‘கற்பிக்கும் திறமையை’ வளர்த்திடுங்கள்
“திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடியசாந்தத்தோடும் உபதேசத்தோடும் [“கற்பிக்கும் திறமையோடும்,” NW] கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.”—2 தீ. 4:2.
1. தம்முடைய சீஷர்களுக்கு இயேசு என்ன கட்டளையிட்டார், என்ன முன்மாதிரி வைத்தார்?
இயேசு பூமியில் ஊழியம் செய்தபோது அற்புதமாய் அநேகரை சுகப்படுத்தியிருந்தாலும், மக்கள் அவரை சுகமளிப்பவர் என்றோ அற்புதம் செய்கிறவர் என்றோ அழைக்கவில்லை; போதகர் என்றே முக்கியமாக அவர் அறியப்பட்டிருந்தார். (மாற். 12:19; 13:1) கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை அறிவிப்பதை இயேசு மிக முக்கியமாகக் கருதினார். இன்று அவருடைய சீஷர்களும் அவ்வாறே கருதுகிறார்கள். இயேசு கட்டளையிட்ட எல்லாவற்றையும் கடைப்பிடிக்கும்படி மக்களுக்குப் போதித்து, சீஷராக்கும் வேலையில் தொடர்ந்து ஈடுபடும் பொறுப்பு கிறிஸ்தவர்களுக்கு இருக்கிறது.—மத். 28:19, 20.
2. பிரசங்கிக்கும் பொறுப்பை நிறைவேற்ற நாம் என்ன செய்ய வேண்டும்?
2 சீஷராக்கும்படி கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றுவதற்கு, கற்பிக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள நாம் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். கற்பிக்கும் திறமை எவ்வளவு முக்கியம் என்பதை, தன்னுடன் சேர்ந்து ஊழியம் செய்த தீமோத்தேயுவுக்கு எழுதியபோது அப்போஸ்தலன் பவுல் வலியுறுத்தினார். “உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்” என்று அவர் எழுதினார். (1 தீ. 4:16) நாம் அறிந்திருக்கும் தகவல்களை மற்றவர்களிடம் வெறுமனே போதிப்பதைப்பற்றி பவுல் இங்கு குறிப்பிடவில்லை. திறம்பட்ட கிறிஸ்தவர்கள், பைபிள் சத்தியங்களை மக்களின் மனதில் பதிய வைக்கிறார்கள்; அவர்களுடைய வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்யத் தூண்டுவிக்கிறார்கள். கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை மற்றவர்களுக்குச் சொல்லும்போது நம்முடைய ‘கற்பிக்கும் திறமையை’ எவ்வாறு வளர்த்துக்கொள்ளலாம்?—2 தீ. 4:2; NW.
‘கற்பிக்கும் திறமையை’ வளர்த்துக்கொள்வதற்கான வழிகள்
3, 4. (அ) ‘கற்பிக்கும் திறமையை’ நாம் எவ்வாறு வளர்த்துக்கொள்ளலாம்? (ஆ) திறம்பட்ட போதகர்களாக ஆவதற்கு தேவராஜ்ய ஊழியப் பள்ளி நமக்கு எவ்வாறு உதவுகிறது?
3 படிப்பு, பயிற்சி, பிறர் போதிப்பதைக் கூர்ந்து கவனித்தல் ஆகியவை கற்பிக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள நமக்கு உதவும். திறம்பட்ட விதத்தில் நற்செய்தியைக் கற்பிக்க இந்த மூன்று அம்சங்களுக்குமே நாம் கவனம் செலுத்த வேண்டும். நடத்தப் போகிற பாடத்தை நன்கு புரிந்துகொள்ள, ஜெபம் செய்துவிட்டு அதைப் படிப்பதுதான் ஒரே வழி. (சங்கீதம் 119:27, 34-ஐ வாசிக்கவும்.) திறம்பட்ட போதகர்கள் மற்றவர்களுக்கு எப்படிக் கற்பிக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனிக்கும்போது, அவர்கள் பயன்படுத்துகிற வழிமுறைகளைக் கற்றுக்கொள்ளவும் அவற்றைப் பின்பற்றவும் நம்மால் முடியும். நாம் கற்றுக்கொள்ளும் விஷயங்களைப் பயிற்சி செய்வதற்குத் தவறாமல் முயற்சி எடுக்கும்போது நம்முடைய திறமைகளை இன்னுமதிகமாக வளர்த்துக்கொள்ள முடியும்.—லூக். 6:40; 1 தீ. 4:13-15.
4 யெகோவா நமது மகத்தான போதகர். பூமியிலிருக்கும் தம் ஊழியர்கள் பிரசங்க வேலையை எப்படிச் செய்ய வேண்டுமென்பது சம்பந்தமான வழிநடத்துதலை தமது காணக்கூடிய அமைப்பின்மூலம் அவர் அளிக்கிறார். (ஏசா. 30:20, 21, NW) இதற்காகவே, ஒவ்வொரு சபையிலும் வாரந்தோறும் தேவராஜ்ய ஊழியப் பள்ளி நடைபெறுகிறது; இந்தப் பள்ளியில் கலந்துகொள்ளும் அனைவரும் கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்பதில் திறம்பட்டவர்களாய் ஆவதற்கு உதவுவதே இதன் நோக்கம். இந்தப் பள்ளியின் முக்கியப் பாடப்புத்தகம் பைபிள்தான். யெகோவாவுடைய பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலால் எழுதப்பட்ட அவருடைய வார்த்தை, நாம் எதை கற்பிக்க வேண்டுமென்பதைச் சொல்கிறது. மேலும், பயனுள்ள, சரியான கற்பிக்கும் முறைகளையும்கூட அது குறிப்பிடுகிறது. கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் கற்பிப்பது, கேள்விகளைத் திறம்பட உபயோகிப்பது, எளிமையாக விளக்குவது, மற்றவர்களிடம் உள்ளப்பூர்வமாக கரிசனை காட்டுவது ஆகியவை திறம்பட்ட விதத்தில் கற்பிக்க நமக்கு உதவும் என்று தேவராஜ்ய ஊழியப் பள்ளி நமக்கு எப்போதும் நினைப்பூட்டுகிறது. இந்தக் குறிப்புகளை ஒவ்வொன்றாக கலந்தாலோசிப்போம். பிறகு, மாணாக்கரின் இருதயத்தை எப்படி சென்றெட்டுவது என்பதைச் சிந்திப்போம்.
கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் கற்பியுங்கள்
5. எதன் அடிப்படையில் நாம் கற்பிக்க வேண்டும், ஏன்?
5 பூமியில் வாழ்ந்தவர்களிலேயே மிகச் சிறந்த போதகரான இயேசு, பைபிளின் அடிப்படையில் கற்பித்தார். (மத். 21:13; யோவா. 6:45; 8:17) அவர் சுயமாய் எதையும் பேசாமல் தம்மை அனுப்பினவர் சொன்னதையே பேசினார். (யோவா. 7:16-18) இதைத்தான் நாமும் பின்பற்றுகிறோம். எனவே, வீட்டுக்கு வீடு ஊழியத்திலும்சரி, பைபிள் படிப்பிலும்சரி, கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையிலேயே நாம் பேசுகிறோம். (2 தீ. 3:16, 17) நாம் எவ்வளவுதான் திறமையாக நியாயம்காட்டிப் பேசினாலும் அது கடவுளுடைய வார்த்தையின் வல்லமைக்கும் சக்திக்கும் ஒருபோதும் ஈடாகாது. பைபிளுக்கே அதிகாரம் இருக்கிறது. மாணாக்கருக்கு நாம் எந்த விஷயத்தைப்பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாலும்சரி, பைபிள் அதைக் குறித்து சொல்வதை வாசிக்கச் செய்வதே மிகச் சிறந்த வழியாகும்.—எபிரெயர் 4:12-ஐ வாசிக்கவும்.
6. படிக்கும் விஷயத்தை மாணாக்கர் நன்கு புரிந்துகொள்ள நடத்துபவர் என்ன செய்யலாம்?
6 கிறிஸ்தவ போதகர் ஒருவர் பைபிள் படிப்புக்காக தயாரிக்க அவசியமில்லை என்பதை இது அர்த்தப்படுத்தாது. மாறாக, பைபிள் படிப்பின்போது, மேற்கோள் காட்டப்படாத பைபிள் வசனங்களில் எவற்றை அவரோ மாணாக்கரோ வாசிப்பது என்பதை அவர் முன்கூட்டியே கவனமாகத் தீர்மானிக்க வேண்டும். பொதுவாக, நம்முடைய நம்பிக்கைகளுக்கு அடிப்படையாய் அமைந்துள்ள வசனங்களை வாசிப்பது நல்லது. மேலும், அவர் வாசிக்கும் ஒவ்வொரு வசனத்தையும் புரிந்துகொள்ள அவருக்கு உதவுவதும் முக்கியம்.—1 கொ. 14:8, 9.
கேள்விகளைத் திறம்பட உபயோகியுங்கள்
7. கேள்விகளைப் பயன்படுத்துவது ஏன் திறம்பட்ட கற்பிக்கும் முறை எனலாம்?
7 படிப்பு நடத்துபவர் கேள்விகளைத் திறம்பட உபயோகிக்கும்போது, மாணாக்கர் யோசிக்க ஆரம்பிப்பார்; அதோடு, தகவலை அவருடைய இருதயத்தில் பதிய வைக்கவும் கேள்விகள் உதவும். எனவே, வேதவசனங்களை மாணாக்கருக்கு நீங்கள் விளக்குவதற்குப் பதிலாக, அவரிடமே விளக்கத்தைக் கேளுங்கள். சில சமயங்களில், கூடுதலான ஒரு கேள்வியையோ, ஒருசில கேள்விகளையோ பயன்படுத்த வேண்டியிருக்கலாம். இவை, விஷயத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள மாணாக்கருக்கு உதவும். இவ்வாறு, நீங்கள் கேள்விகளைப் பயன்படுத்தி கற்பிக்கும்போது, தான் படிக்கும் விஷயத்திற்கு அடிப்படையாய் அமைந்துள்ள காரணங்களை மாணாக்கர் புரிந்துகொள்வார்; அதுமட்டுமல்ல அவற்றை மனப்பூர்வமாக நம்பவும் செய்வார்.—மத். 17:24-26; லூக். 10:36, 37.
8. மாணாக்கரின் இருதயத்தில் இருப்பதை நாம் எவ்வாறு அறிந்து கொள்ளலாம்?
8 கேள்வி பதில் முறையில் படிப்பது நம்முடைய பிரசுரங்களில் பயன்படுத்தப்படும் முறையாகும். உங்களோடு படிக்கும் பெரும்பாலோர், கேள்விகளுக்கான பதிலை அதற்கான பாராவில் உள்ள தகவலைப் பயன்படுத்தி சட்டென சொல்லிவிடுவார்கள் என்பது உண்மைதான். அப்படிச் சரியான பதிலைச் சொன்னாலும்கூட, மாணாக்கரின் இருதயத்தைச் சென்றெட்ட விரும்புகிற ஒரு போதகர் அதில் திருப்தியடைந்துவிட மாட்டார். உதாரணமாக, வேசித்தனத்தைப்பற்றி பைபிள் என்ன சொல்கிறதென்பதை ஒரு மாணாக்கர் சரியாக விளக்கிவிடலாம். (1 கொ. 6:18) என்றாலும், விவேகத்துடன் கேட்கப்படும் நோக்குநிலை கேள்விகள், கற்ற விஷயத்தைப்பற்றி மாணாக்கர் உண்மையில் என்ன நினைக்கிறார் என்பதை வெளிக்கொண்டு வரும். எனவே, “தன்னுடைய மணத்துணை அல்லாமல் வேறொருவருடன் பாலுறவு கொள்வதை பைபிள் ஏன் கண்டனம் செய்கிறது? கடவுள் செய்திருக்கும் இந்தத் தடையைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கடவுளுடைய ஒழுக்க நெறிகளுக்கு இசைய வாழ்வதில் ஏதேனும் நன்மை இருக்கிறதென நினைக்கிறீர்களா?” போன்ற கேள்விகளை படிப்பு நடத்துபவர் கேட்கலாம். அப்போது மாணாக்கர் அளிக்கும் பதில் அவருடைய இருதயத்தில் உள்ளதை வெளிப்படுத்தும்.—மத்தேயு 16:13-17-ஐ வாசிக்கவும்.
எளிமையாக விளக்குங்கள்
9. பைபிளிலிருந்து தகவலை அளிக்கும்போது எதை மனதில் வைத்திருக்க வேண்டும்?
9 கடவுளுடைய வார்த்தையில் இருக்கும் பெரும்பாலான சத்தியங்கள் ஓரளவு எளிமையானவைதான். என்றபோதிலும், நம்முடைய பைபிள் மாணாக்கர்கள் ஒருவேளை பொய்மதக் கோட்பாடுகளால் குழம்பிப்போய் இருக்கலாம். பைபிளை எளிதாய் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுவதே போதகர்களான நம் கடமை. திறம்பட்ட போதகர்கள் எளிமையாகவும், தெளிவாகவும், திருத்தமாகவும் தகவலைத் தெரிவிக்கிறார்கள். இந்த முறையை நாம் பின்பற்றினால், புரிந்துகொள்ள முடியாதபடி சத்தியத்தைச் சிக்கலானதாக்க மாட்டோம். தேவையில்லாத தகவல்களைச் சொல்லாதீர்கள். நாம் வாசிக்கும் ஒரு வசனத்தின் ஒவ்வொரு பகுதியையும் விளக்க அவசியமில்லை. படித்துக்கொண்டிருக்கிற விஷயத்தைத் தெளிவுபடுத்துவதற்கு எது தேவையோ அதற்குக் கவனம் செலுத்தினாலே போதும். இப்படி ஒவ்வொரு விஷயமாகப் புரிந்துகொள்கையில், ஆழமான பைபிள் சத்தியங்களையும் மாணாக்கர் படிப்படியாகப் புரிந்துகொள்வார்.—எபி. 5:13, 14.
10. பைபிள் படிப்பில் எவ்வளவு தகவலைப் படிப்பது என்பதை என்னென்ன அம்சங்கள் தீர்மானிக்கின்றன?
10 ஒவ்வொரு படிப்பிலும் எவ்வளவு தகவலை படித்து முடிக்க வேண்டும்? இதைத் தீர்மானிக்க பகுத்துணர்வு தேவை. படிப்பு நடத்துபவர், மாணாக்கர் ஆகிய இருவரின் திறமையும் சூழ்நிலையும் வேறுபடுகின்றன; ஆனால், மாணாக்கர் உறுதியான விசுவாசத்தைப் பெற உதவுவதே போதகர்களாக நம்முடைய நோக்கம் என்பதை நாம் எப்பொழுதும் மனதில் வைத்திருக்க வேண்டும். எனவே, கடவுளுடைய வார்த்தையில் உள்ள சத்தியங்களை வாசித்து, புரிந்துகொண்டு, ஏற்றுக்கொள்ள நாம் போதுமான நேரத்தை மாணாக்கருக்குக் கொடுக்கிறோம். அவரால் கிரகித்துக்கொள்ள முடியாதளவுக்கு அதிகமான விஷயங்களைப் படிப்பதில்லை. அதே சமயத்தில், ஒவ்வொரு படிப்பிலும் போதுமானளவு தகவலைக் கலந்தாலோசிக்கிறோம். மாணாக்கர் ஒரு குறிப்பைப் புரிந்துகொண்டதும், அடுத்த குறிப்பை அவரோடு சிந்திக்க ஆரம்பிக்கிறோம்.—கொலோ. 2:6, 7.
11. கற்பிக்கும் விஷயத்தில் அப்போஸ்தலன் பவுலிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
11 புதியவர்களிடம் பிரசங்கிக்கையில், அப்போஸ்தலன் பவுல் நற்செய்தியை எளிமையாக விளக்கினார். அவர் உயர்கல்வி கற்றிருந்தபோதிலும், புரிந்துகொள்ள கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை. (1 கொரிந்தியர் 2:1, 2 வாசிக்கவும்.) பைபிள் சத்தியத்தின் எளிமை நல்மனமுள்ளவர்களைக் கவர்ந்திழுத்து, திருப்தி அளிக்கிறது. அதைப் புரிந்துகொள்ள ஒருவருக்கு உயர் கல்வி தேவையில்லை.—மத். 11:25; அப். 4:13; 1 கொ. 1:26, 27.
கற்றுக்கொள்பவற்றை மதிக்க மாணாக்கருக்கு உதவுங்கள்
12, 13. கற்றுக்கொள்வதற்கு இசைவாக நடக்க எது மாணாக்கரைத் தூண்டலாம்? உதாரணத்துடன் விளக்குக.
12 நாம் கற்பிக்கிற விஷயங்களிலிருந்து மாணாக்கர் பயன் அடைவதற்கு அது அவருடைய இருதயத்தைத் தொட வேண்டும். கற்ற தகவல் தனக்கு எப்படிப் பொருந்துகிறது, தனக்கு எப்படி உதவுகிறது, பைபிளின் புத்திமதியைப் பின்பற்றினால் தன் வாழ்க்கை எப்படி மேம்படும் என்பதையெல்லாம் மாணாக்கர் புரிந்துகொள்ள வேண்டும்.—ஏசா. 48:17, 18.
13 உதாரணத்திற்கு, எபிரெயர் 10:24, 25-ஐக் குறித்து நாம் மாணாக்கருக்கு விளக்கிக்கொண்டிருக்கலாம்; பைபிளில் இருந்து உற்சாகத்தைப் பெறுவதற்கும் அன்பான கூட்டுறவை அனுபவிப்பதற்கும் சகவிசுவாசிகளுடன் ஒன்றுகூடிவர வேண்டுமென அந்த வசனங்கள் கிறிஸ்தவர்களை ஊக்கப்படுத்துகின்றன. மாணாக்கர் இதுவரை சபைக் கூட்டங்களில் கலந்துகொள்ள ஆரம்பிக்காதிருந்தால், அவை எவ்வாறு நடத்தப்படுகின்றன, அங்கே என்னென்ன விஷயங்கள் கலந்தாலோசிக்கப்படுகின்றன என்பவற்றை சுருக்கமாக விளக்கலாம். சபைக் கூட்டங்கள் நம்முடைய வணக்கத்தின் பாகமாக இருப்பதையும் தனிப்பட்ட விதமாக நமக்கு நன்மை அளிப்பதையும் குறிப்பிடலாம். அதன் பிறகு, அவற்றில் கலந்துகொள்ள மாணாக்கரை அழைக்கலாம். யெகோவாவிற்குக் கீழ்ப்படிய வேண்டுமென்ற விருப்பத்தின் காரணமாக அவர் வேதப்பூர்வ கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வேண்டுமே தவிர, படிப்பு நடத்துபவரைப் பிரியப்படுத்துவதற்காக அல்ல.—கலா. 6:4, 5.
14, 15. (அ) பைபிள் மாணாக்கர் ஒருவர் யெகோவாவைப்பற்றி என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆ) கடவுளின் பண்புகளை அறிந்துகொள்வது பைபிள் மாணாக்கருக்கு எவ்வாறு உதவும்?
14 பைபிளைப் படிப்பதாலும் அதன் நியமங்களைக் கடைப்பிடிப்பதாலும் மாணாக்கர்கள் முக்கியமான ஒரு நன்மையைப் பெறுகிறார்கள். அதாவது, யெகோவா ஒரு நிஜமான நபர் என்பதை அறிந்து அவர்மீது அன்பு செலுத்த ஆரம்பிக்கிறார்கள். (ஏசா. 42:8) அவர் ஓர் அன்பான தகப்பனாக, படைப்பாளராக, இப்பிரபஞ்சத்தின் உரிமையாளராக இருக்கிறார்; அதோடு, அவரை நேசித்து, அவருக்குச் சேவை செய்கிறவர்களுக்கு தமது பண்புகளையும் வல்லமையையும்கூட வெளிப்படுத்துகிறார். (யாத்திராகமம் 34:6, 7-ஐ வாசிக்கவும்.) இஸ்ரவேலரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மோசே வெளியே கொண்டுவருவதற்கு சற்று முன்பு, “நான் என்னவாக ஆக வேண்டுமோ அவ்வாறாகவே ஆவேன்” என்று தம்மைக் குறித்துச் சொன்னார். (யாத். 3:13-15; NW) தாம் தேர்ந்தெடுத்த ஜனங்கள் சம்பந்தமாக தம் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு என்னவாக ஆக வேண்டியிருந்ததோ அவ்வாறே யெகோவா ஆவார் என்பதை இது சுட்டிக்காட்டியது. இதனால், யெகோவாவை மீட்பராகவும் யுத்த வீரராகவும் பராமரிப்பவராகவும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுகிறவராகவும் மற்ற வழிகளில் உதவுபவராகவும் இஸ்ரவேலர் அறிந்துகொண்டார்கள்.—யாத். 15:2, 3; 16:2-5; யோசு. 23:14.
15 மோசேயைப்போல, அற்புதகரமாக யெகோவாவின் உதவியையும் வழிநடத்துதலையும் மாணாக்கர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பெறாதிருக்கலாம். எனினும், மாணாக்கர்கள் தங்களுடைய விசுவாசத்தையும், கற்றுக்கொள்பவற்றின்மீது மரியாதையையும் வளர்த்துக்கொண்டு, வாழ்க்கையில் அவற்றைக் கடைப்பிடிக்க ஆரம்பிக்கும்போது, தைரியத்திற்காகவும், ஞானத்திற்காகவும், வழிநடத்துதலுக்காகவும் யெகோவாமீது நம்பிக்கை வைப்பதன் அவசியத்தைக் கண்டிப்பாகப் புரிந்துகொள்வார்கள். அப்போது, யெகோவா ஞானமான, நம்பகமான ஆலோசகர், பாதுகாவலர், அவர்களுடைய எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய தாராளமாய் வாரி வழங்கும் கொடையாளர் என்பதை அவர்களும் அறிந்துகொள்வார்கள்.—சங். 55:22; 63:7; நீதி. 3:5, 6.
அன்பான அக்கறை காட்டுங்கள்
16. நாம் திறம்பட்ட போதகர் ஆவதற்கு நம்முடைய இயல்பான திறமை முக்கிய காரணமல்லவென ஏன் சொல்லலாம்?
16 திறம்பட்ட போதகர் ஆவதற்கு நீங்கள் விரும்பலாம். ஆனால், உங்களுக்கு அந்தளவு திறமையில்லையென நினைத்தால் அதற்காக சோர்ந்து போகாதீர்கள். இன்று உலகெங்கும் நடைபெறும் கல்வி புகட்டும் திட்டத்தை யெகோவாவும் இயேசுவும் மேற்பார்வை செய்து வருகிறார்கள். (அப். 1:7, 8; வெளி. 14:6) நம்முடைய முயற்சிகளை அவர்கள் ஆசீர்வதிப்பார்கள். இதனால் நாம் சொல்லும் விஷயங்கள் நல்மனமுள்ளவர்களின் இருதயத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். (யோவா. 6:44) நன்றாக கற்பிக்கும் திறமை ஒருவருக்கு இயற்கையாகவே அமையாதிருக்கலாம்; ஆனால், தன்னுடைய மாணாக்கர்மீது அவர் வைத்திருக்கும் உண்மையான அன்பு, அந்தக் குறையை எல்லாம் ஈடுகட்டிவிடும். சத்தியத்தைக் கற்றுக்கொள்பவர்கள்மீது அன்பு காட்டுவதன் அவசியத்தைப் புரிந்திருந்ததை அப்போஸ்தலன் பவுல் செயலில் காட்டினார்.—1 தெசலோனிக்கேயர் 2:7, 8-ஐ வாசிக்கவும்.
17. ஒவ்வொரு பைபிள் மாணாக்கர்மீதும் உண்மையான அக்கறையை நாம் எப்படிக் காட்டலாம்?
17 அதேபோல, ஒவ்வொரு பைபிள் மாணாக்கரைப் பற்றியும் அறிந்துகொள்ள நேரம் செலவழிப்பதன்மூலம் அவர்மீது உண்மையான அக்கறை இருப்பதைக் காட்டலாம். பைபிள் நியமங்களை அவரோடு சேர்ந்து படிக்கையில் பெரும்பாலும் அவருடைய சூழ்நிலைமைகளைப்பற்றி அறிந்துகொள்வோம். பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட சில குறிப்புகளுக்கு அவர் கீழ்ப்படிய ஆரம்பித்திருப்பதை நாம் கவனிக்கலாம். இன்னும் சில விஷயங்களில் அவர் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம். பைபிள் படிப்பில் கற்றுக்கொள்கிற விஷயத்தை தன் வாழ்க்கையில் எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள மாணாக்கருக்கு நாம் உதவ வேண்டும். இதன்மூலம் கிறிஸ்துவுக்கு அவர் உண்மையான சீஷராக ஆவதற்கு நாம் அன்பாக உதவலாம்.
18. மாணாக்கரோடு சேர்ந்து அவருக்காக ஜெபம் செய்வது ஏன் முக்கியம்?
18 இவை எல்லாவற்றுக்கும் மேலாக, நம் மாணாக்கரோடு சேர்ந்து அவருக்காக ஜெபம் செய்யலாம். தன்னைப் படைத்தவரைப்பற்றி இன்னும் அதிகமாக அறிந்துகொள்ளவும், கடவுளிடம் நெருங்கி வரவும், அவருடைய வழிநடத்துதலிலிருந்து பயனடையவும் அவருக்கு நாம் உதவ விரும்புகிறோம் என்பதை மாணாக்கர் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். (சங்கீதம் 25:4, 5-ஐ வாசிக்கவும்.) கற்றுக்கொண்டவற்றைக் கடைப்பிடிக்க மாணாக்கர் எடுக்கும் முயற்சிகளை ஆசீர்வதிக்கும்படி யெகோவாவிடம் நாம் ஜெபம் செய்யும்போது, ‘திருவசனத்தின்படி செய்கிறவர்களாயும்’ இருப்பதன் முக்கியத்துவத்தை மாணாக்கர் அறிந்துகொள்வார். (யாக். 1:22) நம்முடைய இருதயப்பூர்வமான ஜெபத்தை மாணாக்கர் கவனிக்கும்போது, எப்படி ஜெபம் செய்ய வேண்டுமென்பதை அவரும் கற்றுக்கொள்வார். மாணாக்கர்கள் யெகோவாவோடு நல்ல பந்தத்தை வளர்த்துக்கொள்ள உதவுவது நமக்கு அதிக சந்தோஷத்தை அளிக்கும்.
19. அடுத்த கட்டுரையில் எதைக் கலந்தாலோசிப்போம்?
19 இயேசு கட்டளையிட்டவற்றைக் கடைப்பிடிக்க நல்மனமுள்ளோருக்கு உதவும் குறிக்கோளோடு உலகமெங்கும் 65 லட்சத்திற்கும் அதிகமான சாட்சிகள், ‘கற்பிக்கும் திறமையை’ வளர்த்துக்கொள்ள ஊக்கமாய் முயற்சி செய்து வருகிறார்கள். இதை அறிவது நம்மை உற்சாகப்படுத்துகிறது. நம்முடைய பிரசங்க வேலையால் என்ன பலன்கள் கிடைத்திருக்கின்றன? இதற்கான பதிலை அடுத்த கட்டுரையில் கலந்தாலோசிக்கலாம்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• கிறிஸ்தவர்கள் ஏன் ‘கற்பிக்கும் திறமையை’ வளர்த்துக்கொள்ள வேண்டும்?
• திறம்பட்ட விதத்தில் கற்பிக்க நாம் என்ன செய்யலாம்?
• கற்பிக்கும் திறமை நமக்கு இயல்பாகவே அமையாவிட்டாலும், எது அந்தக் குறையை ஈடுகட்டிவிடும்?
[பக்கம் 9-ன் படம்]
தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் நீங்கள் கலந்துகொள்கிறீர்களா?
[பக்கம் 10-ன் படம்]
மாணாக்கரை பைபிளிலிருந்து வாசிக்கச் சொல்வது ஏன் முக்கியம்
[பக்கம் 12-ன் படம்]
மாணாக்கரோடு சேர்ந்து அவருக்காக ஜெபம் செய்யுங்கள்