கடவுளிடம் நெருங்கி வாருங்கள்
அவர் மன்னிக்க மனமுள்ளவர்
“யெகோவாவே, நீங்கள் நல்லவர், மன்னிக்க மனமுள்ளவர்.” (சங்கீதம் 86:5, NW) இதைக் கேட்கும்போது மனதுக்கு எவ்வளவு இதமாய் இருக்கிறது! யெகோவா தேவன் தாராளமாக மன்னிப்பவர் என்று பைபிள் நமக்கு நம்பிக்கை அளிக்கிறது. இயேசுவின் சீடனான பேதுருவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்திலிருந்து யெகோவா “தாராளமாய்” மன்னிப்பவர் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.—ஏசாயா 55:7, NW.
இயேசுவின் நெருங்கிய நண்பர்களில் பேதுருவும் ஒருவர். இருந்தாலும், பூமியில் இயேசுவின் கடைசி நாளன்று பேதுரு மனிதருக்கு பயந்து ஒரு பெரிய பாவத்தை செய்தார். இயேசுவை சட்டவிரோதமாக விசாரணை செய்துகொண்டிருந்த இடத்தில், அவர் எல்லாருக்கு முன்பாகவும் இயேசுவை தனக்கு தெரியவே தெரியாது என்று சொல்லிவிட்டார்; அதுவும், ஒருமுறை அல்ல மூன்றுமுறை அப்படிச் சொன்னார். பேதுரு மூன்றாவது முறை அவருக்கு இயேசுவை தெரியாது என்று அடித்துக் கூறியபோது இயேசு “திரும்பி, பேதுருவை . . . பார்த்தார்.” (லூக்கா 22:55–61) இயேசு அவரைப் பார்த்தபோது பேதுரு எப்படி உணர்ந்திருப்பார் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? தான் ஒரு பெரிய பாவத்தைச் செய்துவிட்டதை உணர்ந்து பேதுரு மனம் நொந்து ‘மிகவும் அழுதார்.” (மாற்கு 14:72) இயேசுவை, தனக்கு தெரியாது என்று மூன்றுமுறை மறுத்துவிட்டதால் கடவுள் தன்னை மன்னிக்கவே மாட்டார் என்று பேதுரு நினைத்திருக்கலாம்.
இயேசு இறந்து மீண்டும் உயிரோடு வந்தபோது பேதுருவிடம் பேசினார். இதிலிருந்து இயேசு தன்னை மன்னித்துவிட்டார் என்று பேதுருவுக்குப் புரிந்திருக்கும். இயேசு அவரை திட்டவோ கண்டிக்கவோ இல்லை. அதற்குப் பதிலாக “நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா” என்று கேட்டார். அதற்கு பேதுரு “ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்” என்றார். அதற்கு இயேசு “என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக” என்றார். இயேசு மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டார், பேதுருவும் அதற்கு அதே பதிலை அளித்தார், இந்த முறை இன்னும் உறுதியாக. அதற்கு “என் ஆடுகளை மேய்ப்பாயாக” என்று இயேசு சொன்னார். “நீ என்னை நேசிக்கிறாயா” என்று மூன்றாவது முறையும் கேட்டார். இந்த முறை “பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர்” என்றார். அப்போது இயேசு: “என் ஆடுகளை மேய்ப்பாயாக” என்றார்.—யோவான் 21:15–17.
தமக்கு பதில் தெரிந்திருந்தும் இயேசு ஏன் அந்த கேள்விகளைக் கேட்டார்? மனிதரின் மனதில் இருப்பது இயேசுவுக்கு நன்கு தெரியும் என்பதால் பேதுரு தம்மை நேசிப்பதையும் அவர் அறிந்திருந்தார். (மாற்கு 2:8) என்றாலும், அவர் அப்படி கேட்டதிலிருந்து பேதுருவுக்கு தம்மீது அன்பிருப்பதை மூன்றுமுறை உறுதிசெய்ய வாய்ப்பு அளித்தார். “என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக . . . என் ஆடுகளை மேய்ப்பாயாக . . . என் ஆடுகளை மேய்ப்பாயாக” என்று இயேசு மூன்றுமுறை சொன்னதிலிருந்து மனந்திருந்திய தம்முடைய சீடன்மீது தமக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது என்பதைத் தெரியப்படுத்தினார். இயேசு தம்முடைய மிக அருமையான சொத்தை பாதுகாக்கும் பொறுப்பை பேதுருவுக்கு தந்தார். அதாவது செம்மறியாடு போன்ற தம்முடைய சீஷர்களைக் கவனிக்கும் பொறுப்பை அவருக்கு தந்தார். (யோவான் 10:14, 15) இயேசு தன்மீது இன்னும் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதை பேதுரு அறிந்தபோது அவருக்கு எவ்வளவு ஆறுதலாக இருந்திருக்கும்!
உண்மையில், மனம் திரும்பிய தம்முடைய சீடனான பேதுருவை இயேசு மன்னித்துவிட்டார். இயேசு தம்முடைய தந்தையின் குணங்களை அப்படியே படம்பிடித்து காட்டினார், அவரைப் போலவே நடந்துகொண்டார். எனவே, யெகோவாவும் பேதுருவை நிச்சயம் மன்னித்திருப்பார். (யோவான் 5:19) யெகோவா ஒருபோதும் மன்னிக்க தயங்குவதில்லை. இரக்கமுள்ள கடவுளாகிய யெகோவா, மனந்திருந்திய பாவியை ‘மன்னிக்க எப்போதும் மனமுள்ளவராய்’ இருக்கிறார். இதைக் கேட்க மனதிற்கு எவ்வளவு இதமாய் இருக்கிறது! (w08 6/1)