விலகியோட வேண்டிய காரியங்கள்
“விரியன் பாம்புக் குட்டிகளே! கடவுளுடைய கடுங்கோபத்தின் நாளில் தப்பியோட முடியுமென உங்களுக்குச் சொன்னவன் யார்?”—மத். 3:7, NW.
1. தப்பியோடுவதைக் குறித்து பைபிளிலுள்ள சில உதாரணங்கள் யாவை?
‘தப்பியோடு’ என்ற வார்த்தையைக் கேட்டால் எது உங்கள் நினைவுக்கு வருகிறது? வாட்டசாட்டமான இளம் யோசேப்பை போத்திபாரின் மனைவி தகாத ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தியபோது, அவர் அங்கிருந்து ஓடிப்போன காட்சி சிலருடைய மனக்கண்ணில் தெரியலாம். (ஆதி. 39:7-12) இயேசுவின் எச்சரிப்புக்குக் கீழ்ப்படிந்து பொ.ச. 66-ல் எருசலேமிலிருந்து தப்பியோடிய கிறிஸ்தவர்களைப்பற்றி சிலர் யோசிக்கலாம். அவர்களிடம் இயேசு இவ்வாறு எச்சரித்திருந்தார்: ‘எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது . . . யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும் கடவர்கள்.’—லூக். 21:20, 21.
2, 3. (அ)யோவான்ஸ்நானன் மதத்தலைவர்களிடம் சொன்ன எச்சரிப்பின் உண்மையான அர்த்தம் என்ன? (ஆ) யோவானின் எச்சரிப்பை இயேசு எவ்வாறு உறுதிப்படுத்தினார்?
2 இந்த உதாரணங்கள் நிஜமாகவே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஓடிப்போவதைக் குறிக்கின்றன. இன்றோ, கிட்டத்தட்ட உலகின் எல்லா பகுதிகளிலும் வாழ்கிற உண்மைக் கிறிஸ்தவர்கள் அடையாள அர்த்தத்தில் தப்பியோட வேண்டியிருக்கிறது. இதை சாவகாசமாக அல்ல, ஆனால் அவசரமாக செய்யவேண்டியிருக்கிறது. ‘தப்பியோடு’ என்ற வார்த்தையை இந்த அர்த்தத்தில்தான் யோவான்ஸ்நானன் பயன்படுத்தினார். அவர் ஞானஸ்நானம் கொடுத்த இடத்திற்கு வந்தவர்களில் யூத மதத்தலைவர்களும் இருந்தார்கள்; இவர்கள் தங்களை நீதிமான்களாகக் கருதினார்கள்; மனந்திரும்ப வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என நினைத்தார்கள். அதோடு, பாமர மக்கள் தங்களுடைய மனந்திரும்புதலை வெளிக்காட்டும் விதமாக ஞானஸ்நானம் எடுத்தபோது அவர்களை இழிவாகப் பார்த்தார்கள். இந்த மதத்தலைவர்களின் மாய்மாலத்தை யோவான் தைரியமாக அம்பலப்படுத்தினார். “விரியன் பாம்புக் குட்டிகளே! கடவுளுடைய கடுங்கோபத்தின் நாளில் தப்பியோட முடியுமென உங்களுக்குச் சொன்னவன் யார்? மனந்திரும்புதலுக்கு ஏற்ற செயல்களைச் செய்யுங்கள்” என்று அவர்களிடம் சொன்னார்.—மத். 3:7, 8, NW.
3 ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு ஓடிப்போவதைப்பற்றி யோவான் இங்கு பேசவில்லை. மாறாக, வரவிருக்கும் நியாயத்தீர்ப்பைப்பற்றி, கடவுளுடைய கடுங்கோபத்தின் நாளைப்பற்றி அவர் எச்சரித்தார். அந்நாளை தப்பித்துக்கொள்ள வேண்டுமானால், அந்த மதத்தலைவர்கள் மனந்திரும்புதலுக்கு ஏற்ற செயல்களைச் செய்வது அவசியமென அவர் சுட்டிக்காட்டினார். அவர்களை இயேசுவும்கூட தைரியமாகக் கண்டனம் செய்தார்; அவர்களுக்குள் புகைந்துகொண்டிருந்த கொலைவெறி அவர்களது உண்மையான தகப்பன் பிசாசு என்பதைக் காட்டியது. (யோவா. 8:44) யோவானின் எச்சரிப்பை உறுதிப்படுத்தும் விதமாக இயேசுவும் அவர்களை “விரியன் பாம்புக் குட்டிகளே” என அழைத்து, “கெஹென்னாவின் நியாயத்தீர்ப்பிலிருந்து நீங்கள் எப்படி தப்பியோட முடியும்?” என்று கேட்டார். (மத். 23:33, NW) “கெஹென்னா” என்று இயேசு குறிப்பிட்டதன் அர்த்தம் என்ன?
4. “கெஹென்னா” என்று இயேசு சொன்னதன் அர்த்தமென்ன?
4 கெஹென்னா என்பது எருசலேமின் மதிற்சுவர்களுக்கு வெளியே இருந்த ஒரு பள்ளத்தாக்கு. அங்கே குப்பைகளும் மிருகங்களின் பிணங்களும் எரிக்கப்பட்டன. நிரந்தர அழிவைக் குறிக்கவே கெஹென்னா என்ற வார்த்தையை இயேசு பயன்படுத்தினார். (பக்கம் 27-ஐ பாருங்கள்.) கெஹென்னாவின் நியாயத்தீர்ப்பிலிருந்து எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள் என்று இயேசு அந்த மதத்தலைவர்களைப் பார்த்துக் கேட்டது, ஒரு தொகுதியாக அவர்கள் நிரந்தர அழிவுக்குத் தகுதியானவர்கள் என்பதைக் காட்டியது.—மத். 5:22, 29.
5. யோவானும் இயேசுவும் கொடுத்த எச்சரிப்புகள் எவ்வாறு நிறைவேறின?
5 இயேசுவையும் அவருடைய சீஷர்களையும் துன்புறுத்துவதன்மூலம் யூத மதத்தலைவர்கள் பாவத்திற்குமேல் பாவம் செய்தார்கள். யோவானும் இயேசுவும் எச்சரித்திருந்ததுபோல், கடவுளுடைய ‘கடுங்கோபத்தின் நாள்’ வந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில், குறிப்பிட்ட ஒரு பகுதியில் வாழ்ந்தவர்கள்மீது மட்டும்தான் அது வந்தது; அதாவது எருசலேமிலும் யூதேயாவிலும் இருந்தவர்கள்மீது மட்டும்தான் வந்தது. எனவே, அப்பகுதியிலிருந்து நிஜமாகவே ஓடிப்போவது சாத்தியமாக இருந்திருக்கலாம். அந்த கடுங்கோபம் பொ.ச. 70-ல் ரோம சேனைகள் எருசலேமையும் அதன் ஆலயத்தையும் அழித்தபோது வெளிப்பட்டது. எருசலேமில் குடியிருந்த மக்கள் அப்படிப்பட்ட ஓர் ‘உபத்திரவத்தை’ அதுவரை சந்தித்ததேயில்லை. பலர் கொல்லப்பட்டார்கள் அல்லது சிறைபிடிக்கப்பட்டார்கள். இதேபோன்ற ஒரு அழிவு கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொள்கிற பலர் மீதும் மற்ற மதத்தினர் மீதும் வரவிருக்கிறது. ஆனால், அது எருசலேமின்மீது வந்த அழிவைவிட மிக பயங்கரமானதாக இருக்கப்போகிறது.—மத். 24:21.
நாம் தப்பியோட வேண்டிய கடுங்கோபத்தின் நாள்
6. பூர்வகால கிறிஸ்தவ சபையில் எது தலைதூக்க ஆரம்பித்தது?
6 பூர்வகால கிறிஸ்தவர்கள் சிலர், விசுவாச துரோகிகளாக மாறியதோடு மற்றவர்களையும் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டார்கள். (அப். 20:29, 30) இயேசுவின் அப்போஸ்தலர்கள் உயிரோடு இருந்தவரை இத்தகைய விசுவாச துரோகம் தலைதூக்காதபடி அதற்குத் ‘தடையாக’ இருந்தார்கள்; ஆனால், அவர்கள் இறந்தபிறகு, பொய் கிறிஸ்தவ பிரிவுகள் பல முளைக்க ஆரம்பித்தன. இன்றோ, கிறிஸ்தவம் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான மதங்கள் தழைத்தோங்குகின்றன. அவற்றின் போதனைகளும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. கிறிஸ்தவமண்டல குருவர்க்கம் தோன்றுவதைக் குறித்து பைபிள் முன்னறிவித்தது; ஒரு தொகுதியாக அவர்களை “பாவமனுஷன், [“அக்கிரமக்காரன்,” NW]” என்றும் ‘கேட்டின்மகன்’ என்றும் அது அழைக்கிறது. அதோடு, அவர்களை கர்த்தராகிய இயேசு “அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார்” என்றும் தெரிவிக்கிறது.—2 தெ. 2:3, 6-8.
7. “அக்கிரமக்காரன்” என்ற வார்த்தை கிறிஸ்தவமண்டல குருமாருக்கு ஏன் பொருத்தமாக இருக்கிறது?
7 பைபிளுக்கு முரணான போதனைகளையும் பண்டிகைகளையும் நடத்தையையும் ஆதரிப்பதன் மூலம் கிறிஸ்தவமண்டல குருமார் லட்சக்கணக்கான மக்களை மோசம் போக்கியிருக்கிறார்கள். எனவே, அவர்கள் அக்கிரமக்காரராக இருக்கிறார்கள். இயேசு கண்டனம் செய்த மதத் தலைவர்களைப்போலவே ‘கேட்டின்மகனாக’ இருக்கிற இந்த நவீன நாளைய குருமாரும் அழிவையே சந்திப்பார்கள்; அவர்களுக்கு உயிர்த்தெழுதல் நம்பிக்கை கிடையாது. (2 தெ. 1:6-10) அப்படியென்றால் கிறிஸ்தவமண்டல குருமாராலும் மற்ற மதங்களின் குருக்களாலும் தவறாக வழிநடத்தப்படுகிற மக்களின் கதி என்ன? இதற்கு பதிலைத் தெரிந்துகொள்ள, பொ.ச.மு. 607-ல் எருசலேம் அழிக்கப்பட்ட பிறகு நடந்த சம்பவங்களை நாம் சிந்திப்போம்.
‘பாபிலோனின் நடுவிலிருந்து ஓடுங்கள்’
8, 9. (அ) பாபிலோனில் கைதிகளாக இருந்த யூதர்களுக்கு எரேமியா என்ன தீர்க்கதரிசன செய்தியை அறிவித்தார்? (ஆ) மேதியரும் பெர்சியரும் பாபிலோனைக் கைப்பற்றிய பிறகு அங்கிருந்த யூதர்களால் எந்த விதத்தில் ஓடிப்போக முடிந்தது?
8 எருசலேமின் அழிவைக் குறித்து எரேமியா தீர்க்கதரிசி முன்னறிவித்தார்; அது பொ.ச.மு. 607-ல் நிறைவேறியது. கடவுளுடைய மக்கள் கைதிகளாகக் கொண்டு செல்லப்படுவார்கள் என்றும் ‘எழுபது வருஷங்களுக்கு’ பிறகு தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பி வருவார்கள் என்றும் அவர் சொன்னார். (எரே. 29:4, 10) பாபிலோனில் கைதிகளாக இருந்த யூதர்களுக்கு எரேமியா ஒரு முக்கியச் செய்தியை அறிவித்தார். பாபிலோனியர்களின் பொய் மதத்தால் அவர்கள் கறைபடாமல் இருக்கவேண்டும் என்பதே அச்செய்தி. இவ்வாறு செய்தால், கடவுள் குறித்திருந்த காலத்தில் எருசலேமுக்குத் திரும்பிச் செல்வதற்கும் மெய் வணக்கத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் அவர்களால் தயாராக இருக்க முடியும். அதற்கான சமயம், பொ.ச.மு. 539-ல் மேதியரும் பெர்சியரும் பாபிலோனைக் கைப்பற்றிய பிறகு விரைவில் வந்தது. அப்போது, எருசலேமுக்குத் திரும்பிச் சென்று யெகோவாவின் ஆலயத்தைக் கட்டும்படி பெர்சிய அரசனாகிய இரண்டாம் கோரேசு ஆணையிட்டார்.—எஸ்றா 1:1-4.
9 அச்சமயத்தில் ஆயிரக்கணக்கான யூதர்கள் தாய்நாட்டுக்குத் திரும்பினார்கள். (எஸ்றா 2:64-67) இவ்வாறு எரேமியா தீர்க்கதரிசியின் வாயிலாக கடவுள் கொடுத்திருந்த கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார்கள். அந்த இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்வதன்மூலம் ஒரு விதத்தில் அவர்கள் ஓடிப்போனார்கள். (எரேமியா 51:6, 45, 50-ஐ வாசியுங்கள்.) ஆனால், எருசலேமுக்கும் யூதாவுக்குமான நீண்ட பயணத்தைச் செய்யும் சூழ்நிலையில் எல்லா யூதர்களும் இருக்கவில்லை. வயதான தீர்க்கதரிசியான தானியேலைப் போன்றவர்கள் பாபிலோனிலேயே தங்கிவிட்டார்கள். என்றாலும், எருசலேமிலிருந்த மெய் வணக்கத்தை முழுமனதோடு ஆதரித்து, பாபிலோனிலிருந்த பொய் வணக்கத்திற்கு விலகியிருந்தால் மட்டுமே அவர்களால் கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெற முடியும்.
10. “மகா பாபிலோன்” எப்படிப்பட்ட ‘அருவருப்புகளுக்கு’ பொறுப்பாளியாக இருக்கிறாள்?
10 இன்றோ, பொய்மதத்தின் பல்வேறு பிரிவுகளில் லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள்; இப்பிரிவுகள் அனைத்தும் பண்டைய பாபிலோனிலிருந்தே தோன்றின. (ஆதி. 11:6-9) ஒட்டுமொத்தமாக இந்த பொய்மதத்தை, “மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய்” என்று பைபிள் வர்ணிக்கிறது. (வெளி. 17:5) இவ்வுலகின் அரசியல் தலைவர்களுக்கு பொய்மதம் காலங்காலமாக ஆதரவளித்து வந்திருக்கிறது. இந்த மகா பாபிலோன் ‘அருவருப்பான’ காரியங்கள் பலவற்றிற்கு பொறுப்பாளியாக இருக்கிறாள். அந்த அருவருப்பான காரியங்களில் இவ்வுலகில் மூண்ட பல போர்களும் அடங்கும். இதனால், கோடிக்கணக்கான மக்கள் ‘பூமியில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.’ (வெளி. 18:24) குருமார், சிறுபிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதும், வேறுவிதமான பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவதும் சர்ச் அதிகாரிகள் அவற்றைக் கண்டும்காணாமல் விட்டுவிடுவதும் அந்த ‘அருவருப்பான’ காரியங்களில் உட்படுகின்றன. எனவே, பொய் மதத்தை யெகோவா பூமியிலிருந்து அடியோடு ஒழித்துக்கட்டுவதில் ஏதாவது ஆச்சரியம் இருக்கிறதா?—வெளி. 18:8.
11. மகா பாபிலோன் அழிக்கப்படும் வரை உண்மை கிறிஸ்தவர்களுக்கு என்ன பொறுப்பு இருக்கிறது?
11 உண்மை கிறிஸ்தவர்கள் இதை அறிந்திருப்பதால் மகா பாபிலோனின் அங்கத்தினர்களை எச்சரிக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. பைபிள்களையும் ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ வகுப்பு வெளியிடுகிற பைபிள் சார்ந்த பிரசுரங்களையும் விநியோகிப்பது இதற்கு ஒரு வழியாக இருக்கிறது. ‘ஏற்றவேளையில் போஜனம்’ அளிக்க இந்த அடிமை வகுப்பை இயேசு நியமித்திருக்கிறார். (மத். 24:45, NW) பைபிளின் செய்திக்கு மக்கள் ஆர்வம் காட்டும்போது, அவர்களுடன் சேர்ந்து பைபிளைப் படிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. காலம் கடந்துவிடுவதற்கு முன்பு ‘பாபிலோனின் நடுவிலிருந்து ஓடுவதன்’ அவசியத்தை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என நாம் நம்பலாம்.—வெளி. 18:4.
விக்கிரகாராதனைக்கு விலகியோடுங்கள்
12. விக்கிரகங்களையும் உருவப் படங்களையும் வழிபடுவதை கடவுள் எப்படிக் கருதுகிறார்?
12 விக்கிரகங்களையும் உருவப் படங்களையும் வழிபடுவது மகா பாபிலோன் செய்துவருகிற மற்றொரு அருவருப்பான காரியம். கடவுள் அவற்றை ‘அருவருப்புகள்’ என்றும் ‘நரகலான விக்கிரகங்கள்’ என்றும் அழைக்கிறார். (உபா. 29:17, கத்தோலிக்க பைபிள்) ‘நான் யெகோவா, இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்’ என்று கடவுள் சொல்லியிருக்கிறார். எனவே, நாம் கடவுளை பிரியப்படுத்த விரும்பினால் விக்கிரகாராதனையை அறவே தவிர்க்கவேண்டும்.—ஏசா. 42:8.
13. என்ன மறைமுகமான விக்கிரகாராதனைகளிலிருந்து நாம் விலகியோட வேண்டும்?
13 மறைமுகமான விக்கிரகாராதனையைக் குறித்தும் கடவுளுடைய வார்த்தை தெரிவிக்கிறது. உதாரணமாக, பொருளாசையை அல்லது பேராசையை ‘விக்கிரகாராதனை’ என்று பைபிள் அழைக்கிறது. (கொலோ. 3:5) பேராசை என்பது நமக்கு உரிமையில்லாத ஒன்றை அடையவேண்டுமென்ற ஆசையே. அடுத்தவருக்குச் சொந்தமான பொருள்கள்மீது ஆசைப்படுவதும் அதில் உட்படுகிறது. (யாத். 20:17) பிசாசாகவும் சாத்தானாகவும் மாறிய தூதன் உன்னதமானவரைப்போல ஆகவேண்டும், மற்றவர்கள் தன்னை வணங்கவேண்டும் என்ற பேராசையை வளர்த்துக்கொண்டான். (லூக். 4:5-7) யெகோவாவுக்கு எதிராக கலகம் செய்ததோடு ஏவாளை ஏமாற்றி கடவுள் தடைசெய்திருந்த ஒன்றை அடையவேண்டுமென்ற ஆசையையும் தூண்டிவிட்டான். ஆதாம் தன்னுடைய அன்பான பரலோகத் தகப்பனுக்கு கீழ்ப்படிவதைக் காட்டிலும் தன் மனைவியைப் பிரியப்படுத்த வேண்டுமென்ற தன்னல ஆசைக்கு அதிக முக்கியத்துவம் தந்தான். இதன்மூலம் அவனும் ஒரு விதத்தில் விக்கிரகாராதனை செய்தான். ஆனால், கடவுளுடைய கடுங்கோபத்தின் நாளிலிருந்து தப்பியோட விரும்பும் அனைவரும் அவருக்கு தனிப்பட்ட பக்தியைக் காட்டுவதோடு இதுபோன்ற எல்லா விதமான பேராசையை அறவே தவிர்க்க வேண்டும்.
“வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்”
14-16. (அ) ஒழுக்கமாக நடப்பதில் யோசேப்பு எவ்வாறு சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார்? (ஆ) நம் மனதில் அசுத்தமான காம இச்சைகள் எழுந்தால் என்ன செய்ய வேண்டும்? (இ) வேசித்தனத்திற்கு விலகியோடுவதில் நாம் எவ்வாறு வெற்றிகாண முடியும்?
14 ஒன்று கொரிந்தியர் 6:18-ஐ வாசியுங்கள். போத்திபாரின் மனைவி தன்னுடன் உல்லாசமாக இருக்கும்படி யோசேப்பை வற்புறுத்தியபோது அவர் அந்த இடத்தைவிட்டே ஓடிப்போனார். மணமாகாதவர்களுக்கும் மணமானவர்களுக்கும் அவர் ஒரு சிறந்த முன்மாதிரி, அல்லவா? கடந்தகால சம்பவங்களை மனதில் அசைபோடுவதன்மூலம் ஒழுக்கங்கெட்ட நடத்தையைக் கடவுள் எப்படி கருதுகிறாரென யோசேப்பு தெரிந்துகொண்டு அதற்கிசைவாக தன் மனசாட்சியை பயிற்றுவித்திருந்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது. “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்” என்ற கட்டளைக்கு நாம் கீழ்ப்படிய வேண்டுமானால், நம் மணத்துணையாக இல்லாத ஒருவர்மீது காம இச்சையைத் தூண்டிவிடுகிற எதையும் தவிர்ப்போம். “விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளை . . . உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள். இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும்” என்று பைபிள் நமக்குச் சொல்கிறது.—கொலோ. 3:5, 6.
15 “தேவகோபாக்கினை வரும்” என்று இவ்வசனத்தில் சொல்லப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். உலகிலுள்ள அநேகர் காம இச்சைகளை வளர்த்துக்கொண்டு அதற்கு அடிமையாகியிருக்கிறார்கள். கிறிஸ்தவர்களாகிய நாமோ, அசுத்தமான காம இச்சைகள் நம்மை ஆட்டிப்படைக்காதபடிக்கு கடவுளின் உதவிக்காகவும் பரிசுத்த ஆவிக்காகவும் அதாவது அவருடைய சக்திக்காகவும் ஜெபிக்க வேண்டும். அதோடு, பைபிளைப் படிப்பது, கிறிஸ்தவ கூட்டங்களில் கலந்துகொள்வது, மற்றவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிப்பது ஆகியவை ‘ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ள’ நமக்கு உதவும். இவ்வாறு செய்தால், நாம் ‘மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்போம்.’—கலா. 5:16.
16 நாம் ஆபாசத்தைப் பார்த்தால் ‘ஆவிக்கேற்றபடி நடக்கிறவர்களாக’ நிச்சயம் இருக்க மாட்டோம். அதுபோல, காம இச்சையைத் தூண்டுகிற விஷயங்களைப் படிப்பதையும், பார்ப்பதையும், கேட்பதையும் கிறிஸ்தவராக இருக்கும் ஒவ்வொருவரும் தவிர்க்க வேண்டும். அதோடு, அப்படிப்பட்ட விஷயங்களைப்பற்றி பேசுவதிலோ கேலி கிண்டல் அடிப்பதிலோ இன்பம் காண்பதும்கூட கடவுளுடைய “பரிசுத்த” மக்களுக்கு ஏற்றதல்ல. (எபே. 5:3, 4) இவற்றைத் தவிர்த்தால், கடவுளுடைய கடுங்கோபத்தின் நாளைத் தப்பிப்பிழைத்து நீதி தவழும் புதிய உலகில் வாழ உண்மையிலேயே விரும்புகிறோம் என நம்முடைய அன்பான தகப்பனுக்குக் காட்டுகிறோம்.
‘பண ஆசைக்கு’ விலகியோடுங்கள்
17, 18. ‘பண ஆசையிலிருந்து’ நாம் ஏன் விலகியோட வேண்டும்?
17 அடிமைகளாக இருந்த கிறிஸ்தவர்கள் பின்பற்ற வேண்டிய நியமங்களை தீமோத்தேயுவுக்கு எழுதிய முதல் கடிதத்தில் பவுல் சுட்டிக்காட்டினார். இவர்களில் சிலர் கிறிஸ்தவ எஜமானர்களிடம் வேலை செய்ததால் அவர்களிடமிருந்து பொருளாதார ஆதாயங்களை எதிர்பார்த்திருக்கலாம். இன்னும் சிலர் கிறிஸ்தவ சபையை தன்னல லாபத்திற்காகப் பயன்படுத்த முயன்றிருக்கலாம். ‘தேவபக்தியை [பொருள்சம்பந்தமான] ஆதாயத்தொழிலென்று எண்ணுவதைக்’ குறித்து பவுல் எச்சரித்தார். ‘பண ஆசையே’ இப்பிரச்சினையின் ஆணிவேராக இருந்திருக்கலாம். இது ஏழை பணக்காரர் என்ற பாகுபாடின்றி எல்லாரையும் பாதிக்கலாம்.—1 தீ. 6:1, 2, 5, 9, 10.
18 ‘பண ஆசையால்’ அல்லது அவசியமற்ற பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டுமென்ற ஆசையால் கடவுளுடன் உள்ள உறவைக் கெடுத்துப்போட்ட சிலருடைய உதாரணங்கள் பைபிளில் உள்ளன; அவை உங்கள் நினைவுக்கு வருகிறதா? (யோசு. 7:11, 21; 2 இரா. 5:20, 25-27) “நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு” என்று பவுல் தீமோத்தேயுவுக்கு அறிவுரை கூறினார். (1 தீ. 6:11) கடவுளுடைய கடுங்கோபத்தின் நாளைத் தப்பிப்பிழைக்க விரும்புகிற எல்லாரும் இந்த அறிவுரைக்கு கீழ்ப்படிய வேண்டியது அவசியம்.
‘பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடு’
19. இளைஞர் அனைவருக்கும் என்ன தேவைப்படுகிறது?
19 நீதிமொழிகள் 22:15-ஐ வாசியுங்கள். இளைஞரின் இருதயத்தில் மதியீனம் இருப்பதால் அவர்கள் எளிதில் வழிதவறிப் போகலாம். பைபிள் அளிக்கும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்வது வழிதவறிப் போகாமலிருக்க உதவும். சத்தியத்தில் இல்லாத பெற்றோரை உடைய கிறிஸ்தவ இளைஞர் அநேகர், பைபிளிலுள்ள நியமங்களைக் கண்டுபிடித்து அவற்றைக் கடைபிடிக்க முயலுகிறார்கள். இன்னும் சிலர் ஆன்மீக முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் தரும் ஞானமுள்ள ஆலோசனைகளிலிருந்து பயனடைகிறார்கள். பைபிளிலிருந்து யார் அறிவுரை அளித்தாலும் சரி அதற்கு கீழ்ப்படிவது இன்றும் என்றும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.—எபிரெயர் 12:8-11.
20. கெட்ட ஆசைகளிலிருந்து விலகியோட இளைஞர்கள் எங்கிருந்து உதவியைப் பெற முடியும்?
20 இரண்டு தீமோத்தேயு 2:20-22-ஐ வாசியுங்கள். நல்ல ஆலோசனைகள் கிடைக்காதபோது இளைஞர் பலர் போட்டி மனப்பான்மை, அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுவது, வேசித்தனம், பண ஆசை, சுகபோக வாழ்க்கை போன்ற முட்டாள்தனமான காரியங்களில் சிக்கிக் கொள்கிறார்கள். இவை ‘பாலியத்துக்குரிய இச்சைகளாக’ இருக்கின்றன. இவற்றிலிருந்து விலகியோடும்படி பைபிள் நமக்கு அறிவுரை கூறுகிறது. இப்படி விலகியோடுவதற்கு, கெட்ட காரியங்களைச் செய்வதற்கான தூண்டுதல் எங்கிருந்து வந்தாலும்சரி அவை தன்மீது ஆதிக்கம் செலுத்தாதபடி ஒரு கிறிஸ்தவ இளைஞர் கவனமாய் இருக்க வேண்டும். ‘சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடன்’ சேர்ந்து தெய்வீக குணங்களை வளர்த்துக் கொள்ளும்படி பைபிள் தரும் அறிவுரைக்குக் கீழ்ப்படிவது இதற்குப் பெரிதும் உதவுகிறது.
21. செம்மறியாடுகளைப் போன்ற தம் சீஷர்களைக் குறித்து இயேசு என்ன அருமையான வாக்குறுதி அளித்தார்?
21 நாம் இளைஞர்களாக இருந்தாலும்சரி, பெரியவர்களாக இருந்தாலும்சரி, நம்மைத் தவறாக வழிநடத்துகிற ஆட்களுக்குச் செவிசாய்க்க மறுக்கிறோம்; அப்படிச் செய்வதன்மூலம், ‘அந்நியருடைய சத்தத்திற்கு . . . விட்டோடிப்போகிற’ செம்மறியாடுகளைப் போன்ற இயேசுவின் சீஷர்களில் ஒருவராக இருக்க விரும்புவதைக் காட்டுகிறோம். (யோவா. 10:5) கடவுளுடைய கடுங்கோபத்தின் நாளைத் தப்பிப்பிழைப்பதற்கு தீங்கிழைக்கும் காரியங்களிலிருந்து நாம் விலகியோடினால் மட்டும் போதாது, நல்ல குணங்களையும் நாம் தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும். அவற்றில் ஏழு குணங்களை நாம் அடுத்த கட்டுரையில் சிந்திப்போம். அவற்றை விலாவாரியாக சிந்திப்பதற்கு நல்ல காரணம் இருக்கிறது; ஏனென்றால், இயேசு ஓர் அருமையான வாக்குறுதியை நமக்கு தந்திருக்கிறார். “நான் அவைகளுக்கு [என் ஆடுகளுக்கு] நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.”—யோவா. 10:28.
பதிலளிக்க முடியுமா?
• மதத்தலைவர்களுக்கு இயேசு என்ன எச்சரிக்கை கொடுத்தார்?
• இன்று லட்சக்கணக்கான மக்கள் எப்படிப்பட்ட ஆபத்தைச் சந்திக்கிறார்கள்?
• என்னென்ன மறைமுகமான விக்கிரகாராதனையிலிருந்து நாம் விலகியோட வேண்டும்?
[பக்கம் 8, 9-ன் படங்கள்]
நாம் எவற்றிலிருந்தெல்லாம் ‘விலகியோட’ வேண்டும்?