‘நீங்கள் கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தைக் குறித்து கவனமாயிருங்கள்’
“நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி [“எப்போதும்,” NW] கவனமாயிருப்பாயாக.”—கொலோ. 4:17.
1, 2. மக்களுக்குச் செய்ய வேண்டிய என்ன கடமை கிறிஸ்தவர்களுக்கு இருக்கிறது?
நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான கடமை ஒன்று இருக்கிறது. இப்பொழுது அவர்கள் எடுக்கும் தீர்மானங்கள், “மிகுந்த உபத்திரவத்திலிருந்து” அவர்கள் தப்பிப்பார்களா மாட்டார்களா என்பதை முடிவு செய்யும். (வெளி. 7:14) “மரணத்துக்கு ஒப்பிக்கப்பட்டவர்களையும், கொலையுண்ணப் போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி” என்று நீதிமொழிகள் புத்தகத்தின் எழுத்தாளர் கடவுளுடைய வழிநடத்துதலால் எழுதினார். சிந்திக்க வைக்கும் எப்பேர்ப்பட்ட வார்த்தைகள் இவை! ஜீவனை அல்லது மரணத்தை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டியிருப்பதைப்பற்றி நாம் எச்சரிக்கத் தவறினால் அவர்களுடைய இரத்தப்பழி நம்மேல் விழும். “அதை அறியோம் என்பாயாகில், இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ? உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ? அவர் மனுஷருக்கு அவனவன் கிரியைக்குத்தக்கதாகப் பலனளியாரோ?” என்று அதே நீதிமொழிகள் புத்தகம் சொல்கிறது. மக்கள் எதிர்ப்படும் ஆபத்தைக் குறித்து, “அதை அறியோம்” என்று யெகோவாவின் ஊழியர்கள் சொல்ல முடியாது என்பது உண்மையல்லவா?—நீதி. 24:11, 12.
2 உயிரை யெகோவா உயர்வாக மதிக்கிறார். எத்தனை பேரை முடியுமோ அத்தனை பேரையும் காப்பாற்றுவதற்குத் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யும்படி தம்முடைய ஊழியர்களை அவர் ஊக்கப்படுத்துகிறார். கடவுளுடைய ஊழியர்கள் ஒவ்வொருவரும் அவருடைய வார்த்தையில் காணப்படும் உயிர் காக்கும் செய்தியை அறிவிக்க வேண்டும். வந்துகொண்டிருக்கும் ஆபத்தைக் கண்டு எச்சரிக்கிற காவற்காரரின் வேலைக்கு நம்முடைய வேலை ஒப்பாய் இருக்கிறது. அழிக்கப்படும் ஆபத்திலிருப்பவர்களின் இரத்தப்பழி நம்மேல் விழுவதை நாம் விரும்புவதில்லை. (எசே. 33:1-7) ஆகவே, ‘திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணுவதில்’ விடாமுயற்சியோடு ஈடுபடுவது மிக மிக முக்கியம்!—2 தீமோத்தேயு 4:1, 2, 5-ஐ வாசிக்கவும்.
3. இந்தக் கட்டுரையிலும் அடுத்து வரும் கட்டுரைகளிலும் என்னென்ன விஷயங்களைத் தெரிந்துகொள்ளப் போகிறோம்?
3 உயிர் காக்கும் ஊழியத்தில் நீங்கள் எதிர்ப்படுகிற தடைக்கற்களை எப்படித் தகர்த்தெறியலாம் என்பதையும் இன்னும் அதிகமானோருக்கு எப்படி உதவலாம் என்பதையும் இந்தக் கட்டுரையில் நீங்கள் கற்றுக்கொள்வீர்கள். முக்கியமான சத்தியங்களை எப்படித் திறம்பட போதிக்கலாம் என்பதைக் கற்றுக்கொள்ள இதற்கடுத்த கட்டுரை உதவும். உலகெங்குமுள்ள ராஜ்ய பிரசங்கிப்பாளர்களுக்குக் கிடைத்த உற்சாகமூட்டும் அனுபவங்களில் சிலவற்றை மூன்றாவது படிப்புக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம். எனினும், இந்த விஷயங்களைச் சிந்திப்பதற்கு முன்னால், இன்று நிலைமை இவ்வளவு மோசமாய் இருப்பதற்கான சில காரணங்களை ஆராய்வது பொருத்தமாய் இருக்கும்.
அநேகர் நம்பிக்கையற்று இருப்பதேன்?
4, 5. மனிதர் எதை அனுபவித்து வருகிறார்கள், இதைக் குறித்து அநேகர் எவ்வாறு உணருகிறார்கள்?
4 “இந்தப் பொல்லாத உலகத்தின் முடிவு காலத்தில்” நாம் வாழ்கிறோம் என்பதையும் அதன் முடிவு விரைவில் வரவிருக்கிறது என்பதையும் உலக சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ‘கடைசி நாட்களுக்கான’ அடையாளங்களை இயேசுவும் அவருடைய சீஷர்களும் குறிப்பிட்டார்கள்; அடையாளங்களாக அவர்கள் குறிப்பிட்ட அந்தச் சம்பவங்களையும் சூழ்நிலைகளையும் மனிதகுலம் இன்று சந்தித்து வருகிறது. ‘பேறுகால வேதனைகள்’ மனிதகுலத்தை வாட்டிவதைக்கின்றன. அவற்றில், போர்களும் பஞ்சங்களும் பூமியதிர்ச்சிகளும் இன்னும் பல இடையூறுகளும் அடங்கும். அக்கிரமம், சுயநலம், கடவுள் பக்தியற்ற மனப்பான்மை ஆகியவை எங்கும் நிறைந்திருக்கின்றன. பைபிளின் நெறிமுறைகளின்படி நடப்பதற்கு முயற்சி செய்கிற மக்களுக்கும்கூட இது, “கையாளுவதற்குக் கடினமான கொடிய காலமாக” இருக்கிறது.—மத். 24:3, NW, 6-8, பொது மொழிபெயர்ப்பு, 12; 2 தீ. 3:1-5, NW.
5 என்றாலும், உலக சம்பவங்களின் உண்மையான அர்த்தத்தைப் பெரும்பாலோர் அறியாதிருக்கிறார்கள். அதனால், அநேகர் தங்களுடைய பாதுகாப்பையும் குடும்பத்தின் பாதுகாப்பையும் குறித்து கவலைப்படுகிறார்கள். அன்பானவர்களின் மரணத்தாலோ வேறு சோகச் சம்பவங்களாலோ அநேகர் நொந்து போயிருக்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் ஏன் நடக்கின்றன, இவற்றையெல்லாம் யார் சரிசெய்வார்களென தெளிவாகத் தெரியாததால் மக்கள் எதிர்கால நம்பிக்கையை இழந்திருக்கிறார்கள்.—எபே. 2:12.
6. தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு உதவ ‘மகா பாபிலோனால்’ ஏன் முடியவில்லை?
6 பொய்மத உலகப் பேரரசான “மகா பாபிலோன்” மனிதகுலத்திற்கு இம்மியளவும் ஆறுதலை அளிப்பதில்லை. மாறாக, “அவளுடைய வேசித்தனமாகிய மதுவால்” ஏராளமானோரை ஆன்மீக ரீதியில் குழப்பமடையச் செய்து தட்டுத்தடுமாற வைத்திருக்கிறாள். மேலும், பொய்மதம் மகா வேசியைப்போலச் செயல்பட்டு, ‘பூமியின் ராஜாக்களை’ ஏமாற்றி தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது; மக்களை அரசாங்கங்களுக்கு அடிபணிய வைப்பதற்காக பொய்க்கோட்பாடுகளையும் ஆவியுலகத்தொடர்புடைய பழக்கங்களையும் அது பயன்படுத்துகிறது. இப்படியாக, அது அதிகாரத்தையும் செல்வாக்கையும் பெற்றிருக்கிறது; ஆனால் அதேசமயம், உண்மை மதத்தின் சத்தியத்தை அது முற்றிலும் ஒதுக்கிவிட்டிருக்கிறது.—வெளி. 17:1, 2, 5; 18:23.
7. பெரும்பாலோர் எதை எதிர்நோக்கி இருக்கிறார்கள், ஆனால் சிலர் எவ்வாறு உதவி பெறலாம்?
7 அழிவுக்குச் செல்லும் விசாலமான பாதையில் பெரும்பாலோர் செல்வதாக இயேசு கற்பித்தார். (மத். 7:13, 14) சிலர் பைபிள் போதனைகளை வேண்டுமென்றே நிராகரித்துவிட்டு அந்தப் பாதையில் செல்கிறார்கள்; ஆனால், அநேகர் யெகோவா உண்மையில் தங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பது தெரியாததால்தான் அந்தப் பாதையில் செல்கிறார்கள். மதத் தலைவர்கள் இதைப்பற்றிப் போதிக்காமல் அவர்களை ஏமாற்றி, ஆன்மீக இருளில் மூழ்கடித்திருக்கிறார்கள். அவர்களில் சிலருக்கு பைபிளில் இருந்து தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டால், தங்களுடைய வாழ்க்கையை அவர்கள் மாற்றிக்கொள்ளக்கூடும். ஆனால், மகா பாபிலோனைவிட்டு வெளியே வராமல், பைபிளின் நெறிமுறைகளைத் தொடர்ந்து புறக்கணிப்பவர்கள் “மிகுந்த உபத்திரவத்திலிருந்து” தப்பவே மாட்டார்கள்.—வெளி. 7:14.
“இடைவிடாமல்” பிரசங்கியுங்கள்
8, 9. எதிர்ப்புகளைச் சந்தித்தபோது முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் என்ன செய்தார்கள், ஏன்?
8 தம்மைப் பின்பற்றுகிறவர்கள் ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்து, சீஷராக்குவார்கள் என்று இயேசு கூறினார். (மத். 28:19, 20) எனவே, பிரசங்க வேலையில் பங்கெடுப்பது கடவுளுக்கு உண்மைத்தன்மையைக் காட்டும் விஷயம் என்றும் தங்களுடைய கிறிஸ்தவ விசுவாசத்தை வெளிக்காட்டுவதற்கான வழி என்றும் உண்மைக் கிறிஸ்தவர்கள் எப்பொழுதும் கருதி வந்திருக்கிறார்கள். அதனால், இயேசுவின் ஆரம்பகால சீஷர்கள் எதிர்ப்புகளின் மத்தியிலும் தொடர்ந்து பிரசங்கித்து வந்தார்கள். பலத்திற்காக அவர்கள் யெகோவாவை சார்ந்திருந்தார்கள், எப்போதும் ‘[அவருடைய] வசனத்தை முழு தைரியத்தோடு . . . சொல்வதற்கு’ உதவி கேட்டு ஜெபம் செய்தார்கள். அவர்களை பரிசுத்த ஆவியால் நிரப்புவதன்மூலம் யெகோவா அந்த ஜெபத்திற்கு பதிலளித்தார்; அவர்கள் தைரியமாக கடவுளுடைய வார்த்தையைப் பேசினார்கள்.—அப். 4:18, 30, 31.
9 எதிர்ப்பு தீவிரமடைந்தபோது, இயேசுவின் சீஷர்கள் நற்செய்தியைப் பிரசங்கிப்பதை நிறுத்திவிட்டார்களா? இல்லவே இல்லை. அப்போஸ்தலர் பிரசங்கிப்பதைப் பார்த்து எரிச்சலடைந்த யூத மதத்தலைவர்கள் அவர்களைக் கைதுசெய்தார்கள், பயமுறுத்தினார்கள், சாட்டையால் அடித்தார்கள். எனினும், அப்போஸ்தலர் “இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்.” ஏனெனில், “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது” என்பதை அவர்கள் தெளிவாக அறிந்திருந்தார்கள்.—அப். 5:28, 29, 40-42.
10. இன்று என்னென்ன பிரச்சினைகளைக் கிறிஸ்தவர்கள் சந்திக்கிறார்கள், இருந்தாலும் அவர்களுடைய நல்ல நடத்தையால் என்ன பலன் கிடைக்கலாம்?
10 இன்றிருக்கும் கடவுளுடைய ஊழியர்களில் அநேகர் பிரசங்க வேலையின் காரணமாக அடி, உதைகளையோ சிறைவாசத்தையோ பெறுவதில்லைதான். ஆனாலும் உண்மைக் கிறிஸ்தவர்கள் எல்லாருமே பலவிதமான சோதனைகளையும் துன்பங்களையும் சந்திக்கிறார்கள். உதாரணமாக, பைபிள் அடிப்படையில் பயிற்றுவிக்கப்பட்ட உங்களுடைய மனசாட்சியின்படி நடப்பதால், இந்த உலகம் விரும்பாத வாழ்க்கை முறையை நீங்கள் பின்பற்றுகிறீர்கள். அது உங்களை மற்றவர்களிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. பைபிள் நியமங்களின் அடிப்படையில் நீங்கள் தீர்மானங்களை எடுப்பதால் உடன் வேலை செய்வோர், பள்ளித் தோழர்கள், அக்கம்பக்கத்தார் என எல்லாருமே உங்களை விசித்திரமாய்ப் பார்க்கலாம். இருந்தாலும், அவர்களுடைய பிரதிபலிப்பைக் கண்டு நீங்கள் விட்டுக்கொடுத்துவிடக் கூடாது. இந்த உலகம் ஆன்மீக இருளில் மூழ்கியிருக்கிறது; ஆனால், கிறிஸ்தவர்கள், ‘சுடர்களைப்போலப் பிரகாசிக்க’ வேண்டும். (பிலி. 2:14, 15) உண்மை மனதுள்ள சிலர் உங்களுடைய நல்ல நடத்தையை பார்த்து பாராட்டுவார்கள்; அதன்மூலம் யெகோவாவுக்கு மகிமை சேர்ப்பார்கள்.—மத்தேயு 5:16-ஐ வாசிக்கவும்.
11. (அ) நம் பிரசங்க வேலைக்கு சிலர் எவ்வாறு பிரதிபலிக்கலாம்? (ஆ) எந்த மாதிரியான எதிர்ப்பை அப்போஸ்தலன் பவுல் சந்தித்தார், அவர் என்ன செய்தார்?
11 ராஜ்ய நற்செய்தியைத் தொடர்ந்து பிரசங்கிப்பதற்கு நமக்குத் தைரியம் தேவை. சிலர், சொல்லப்போனால் சொந்தக்காரர்கள்கூட உங்களைக் கேலி கிண்டல் செய்யலாம், அல்லது ஏதாவதொரு விதத்தில் உங்களை மனமொடிந்து போகச்செய்யலாம். (மத். 10:36) பிரசங்கித்ததால் அப்போஸ்தலன் பவுல் பலமுறை அடிக்கப்பட்டார். அப்படி எதிர்ப்பைச் சந்தித்தபோது அவர் என்ன செய்தார் என்பதைக் கவனியுங்கள். “முன்னே . . . நாங்கள் பாடுபட்டு நிந்தையடைந்திருந்தும், வெகு போராட்டத்தோடே தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குச் சொல்லும்படி, நம்முடைய தேவனுக்குள் தைரியங்கொண்டிருந்தோம்” என்று அவர் எழுதினார். (1 தெ. 2:2) அவரைப் பிடித்து, ஆடையைக் களைந்து, தடியினால் அடித்து, சிறையில் தள்ளிய பிறகும் தொடர்ந்து நற்செய்தியைப் பிரசங்கிக்க அவருக்கு நிச்சயமாகவே தைரியம் தேவைப்பட்டிருக்கும். (அப்போஸ்தலர் 16:19-24) அப்படித் தொடர்ந்து பிரசங்கிக்க எது அவருக்குத் தைரியத்தைத் தந்தது? கடவுள் கொடுத்த ஊழியத்தை செய்து முடிக்க வேண்டுமென்ற தணியாத தாகம்தான் அவருக்குத் தைரியத்தைத் தந்தது.—1 கொ. 9:16.
12, 13. சிலர் என்ன சவால்களைச் சந்திக்கிறார்கள், அவற்றை சமாளிக்க அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்?
12 சில பிராந்தியங்களில் மக்களை வீட்டில் பார்ப்பதே அபூர்வமாக இருக்கலாம், அல்லது ராஜ்ய நற்செய்திக்கு பெரும்பாலோர் செவிசாய்க்காதிருக்கலாம். இப்படிப்பட்ட இடங்களில் ஊழியம் செய்யும்போது நம்முடைய பக்திவைராக்கியம் தணியாதபடி பார்த்துக்கொள்வதுகூட சவாலாயிருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் என்ன செய்யலாம்? மக்களிடம் சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்குக் கூடுதலாக தைரியத்தை ஒன்றுதிரட்டுவது அவசியமாயிருக்கலாம். நாம் ஊழியம் செய்கிற நாளையும் நேரத்தையும் மாற்ற வேண்டியிருக்கலாம் அல்லது அதிகமானோரை சந்திக்க முடிகிற பகுதிகளில் பிரசங்கிக்க முயற்சி செய்ய வேண்டியிருக்கலாம்.—யோவான் 4:7-15-ஐ ஒப்பிடவும்; அப். 16:13; 17:17.
13 வயோதிபம், வியாதி போன்ற மற்ற பிரச்சினைகளோடு அநேகர் மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறது; இதனால் பிரசங்க வேலையில் அவர்களால் அதிகமாக ஈடுபட முடியாமல் போகலாம். இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் சோர்ந்து போய்விடாதீர்கள். யெகோவா உங்களுடைய வரையறைகளை அறிந்திருக்கிறார்; உங்களால் முடிந்ததைச் செய்கையில் அதைக் கண்டு அவர் சந்தோஷப்படுகிறார். (2 கொரிந்தியர் 8:12-ஐ வாசிக்கவும்.) எதிர்ப்பு, அலட்சியப்போக்கு, உடல்நலக் குறைபாடு போன்ற எத்தகைய பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தாலும்சரி, நற்செய்தியைப் பிரசங்கிக்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்.—நீதி. 3:27; மாற்கு 12:41-44-ஐ ஒப்பிடவும்.
‘ஊழியத்தில் கவனமாயிருங்கள்’
14. சக கிறிஸ்தவர்களுக்கு பவுல் என்ன முன்மாதிரி வைத்தார், அவர் என்ன ஆலோசனை வழங்கினார்?
14 அப்போஸ்தலன் பவுல் தன் ஊழியத்தில் முழுமூச்சோடு ஈடுபட்டார்; அப்படிச் செய்யும்படி சக விசுவாசிகளையும் உற்சாகப்படுத்தினார். (அப். 20:20, 21; 1 கொ. 11:1) முதல் நூற்றாண்டில் வாழ்ந்த அர்க்கிப்பு என்ற கிறிஸ்தவரை பவுல் விசேஷமாக உற்சாகப்படுத்தினார். கொலோசெயருக்கு எழுதின தன்னுடைய கடிதத்தில், “அர்க்கிப்பைக் கண்டு: நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாயிருப்பாயாகவென்று சொல்லுங்கள்” என்று அவர் எழுதினார். (கொலோ. 4:17) அர்க்கிப்பு யார் என்றோ அவருடைய சூழ்நிலை என்னவென்றோ நமக்குத் தெரியாது; ஆனால், பிரசங்கிக்கும்படி கொடுக்கப்பட்ட பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. நீங்கள் ஒப்புக்கொடுத்த ஒரு கிறிஸ்தவரா? அப்படியென்றால் நீங்களும் பிரசங்கிப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். அதைச் செய்து முடிக்க நீங்கள் தொடர்ந்து கவனமாய் இருக்கிறீர்களா?
15. கிறிஸ்தவ ஒப்புக்கொடுத்தல் எதை உட்படுத்துகிறது, என்ன கேள்விகளை நம்மிடமே கேட்டுக்கொள்ள வேண்டும்?
15 நாம் முழுக்காட்டுதல் பெறுவதற்கு முன்பு, இருதயப்பூர்வமாக ஜெபம் செய்து நம்மையே யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தோம். அவருடைய சித்தத்தைச் செய்ய நாம் தீர்மானமாயிருந்ததை இது அர்த்தப்படுத்தியது. அப்படியென்றால், ‘என்னுடைய வாழ்க்கையில் கடவுளுடைய சித்தத்தைச் செய்வதுதான் உண்மையில் மிக முக்கியமானதாக இருக்கிறதா?’ என்ற கேள்வியை இப்போது நம்மிடமே கேட்டுக்கொள்ள வேண்டும். குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்வது போன்று யெகோவா எதிர்பார்க்கும் பலவிதமான பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியிருக்கும் என்பது உண்மைதான். (1 தீ. 5:8) ஆனால், மிச்சமிருக்கும் நேரத்தையும் சக்தியையும் நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம்? நம்முடைய வாழ்க்கையில் எதற்கு முதலிடம் கொடுக்கிறோம்?—2 கொரிந்தியர் 5:14, 15-ஐ வாசிக்கவும்.
16, 17. இளம் கிறிஸ்தவர்களோ அதிக குடும்பப் பொறுப்புகள் இல்லாதவர்களோ என்ன வாய்ப்புகளைக் குறித்து யோசித்துப் பார்க்கலாம்?
16 நீங்கள் அடிப்படைக் கல்வியை முடித்துவிட்ட அல்லது முடிக்கப்போகிற ஒப்புக்கொடுத்த ஓர் இளம் கிறிஸ்தவரா? ஒருவேளை, முக்கியமான குடும்பப் பொறுப்புகள் எதுவும் உங்களுக்கு இருக்காது. அப்படியானால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள்? யெகோவாவின் சித்தத்தைச் செய்வதாக கொடுத்த வாக்கை சிறந்த விதத்தில் நிறைவேற்றுவதற்கு நீங்கள் எப்படிப்பட்ட தீர்மானங்களை எடுப்பீர்கள்? பயனியர் ஊழியம் செய்வதற்கு ஏற்றவாறு அநேகர் தங்களுடைய வேலைகளை ஒழுங்கமைத்திருக்கிறார்கள். அதனால், அளவிலா ஆனந்தத்தையும் திருப்தியையும் பெற்றிருக்கிறார்கள்.—சங். 110:3; பிர. 12:1.
17 நீங்கள் ஓர் இளைஞரா? நீங்கள் உலகப்பிரகாரமான வேலையில் இருக்கலாம்; ஆனால், உங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதைத் தவிர அதிகமான குடும்பப் பொறுப்புகள் உங்களுக்கு இல்லாதிருக்கலாம். உங்களுடைய நேரம் அனுமதிப்பதற்கு ஏற்ப சபை காரியங்களில் சந்தோஷமாகப் பங்கெடுத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஆனால், நீங்கள் இன்னும் அதிக சந்தோஷத்தைப் பெற வாய்ப்பிருக்கிறதா? உங்களுடைய ஊழியத்தை விரிவாக்குவதைப்பற்றி யோசித்தீர்களா? (சங். 34:8; நீதி. 10:22) சில பிராந்தியங்களில் உயிர் காக்கும் சத்தியத்தை எல்லாருக்கும் அறிவிக்க இன்னும் பெருமளவு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. ராஜ்ய பிரசங்கிப்பாளர் அதிகம் தேவைப்படுகிற பகுதிகளுக்குச் சென்று சேவை செய்வதற்கு வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்ய உங்களால் முடியுமா?—1 தீமோத்தேயு 6:6-8-ஐ வாசிக்கவும்.
18. ஓர் இளம் தம்பதியர் என்ன மாற்றங்களைச் செய்தார்கள், என்ன பலன்கள் கிடைத்தன?
18 உதாரணத்திற்கு, அமெரிக்காவில் வசிக்கும் கெவன், எலனா தம்பதியரை எடுத்துக்கொள்வோம்.a இவர்கள் வசிக்கும் பகுதியிலுள்ள மற்ற புதுமணத் தம்பதியரைப் போலவே இவர்களும் ஒரு வீட்டை வாங்க வேண்டுமென நினைத்தார்கள். இருவருமே முழுநேரமும் வேலை பார்த்ததால் வசதியாக வாழ்ந்தார்கள். ஆனால், அலுவலக வேலையும் வீட்டு வேலையும் இவர்களுக்கிருந்த நேரத்தையெல்லாம் விழுங்கிவிட்டதால், ஊழியத்தில் செலவிட அற்பசொற்ப நேரமே மிஞ்சியது. கிட்டத்தட்ட தங்களுடைய நேரம், சக்தி அனைத்தையும் தங்களுடைய சொத்து சுகத்துக்காகவே செலவிடுவதை இவர்கள் உணர்ந்தார்கள். மகிழ்ச்சியோடு பயனியர் செய்துவரும் ஒரு தம்பதியரின் எளிமையான வாழ்க்கை முறையை இவர்கள் கவனித்தபோது தங்களுடைய வாழ்க்கையில் ராஜ்ய காரியங்களுக்கு முன்னுரிமை கொடுக்க தீர்மானித்தார்கள். ஞானமாக தீர்மானம் எடுக்க உதவும்படி யெகோவாவிடம் ஜெபித்தார்கள். தங்கள் வீட்டை விற்றுவிட்டு ஒரு குடியிருப்பு பகுதிக்குக் குடிமாறிச் சென்றார்கள். எலனா வேலை செய்யும் நேரத்தைக் குறைத்துக்கொண்டு பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தார். ஊழியத்தில் தன்னுடைய மனைவிக்குக் கிடைத்த அனுபவங்களைக் கேட்டு ஊக்கம் பெற்ற கெவன், தான் முழுநேரமாக செய்துவந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு பயனியர் செய்ய ஆரம்பித்தார். கொஞ்ச காலத்திற்குப் பிறகு, ராஜ்ய பிரசங்கிப்பாளர்கள் அதிகம் தேவைப்படும் தென் அமெரிக்க நாடு ஒன்றில் சேவை செய்ய அவர்கள் குடிமாறிச் சென்றார்கள். “ஆரம்பத்திலிருந்தே எங்கள் மணவாழ்க்கை சந்தோஷமாகத்தான் இருந்தது; ஆனால், கடவுளுக்கு இன்னும் அதிகம் ஊழியம் செய்ய வேண்டுமென்ற குறிக்கோளோடு உழைத்தபோது எங்களுடைய மகிழ்ச்சி நிறைவாயிருந்தது” என்று கெவன் சொல்கிறார்.—மத்தேயு 6:19-22-ஐ வாசிக்கவும்.
19, 20. நற்செய்தியைப் பிரசங்கிப்பதுதான் இப்போது மிக முக்கியமான வேலையென ஏன் சொல்லலாம்?
19 இப்போது பூமியில் நடைபெறுகிற வேலைகளிலேயே நற்செய்தியைப் பிரசங்கிப்பதுதான் மிக முக்கியமானது. (வெளி. 14:6, 7) இது யெகோவாவின் பெயரைப் பரிசுத்தப்படுத்த உதவுகிறது. (மத். 6:9) ஒவ்வொரு வருடமும், பைபிள் போதனைகளை ஏற்றுக்கொள்ளும் பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்க்கை மேம்பட்டிருக்கிறது; இது, அவர்களுடைய இரட்சிப்பிற்கு வழிசெய்திருக்கிறது. “பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?” என்று அப்போஸ்தலன் பவுல் கேட்டார். (ரோ. 10:14, 15) பிரசங்கிக்க யாருமில்லையெனில் மக்கள் நற்செய்தியைக் கேள்விப்படுவது கடினம்தான். உங்களுடைய ஊழியத்தை நிறைவேற்ற உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யத் தீர்மானமாய் இருங்கள்.
20 மக்கள், இந்த இக்கட்டான காலத்தின் முக்கியத்துவத்தையும் அவர்கள் எடுக்கும் தீர்மானங்களின் விளைவுகளையும் புரிந்துகொள்ள நீங்கள் உதவ வேண்டும். இதற்கு மற்றொரு வழி, உங்களுடைய கற்பிக்கும் திறமையை வளர்த்துக்கொள்வதே. இதைப்பற்றி அடுத்த கட்டுரையில் சிந்திக்கலாம்.
[அடிக்குறிப்பு]
a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
எப்படிப் பதில் அளிப்பீர்கள்?
• மக்களுக்குச் செய்ய வேண்டிய என்ன கடமை கிறிஸ்தவர்களுக்கு இருக்கிறது?
• நம்முடைய பிரசங்க வேலையில் வரும் சவால்களை சமாளிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
• நாம் பெற்றிருக்கும் ஊழியத்தை எவ்வாறு நிறைவேற்றலாம்?
[பக்கம் 5-ன் படம்]
எதிர்ப்பின் மத்தியிலும் பிரசங்கிப்பதற்கு தைரியம் தேவை
[பக்கம் 7-ன் படம்]
மக்கள் வீட்டில் அதிகமாய் இராத பிராந்தியங்களில் பிரசங்கிக்க வேண்டியிருந்தால் நீங்கள் என்ன செய்யலாம்?