உங்கள் மணவாழ்வில் மகிழ்ச்சி காணுங்கள்
“வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும்.”—நீதி. 24:3.
1. முதல் மனிதனுடைய விஷயத்தில் கடவுள் எவ்வாறு ஞானமாகச் செயல்பட்டார்?
நமக்கு எது நல்லதென்று ஞானமுள்ள நம் பரலோக தகப்பனுக்குத் தெரியும். உதாரணமாக, ஏதேன் தோட்டத்தில் “மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல” என்பதை அவர் உணர்ந்திருந்தார். மனிதருக்கான அவருடைய நோக்கம் நிறைவேற வேண்டுமென்றால், அவர்கள் பிள்ளைகளைப் பிறப்பிக்க வேண்டியிருந்தது. ஆம், மணமானவர்கள் பிள்ளைகளைப் பிறப்பித்து ‘பூமியை நிரப்புவது’ அவருடைய நோக்கத்தின் முக்கியமான ஓர் அம்சமாக இருந்தது.—ஆதி. 1:28; 2:18.
2. மனிதகுலத்தின் நன்மைக்காக யெகோவா என்ன ஏற்பாட்டைச் செய்தார்?
2 “ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்” என்று யெகோவா சொன்னார். பின்னர் முதல் மனிதனான ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணி, அவனுடைய பரிபூரணமான உடலிலிருந்த விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அதை மனுஷியாக உருவாக்கினார். இந்தப் பரிபூரண பெண்ணாகிய ஏவாளை அவர் ஆதாமிடம் கொண்டுவந்தபோது, “இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள்” என்று ஆதாம் சொன்னான். ஏவாள், உண்மையிலேயே ஆதாமுக்கு ஏற்ற ஒரு துணையாக இருந்தாள். அவர்கள் இருவருமே அவரவருக்கு உரிய தனிப் பண்புகளையும், குணங்களையும் வெளிக்காட்டினபோதிலும் அவர்கள் இருவருமே பரிபூரணமானவர்கள், கடவுளுடைய சாயலில் உண்டாக்கப்பட்டவர்கள். இப்படியாக யெகோவா முதல் திருமணத்தை நடத்தி வைத்தார். ஒருவருக்கொருவர் உதவியாகவும் ஆதரவாகவும் இருப்பதற்காக கடவுள் செய்த இந்த ஏற்பாட்டை ஏற்றுக்கொள்வதில், ஆதாம் ஏவாளுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை.—ஆதி. 1:27; 2:21-23.
3. திருமணம் என்ற பரிசை அநேகர் எப்படிக் கருதுகிறார்கள், இதனால் என்ன கேள்விகள் எழும்புகின்றன?
3 வருத்தகரமாக, இன்று உலகெங்கும் கலகத்தனமான மனநிலை பரவியிருக்கிறது. அதனால் விளையும் பிரச்சினைகளுக்கு கடவுள் காரணம் இல்லை. திருமணம் என்பது கடவுள் கொடுத்த பரிசு. அந்தப் பரிசை அநேகர் இன்று அவமதிக்கிறார்கள். அது பழம்பாணியானது என்றும் விரக்திக்கும் சண்டைக்கும் அதுவே காரணி என்றும் கருதுகிறார்கள். திருமணம் செய்துகொள்ளும் அநேகர் மத்தியில், விவாகரத்து சர்வசாதாரணமாகிவிட்டது. அதோடு, பிள்ளைகளுக்கும் பெற்றோரிடமிருந்து இயல்பான பாசம் கிடைக்காமல் போகலாம். பெற்றோர் தங்கள் விருப்பங்களைச் சாதிப்பதற்கு பிள்ளைகளைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தலாம். அநேக பெற்றோர், குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் நிலவ வேண்டும் என்பதற்காகக்கூட விட்டுக்கொடுத்துப்போவதில்லை. (2 தீ. 3:3) அப்படியானால் இந்தக் கொடிய காலங்களில், மணவாழ்வில் மகிழ்ச்சி காண்பது எப்படி? யெகோவாவின் வழிநடத்துதலுக்கு இசைவாக வளைந்துகொடுப்பது, மணவாழ்க்கை எவ்விதத்திலும் முறிந்துபோகாமல் இருப்பதற்கு எப்படி உதவி செய்யும்? நவீன காலத்தில், மணவாழ்வில் மகிழ்ச்சியைத் தக்கவைத்திருப்பவர்களின் உதாரணங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
யெகோவாவின் வழிநடத்துதலுக்கு முழுமையாகக் கீழ்ப்பட்டிருத்தல்
4. (அ) திருமணத்தைப்பற்றி பவுல் என்ன அறிவுரையை அளித்தார்? (ஆ) கீழ்ப்படிதலுள்ள கிறிஸ்தவர்கள் பவுலின் அறிவுரையை எவ்வாறு பின்பற்றுகிறார்கள்?
4 விதவைகள் மறுமணம் செய்துகொள்ள விரும்பினால், “கர்த்தருக்குட்பட்ட” ஒருவரையே அவர்கள் மணம் செய்ய வேண்டுமென்று கடவுளுடைய பரிசுத்த ஆவியின் உதவியோடு கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுல் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். (1 கொ. 7:39) யூத பின்னணியிலிருந்து வந்த கிறிஸ்தவர்களுக்கு இது ஒன்றும் புதிய கருத்து அல்ல. சுற்றிலுமிருந்த புறமத ஜனங்களுடன் திருமண ‘சம்பந்தம் கலவாதிருக்கும்படி’ இஸ்ரவேலருக்கு கடவுளுடைய நியாயப்பிரமாண சட்டத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது. இந்தக் கட்டளையை அசட்டை செய்வதனால் வரும் ஆபத்தைக் குறித்தும் யெகோவா அதில் விவரமாகச் சொல்லியிருந்தார். “என்னைப் பின்பற்றாமல், அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்கள் [இஸ்ரவேலர் அல்லாதவர்கள்] உன் குமாரரை விலகப்பண்ணுவார்கள்; அப்பொழுது கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் மூண்டு, உங்களைச் சீக்கிரத்தில் அழிக்கும்.” (உபா. 7:3, 4) மணத்துணையைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் தமது நவீன நாளைய ஊழியர்களிடமிருந்து யெகோவா எதை எதிர்பார்க்கிறார்? கடவுளுடைய ஊழியராக இருப்பவர், “கர்த்தருக்குட்பட்ட” ஒருவரை, அதாவது ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்ற சக வணக்கத்தாராய் இருக்கும் ஒருவரை தன் துணையாகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த விஷயத்தில் யெகோவாவின் வழிநடத்துதலுக்கு இசைவாக வளைந்துகொடுப்பதே ஞானமானது.
5. திருமண உறுதிமொழிகளை யெகோவாவும் மணமான கிறிஸ்தவர்களும் எவ்வாறு கருதுகிறார்கள்?
5 கடவுளுடைய பார்வையில் திருமண உறுதிமொழிகள் புனிதமானவை. முதல் திருமணத்தைக் குறித்து கடவுளுடைய சொந்த குமாரனாகிய இயேசு இவ்வாறு சொன்னார்: “தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்.” (மத். 19:6) கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது எவ்வளவு முக்கியம் என்பதை சங்கீதக்காரர் நினைப்பூட்டுகிறார்: “ஸ்தோத்திர பலிகளை தேவனுக்குக் கொண்டுவந்து அவரோடு இருக்கும்படி வாருங்கள். நீங்கள் மிக உன்னதமான தேவனுக்கு வாக்குறுதி பண்ணினீர்கள். எனவே வாக்களித்த பொருள்களை அவருக்குக் கொடுங்கள்.” (சங். 50:14, ஈஸி டு ரீட் வர்ஷன்) மணமான தம்பதிக்கு நிறைய சந்தோஷங்கள் காத்திருக்கலாம்; என்றாலும், மணநாளில் அவர்கள் பரிமாறிக்கொண்ட உறுதிமொழிகள் முக்கியமானவை, அவற்றோடு சேர்ந்துவரும் பொறுப்பை அவர்கள் அசட்டை செய்துவிட முடியாது.—உபா. 23:21.
6. யெப்தாவின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
6 பொ.ச.மு. 12-ஆம் நூற்றாண்டில், இஸ்ரவேலில் நியாயாதிபதியாக இருந்த யெப்தாவின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் யெகோவாவிடம் இந்தப் பொருத்தனையைப் பண்ணினார்: “தேவரீர் அம்மோன் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுக்கவே ஒப்புக்கொடுத்தால், நான் அம்மோன் புத்திரரிடத்திலிருந்து சமாதானத்தோடே திரும்பிவரும்போது, என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது கர்த்தருக்கு உரியதாகும். அதைச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்துவேன்.” போரில் வெற்றிபெற்று மிஸ்பாவில் இருந்த தன் வீட்டுக்கு அவர் திரும்புகையில், அவரைச் சந்திக்க வந்தது வேறு யாருமல்ல, அவருடைய ஒரே மகள். உடனே தான் செய்த பொருத்தனையை மாற்ற நினைத்தாரா? இல்லவே இல்லை. “நான் கர்த்தரை நோக்கி என் வாயைத் திறந்து சொல்லிவிட்டேன்; அதை நான் மாற்றக்கூடாது” என்று சொன்னார். (நியா. 11:30, 31, 35) யெகோவாவுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றினார் யெப்தா. தன் பெயரைத் தாங்குவதற்குச் சந்ததி இல்லாமல் போகும் என்றபோதிலும் அதை அவர் பொருட்படுத்தவில்லை. யெப்தா கொடுத்த வாக்கு, திருமண உறுதிமொழிகளிலிருந்து வித்தியாசமானதுதான். ஆனாலும், கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில் கிறிஸ்தவ கணவர்களுக்கும் மனைவிகளுக்கும் அவர் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார்.
மணவாழ்வை வெற்றிகரமாக்கும் விஷயங்கள் . . .
7. புதுமணத் தம்பதிகள் என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும்?
7 மணமான தம்பதிகள் பலர், தாங்கள் காதலித்த நாட்களை ஆசை ஆசையாக நினைத்துப் பார்க்கிறார்கள். தங்களுடைய வருங்கால துணைவரைக் குறித்து அதிகதிகமாகத் தெரிந்துகொள்வது எவ்வளவு இன்பமான அனுபவமாக இருந்தது! அவர்கள் எந்தளவுக்கு சேர்ந்து நேரம் செலவிட்டார்களோ அந்தளவுக்கு நெருக்கமாக ஒருவரையொருவர் புரிந்துகொண்டார்கள். ஆனால், காதல் திருமணமாக இருந்தாலும் சரி மற்றவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, கணவன் மனைவி என்று ஆனதும் அவர்கள் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. ஒரு கணவரின் அனுபவத்தை கவனியுங்கள். “கல்யாணமான புதிதில் எங்களுக்கு இருந்த ஒரு பெரிய சவால் என்னவென்றால் நாங்கள் இனியும் தனி நபர்கள் அல்ல, இப்போது வாழ்க்கையில் இன்னொரு நபருக்கும் இடம்கொடுக்க வேண்டும் என்பதை மனதில் வைப்பதுதான். ஆரம்பத்தில், நண்பர்களுக்கும் உறவினர்களுக்குமே நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தோம்” என்று அந்தக் கணவர் ஒத்துக்கொள்கிறார். திருமணமாகி 30 வருடங்களான ஒரு கணவர், எதிலும் “இருவரைப்பற்றி சிந்தித்தால்” மட்டுமே சமநிலையுடன் இருக்க முடியும் என்பதை மணமான புதிதிலேயே புரிந்துகொண்டார். ஏதாவது ஓர் அழைப்பை ஏற்றுக்கொள்வதற்குமுன் அல்லது ஒன்றைச் செய்வதற்கு ஒத்துக்கொள்வதற்குமுன் தன் மனைவியுடன் கலந்துபேசிவிட்டு, இருவருடைய விருப்பங்களையும் கருதிய பிறகே அவர் தீர்மானம் செய்கிறார். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில், வளைந்துகொடுக்கும் தன்மை உதவியாக இருக்கும்.—நீதி. 13:10.
8, 9. (அ) நல்ல பேச்சுத்தொடர்பு இருப்பது ஏன் முக்கியம்? (ஆ) வளைந்துகொடுப்பது எந்தெந்த அம்சங்களில் உதவியாக இருக்கும், ஏன்?
8 சிலசமயங்களில் வெவ்வேறு கலாச்சார பின்னணிகளைச் சேர்ந்த இருவர் திருமண பந்தத்தில் இணைகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் மனந்திறந்து பேசுவது மிகவும் அவசியம். இருவரும் வெவ்வேறு ரீதியில் தங்கள் கருத்துக்களைப் பரிமாறலாம். உங்கள் துணைவர் தன் உறவினர்களிடம் பேசும் விதத்தைக் கவனிப்பது அவரை நன்கு புரிந்துகொள்ள உங்களுக்கு உதவி செய்யும். சில நேரங்களில், ஒருவர் என்ன சொல்கிறார் என்பதைவிட அதை எப்படிச் சொல்கிறார் என்பதே அவருக்குள் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும். ஒருவர் சொல்லாமல் விட்டவற்றிலிருந்தும் அதிகத்தைத் தெரிந்துகொள்ளலாம். (நீதி. 16:24; கொலோ. 4:6) மகிழ்ச்சி காண்பதற்கு விவேகம் அத்தியாவசியமானது.—நீதிமொழிகள் 24:3-ஐ வாசியுங்கள்.
9 விரும்பி செய்யும் வேலைகளையும் பொழுதுபோக்குகளையும் தேர்ந்தெடுக்கையில் வளைந்துகொடுப்பது அவசியம் என்பதை அநேகர் அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள். திருமணத்திற்கு முன்பு உங்கள் துணைவர், விளையாட்டிலோ மற்ற பொழுதுபோக்கு விஷயங்களிலோ அதிக நேரத்தைச் செலவிட்டிருக்கலாம். ஆனால், இப்போது இதில் சில மாற்றங்களைச் செய்வது தகுந்ததாய் இருக்குமல்லவா? (1 தீ. 4:8) உறவினரோடு செலவிடும் நேரத்தைக் குறித்தும் இதே கேள்வியைக் கேட்டுக்கொள்ளலாம். மணமான தம்பதியினர் ஆன்மீகக் காரியங்களையும் மற்ற காரியங்களையும் சேர்ந்து செய்ய, அவர்களுக்கு நேரம் தேவை என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.—மத். 6:33.
10. பெற்றோருக்கும் திருமணமான அவர்களுடைய பிள்ளைகளுக்கும் இடையே நல்லுறவைக் காத்துக்கொள்ள வளைந்துகொடுத்தல் எவ்வாறு உதவும்?
10 ஓர் ஆணுக்கு திருமணமாகும்போது, அவர் தன் தகப்பனையும் தாயையும் விட்டுச் செல்கிறார். ஒரு பெண்ணைக் குறித்தும் இதுவே உண்மையாக இருக்கிறது. (ஆதியாகமம் 2:24-ஐ வாசியுங்கள்.) என்றாலும், தகப்பனையும் தாயையும் கனம்பண்ண வேண்டும் என்று கடவுள் கொடுத்த கட்டளைக்கு எப்போதுமே கீழ்ப்படிவது அவசியமாக இருக்கிறது. எனவே, திருமணமான பிறகும் அந்தத் தம்பதியினர், தங்கள் பெற்றோரோடும் தங்கள் துணைவரின் உறவினரோடும் செலவிட சற்று நேரத்தை ஒதுக்குவது நியாயம்தான். திருமணமாகி 25 வருடங்கள் சென்ற ஒரு கணவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “சில சமயங்களில், ஒருவர் தன் துணைவரின் விருப்பங்களையும் தேவைகளையும் திருப்தி செய்வதோடுகூட தன் பெற்றோர், உடன்பிறந்தோர், தன் துணையின் உறவினர் ஆகியோரின் விருப்பங்களையும் தேவைகளையும் திருப்தி செய்வது கடினமாகவே இருக்கிறது. இந்த நிலைமையைச் சமாளிக்க ஆதியாகமம் 2:24 எனக்கு உதவியாக இருந்திருக்கிறது. குடும்பத்திலுள்ள எல்லாரிடமும் உண்மையுடனும் பொறுப்புடனும் நடந்துகொள்வது முக்கியம்தான். ஆனால், என் மனைவியிடம் உண்மையுடன் நடந்துகொள்வதே அதைவிட முக்கியம் என்பதை இந்த வசனம் எனக்கு உணர்த்தியது.” இதற்கிசைவாக வளைந்துகொடுக்க விருப்பமுள்ள கிறிஸ்தவ பெற்றோர், திருமணமான தங்களுடைய பிள்ளைகள் இப்போது ஒரு தனி குடும்பமாக இருப்பதால் அந்தக் குடும்பத்தைத் தலைமை தாங்கி வழிநடத்தும் பொறுப்பு அந்தக் கணவருக்குரியது என்பதை உணர்ந்து நடப்பார்கள்.
11, 12. திருமணமான தம்பதிகள் குடும்ப படிப்பை வைத்திருப்பதும் ஜெபம் செய்வதும் ஏன் முக்கியம்?
11 குடும்ப படிப்பைத் தவறாமல் செய்து வருவது அவசியம். அநேக கிறிஸ்தவ குடும்பங்களின் அனுபவம் இந்த உண்மையை ஊர்ஜிதப்படுத்துகிறது. அப்படி ஒரு படிப்பைத் தொடங்குவதோ, தொடங்கிய பிறகு அதை விடாமல் தொடர்வதோ அவ்வளவு சுலபமாக இருக்காது. ஒரு குடும்பத் தலைவன் இவ்வாறு ஒத்துக்கொள்கிறார்: “கடந்த காலத்திற்குச் சென்று அதில் ஏதாவது மாற்றங்களைச் செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் செய்ய விரும்பும் ஒரு காரியம், கல்யாணமான தொடக்கத்திலிருந்தே குடும்ப படிப்பை தவறாமல் வைத்திருப்பதுதான்.” அவர் மேலும் சொல்கிறார்: “நாங்கள் இருவரும் சேர்ந்து படிக்கையில், பைபிளிலிருந்து ஆர்வமூட்டும் ஏதாவது ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ளும்போது என் மனைவியின் முகத்தில் பொங்கிவரும் சந்தோஷம் என்னை பூரித்துப்போக வைக்கிறது.”
12 மணவாழ்வை வெற்றிகரமாக்க இன்னொரு வழி, இருவரும் சேர்ந்து ஜெபம் செய்வதாகும். (ரோ. 12:12) கணவனும் மனைவியும் ஒற்றுமையாக யெகோவாவை வணங்கும்போது கடவுளுடன் அவர்களுக்கு இருக்கும் நெருங்கிய உறவு, திருமண வாழ்வில் அவர்கள் ஏற்கெனவே அனுபவித்து வரும் பந்தத்தை மேன்மேலும் பலப்படுத்தும். (யாக். 4:8) கிறிஸ்தவ கணவர் ஒருவர் இவ்வாறு விளக்குகிறார்: “தவறு செய்யும்போது உடனுக்குடன் மன்னிப்பு கேட்டுவிட்டு, சேர்ந்து ஜெபம் செய்யும்போது அந்தத் தவறுகளைப்பற்றி அதில் குறிப்பிடலாம். மனஸ்தாபத்திற்கு காரணமாக இருந்த ஒரு சிறிய விஷயத்திற்காகக்கூட உண்மையிலேயே மனம் வருந்துவதைக் காட்டுவதற்கு இது ஒரு வழியாக இருக்கிறது.”—எபே. 6:18.
மணவாழ்வில் வளைந்துகொடுங்கள்
13. திருமண பந்தத்திலுள்ள மிக நெருக்கமான உறவைக் குறித்து பவுல் என்ன ஆலோசனை வழங்கினார்?
13 காமவெறி பிடித்த இன்றைய உலகில், திருமண உறவுகளை மலிவானதாக்கும் தரக்குறைவான பழக்கங்களை மணமான கிறிஸ்தவர்கள் தவிர்க்க வேண்டும். இந்த விஷயத்தில் பவுல் கூறிய ஆலோசனையைக் கவனிப்போம்: “புருஷன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்; அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள். மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.” இதைத் தொடர்ந்து பவுல் தெளிவான இந்த அறிவுரையைக் கொடுத்தார்: “ஒருவருக்கொருவர் செலுத்த வேண்டிய கடனைச் செலுத்தாமல் இருந்துவிடாதீர்கள். இருவரும் ஒத்துக்கொண்டால், . . . குறிப்பிட்ட காலத்திற்கு இணையாதிருக்கலாம்.” எதற்காக? ‘ஜெபத்திற்கு நேரம் ஒதுக்குவதற்காக.’ “ஆனால், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத சமயங்களில் சாத்தான் உங்களைச் சோதிக்காதபடி மீண்டும் இணைந்துவிடுங்கள்.” (1 கொ. 7:3-5; NW) ஜெபத்தைப்பற்றி கூறுகையில், கிறிஸ்தவர்கள் ஆன்மீகக் காரியங்களுக்கு முதலிடத்தைக் கொடுக்க வேண்டுமென்பதை பவுல் குறிப்பிடுகிறார். ஆனால் அதே சமயம், மணமான ஒவ்வொரு கிறிஸ்தவரும் தன் துணைவரின் சரீர மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தேவைகளையும் உணர்ந்திருக்க வேண்டும் என்பதையும் அவர் தெளிவாகச் சொன்னார்.
14. திருமணத்தின் மிக நெருக்கமான உறவில் பைபிள் நியமங்கள் எவ்வாறு பொருந்துகின்றன?
14 கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஒளிவுமறைவின்றி பேச வேண்டும். அவர்களுக்கே உரிய மிக நெருக்கமான இந்த உறவில், ஒருவரோடு ஒருவர் கனிவற்ற விதத்தில் நடந்துகொள்வது பிரச்சினைகளுக்கு வழிநடத்தலாம் என்பதை அவர்கள் உணர வேண்டும். (பிலிப்பியர் 2:3, 4-ஐ வாசியுங்கள்; மத்தேயு 7:12-ஐ ஒப்பிடுங்கள்.) வெவ்வேறு மத நம்பிக்கைகளை உடைய தம்பதிகளின் விஷயத்தில் இப்படி நடந்திருக்கிறது. வேறுபாடுகளின் மத்தியிலும் ஒரு கிறிஸ்தவரின் நல்நடத்தையும் தயவும் ஒத்துழைப்பும் பொதுவாக நிலைமையை மேம்படுத்தலாம். (1 பேதுரு 3:1, 2-ஐ வாசியுங்கள்.) யெகோவாவையும் தன் துணைவரையும் நேசிப்பதோடு வளைந்துகொடுக்கும் தன்மையையும் காட்டினால், திருமணத்தின் இந்த அம்சத்தில் முன்னேற்றம் காண்போம்.
15. மகிழ்ச்சியான மணவாழ்வில் மரியாதை என்ன பங்கு வகிக்கிறது?
15 தயவுள்ள கணவர், மற்ற விஷயங்களிலும் தன் மனைவியை மரியாதையுடன் நடத்துவார். உதாரணத்திற்கு, சிறு சிறு விஷயங்களிலும் அவளுடைய உணர்ச்சிகளைக் கவனத்தில் எடுத்துக்கொள்வார். திருமணமாகி 47 வருடங்களை கழித்த கணவர் ஒருவர் இவ்வாறு சொல்கிறார்: “இந்த விஷயத்தைப் பொறுத்தவரை நான் இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்.” கிறிஸ்தவ மனைவிகள் தங்கள் கணவன்மாரிடம் ஆழ்ந்த மரியாதை வைத்திருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். (எபே. 5:33) மற்றவர்கள் முன்னிலையில் தன் கணவருடைய குறைகளை எடுத்துச் சொல்லி அவரைக் குறித்து தவறாகப் பேசுவது, அவருக்கு மரியாதையைக் காட்டுவதாக இருக்காது. நீதிமொழிகள் 14:1 பின்வருமாறு நினைப்பூட்டுகிறது: “புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.”
பிசாசுக்கு வளைந்துகொடுக்காதீர்கள்
16. எபேசியர் 4:26, 27-ல் உள்ள அறிவுரையை தம்பதிகள் எப்படித் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்கலாம்?
16 “நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.” (எபே. 4:26, 27) மணவாழ்வில் சச்சரவுகளைத் தீர்ப்பதற்கு அல்லது தவிர்ப்பதற்கு மேற்சொன்ன அறிவுரையைக் கடைப்பிடிப்பது உதவியாக இருக்கும். “ஏதாவது ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அதைக் குறித்து என் கணவரிடம் பேசித் தீர்க்காமல் இருந்ததாக எனக்கு நினைவே இல்லை; அதற்காக மணிக்கணக்கில் பேச வேண்டியிருந்தாலும் பேசித் தீர்ப்போம்” என்று ஒரு சகோதரி நினைவுகூருகிறார். தங்கள் கருத்து வேறுபாடுகளைப் பேசித் தீர்க்காமல் ஒரு நாள் கடந்துசெல்வதற்கு விட்டுவிடக் கூடாது என்பதாக அவரும் அவருடைய கணவரும் கல்யாணமான புதிதில் தீர்மானித்திருந்தார்கள். “பிரச்சினை எதுவாக இருந்தாலும் சரி, மன்னித்து மறந்து ஒவ்வொரு நாளையும் புதிதாகத் தொடங்க வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்தோம்” என்கிறார் அவர். இப்படிச் செய்வதன்மூலம் அவர்கள் ‘பிசாசுக்கு இடங்கொடுக்கவில்லை.’
17. மணவாழ்வில் இணைந்திருக்கும் இருவர் பொருத்தமற்றவர்கள்போல் தோன்றினாலும் எது உதவக்கூடும்?
17 ஆனால், உங்களுக்குப் பொருத்தமற்றவரோடு மணவாழ்வில் இணைந்திருப்பதாக நீங்கள் நினைத்தால் என்ன செய்யலாம்? மற்றவர்களுடைய வாழ்க்கைபோல் இனிதாக அமையாத ஓர் உறவில் நீங்கள் சிக்கிக்கொண்டிருப்பதாகத் தோன்றலாம். அப்படி இருந்தாலும், திருமண பந்தத்தைப்பற்றி படைப்பாளருடைய கருத்தை மனதில் வைத்திருப்பது உங்களுக்கு உதவும். கடவுளுடைய ஆவியினால் தூண்டப்பட்டு, பவுல் இவ்வாறு கிறிஸ்தவர்களுக்கு ஆலோசனை அளிக்கிறார்: “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.” (எபி. 13:4) அதோடு, பின்வரும் இந்த வார்த்தைகளையும் நாம் மறந்துவிடக்கூடாது: “முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது.” (பிர. 4:12) யெகோவாவின் பெயரைப் பரிசுத்தப்படுத்துவதில் கணவன் மனைவியாகிய இருவருமே கண்ணும் கருத்துமாக இருந்தால், அவர்களுடைய பந்தமும் உறுதியாக இருக்கும், கடவுளோடு அவர்களுக்கு உள்ள பந்தமும் உறுதியாக இருக்கும். தங்கள் மணவாழ்வை வெற்றிகரமாக அமைத்துக்கொள்வதற்காக அவர்கள் உழைக்க வேண்டும். திருமணத்தை ஆரம்பித்து வைத்த யெகோவாவுக்கு அது நற்பெயரைக் கொண்டுவரும் என்பதை மனதில் வைத்து அவ்வாறு செய்ய வேண்டும்.—1 பே. 3:11.
18. மணவாழ்வில் நீங்கள் எதைக் குறித்து நிச்சயமாக இருக்கலாம்?
18 கிறிஸ்தவர்கள் நிச்சயம் மணவாழ்வில் மகிழ்ச்சி காண முடியும். ஆனால், அதற்கு முயற்சி தேவை. அதோடு, கிறிஸ்தவ பண்புகளையும் வெளிக்காட்ட வேண்டும். அப்படிப்பட்ட பண்புகளில் ஒன்றுதான், வளைந்துகொடுத்தல். இன்று, உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில், எண்ணற்ற தம்பதிகள் மணவாழ்வில் மகிழ்ச்சி காண்பது சாத்தியம் என்பதற்குச் சான்றளிக்கின்றனர்.
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
• மணவாழ்வில் மகிழ்ச்சி காண்பது ஏன் சாத்தியம்?
• மணவாழ்வை வெற்றிகரமானதாக்க உதவும் விஷயங்கள் யாவை?
• மணத்துணைகள் என்ன பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்?
[பக்கம் 9-ன் படம்]
ஏதாவது ஓர் அழைப்பை ஏற்றுக்கொள்வதற்குமுன் அல்லது ஒன்றைச் செய்வதற்கு ஒத்துக்கொள்வதற்குமுன் மணமான தம்பதிகள் கலந்து பேசுவது ஞானமானது
[பக்கம் 10-ன் படம்]
‘பிசாசுக்கு இடங்கொடுக்காமல்’ அன்றைய பிரச்சினைகளை அன்றே பேசித் தீர்க்க முயலுங்கள்