காவற்கோபுரத்தின் புதிய படிப்பு இதழ்
நீங்கள் வாசித்துக்கொண்டு இருப்பது காவற்கோபுர பத்திரிகையுடைய படிப்பு இதழின் முதல் பிரதி. புது வடிவம் பெற்றுள்ள இந்தப் பத்திரிகையின் சில அம்சங்களை உங்களுக்கு விளக்க நாங்கள் விரும்புகிறோம்.
படிப்பு இதழ், யெகோவாவின் சாட்சிகளுக்கும் முன்னேறிவரும் பைபிள் மாணாக்கர்களுக்கும் பிரசுரிக்கப்படுகிறது. இந்தப் பத்திரிகை மாதத்திற்கு ஒரு முறை வெளியாகும், இதில் நான்கு அல்லது ஐந்து படிப்பு கட்டுரைகள் இருக்கும். இந்தக் கட்டுரைகளை எந்தெந்த வாரங்களில் படிக்க வேண்டும் என்பதற்கான அட்டவணையை இப்பத்திரிகையின் அட்டை பக்கத்தில் பார்க்கலாம். படிப்பு இதழை நாம் வெளி ஊழியத்தில் பயன்படுத்தமாட்டோம் என்பதால் இந்த இதழ் விதவிதமான அட்டை படங்களுடன் வெளிவராது. ஆனால், காவற்கோபுரத்தின் பொது இதழோ விதவிதமான அட்டை படங்களுடன் வெளியாகும்.
இந்தப் பத்திரிகையின் 2-ஆம் பக்கத்தில், ஒவ்வொரு படிப்பு கட்டுரையின் அல்லது தொடர் கட்டுரைகளின் நோக்கம் சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டிருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். இந்தக் குறிப்புகள் உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். அதோடு, படிப்பு கட்டுரைகள் போக மற்ற இதர கட்டுரைகளின் பட்டியலையும் அந்தப் பக்கத்தில் நீங்கள் பார்ப்பீர்கள். காவற்கோபுர படிப்பை நடத்துபவர்கள், சபையாருக்கு பயனளிக்கும் விதத்தில் அதை நடத்த தயார்செய்கையில் இந்தச் சுருக்கமான குறிப்புகள் அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.
படிப்பு கட்டுரைகள் முன்பைவிட சிறியதாக இருக்கும். இதனால் காவற்கோபுர படிப்பின்போது முக்கிய வசனங்களை சிந்திப்பதற்கு கூடுதல் நேரம் கிடைக்கும். குறிப்பிடப்பட்டிருக்கும் எல்லா வசனங்களையும் ஒவ்வொரு வாரமும் எடுத்துப் பார்க்கும்படி உங்களை அன்போடு உற்சாகப்படுத்துகிறோம். சில வசனங்கள் பக்கத்தில், “வாசிக்கவும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கும். காவற்கோபுர படிப்பு சமயத்தில் அந்த வசனங்களை வாசித்து கலந்தாலோசிக்க வேண்டும். நேரமிருந்தால் மற்ற வசனங்களையும் வாசிக்கலாம். சில கட்டுரைகளில் வசனங்கள் பக்கத்தில் “ஒப்பிடவும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட வசனங்கள் பாராவின் முக்கிய குறிப்புகளோடு நேரடியாக சம்பந்தப்படாததாக இருப்பதால் அவை பொதுவாக கூட்டங்களில் வாசிக்கப்படுவதில்லை. இருந்தாலும், அந்த வசனங்களிலும் ஆர்வத்தை தூண்டும் கூடுதல் தகவல்கள் இருக்கும்; சிந்திக்கப்படும் விஷயத்தை மறைமுகமாக ஆதரிக்கும் குறிப்புகளும் அவற்றில் இருக்கலாம். காவற்கோபுர படிப்புக்காக தயார் செய்யும்போது அந்த வசனங்களையும் வாசிக்கும்படி உங்களை ஊக்குவிக்கிறோம். சபையில் நீங்கள் பதில்கள் சொல்லும்போது ஒருவேளை அந்த வசனங்களிலுள்ள குறிப்புகளையும் பயன்படுத்தலாம்.
வருடாந்தர அறிக்கை இனி காவற்கோபுரத்தில் வெளிவராது. 2008-லிருந்து நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையிலும் இயர்புக்கிலும் அது வெளியாகும். ஆனால், ஏற்கெனவே குறிப்பிட்டபடி படிப்பு இதழில், மற்ற இதர கட்டுரைகள் இடம்பெறும். இவற்றில் பெரும்பாலான கட்டுரைகள் சபை கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்படாது என்றாலும் அவற்றை நீங்கள் கவனமாகப் படிக்குமாறு உங்களை ஊக்குவிக்கிறோம். ஏனெனில் அவையும், ‘உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரனிடமிருந்து’ வரும் ஆன்மீக உணவுதான்.—மத். 24:45-47.
முடிவாக, படிப்பு இதழ், பொது இதழ் ஆகிய இந்த இரண்டு பதிப்புகளும் வெவ்வேறு பத்திரிகைகள் அல்ல. இவ்விரண்டுமே காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிற பத்திரிகைகள். இவற்றின் 2-ஆம் பக்கத்தில், காவற்கோபுர பத்திரிகையின் நோக்கத்தை விளக்கும் பாராக்கள் ஒரேமாதிரியாக இருக்கும். இந்த இரு பத்திரிகைகளும் வருடாந்தர ‘பவுண்டு வால்யூமில்’ சேர்க்கப்படும். படிப்பு இதழில் வெளியாகும், “உங்களுக்கு நினைவிருக்கிறதா?” என்ற பகுதியில் இந்த இரு இதழ்களிலுள்ள விஷயங்களும் காணப்படும்.
காவற்கோபுர பத்திரிகை 1879-லிருந்து போர் காலத்திலும் பொருளாதாரம் நெருக்கடியாக இருந்த சமயத்திலும் துன்புறுத்துதலின் மத்தியிலும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய உண்மைகளை நேர்மையோடு அறிவித்து வருகிறது. புது வடிவம் பெற்றுள்ள இந்த இதழ்களும் யெகோவாவின் ஆசீர்வாதத்தோடு அதே நோக்கத்தைத் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்று யெகோவாவிடம் நாங்கள் ஜெபம் செய்கிறோம். காவற்கோபுரத்தின் இந்தப் புதிய படிப்பு இதழிலிருந்து நீங்கள் பயனடைகையில் வாசகரான உங்களையும் யெகோவா ஆசீர்வதிக்க வேண்டும் என்று அவரிடம் நாங்கள் வேண்டிக்கொள்கிறோம்.