருந்து நாம் அநேக விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். பாறாமை பிடித்த சகோதரர்களால் எகிப்திற்கு அடிமையாக விற்கப்பட்ட யோசேப்பைப்பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள். எகிப்தில் அவருடைய எஜமானரின் மனைவி அவரை ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுத்த முயற்சி செய்தாள், அதற்கு அவர் இணங்காதபோதோ ஒழுக்கக்கேட்டில் ஈடுபட அவர் முயன்றதாகப் பொய் குற்றம் சாட்டினாள். விளைவு? யோசேப்பு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனாலும், அவருடைய கால் விலங்குகளைவிட அவருடைய விசுவாசம் உறுதியானதாய் இருந்தது. அவருக்கு இழைக்கப்பட்ட அநியாயம், தன்னுடைய ஆன்மீகத்தையோ கடவுள்மீது வைத்திருந்த நம்பிக்கையையோ குறைத்துப்போட அவர் இடங்கொடுக்கவில்லை.—ஆதியாகமம் 37:18-28; 39:4-20; சங்கீதம் 105:17-19.
அநியாயத்தைச் சந்தித்த இன்னொரு நபர் நாபோத். இஸ்ரவேலின் ராஜாவான ஆகாபுடைய மனைவி யேசபேலின் நயவஞ்சக சூழ்ச்சிக்கு அவர் பலியானார். அரண்மனைக்கு அருகில் இருந்த நாபோத்தின் பரம்பரை நிலத்தை பேராசைபிடித்த ராஜா கேட்டான். பரம்பரைச் சொத்தை நிரந்தரமாக விற்கும் உரிமை ஓர் இஸ்ரவேலனுக்கு இல்லாதிருந்தது, எனவே, நிலத்திற்காக ராஜா கொடுக்க முன்வந்த பணத்தை நாபோத் ஏற்க மறுத்துவிட்டார். (லேவியராகமம் 25:23) அப்போது, கடவுளையும் ராஜாவையும் தூஷித்ததாக அவர்மீது குற்றம் சாட்ட ஆகாபின் பொல்லாத மனைவி இரண்டு பொய் சாட்சிகளைத் தயார்படுத்தினாள். அதன் விளைவாக, நாபோத்தும் அவருடைய மகன்களும் சாகடிக்கப்பட்டார்கள். தன்னைக் கொல்வதற்கு மக்கள் கற்களை எடுத்தபோது நாபோத் எப்படி உணர்ந்திருப்பாரெனக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்!—1 இராஜாக்கள் 21:1-14; 2 இராஜாக்கள் 9:26.
என்றாலும், கிறிஸ்து இயேசுவுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களோடு ஒப்பிட மேற்குறிப்பிடப்பட்ட இவையெல்லாம் ஒன்றுமே இல்லை. அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தவறானதாகவும் விசாரணை சட்ட விரோதமானதாகவும் இருந்தது. நியாயாசனத்தில் இருந்த ரோம ஆளுநர் சரியென்று அறிந்திருந்ததைச் செய்வதற்குத் திராணியில்லாதிருந்தார். (யோவான் 18:38-40) ஆம், இதுவரை சாத்தான் யாருக்கும் இழைக்காத மாபெரும் அநியாயத்தை கிறிஸ்து இயேசுவுக்கு இழைத்தான்.
யெகோவா அநியாயத்தைக் கண்டுகொள்ளாதவரென இந்த உதாரணங்கள் காட்டுகின்றனவா? இல்லவே இல்லை! யெகோவா இந்த விஷயங்களை வெறுமனே மனிதக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கவில்லை. (ஏசாயா 55:8, 9) அடிமையாக விற்கப்பட்டதால்தான் தன்னுடைய குடும்பத்தாரை யோசேப்பால் காப்பாற்ற முடிந்தது. ஒரு கொடிய பஞ்சம் அவருடைய குடும்பத்தை வாரிக்கொண்டு போகுமுன்னே அவர் எகிப்தின் உணவு நிர்வாகியாக ஆனார். அந்தவொரு அநியாயத்தை யெகோவா அனுமதிக்காதிருந்தால் யோசேப்பு சிறைச்சாலைக்குச் சென்றிருக்க முடியாது என்பதை நினைவில் வையுங்கள். அங்கு அவரோடு சிறையிலிருந்த இருவரின் கனவுகளுக்கு யோசேப்பு விளக்கம் அளித்தார்; அவர்களில் ஒருவன் பிற்பாடு யோசேப்பைப்பற்றி பார்வோனிடம் சொன்னான், அது அவர் உணவு நிர்வாகியாவதற்கு வழிசெய்தது.—ஆதியாகமம் 40:1; 41:9-14; 45:4-8.
நாபோத்தின் விஷயத்தில் என்ன ஆனது? இந்த விஷயத்தையும், யெகோவா பார்த்ததைப் போலவே பார்க்க முயற்சி செய்யுங்கள். நாபோத்துடைய உயிரற்ற உடல் தரையில் கிடந்தாலும் இறந்தோரை உயிர்த்தெழுப்பும் சக்தி படைத்த யெகோவாவுடைய மனதில் அவர் உயிருள்ளவராய் இருக்கிறார். (1 இராஜாக்கள் 21:19; லூக்கா 20:37, 38) தன்னை யெகோவா உயிரோடு எழுப்பும்வரை அவர் காத்திருக்க வேண்டும்; ஆனால், அந்தக் காலம் கண்ணிமைக்கும் பொழுதாகவே இருக்கிறது; ஏனென்றால், இறந்தவர்கள் ஒன்றும் அறியாதிருக்கிறார்கள். (பிரசங்கி 9:5) மேலும், ஆகாபின்மீதும் அவனுடைய குடும்பத்தார்மீதும் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதன்மூலம் நாபோத்துக்கு யெகோவா நீதியைச் சரிக்கட்டினார்.—2 இராஜாக்கள் 9:21, 24, 26, 35, 36; 10:1-11; யோவான் 5:28, 29.
இயேசுவின் விஷயத்திலோ அவர் மரித்தார். என்றாலும், அவரை கடவுள் உயிர்த்தெழுப்பி, “எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், . . . எல்லா நாமத்துக்கும் மேலாய்” உயர்த்தினார். (எபேசியர் 1:20-23) கிறிஸ்து இயேசுவுக்கு சாத்தான் இழைத்த அநியாயம் தம்முடைய மகனுக்கு யெகோவா வெகுமதி அளிப்பதைத் தடுத்து நிறுத்தவில்லை. யெகோவா விரும்பினால் சட்டவிரோதமாக தம்மைக் கைது செய்த அநியாயத்தை இமைப்பொழுதில் அவரால் சரிசெய்திருக்க முடியும் என்று இயேசு உறுதியாக நம்பினார். மேலும், வேதவாக்கியங்களை நிறைவேற செய்வதற்கும் எந்தவொரு அநியாயத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கும் யெகோவா நேரத்தை வைத்திருக்கிறார் என்பதையும் கிறிஸ்து அறிந்திருந்தார்.
இந்த நீதிமான்கள்மேல் சாத்தானும் அவனது கைக்கூலிகளும் அநியாயத்தைச் சுமத்தினார்கள் என்பது உண்மைதான், ஆனால், யெகோவா அந்தக் காரியங்களைப் பிற்பாடு சரிசெய்தார்; அநியாயத்தை நிரந்தரமாக ஒழித்துக்கட்டினார் அல்லது நிரந்தரமாக ஒழித்துக்கட்டுவார். இவ்வாறு, அநியாயத்தை கடவுள் அகற்றுவதற்கு நாம் காத்திருக்க வேண்டும்.—உபாகமம் 25:16; ரோமர் 12:17-19.
யெகோவா அநியாயத்தை அனுமதிப்பதற்குக் காரணம்
சில சூழ்நிலைகளை யெகோவா சரிப்படுத்தாமல் இருப்பதற்குக் காரணங்கள் இருக்கலாம். கிறிஸ்தவர்களாக நம்மைப் பயிற்றுவிப்பதற்காக அநியாயத்தைச் சகிக்க அவர் நம்மை அனுமதிக்கலாம். ‘தேவன் ஒருவனையும் பொல்லாங்கினால் சோதிக்கிறவரல்ல’ என்பது உண்மைதான். (யாக்கோபு 1:13) இருப்பினும், தம்முடைய தலையீடு இல்லாமல் ஒரு சூழ்நிலை மோசமடைய அவர் அனுமதிக்கலாம், அதுபோன்ற பயிற்றுவிப்பை ஏற்றுக்கொள்பவர்களை யெகோவா தாங்கிப் பலப்படுத்த முடியும். “சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவா[ர்]” என்று பைபிள் நமக்கு உறுதி அளிக்கிறது.—1 பேதுரு 5:10.
மேலுமாக, சில அநியாயங்களை யெகோவா அனுமதிப்பது, எதிர்ப்பவர்கள் மனந்திரும்புவதற்குக் காலத்தை அளிக்கலாம். இயேசு கொல்லப்பட்டு, சில வாரங்களுக்குள்ளாகவே பேதுருவின் அறிவுரையைக் கேட்டுக்கொண்டிருந்த சில யூதர்கள் ‘இருதயத்திலே குத்தப்பட்டவர்களாய்’ உணர்ந்தார்கள். அவர்கள் மனமார கடவுளுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டார்கள், முழுக்காட்டுதல் பெற்றார்கள்.—அப்போஸ்தலர் 2:36-42.
அநியாயம் செய்யும் அனைவருமே மனந்திரும்ப மாட்டார்கள் என்பது உண்மைதான். சிலர் படுமோசமான அநியாயத்தைச் செய்ய துணியலாம். என்றாலும், “அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்” என்று நீதிமொழிகள் 29:1 சொல்கிறது. சொல்லப்போனால், யெகோவா இறுதிக்கட்ட நடவடிக்கை எடுப்பார், விடாப்பிடியாய் மோசமான வழிகளில் நடப்பவர்களை அழிப்பார்.—பிரசங்கி 8:11-13.
அநியாயத்தின் பாதிப்புகளிலிருந்து மீண்டுவர நமக்கு எவ்வளவு காலமானாலும்சரி, எது நமக்கு உதவியாய் இருக்குமென யெகோவாவுக்குத் தெரியும் என்பதில் உறுதியாய் இருக்கலாம். இந்தப் பொல்லாத உலகில் நம் துன்பத்திற்குக் காரணமான எந்தவொரு அநியாயத்தையும் அவர் ஒழித்துக்கட்டுவார் என்பதும் உறுதி. இறுதியாக, “நீதி வாசமாயிருக்கும்” புதிய உலகில் நித்திய ஜீவன் என்ற வெகுமதியை அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார்.—2 பேதுரு 3:13.
[பக்கம் 16, 17-ன் படம்]
பயங்கரமான அநீதியை நாபோத் எதிர்ப்பட்டபோது எவ்வாறு உணர்ந்திருப்பார்?