இயேசு கிறிஸ்துவே தலைசிறந்த மிஷனரி
‘நான் அவரால் வந்திருக்கிறேன், அவர் என்னை அனுப்பியிருக்கிறார்.’—யோவா. 7:29.
1, 2. மிஷனரி என்பது யாரைக் குறிக்கும், யாரைத் தலைசிறந்த மிஷனரி என அழைக்கலாம்?
“மிஷனரி” என்ற வார்த்தையைக் கேட்டதும் யார் உங்கள் மனதுக்கு வருகிறார்கள்? சிலர் கிறிஸ்தவமண்டல மிஷனரிகளைப்பற்றி யோசிக்கலாம். இவர்களில் அநேகர் தாங்கள் சேவை செய்கிற நாட்டின் அரசியல் அல்லது பொருளாதார விவகாரங்களில் தலையிடுகிறார்கள். ஆனால், ஒரு யெகோவாவின் சாட்சியான உங்களுக்கு, மிஷனரி என்றதும் ஆளும் குழு அனுப்பிவைக்கும் மிஷனரிகளே நினைவுக்கு வரலாம். இவர்கள் உலகமுழுவதிலுமுள்ள வெவ்வேறு நாடுகளில் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக அனுப்பிவைக்கப்படுகிறார்கள். (மத். 24:14) மக்கள், யெகோவா தேவனிடம் நெருங்கிவந்து அவருடன் விசேஷமான ஒரு பந்தத்தை அனுபவிப்பதற்கு இவர்கள் உதவுகிறார்கள். இந்த உயரிய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக தங்கள் நேரத்தையும் முயற்சியையும் சுயநலமின்றி செலவழிக்கிறார்கள்.—யாக். 4:8.
2 “மிஷனரி,” “மிஷனரிகள்” என்ற வார்த்தைகள் பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பின் வசனங்களில் எங்குமே காணப்படுவதில்லை. ஆனால், எபேசியர் 4:11-ல் (தமிழில், எபேசியர் 4:13) “சுவிசேஷகர்கள்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தையை “மிஷனரிகள்” என்றும் மொழிபெயர்க்கலாம் என துணைக்குறிப்புகளுடைய பைபிளில் அந்த வசனத்தின் அடிக்குறிப்பிலிருந்து தெரிகிறது. மிஷனரி என்ற வார்த்தைக்கு பிரசங்கிக்க அனுப்பப்படுகிறவர் என்று அர்த்தம். யெகோவாவை தலைசிறந்த சுவிசேஷகர் என அழைக்கலாம். ஆனால், அவரைத் தலைசிறந்த மிஷனரி என அழைக்க முடியாது. ஏனெனில், அவர் யாராலும் அனுப்பப்படவில்லை. தம் பரலோகத் தகப்பனைக் குறித்து சொல்லும்போதோ இயேசு இவ்வாறு கூறினார்: ‘நான் அவரால் வந்திருக்கிறேன், அவர் என்னை அனுப்பியிருக்கிறார்.’ (யோவா. 7:29) மனிதகுலத்தின் மீது தமக்குள்ள ஆழமான அன்பை வெளிப்படுத்த யெகோவா, தம் ஒரேபேறான குமாரனை இந்தப் பூமிக்கு அனுப்பிவைத்தார். (யோவா. 3:16) ‘சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுப்பதும்’ அவர் அனுப்பிவைக்கப்பட்டதற்கு ஒரு காரணம். இதனால், இயேசுவை தலைசிறந்த மிஷனரி அல்லது மகத்தான மிஷனரி என்று நாம் அழைக்க முடியும். (யோவா. 18:37) ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையை அவர் முழுமையாகச் செய்து முடித்தார். அவருடைய ஊழியம் இன்றும் நமக்கு பயனளிக்கிறது. உதாரணத்திற்கு, நாம் மிஷனரிகளாக நியமிக்கப்பட்டாலும் சரி, நியமிக்கப்படாவிட்டாலும் சரி, அவர் கற்பித்த முறைகளை நம்முடைய ஊழியத்தில் பின்பற்ற முடிகிறது.
3. என்ன கேள்விகளை நாம் இப்போது சிந்திக்கப் போகிறோம்?
3 இயேசு, ராஜ்ய பிரசங்கிப்பாளராக இருந்ததால் பின்வரும் கேள்விகள் எழும்புகின்றன: இயேசு பூமியில் ஊழியம் செய்தபோது எப்படிப்பட்ட சூழ்நிலைகளைச் சந்தித்தார்? அவருடைய போதனை ஏன் சக்திவாய்ந்ததாக இருந்தது? அவருடைய ஊழியம் வெற்றி பெற்றதற்கு காரணம் என்ன?
புதிய சூழலில் மனமுவந்து பிரசங்கித்தார்
4-6. பூமிக்கு அனுப்பப்பட்டபோது இயேசுவின் சூழலில் ஏற்பட்ட மாற்றங்களில் சில யாவை?
4 இன்று மிஷனரிகளும், ராஜ்ய பிரசங்கிப்பாளர்கள் அதிகம் தேவைப்படுகிற பிராந்தியங்களுக்கு குடிமாறிச் செல்கிற சில கிறிஸ்தவர்களும், வசதிகள் குறைவாக இருக்கும் சூழலில் வாழ நேரிடலாம். புதிய சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் இவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கலாம். என்றாலும், இயேசு பரலோகத்தில் இருந்த சூழ்நிலைக்கும் பூமியில் இருந்த சூழ்நிலைக்கும் உள்ள வித்தியாசத்தை நம்மால் கற்பனைகூட செய்துபார்க்க முடியாது. பரலோகத்தில், சுத்தமான உள்நோக்கத்துடன் யெகோவாவைச் சேவித்த தேவதூதர்கள் மத்தியில் இயேசு, தம் தந்தையுடன் வாழ்ந்தார். (யோபு 1:6; 2:1) ஆனால், அதற்கு நேர்மாறாக, கறைபட்ட உலகில் பாவமுள்ள மனிதர்கள் மத்தியில் வாழ்ந்தபோது அவருக்கு எப்படி இருந்திருக்கும்! (மாற். 7:20-23) அதுமட்டுமா, அவருடைய நெருங்கிய சீஷர்கள் போட்டிமனப்பான்மை உடையவர்களாக இருந்தார்கள், அதையும் அவர் சகிக்கவேண்டியிருந்தது. (லூக். 20:46; 22:24) பூமியில் தாம் எதிர்ப்பட்ட அனைத்தையுமே இயேசு வெற்றிகரமாகச் சமாளித்தார்.
5 இயேசு திடீரென்று அற்புதமாக மனிதர்கள் பேசும் பாஷையை பேசத் தொடங்கவில்லை; குழந்தை பருவத்திலிருந்தே அதைக் கற்று வந்தார். பரலோகத்தில் தேவதூதர்களுக்கு ஆணை பிறப்பித்த இயேசுவுக்கு இது எவ்வளவு பெரிய மாற்றம்! இயேசு பூமியிலிருந்தபோது ‘மனுஷர் பாஷைகளில்’ குறைந்தது ஒரு பாஷையையாவது பேசியிருப்பார். அது ‘தூதர் பாஷையிலிருந்து’ முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. (1 கொ. 13:1) என்றாலும், இயேசு பேசிய கிருபையுள்ள வார்த்தைகளைப் போல் வேறு எந்த மனிதனும் இதுவரை பேசியதில்லை.—லூக். 4:22.
6 கடவுளுடைய குமாரன் பூமிக்கு வந்தபோது வேறென்ன விதங்களில் அவருடைய சூழ்நிலை மாறியது என்பதைக் கவனிக்கலாம். அவர் ஆதாமிடமிருந்து பாவத்தை சுதந்தரிக்கவில்லை என்றாலும், அவரும் தம்முடைய வருங்கால ‘சகோதரர்களை’ போல் அதாவது, அபிஷேகம் செய்யப்பட்ட சீஷர்களாக ஆகவிருந்தவர்களைப் போல் ஒரு மனிதனாகவே பிறந்தார். (எபிரெயர் 2:17, 18-ஐ வாசிக்கவும்.) பூமிக்குரிய வாழ்க்கையின் கடைசி இரவன்று தமக்கு உதவுவதற்காக, “பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை” அனுப்புமாறு தம் பிதாவிடம் இயேசு கேட்கவில்லை. ஆனால், அதே இயேசு, மிகாவேல் என்ற பிரதான தூதனாக, எத்தனையோ தேவதூதர்களுக்கு கட்டளையிடும் ஸ்தானத்தில் இருந்ததைச் சற்று கற்பனை செய்துபாருங்கள்! (மத். 26:53; யூ. 9) இயேசு அற்புதங்களைச் செய்தது உண்மைதான்; என்றாலும், அவர் பரலோகத்தில் இருந்திருந்தால் அவரால் என்ன செய்திருக்க முடியுமோ அதைவிட குறைவாகவே பூமியில் இருந்தபோது அவரால் செய்ய முடிந்தது.
7. நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிப்பதில் யூதர்கள் எப்படி நடந்துகொண்டார்கள்?
7 இயேசு, மனிதனாக பூமிக்கு வருமுன் “வார்த்தை”யாக இருந்தார். இஸ்ரவேலர் வனாந்தரம் வழியாகப் பயணிக்கையில் கடவுள் சார்பாக அவர்களிடம் பேசி வழிநடத்தியது இயேசுவாகவே இருந்திருக்கலாம். (யோவா. 1:1; யாத். 23:20-23) இதுபோதாதென்று, இஸ்ரவேலர், ‘தேவதூதரைக்கொண்டு . . . நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கைக்கொள்ளாமற்போனார்கள்.’ (அப். 7:53; எபி. 2:2-4) பார்க்கப்போனால், முதல் நூற்றாண்டு யூத மதத் தலைவர்கள் நியாயப்பிரமாணத்தின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள தவறினார்கள். உதாரணத்திற்கு, ஓய்வுநாள் சட்டத்தை எடுத்துக்கொள்ளுங்கள். (மாற்கு 3:4-6-ஐ வாசிக்கவும்.) வேதபாரகரும் பரிசேயரும் ‘நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டார்கள்.’ (மத். 23:23) இருப்பினும், இயேசு அவர்களைத் திருத்தவே முடியாதென நினைத்து சத்தியத்தைக் குறித்து சாட்சிகொடுக்காமல் இருந்துவிடவில்லை.
8. இயேசு ஏன் நமக்கு உதவ முடியும்?
8 மக்கள்மீது இயேசு மிகுந்த அக்கறை காட்டினார். அவர்கள் மீதுள்ள அன்பின் காரணமாக மனதுருகியதோடு அவர்களுக்கு உதவ வேண்டுமென்றும் மனதார விரும்பினார். மக்களுக்குப் பிரசங்கிப்பதில் அவருடைய ஆர்வம் ஒருநாளும் குறையவே இல்லை. பூமியில் இருந்த காலமெல்லாம் யெகோவாவுக்கு உண்மையுள்ளவராய் இருந்தார். எனவே, ‘தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணரானார்.’ அதுமட்டுமல்ல, ‘அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, [நம்மைப் போல்] சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.’—எபி. 2:18; 5:8, 9.
போதகராக தேர்ச்சி பெற்றிருந்தார்
9, 10. பூமிக்கு அனுப்பப்படுவதற்கு முன் இயேசுவுக்கு எவ்விதமான பயிற்சி கிடைத்தது?
9 இன்று கிறிஸ்தவர்கள் மிஷனரிகளாக அனுப்பப்படுவதற்கு முன் அவர்களுக்குத் தேவையான பயிற்சியை அளிப்பதற்கு ஆளும் குழு ஏற்பாடு செய்திருக்கிறது. இயேசுவுக்கு அப்படி ஏதாவது பயிற்சி கிடைத்ததா? ஆம் கிடைத்தது. ஆனால், மேசியாவாக அபிஷேகம் செய்யப்படுவதற்கு முன் அக்காலத்து ரபீக்களின் பிரசித்தி பெற்ற பள்ளிகளுக்குச் சென்று அவர் அந்தப் பயிற்சியைப் பெறவில்லை; பிரபலமான மதத் தலைவர்களின் பாதத்தருகேயும் அவர் கல்வி கற்கவில்லை. (யோவா. 7:15; அப்போஸ்தலர் 22:3-ஐ ஒப்பிடவும்) அப்படியென்றால், இயேசு எப்படி அந்தளவு திறம்பட்ட போதகராக ஆனார்?
10 இயேசு தம்முடைய தாயாகிய மரியாளிடமும் வளர்ப்பு தந்தையாகிய யோசேப்பிடமும் எவ்வளவுதான் கற்றிருந்தாலும், ஊழியத்திற்குத் தேவையான முக்கியமான பயிற்சியை உன்னதமான போதகரிடமிருந்தே பெற்றார். இதைக் குறித்து இயேசு இவ்வாறு கூறினார்: “நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.” (யோவா. 12:49) என்ன கற்பிக்க வேண்டும் என்பதன் பேரில் மகனுக்குத் திட்டவட்டமான அறிவுரை கொடுக்கப்பட்டிருந்ததாக இந்த வசனம் சொல்வதைக் கவனியுங்கள். பூமிக்கு வருமுன், தம்முடைய தந்தையின் அறிவுரையைக் கேட்பதில் இயேசு நிறைய நேரம் செலவழித்திருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. அதைவிட சிறந்த பயிற்சி அவருக்குக் கிடைக்குமா, என்ன?
11. மனிதர்மீது தம் தந்தைக்கு இருந்த மனப்பான்மையை இயேசு எந்தளவு காண்பித்தார்?
11 இயேசு சிருஷ்டிக்கப்பட்டதிலிருந்து, தம் தந்தையுடன் நெருங்கிய பந்தத்தை அனுபவித்து வந்தார். மனிதனாக பூமிக்கு வருமுன், யெகோவா மனிதர்களை நடத்திய விதத்தைக் கவனித்தார். இதன்மூலம், மனிதர்களை கடவுள் எவ்வாறு கருதுகிறார் என்பதைப் புரிந்துகொண்டார். மனிதர்களை கடவுள் எந்தளவு நேசித்தாரோ அந்தளவு மகனும் நேசித்தார். அதனால்தான் ஞானம் என்று உருவகப்படுத்தப்பட்ட இயேசுவால், “மனிதர்மீது பிரியமாயிருந்தேன்” என்று சொல்ல முடிந்தது.—நீதி. 8:22, 31; NW.
12, 13. (அ) இஸ்ரவேலரை தம் தந்தை நடத்திய விதத்திலிருந்து இயேசு என்ன கற்றுக்கொண்டார்? (ஆ) தமக்கு கிடைத்த பயிற்சியை இயேசு எவ்வாறு பயன்படுத்தினார்?
12 இக்கட்டான சூழ்நிலைகளை தம் தந்தை எவ்வாறு கையாண்டார் என்பதை இயேசு கவனித்தார். இதுவும் அவருக்கு ஒரு பயிற்சியாக அமைந்தது. உதாரணத்திற்கு கீழ்ப்படியாமற்போன இஸ்ரவேலரை யெகோவா எவ்வாறு நடத்தினார் என்பதைக் கவனியுங்கள். அதைக் குறித்து நெகேமியா 9:28 இவ்வாறு சொல்கிறது: “அவர்களுக்கு இளைப்பாறுதல் உண்டானபோதோ, [யெகோவாவே] உமக்கு முன்பாக மறுபடியும் பொல்லாப்புச் செய்யத் தொடங்கினார்கள்; ஆகையால் அவர்கள் சத்துருக்கள் அவர்களை ஆளும்படிக்கு, அவர்கள் கையிலே ஒப்புவித்தீர்; அவர்கள் மனந்திரும்பி, உம்மை நோக்கிக் கூப்பிட்டபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, அவர்களை உம்முடைய இரக்கங்களின்படியே அநேகந்தரம் விடுதலையாக்கிவிட்டீர்.” யெகோவாவுடனே வேலை செய்து, அவர் செய்வதையெல்லாம் கவனித்ததால் அவர் காட்டிய அதே இரக்க குணத்தை இயேசுவும் தம்முடைய பிராந்தியத்தில் இருந்த மக்களிடம் காட்டினார்.—யோவா. 5:19.
13 இயேசு தம் சீஷர்களை இரக்கத்துடன் நடத்தியதன்மூலம் தமக்கு கிடைத்த பயிற்சியை வாழ்க்கையில் பயன்படுத்தினார். அவர் உயிருக்கு உயிராய் நேசித்த அப்போஸ்தலர், அவர் மரிப்பதற்கு முந்தைய இரவன்று “அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.” (மத். 26:56; யோவா. 13:1) இன்னும் சொல்லப்போனால், அப்போஸ்தலன் பேதுரு இயேசுவை மூன்று முறை மறுதலித்தார்! என்றபோதிலும், தம்முடைய அப்போஸ்தலர் தம்மிடம் திரும்பிவர இயேசு வாய்ப்பளித்தார். “நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக் கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து” என்று பேதுருவிடம் கூறினார். (லூக். 22:32) ‘அப்போஸ்தலரையும் தீர்க்கதரிசிகளையும்’ அஸ்திபாரமாக வைத்து ஆவிக்குரிய இஸ்ரவேலர் ஸ்திரமாகக் கட்டப்பட்டிருக்கிறார்கள். புதிய எருசலேம் மதிலின் அஸ்திபாரக் கற்கள்மீது ஆட்டுக்குட்டியானவரான இயேசு கிறிஸ்துவின் விசுவாசமுள்ள 12 அப்போஸ்தலரின் பெயர்களும் பதிந்துள்ளன. இன்றுவரையாக, அபிஷேகம் செய்யப்பட்டவர்கள், ஒப்புக்கொடுக்கப்பட்ட தங்களுடைய கூட்டாளிகளுடன் அதாவது, ‘வேறே ஆடுகளுடன்’ சேர்ந்து ராஜ்ய பிரசங்கிப்பு வேலையில் மும்முரமாய் ஈடுபடுகிறார்கள். கடவுளின் மகத்தான கரத்தின் கீழும் அவருடைய அருமை குமாரனுடைய வழிநடத்துதலின் கீழும் இந்த வேலை நடைபெற்று வருகிறது.—எபே. 2:20; யோவா. 10:16; வெளி. 21:14.
இயேசு எப்படிக் கற்பித்தார்
14, 15. இயேசு கற்பித்த முறை, வேதபாரகரும் பரிசேயரும் கற்பித்த முறையிலிருந்து எவ்விதங்களில் வேறுபட்டு இருந்தது?
14 இயேசு தமக்கு கிடைத்த பயிற்சியைப் பயன்படுத்தி, தம் சீஷர்களுக்கு எவ்வாறு கற்பித்தார்? இயேசு கற்பித்த முறையையும் யூதமதத் தலைவர்கள் கற்பித்த முறையையும் ஒப்பிட்டு பார்த்தால் இயேசு பயன்படுத்திய முறையே தலைசிறந்ததாக இருந்தது என்று நம்மால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. வேதபாரகரும் பரிசேயரும் ‘தங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கினார்கள்.’ அதற்கு நேர்மாறாக, இயேசுவோ தம் இஷ்டப்படி கற்பிக்காமல், கடவுளுடைய வார்த்தையில் இருப்பதையே எப்போதும் கற்பித்தார். (மத். 15:6; யோவா. 14:10) நாமும் அதைத்தான் செய்ய வேண்டும்.
15 இன்னொரு அம்சமும், இயேசுவை அந்த மதத் தலைவர்களிடமிருந்து முற்றிலுமாக வேறுபடுத்தி காட்டியது. வேதபாரகரையும் பரிசேயரையும் குறித்து இயேசு இவ்வாறு கூறினார்: “நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.” (மத். 23:3) இயேசு என்ன கற்பித்தாரோ அதையே கடைப்பிடித்தார். இதை நிரூபிக்கும் ஓர் உதாரணத்தை இப்போது கவனிக்கலாம்.
16. மத்தேயு 6:19-21-ல் உள்ள வார்த்தைகளின்படியே இயேசு வாழ்ந்தார் என்று நாம் ஏன் சொல்லலாம்?
16 “பரலோகத்திலே . . . பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்” என்று இயேசு தம் சீஷர்களை ஊக்குவித்தார். (மத்தேயு 6:19-21-ஐ வாசிக்கவும்.) ஆனால், இயேசு அந்த அறிவுரையின்படி வாழ்ந்தாரா? ஆம், அதனால்தான் தம்மைக் குறித்து அவரால் இவ்வாறு உண்மையாகச் சொல்ல முடிந்தது: “நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை.” (லூக். 9:58) இயேசு எளிமையாக வாழ்ந்தார். ராஜ்யத்தைக் குறித்த நற்செய்தியைப் பிரசங்கிப்பதே அவரது முக்கிய வேலையாய் இருந்தது. பூமியில் பொக்கிஷங்களைச் சேர்த்து வைப்பதனால் வரும் கவலைகளிலிருந்து எப்படி விடுபடுவது என்பதையும் தாம் வாழ்ந்த விதத்திலிருந்து காட்டினார். பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்த்து வைப்பது எவ்வளவு சிறந்தது என்பதை இயேசு பின்வருமாறு விளக்கினார்: “அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.” பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள் என்று இயேசு கூறிய அறிவுரையை நீங்கள் பின்பற்றுகிறீர்களா?
மக்களை இயேசுவிடம் கவர்ந்த குணங்கள்
17. என்ன குணங்கள் இயேசுவை சிறந்த சுவிசேஷகராக ஆக்கின?
17 இயேசுவின் என்ன குணங்கள் அவரை சிறந்த சுவிசேஷகராக ஆக்கின? ஒன்று, தாம் உதவிய மக்களை அவர் கருதிய விதம். யெகோவா காட்டுகிற மனத்தாழ்மை, அன்பு, இரக்கம் போன்ற அநேக அருமையான குணங்களை இயேசு பிரதிபலித்தார். இந்த மூன்று குணங்கள் மக்களை எப்படி அவரிடம் கவர்ந்தன என்பதைக் கவனியுங்கள்.
18. இயேசு மனத்தாழ்மையுள்ளவராக நடந்துகொண்டார் என்று ஏன் சொல்லலாம்?
18 பூமிக்கு வரவேண்டிய நியமிப்பை ஏற்றுக்கொண்ட இயேசு, “தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.” (பிலி. 2:7) இந்தச் செயல் அவருடைய மனத்தாழ்மையைக் காட்டுகிறது. மேலுமாக, இயேசு மற்றவர்களை தாழ்வாகக் கருதவில்லை. ‘உங்களுக்காக நான் பரலோகத்திலிருந்து வந்திருக்கிறேன், அதனால் நீங்கள் என் பேச்சைக் கேட்க வேண்டும்’ என்று அவர் நினைக்கவில்லை. தங்களைத் தாங்களே மேசியாக்கள் என்று பொய்யாகச் சொல்லிக்கொண்டவர்களைப் போல் இயேசு, ‘நான்தான் உண்மையான மேசியா’ என்று சொல்லி தம்பட்டமடிக்கவில்லை. சில சமயங்களில் தாம் யார் என்றோ தாம் என்ன செய்தார் என்றோ மற்றவர்களிடம் சொல்ல வேண்டாமென மக்களிடம் சொல்லியிருக்கிறார். (மத். 12:15-21) மக்கள் தம்மைப் பின்பற்றுவதா வேண்டாமா என்பதை தாங்கள் பார்த்தவற்றை வைத்து அவர்களாகவே தீர்மானிக்க வேண்டுமென்று இயேசு விரும்பினார். பரலோகத்தில் தம்முடன் இருந்த பரிபூரண தேவதூதர்களைப் போல் தம் சீஷர்களும் இருக்க வேண்டும் என்று இயேசு எதிர்பார்க்கவில்லை. இது அவருடைய சீஷர்களுக்கு எவ்வளவு தெம்பளித்திருக்கும்!
19, 20. மக்களுக்கு உதவி செய்ய அன்பும் இரக்கமும் இயேசுவை எவ்வாறு தூண்டின?
19 இயேசு அன்பாகவும் நடந்துகொண்டார். இந்தக் குணம் அவருடைய பரலோகத் தகப்பனின் பிரதான குணங்களில் ஒன்று. (1 யோ. 4:8) அன்பினால் தூண்டப்பட்டு மக்களுக்கு அவர் போதித்தார். உதாரணத்திற்கு, ஓர் இளம் அதிபதியைக் குறித்து இயேசு எவ்வாறு உணர்ந்தார் என்பதைக் கவனியுங்கள். (மாற்கு 10:17-22-ஐ வாசிக்கவும்.) இயேசு “அவனிடத்தில் அன்புகூர்ந்து” அவனுக்கு உதவ விரும்பினார். ஆனால், அந்த இளம் அதிபதியோ இயேசுவின் சீஷனாவதற்குத் தன்னிடம் இருந்த ஏராளமான பொருளுடைமைகளை விட்டுவிட மனமில்லாமல் இருந்தான்.
20 இயேசுவின் அருமையான குணங்களில் மற்றொன்று, இரக்கம். அவருடைய போதனைகளுக்குச் செவிசாய்த்தவர்கள் மற்ற எல்லா அபூரண மனிதர்களையும் போலவே பிரச்சினைகளில் சிக்கித் தவித்தார்கள். இதை உணர்ந்த இயேசு, இரக்கத்துடனும் பரிவுடனும் அவர்களுக்குப் போதித்தார். இதைச் சித்தரிக்கும் ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள்: இயேசுவும் அவருடைய சீஷர்களும் சாப்பிடக்கூட நேரமில்லாதளவுக்கு வேலையாக இருந்தார்கள். என்றாலும், அந்தச் சமயத்தில் ஒரு பெரிய கூட்டம் கூடியிருந்ததைப் பார்த்த இயேசு என்ன செய்தார்? ‘அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலிருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார்.’ (மாற். 6:34) தம் பிராந்தியத்தில் இருந்த மக்களின் பரிதாபமான நிலையைப் பார்த்து அவர்களுக்கு போதிக்கவும் அற்புதங்கள் செய்யவும் தம் சக்தியை செலவழித்தார். சிலர் அவருடைய அருமையான குணங்களால் கவரப்பட்டு, அவருடைய வார்த்தைகளால் தூண்டப்பட்டு அவருடைய சீஷராக ஆனார்கள்.
21. அடுத்த கட்டுரையில் எதைக் குறித்து சிந்திப்போம்?
21 இயேசுவின் பூமிக்குரிய ஊழியத்திலிருந்து கற்றுக்கொள்ள இன்னும் நிறைய விஷயங்கள் இருப்பதை அடுத்த கட்டுரையில் சிந்திப்போம். தலைசிறந்த மிஷனரியான இயேசு கிறிஸ்துவை இன்னும் என்னென்ன வழிகளில் நாம் பின்பற்றலாம்?
நீங்கள் எப்படிப் பதிலளிப்பீர்கள்?
• பூமிக்கு வருமுன் இயேசு எவ்விதமான பயிற்சியைப் பெற்றார்?
• வேதபாரகர், பரிசேயர் ஆகியோருடன் ஒப்பிட இயேசு கற்பித்த விதம் எப்படிச் சிறந்து விளங்கியது?
• இயேசுவின் என்ன குணங்கள் மக்களைக் கவர்ந்தன?
[பக்கம் 15-ன் படம்]
திரளான மக்களுக்கு இயேசு எப்படிக் கற்பித்தார்?