செல்வமிக்க அதிபதியின் ஞானமற்ற தீர்மானம்
செ ல்வமிக்க அந்த அதிபதி நேர்மையானவன், சட்டத்திற்குக் கட்டுப்பட்டவன், மதப் பற்றுள்ளவன். இப்படிப்பட்டவன் இயேசுவிடம் வந்து, முழங்கால்படியிட்டு, “நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும்” என்று கேட்டான்.
அதற்கு இயேசு, ஜீவனை அடைவதற்கு கடவுளுடைய கட்டளைகளைக் கைக்கொள்ள வேண்டும் என்று பொதுவாகச் சொன்னார். கொஞ்சம் தெளிவாகச் சொல்லும்படி அவன் இயேசுவைக் கேட்டபோது, அவர் இவ்வாறு கூறினார்: “கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக; உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக; உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.” இவை மோசேயின் நியாயப்பிரமாணத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அடிப்படை கட்டளைகள். “இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன்; இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன” என்று அந்த மனிதன் கேட்டான்.—மத்தேயு 19:16-20.
இயேசு “அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு . . . என்னைப் பின்பற்றிவா” என்றார்.—மாற்கு 10:17-21.
இப்பொழுது அந்த இளம் அதிபதி ஒரு முக்கியமான தீர்மானத்தை எதிர்ப்படுகிறான். அவன் என்ன செய்வான்? உடனடியாக தன் சொத்துக்களையெல்லாம் விற்றுவிட்டு இயேசுவைப் பின்பற்றி வருவானா, அல்லது தன் சொத்துக்களை விட்டுப்பிரிய தயங்குவானா? அவன் பூமியில் பொக்கிஷங்களைச் சேர்ப்பானா அல்லது பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்ப்பானா? அவனுக்கு ஒரே குழப்பமாய் இருந்திருக்கும். ஆனால், அவன் நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடித்ததோடு கடவுளுடைய தயவைப் பெற தான் இன்னும் என்ன செய்ய வேண்டும் என்றும் கேட்டிருக்கிறான். இதிலிருந்து அவன் கடவுளோடு தனக்கிருந்த உறவைக் குறித்து அக்கறையாய் இருந்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அவன் என்ன தீர்மானம் எடுத்தான்? “அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், . . . துக்கத்தோடே போய்விட்டான்.”—மாற்கு 10:22.
இந்த இளம் அதிபதி எடுத்த தீர்மானம் ஞானமற்றதாக இருந்தது. அவன் இயேசுவை உண்மையுடன் பின்பற்றியிருந்தால் அவன் தேடியது அவனுக்குக் கிடைத்திருக்கும், ஆம், நித்திய ஜீவன் கிடைத்திருக்கும். அந்த மனிதனுக்கு என்ன ஆனதென்று நமக்குத் தெரியாது. என்றாலும், சுமார் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு ரோமப் படைகள் எருசலேமையும் யூதேயாவின் பெரும்பாலான பகுதியையும் பாழாக்கியது மட்டும் நமக்குத் தெரியும். அநேக யூதர்கள் தங்கள் செல்வத்தை மட்டுமல்லாமல் உயிரையும் இழந்தார்கள்.
இந்த இளம் அதிபதிபோல் அல்லாமல் அப்போஸ்தலன் பேதுருவும் மற்ற சீஷர்களும் ஞானமான தீர்மானத்தை எடுத்தார்கள். அவர்கள் “எல்லாவற்றையும் விட்டு” இயேசுவைப் பின்பற்றினார்கள். அது அவர்களுக்கு எவ்வளவு பலனுள்ளதாய் இருந்தது! அவர்கள் விட்டு வந்திருப்பதைவிட பல மடங்கு அதிகமாய்ப் பெறுவார்கள் என இயேசு அவர்களுக்குச் சொன்னார். அதுமட்டுமா, அவர்கள் நித்திய ஜீவனையும் பெறுவார்கள். தங்கள் தீர்மானத்தைக் குறித்து அவர்கள் பிறகு வருத்தப்பட வேண்டிய அவசியமே ஏற்படவில்லை.—மத்தேயு 19:27-29.
சிறியதோ பெரியதோ நாம் எல்லாருமே தீர்மானங்களை எதிர்ப்படுகிறோம். அப்படிப்பட்ட தீர்மானங்களைக் குறித்து இயேசு என்ன ஆலோசனை கொடுத்தார்? அவருடைய ஆலோசனையை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? அவ்வாறு செய்தால் மிகுதியாக ஆசீர்வதிக்கப்படுவீர்கள். இயேசுவைப் பின்பற்றி அவருடைய ஆலோசனைகளிலிருந்து பயனடைவது எப்படி என்பதை நாம் இப்போது சிந்திக்கலாம் வாருங்கள்.