சீஷராக்க உதவும் பண்புகளை வளர்த்துக்கொள்ளுங்கள்
‘நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்.’—மத்தேயு 28:19.
1. கடவுளுடைய கடந்த கால ஊழியர்கள் சிலருக்கு எப்படிப்பட்ட திறமைகளும் மனப்பான்மைகளும் தேவைப்பட்டன?
யெ கோவாவின் ஊழியர்கள் அவருடைய சித்தத்தைச் செய்வதற்குக் கைகொடுக்கும் திறமைகளையும் மனப்பான்மைகளையும் சிலசமயங்களில் வளர்த்துக்கொள்வது முக்கியமானதாய் இருக்கிறது. உதாரணமாக, ஆபிரகாமும் சாராளும் கடவுளுடைய கட்டளைக்கு இணங்கி செல்வச் செழிப்பான ஊர் பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டனர்; காலப்போக்கில் கூடாரவாசிகளுக்கே உரித்தான பண்புகளையும் திறமைகளையும் அவர்கள் வளர்க்க வேண்டியிருந்தது. (எபிரெயர் 11:8, 9, 15) இஸ்ரவேலர்களை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு வழிநடத்திச் செல்ல யோசுவாவுக்கு தைரியமும் யெகோவாமீது திட நம்பிக்கையும் அவரது சட்டங்களைப் பற்றிய அறிவும் தேவைப்பட்டது. (யோசுவா 1:7-9) பெசலெயேலும் அகோலியாபும் கைவேலைகளில் ஏற்கெனவே சிறந்து விளங்கியிருக்கலாம். ஆனால், கடவுளுடைய ஆவியின் உதவியை அவர்கள் பெற்றபோதோ அதில் இன்னும் கைதேர்ந்தவர்களாக ஆனார்கள்; ஆசாரிப்புக் கூடாரத்தைக் கட்டுவதிலும் அதற்குரிய தட்டுமுட்டுச் சாமான்களை உண்டாக்குவதிலும் அவற்றை மேற்பார்வை செய்வதிலும் திறம்பட்டவர்களாக ஆனார்கள்.—யாத்திராகமம் 31:1-11.
2. சீஷராக்கும் வேலை சம்பந்தமாக என்ன கேள்விகளை நாம் சிந்திப்போம்?
2 பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர், தம்முடைய சீஷர்களுக்கு இயேசு கிறிஸ்து ஒரு வேலையைக் கொடுத்து இவ்வாறு சொன்னார்: “நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் [அதாவது, தேசத்தாரையும்] சீஷராக்கி, . . . நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.” (மத்தேயு 28:19, 20) இத்தகைய மாபெரும் பணியில் ஈடுபடுகிற அரிய வாய்ப்பு இதற்கு முன்பு யாருக்குமே கிடைக்கவில்லை. அப்படியானால், சீஷராக்கும் வேலையில் ஈடுபடுவதற்குத் தேவையான பண்புகள் யாவை? அவற்றை நாம் எப்படி வளர்க்கலாம்?
கடவுளிடம் ஆழமான அன்பைக் காட்டுங்கள்
3. சீஷராக்கும்படியான கட்டளை எதைக் காட்ட நமக்கு வாய்ப்பு அளிக்கிறது?
3 மக்களிடம் பேசுவதற்கும் உண்மைக் கடவுளை வழிபடும்படி அவர்களை இணங்க வைப்பதற்கும் யெகோவாமீது நமக்கு ஆழமான அன்பு அவசியம். இஸ்ரவேலர் கடவுள்மீது தங்களுக்கிருக்கும் அன்பைப் பல்வேறு வழிகளில் காட்ட முடிந்தது; அவருடைய கட்டளைகளுக்கு முழு இருதயத்தோடு கீழ்ப்படிவது, அவருக்குப் பிரியமான விதத்தில் பலிகளைச் செலுத்துவது, அவரைத் துதித்துப் பாடுவது ஆகியவற்றின்மூலம் அன்பைக் காட்ட முடிந்தது. (உபாகமம் 10:12, 13; 30:19, 20; சங்கீதம் 21:13; 96:1, 2; 138:5) சீஷராக்குபவர்களாக, நாமும்கூட கடவுளுடைய சட்டங்களைக் கடைப்பிடிக்கிறோம்; அதே சமயத்தில், யெகோவாவையும் அவருடைய நோக்கங்களையும் குறித்து மற்றவர்களுக்குச் சொல்வதன் மூலமும் அவர் மீதுள்ள நம் அன்பைக் காட்டுகிறோம். எனவே, நாம் உறுதியான நம்பிக்கையுடன் பேசுவது அவசியம்; கடவுள் தந்திருக்கும் நம்பிக்கையைக் குறித்த நம் உள்ளப்பூர்வமான உணர்வுகளைத் தெரிவிப்பதற்குச் சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுவது அவசியம்.—1 தெசலோனிக்கேயர் 1:5; 1 பேதுரு 3:15.
4. யெகோவாவைப்பற்றி மக்களுக்குப் போதிப்பதில் இயேசு ஏன் இன்பம் கண்டார்?
4 இயேசுவுக்கு யெகோவாமீது ஆழமான அன்பு இருந்தது; அதனால் கடவுளுடைய நோக்கங்கள், அவருடைய ராஜ்யம், உண்மை வழிபாடு ஆகியவற்றைப்பற்றிப் பேசுவது அவருக்குப் பேரின்பமாக இருந்தது. (லூக்கா 8:1; யோவான் 4:23, 24, 31) எனவேதான், “நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது” என்று இயேசு சொன்னார். (யோவான் 4:34) “என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது . . . மகா சபையிலே நீதியைப் பிரசங்கித்தேன்; என் உதடுகளை மூடேன், கர்த்தாவே, நீர் அதை அறிவீர்” என்று சங்கீதக்காரன் சொன்ன வார்த்தைகள் இயேசுவுக்குப் பொருந்துகின்றன.—சங்கீதம் 40:8, 9; எபிரெயர் 10:7-10.
5, 6. சீஷராக்கும் வேலையில் ஈடுபடுகிறவர்களுக்குத் தேவையான முக்கியப் பண்பு எது?
5 பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொண்ட புதியவர்கள் யெகோவா மீதுள்ள அன்பினால் தூண்டப்பட்டு சிலசமயங்களில் அவரையும் அவருடைய ராஜ்யத்தையும்பற்றி திடநம்பிக்கையுடன் பேசுகிறார்கள்; அதனால், பைபிளை ஆராய்ந்து பார்க்கும்படி மற்றவர்களை இணங்க வைப்பதில் திறம்பட்டவர்களாக இருக்கிறார்கள். (யோவான் 1:41) சீஷராக்கும் வேலையில் ஈடுபடுவதற்கு கடவுள் மீதுள்ள அன்பே முக்கியமாய் நம்மைத் தூண்டுகிறது. அப்படியானால், கடவுளுடைய வார்த்தையைத் தவறாமல் வாசித்து தியானிப்பதன்மூலம் கடவுள்மீது நாம் வைத்திருக்கும் அன்பு எனும் நெருப்பை அணையாமல் காத்துக்கொள்வோமாக.—1 தீமோத்தேயு 4:6, 15; வெளிப்படுத்துதல் 2:4.
6 யெகோவா மீதுள்ள அன்பே பக்திவைராக்கியமுள்ள போதகராய்த் திகழ இயேசு கிறிஸ்துவுக்கு உதவியது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ராஜ்யத்தை அறிவிப்பதில் அவர் திறம்பட்டவராக திகழ்ந்ததற்கு அது மட்டுமே காரணமாய் இருக்கவில்லை. அப்படியானால், சீஷராக்கும் வேலையில் அவரைத் திறம்பட்டவராக ஆக்கிய மற்றொரு பண்பு எது?
மக்களிடம் கனிவான அக்கறை காட்டுங்கள்
7, 8. மக்களிடம் எத்தகைய மனப்பான்மையை இயேசு வெளிக்காட்டினார்?
7 மக்களுடைய நலனில் இயேசுவுக்கு அக்கறை இருந்ததால் அவர்கள்மீது அதிக கவனம் செலுத்தினார். பூமிக்கு வருவதற்கு முன்பு கடவுளுடைய “கைதேர்ந்த வேலையாளாக” இருந்தபோதும்கூட மனிதரின் விஷயத்தில் அவருக்கு அதிக ஈடுபாடு இருந்தது. (நீதிமொழிகள் 8:30, 31, NW) அவர் பூமியில் வாழ்ந்தபோது, மக்களுக்குக் கருணை காட்டினார்; தம்மை நாடி வந்தவர்கள் புத்துணர்வு பெற உதவினார். (மத்தேயு 11:28-30) யெகோவாவின் அன்பையும் கருணையையும்தான் இயேசு வெளிக்காட்டினார்; ஒரே மெய்க் கடவுளை வழிபடும்படி இது மக்களை ஈர்த்தது. அனைத்து தரப்பு மக்களிடமும் இயேசு அக்கறை காட்டியதோடு அவர்களுடைய சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டார்; எனவே அவர் சொன்னதை அவர்கள் காதுகொடுத்துக் கேட்டார்கள்.—லூக்கா 7:36-50; 18:15-17; 19:1-10.
8 நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ள என்ன செய்ய வேண்டுமென்று இயேசுவிடம் ஒருவன் கேட்டபோது, அவர் ‘அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்தார்.’ (மாற்கு 10:17-21) பெத்தானியாவில் இயேசுவின் போதனையைக் கேட்ட சில நபர்களைப்பற்றி நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாயிருந்தார்.” (யோவான் 11:1, 5) இயேசு மக்களின் நலனில் மிகுந்த அக்கறை காட்டியதால், அவர்களுக்குப் போதிப்பதற்காக தம் ஓய்வு நேரத்தைக்கூட விட்டுக்கொடுக்க மனமுள்ளவராக இருந்தார். (மாற்கு 6:30-34) சக மனிதரிடம் அவர் காட்டிய ஆழமான, கனிவான அக்கறைதான் உண்மை வழிபாட்டிடம் மக்களை ஈர்ப்பதில் வேறு எவரைக் காட்டிலும் அவரை அதிக திறம்பட்டவராக ஆக்கியது.
9. பவுல், சீஷராக்கும் வேலையில் எத்தகைய மனப்பான்மையைக் காட்டினார்?
9 அப்போஸ்தலனாகிய பவுலும்கூட தான் பிரசங்கித்த மக்களிடம் அதிக அக்கறை காட்டினார். உதாரணமாக, தெசலோனிக்கேயாவில் கிறிஸ்தவர்களாக மாறியவர்களிடம் அவர் இவ்வாறு சொன்னார்: “நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம்.” பவுல் அன்போடு எடுத்த முயற்சிகளின் பலனாக, தெசலோனிக்கேயாவிலிருந்த சிலர் ‘ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, விக்கிரகங்களைவிட்டு மனந்திரும்பினார்கள்.’ (1 தெசலோனிக்கேயர் 1:9; 2:8) இயேசுவையும் பவுலையும்போல, மக்கள்மீது நாம் உண்மையான அக்கறை காட்டினால், ‘முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மை உடையவர்கள்’ நற்செய்தியை ஏற்றுக்கொள்வதைக் கண்டு நாமும் அளவில்லா ஆனந்தம் அடைவோம்.—அப்போஸ்தலர் 13:48, NW.
சுயதியாக மனப்பான்மையைக் காட்டுங்கள்
10, 11. சீஷர்களை உருவாக்க முயலுகையில் சுயதியாக மனப்பான்மை ஏன் தேவை?
10 சீஷர்களை உருவாக்குவதில் திறம்பட்டு விளங்குவோர் தியாகங்கள் செய்ய மனமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். சொத்து சேர்ப்பதைத் தலையாய காரியமாக அவர்கள் நிச்சயம் கருத மாட்டார்கள். சொல்லப்போனால், இயேசு தம் சீஷர்களிடம் இவ்வாறு கூறினார்: “ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது.” சீஷர்கள் இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்கள்; ஆனால் இயேசு மேலுமாகச் சொன்னதாவது: “பிள்ளைகளே, . . . தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறது எவ்வளவு அரிதாயிருக்கிறது! ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்.” (மாற்கு 10:23-25) சீஷராக்கும் வேலையில் கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்காக எளிய வாழ்க்கை வாழும்படி தம் சீஷர்களை இயேசு ஊக்கப்படுத்தினார். (மத்தேயு 6:22-24, 33) சீஷர்களை உருவாக்க சுயதியாக மனப்பான்மை நமக்கு ஏன் உதவும்?
11 இயேசு கட்டளையிட்ட அனைத்தையும் போதிப்பதற்கு அதிக முயற்சி தேவைப்படுகிறது. சீஷராக்க விரும்புகிற கிறிஸ்தவர் ஆர்வம் காட்டும் நபரோடு பொதுவாக வாரம் ஒரு முறை படிப்பு நடத்த முயலுவார். நல்மனமுள்ள ஆட்களைக் கண்டுபிடிக்கும் வேலையில் அதிகமாய் ஈடுபடுவதற்காக பிரஸ்தாபிகள் சிலர் முழுநேர வேலையை விட்டுவிட்டு பகுதிநேர வேலை செய்கிறார்கள். தங்கள் பகுதியில் வசிக்கிற சில இனத்தவர்களுக்குப் பிரசங்கிப்பதற்காக ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் வேறொரு மொழியைக் கற்றிருக்கிறார்கள். மற்றவர்கள் அறுவடை வேலையில் முழுமையாகப் பங்குகொள்வதற்காக தங்கள் நாட்டிலுள்ள வேறொரு பகுதிக்கு அல்லது வேறொரு நாட்டுக்கு மாறிச் சென்றிருக்கிறார்கள். (மத்தேயு 9:37, 38) சுயதியாக மனப்பான்மை இருந்தால் மட்டுமே இவற்றையெல்லாம் சாதிக்க முடியும். ஆனால், சீஷராக்கும் வேலையில் திறம்பட்டவராக இருப்பதற்கு இன்னுமதிகம் தேவைப்படுகிறது.
பொறுமையாக இருங்கள், நேரத்தை வீணாக்காதீர்கள்
12, 13. சீஷர்களை உருவாக்க பொறுமை ஏன் மிக முக்கியம்?
12 சீஷர்களை உருவாக்கும் வேலையில் நமக்கு உதவும் மற்றொரு பண்பு பொறுமை. நாம் சொல்லும் செய்தியைக் கேட்பவர்கள் துரிதமாக நடவடிக்கை எடுப்பது அவசியமே; என்றாலும், சீஷர்களை உருவாக்குவதற்கு பெரும்பாலும் கணிசமான காலம் எடுக்கிறது, அதோடு பொறுமையும் தேவைப்படுகிறது. (1 கொரிந்தியர் 7:29) தம் சகோதரனாகிய யாக்கோபிடம் இயேசு பொறுமையைக் காட்டினார். இயேசுவின் ஊழியத்தைப்பற்றி யாக்கோபு நன்கு அறிந்திருந்ததாகத் தெரிகிறது; என்றபோதிலும், ஏதோ காரணத்தினால் அவர் சில காலத்திற்கு சீஷராகாமல் இருந்தார். (யோவான் 7:5) என்றாலும், கிறிஸ்துவின் மரணத்திற்கும் பொ.ச. 33 பெந்தெகொஸ்தேவுக்கும் இடைப்பட்ட குறுகிய காலத்தில் யாக்கோபு சீஷராகியிருக்க வேண்டும்; ஏனென்றால், அவர் தன்னுடைய தாயாருடனும், சகோதரர்களுடனும் அப்போஸ்தலர்களுடனும் சேர்ந்து ஜெபம் செய்வதற்குக் கூடிவந்ததாக வேதவசனங்கள் தெரிவிக்கின்றன. (அப்போஸ்தலர் 1:13, 14) யாக்கோபு ஆன்மீக ரீதியில் நல்ல முன்னேற்றம் செய்தார்; பின்னர் கிறிஸ்தவ சபையில் முக்கியமான பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.—அப்போஸ்தலர் 15:13; 1 கொரிந்தியர் 15:7.
13 விவசாயிகள் விதைக்கிற விதைகள் பெரும்பாலும் மெதுவாகத்தான் வளரும்; அதுபோல புதியவர்களின் மனதில் கிறிஸ்தவர்கள் விதைக்கிற விதைகள் அதாவது, கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய அறிவும், கடவுள் மீதுள்ள அன்பும், கிறிஸ்துவைப்போன்ற மனப்பான்மைகளும் மெதுவாகத்தான் வளரும். இதற்குப் பொறுமை அவசியம். யாக்கோபு பின்வருமாறு எழுதினார்: “இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் [“பிரசன்னம் வரைக்கும்,” NW] நீடியபொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான். நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை [“பிரசன்னம்,” NW] சமீபமாயிருக்கிறதே.” (யாக்கோபு 5:7, 8) ‘கர்த்தரின் பிரசன்னம் வரைக்கும் நீடியபொறுமையாயிருக்கும்படி’ யாக்கோபு சக விசுவாசிகளை அறிவுறுத்தினார். சீஷர்கள் சில விஷயங்களைப் புரிந்துகொள்ளாதபோது, இயேசு அவற்றைப் பொறுமையாக விளக்கினார், சில சமயங்களில் உவமைகளால் விளக்கினார். (மத்தேயு 13:10-23; லூக்கா 19:11; 21:7; அப்போஸ்தலர் 1:6-8) இப்போதோ கிறிஸ்து பிரசன்னமாகி இருப்பதால், சீஷராக்குவதற்கு கடினமாக உழைக்கிற நாமும் அதேவிதமான பொறுமையைக் காட்டுவது அவசியம். நம்முடைய நாட்களில் இயேசுவின் சீஷர்களாக ஆகிறவர்களுக்குப் பொறுமையாகப் போதிப்பது அவசியம்.—யோவான் 14:9.
14. சீஷராக்குபவர்களாக, நாம் பொறுமை காத்தாலும்கூட எவ்வாறு நேரத்தை வீணாக்காமல் இருக்க முடியும்?
14 நாம் பொறுமை காத்தாலும்கூட, நம்மோடு பைபிளைப் படிக்கும் பெரும்பாலான ஆட்களிடத்தில் வசனம் பலன் தருவதில்லை. (மத்தேயு 13:18-23) அத்தகைய ஆட்களுக்கு உதவ நாம் போதுமான முயற்சியெடுத்த பிறகு, அவர்களுடன் நேரம் செலவழிப்பதை ஞானமாக நிறுத்திக்கொள்கிறோம்; அதே சமயத்தில், பைபிள் சத்தியங்களுக்கு மதிப்பு கொடுக்கிற ஆட்களைத் தேடிக் கண்டுபிடிக்க முயலுகிறோம். (பிரசங்கி 3:1, 6) உண்மைதான், பைபிள் சத்தியங்களை உயர்வாய்க் கருதுகிற ஆட்களும்கூட தங்கள் கருத்துகளையும் மனப்பான்மைகளையும் முன்னுரிமைகளையும் மாற்றிக்கொள்வதற்கு நாம் சிலகாலம் உதவ வேண்டியிருக்கலாம். எனவே சரியான மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளச் சிரமப்பட்ட தம் சீஷர்களிடம் இயேசு பொறுமையாக இருந்ததுபோல நாமும் பொறுமையாக இருக்கிறோம்.—மாற்கு 9:33-37; 10:35-45.
கற்பிக்கும் கலையை வளர்த்துக்கொள்ளுங்கள்
15, 16. சீஷராக்குகையில் எளிய வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் நன்கு தயாரிப்பதும் ஏன் முக்கியம்?
15 கடவுள்மீது அன்பு, மக்களிடம் கரிசனை, சுயதியாக மனப்பான்மை, பொறுமை ஆகியவை சீஷராக்கும் வேலையில் வெற்றிபெறுவதற்கு முக்கியமான அம்சங்களாகும். அதோடு கற்பிக்கும் திறமைகளையும் வளர்த்துக்கொள்வது அவசியம்; அப்போதுதான் விஷயங்களைத் தெளிவாகவும் எளிமையாகவும் நம்மால் விளக்க முடியும். உதாரணமாக, பெரிய போதகரான இயேசு கிறிஸ்து சொன்ன அறிவுரைகள் பலவும் மிக வலிமைவாய்ந்தவையாக இருந்தன; அவர் எளிய வார்த்தைகளைப் பயன்படுத்தியதே அதற்குக் காரணம். இயேசு பின்வருமாறு சொன்னது உங்களுக்கு நினைவிருக்கலாம்: “பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்.” “பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்.” “ஞானமானது அதன் பிள்ளைகளால் [“செயல்களால்,” NW] நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும்.” “இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்.” (மத்தேயு 6:20; 7:6; 11:19; 22:21) உண்மைதான், இயேசு சிறு சிறு வாக்கியங்களைப் பயன்படுத்தியதோடு விஷயங்களைத் தெளிவாகவும் கற்பித்தார்; தேவைப்பட்ட சமயத்தில் விளக்கமும் கொடுத்தார். இயேசுவின் கற்பிக்கும் முறையை நீங்கள் எப்படிப் பின்பற்றலாம்?
16 எளிமையாகவும் தெளிவாகவும் கற்பிப்பதற்கு கவனமாகத் தயாரிப்பது முக்கியம். முன்கூட்டியே தயாரித்துச் செல்லாத பிரஸ்தாபி பொதுவாக அதிகம் பேசுவார். அந்தப் பொருளின்பேரில் தனக்குத் தெரிந்த அனைத்தையும் சொல்வார்; சொல்லப்போனால், அவர் அளவுக்கதிகமாகப் பேசுவதால் முக்கியக் குறிப்புகள் எதுவென்றே தெரியாமல் போய்விடும். அதற்கு மாறாக, நன்கு தயாரிக்கிற பிரஸ்தாபி, அந்த நபரை மனதில் வைத்துச் சிந்திப்பார்; பேசவிருக்கும் தகவலைத் தியானிப்பார்; எது தேவையோ அதை மட்டுமே தெளிவாக எடுத்துரைப்பார். (நீதிமொழிகள் 15:28; 1 கொரிந்தியர் 2:1, 2) அந்தப் பொருளின்பேரில் மாணவர் ஏற்கெனவே எந்தளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறார் என்பதையும் படிப்பின்போது என்ன குறிப்புகளை வலியுறுத்த வேண்டும் என்பதையும் அவர் மனதில் வைத்திருப்பார். தான் பேசப் போகும் விஷயத்தின்பேரில் அநேக சுவாரஸ்யமான தகவல்களை பிரஸ்தாபி தெரிந்து வைத்திருக்கலாம்; ஆனால், தேவையில்லாத தகவல்களை விட்டுவிடும்போதுதான் சொல்லும் விஷயம் தெளிவாக மனதில் பதியும்.
17. வேதவாக்கியங்களைப் பகுத்தறிந்துப் பார்ப்பதற்கு நாம் மக்களுக்கு எப்படி உதவலாம்?
17 வெறுமனே தகவல்களைத் தருவதற்குப் பதிலாக, பகுத்தறிந்துப் பார்ப்பதற்கும்கூட இயேசு மக்களுக்கு உதவினார். உதாரணமாக, ஒரு சந்தர்ப்பத்தில் அவர் இவ்வாறு கேட்டார்: “சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள்.” (மத்தேயு 17:25) பைபிளை மற்றவர்களுக்குச் சொல்லித் தருவதென்றால், நமக்கு ஆசை ஆசையாகத்தான் இருக்கும்; ஆனால், பைபிள் படிப்பின்போது கருத்தைத் தெரிவிக்கும்படியோ பாராவிலுள்ள விஷயங்களை விளக்கும்படியோ மாணவரிடம் சொல்கையில் நாம் இடையில் பேசாமலிருப்பது நல்லது. உண்மைதான், நாம் கேள்விமேல் கேள்விகேட்டு மக்களைத் திணறடிக்கக்கூடாது. அதற்குப் பதிலாக, சாதுரியமாகப் பேசுவதன் மூலமும், நல்ல உதாரணங்களையும் சிந்திக்கவைக்கும் கேள்விகளையும் பயன்படுத்துவதன் மூலமும் பைபிள் சார்ந்த நம் பிரசுரங்களிலுள்ள குறிப்புகளைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவலாம்.
18. “கற்பிக்கும் கலையை” வளர்த்துக்கொள்வதில் உட்பட்டிருப்பது என்ன?
18 “கற்பிக்கும் கலையை” பற்றி வேதவசனங்கள் தெரிவிக்கின்றன. (2 தீமோத்தேயு 4:2, NW; தீத்து 1:9, NW) இத்தகைய கற்பிக்கும் திறமையில் விஷயங்களை நினைவில் வைக்க உதவுவது மட்டுமல்ல இன்னும் பல காரியங்கள் உட்பட்டுள்ளன. மெய்க்கும் பொய்க்கும், நன்மைக்கும் தீமைக்கும், ஞானத்திற்கும் புத்தியீனத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை மாணவர் புரிந்துகொள்ள நாம் உதவ வேண்டும். இவ்வாறு செய்யும்போதும், யெகோவாவை இருதயப்பூர்வமாக நேசிக்க மாணவருக்கு உதவும்போதும் கடவுளுக்குக் கீழ்ப்படிவதற்கான அவசியத்தை அவர் புரிந்துகொள்வார்.
சீஷராக்கும் வேலையை முழுமூச்சோடு செய்யுங்கள்
19. சீஷராக்கும் வேலையில் எல்லா கிறிஸ்தவர்களும் பங்களிப்பது எப்படி?
19 கிறிஸ்தவ சபை, சீஷர்களை உண்டுபண்ணுகிற ஓர் அமைப்பாகும். ஒரு புதியவர் சீஷராக ஆகும்போது, அவரை முதன்முதலில் சந்தித்து பைபிள் படிப்பு நடத்திய யெகோவாவின் சாட்சிக்கு மட்டுமே அது மகிழ்ச்சியைத் தருவதில்லை. உதாரணமாக, காணாமல்போன ஒரு பிள்ளையைக் கண்டுபிடிப்பதற்காக தொண்டர்கள் சிலர் ஒரு குழுவாகச் செயல்படும்போது, ஒருவேளை அவர்களில் ஒருவர்தான் உண்மையில் அந்தப் பிள்ளையைக் கண்டுபிடிப்பார். ஆனால், அந்தப் பிள்ளையை பெற்றோரிடத்தில் ஒப்படைக்கும்போதோ, அக்குழுவில் இருக்கிற அனைவரும் சந்தோஷத்தில் திளைப்பார்கள். (லூக்கா 15:6, 7) அதுபோலவே, முழு சபையும் இணைந்து செயல்படுகிற வேலைதான் சீஷராக்கும் வேலை. கிறிஸ்துவின் சீஷராக ஆகக்கூடிய நபர்களைக் கண்டுபிடிப்பதில் எல்லா கிறிஸ்தவர்களும் பங்கெடுக்கிறார்கள். ஒரு புதியவர் ராஜ்ய மன்றத்தில் நடக்கும் கூட்டங்களுக்கு வரத் துவங்குகையில், உண்மை வணக்கத்தை அவர் இன்னும் உயர்வாய் கருதுவதற்கு அங்குள்ள ஒவ்வொருவருமே உதவுகிறார்கள். (1 கொரிந்தியர் 14:24, 25) எனவே, வருடா வருடம் லட்சக்கணக்கானோர் புதிய சீஷர்களாக ஆவதைப் பார்க்கும்போது கிறிஸ்தவர்கள் அனைவருமே சந்தோஷத்தில் திளைக்கலாம்.
20. மற்றவர்களுக்கு பைபிள் சத்தியங்களைக் கற்பிக்க விரும்பினால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
20 உண்மையுள்ள கிறிஸ்தவர்களில் பலருக்கு யெகோவாவையும் உண்மை வழிபாட்டையும் குறித்து மற்றவர்களுக்குக் கற்பிப்பதென்றால் சந்தோஷம்தான். ஆனால், அவர்கள் என்னதான் முயன்றாலும் அவ்வாறு செய்ய முடியாமல் போகலாம். அப்படிப்பட்ட நிலையில் நீங்கள் இருந்தால், யெகோவாமீது உங்கள் அன்பைத் தொடர்ந்து பலப்படுத்துங்கள், மக்களிடம் கனிவான அக்கறை காட்டுங்கள், சுயதியாக மனப்பான்மையை வெளிக்காட்டுங்கள், பொறுமையைக் காட்டுங்கள், உங்கள் கற்பிக்கும் திறமைகளில் முன்னேற்றம் செய்ய முயலுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, சத்தியத்தைக் கற்பிப்பதற்கான உங்கள் ஆவலைக் குறித்து ஜெபியுங்கள். (பிரசங்கி 11:1) யெகோவாவின் சேவையில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் சீஷராக்கும் வேலையின் ஒரு பாகமாக இருக்கிறது என்பதையும் அது யெகோவாவுக்கு மகிமையைக் கொண்டு வருகிறது என்பதையும் அறிந்து ஆறுதல் அடையுங்கள்.
உங்களால் விளக்க முடியுமா?
• கடவுள்மீது நமக்கு அன்பிருப்பதை சீஷராக்கும் வேலை எவ்வாறு நிரூபிக்கிறது?
• சீஷராக்கும் வேலையில் ஈடுபடுகிறவர்களுக்குத் தேவையான சில பண்புகள் யாவை?
• ‘கற்பிக்கும் கலையில்’ உட்பட்டிருப்பது என்ன?
[பக்கம் 21-ன் படம்]
கிறிஸ்தவர்கள், கடவுள்மீதுள்ள ஆழமான அன்பை சீஷராக்குவதன்மூலம் காட்டுகிறார்கள்
[பக்கம் 23-ன் படம்]
சீஷராக்குவோர் மற்றவர்களிடம் ஏன் அக்கறை காட்ட வேண்டும்?
[பக்கம் 24-ன் படம்]
சீஷராக்குவோருக்கு தேவையான சில பண்புகள் யாவை?
[பக்கம் 25-ன் படம்]
சீஷராக்குவதால் கிடைக்கும் நற்பலன்களைக் கண்டு கிறிஸ்தவர்கள் அனைவருமே சந்தோஷத்தில் திளைக்கிறார்கள்