இன்றைக்காக மட்டுமே வாழ்கிறீர்களா?
“நா ளைய தினத்தைப்பற்றி நான் யோசிப்பதே கிடையாது. அது எப்படியானாலும் வரத்தான் போகிறது.” இந்த வார்த்தைகளை உதிர்த்தவர் புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இதேபோல் பலரும் சொல்கிறார்கள். “நாளைய தினத்தைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?” என அவர்கள் கேட்கலாம். அல்லது ஆட்கள் இப்படிப் பேசுவதையும்கூட நீங்கள் கேட்டிருப்பீர்கள்: “அன்றன்றைக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைப்பற்றி மட்டுமே யோசி.” “இன்றைய பொழுதை நன்றாக கழித்துவிடு.” “நாளைய தினத்தை நினைத்து கவலைப்படாதே.”
சொல்லப்போனால், இந்தப் பொதுவான மனப்பான்மை ஒன்றும் புதிதல்ல. “சாப்பிட்டு, குடித்து சந்தோஷமாய் இரு. இதைத் தவிர வாழ்க்கையில் வேறெதுவும் முக்கியமில்லை” என்பது பண்டைய எப்பிக்கூரியரின் தாரகமந்திரமாக இருந்தது. அப்போஸ்தலன் பவுலின் காலத்தில் வாழ்ந்த சிலருக்கும்கூட இதுபோன்ற கருத்து இருந்தது. “புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம்” என்பதே அவர்களுடைய கருத்து. (1 கொரிந்தியர் 15:32) இந்தக் குறுகியகால வாழ்க்கைதான் எல்லாம் என அவர்கள் நம்பினார்கள்; எனவே வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க வேண்டுமென்ற கருத்தை அவர்கள் ஆதரித்தார்கள்.
பூமியில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கோ இன்பமான வாழ்க்கையைப்பற்றி யோசிக்கக்கூட நேரமில்லை. கஷ்டத்தில் தவிக்கிற அவர்களில் அநேகர் அன்றாட வயிற்றுப்பாட்டுக்காக மாடாய் உழைக்க வேண்டியிருக்கிறது. அப்படியிருக்க, பெரும்பாலும் இருண்டதாக, நம்பிக்கையற்றதாகத் தெரிகிற “நாளைய தினத்தை” பற்றி அவர்கள் ஏன் யோசிக்க வேண்டும்?
நாளைக்காக திட்டமிட வேண்டுமா?
ஓரளவுக்கு நன்றாக வாழும் மக்களும்கூட நாளைக்காகத் திட்டமிடுவதில் எந்தப் பிரயோஜனமுமில்லை என நினைக்கிறார்கள். “ஏன் வீணாக கவலைப்பட வேண்டும்?” என அவர்கள் கேட்கலாம். திட்டமிட்டு செயல்படுவர்களும்கூட கடைசியில் விரக்தியையும் ஏமாற்றத்தையுமே அடைவதாக சிலர் காரணங்காட்டலாம். பண்டைய காலத்தில் வாழ்ந்த வம்சத்தலைவரான யோபுவும்கூட தானும் தன் குடும்பமும் எதிர்காலத்தில் சந்தோஷமாக வாழ்வதற்காகத் திட்டங்கள் தீட்டியிருந்தார்; ஆனால் அவையெல்லாம் ‘தகர்ந்ததைக்’ கண்டு அவர் சொல்லொணா துயரம் அடைந்தார்.—யோபு 17:11, பொது மொழிபெயர்ப்பு; பிரசங்கி 9:11.
ஸ்காட்லாந்து கவிஞர் ராபர்ட் பர்ன்ஸ் மனிதரின் அவல நிலையை வயல்களில் வாழும் சின்னஞ்சிறிய எலியின் நிலைமைக்கு ஒப்பிட்டார்; பர்ன்ஸ் ஒருமுறை தன்னுடைய ஏர்முனையால் தெரியாத்தனமாக அதன் வளையைத் தகர்த்துப்போட்டார். அதன் உலகமே தலைகீழாகிப் போனதால் அந்த எலி தப்பித்தோம் பிழைத்தோம் என தலைதெறிக்க ஓடியது. அதைப் பார்த்த கவிஞர் இவ்வாறு யோசித்தார்: ‘ஆம், காரியங்கள் முற்றிலும் கைமீறிப் போகும்போது பல சந்தர்ப்பங்களில் ஒன்றுமே செய்ய முடியாமல் நாமும் நிர்க்கதியாய் நிற்கிறோம்; அப்படிப்பட்ட சமயத்தில் நாம் போட்ட சிறந்த திட்டங்களும்கூட தவிடுபொடியாகித்தான் போகின்றன.’
அப்படியானால், நாளைக்காக திட்டமிடுவது பயனற்றதா? நன்கு திட்டமிடாதபோது, சூறாவளியோ மற்ற இயற்கைப் பேரழிவுகளோ தாக்குகையில் பயங்கரமான விளைவுகள் ஏற்படலாம் என்பதே உண்மை. உதாரணத்திற்கு, கட்ரீனா சூறாவளியை யாராலும் தடுத்து நிறுத்தியிருக்க முடியாதுதான். ஆனால், முன்யோசனையோடு திட்டமிட்டிருந்தால் நியூ ஆர்லியன்ஸ் நகரத்திற்கும் அங்கு வசித்தவர்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புகளைப் பெருமளவு குறைத்திருக்கலாம், அல்லவா?
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நாளைய தினத்தை மறந்து இன்றைக்காக மட்டுமே வாழ்வது நியாயமானதா? இக்கேள்விகளுக்கு பதிலை அடுத்த கட்டுரையில் காணலாம்.
[பக்கம் 3-ன் படங்கள்]
“சாப்பிட்டு, குடித்து சந்தோஷமாய் இரு. இதைத்தவிர வாழ்க்கையில் வேறெதுவும் முக்கியமில்லை”
[பக்கம் 4-ன் படம்]
முன்யோசனையோடு திட்டமிட்டிருந்தால் கட்ரீனா சூறாவளியின் பாதிப்புகளைக் குறைத்திருக்க முடியுமோ?
[படத்திற்கான நன்றி]
U.S. Coast Guard Digital