“நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது”
“அ நேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை.” (பிரசங்கி 12:12) எழுத்தில் வடிக்கப்பட்ட தகவல்களுக்கு இன்று பஞ்சமே இல்லாததால், இந்த வார்த்தைகள் அன்று போலவே இன்றும் உண்மையாக இருக்கின்றன. அப்படியானால், கவனமாகத் தேர்ந்தெடுத்து வாசிக்கிற ஒருவர் ஒரு புத்தகத்தை வாசிப்பதா வேண்டாமா என்று எப்படித் தீர்மானிக்க முடியும்?
ஒரு புத்தகத்தை வாசிப்பதா வேண்டாமா என தீர்மானிப்பதற்குமுன் பலரும் அதன் ஆசிரியரைப்பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். பொதுவாக பிரசுரிப்பாளர்கள் அந்த எழுத்தாளருடைய ஊர், கல்வித் தகுதிகள், அவர் எழுதிய பிற புத்தகங்கள் ஆகியவற்றை ஒரு சிறிய பத்தியில் குறிப்பிடுவார்கள். முந்தைய நூற்றாண்டுகளில் பெண் எழுத்தாளர்கள் பெரும்பாலும் ஆணின் பெயரை புனைப்பெயராக வைத்துக் கொண்டார்கள். தங்களுடைய புத்தகத்தை வாசிக்கிறவர்கள், ‘இது ஒரு பெண் எழுதியதுதானே’ எனத் தரக்குறைவாக மதிப்பிடக்கூடாது என்பதற்காகவே அவ்வாறு செய்தார்கள். எழுத்தாளர்களுக்கு தரப்பட்ட முக்கியத்துவம் இதிலிருந்து புலப்படுகிறது.
வருத்தகரமான விஷயம் என்னவெனில், முந்தின கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதுபோல் சிலர் எபிரெய வேதாகமத்தை ஓரங்கட்டியிருக்கிறார்கள். அதில் சித்தரிக்கப்பட்டிருக்கிற கடவுள் கொஞ்சம்கூட ஈவிரக்கமில்லாதவர், தம் விரோதிகளை மூர்க்கத்தனமாக தீர்த்துக் கட்டியவர் என்றெல்லாம் அவர்கள் நினைப்பதே அதற்குக் காரணம்.a அப்படியானால், பைபிளின் ஆசிரியரைப்பற்றி எபிரெய வேதாகமமும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமமும் என்ன சொல்கிறது என்பதை நாம் பார்க்கலாம்.
பைபிளின் ஆசிரியர்
இஸ்ரவேல் ஜனத்திடம், “நான் கர்த்தர், [“யெகோவா,” NW] நான் மாறாதவர்” என்று கடவுள் சொன்னதை எபிரெய வேதாகமத்தில் நாம் வாசிக்கிறோம். (மல்கியா 3:6) சுமார் 500 வருடங்களுக்குப் பிறகு, கடவுளைப்பற்றி பைபிள் எழுத்தாளரான யாக்கோபு இவ்வாறு எழுதினார்: “அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.” (யாக்கோபு 1:17) அப்படியென்றால், எபிரெய வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள கடவுள் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள கடவுளிலிருந்து வித்தியாசப்பட்டவர் என சிலர் ஏன் நினைக்கிறார்கள்?
உண்மையில், பைபிளின் பக்கங்களை நாம் புரட்டிப் பார்த்தால் அதில் கடவுளுடைய ஆள்தன்மையின் வித்தியாசப்பட்ட பரிமாணத்தைக் கவனிப்போம். ஆதியாகம புத்தகத்தில் மட்டுமே பார்த்தோமானால், அவர் ‘இருதயத்தில் விசனப்படுகிறவர்,’ ‘வானத்தையும் பூமியையும் உருவாக்கியவர்,’ “சர்வலோக நியாயாதிபதி” என்றெல்லாம் விவரிக்கப்பட்டுள்ளார். (ஆதியாகமம் 6:6; 14:23; 18:25) இவை எல்லாமே ஒரே கடவுளைத்தான் குறிக்கிறதா? ஆம், அதில் சந்தேகமே இல்லை.
இதை இப்படி விளக்கலாம்: நீதிபதியாக இருக்கும் ஒரு நபர், நீதிமன்றத்திற்கு வரும் குற்றவாளிகளுக்கு சட்டத்தைக் கண்டிப்புடன் அமல்படுத்துகிறவராக அறியப்படலாம்; வீட்டில் தன் பிள்ளைகளுக்கோ கேட்டதையெல்லாம் வாங்கித் தருகிற, அன்பையும் பாசத்தையும் அள்ளி வழங்குகிற ஓர் அப்பாவாக இருக்கிறார். தன் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களுக்கோ கலகலப்பாகவும் தமாஷாகவும் பேசுகிற ஒரு நண்பராக இருக்கிறார். இங்கு நீதிபதியாக, அப்பாவாக, நண்பராக இருப்பவர் ஒரே நபர்தான். வெவ்வேறு சூழ்நிலைகளில் அவர் வித்தியாசப்பட்ட குணாம்சத்தை வெளிக்காட்டுகிறார், அவ்வளவுதான்.
அவ்வாறே, எபிரெய வேதாகமமும் யெகோவாவை “இரக்கமும், கிருபையும், நீடியசாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்” என்று விவரிக்கிறது. அதே சமயத்தில், அவர் ‘குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடமாட்டார்’ என்றும் அதிலிருந்து தெரிந்துகொள்கிறோம். (யாத்திராகமம் 34:6, 7) இந்த இரண்டு குணங்களும் கடவுளுடைய பெயரின் அர்த்தத்தைத் தெரிவிக்கின்றன. “யெகோவா” என்ற இப்பெயரின் அர்த்தம் “ஆகும்படி செய்கிறவர்;” அதாவது, தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு, எப்படியெல்லாம் ஆக வேண்டுமோ அப்படியெல்லாம் ஆகிறவர். (யாத்திராகமம் 3:13-15) அவர் எப்படிப்பட்ட குணத்தைக் காட்டினாலும் அதே கடவுளாகத்தான் இருக்கிறார். இயேசு இவ்வாறு குறிப்பிட்டார்: “நம்முடைய தேவனாகிய யெகோவா ஒருவரே யெகோவா.”—மாற்கு 12:29, NW.
எபிரெய வேதாகமம் மாற்றீடு செய்யப்பட்டதா?
புதியதாக ஏதாவது கண்டுபிடிக்கப்பட்டாலோ மக்களின் கருத்துகள் மாறினாலோ பாடப்புத்தகங்கள் மாற்றீடு செய்யப்படுவது இன்று சர்வசாதாரணம். அதுபோலவே, எபிரெய வேதாகமத்தை கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் மாற்றீடு செய்துவிட்டதா? இல்லை.
தாம் செய்த ஊழியத்தைப் பற்றிய பதிவும் தமது சீஷர்கள் எழுதிய புத்தகங்களும் எபிரெய வேதாகமத்தை மாற்றீடு செய்ய வேண்டுமென இயேசு நினைத்திருந்தால், அதைப்பற்றி அவர் கண்டிப்பாக குறிப்பிட்டிருப்பார். ஆனால், இயேசு பரலோகத்திற்குச் செல்வதற்கு சில நாட்களுக்குமுன்பு அவரைப்பற்றி லூக்காவின் பதிவு இவ்வாறு குறிப்பிட்டது: “மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதிய [எபிரெய வேதாகமத்திலுள்ள] வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு [அவருடைய சீஷர்களில் இருவருக்கு] விவரித்துக் காண்பித்தார்.” பிற்பாடு, இயேசு தம்முடைய உண்மையுள்ள அப்போஸ்தலர்களுக்கும் மற்றவர்களுக்கும் காட்சி அளித்தார். அந்தப் பதிவு தொடர்ந்து சொல்வதாவது, அவர் “அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேற வேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.” (லூக்கா 24:27, 44) எபிரெய வேதாகமத்தை தம் காலத்திற்குப் பொருந்தாத புத்தகமென இயேசு நினைத்திருந்தால், தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தின் இறுதிக்கட்டத்திலும் அதை அவர் பயன்படுத்தியிருப்பாரா?
கிறிஸ்தவ சபை உருவான பிறகும்கூட இயேசுவின் சீஷர்கள் எபிரெய வேதாகமத்தைத் தொடர்ந்து பயன்படுத்தினார்கள். நிறைவேறவிருந்த தீர்க்கதரிசனங்கள், மதிப்புமிக்க பாடங்களைக் கற்றுத்தந்த நியாயப்பிரமாண சட்டத்தின் நியமங்கள், கிறிஸ்தவர்கள் உண்மையாய் நிலைத்திருப்பதற்கு முன்மாதிரிகளாய் திகழ்கிற கடவுளுடைய முற்கால ஊழியர்களின் பதிவுகள் ஆகியவற்றைச் சிறப்பித்துக் காட்ட எபிரெய வேதாகமத்தை அவர்கள் பயன்படுத்தினார்கள். (அப்போஸ்தலர் 2:16-21; 1 கொரிந்தியர் 9:9, 10; எபிரெயர் 11:1–12:1) ‘வேதவாக்கியங்கள் எல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது, . . . அவைகள் . . . பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது’ என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார்.b (2 தீமோத்தேயு 3:16, 17) எபிரெய வேதாகமம் இன்று எவ்விதத்தில் பிரயோஜனமுள்ளது?
அன்றாட வாழ்க்கைக்கு உதவும் ஆலோசனைகள்
இன்றைய இனவெறி பிரச்சினையைக் குறித்துச் சிந்தித்துப் பாருங்கள். ஒரு கிழக்கு ஐரோப்பிய நகரத்தில் வசிக்கும் 21 வயது எத்தியோப்பியர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நாங்கள் எந்தவொரு இடத்திற்கு போகவேண்டுமென்றாலும்சரி கொஞ்சம் பேரைத் திரட்ட வேண்டியிருக்கிறது. ஒருவேளை கும்பலாகப் போனால் எங்களை யாரும் தாக்க மாட்டார்கள்.” அவர் தொடர்ந்து இவ்வாறு சொல்கிறார்: “மாலை ஆறு மணிக்கு அப்புறம் நாங்கள் வெளியில் போக முடியாது, முக்கியமாக சுரங்கப்பாதை வழியாகப் போக முடியாது. எங்களைப் பார்க்கும் ஆட்களுக்கு எங்கள் நிறம்தான் கண்ணை உறுத்துகிறது.” தீர்வே இல்லாததுபோலத் தோன்றும் இப்பிரச்சினைக்கு எபிரெய வேதாகமம் தீர்வு அளிக்கிறதா?
பூர்வ இஸ்ரவேலரிடம் இவ்வாறு சொல்லப்பட்டது: “யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்த வேண்டாம். உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே.” (லேவியராகமம் 19:33, 34) ஆம், பூர்வ இஸ்ரவேலில் ‘அந்நியர்களை,’ அதாவது பிற நாடுகளிலிருந்து குடியேறியவர்களை மதிப்புடன் நடத்தவேண்டுமென்ற சட்டம் இருந்தது; அந்தச் சட்டம் எபிரெய வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்றைய இனவெறியை ஒழிப்பதற்கு அந்தச் சட்டத்திலுள்ள நியமங்கள் தீர்வு அளிப்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள், அல்லவா?
எபிரெய வேதாகமம், பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் விலாவாரியான அறிவுரைகளை வழங்குவதில்லை; என்றாலும், பணத்தைச் சரியான விதத்தில் பயன்படுத்துவது சம்பந்தமாக நடைமுறையான அறிவுரைகளை அது தருகிறது. உதாரணமாக, நீதிமொழிகள் 22:7-ல் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது: “கடன்வாங்கினவன் கடன்கொடுத்தவனுக்கு அடிமை.” முன்பின் யோசிக்காமல் கடனுக்குப் பொருட்களை வாங்குபவர்கள் கடனில் மூழ்கிவிடுவார்கள் என்பதை பொருளாதார ஆலோசகர்கள் பலரும் ஒத்துக்கொள்கிறார்கள்.
அது தவிர, இன்றைய பொருளாசை பிடித்த உலகில், என்ன வந்தாலும் பரவாயில்லை, பணம்தான் முக்கியமென நினைப்பவர்களைக் காண்பது சர்வசாதாரணம். சரித்திரத்தில் பெரும் கோடீஸ்வரர்களாகத் திகழ்ந்தவர்களில் ஒருவரான சாலொமோன் ராஜா இதைப்பற்றி தெள்ளத்தெளிவாக விளக்கியிருக்கிறார். அவர் இவ்வாறு எழுதினார்: “பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே.” (பிரசங்கி 5:10) எப்பேர்ப்பட்ட ஞானமான எச்சரிக்கை!
எதிர்கால நம்பிக்கை
முழு பைபிளின் மையக் கருத்து இதுதான்: இயேசு கிறிஸ்துவால் ஆளப்படும் ராஜ்யத்தின்மூலம் கடவுளுடைய அரசாட்சியே சரியானதென நிரூபிக்கப்படுவதோடு அவருடைய பெயரும் பரிசுத்தமாக்கப்படும்.—தானியேல் 2:44; வெளிப்படுத்துதல் 11:15.
கடவுளுடைய ராஜ்யத்தில் வாழ்கை எப்படியிருக்கும் என்பதைப் பற்றிய விவரங்களை எபிரெய வேதாகமத்திலிருந்து நாம் தெரிந்துகொள்கிறோம்; அவை நமக்கு ஆறுதலைத் தருவதோடு அந்த ஆறுதலின் ஊற்றுமூலராகிய யெகோவா தேவனிடம் நெருங்கி வரவும் உதவுகின்றன. உதாரணமாக, மிருகங்களுக்கும் மனிதருக்குமிடையே அப்போது நிலவும் சமாதானத்தைப்பற்றி ஏசாயா தீர்க்கதரிசி இவ்வாறு முன்னறிவித்தார்: “அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்.” (ஏசாயா 11:6-8) எப்பேர்ப்பட்ட அருமையான எதிர்பார்ப்பு!
இனவெறி, தீராத வியாதி, கைமீறிப்போகும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் அல்லல்படுகிற மக்களுக்கு நம்பிக்கையூட்டும் செய்தி அதில் உள்ளதா? எபிரெய வேதாகமத்தில் உள்ள தீர்க்கதரிசனம் கிறிஸ்து இயேசுவைப்பற்றி இவ்வாறு முன்னுரைத்தது: “கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார்.” (சங்கீதம் 72:12, 13) இத்தகைய வாக்குறுதிகள் நிஜமானவை; ஏனெனில் இவற்றில் விசுவாசம் வைப்பவர்கள் எதிர்காலத்தை திடநம்பிக்கையோடு வரவேற்க இவை உதவுகின்றன.—எபிரெயர் 11:6.
அப்படியானால், அப்போஸ்தலன் பவுல் தேவ ஆவியால் ஏவப்பட்டு இவ்வாறு எழுதியதில் ஆச்சரியமில்லை: ‘தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகள் எல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.’ (ரோமர் 15:4) ஆம், எபிரெய வேதாகமம் கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தையாகிய பைபிளின் இன்றியமையாத பாகமாகவே இன்றும் இருக்கிறது. இது இன்று நமக்கு மிகவும் பயனுள்ளது. ஆகவே, முழு பைபிளும் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது என்பதை அதிகமாகக் கற்றுக்கொண்டு அதன் ஆசிரியரான யெகோவா தேவனிடம் நெருங்கிவர நீங்கள் முயல வேண்டும் என்பதே எங்கள் ஆவல்.—சங்கீதம் 119:111, 112.
[அடிக்குறிப்புகள்]
a இந்தக் கட்டுரையில் பழைய ஏற்பாட்டை எபிரெய வேதாகமம் என நாங்கள் குறிப்பிடுகிறோம். (பக்கம் 6-ல் உள்ள “பழைய ஏற்பாடா, எபிரெய வேதாகமமா?” என்ற பெட்டியைக் காண்க.) அவ்வாறே, புதிய ஏற்பாட்டையும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் என்றே யெகோவாவின் சாட்சிகள் குறிப்பிடுகிறார்கள்.
b இக்காலத்துக்கு ஏற்ற மதிப்புமிக்க அநேக நியமங்கள் எபிரெய வேதாகமத்தில் உள்ளன. என்றாலும், மோசே மூலமாக இஸ்ரவேலருக்கு கடவுள் கொடுத்த நியாயப்பிரமாண சட்டத்தின்கீழ் கிறிஸ்தவர்கள் இல்லை என்பதை மனதில்கொள்ள வேண்டும்.
[பக்கம் 6-ன் பெட்டி]
பழைய ஏற்பாடா, எபிரெய வேதாகமமா?
தமிழ் பைபிளில் 2 கொரிந்தியர் 3:14-ல் “பழைய ஏற்பாடு” என்ற சொற்றொடர் காணப்படுகிறது. இதில் “ஏற்பாடு” என மொழிபெயர்க்கப்பட்டிருப்பது டையத்தீக்கே என்ற கிரேக்க வார்த்தையைக் குறிக்கிறது. என்றாலும், பொது மொழிபெயர்ப்பு போன்ற சில நவீன மொழிபெயர்ப்புகள் டையத்தீக்கே என்ற வார்த்தையை “ஏற்பாடு” என்பதற்குப் பதிலாக “உடன்படிக்கை” என மொழிபெயர்த்துள்ளன. ஏன்?
சொற்களஞ்சிய ஆசிரியரான எட்வர்ட் ராபின்ஸன் இவ்வாறு குறிப்பிட்டார்: “மோசேயின் நூல்களில் பழைய உடன்படிக்கை இடம்பெற்றுள்ளதால் [டையத்தீக்கே] என்ற வார்த்தை உடன்படிக்கையின் புத்தகத்தை, மோசேயின் நூல்களை, அதாவது நியாயப்பிரமாணத்தைக் குறிக்கிறது.” 2 கொரிந்தியர் 3:14-ல் அப்போஸ்தலன் பவுல் நியாயப்பிரமாண சட்டத்தைப் பற்றியே குறிப்பிட்டார்; அது கிறிஸ்தவத்துக்கு முன்னிருந்த வேதாகமத்தின் ஒரு பகுதியாக மட்டுமே இருந்தது.
அப்படியானால், பரிசுத்த பைபிளின் முதல் 39 புத்தகங்களுக்கு மிகப் பொருத்தமான வார்த்தை என்ன? பைபிளின் இப்பகுதியை தம் காலத்துக்கு ஒத்துவராத புத்தகம் எனக் குறிப்பிடுவதற்குப் பதிலாக இயேசு கிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் இதை ‘வேதம்’ என்றும் ‘பரிசுத்த வேதாகமங்கள்’ என்றும் குறிப்பிட்டார்கள். (மத்தேயு 21:42; ரோமர் 1:4) ஆகவே, ஏவப்பட்டு எழுதப்பட்ட இந்த வார்த்தைகளுக்கு இசைவாக, யெகோவாவின் சாட்சிகள் பழைய ஏற்பாட்டை எபிரெய வேதாகமம் என்று அழைக்கிறார்கள். ஏனென்றால், இதன் பெரும்பகுதி ஆரம்பத்தில் எபிரெயு மொழியில் எழுதப்பட்டது. அவ்வாறே, புதிய ஏற்பாடு என அழைக்கப்படுவதை கிரேக்க வேதாகமம் என்று அழைக்கிறார்கள். காரணம், கடவுளின் ஏவுதலால் இப்பகுதியை எழுதியவர்கள் இதை கிரேக்கு மொழியில் எழுதினார்கள்.
[பக்கம் 4-ன் படங்கள்]
ஒருவர் நீதிவழுவாத நீதிபதியாக, அன்புள்ள அப்பாவாக, ஒரு நண்பராக அறியப்படலாம்
[பக்கம் 5-ன் படம்]
இயேசு தம்முடைய ஊழியக் காலம் முழுவதிலும் எபிரெய வேதாகமத்தைப் பயன்படுத்தினார்
[பக்கம் 7-ன் படங்கள்]
சரியான தீர்மானங்களை எடுப்பதற்கு என்னென்ன பைபிள் நியமங்கள் ஒருவருக்கு உதவலாம்?