யெகோவாவின் உன்னத அரசதிகாரமும் கடவுளுடைய ராஜ்யமும்
‘யெகோவாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள் . . . யெகோவாவே, ராஜ்யமும் உம்முடையது.’—1 நாளாகமம் 29:11.
1. சர்வலோகத்தையும் ஆட்சி செய்ய யெகோவாவுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது என ஏன் சொல்லலாம்?
‘யெகோவா வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரிகம் சர்வத்தையும் ஆளுகிறது.’ (சங்கீதம் 103:19) அரசதிகாரத்தைப் பற்றிய அடிப்படை உண்மையை இவ்வார்த்தைகளின் மூலம் சங்கீதக்காரன் தெரிவித்தார். யெகோவா தேவன் படைப்பாளராக இருப்பதால் இந்தச் சர்வலோகத்தையும் ஆட்சி செய்ய அவருக்கு மட்டுமே உரிமை இருக்கிறது.
2. யெகோவா பரலோகத்தில் ஆட்சிபுரியும் காட்சியை தானியேல் எவ்வாறு விவரித்தார்?
2 குடிமக்கள் இருந்தால்தான் ஓர் அரசரால் ஆட்சி செலுத்த முடியும். ஆரம்பத்தில், யெகோவாவும் தாம் படைத்த ஆவி சிருஷ்டிகளின்மீது ஆட்சி செலுத்தினார். முதலில் தம்முடைய ஒரேபேறான குமாரன்மீதும் பிறகு கோடிக்கணக்கான தேவதூதர்கள்மீதும் ஆட்சி செலுத்தினார். (கொலோசெயர் 1:15-17) யெகோவா பரலோகத்தில் ஆட்சிபுரியும் காட்சியை ஓரளவு காணும் வாய்ப்பு வெகுகாலத்திற்குப் பிறகு தீர்க்கதரிசியாகிய தானியேலுக்குக் கிடைத்தது. “நான் பார்த்துக்கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது; நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்; . . . ஆயிரமாயிரம்பேர் அவரைச் சேவித்தார்கள்; கோடாகோடிபேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்” என்று அவர் எழுதினார். (தானியேல் 7:9, 10) ‘நீண்ட ஆயுசுள்ளவரான’ யெகோவா, கோடிக்கணக்கான ஆவி குமாரர்களை உடைய தம் ஒழுங்கமைக்கப்பட்ட குடும்பத்தை யுகா யுகங்களாக ஆண்டு வந்திருக்கிறார். இவர்கள் யெகோவாவுடைய சித்தத்தைச் செய்யும் ‘பணிவிடைக்காரராய்’ இருக்கிறார்கள்.—சங்கீதம் 103:20, 21.
3. யெகோவா எவ்வாறு இந்தப் பிரபஞ்சத்தின்மீது தம்முடைய ஆட்சியின் எல்லையை விரிவுபடுத்தினார்?
3 காலப்போக்கில், யெகோவா இந்தப் பரந்த, சிக்கலான பிரபஞ்சத்தையும், அதிலுள்ள பூமியையும் படைத்து தமது ஆட்சியின் எல்லையை விரிவுபடுத்தினார். (யோபு 38:4, 7) வான்வெளியில் இருக்கும் நட்சத்திரங்கள், கோள்கள் போன்றவை இந்தளவு ஒழுங்காகவும் துல்லியமாகவும் இயங்குவதைப் பார்க்கும்போது, அவற்றை இயக்கவோ கட்டுப்படுத்தவோ யாருமே தேவையில்லை என்று பூமியிலிருந்து பார்ப்போருக்குத் தோன்றும். இருப்பினும், “அவர் [யெகோவா] கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் அவைகளை என்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்; மாறாத பிரமாணத்தை அவைகளுக்கு நியமித்தார்” என்று சங்கீதக்காரன் கூறினார். (சங்கீதம் 148:5, 6) பரலோகத்தையும் இந்தப் பிரபஞ்சத்தையும் வழிநடத்தி, ஒழுங்குபடுத்தி, கட்டுப்படுத்துவதன் மூலம் யெகோவா தொடர்ந்து ஆட்சிசெய்து வருகிறார்.—நெகேமியா 9:6.
4. மனிதர்களை யெகோவா எவ்வாறு ஆளுகிறார்?
4 முதல் மனித ஜோடியைப் படைத்த பிறகு, கடவுள் மற்றொரு விதத்தில் ஆட்சி செலுத்தினார். அர்த்தமுள்ள, திருப்தியான வாழ்க்கை வாழ அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் அளித்தார்; அதோடு, மற்ற உயிரினங்களை ஆண்டுகொள்ளும்படி கூறி, அவற்றின்மீது அதிகாரமும் அளித்தார். (ஆதியாகமம் 1:26-28; 2:8, 9) கடவுள் கனிவாகவும், பிறருக்கு நன்மையளிக்கும் விதத்திலும் ஆட்சி செய்கிறார் என்பது மட்டுமின்றி, தம் குடிமக்களைக் கனப்படுத்தி அவர்களை கண்ணியமாக நடத்துகிறார் என்பதும் இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. ஆதாமும் ஏவாளும் யெகோவாவின் ஆட்சிக்குக் கீழ்ப்படிந்திருந்தவரை, பரதீஸான பூமியில் என்றென்றும் வாழ்வதற்கான எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருந்தது.—ஆதியாகமம் 2:15-17.
5. யெகோவா ஆட்சி செய்யும் விதத்தை எவ்வாறு விளக்குவீர்கள்?
5 இவற்றையெல்லாம் கவனிக்கையில் நாம் என்ன முடிவுக்கு வரலாம்? முதலாவதாக, தம்முடைய எல்லா படைப்புகளின்மீதும் யெகோவா எப்போதும் ஆட்சி செலுத்தி வந்திருக்கிறார். அடுத்ததாக, தம் படைப்புகளுக்கு நன்மையளிக்கும் விதத்திலும் அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதத்திலும் கடவுள் ஆளுகிறார். கடைசியாக, அவருடைய ஆட்சிக்குக் கீழ்ப்படிந்து, அதை ஆதரித்தால் நாம் முடிவில்லா காலத்திற்கும் ஆசீர்வாதங்களைப் பெறலாம். அதனால்தான், பண்டைய இஸ்ரவேலை ஆண்ட தாவீது ராஜா பின்வருமாறு சொல்லத் தூண்டப்பட்டார்: ‘யெகோவாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்; கர்த்தாவே, ராஜ்யமும் உம்முடையது; தேவரீர் எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர்.’—1 நாளாகமம் 29:11.
கடவுளுடைய ராஜ்யம் ஏன் தேவை?
6. கடவுளுடைய உன்னத அரசதிகாரத்துக்கும் அவருடைய ராஜ்யத்துக்கும் இடையே என்ன தொடர்பு இருக்கிறது?
6 சர்வலோகத்தின் உன்னத அரசரான யெகோவா எப்போதுமே தம் அதிகாரத்தைச் செலுத்தி வந்திருக்கிறாரே, அப்படியிருக்க கடவுளுடைய ராஜ்யம் ஏன் தேவைப்பட்டது? ஓர் ஆட்சியாளர் தம் குடிமக்கள்மீது அதிகாரம் செலுத்த பொதுவாக அரசுசார்ந்த ஓர் அமைப்பைக் கருவியாகப் பயன்படுத்துவார். ஆகவே, கடவுளுடைய ராஜ்யம் என்பது படைப்புகள்மீது கடவுள் தம் உன்னத அரசதிகாரத்தைச் செலுத்துகிற ஓர் ஏற்பாடாக, அவர்களை ஆட்சிபுரிவதற்கான ஒரு கருவியாக இருக்கிறது.
7. அரசதிகாரத்தைச் செலுத்துவதற்கான ஒரு புதிய முறைக்கு யெகோவா ஏன் வித்திட்டார்?
7 யெகோவா வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு விதமாக ஆட்சி புரிந்திருக்கிறார். ஒரு புதிய சூழ்நிலை உருவானபோது, தம் அரசதிகாரத்தைச் செலுத்துவதற்கான ஒரு புதிய முறைக்கு அவர் வித்திட்டார். எப்படியெனில், கடவுளுடைய ஆவி குமாரர்களில் ஒருவனான சாத்தான், கலகக்காரனாகி, ஆதாமையும் ஏவாளையும் கடவுளுடைய ஆட்சிக்கு எதிராகச் செயல்பட வைத்தான். அந்தக் கலகம் கடவுளுடைய உன்னத அரசதிகாரத்தைத் தாக்குவதாக அமைந்தது. எவ்விதத்தில்? கடவுள் சாப்பிடக்கூடாதென்று சொல்லியிருந்த அந்தப் பழத்தைச் சாப்பிட்டால் ஏவாள் “சாகவே சாவதில்லை” என்று சாத்தான் கூறினான். இப்படியாக, யெகோவாவை பொய்யர் என்றும், அதனால் அவரை நம்பமுடியாதென்றும் மறைமுகமாகக் கூறினான். அதுமட்டுமின்றி, “நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்” என்பதாகவும்கூட சாத்தான் கூறினான். ஆதாமும் ஏவாளும் கடவுளுடைய கட்டளையை ஒதுக்கித் தள்ளிவிட்டு, தங்கள் இஷ்டப்படி வாழ்ந்தால் இன்னும் சிறப்பாக இருக்கலாம் என்று சாத்தான் இதன்மூலம் குறிப்பிட்டான். (ஆதியாகமம் 3:1-6) இது, கடவுளுக்கு ஆட்சி செய்யும் உரிமை இருக்கிறதா, அவர் சரியாக ஆளுகிறாரா என்று நேரடியாக சவால்விடுவதுபோல் இருந்தது. யெகோவா இதை எப்படித் தீர்ப்பார்?
8, 9. (அ) தன் ஆட்சியை எதிர்த்து யாரேனும் கலகம் செய்தால் மனித ஆட்சியாளர் ஒருவர் என்ன செய்வார்? (ஆ) ஏதேனில் கலகம் ஏற்பட்டபோது யெகோவா என்ன செய்தார்?
8 ஒரு நாட்டில், ஆட்சியாளருக்கு எதிராக கலகம் வெடிக்கும்போது, அவர் என்ன செய்ய வேண்டுமென நாம் எதிர்பார்ப்போம்? சரித்திரம் படித்தவர்களுக்கு அத்தகைய சில சம்பவங்கள் நினைவுக்கு வரலாம். நல்லாட்சி புரிகிற ஓர் அன்பான ஆட்சியாளர், இந்த விஷயத்தைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட மாட்டார். அதற்குப் பதிலாக, தேசத்துரோக குற்றத்திற்காக அந்தக் கலகக்காரர்களுக்கு தண்டனைத் தீர்ப்பை அளிப்பார். அடுத்ததாக, கலகக்காரர்களை அடக்கி, சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு வேறு ஒருவரை நியமித்து அவருக்கு அதிகாரமளிக்கலாம். அதேபோல, யெகோவாவும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தம்மை எதிர்த்தவர்களுக்குத் தண்டனைத் தீர்ப்பளித்ததன்மூலம், அதிகாரம் தம் கையில் இருப்பதைக் காட்டினார். முடிவில்லா வாழ்க்கை என்ற பரிசைப் பெற ஆதாமும் ஏவாளும் தகுதியற்றவர்கள் என்று தீர்ப்பளித்து, அவர்களை ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்திவிட்டார்.—ஆதியாகமம் 3:16-19, 22-24.
9 சாத்தானுக்கு எதிரான தீர்ப்பை யெகோவா அளித்தபோது, தம் அரசதிகாரத்தைச் செலுத்துவதற்கான ஒரு புதிய முறையைப்பற்றிக் கூறினார். அதன் மூலமாக சமாதானத்தையும் ஒழுங்கையும் இந்த சர்வலோகத்தில் திரும்பவும் கொண்டுவரப்போவதாகச் சொன்னார். சாத்தானிடம், “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்” என்று கடவுள் கூறினார். (ஆதியாகமம் 3:15) இதன்மூலம், சாத்தானையும் அவனுடைய சேனையையும் தோற்கடிப்பதற்கும் தம்முடைய ஆட்சியே சரியானது என்பதை நிரூபிப்பதற்கும் “வித்து” ஒன்றிற்கு அதிகாரம் அளிக்கும் தம் நோக்கத்தை யெகோவா தெரிவித்தார்.—சங்கீதம் 2:7-9; 110:1, 2.
10. (அ) ‘வித்துவாக’ இருந்தவர்கள் யார்? (ஆ) முதல் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தைப்பற்றி பவுல் என்ன கூறினார்?
10 இயேசு கிறிஸ்துவும், அவருடன் ஆட்சி செய்யவிருந்த ஒரு குறிப்பிட்ட தொகுதியுமே அந்த ‘வித்துவாக’ இருந்தார்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து மேசியானிய ராஜ்யத்தை அமைக்கிறார்கள். (தானியேல் 7:13, 14, 27; மத்தேயு 19:28; லூக்கா 12:32; 22:28-30) என்றாலும், இந்தத் தகவல்கள் அனைத்தும் ஒரே சமயத்தில் வெளிப்படுத்தப்படவில்லை. சொல்லப்போனால், இந்த முதல் தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறும் என்பது, ‘ஆதிகாலமுதல் அடக்கமாயிருந்த [“பரிசுத்த,” NW] இரகசியமாக’ இருந்தது. (ரோமர் 16:25) ‘பரிசுத்த இரகசியம்’ எப்போது வெளிப்படுத்தப்படும், யெகோவாவின் உன்னத அரசதிகாரமே சரியானதென நிரூபிக்கப்போகிற முதல் தீர்க்கதரிசனம் எப்போது நிறைவேறும் என்று விசுவாசமுள்ள நபர்கள் பல நூற்றாண்டுகளாக ஆவலோடு காத்திருந்தார்கள்.—ரோமர் 8:19-21.
‘பரிசுத்த இரகசியம்’ படிப்படியாக வெளிப்படுத்தப்பட்டது
11. ஆபிரகாமிடம் யெகோவா எதை வெளிப்படுத்தினார்?
11 காலப்போக்கில், “தேவனுடைய ராஜ்யத்தின் [“பரிசுத்த,” NW] இரகசியத்தை” பற்றிய தகவல்களை யெகோவா படிப்படியாக வெளிப்படுத்தினார். (மாற்கு 4:11) இவ்வாறு யெகோவாவிடமிருந்து தகவல்களைப் பெற்றவர்களில், ‘தேவனுடைய சிநேகிதன்’ என்றழைக்கப்பட்ட ஆபிரகாமும் ஒருவர். (யாக்கோபு 2:23) ஆபிரகாமை ‘பெரிய ஜாதியாக’ ஆக்கப்போவதாக யெகோவா வாக்குறுதி அளித்தார். பிற்பாடு, “உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்” என்றும் “உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்” என்றும் கடவுள் கூறினார்.—ஆதியாகமம் 12:2, 3; 17:6; 22:17, 18.
12. ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, சாத்தானின் வித்து எவ்வாறு வெளிப்பட்டது?
12 ஆபிரகாம் வாழ்ந்த சமயத்திற்குள்ளாக, ஆட்சியையும் அதிகாரத்தையும் எட்டிப்பிடிக்க மனிதர்கள் முயற்சி செய்ய ஆரம்பித்தனர். உதாரணமாக, நோவாவின் கொள்ளுப்பேரனான நிம்ரோதைக் குறித்து, “இவனே முதன்முதலாக பூமியில் வல்லமை பெற முயன்றவன். இவன் யெகோவாவுக்கு விரோதமாகச் செயல்பட்ட பலத்த வேட்டைக்காரனாயிருந்தான்” என்று பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 10:8, 9, NW) நிம்ரோதும், தங்களுக்குத் தாங்களே மகுடம் சூட்டிக்கொண்ட மற்ற ஆட்சியாளர்களும் சாத்தானின் கைப்பாவைகள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும் சாத்தானுடைய வித்துவின் பாகமாக ஆனார்கள்.—1 யோவான் 5:19.
13. யாக்கோபின் மூலமாக யெகோவா என்ன தீர்க்கதரிசனத்தை உரைத்தார்?
13 மனித ஆட்சியாளர்களை ஏற்படுத்த சாத்தான் முயற்சி செய்கிறபோதிலும், யெகோவா தம்முடைய நோக்கத்தைத் தொடர்ந்து நிறைவேற்றுகிறார். “சமாதான கர்த்தர் [“ஷைலோ,” NW] வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்” என்று ஆபிரகாமின் பேரனான யாக்கோபுவின் மூலமாக யெகோவா தெரிவித்தார். (ஆதியாகமம் 49:10) “ஷைலோ” என்ற வார்த்தைக்கு “[செங்கோலை] பெற உரிமையுள்ளவர்” என்று அர்த்தம். ‘செங்கோலை’ பெறுவதற்கான உரிமையுள்ளவர் அதாவது, எல்லா “ஜனங்கள்”மீதும் அரசதிகாரத்தை செலுத்துவதற்கான உரிமையுள்ளவர் இனிமேல் வரவிருந்ததை இந்தத் தீர்க்கதரிசனம் சுட்டிக்காட்டியது. இவர் யாராக இருப்பார்?
‘ஷைலோ வருமளவும்’
14. தாவீதோடு யெகோவா என்ன உடன்படிக்கை செய்தார்?
14 தம் மக்களை ஆட்சி செய்ய, யூதாவின் சந்ததியாரில் தாவீதை முதன்முதலாக யெகோவா தேர்ந்தெடுத்தார்; ஈசாயின் குமாரனான இவர் ஒரு மேய்ப்பராக இருந்தார்.a (1 சாமுவேல் 16:1-13) தாவீது பாவங்களும் தவறுகளும் செய்தபோதிலும், யெகோவாவின் ஆட்சிக்கு உண்மையுள்ளவராக இருந்ததால், அவருடைய ஆதரவைப் பெற்றார். தாவீதோடு யெகோவா உடன்படிக்கை செய்தார், இது ஏதேனில் அவர் உரைத்த தீர்க்கதரிசனத்தைப்பற்றிக் கூடுதல் தகவலை அளித்தது. யெகோவா இவ்வாறு கூறினார்: “உனக்குப்பின்பு உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன்.” இது தாவீதுக்குப் பின் அரசாண்ட அவருடைய மகனாகிய சாலொமோனை மட்டும் குறிப்பிடவில்லை. ஏனெனில், “அவன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்” என்றும் அந்த உடன்படிக்கையில் சொல்லப்பட்டிருந்தது. ஏற்ற காலத்தில் வாக்குப்பண்ணப்பட்ட ராஜ்ய “வித்து” தாவீதின் வம்சத்தில் வருவார் என்பது அந்த ‘உடன்படிக்கையிலிருந்து தெளிவாயிற்று.—2 சாமுவேல் 7:12, 13.
15. யூதா ராஜ்யம் ஏன் கடவுளுடைய ராஜ்யத்தின் முன்நிழலாகக் கருதப்படலாம்?
15 ஓர் அரச குலம் தாவீதிலிருந்து ஆரம்பமானது. அதில் வந்த அரசர்களை பிரதான ஆசாரியர் பரிசுத்த எண்ணெயால் அபிஷேகம் செய்தார். இதனால் அந்த அரசர்கள் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் அல்லது மேசியாக்கள் என்று அழைக்கப்படலாம். (1 சாமுவேல் 16:13; 2 சாமுவேல் 2:4; 5:3; 1 இராஜாக்கள் 1:39) அவர்கள் யெகோவாவின் அரியணையில் அமர்ந்து அவருடைய சார்பாக, எருசலேமில் ஆட்சி புரிந்ததாகச் சொல்லப்பட்டது. (2 நாளாகமம் 9:8) அந்த வகையில், யூதா ராஜ்யம் கடவுளுடைய ராஜ்யத்திற்கு முன்நிழலாக இருந்ததோடு, யெகோவா தம் அரசதிகாரத்தைச் செலுத்தப் பயன்படுத்திய கருவியாகவும் இருந்தது.
16. யூத அரசர்களின் ஆட்சி என்ன விளைவுகளை ஏற்படுத்தியது?
16 அரசரும் குடிமக்களும் யெகோவாவின் ஆட்சிக்குக் கீழ்ப்படிந்தபோது, அவருடைய பாதுகாப்பையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டார்கள். சாலொமோனின் ஆட்சிக்காலத்தில் நிலவிய சமாதானமும் செழுமையும் தன்னிகரற்றதாய் இருந்தது. இது கடவுளுடைய ராஜ்யம் ஆளும்போது நிலவவிருக்கும் சூழ்நிலைக்கு ஒரு தீர்க்கதரிசன முற்காட்சியாய் அமைந்தது. அப்போது, சாத்தானின் செல்வாக்கு அடியோடு நீக்கப்பட்டு, யெகோவாவின் உன்னத அரசதிகாரமே சரியானதென நிரூபிக்கப்பட்டிருக்கும். (1 இராஜாக்கள் 4:20, 25) தாவீதின் வம்சத்தில் வந்த பெரும்பாலான அரசர்கள், யெகோவா அளித்திருந்த நெறிமுறைகளின்படி வாழவில்லை; ஜனங்கள் விக்கிரகாராதனையிலும் ஒழுக்கக்கேட்டிலும் ஈடுபட்டார்கள்; இது நிச்சயம் வருந்தத்தக்கது. கடைசியில், பொ.ச.மு. 607-ல் பாபிலோனியர் அந்த ராஜ்யத்தை அழித்துப்போட யெகோவா அனுமதித்தார். யெகோவாவின் அரசாட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த சாத்தான் எடுத்த முயற்சிகள் வெற்றியடைந்தது போல் தோன்றியது.
17. தாவீதின் ராஜ்யம் கவிழ்க்கப்பட்டபோதிலும், அரசதிகாரம் யெகோவாவின் கையில்தான் இருந்தது என்பதை எது காட்டுகிறது?
17 முதலில் இஸ்ரவேலின் வட ராஜ்யமும், அதைத்தொடர்ந்து தாவீதின் ராஜ்யமும் கவிழ்க்கப்பட்டன. இது, யெகோவாவிற்கு ஆட்சி செலுத்த உரிமை இல்லையென்றோ, அவருக்கு நல்லாட்சி புரிய திறமை இல்லையென்றோ அர்த்தப்படுத்தவில்லை. மாறாக, சாத்தானின் தலையீடும் கடவுளுடைய வழிநடத்துதலை மனிதர்கள் ஒதுக்கித் தள்ளுவதும் எப்படிப்பட்ட சோக முடிவை ஏற்படுத்தும் என்பதையே இது காட்டியது. (நீதிமொழிகள் 16:25; எரேமியா 10:23) இன்னும் அரசதிகாரம் யெகோவாவின் கையில்தான் இருக்கிறது என்பதை காட்டும் விதத்தில் அவர் தீர்க்கதரிசியாகிய எசேக்கியேல் மூலம் பின்வருமாறு அறிவித்தார்: “பாகையைக் கழற்று, கிரீடத்தை எடுத்துப்போடு; . . . அதைக் கவிழ்ப்பேன், கவிழ்ப்பேன், கவிழ்ப்பேன்; உரிமைக்காரனானவர் வருமட்டும் அது இல்லாதிருக்கும்; அவருக்கே அதைக் கொடுப்பேன்.” (எசேக்கியேல் 21:26, 27) வாக்குப்பண்ணப்பட்ட “வித்து” அதாவது, “உரிமைக்காரனானவர்” இனிதான் வரவிருந்தார் என்பதை இவ்வார்த்தைகள் சுட்டிக்காட்டின.
18. காபிரியேல் தூதன் மரியாளிடம் என்ன கூறினார்?
18 இப்போது, பொ.ச.மு. 2-ஆம் நூற்றாண்டிற்கு வரலாம். வட பாலஸ்தீனாவிலிருந்த கலிலேயாவைச் சேர்ந்த நாசரேத் பட்டணத்தில் வசித்த மரியாள் என்ற கன்னியிடம் காபிரியேல் தூதன் அனுப்பப்பட்டார். “இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது” என்று அவர் கூறினார்.—லூக்கா 1:31-33.
19. எந்த முக்கிய சம்பவம் நிறைவேறுவதற்கான காலம் நெருங்கியது?
19 கடைசியாக, ‘பரிசுத்த இரகசியத்தை’ வெளிப்படுத்துவதற்கான சமயம் நெருங்கியது. வாக்குப்பண்ணப்பட்ட ‘வித்துவின்’ முக்கிய பாகமாக இருப்பவர் விரைவில் வரவிருந்தார். (கலாத்தியர் 4:5; 1 தீமோத்தேயு 3:16) அவருடைய குதிங்காலை சாத்தான் நசுக்குவான். பதிலுக்கு அந்த “வித்து” அவனுடைய தலையை நசுக்குவார். இவ்விதமாக, அவனும் அவனைச் சேர்ந்தவர்களும் ஏற்படுத்திய எல்லா தீய காரியங்களுக்கும் முடிவுகட்டுவார். சாத்தான் ஏற்படுத்திய எல்லா சேதங்களும் கடவுளுடைய ராஜ்யத்தின் மூலமாக சரிசெய்யப்படும் என்றும் அதன் மூலமாக, யெகோவாவின் உன்னத அரசதிகாரமே சரியானதென நிரூபிக்கப்படும் என்றும் அவர் சாட்சி கொடுப்பார். (எபிரெயர் 2:14; 1 யோவான் 3:8) இயேசு இதை எப்படிச் செய்வார்? நாம் பின்பற்றுவதற்கு அவர் என்ன முன்மாதிரி வைத்திருக்கிறார்? பின்வரும் கட்டுரையில் இதற்கான பதில்களைக் காணலாம்.
[அடிக்குறிப்பு]
a இஸ்ரவேலின் முதல் அரசராக கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட சவுல், பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவர்.—1 சாமுவேல் 9:15, 16; 10:1.
உங்களால் விளக்க முடியுமா?
• இந்த சர்வலோகத்தையும் ஆளுவதற்கான உரிமை ஏன் யெகோவாவுக்கு இருக்கிறது?
• ராஜ்யத்தை ஏற்படுத்த யெகோவா ஏன் தீர்மானித்தார்?
• ‘பரிசுத்த இரகசியத்தை’ யெகோவா எவ்வாறு படிப்படியாக வெளிப்படுத்தினார்?
• தாவீதின் ராஜ்யம் கவிழ்க்கப்பட்டபோதிலும், அரசதிகாரம் யெகோவாவின் கையில் தொடர்ந்து இருந்ததை எது காட்டுகிறது?
[பக்கம் 23-ன் படம்]
ஆபிரகாமிடம் யெகோவா எதை தீர்க்கதரிசனமாக உரைத்தார்?
[பக்கம் 25-ன் படம்]
தாவீதின் ராஜ்யம் கவிழ்க்கப்பட்டது, யெகோவாவின் உன்னத அரசாட்சி தோல்வியடைந்துவிட்டதை ஏன் அர்த்தப்படுத்தாது?