வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
“இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள்” என்பதாக அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். (ரோ. 11:26) அப்படியானால், ஏதோ ஒரு காலக்கட்டத்தில் யூதர்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாக மாறிவிடுவார்கள் என்று அவர் அர்த்தப்படுத்தினாரா?
இல்லை, பவுல் அவ்வாறு அர்த்தப்படுத்தவில்லை. ஒரு தேசமாக, ஆபிரகாமின் சந்ததியில் வந்தவர்கள் இயேசுவை மேசியாவாக ஏற்க மறுத்தனர். மேலும், யூதர்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாக மாற மாட்டார்கள் என்பது இயேசு இறந்த சில வருடங்களிலேயே தெளிவாகத் தெரிந்தது. இருந்தாலும், ‘இஸ்ரவேலர் எல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள்’ என்று பவுல் கூறியது உண்மைதான். எந்த அர்த்தத்தில்?
தம் காலத்தில் வாழ்ந்த யூத மதத் தலைவர்களிடம் இயேசு சொன்னதாவது: “தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.” (மத். 21:43) ஒரு தேசமாக, இஸ்ரவேல் மக்கள் இயேசுவை ஏற்க மறுத்தனர்; ஆகவே, அடையாளப்பூர்வ இஸ்ரவேலிடம், அதாவது கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்பட்ட ஒரு ஜனத்திடம் யெகோவா கவனத்தைத் திருப்பினார். இவர்களை, ‘தேவனுடைய இஸ்ரவேலர்’ என்று பவுல் அழைத்தார்.—கலா. 6:16.
கடவுளுடைய சக்தியால் நியமிக்கப்பட்ட 1,44,000 கிறிஸ்தவர்கள் அடங்கிய ஒரு தொகுதியே ‘தேவனுடைய இஸ்ரவேலர்’ என்பதாக கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்திலுள்ள மற்ற வசனங்கள் காண்பிக்கின்றன. (ரோ. 8:15-17; வெளி. 7:4) இந்தத் தொகுதியில் யூதர் அல்லாதவர்களும் இருப்பார்கள் என்பதை வெளிப்படுத்துதல் 5:9, 10-லிருந்து உறுதியாக தெரிந்துகொள்கிறோம். அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், ‘சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து [அதாவது, தேசங்களிலுமிருந்து]’ வருவதாக அந்தப் பதிவு சொல்கிறது. தேவனுடைய இஸ்ரவேலின் அங்கத்தினர்கள் ‘ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும்’ இருப்பதற்காக விசேஷமாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ‘அவர்கள் பூமியிலே அரசாளுவார்கள்.’ விசேஷ ஜனமாக இருந்த இஸ்ரவேலர்களை யெகோவா ஒதுக்கித் தள்ளிவிட்டாலும் அத்தேசத்தைச் சேர்ந்த தனி நபர்கள் கடவுளோடு நல்ல உறவைக் காத்துக்கொள்ள முடியும். அப்போஸ்தலர் மற்றும் ஆரம்பகால கிறிஸ்தவர்கள் பலருடைய விஷயத்தில் இதுவே உண்மையாக இருந்தது. இந்த யூதர்களும் மற்ற மனிதரைப் போலவே இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்கப்பட வேண்டியிருந்தது.—1 தீ. 2:5, 6; எபி. 2:9; 1 பே. 1:17-19.
முதல் நூற்றாண்டிலிருந்த யூதர்களில் பெரும்பாலோர் இயேசுவோடு அரசாளும் வாய்ப்பை இழந்துவிட்டார்கள். என்றாலும், கடவுள் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இது எந்தவிதத்திலும் தடையாக இருக்கவில்லை. ஏனென்றால், அவருடைய நோக்கத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அவரே இதை தமது தீர்க்கதரிசியின் மூலம் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: “அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.”—ஏசா. 55:11.
பரலோகத்தில் தமது குமாரனோடுகூட அரசாளுவதற்கு 1,44,000 பேரை தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற கடவுளுடைய நோக்கமும் நிச்சயம் நிறைவேறும். 1,44,000 பேரையுமே கடவுள் அபிஷேகம் செய்வாரென பைபிள் தெளிவாகக் காண்பிக்கிறது. இந்த எண்ணிக்கையில் ஒன்றுகூட குறையாது!—வெளி. 14:1-5.
எனவே, “இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள்” என அப்போஸ்தலன் பவுல் எழுதியபோது யூதர்கள் அனைவருமே கிறிஸ்தவர்களாய் மாறிவிடுவார்கள் என்ற கருத்தை முன்னறிவிக்கவில்லை. மாறாக, பரலோகத்தில் தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுடன் ஆட்சி செய்வதற்கு 1,44,000 அடையாளப்பூர்வ இஸ்ரவேலரை கடவுள் தேர்ந்தெடுப்பார் என்பதையே குறிப்பிட்டார். கடவுளுடைய உரிய காலத்தில், ‘இஸ்ரவேலரெல்லாரும்’ அதாவது 1,44,000 பேருமே இரட்சிக்கப்பட்டிருப்பார்கள். பின்னர் அவர்கள் மேசியானிய ராஜ்யத்தில் அரசர்களாகவும் ஆசாரியர்களாகவும் இருப்பார்கள்.—எபே. 2:8.
[பக்கம் 28-ன் படங்கள்]
அபிஷேகம் செய்யப்பட்டவர்கள், ‘சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் தேசங்களிலுமிருந்து’ வருகிறார்கள்