எது வாய்க்குமென்று உங்களுக்குத் தெரியாதே!
‘காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; எது வாய்க்குமென்று நீ அறியாயே.’—பிர. 11:6.
1. பயிர் வளருவதைக் காண்பது ஏன் வியப்பாக இருக்கிறது, அதே சமயத்தில் நம்மை ஏன் தாழ்மையுடன் நடந்துகொள்ளச் செய்கிறது?
ஒரு விவசாயிக்குப் பொறுமை தேவை. (யாக். 5:7) விதை விதைத்தபின், அது முளைத்து வளருவதற்கு அவர் காத்திருக்க வேண்டும். சூழ்நிலைகள் கைகூடிவரும்போது, நிலத்தைக் கிழித்துக்கொண்டு இளந்தளிர்கள் தோன்றும். பின்னர் அவை பயிராக வளர்ந்து கதிர்விடும். கடைசியாக, வயல் அறுவடைக்குத் தயாராகும். இந்த வளர்ச்சி என்னும் அற்புதத்தைக் காண்பது எவ்வளவு வியப்பாக இருக்கிறது! இந்த வளர்ச்சிக்கு யார் காரணம் என்பதைப் புரிந்துகொள்வது நம்மைத் தாழ்மையுடனும் நடந்துகொள்ளச் செய்கிறது, அல்லவா? நாம் அந்த விதையைப் பராமரித்து, நீரூற்றி அது வளருவதற்கு உதவலாம். என்றாலும், தேவனால் மட்டுமே அதை விளையச் செய்ய முடியும்.—1 கொரிந்தியர் 3:6-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.
2. முந்தின கட்டுரையில் நாம் சிந்தித்த உவமைகளில் ஆன்மீக வளர்ச்சி பற்றி என்ன குறிப்புகளை இயேசு விளக்கினார்?
2 ராஜ்ய பிரசங்க வேலையை விதை விதைக்கும் வேலைக்கு இயேசு ஒப்பிட்டதை நாம் முந்தின கட்டுரையில் பார்த்தோம். வெவ்வேறு இடங்களில் விழுந்த விதை பற்றிய உவமையில், விதைத்தவர் நல்ல விதையையே விதைத்தபோதிலும், அந்த விதை வளர்ந்து முதிர்ச்சி அடையுமா அடையாதா என்பது, ஒருவருடைய இருதய நிலையைப் பொறுத்துத்தான் தீர்மானிக்கப்படுகிறது என்பதை இயேசு வலியுறுத்தினார். (மாற். 4:3-9) விதைத்துவிட்டுத் தூங்கியவர் பற்றிய உவமையில், அந்த விதை எப்படி வளர்ந்ததென்று விதைத்தவருக்கு முழுமையாகப் புரியவில்லை என்பதை இயேசு விளக்கிக் காட்டினார். ஏனெனில், மனித முயற்சியினால் அல்ல, கடவுளுடைய சக்தியினாலேயே அது வளர்ந்தது. (மாற். 4:26-29) கடுகுவிதை, புளித்தமா, மீன்வலை ஆகியவற்றைப் பற்றி இயேசு சொன்ன இன்னும் மூன்று உவமைகளை இப்போது நாம் சிந்திப்போம்.a
கடுகுவிதை பற்றிய உவமை
3, 4. கடுகுவிதை பற்றிய உவமை ராஜ்ய நற்செய்தி சம்பந்தமாக என்ன விஷயங்களைச் சிறப்பித்துக் காட்டுகிறது?
3 மாற்கு 4-ஆம் அதிகாரத்தில் கடுகுவிதை பற்றிய உவமையும் உள்ளது; அது இரண்டு விஷயங்களைச் சிறப்பித்துக் காட்டுகிறது. ஒன்று, ராஜ்ய நற்செய்தியின் பிரம்மாண்டமான வளர்ச்சி; மற்றொன்று, நற்செய்தியை ஏற்றுக்கொள்வோருக்குக் கிடைக்கும் பாதுகாப்பு. அந்த உவமையை இயேசு இவ்வாறு சொன்னார்: “தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்? அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறிதாயிருக்கிறது; விதைக்கப்பட்டபின்போ, அது வளர்ந்து, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை விடும்.”—மாற். 4:30-32.
4 இந்த உவமையில், ‘தேவனுடைய ராஜ்யத்தின்’ வளர்ச்சி சித்தரிக்கப்படுவதை நாம் காண்கிறோம். ராஜ்ய நற்செய்தி எங்கும் அறிவிக்கப்பட்டு வருவதும், கிறிஸ்தவ சபை பொ.ச. 33, பெந்தெகொஸ்தே தினத்திலிருந்து இன்று வரையாக வளர்ந்து வருவதும் இதற்கு அத்தாட்சிகளாக இருக்கின்றன. சின்னஞ்சிறிய கடுகுவிதை, மிகச் சிறிய ஏதோவொன்றைக் குறிக்கிறது. (லூக்கா 17:6-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.) என்றாலும், ஒரு கடுகுச் செடி பிற்பாடு சுமார் 3 முதல் 5 மீட்டர் உயரம் வரை வளர்ந்து, உறுதியான கிளைகளைப் பரப்பி, கிட்டத்தட்ட ஒரு மரமாகவே ஆகிவிடலாம்.b—மத். 13:31, 32.
5. முதல் நூற்றாண்டின்போது கிறிஸ்தவ சபையில் எப்படிப்பட்ட வளர்ச்சி ஏற்பட்டது?
5 கிறிஸ்தவ சபையின் வளர்ச்சி பொ.ச. 33-ல் சிறிய அளவில் ஆரம்பித்தது; அப்போது சுமார் 120 சீஷர்கள் கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்பட்டார்கள். அதன்பிறகு கொஞ்ச காலத்திற்குள்ளேயே, ஆயிரக்கணக்கான சீஷர்கள் இச்சிறிய சபையில் சேர்ந்துகொண்டார்கள். (அப்போஸ்தலர் 2:41; 4:4; 5:28; 6:7; 12:24; 19:20 ஆகிய வசனங்களை வாசியுங்கள்.) முப்பது ஆண்டுகளுக்குள் அறுவடை வேலையில் ஈடுபடும் ஆட்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்தது; அதனால்தான் நற்செய்தி, “வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும்” பிரசங்கிக்கப்பட்டு வந்திருப்பதாக அப்போஸ்தலன் பவுலால் கொலோசே சபையாருக்குச் சொல்ல முடிந்தது. (கொலோ. 1:23) என்னே ஓர் அபார வளர்ச்சி!
6, 7. (அ) 1914 முதற்கொண்டு என்ன வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது? (ஆ) இன்னும் என்ன வளர்ச்சி ஏற்படும்?
6 கடவுளுடைய ராஜ்யம் 1914-ல் பரலோகத்திலே ஸ்தாபிக்கப்பட்டது; அதுமுதல் கடுகு “மரத்தின்” கிளைகள் நினைத்துப்பார்க்க முடியாதளவுக்குப் படர்ந்து விரிந்திருக்கிறது. ஏசாயா பின்வருமாறு கூறிய தீர்க்கதரிசனத்தின் நிஜமான நிறைவேற்றத்தை கடவுளுடைய ஜனங்கள் கண்டிருக்கின்றனர்: “சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்.” (ஏசா. 60:22) இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரசங்க வேலையைச் செய்துவந்த அபிஷேகம் செய்யப்பட்டவர்களின் சிறிய தொகுதி, 2008-க்குள் 230-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் எழுபது லட்சம் சாட்சிகள் இந்த வேலையில் ஈடுபடுவார்கள் என்று சற்றும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். இயேசுவின் உவமையில் சொல்லப்பட்ட கடுகுவிதையின் வளர்ச்சிக்கு ஒப்பாக இது ஒரு வியக்கத்தக்க வளர்ச்சி, அல்லவா?
7 ஆனால், அந்த வளர்ச்சி அத்துடன் நின்றுவிடுகிறதா? இல்லை. அது தொடர்ந்து நடைபெறும்; முடிவில், கடவுளுடைய ராஜ்யத்தின் குடிமக்களே பூமி முழுவதிலும் நிறைந்திருப்பார்கள். விரோதிகள் அனைவரும் ஒழித்துக்கட்டப்படுவார்கள். இது மனித முயற்சிகளால் நடைபெறாது. மாறாக, பூமியின் விவகாரங்களில் சர்வலோகப் பேரரசரான யெகோவா தலையிடுவதாலேயே இது நடைபெறும். (தானியேல் 2:34, 35-ஐ வாசியுங்கள்.) ஏசாயா பின்வருமாறு பதிவு செய்த மற்றொரு தீர்க்கதரிசனத்தின் இறுதியான நிறைவேற்றத்தை அப்போது நாம் காண்போம்: “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.”—ஏசா. 11:9.
8. (அ) இயேசு சொன்ன உவமையில் பறவைகள் யாரைக் குறிக்கின்றன? (ஆ) இப்பொழுதும்கூட நாம் எவற்றிலிருந்து பாதுகாக்கப்படுகிறோம்?
8 இந்த ராஜ்யத்தின் நிழலில் ஆகாயத்துப் பறவைகள் வந்து தங்குவதாக இயேசு கூறுகிறார். இந்தப் பறவைகள், விதைப்பவன் பற்றிய உவமையில் வழியருகே விழுந்த நல்ல விதைகளைப் பட்சித்துப்போட்ட பறவைகளைக் குறிப்பதில்லை, அவை ராஜ்யத்தின் விரோதிகளைக் குறித்தன. (மாற். 4:4.) மாறாக, இந்த உவமையில் சொல்லப்படுகிற பறவைகள், கிறிஸ்தவ சபையில் பாதுகாப்பை நாடுகிற நல்மனமுள்ளவர்களைக் குறிக்கின்றன. இப்பொழுதும்கூட, இவர்கள் கடவுளுக்குப் பிடிக்காத பழக்கவழக்கங்களிலிருந்தும் இந்தப் பொல்லாத உலகின் அசுத்தமான செயல்களில் ஈடுபடுவதிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறார்கள். (ஏசாயா 32:1, 2-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.) யெகோவாவும் மேசியானிய ராஜ்யத்தை ஒரு மரத்திற்கு ஒப்பிட்டுத் தீர்க்கதரிசனமாக இவ்வாறு குறிப்பிட்டார்: “இஸ்ரவேலின் உயரமான பர்வதத்திலே அதை நாட்டுவேன்; அது கொப்புகளை விட்டு, கனிதந்து, மகிமையான கேதுருவாகும்; அதின் கீழே சகலவித பட்சிஜாதிகளும் தங்கி, கிளைகளின் நிழலிலே தாபரிக்கும்.”—எசே. 17:23.
புளித்தமா பற்றிய உவமை
9, 10. (அ) புளித்தமா பற்றிய உவமையில் என்ன குறிப்பை இயேசு வலியுறுத்தினார்? (ஆ) பைபிளில், புளித்தமா என்ற வார்த்தை பெரும்பாலும் எதைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது, புளித்தமா பற்றி இயேசு சொன்னது சம்பந்தமாக என்ன கேள்வியை நாம் சிந்திக்கப்போகிறோம்?
9 வளர்ச்சி என்பது எப்போதுமே நம் கண்களுக்குத் தெரிவதில்லை. அடுத்த உவமையில் இந்தக் குறிப்பை வலியுறுத்தி இயேசு சொல்வதாவது: “பரலோக ராஜ்யம் புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும் வரைக்கும், மூன்றுபடி மாவிலே அடக்கி வைத்தாள்.” (மத்.13:33) இந்தப் புளித்தமா எதைக் குறிக்கிறது, ராஜ்ய வளர்ச்சியோடு இது எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது?
10 பைபிளில், பாவத்தைக் குறிக்கவே புளித்தமா பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. பூர்வ கொரிந்து சபையில் பாவம் செய்த ஒருவனின் தீய செல்வாக்கு பற்றி அப்போஸ்தலன் பவுல் பேசியபோது இந்த அர்த்தத்தில்தான் அதைக் குறிப்பிட்டார். (1 கொ. 5:6-8) தீமையை உண்டாக்கும் ஒன்றின் வளர்ச்சியைக் குறிக்கவே புளித்தமா என்ற வார்த்தையை இயேசுவும் பயன்படுத்தினாரா?
11. பூர்வ இஸ்ரவேலர் புளித்தமாவை எவ்விதத்தில் பயன்படுத்தினார்கள்?
11 இந்தக் கேள்விக்குப் பதில் காணும்முன் முக்கியமான மூன்று உண்மைகளை நாம் கவனிக்க வேண்டும். முதலாவது, பஸ்கா பண்டிகையின்போது புளித்தமாவைப் பயன்படுத்த யெகோவா அனுமதிக்காத போதிலும் வேறு சந்தர்ப்பங்களில் அனுமதித்தார்; பூர்வ இஸ்ரவேலர், சமாதான பலியாகிய ஸ்தோத்திர பலியில் புளித்தமாவினால் செய்த அப்பத்தையும் படைத்தார்கள். யெகோவா செய்த அநேக நன்மைகளுக்கு நன்றி காட்ட மனமுவந்து இவ்வாறு படைத்தார்கள். இவற்றைச் சாப்பிடுவது அவர்களுக்கு மகிழ்ச்சி தந்தது.—லேவி. 7:11-15.
12. பைபிளில் அடையாளக் குறிப்பான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
12 இரண்டாவது, பைபிளில் அடையாளமாகக் குறிப்பிடப்படும் ஒன்று, மோசமானதைக் குறிப்பிட ஒரு சந்தர்ப்பத்தில் பயன்படுத்தப்பட்டாலும் வேறொரு சந்தர்ப்பத்தில் நல்லதைக் குறிப்பிடவும் பயன்படுத்தப்படலாம். உதாரணமாக, 1 பேதுரு 5:8-ல் சாத்தான் தீங்கு விளைவிக்கும் கொடிய சிங்கத்திற்கு ஒப்பாகச் சித்தரிக்கப்படுகிறான். ஆனால், வெளிப்படுத்துதல் 5:5-ல் இயேசுவும் ஒரு சிங்கத்திற்கு ஒப்பாக, அதாவது ‘யூதா கோத்திரத்துச் சிங்கம்’ என்பதாகச் சித்தரிக்கப்படுகிறார். வெளிப்படுத்துதல் புத்தகத்தில் சொல்லப்பட்ட இந்தச் சிங்கம் தைரியமிக்க நீதிக்கு அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
13. புளித்தமா பற்றிய இயேசுவின் உவமை ஆன்மீக வளர்ச்சியைக் குறித்து என்ன காட்டுகிறது?
13 மூன்றாவது, புளித்தமா பற்றி இயேசு சொன்ன உவமையில், அது மாவு முழுவதையும் கெட்டுப்போகச் செய்து பயனற்றதாய் ஆக்கிவிட்டதாக அவர் சொல்லவில்லை. அப்பம் செய்வதற்குப் பொதுவாக என்ன செய்யப்படுமோ அதையே அவர் குறிப்பிட்டார். அந்தப் பெண் வேண்டுமென்றேதான் புளித்தமாவைச் சேர்த்தாள், அதனால் நல்லதுதான் விளைந்தது. புளித்தமா கண்ணுக்குத் தெரியாமல் மாவோடு மாவாகக் கலந்திருந்தது. அதனால், மாவு முழுவதும் எப்படிப் புளித்தது என்பது அவளுக்குத் தெரியாதிருந்தது. இது, விதைத்துவிட்டு இரவில் தூங்கிய மனிதனை நமக்கு நினைப்பூட்டுகிறது. ‘அவனுக்குத் தெரியாதவிதமாய், விதை முளைத்துப் பயிராகிறது’ என்று இயேசு கூறினார். (மாற். 4:27) ஆன்மீக வளர்ச்சி கண்ணுக்குத் தெரியாமல் நடைபெறுவதை எவ்வளவு எளிமையாக விளக்கியிருக்கிறார்! ஆரம்பத்தில் அந்த வளர்ச்சி நமக்குத் தெரியாமல் இருக்கலாம்; ஆனால், போகப்போக வெளிப்படையாகத் தெரியும் பலன்களை வைத்து அதைக் கண்டுகொள்ளலாம்.
14. புளித்தமா, மாவு முழுவதையும் புளிக்கச் செய்வது, பிரசங்க வேலையின் எந்த அம்சத்தை விளக்கிக் காட்டுகிறது?
14 இந்த வளர்ச்சி நம் கண்களுக்குத் தெரியாமல் இருப்பதோடு மிகப் பரவலாகவும் நடைபெறுகிறது. இது, புளித்தமா பற்றிய உவமையில் வலியுறுத்திக் காட்டப்படுகிற மற்றொரு அம்சமாகும். இந்தப் புளித்தமா, ‘மூன்றுபடி மாவு’ முழுவதையும் புளிக்கச்செய்கிறது. (லூக். 13:21) புளித்தமாவைப்போல, ஆன்மீக வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிற இந்த ராஜ்ய பிரசங்க வேலை, இப்போது உலகெங்கும் பரவலாக அதாவது, “பூமியின் கடைசிபரியந்தமும்” செய்யப்பட்டு வருகிறது. (அப். 1:8; மத். 24:14) இந்தளவு விரிவாகச் செய்யப்படும் ராஜ்ய பிரசங்க வேலையில் பங்குபெறுவது என்னே ஓர் அருமையான பாக்கியம்!
மீன்வலை
15, 16. (அ) மீன்வலை பற்றிய உவமையைச் சுருக்கமாகக் கூறுங்கள். (ஆ) மீன்வலை எதைக் குறிக்கிறது, ராஜ்ய வளர்ச்சி சம்பந்தமாக இது எதைச் சுட்டிக் காட்டுகிறது?
15 இயேசு கிறிஸ்துவின் சீஷர்களெனச் சொல்லிக்கொள்வோரின் எண்ணிக்கையைவிட அவர்களது ஆன்மீகத் தன்மையே முக்கியமானது. இந்த அம்சத்தைச் சுட்டிக்காட்ட இயேசு மீன்வலை பற்றிய மற்றொரு உவமையைக் குறிப்பிட்டார். “அன்றியும், பரலோக ராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகலவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது” என்று அவர் கூறினார்.—மத். 13:47.
16 இந்த மீன்வலை ராஜ்ய பிரசங்க வேலையைக் குறிக்கிறது; இது எல்லாவித மீன்களையும் வாரிக்கொள்கிறது. இயேசு தொடர்ந்து சொல்வதாவது: “அது [மீன்வலை] நிறைந்தபோது, அதைக் கரையில் இழுத்து, உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துபோடுவார்கள். இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.”—மத். 13:48–50.
17. மீன்வலை பற்றிய உவமையில் சொல்லப்பட்டுள்ள பிரித்தெடுத்தல், எந்தக் காலப்பகுதியில் நடைபெறுகிறது?
17 இவ்வாறு பிரித்தெடுப்பது, இயேசு தம் மகிமையில் வரும்போது இறுதி நியாயத்தீர்ப்புக்காகச் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பிரிப்பதைக் குறிக்கிறதா? (மத். 25:31–33) இல்லை. அந்த இறுதி நியாயத்தீர்ப்பு, மிகுந்த உபத்திரவத்தின்போது இயேசு வருகையில் நடைபெறும். அதற்கு மாறாக, மீன்வலை பற்றிய உவமையில் சொல்லப்பட்டுள்ள பிரித்தெடுத்தல், ‘இந்த உலகின் முடிவு காலத்திலே’ நடைபெறுகிறது.c இந்தக் காலப்பகுதியில்தான் நாம் வாழ்கிறோம்; இதன் இறுதியில் மிகுந்த உபத்திரவம் ஆரம்பமாகும். அப்படியானால், பிரிக்கும் வேலை இப்போது எப்படி நடைபெறுகிறது?
18, 19. (அ) பிரிக்கும் வேலை இப்போது எப்படி நடக்கிறது? (ஆ) நல்மனமுள்ளவர்கள் என்ன செய்தாக வேண்டும்? (பக்கம் 21-ல் உள்ள அடிக்குறிப்பையும் பாருங்கள்.)
18 நிஜமாகவே, நம் நாளில் மனிதகுலமென்னும் கடலிலுள்ள லட்சக்கணக்கான அடையாளப்பூர்வ மீன்கள் யெகோவாவின் சபையிடம் ஈர்க்கப்பட்டுள்ளன. சிலர் நினைவுநாள் ஆசரிப்புக் கூட்டத்திற்கு வருகிறார்கள்; வேறுசிலர் நம் கூட்டங்களில் கலந்துகொள்கிறார்கள், இன்னும் சிலர் ஆர்வத்துடன் நம்மோடு பைபிள் படிக்கிறார்கள். ஆனால், இவர்கள் அனைவருமே உண்மையான கிறிஸ்தவர்களா? இவர்கள் ‘கரைக்கு இழுத்து’ வரப்படலாம்; ஆனால், இவர்களில் ‘நல்லவர்கள்’ மட்டுமே கிறிஸ்தவ சபைகளைக் குறிக்கும் கூடைகளில் சேர்க்கப்படுகிறார்கள் என்பதாக இயேசு கூறுகிறார். ஆகாதவர்கள், வீசியெறியப்படுகிறார்கள்; கடைசியில், அழிவைக் குறிக்கும் அக்கினிச்சூளையிலே போடப்படுவார்கள்.
19 அநேகர் ஆகாத மீன்களைப்போல ஆகியிருக்கிறார்கள். யெகோவாவின் மக்களோடு ஒரு சமயம் பைபிளைப் படித்த அவர்கள் அதை நிறுத்தியிருக்கிறார்கள். கிறிஸ்தவப் பெற்றோரின் பிள்ளைகள் சிலர் இயேசுவின் சீஷர்களாவதற்கு விருப்பம் காட்டாமலே இருந்திருக்கிறார்கள். அவர்கள் யெகோவாவுக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற தீர்மானத்தை எடுக்க மனமின்றி இருக்கிறார்கள் அல்லது சிறிது காலம் சேவை செய்துவிட்டு நிறுத்தியிருக்கிறார்கள்.d (எசே. 33:32, 33) என்றாலும், இறுதி நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன்னர், நல்மனமுள்ள எல்லாருமே கூடைகளைப்போன்ற சபைகளுக்குள் சேர்க்கப்படுவதற்கும் அந்தப் பாதுகாப்பான இடத்திலேயே இருப்பதற்கும் தகுதியுள்ளவர்களாய் ஆக வேண்டும்.
20, 21. (அ) வளர்ச்சி சம்பந்தமான இயேசுவின் உவமைகளைச் சிந்தித்ததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம்? (ஆ) நீங்கள் என்ன செய்யத் தீர்மானித்திருக்கிறீர்கள்?
20 வளர்ச்சி சம்பந்தமான இயேசுவின் உவமைகளைச் சுருக்கமாக இதுவரை சிந்தித்ததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம்? முதலாவதாக, கடுகுவிதையின் வளர்ச்சியைப்போல, பூமியில் நற்செய்தியை ஏற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை பிரம்மாண்டமான அளவில் அதிகரித்திருக்கிறது. யெகோவாவின் வேலை விரிவாக நடைபெற்றுவருவதை எதுவுமே தடுத்துநிறுத்த முடியாது! (ஏசா. 54:17) அதோடு, ‘[அந்த மரத்தின்] நிழலில் தங்குவோருக்கு ஆன்மீகப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவதாக, சத்திய விதையை தேவனே விளையச்செய்கிறார். இந்த வளர்ச்சி, கண்ணுக்குத் தெரியாமல் மாவோடு மாவாகக் கலந்திருக்கும் புளித்தமாவைப்போல நடைபெற்றுவருவது எப்போதும் நம் கண்களுக்குத் தெரிவதுமில்லை நமக்குப் புரிவதுமில்லை; ஆனால் அது விரிவாக நடைபெறத்தான் செய்கிறது. மூன்றாவதாக, நற்செய்தியை ஏற்றுக்கொண்ட எல்லாருமே ‘நல்லவர்களாக’ நடந்துகொள்ளவில்லை. சிலர், இயேசுவின் உவமையில் சொல்லப்பட்ட ஆகாத மீன்களைப்போல் இருந்திருக்கிறார்கள்.
21 என்றாலும், நல்லவர்களாய் இருக்கும் ஏராளமானோரை யெகோவா இழுத்துக் கொண்டுவருவதைக் காண்பது எவ்வளவாய் மகிழ்ச்சியூட்டுகிறது! (யோவா. 6:44) இதனால், ஒவ்வொரு நாட்டிலும் வரலாறு காணா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வளர்ச்சிக்கான மகிமையெல்லாம் யெகோவா தேவனையே சேரும். இதைக் காண்கிற நாம் எல்லாருமே, பல நூற்றாண்டுகளுக்கு முன் கொடுக்கப்பட்ட பின்வரும் அறிவுரைக்குக் கீழ்ப்படிய வேண்டும்: “காலையிலே உன் விதையை விதை; ... அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாய்ப் பயன்படுமோ என்றும் நீ அறியாயே.”—பிர. 11:6.
[அடிக்குறிப்புகள்]
a செப்டம்பர் 15, 1992 தேதியிட்ட காவற்கோபுரம், பக்கங்கள் 17-22, மற்றும் அக்டோபர் 1, 1975 தேதியிட்ட ஆங்கில காவற்கோபுரம், பக்கங்கள் 589-608 ஆகியவற்றில் அளிக்கப்பட்டிருந்த விளக்கத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன; அவற்றைப் பின்வரும் பாராக்களில் நாம் சிந்திப்போம்.
b பாலஸ்தீனாவில் மரம்போன்று வளருகிற ஒரு வகை கடுகுச் செடி.
c மத்தேயு 13:39-43, ராஜ்ய பிரசங்க வேலையின் வேறொரு அம்சத்தைக் குறிக்கிறது; என்றபோதிலும், அதில் சொல்லப்பட்டுள்ளவை நிறைவேறும் காலத்திலேயே மீன்வலை பற்றிய உவமையில் சொல்லப்பட்டுள்ளவையும் நிறைவேறும். அதாவது, ‘இந்த உலகின் இறுதியில்’ நிறைவேறும். விதைப்பதும் அறுப்பதுமான வேலை இந்தக் காலப்பகுதி முழுவதிலும் நடைபெறுவதைப் போலவே, அடையாள அர்த்தத்தில் சொல்லப்பட்ட மீன்களைப் பிரித்தெடுக்கும் வேலையும் தொடர்ந்து நடைபெறும்.—அக்டோபர் 15, 2000 தேதியிட்ட காவற்கோபுரம், பக்கங்கள் 25-26; ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள், பக்கங்கள் 178-181, பாராக்கள் 8-11.
d அப்படியானால், பைபிள் படிப்பை நிறுத்தியவர்கள் அல்லது கூட்டங்களுக்கு வருவதை நிறுத்தியவர்கள் எல்லாருமே ஆகாதவர்களென தேவதூதர்களால் வீசியெறியப்பட்டிருக்கிறார்களா? இல்லை. இவர்களில் யாராவது உண்மை மனதுடன் திரும்பவும் யெகோவாவுக்குச் சேவை செய்ய விரும்பினால் அவர்களுக்காக வாசல் திறந்தேயிருக்கிறது.—மல். 3:7.
உங்கள் பதில் என்ன?
• கடுகுவிதை பற்றிய இயேசுவின் உவமை, ராஜ்ய வளர்ச்சி மற்றும் ஆன்மீகப் பாதுகாப்பு குறித்து என்ன கற்பிக்கிறது?
• இயேசுவின் உவமையில் சொல்லப்பட்டுள்ள புளித்தமா எதைக் குறிக்கிறது, ராஜ்ய வளர்ச்சி பற்றிய என்ன உண்மையை அவர் சிறப்பித்துக்காட்டுகிறார்
• மீன்வலை பற்றிய உவமையில் ராஜ்ய வளர்ச்சியின் என்ன அம்சம் சுட்டிக் காட்டப்படுகிறது?
• ‘கூடைகளில் சேர்க்கப்பட்டவர்களோடு’ இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
[பக்கம் 18-ன் படங்கள்]
கடுகுவிதை பற்றிய உவமை ராஜ்ய வளர்ச்சி குறித்து என்ன கற்பிக்கிறது?
[பக்கம் 19-ன் படங்கள்]
புளித்தமா பற்றிய உவமையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
[பக்கம் 21-ன் படங்கள்]
நல்ல மீன்களை ஆகாத மீன்களிலிருந்து பிரித்தெடுப்பது எதைக் குறிக்கிறது?