வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
தம்முடைய உண்மையுள்ள ஊழியக்காரன் ‘விவேகமுள்ளவனாக’ இருப்பான் என்று இயேசு சொன்னபோது எதை அர்த்தப்படுத்தினார்?
இயேசு பின்வரும் கேள்வியைக் கேட்டார்: “ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்?” (மத்தேயு 24:45) ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் தொகுதியே ஆன்மீக ‘போஜனம்’ அளிக்கிற “ஊழியக்காரன்.” இயேசு ஏன் அவர்களை விவேகமுள்ளவர்கள் என அழைத்தார்?a
என்ன அர்த்தத்தில் ‘விவேகமுள்ளவன்’ என இயேசு சொல்லியிருப்பார் என்பதை அவருடைய போதனையிலிருந்தே நாம் நன்கு புரிந்துகொள்ளலாம். உதாரணத்திற்கு, இயேசு ‘உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரனைப்பற்றி’ குறிப்பிட்டபோது, மணவாளனுக்காகக் காத்திருந்த பத்து கன்னிகைகளைப் பற்றிய உவமையைச் சொன்னார். இந்தக் கன்னிகைகள், ஒப்பற்ற மணவாளனான இயேசு கிறிஸ்துவின் வருகைக்காக 1914-க்கு முன்பு ஆவலோடு காத்திருந்த அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களை நமக்கு நினைவுபடுத்துகிறார்கள், அல்லவா? மணவாளன் வந்தபோது அந்தப் பத்துக் கன்னிகைகளில் ஐந்து பேரிடம் போதுமான எண்ணெயில்லாததால் அவர்களால் கலியாண வீட்டுக்குள் பிரவேசிக்க முடியவில்லை. ஆனால், மற்ற ஐந்து பேர் விவேகத்தோடு நடந்துகொண்டார்கள். தங்களுக்குத் தேவையான எண்ணெயை அவர்கள் கைவசம் வைத்திருந்ததால் தொடர்ந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்ய முடிந்தது. எனவே, மணவாளன் வந்தபோது அவர்களால் கலியாண வீட்டிற்குள் நுழைய முடிந்தது.—மத்தேயு 25:10-12.
இயேசு, 1914-ல் ராஜாவாக பரலோகத்தில் அதிகாரத்தை ஏற்றபோது, அவரோடு இருக்கும்படி உடனடியாக பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என அபிஷேகம் செய்யப்பட்டவர்களில் அநேகர் எதிர்பார்த்தார்கள். ஆனால், பூமியில் செய்வதற்கு அதிக வேலை அவர்களுக்கு இருந்தது. எனினும், அதற்கு சிலர் தயாராக இல்லை. புத்தியில்லாத கன்னிகளைப்போல், முன்னதாகவே தங்களை ஆன்மீக ரீதியில் அவர்கள் பலப்படுத்திக்கொள்ளவில்லை; இதன் காரணமாக, தொடர்ந்து விளக்கை ஏந்திச் செல்ல அவர்கள் தயாராய் இல்லை. எனினும், பெரும்பாலோர் விவேகத்தோடும், அதாவது ஞானத்தோடும், முன்யோசனையோடும் நடந்துகொண்டதால் ஆன்மீக ரீதியில் பலப்பட்டிருந்தார்கள். தாங்கள் செய்வதற்கு ஏகப்பட்ட வேலையிருந்ததை அறிந்தபோது அதை அவர்கள் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்கள். இவ்வாறு, தாங்கள் ‘உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரர்கள்’ என்பதை நிரூபித்தார்கள்.
மத்தேயு 7:24-ல், ‘புத்தியுள்ளவன்,’ அதாவது ‘விவேகமுள்ளவன்’ என்ற வார்த்தையை இயேசு உபயோகித்த விதத்தையும் கவனியுங்கள். அவர் இவ்வாறு சொன்னார்: “நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள [அதாவது, விவேகமுள்ள] மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.” விவேகமுள்ளவரோ ஒருவேளை புயல் வரலாம் என்ற எண்ணத்தில் வீட்டை உறுதியாகக் கட்டுகிறார். ஆனால், விவேகமற்றவன் மணலில் வீட்டைக் கட்டுவதனால் அதை இழந்துபோகிறான். எனவே, இயேசுவைப் பின்பற்றும் விவேகமுள்ளவர் மனித ஞானத்திற்கு இசைய நடப்பதனால் வரும் மோசமான விளைவுகளை முன்கூட்டியே அறிகிறார். அவருடைய விசுவாசம், செயல்கள், போதனைகள் அனைத்தும் இயேசு கற்பித்த விஷயங்கள்மீது உறுதியாய் சார்ந்திருப்பதற்குப் பகுத்துணர்வும் நன்கு யோசித்து முடிவெடுக்கும் திறனும் அவருக்கு உதவும். ‘உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரர்கள்’ இப்படித்தான் செயல்படுகிறார்கள்.
விவேகமுள்ளவர் என்ற வார்த்தை எபிரெய வேதாகமத்தின் அநேக மொழிபெயர்ப்புகளில் எப்படி உபயோகிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் கவனியுங்கள். உதாரணத்திற்கு, பார்வோன் உணவு வினியோகிக்கும் பொறுப்பை யோசேப்புக்குக் கொடுத்தார். இது, தம்முடைய ஜனங்களுக்கு உணவளிக்க யெகோவா செய்த ஏற்பாட்டின் பாகமாக இருந்தது. ஆனால், இந்த வேலையைச் செய்ய யோசேப்பு ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார்? யோசேப்பிடம் பார்வோன் இவ்வாறு சொன்னார்: ‘உன்னைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை.’ (ஆதியாகமம் 41:33-39; 45:5) அதேபோல், அபிகாயிலையும் “மகா புத்திசாலி” என்று பைபிள் அழைக்கிறது. யெகோவாவால் அபிஷேகம் செய்யப்பட்ட தாவீதுக்கும் அவருடன் இருந்தவர்களுக்கும் அவள் உணவளித்தாள். (1 சாமுவேல் 25:3, 11, 18) எனவே, யோசேப்பையும் அபிகாயிலையும் விவேகமுள்ளவர்களென அழைக்கலாம். ஏனெனில், அவர்கள் கடவுளின் சித்தம் இன்னதென்று பகுத்துணர்ந்து முன்யோசனையோடும் நன்கு யோசித்தும் முடிவெடுத்தார்கள்.
எனவே, உண்மையுள்ள ஊழியனை விவேகமுள்ளவன் என்று இயேசு விவரித்தபோது அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்கள் பகுத்துணர்வோடும் முன்யோசனையோடும் நன்கு யோசித்தும் நடந்துகொள்வார்கள் எனக் குறிப்பிட்டார். ஏனெனில், அவர்களுடைய விசுவாசத்திற்கும் செயல்களுக்கும் போதனைகளுக்கும் கடவுளுடைய சத்திய வார்த்தையே ஆதாரமாய் இருக்கிறது.
[அடிக்குறிப்பு]
a ஃபோரோனைமாஸ் என்ற கிரேக்க வார்த்தைக்கு ‘விவேகமுள்ளவன்’ என்று அர்த்தம். இந்த வார்த்தை, நடைமுறை ஞானத்தையும் புத்திசாலித்தனத்தையும் பெரும்பாலும் குறிக்கிறது என எம். ஆர். வின்சென்ட் எழுதிய புதிய ஏற்பாட்டு வார்த்தை ஆய்வுகளில் என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது.