“பழைய ஏற்பாடு” இக்காலத்திற்கு ஏற்றதா?
பி ரெஞ்சு மருத்துவர் ஒருவர் 1786-ல் ட்ரேட்டே டனட்டாமி ஏ ட ஃபிஸியாலாஸி (உடற்கூறியல் மற்றும் உடலியல் விளக்கம்) என்ற புத்தகத்தைப் பிரசுரித்தார். அக்காலத்தில் நரம்பியல் சம்பந்தமான விஷயங்களை துல்லியமாக விளக்கிய புத்தகமென இது கருதப்பட்டது. மிக அரிதாகவே கிடைக்கிற இப்புத்தகத்தின் ஒரு பிரதி சமீபத்தில் 27,000 டாலருக்கும் அதிகமான விலைக்கு விற்கப்பட்டது. இருந்தாலும், பழங்கால மருத்துவ ஆய்வின் அடிப்படையிலான இப்புத்தகத்தை வைத்து இன்று ஒரு மருத்துவர் சிகிச்சை அளித்தாரென்றால், நோயாளிகள் அவரிடம் நம்பிச் செல்ல மாட்டார்கள். அந்தப் புத்தகத்திற்கு என்னதான் வரலாற்றுச் சிறப்பும் இலக்கியச் சிறப்பும் இருந்தாலும்கூட, இன்று நோயால் அவதிப்படுகிற ஒருவருக்கு அது எந்த விதத்திலும் கைகொடுக்காது.
பைபிளில், பழைய ஏற்பாடு என அழைக்கப்படுகிற ஒரு பகுதியையும் இதே விதமாகத்தான் அநேகர் கருதுகிறார்கள். அதில் விவரிக்கப்பட்டிருக்கிற இஸ்ரவேலரின் சரித்திரப் பதிவை அவர்கள் உயர்வாய்க் கருதுகிறார்கள், அதிலுள்ள அழகிய கவிதைகளை ரசித்துப் படிக்கிறார்கள். இருந்தாலும், 2,400 ஆண்டுகளுக்கும் அதிக பழமையான அதன் ஆலோசனைகள் இக்காலத்திற்கு ஏற்றதா என அவர்கள் சந்தேகிக்கிறார்கள். ஏனென்றால், இன்றைய விஞ்ஞான அறிவும் வர்த்தகமும், ஏன் குடும்ப வாழ்க்கையும்கூட பைபிள் எழுதப்பட்ட காலத்திலிருந்து பெருமளவு வித்தியாசப்பட்டிருக்கிறது. இன்றைய கிறிஸ்தவம் என்ற ஆங்கில பத்திரிகையின் முன்னாள் பதிப்பாசிரியரான ஃபிலிப் யான்ஸி என்பவர் இயேசு வாசித்த பைபிள் என்ற தனது ஆங்கில புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார்: “இதை [பழைய ஏற்பாட்டை] வாசித்துப் புரிந்துகொள்வது மிகவும் கடினம்; அப்படியே புரிந்தாலும் இன்றைய மக்களுக்கு இது வேதனையே அளிக்கிறது. இதன் காரணமாகவும், வேறுபல காரணங்களாலும் பைபிளில் முக்கால்வாசி பகுதியை ஆக்கிரமித்திருக்கும் பழைய ஏற்பாட்டை மக்கள் வாசிப்பதே இல்லை.” ஆனால், இக்கருத்து ஒன்றும் புதியது அல்ல.
பொ.ச. 100 வாக்கில் அப்போஸ்தலன் யோவான் மரித்தார்; அவர் மரித்து 50 வருடங்கள் ஆவதற்குமுன், அச்சமயத்தில் குபேரனாய் வாழ்ந்த மார்ஸியன் என்ற ஓர் இளைஞன், பழைய ஏற்பாட்டை கிறிஸ்தவர்கள் ஓரங்கட்ட வேண்டுமென யாவரறிய அறிவித்தான். அதோடு, “பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள கடவுள் ‘சரியான காட்டுமிராண்டி’; அவர் குற்றவாளிகளுக்கும் இஸ்ரவேலின் ராஜாவான தாவீதைப் போன்ற தீவிரவாதிகளுக்கும் துணைபோனார். ஆனால் கிறிஸ்துவோ முற்றிலும் வித்தியாசப்பட்ட ஓர் உன்னத கடவுளை வெளிப்படுத்தினார்” என மார்ஸியன் வாதிட்டதாக ராபன் லேன் ஃபாக்ஸ் என்ற ஆங்கிலேய சரித்திராசிரியர் குறிப்பிடுகிறார். அவருடைய இந்தக் கொள்கைகள் “‘மார்ஸியன் கோட்பாடாக’ ஆனது. ஏறக்குறைய நான்காம் நூற்றாண்டு வரையாக அவரை அநேகர் பின்பற்றினார்கள்; முக்கியமாக, சிரியாக் மொழி பேசிய கிழக்கத்திய நாட்டவர்கள் அவரது ஆதரவாளர்களாக இருந்தார்கள்” என ஃபாக்ஸ் எழுதுகிறார். இந்தக் கோட்பாட்டை ஆதரிக்கிற சிலர் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதன் விளைவாக, 1,600-க்கும் அதிகமான வருடங்களுக்குப் பிறகு ஃபிலிப் யான்ஸி இவ்வாறு எழுதுகிறார்: “கிறிஸ்தவர்களின் மத்தியில் பழைய ஏற்பாட்டைக் குறித்த அறிவு மங்கிவருகிறது, நவீன சமுதாயத்திலோ அது கிட்டத்தட்ட மறைந்தே போய்விட்டது.”
பழைய ஏற்பாட்டை புதிய ஏற்பாடு மாற்றீடு செய்துவிட்டதா? “சேனைகளின் யெகோவா” என பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டிருப்பவரும் “அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன்” என புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டிருப்பவரும் ஒருவரே என்பதை நாம் எப்படிப் புரிந்துகொள்ளலாம்? (ஏசாயா 13:13, NW; 2 கொரிந்தியர் 13:11) பழைய ஏற்பாடு இன்று உங்களுக்குப் பயனுள்ளதா?