பெற்றோரே—உங்கள் பிள்ளைகளை அன்புடன் பயிற்றுவியுங்கள்
“உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது.”—1 கொரிந்தியர் 16:14.
1. ஒரு குழந்தை பிறக்கும்போது பெற்றோருக்கு ஏற்படும் உணர்ச்சிகளை விவரியுங்கள்.
ஒ ரு மழலையின் பிறப்பு வாழ்வில் மகிழ்ச்சி பூத்துக் குலுங்கும் சமயம் என்பதைப் பெரும்பாலோர் ஒப்புக்கொள்வார்கள். ஆலியா என்ற தாய் இவ்வாறு சொல்கிறார்: “என் மகள் பிறந்தபோது அவளுடைய பூப்போன்ற முகத்தைப் பார்த்ததும் நான் சந்தோஷத்தின் உச்சிக்கே சென்றுவிட்டேன். இவள்தான் இந்த உலகிலேயே மிக அழகான குழந்தை என நினைத்தேன்.” என்றபோதிலும், அவ்வாறு மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியிருக்கும் பெற்றோரின் மனதில் கவலையும் தலைதூக்கலாம். “வாழ்க்கையில் வருகிற சிக்கல்களைச் சமாளிப்பதற்கேற்ற திறமையோடு அவளை வளர்க்க முடியுமா என்ற கவலை எனக்குள்ளே எட்டிப் பார்த்தது” என்று ஆலியாவின் கணவர் சொல்கிறார். இப்படிப்பட்ட கவலை அநேக பெற்றோரை வாட்டுகிறது. எனவே பிள்ளைகளை அன்புடன் பயிற்றுவிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை அவர்கள் புரிந்திருக்கிறார்கள். இருந்தாலும், அவ்வாறு பயிற்றுவிக்க விரும்புகிற கிறிஸ்தவ பெற்றோர் சவால்களைச் சந்திப்பார்கள். அவற்றில் சில யாவை?
2. பெற்றோர் என்னென்ன சவால்களைச் சந்திக்கிறார்கள்?
2 இவ்வுலகின் கடைசி நாட்களில், அதுவும் கடைசி கட்டத்தில் நாம் இன்று வாழ்ந்து வருகிறோம். பைபிள் முன்னறிவித்தபடி, இன்றைய உலகில் எங்கு பார்த்தாலும் அன்பற்ற ஆட்களே அதிகமாக இருக்கிறார்கள். குடும்பங்களில்கூட, ஒருவருக்கொருவர் ‘சுபாவ அன்பில்லாதவர்களாய்’ இருக்கிறார்கள்; அதோடு, மக்கள் “நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும் . . . இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும்” ஆகிவிட்டிருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:1-5) இப்படிப்பட்ட குணங்களை உடைய ஆட்களோடு அன்றாடம் தொடர்புகொள்ளும் கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்தாரிடமும் அத்தகைய குணங்களை வெளிக்காட்டலாம். அதோடு, பெற்றோர் தங்களுடைய பிறவி குணங்களுடன் போராட வேண்டியிருக்கலாம்; உதாரணமாக நிதானத்தை இழந்து விடுவது, முன்பின் யோசிக்காமல் வார்த்தைகளைப் பொரிந்து தள்ளுவது, சில விஷயங்களில் தப்புக்கணக்கு போடுவது போன்ற குணங்களோடு மல்லுக்கட்ட வேண்டியிருக்கலாம்.—ரோமர் 3:23; யாக்கோபு 3:2, 8, 9.
3. பெற்றோர் தங்கள் பிள்ளைகளை எப்படி சந்தோஷமுள்ள நபர்களாக வளர்க்க முடியும்?
3 இத்தகைய சவால்களின் மத்தியிலும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை, கடவுளை நேசிக்கிற சந்தோஷமுள்ள நபர்களாக வளர்க்க முடியும். அது எப்படி? “உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது” என்ற பைபிளின் அறிவுரையைப் பின்பற்றுவதன் மூலமே. (1 கொரிந்தியர் 16:14) ஆம், அன்பு, ‘பூரணசற்குணத்தின் கட்டாக’ இருக்கிறது. (கொலோசெயர் 3:14) கொரிந்தியர்களுக்கு எழுதிய முதல் கடிதத்தில் அன்பின் பல அம்சங்களை அப்போஸ்தலன் பவுல் விவரிக்கிறார்; அவற்றில் மூன்று அம்சங்களை நாம் சிந்திப்பதோடு, பிள்ளைகளைப் பயிற்றுவிக்கையில் இந்த குணத்தை பெற்றோர் எப்படிக் காட்டலாம் என்பதற்கான குறிப்பிட்ட சில வழிகளையும் கலந்தாராயலாம்.—1 கொரிந்தியர் 13:4-8.
நீடிய சாந்தமாயிருப்பதன் அவசியம்
4. பெற்றோர் ஏன் நீடிய சாந்தத்துடன் இருப்பது அவசியம்?
4 ‘அன்பு நீடிய சாந்தமுள்ளது’ என்று பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 13:4) ‘நீடிய சாந்தம்’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க பதம் பொறுமையையும் கோபிக்கத் தாமதிப்பதையும் குறிக்கிறது. பெற்றோர் ஏன் நீடிய சாந்தத்துடன் இருக்க வேண்டும்? இக்கேள்வியை பெற்றோர்களிடம் கேட்டால் அதற்குப் பல காரணங்களைச் சொல்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவற்றில் சிலவற்றைக் கவனியுங்கள். தாங்கள் ஆசைப்படுகிற பொருள் கிடைக்கும்வரை பெற்றோரிடம் திரும்பத் திரும்ப நச்சரிப்பது பிள்ளைகளின் வழக்கம். முடியாது என்று பெற்றோர் உறுதியாகச் சொன்னாலும்கூட, எப்படியாவது ‘சரி’ என்று சொல்லிவிட மாட்டார்களா என்ற நப்பாசையில் பிள்ளை திரும்பத் திரும்ப கேட்கலாம். பருவவயது பிள்ளைகளோ, ஒரு காரியத்தில் பெற்றோரின் சம்மதத்தைப் பெற ஆயிரம் விளக்கங்களைக் கொடுக்கலாம்; ஆனால் பெற்றோரின் பார்வையில் அது முட்டாள்தனமான காரியமாக இருக்கலாம். (நீதிமொழிகள் 22:15) ஆம், நம் எல்லாரையும்போல பிள்ளைகளும் செய்த தவறையே திரும்பத் திரும்பச் செய்யும் இயல்புடையவர்கள்.—சங்கீதம் 130:3.
5. நீடிய சாந்தத்துடன் இருக்க பெற்றோருக்கு எது உதவும்?
5 பிள்ளைகளிடம் நீடிய சாந்தமாயும் பொறுமையாயும் இருக்க பெற்றோருக்கு எது உதவும்? “மனுஷனுடைய விவேகம் [அதாவது, புரிந்துகொள்ளும் திறன்] அவன் கோபத்தை அடக்கும்” என்று சாலொமோன் ராஜா எழுதினார். (நீதிமொழிகள் 19:11) ஒருகாலத்தில் தாங்களும் ‘குழந்தையைப்போலப் பேசி, குழந்தையைப்போலச் சிந்தித்து, குழந்தையைப்போல யோசித்தவர்கள்தானே,’ என்பதை பெற்றோர் மனதில் வைத்திருந்தால் பிள்ளைகள் நடந்துகொள்ளும் விதத்தை அவர்களால் நன்கு புரிந்துகொள்ள முடியும். (1 கொரிந்தியர் 13:11) பெற்றோரே, சிறுவயதில் உங்கள் அப்பாவிடமோ அம்மாவிடமோ ஏதோவொன்றைக் கேட்டு நச்சரித்தது ஞாபகம் வருகிறதா? பருவவயதில் இருந்தபோது, உங்கள் உணர்ச்சிகளையோ பிரச்சினைகளையோ பெற்றோர் கொஞ்சம்கூட புரிந்துகொள்ளவில்லை என எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அப்படியானால், உங்கள் பிள்ளைகள் ஏன் அப்படி நடந்துகொள்கிறார்கள், நீங்கள் எடுத்த தீர்மானங்களை அவர்களுக்கு ஏன் பொறுமையுடன் சதா நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். (கொலோசெயர் 4:6) இளம் பிள்ளைகளுக்குத் தம் சட்டங்களை ‘கருத்தாய்ப் போதிக்கும்படி’ இஸ்ரவேலில் இருந்த பெற்றோரிடம் யெகோவா சொன்னதை நாம் கவனத்தில் கொள்வது முக்கியம். (உபாகமம் 6:6, 7) ‘கருத்தாய்ப் போதி’ என்பதற்கான எபிரெய வார்த்தையின் அர்த்தம் “திரும்பத் திரும்பச் சொல்வது,” “அச்சாகப் பதிய வைப்பது” என்பதாகும். கடவுளுடைய சட்டங்களை ஒரு பிள்ளை கடைப்பிடிக்கக் கற்றுக்கொள்ளும் வரையில் பெற்றோர் அதைத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியிருக்கலாம் என்பதையே இது அர்த்தப்படுத்துகிறது. வாழ்க்கையில் வேறுசில பாடங்களைப் புகட்டுவதற்கும்கூட பெரும்பாலும் இவ்வாறு திரும்பத் திரும்பச் சொல்வது அவசியம்.
6. நீடிய சாந்தமுள்ள ஒரு பெற்றோர் தன்னுடைய பிள்ளை என்ன செய்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பவர் என்று ஏன் சொல்ல முடியாது?
6 மறுபட்சத்தில் நீடிய சாந்தமுள்ள ஒரு பெற்றோர் தன்னுடைய பிள்ளை என்ன செய்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பார் என்று அர்த்தமாகாது. கடவுளுடைய வார்த்தை பின்வருமாறு எச்சரிக்கிறது: “தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.” இப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படாமலிருக்க அதே நீதிமொழி இவ்வாறு குறிப்பிடுகிறது: “பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்.” (நீதிமொழிகள் 29:15) தங்களைக் கண்டிக்க பெற்றோருக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்ற தோரணையில் பிள்ளைகள் சில சமயங்களில் நடந்துகொள்ளலாம். ஆனால், கிறிஸ்தவ குடும்பங்கள் மக்களாட்சி முறையில் நடத்தப்படக்கூடாது; அதாவது, பிள்ளைகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான விதிமுறைகளை அவர்களுடைய ஒப்புதலோடுதான் பெற்றோர் வகுக்க வேண்டும் என்பதுபோல் செயல்படக்கூடாது. மாறாக, குடும்பங்கள் அனைத்திற்கும் தலைவரான யெகோவா தேவன் பிள்ளைகளுக்கு அன்புடன் கற்பிப்பதற்கும் சிட்சை கொடுப்பதற்கும் பெற்றோருக்கு அதிகாரம் அளித்திருக்கிறார். (1 கொரிந்தியர் 11:3; எபேசியர் 3:14; 6:1-4) சொல்லப்போனால், பவுல் அடுத்துக் குறிப்பிடுகிற அன்பின் அம்சத்தோடு சிட்சை நெருங்கிய தொடர்புடையதாக இருக்கிறது.
அன்போடு சிட்சிப்பது எப்படி
7. தயவுள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஏன் சிட்சிக்கிறார்கள், அத்தகைய சிட்சையில் உட்பட்டிருப்பது என்ன?
7 ‘அன்பு . . . தயவுள்ளது’ என்று பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 13:4) பிள்ளைகளிடத்தில் உண்மையிலேயே தயவுடன் நடந்துகொள்ளும் பெற்றோர் சிட்சிக்கும் விஷயத்தில் மனதை அடிக்கடி மாற்றிக்கொள்கிறவர்களாகவோ விதிகளை தங்கள் இஷ்டத்திற்கு தளர்த்துகிறவர்களாகவோ இருக்க மாட்டார்கள். இந்த விஷயத்தில் அவர்கள் யெகோவாவைப் பின்பற்றுகிறார்கள். ‘யெகோவா எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சிக்கிறார்’ என பவுல் எழுதினார். சிட்சை என பைபிளில் சொல்லப்பட்டிருப்பது தண்டிப்பதை மட்டுமே குறிப்பதில்லை என்பதை தயவுசெய்து கவனியுங்கள். அது பயிற்றுவிப்பதையும் அறிவு புகட்டுவதையும் அர்த்தப்படுத்துகிறது. அத்தகைய சிட்சையின் நோக்கம் என்ன? “அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்” என்று பவுல் தெரிவிக்கிறார். (எபிரெயர் 12:6, 11) கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக தயவுடன் கற்பிக்கிற பெற்றோர், தங்களுடைய பிள்ளைகள் சமாதானமான, நேர்மையான ஆட்களாக வளர வாய்ப்பளிக்கிறார்கள். ‘யெகோவாவின் சிட்சையை’ பிள்ளைகள் ஏற்றுக்கொண்டால், ஞானத்தையும் அறிவையும் பகுத்துணர்வையும் பெறுவார்கள்; இவை பொன்னையோ வெள்ளியையோ காட்டிலும் விலையுயர்ந்த சொத்துக்கள்.—நீதிமொழிகள் 3:11-18.
8. பெற்றோர் தங்கள் பிள்ளைகளை சிட்சிக்காமல் விடும்போது பெரும்பாலும் என்ன விளைவடைகிறது?
8 மறுபட்சத்தில், பிள்ளைகளை பெற்றோர் சிட்சிக்காமல் விடுவது தயவான செயல் அல்ல. யெகோவாவின் ஏவுதலால் சாலொமோன் இவ்வாறு எழுதினார்: “பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.” (நீதிமொழிகள் 13:24) கண்டிக்கும் விஷயத்தில் பெற்றோர் நேரத்திற்கு நேரம் மாறிக்கொண்டே இருந்தால் பிள்ளைகள் சுயநலவாதிகளாக, சந்தோஷத்தைப் பறிகொடுத்தவர்களாக ஆகிவிடலாம். மாறாக, கரிசனையுள்ள, அதே சமயத்தில் கட்டுப்பாடுகளை வைத்து அதை உறுதியாக கடைப்பிடிக்கிற பெற்றோரின் பிள்ளைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாக திகழ்கிறார்கள், மற்றவர்களோடு நன்கு ஒத்துப்போகிறார்கள், கலகலப்பாகவும் இருக்கிறார்கள் என்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அப்படியானால், பிள்ளைகளைச் சிட்சிக்கிற பெற்றோர்தான் அவர்களிடம் தயவுடன் நடந்துகொள்கிறார்கள் என அடித்துச் சொல்லலாம்.
9. கிறிஸ்தவ பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு என்னென்ன காரியங்களைக் கற்பிக்கிறார்கள், அக்காரியங்களை பிள்ளைகள் எவ்வாறு கருத வேண்டும்?
9 பிள்ளைகளை அன்பாகவும் தயவாகவும் சிட்சிப்பதில் என்ன உட்பட்டிருக்கிறது? பிள்ளைகளிடமிருந்து பெற்றோர் உண்மையில் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை அவர்களுக்குத் தெளிவாகப் புரியவைப்பது அவசியம். உதாரணமாக, கிறிஸ்தவ பெற்றோரால் வளர்க்கப்படுகிற பிள்ளைகளுக்கு அடிப்படை பைபிள் நியமங்கள் குழந்தையிலேயே கற்றுத்தரப்படுகிறது; அதோடு, உண்மை வணக்கத்தின் பல்வேறு அம்சங்களில் பங்குகொள்வதன் அவசியமும் கற்றுத்தரப்படுகின்றன. (யாத்திராகமம் 20:12-17; மத்தேயு 22:37-40; 28:19; எபிரெயர் 10:24, 25) பெற்றோர் எதிர்பார்க்கிற இந்தக் காரியங்கள் ஏதோவொரு சமயத்தில் மட்டுமல்ல, தவறாமல் செய்ய வேண்டியவை என்பதை பிள்ளைகள் அறிந்திருப்பது அவசியம்.
10, 11. வீட்டில் கட்டுப்பாடுகள் வைக்கும்போது பிள்ளைகளின் வேண்டுகோளை பெற்றோர் ஏன் கருத்தில் கொள்ளலாம்?
10 இருந்தாலும் சில சமயங்களில், வீட்டில் சில கட்டுப்பாடுகளை வைப்பதற்கு முன்பு பெற்றோர் அதைக் குறித்து தங்கள் பிள்ளைகளுடன் கலந்துபேச விரும்பலாம். இத்தகைய கட்டுப்பாடுகளைக் குறித்து இளம் பிள்ளைகளிடம் கலந்துபேசினால் அவற்றிற்கு கீழ்ப்படிய அவர்கள் அதிக மனமுள்ளவர்களாக இருக்கக்கூடும். உதாரணமாக, பிள்ளைகள் எத்தனை மணிக்குள் வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்பதைப்பற்றி பெற்றோர் தீர்மானிக்க விரும்பினால், ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவர்களே தெரிவிக்கலாம். அல்லது, பிள்ளைகளிடமே ஒரு நேரத்தைச் சொல்லும்படியும், அதற்கான காரணத்தைத் தெரிவிக்கும்படியும் கேட்கலாம். அப்படிக் கேட்ட பிறகு, பிள்ளைகள் எத்தனை மணிக்குள் வீட்டுக்கு வந்துவிட வேண்டுமென்று பெற்றோர் விரும்புகிறார்கள் என்பதைச் சொல்வதோடு அது ஏன் தங்களுக்கு நல்லதாகப் படுகிறது என்பதற்கான காரணத்தையும் விளக்கலாம். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதால், அத்தகைய சமயத்தில் பெற்றோர் என்ன செய்ய வேண்டும்? சில சந்தர்ப்பங்களில், பைபிள் நியமங்கள் மீறப்படாதபோது பிள்ளைகளின் விருப்பத்திற்கு இணங்கிச் செல்ல பெற்றோர் தீர்மானிக்கலாம். இப்படி செய்வது, பெற்றோர் தங்களுடைய அதிகாரத்தை விட்டுக்கொடுத்துவிட்டதாக அர்த்தப்படுத்துமா?
11 இக்கேள்விக்கு பதிலைப் பெற, லோத்துவிடமும் அவருடைய குடும்பத்தாரிடமும் யெகோவா அன்பான விதத்தில் தம்முடைய அதிகாரத்தைச் செலுத்தியதைக் கவனியுங்கள். லோத்துவையும் அவரது மனைவி மக்களையும் சோதோமிலிருந்து வெளியே அழைத்து வந்த பிறகு தூதர்கள் அவர்களிடம் இவ்வாறு சொன்னார்கள்: “நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ.” ஆனால், லோத்துவோ அதற்கு மறுமொழியாக ‘அப்படியல்ல ஆண்டவரே . . . அதோ, அந்த ஊர் இருக்கிறதே, நான் அதற்கு ஓடிப்போகத்தக்கதாய் அது கிட்ட இருக்கிறது, சின்னதுமாய் இருக்கிறது; என் பிராணன் பிழைக்க நான் அங்கே ஓடிப்போகட்டுமா’ என்று கேட்டார். யெகோவா அதற்கு எவ்வாறு பதிலளித்தார்? “இந்த விஷயத்திலும் உனக்கு அநுக்கிரகம் பண்ணினேன்” என்று சொன்னார். (ஆதியாகமம் 19:17-22) யெகோவா தம் அதிகாரத்தை விட்டுக்கொடுத்துவிட்டாரா? நிச்சயமாகவே இல்லை! மாறாக, லோத்துவின் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு அவருக்கு அதிக கரிசனையைக் காட்ட யெகோவா தீர்மானித்தார். நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால், வீட்டில் கட்டுப்பாடுகளை வைக்கும்போது சில சமயங்களில் உங்கள் பிள்ளைகளின் வேண்டுகோளையும் கருத்தில் கொண்டு செயல்பட முடியுமா?
12. ஒரு பிள்ளை பாதுகாப்பாக உணருவதற்கு எது உதவும்?
12 பெற்றோர் வகுத்த கட்டுப்பாடுகளை மட்டுமல்லாமல் அதை மீறினால் கிடைக்கும் தண்டனைகளையும் பிள்ளைகள் அறிந்திருப்பது அவசியமே. அப்படிப்பட்ட தண்டனைகளைத் தெளிவாக எடுத்துச் சொல்லி புரியவைத்த பிறகு, அந்தக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது அவசியம். மீறி நடந்தால் கிடைக்கும் தண்டனையைப்பற்றி பிள்ளைகளிடம் சதா சொல்லிக் கொண்டிருந்து அதை நிறைவேற்றாமல் விடுவது தயவான காரியமல்ல. “மக்கள் தீமை செய்யத் துணிவதேன்? தீமை செய்வோருக்கு விரைவிலேயே தண்டனை அளிக்காததுதான் இதற்குக் காரணம்.” (பிரசங்கி [சபை உரையாளர்] 8:11, பொது மொழிபெயர்ப்பு) உண்மைதான், பிள்ளைகளுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்படாமலிருக்க பெற்றோர் பொதுவிடத்திலோ, பிள்ளைகளின் நண்பர்கள் முன்னிலையிலோ அவர்களை தண்டிக்காமல் இருக்கலாம். ஆனால், தங்களுடைய பெற்றோர் எந்தவொரு விஷயத்திலும், அது தண்டனை கொடுக்கும் விஷயமாக இருந்தாலும் சரி, ‘ஆம்’ என்றோ ‘இல்லை’ என்றோ திட்டவட்டமாகச் சொல்லிவிட்டால் அதிலிருந்து மாற மாட்டார்கள் என்பதைப் பிள்ளைகள் அறிந்திருக்கும்போது அவர்கள் அதிக பாதுகாப்பாக உணருவார்கள்; அதோடு பெற்றோர்மீது அதிக மதிப்பையும் அன்பையும் வளர்த்துக் கொள்வார்கள்.—மத்தேயு 5:37, பொ.மொ.
13, 14. பிள்ளைகளைப் பயிற்றுவிக்கையில் பெற்றோர் எவ்வாறு யெகோவாவைப் பின்பற்றலாம்?
13 தண்டிப்பதைப் பொறுத்தவரை, ஒவ்வொரு பிள்ளைக்கும் ஏற்ற விதத்தில் அதை அளிப்பதே அன்பான காரியமாக இருக்கும். “எங்களுடைய இரண்டு பிள்ளைகளையும் அவர்களுக்கு ஏற்ற முறையில் கண்டிக்க வேண்டியிருந்தது. இளைய மகளைக் கண்டித்த முறையிலேயே மூத்த மகளையும் கண்டித்தபோது அது சரிப்பட்டு வரவில்லை” என்று பாம் என்பவர் சொல்கிறார். அவருடைய கணவர் லாரி இவ்வாறு விளக்குகிறார்: “எங்களுடைய பெரிய மகள் பிடிவாதக்காரியாக இருந்தாள். செமையாகக் கொடுத்தால் மட்டுமே அவள் அடங்குவாள். ஆனால், எங்கள் இளைய மகளை அதட்டி ஒரு பார்வை பார்த்தாலே போதும் பயந்து நடப்பாள்.” ஆம், அன்புள்ள பெற்றோர் தங்களுடைய பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் எப்படிப்பட்ட சிட்சை கொடுப்பது பயனுள்ளதாயிருக்கும் என்பதைக் கண்டுபிடிக்க பெருமுயற்சி செய்கிறார்கள்.
14 இந்த விஷயத்தில் பெற்றோருக்கு யெகோவா முன்மாதிரியாகத் திகழ்கிறார். ஏனென்றால், தம் ஊழியர்கள் ஒவ்வொருவருடைய குறைநிறைகளையும் அவர் அறிந்திருக்கிறார். (எபிரெயர் 4:13) அதுமட்டுமல்லாமல், தண்டனை கொடுக்கும்போது அவர் அதிக கடுமையானவராகவோ அளவுக்குமீறி விட்டுக்கொடுப்பவராகவோ இருப்பதில்லை. மாறாக, எப்போதுமே தம் மக்களை “மட்டாய்,” அதாவது சரியான அளவில் ‘தண்டிக்கிறார்.’ (எரேமியா 30:11) பெற்றோரே, உங்கள் பிள்ளைகளின் குறைநிறைகளை அறிந்திருக்கிறீர்களா? அதற்கிசைய தயவான விதத்திலும் பிள்ளைகளுக்குப் பயனளிக்கிற விதத்திலும் பயிற்றுவிக்கிறீர்களா? அப்படியானால் பிள்ளைகளை நீங்கள் நேசிக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறீர்கள்.
மனம்விட்டுப் பேச ஊக்கப்படுத்துங்கள்
15, 16. மனந்திறந்து பேசும்படி பெற்றோர் தங்கள் பிள்ளைகளை எவ்வாறு ஊக்குவிக்கலாம், இவ்விஷயத்தில் எப்படிப் பேசுவது பலன்தருவதாய் இருப்பதாக கிறிஸ்தவ பெற்றோர் கண்டிருக்கிறார்கள்?
15 ‘அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படுவது’ அன்பின் மற்றொரு அம்சமாகும். (1 கொரிந்தியர் 13:6) சரியானதும் உண்மையானதுமான காரியங்களை நேசிக்க பிள்ளைகளுக்குப் பெற்றோர் எப்படிக் கற்பிக்கலாம்? தங்கள் உணர்ச்சிகளை மூடிமறைக்காமல் சொல்லும்படி பிள்ளைகளை ஊக்கப்படுத்துவதே முக்கியமான ஒரு படியாகும்; பிள்ளைகள் சொல்லும் விஷயத்தை ஏற்றுக்கொள்வது பெற்றோருக்கு கடினமாக இருந்தாலும்கூட அவ்வாறு சொல்லும்படி ஊக்கப்படுத்த வேண்டும். ஒழுக்க நியதிகளுக்கு இசைவான எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பிள்ளைகள் வெளிப்படுத்தும்போது பெற்றோர் மகிழ்ச்சியடைவார்கள் என்பது புரிந்துகொள்ளத்தக்கதே. என்றாலும், சில சமயங்களில் பிள்ளைகளின் வெளிப்படையான பேச்சு அவர்களுடைய மனம் தீயொழுக்கத்தின்பால் சாய்கிறது என்பதைக் காட்டலாம். (ஆதியாகமம் 8:21) அப்போது பெற்றோர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? பிள்ளைகளின் மனதிலிருக்கும் தீய எண்ணங்களை அவர்களுடைய பேச்சு வெளிப்படுத்துமானால் அதைச் சரிசெய்ய உடனடியாக கண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படலாம். ஆனால், அப்படிச் செய்தால், பெற்றோருடைய காதுக்கு இனிமையாக இருக்கும் விஷயங்களை மட்டுமே சொல்வதற்கு பிள்ளைகள் பழகிக் கொள்வார்கள். பிள்ளைகள் அவமரியாதையாக பேசினால் அதை உடனடியாக திருத்த வேண்டும்தான். ஆனால், பண்பாகப் பேசுவது எப்படி என பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுப்பதற்கும் எவற்றை மட்டுமே பேச வேண்டுமென கட்டளையிடுவதற்கும் இடையே வித்தியாசமிருக்கிறது.
16 மனந்திறந்து பேசுவதற்கு பிள்ளைகளை பெற்றோர் எப்படி ஊக்கப்படுத்தலாம்? முன்னர் குறிப்பிடப்பட்ட ஆலியா இவ்வாறு சொல்கிறார்: “எங்களுக்கு மனக்கலக்கத்தை ஏற்படுத்துகிற விஷயங்களை பிள்ளைகள் சொன்னாலும்கூட நாங்கள் சட்டென கோபப்படுவதில்லை. இதன்மூலம், அவர்கள் எல்லாவற்றையும் மனந்திறந்து சொல்வதற்கேற்ற சூழலை ஏற்படுத்தியிருக்கிறோம்.” டாம் என்ற தகப்பன் இவ்வாறு சொல்கிறார்: “எங்களுடைய மகள் நாங்கள் சொல்கிற விஷயத்தை ஒத்துக்கொள்ளாவிட்டாலும்கூட, அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்பதைச் சொல்லும்படி ஊக்கப்படுத்தினோம். அவள் பேசும்போதெல்லாம் இடையில் குறுக்கிட்டு, எங்களுடைய விருப்பத்தை வலுக்கட்டாயமாக திணித்தால், அவள் எரிச்சலடைந்து, தன் மனதிலுள்ளதை சொல்லாமலேயே இருந்துவிடுவாளோ என நாங்கள் நினைத்தோம். மறுபட்சத்தில், அவள் பேசுவதை நாங்கள் கவனித்துக் கேட்டபோது நாங்கள் பேசுவதை கேட்பதற்கு அவளும் ஆர்வமாய் இருந்தாள்.” நிச்சயமாகவே, பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு கீழ்ப்படிய வேண்டும். (நீதிமொழிகள் 6:20) ஆனால், பெற்றோரும் பிள்ளைகளும் மனம்விட்டுப் பேசும்போது பிள்ளைகள் பகுத்தறியும் திறனை வளர்த்துக்கொள்ள பெற்றோர் உதவுகிறார்கள். நான்கு பெண்பிள்ளைகளின் தகப்பனான வின்சென்ட் இவ்வாறு சொல்கிறார்: “நாங்கள் பெரும்பாலும் ஒரு பிரச்சினையின் சாதக பாதகங்களை கலந்துபேசினோம். அதனால் பிள்ளைகள் எது சிறந்தது என்பதை அவர்களாகவே தெரிந்துகொள்ள முடிந்தது. விவேகமாய் நடப்பதற்கும் அது அவர்களுக்கு உதவியது.”—நீதிமொழிகள் 1:1-4.
17. எதைக் குறித்து பெற்றோர் நிச்சயமாயிருக்கலாம்?
17 குழந்தை வளர்ப்பின்பேரில் பைபிள் தரும் அறிவுரைகளை எந்தப் பெற்றோராலும் அப்படியே கடைப்பிடிக்க முடியாதென்பது உண்மைதான். ஆனால், நீடிய சாந்தத்தோடும் தயவோடும் அன்போடும் பிள்ளைகளைப் பயிற்றுவிக்க நீங்கள் எடுக்கும் உள்ளப்பூர்வமான முயற்சிகளை அவர்கள் பெரிதும் போற்றுவார்கள் என்பதில் நிச்சயமாயிருக்கலாம். யெகோவாவும் உங்கள் முயற்சிகளை ஆசீர்வதிப்பார். (நீதிமொழிகள் 3:33) அடிப்படையில், கிறிஸ்தவ பெற்றோர் ஒவ்வொருவரும் தங்களைப்போல் தங்கள் பிள்ளைகளும் யெகோவாவை நேசிக்க வேண்டுமென்றே விரும்புகிறார்கள். இந்தச் சிறந்த இலக்கை பெற்றோர் எவ்வாறு அடைய முடியும்? இதற்கான குறிப்பிட்ட சில வழிமுறைகளை பின்வரும் கட்டுரை கலந்தாராயும்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• புரிந்து கொள்ளும் திறன் நீடிய சாந்தத்தைக் காட்ட பெற்றோருக்கு எப்படி உதவும்?
• தயவும் சிட்சையும் எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளன?
• பெற்றோரும் பிள்ளைகளும் மனம்விட்டு பேசுவது ஏன் முக்கியம்?
[பக்கம் 23-ன் படங்கள்]
பெற்றோரே, உங்கள் பிள்ளைப் பருவத்தை உங்களால் நினைத்துப்பார்க்க முடிகிறதா?
[பக்கம் 24-ன் படம்]
மனதிலுள்ளவற்றையெல்லாம் கொட்டும்படி உங்கள் பிள்ளைகளை ஊக்குவிக்கிறீர்களா?