யெகோவாவின் வார்த்தை ஒருபோதும் தவறிப்போவதில்லை
“உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை.”—யோசுவா 23:14.
1. யோசுவா யார், தன்னுடைய கடைசி காலத்தில் அவர் என்ன செய்தார்?
அ வர் வலிமையும், அஞ்சாநெஞ்சமுமுள்ள படைத் தளபதி; விசுவாசத்திற்கும் உண்மைத்தன்மைக்கும் பெயர்பெற்றவர். அவர் மோசேயோடு இருந்தவர்; பயங்கரமான வனாந்தரத்திலிருந்து பாலும் தேனும் ஓடுகிற தேசத்திற்கு இஸ்ரவேலரை அழைத்துச் செல்ல யெகோவாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் யார்? அவர்தான் மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய யோசுவா. தன்னுடைய கடைசி காலத்தில் இஸ்ரவேல மூப்பர்களிடம் நெஞ்சை நெகிழவைக்கும் பிரிவுபசார உரை நிகழ்த்தினார். அதைக் கேட்ட அனைவரின் விசுவாசமும் பலப்பட்டிருக்கும் என்பதில் எள்ளளவேனும் சந்தேகமில்லை. அதேபோல, உங்களுடைய விசுவாசத்தையும் அது பலப்படுத்த முடியும்.
2, 3. இஸ்ரவேல மூப்பர்களிடம் யோசுவா பேசியபோது, இஸ்ரவேலில் எத்தகைய சூழ்நிலை நிலவியது, அவர் என்ன சொன்னார்?
2 பைபிளில் விவரிக்கப்பட்டிருக்கிற இந்தச் சூழ்நிலையை உங்கள் மனக்கண் முன் கொண்டுவாருங்கள்: “கர்த்தர் இஸ்ரவேலைச் சுற்றிலும் இருந்த அவர்களுடைய எல்லாச் சத்துருக்களாலும் யுத்தமில்லாதபடிக்கு இளைப்பாறப்பண்ணி அநேகநாள் சென்றபின்பு, யோசுவா வயதுசென்று முதிர்ந்தவனானபோது, யோசுவா இஸ்ரவேலின் மூப்பரையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், அதிபதிகளையும், மற்ற எல்லாரையும் அழைப்பித்து, அவர்களை நோக்கி: நான் வயதுசென்று முதிர்ந்தவனானேன் [என்றார்].”—யோசுவா 23:1, 2.
3 அப்போது யோசுவாவுக்கு சுமார் 110 வயது; கடவுளுடைய மக்களின் சரித்திரத்தில் சிலிர்க்க வைக்கும் சம்பவங்கள் நடந்தேறிய காலப்பகுதியில் அவர் வாழ்ந்திருந்தார். கடவுள் நடப்பித்த வல்லமையான செயல்களை அவர் கண்ணாரக் கண்டிருந்தார்; யெகோவாவின் வாக்குறுதிகளில் அநேகம் நிறைவேறியதையும் நேரில் பார்த்திருந்தார். எனவே, தன்னுடைய அனுபவத்திலிருந்தே அவரால் இவ்வாறு உறுதியாகச் சொல்ல முடிந்தது: “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை.”—யோசுவா 23:14.
4. யெகோவா என்ன வாக்குறுதிகளை இஸ்ரவேலருக்குக் கொடுத்தார்?
4 யெகோவா சொன்ன என்ன வார்த்தைகள் யோசுவாவின் நாட்களில் உண்மையாயின? இஸ்ரவேலருக்கு யெகோவா கொடுத்த மூன்று வாக்குறுதிகளை நாம் இப்பொழுது சிந்திக்கலாம். முதலாவது, அடிமைத்தனத்திலிருந்து கடவுள் அவர்களை விடுவிப்பார். இரண்டாவது, அவர்களைப் பாதுகாப்பார். மூன்றாவது, அவர்களைப் பராமரிப்பார். இன்றுள்ள தம்முடைய மக்களுக்கும் இதேபோன்ற வாக்குறுதிகளை யெகோவா அளித்திருக்கிறார்; அவை நம் நாளில் நிஜமானதை நாம் கண்ணாரக் கண்டிருக்கிறோம். என்றாலும், இன்று யெகோவா செய்தவற்றைச் சிந்திப்பதற்கு முன், யோசுவாவின் நாட்களில் அவர் செய்தவற்றை முதலில் கவனிப்போம்.
தம் மக்களை யெகோவா விடுவிக்கிறார்
5, 6. எகிப்திலிருந்து இஸ்ரவேலரை யெகோவா எவ்வாறு விடுதலை செய்தார், இது எதை நிரூபித்தது?
5 எகிப்தில் இஸ்ரவேலர் அடிமைத்தனத்தில் அவதிப்பட்டபோது, நெஞ்சம் குமுறி கடவுளிடம் கெஞ்சி மன்றாடினார்கள், யெகோவா அவர்களுடைய மன்றாட்டைக் கேட்டார். (யாத்திராகமம் 2:23-25) எரியும் முட்செடியின் நடுவிலிருந்து மோசேயிடம் யெகோவா பேசியபோது, “அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும் . . . பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன்” என்று சொன்னார். (யாத்திராகமம் 3:8) யெகோவா இதைச் செய்வதைக் காண்பது எவ்வளவு சிலிர்ப்பூட்டுவதாய் இருந்திருக்கும்! இஸ்ரவேலரை எகிப்திலிருந்து அனுப்பிவிட பார்வோன் மறுத்தபோது, நைல் நதியின் தண்ணீரை கடவுள் இரத்தமாக மாற்றுவார் என்று மோசே அவனுக்கு அறிவித்தார். யெகோவாவின் வார்த்தை தவறிப்போகவில்லை. நைல் நதியின் தண்ணீர் இரத்தமாக மாறியது. மீன்கள் செத்து மடிந்தன, நதியின் தண்ணீரை அவர்களால் குடிக்க முடியாமல் போனது. (யாத்திராகமம் 7:14-21) பார்வோனோ கொஞ்சமும் மசியவில்லை; யெகோவா முன்னதாகவே அறிவித்துவிட்டு, கூடுதலாக ஒன்பது வாதைகளைக் கொண்டுவந்தார். (யாத்திராகமம், அதிகாரங்கள் 8-12) பத்தாவது வாதையின்போது எகிப்திலிருந்த தலைப்பிள்ளைகள் எல்லாரும் சாகடிக்கப்பட்டார்கள்; அதன் பிறகு, இஸ்ரவேலரை பார்வோன் போகவிட்டான். அவர்கள் எகிப்தைவிட்டுப் புறப்பட்டார்கள்.—யாத்திராகமம் 12:29-32.
6 இஸ்ரவேலரை தம்முடைய ஜனமாக யெகோவா தேர்ந்தெடுப்பதற்கு இந்த விடுதலை வழிவகுத்தது. யெகோவா வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர், அவருடைய வார்த்தை நிச்சயம் நிறைவேறும் என்பதை இது சிறப்பித்துக் காட்டியது. பிற நாட்டவர் வழிபட்ட தெய்வங்களைவிட யெகோவா உயர்ந்தவர் என்பதை இது நிரூபித்தது. அதைப்பற்றி வாசிக்கும்போது நம்முடைய விசுவாசம் பலப்படுகிறது. அதை நேரில் பார்த்திருந்தால் எப்படிச் சிலிர்த்துப் போயிருப்போம் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள். யெகோவாவே “பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர்” என்பதை யோசுவா புரிந்துகொண்டார்.—சங்கீதம் 83:17.
தம் மக்களை யெகோவா பாதுகாக்கிறார்
7. பார்வோனின் சேனையிடமிருந்து இஸ்ரவேலரை யெகோவா எவ்வாறு பாதுகாத்தார்?
7 தம்முடைய மக்களை யெகோவா பாதுகாப்பார் என்ற இரண்டாவது வாக்குறுதியைப்பற்றி என்ன சொல்லலாம்? எகிப்திலிருந்து இஸ்ரவேலரை விடுதலை செய்து வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு அழைத்துச் செல்வதாக யெகோவா கொடுத்திருந்த வாக்குறுதியிலேயே இந்த வாக்குறுதியும் அடங்கியிருந்தது. மூர்க்க வெறிகொண்ட பார்வோன் நூற்றுக்கணக்கான இரதங்களைக் கொண்ட வலிமைமிக்க தன் சேனையுடன் இஸ்ரவேலரைப் பின்தொடர்ந்து சென்றதைச் சற்று கற்பனையில் ஓடவிடுங்கள். அந்த வீம்புபிடித்த பார்வோனுக்கு எவ்வளவு தன்னம்பிக்கை! அதுவும், ஒருபக்கம் மலைகள், மறுபக்கம் கடல் என இரண்டுக்கும் இடையே இஸ்ரவேலர் சிக்கிக்கொண்டதுபோல் தெரிந்தபோது அந்த நம்பிக்கை நிச்சயம் அவனுக்குள் இன்னும் அதிகமாயிருக்கும். தம் மக்களைப் பாதுகாக்க இப்பொழுது கடவுளே தலையிட்டார். இரண்டு கூட்டத்தாருக்கும் நடுவே மேகத்தை நிறுத்தினார். எகிப்தியரின் பக்கம் இருளாகவும் இஸ்ரவேலரின் பக்கம் வெளிச்சமாகவும் இருந்தது. எகிப்தியரை முன்னேறவிடாமல் மேகம் தடுத்தபோது, தன்னுடைய கோலை மோசே உயர்த்தினார்; சிவந்த சமுத்திரத்தின் தண்ணீர் இரண்டாகப் பிளந்தது. இதன் வழியே இஸ்ரவேலர் தப்பிச்சென்றார்கள்; எகிப்தியர் சிக்கிக்கொண்டார்கள். பார்வோனின் வலிமைவாய்ந்த சேனையை யெகோவா முற்றிலுமாக ஒழித்துக்கட்டினார்; தம் மக்களைத் தோல்வியிலிருந்து பாதுகாத்தார்.—யாத்திராகமம் 14:19-28.
8. இஸ்ரவேலர் எப்படிப் பாதுகாக்கப்பட்டார்கள் (அ) வனாந்தரத்தில் (ஆ) வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் காலடியெடுத்து வைத்தபோது?
8 சிவந்த சமுத்திரத்தைக் கடந்த பிறகு இஸ்ரவேலர், “கொள்ளிவாய்ச் சர்ப்பங்களும் தேள்களும், தண்ணீரில்லாத வறட்சியுமுள்ள பயங்கரமான பெரிய வனாந்தர வழியாய்” அலைந்து திரிந்தார்கள். (உபாகமம் 8:15) யெகோவா அங்கும் தம் மக்களைப் பாதுகாத்தார். வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் அவர்கள் காலடியெடுத்து வைத்ததைப்பற்றி என்ன சொல்லலாம்? வீரதீரமிக்க கானானியப் படைகள் அவர்களை எதிர்த்தன. எனினும் யோசுவாவிடம் யெகோவா, “நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக் கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள். நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என்று சொன்னார். (யோசுவா 1:2, 5) யெகோவாவுடைய இந்த வார்த்தைகள் தவறிப்போகவில்லை. சுமார் ஆறு வருடங்களுக்குள்ளாகவே, 31 ராஜாக்களை யோசுவா தோற்கடித்து, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் பெரும் பகுதியைக் கைப்பற்றினார். (யோசுவா 12:7-24) யெகோவா அவர்களைக் கண்ணுக்குள் வைத்து பாதுகாத்திராவிட்டால் இத்தகைய வெற்றியைப் பெற்றிருக்கவே முடியாது.
தம் மக்களை யெகோவா பராமரிக்கிறார்
9, 10. தம் மக்களை யெகோவா வனாந்தரத்தில் எவ்வாறு பராமரித்தார்?
9 தம்முடைய மக்களை யெகோவா பராமரிப்பார் என்ற மூன்றாவது வாக்குறுதியை இப்பொழுது கவனிக்கலாம். எகிப்திலிருந்து இஸ்ரவேலரை விடுதலை செய்த கொஞ்ச காலத்தில் அவர்களுக்கு கடவுள் இவ்வாறு உறுதியளித்தார்: “நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன்; ஜனங்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.” அவர் சொன்னதைச் செய்தார், ‘வானத்திலிருந்து அப்பத்தை’ வருஷித்துக் கொடுத்தார். “இஸ்ரவேல் புத்திரர் அதைக் கண்டு, அது இன்னது என்று அறியாதிருந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, இது என்ன என்றார்கள்.” அதுதான் மன்னா, அவர்களுக்குத் தருவேன் என்று யெகோவா வாக்குக்கொடுத்திருந்த அப்பம்.—யாத்திராகமம் 16:4, 13-15.
10 யெகோவா அந்த வனாந்தரத்தில் 40 வருடங்கள் உணவும் தண்ணீரும் கொடுத்து இஸ்ரவேலரைப் பராமரித்தார். அவர்களுடைய ஆடைகள் பழையதாய்ப் போகாதபடியும், அவர்களுடைய கால்கள் வீங்காதபடியும் பார்த்துக்கொண்டார். (உபாகமம் 8:3, 4) யோசுவா இவற்றையெல்லாம் கண்டார். ஆம், வாக்குறுதி அளித்தபடி தம்முடைய மக்களை யெகோவா விடுவித்தார், பாதுகாத்தார், பராமரித்தார்.
நம் காலத்தில் விடுதலை
11. நியு யார்க்கிலுள்ள புருக்லினில் 1914-ல் என்ன நடந்தது, அப்போது எதற்கான காலம் வந்தது?
11 நம்முடைய காலத்தைப்பற்றி என்ன சொல்லலாம்? 1914-ஆம் வருடம், அக்டோபர் 2-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பைபிள் மாணாக்கர்களை அச்சமயத்தில் முன்நின்று வழிநடத்திய சார்ல்ஸ் டேஸ் ரஸல், நியு யார்க் நகரில் புருக்லின் பெத்தேலிலுள்ள சாப்பாட்டு அறைக்குள் நுழைந்தார். “அனைவருக்கும் காலை வணக்கம்” என்று சந்தோஷமாய்ச் சொன்னார். பிறகு, தன்னுடைய இருக்கையில் அமருவதற்கு முன், “புறஜாதியாரின் காலம் முடிவடைந்தது; அவர்களுடைய ராஜாக்களின் காலம் முடிவுக்கு வந்தது” என்று மகிழ்ச்சிபொங்க அறிவித்தார். சர்வலோக உன்னதப் பேரரசரான யெகோவா தம்முடைய மக்களின் சார்பாக மீண்டும் செயல்படுவதற்கான காலம் வந்தது. அவரும் செயல்பட்டார்!
12. என்ன விடுதலை 1919-ல் நிகழ்ந்தது, என்ன விளைவுகளோடு?
12 அதற்குப் பிறகு ஐந்தே வருடங்களில், தம்முடைய மக்களை பொய் மத உலகப் பேரரசான ‘மகா பாபிலோனிலிருந்து’ யெகோவா விடுவித்தார். (வெளிப்படுத்துதல் 18:2) மெய்சிலிர்க்க வைக்கும் அந்த விடுதலையை நம்மில் அநேகர் நேரடியாகப் பார்த்ததில்லை. என்றாலும், அதன் விளைவுகளை இப்பொழுது நாம் தெளிவாகப் பார்க்கிறோம். உண்மை வணக்கத்தை யெகோவா மீண்டும் ஸ்தாபித்து, உள்ளப்பூர்வமாய் தம்மை வழிபட ஏங்கியவர்களை ஒன்று சேர்த்தார். இது, “கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள்” என்று ஏசாயா தீர்க்கதரிசிமூலம் ஏற்கெனவே முன்னுரைக்கப்பட்டிருந்தது.—ஏசாயா 2:2.
13. யெகோவாவுடைய மக்களிடையே என்ன அதிகரிப்பை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்?
13 ஏசாயாவின் வார்த்தைகள் தவறிப்போகவில்லை. 1919 முதற்கொண்டு, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் உலகமெங்கும் தைரியமாகப் பிரசங்கிக்க ஆரம்பித்தார்கள்; இது, மெய்க் கடவுளின் வணக்கத்தை உச்சாணிக்கு உயர்த்தியது. ‘வேறே ஆடுகளைச்’ சேர்ந்தோரும் தூய வணக்கத்தில் கூட்டிச் சேர்க்கப்படுகிறார்கள் என்பது 1930-களில் தெளிவானது. (யோவான் 10:16) தூய வணக்கத்தை ஆதரித்தவர்கள், முதலில் ஆயிரக்கணக்கிலும் பின்னர் பத்தாயிரக்கணக்கிலும் இருந்தார்கள். இப்பொழுது லட்சக்கணக்கில் அதிகரித்திருக்கிறார்கள். அப்போஸ்தலன் யோவான் கண்ட ஒரு தரிசனத்தில் அவர்கள், “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்” என்று விவரிக்கப்படுகிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9) உங்களுடைய நாளில் எத்தகைய அதிகரிப்பைப் பார்த்திருக்கிறீர்கள்? முதன்முதலாக நீங்கள் சத்தியத்தைத் கற்றுக்கொண்டபோது, பூமியில் யெகோவாவின் சாட்சிகள் எத்தனை பேர் இருந்தார்கள்? இன்று, 67 லட்சத்திற்கும் அதிகமானோர் யெகோவாவுக்குச் சேவை செய்து வருகிறார்கள். மகா பாபிலோனிலிருந்து தம்முடைய மக்களை விடுவிப்பதன்மூலம், பிரமிப்பூட்டும் இந்த உலகளாவிய அதிகரிப்புக்கு யெகோவா வழியைத் திறந்து வைத்தார்.
14. என்ன விடுதலை வரவிருக்கிறது?
14 இன்னொரு விடுதலையை யெகோவா நிகழ்த்தப் போகிறார்; அதில், பூமியெங்குமுள்ள அனைவரும் உட்படுவர். அப்போது, பொறிகலங்க வைக்கும் விதத்தில் யெகோவா தமது வல்லமையை வெளிக்காட்டுவார்; தம்மை எதிர்க்கிற அனைவரையும் சுவடு தெரியாமல் துடைத்தழிப்பார். அதோடு, தமது மக்களை நீதி குடியிருக்கும் புதிய பூமியில் காலெடுத்து வைக்கச் செய்வார். துன்மார்க்க இருள் மறைந்து, மனித சரித்திரத்திலேயே மிக மகிமையான சகாப்தத்தின் விடியலைக் காண்பது எவ்வளவு ஆனந்தமாய் இருக்கும்!—வெளிப்படுத்துதல் 21:1-4.
நம் நாளில் யெகோவாவின் பாதுகாப்பு
15. இன்று யெகோவாவின் பாதுகாப்பு ஏன் அவசியமாயிருக்கிறது?
15 யோசுவாவின் நாட்களில் இருந்த இஸ்ரவேலருக்கு யெகோவாவின் பாதுகாப்பு அவசியமாயிருந்ததை நாம் பார்த்தோம். இன்றுள்ள யெகோவாவின் மக்களுக்கு அவருடைய பாதுகாப்பு அவசியமா? நிச்சயமாக அவசியம். “உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்” என்று தம்முடைய சீஷர்களை இயேசு எச்சரித்தார். (மத்தேயு 24:9) அநேக நாடுகளில், பல வருடங்களாக யெகோவாவின் சாட்சிகள் படுமோசமான எதிர்ப்புகளையும் கொடூரமான துன்புறுத்தல்களையும் சகித்து வருகிறார்கள். என்றாலும், தம் மக்களுக்கு யெகோவா பக்கபலமாய் இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. (ரோமர் 8:31) நாம் ராஜ்யத்தைப்பற்றி பிரசங்கிப்பதையும்சரி மக்களுக்குப் போதிப்பதையும்சரி, ‘நமக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும்’ தடுத்து நிறுத்த முடியாது என்று அவருடைய வார்த்தை நமக்கு உறுதியளிக்கிறது.—ஏசாயா 54:17.
16. தம்முடைய மக்களை யெகோவா பாதுகாக்கிறார் என்பதற்கு என்ன அத்தாட்சியை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்?
16 யெகோவாவின் மக்களை இந்த உலகம் பகைத்தாலும் அவர்கள் எண்ணிக்கையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறார்கள். யெகோவாவின் சாட்சிகள் 236 நாடுகளில் தழைத்தோங்குவது, அவர்களை ஒழித்துக்கட்டவும் அவர்களுடைய வாயை அடைக்கவும் முயலுகிறவர்களிடமிருந்து அவர்களை யெகோவா பாதுகாக்கிறார் என்பதற்கு மறுக்க முடியாத அத்தாட்சி அளிக்கிறது. உங்களுடைய வாழ்நாளில், கடவுளின் மக்களைப் படுபயங்கரமாக அடக்கி ஒடுக்கிய அரசியல் தலைவர்கள் அல்லது மதத் தலைவர்கள் யாரையாவது உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? அவர்களுக்கு என்ன நேர்ந்தது? இப்பொழுது அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? அவர்களில் பெரும்பாலோர் மோசே, யோசுவா ஆகியோரின் நாட்களில் வாழ்ந்த பார்வோனைப் போலவே அழிந்து போனார்கள். நம் நாளில் கடவுளுக்கு உண்மையாய் நிலைத்திருந்து மரணத்தைத் தழுவியிருக்கிறவர்களைப்பற்றி என்ன சொல்லலாம்? அவர்கள் நிச்சயமாகவே யெகோவாவின் ஞாபகத்தில் பாதுகாப்பாய் இருக்கிறார்கள். அவர்களுக்கு அதைவிட பாதுகாப்பான இடம் வேறு எதுவும் இருக்க முடியாது. வாக்குறுதி அளித்தபடி யெகோவா பாதுகாக்கிறார் என்பது தெளிவாய்த் தெரிகிறது.
தம் மக்களை யெகோவா இன்று பராமரிக்கிறார்
17. ஆன்மீக சத்தியங்களைக் குறித்து யெகோவா என்ன உறுதி அளித்தார்?
17 வனாந்தரத்தில் அன்று தம்முடைய மக்களை யெகோவா பராமரித்தார், இன்றும் பராமரிக்கிறார். ‘உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரர்’ மூலம் யெகோவாவிடம் நெருங்கி வர நமக்கு உதவி கிடைக்கிறது. (மத்தேயு 24:45) பல நூற்றாண்டுகள் புரியாத புதிராய் இருந்த ஆன்மீக சத்தியங்களை நாம் தெரிந்துகொள்கிறோம். எனவேதான், தானியேலிடம், “முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப் புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம்” என்று தேவதூதன் கூறினார்.—தானியேல் 12:4.
18. கடவுளைப் பற்றிய உண்மையான அறிவு இன்று ஏராளமாய் கிடைக்கிறதென ஏன் சொல்லலாம்?
18 முடிவு காலத்தில் நாம் வாழ்கிறோம்; கடவுளைப் பற்றிய உண்மையான அறிவு ஏராளமாய் கிடைக்கிறது. உலக முழுவதும், உண்மைக் கடவுளையும் அவருடைய நோக்கங்களையும்பற்றித் தெள்ளத் தெளிவாய்த் தெரிந்துகொள்ள சத்தியத்தை நேசிப்பவர்களை பரிசுத்த ஆவி வழிநடத்தியிருக்கிறது. இன்று உலகமெங்கும் பைபிள் தாராளமாய் கிடைக்கிறது; அதிலுள்ள அருமையான சத்தியங்களைப் புரிந்துகொள்ள மக்களுக்கு உதவுகிற பிரசுரங்களும் இன்று ஏராளமாய் கிடைக்கின்றன. உதாரணமாக, பைபிள் படிப்பிற்கு உதவுகிற பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்திலுள்ள பொருளடக்கத்தைக் கவனியுங்கள்.a “கடவுளைப் பற்றிய உண்மைகள் யாவை?,” “இறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்?,” “கடவுளுடைய ராஜ்யம் என்பது என்ன?,” “கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்?” ஆகியவை அதில் விளக்கப்பட்டுள்ள தலைப்புகளில் சில. ஆயிரக்கணக்கான வருடங்களாக இதுபோன்ற கேள்விகளுக்கு மக்கள் விடை தேடியிருக்கிறார்கள். இப்பொழுதோ அவற்றுக்கான பதில்கள் உடனடியாய் கிடைக்கின்றன. பைபிளை பல நூற்றாண்டுகளாக மக்கள் புரிந்துகொள்ளாமல் இருந்திருக்கிறார்கள், கிறிஸ்தவமண்டலத்தினர் விசுவாசதுரோக கருத்துகளைப் போதித்திருக்கிறார்கள். இருந்தாலும், தொடர்ந்து மக்கள்மீது பைபிள் செல்வாக்கு செலுத்துகிறது. அதோடு, யெகோவாவுக்குச் சேவை செய்ய உள்ளார விரும்புகிற அனைவரையும் அது பராமரிக்கிறது.
19. என்ன வாக்குறுதிகள் நிறைவேறியதை நீங்கள் கண்ணாரக் கண்டிருக்கிறீர்கள், என்ன முடிவுக்கு வந்திருக்கிறீர்கள்?
19 நாம் கண்ணாரக் கண்டவற்றிலிருந்து, “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை . . . அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை” என்று நாமும் உறுதியாகச் சொல்லலாம். (யோசுவா 23:14) ஆம், தம்முடைய மக்களை யெகோவா விடுவிக்கிறார், பாதுகாக்கிறார், பராமரிக்கிறார். அவர் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றாவது குறித்த காலத்தில் நிறைவேறவில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? சொல்லவே முடியாது. எனவே, நாம் ஞானமாக கடவுளுடைய நம்பகமான வார்த்தையில் நம்பிக்கை வைக்கிறோம்.
20. ஒளிமயமான எதிர்காலத்தை நாம் ஏன் நம்பிக்கையோடு எதிர்பார்க்கலாம்?
20 எதிர்காலத்தைப்பற்றி என்ன சொல்லலாம்? இன்பமயமாய் காட்சியளிக்கும் பூங்காவன பூமியில் நம்மில் அநேகர் வாழ்வோம் என்ற நம்பிக்கையை யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார். நம்மில் சிலர், பரலோகத்தில் கிறிஸ்துவுடன் சேர்ந்து ஆட்சி செய்கிற நம்பிக்கையைப் பெற்றிருக்கிறார்கள். நமக்கு எந்த நம்பிக்கை இருந்தாலும், யோசுவாவைப்போல விசுவாசத்தில் நிலைத்திருக்க நமக்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன. நம்முடைய நம்பிக்கை நிஜமாகும் அந்த நாள் வரும். அப்பொழுது, யெகோவா கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நினைவுபடுத்தி, “அவைகளெல்லாம் . . . நிறைவேறிற்று” என்று நாமும் சொல்வோம்.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
உங்களால் விளக்க முடியுமா?
• யெகோவா கொடுத்த எந்தெந்த வாக்குறுதிகளின் நிறைவேற்றத்தை யோசுவா கண்ணாரக் கண்டார்?
• கடவுளின் எந்தெந்த வாக்குறுதிகளின் நிறைவேற்றத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்?
• கடவுளுடைய வார்த்தையைக் குறித்து என்ன உறுதியோடு நாம் இருக்கலாம்?
[பக்கம் 23-ன் படம்]
தம் மக்களை விடுவிக்க யெகோவா தலையிட்டார்
[பக்கம் 23-ன் படம்]
சிவந்த சமுத்திரத்தில் தம் மக்களை யெகோவா எவ்வாறு பாதுகாத்தார்?
[பக்கம் 24-ன் படம்]
வனாந்தரத்தில் தம் மக்களை யெகோவா எவ்வாறு பராமரித்தார்?
[பக்கம் 25-ன் படம்]
இன்றும் தம் மக்கள்மீது யெகோவா கரிசனை காட்டுகிறார்