நியாயமான எதிர்பார்ப்புகளால் மகிழ்ச்சி காண . . .
“இப்பொழுதும் என்னால் செய்ய முடியவில்லையே!” நீங்கள் நினைத்ததைச் சாதிக்க முடியாமல் போனதால், எத்தனையோ முறை இவ்வாறு சொல்லியிருப்பீர்கள். உதாரணமாக, ஓர் இளம் கிறிஸ்தவத் தாய், இருபத்துநான்கு மணிநேரமும் தன் பச்சிளம் குழந்தையைக் கவனிப்பதிலேயே தன் சக்தியையெல்லாம் செலவழித்துவிடுவதால், ஆன்மீகக் காரியங்களில் அதிகமாக ஈடுபட முடியவில்லை என்று புலம்பலாம். மற்றொரு கிறிஸ்தவர், சபைக்காக தான் செய்வது போதவே போதாது என்று நினைக்கலாம்; அவர் வளர்க்கப்பட்ட விதம் அதற்குக் காரணமாக இருக்கலாம். வயதான சகோதரி ஒருவர், தான் ஆரோக்கியமாக இருந்தபோது ஊழியத்தில் சுறுசுறுப்பாக ஈடுபட்டதைப்போல் இப்போது ஈடுபட முடியவில்லையே என நினைத்து வேதனைப்படலாம். கிறிஸ்ட்யான் என்ற சகோதரியால் குடும்பச் சூழ்நிலை காரணமாக, எதிர்பார்த்தபடி யெகோவாவுக்குச் சேவைசெய்ய முடியாமற்போனது. “சில சமயங்களில், பயனியர் சேவையை உற்சாகப்படுத்திக் கொடுக்கப்படும் பேச்சைக் கேட்டால்கூட எனக்கு அழுகை வந்துவிடும்” என்கிறார் அவர்.
இப்படியெல்லாம் தோன்றும்போது நாம் என்ன செய்யலாம்? கிறிஸ்தவர்கள் சிலர் எவ்வாறு தங்களுடைய சூழ்நிலையை எதார்த்தமாக எடை போடுகிறார்கள்? நியாயமான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
நியாயமாகச் சிந்தித்துப் பாருங்கள்
நம் சந்தோஷத்தை இழக்காமல் இருப்பதற்கான ஒரு வழியை அப்போஸ்தலன் பவுல் சுட்டிக்காட்டினார். ‘கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன். உங்கள் சாந்தகுணம் [“நியாயத்தன்மை,” NW] எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக’ என்று அவர் குறிப்பிட்டார். (பிலி. 4:4, 5) கடவுளுக்குச் செய்யும் சேவையில் சந்தோஷமும் திருப்தியும் காண வேண்டுமென்றால், நம்முடைய திறமைகளையும் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு அதற்கேற்றபடி நாம் நியாயமான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்க வேண்டும். அடைய முடியாத இலக்குகளை வைத்துக்கொண்டு, என்னவானாலும் சரி, அவற்றை அடைந்தே தீருவேன் என்று விடாப்பிடியாகச் செயல்பட்டால், தேவையில்லாத மன அழுத்தத்திற்கு ஆளாகி நாம் கஷ்டப்பட நேரிடும். மறுபட்சத்தில், நம்மால் செய்ய முடியாது என்று அசதியாகவும் இருந்துவிடக் கூடாது. நம் வரம்புகளைச் சாக்காக வைத்து, ஊழியத்தில் மந்தமாகிவிடவும் கூடாது.
நம்முடைய சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும்சரி, நம்மால் முடிந்தளவுக்கு மிகச் சிறந்ததைச் செய்ய வேண்டுமென்றும், அதை முழு இருதயத்தோடு செய்ய வேண்டுமென்றும் யெகோவா எதிர்பார்க்கிறார். (கொலோ. 3:23, 24) நம்மால் முடிந்த மிகச் சிறந்ததைக் கொடுக்காமல், அதைவிடக் குறைவாக யெகோவாவுக்குக் கொடுத்தால், நம்முடைய ஒப்புக்கொடுத்தலுக்கு இசைவாக நாம் வாழத் தவறுகிறோம் என்றே அர்த்தம். (ரோ. 12:1) அதுமட்டுமின்றி, முழு இருதயத்தோடு சேவை செய்வதால் கிடைக்கும் ஆழ்ந்த திருப்தியையும் உண்மையான மகிழ்ச்சியையும், இன்னும்பிற அளவற்ற ஆசீர்வாதங்களையும் நாம் இழந்துவிடுவோம்.—நீதி. 10:22.
“நியாயத்தன்மை” என்பதாக பைபிளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தை, கரிசனையோடு நடந்துகொள்வதையும் அர்த்தப்படுத்துகிறது. வளைந்துகொடுப்பது என்பதே அதன் நேரடியான பொருளாகும். (யாக். 3:17) அது, மட்டுக்குமீறி கறாராக நடந்துகொள்ளாதிருப்பதையும் குறிக்கிறது. ஆகவே, நாம் நியாயத்தன்மை உள்ளவர்களாய் இருந்தால், நம்முடைய சூழ்நிலைகளைச் சமநிலையோடு சீர்தூக்கிப் பார்க்க முடியும். அப்படிச் செய்வது கடினமாக இருக்குமா? சிலருக்குக் கடினமாக இருக்கிறது; ஒருவேளை, அவர்கள் மற்றவர்களிடம் கனிவாக, கரிசனையாக நடந்துகொண்டாலும் அப்படிச் செய்வது கடினமாக இருக்கிறது. உதாரணமாக, நெருங்கிய நண்பர் ஒருவர் ஏகப்பட்ட வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்வதால் சீக்கிரத்தில் களைப்படைந்து விடுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர் சில மாற்றங்களைச் செய்வது சரியானதாய் இருக்கும் என்பதை நாம் அவருக்கு எடுத்துச் சொல்வோம் அல்லவா? அதேபோல, நம்முடைய சக்திக்கு மிஞ்சிச் செயல்படுகிற சந்தர்ப்பத்தில் அதை உணர்ந்துகொள்வது அவசியம்.—நீதி. 11:17.
சிறுவயதிலிருந்தே நம்முடைய பெற்றோர் அளவுக்கு மீறி நம்மிடம் எதிர்பார்ப்பவர்களாக இருந்திருந்தால், நம்மால் எந்தளவு முடியும் என்பதைப் புரிந்து அதற்கேற்றபடி செயல்படுவது கடினமாக இருக்கும். அப்பா அம்மாவுக்குப் பிடித்தமான பிள்ளையாக இருக்க வேண்டும் என்பதற்காக, இன்னும் சிறப்பாய்ச் செய்ய வேண்டும் என்று சிறுவயதில் சிலர் உணர்ந்திருக்கிறார்கள். நாம் அவ்வாறு வளர்க்கப்பட்டிருந்தால், யெகோவாவும் அப்படிப்பட்டவரே என நினைப்பது தவறு. நாம் முழு இருதயத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்யும்போது அவர் நம்மை நேசிப்பார். யெகோவா, “நம்முடைய உருவம் இன்னதென்று . . . அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்” என்று அவருடைய வார்த்தை உறுதி அளிக்கிறது. (சங். 103:14) நம்முடைய வரம்புகளை அவர் அறிந்திருக்கிறார்; அவற்றின் மத்தியிலும் நாம் ஊக்கத்தோடு அவருக்குச் சேவை செய்கையில், அவர் நம்மை நேசிப்பார். கடவுள் நம்மைக் கட்டாயப்படுத்தி வேலை வாங்குபவர் அல்ல என்பதை நினைவில் வைத்தால், நம்முடைய வரம்புகளுக்கு ஏற்றபடி நம்முடைய எதிர்பார்ப்புகளை அளவாக வைத்துக்கொள்ள முடியும்.—மீ. 6:8.
இருந்தாலும், இப்படிப்பட்ட சமநிலையான மனப்பான்மையை வளர்த்துக்கொள்வது சிலருக்குக் கடினமாக இருக்கிறது. ஒருவேளை, நீங்களும் அப்படி உணர்ந்தால், உங்களைப் பற்றி நன்கறிந்த, அனுபவமுள்ள கிறிஸ்தவ நண்பரின் உதவியை நாடலாம், அல்லவா? (நீதி. 27:9) உதாரணமாக, நீங்கள் ஓர் ஒழுங்கான பயனியராகச் சேவை செய்ய விரும்புகிறீர்களா? அது ஓர் அருமையான இலக்கு! அதை அடைவதில் உங்களுக்குப் பிரச்சினை இருக்கிறதா? ஒருவேளை, உங்களுடைய வாழ்க்கையை எளிமையாக்கிக்கொள்வதற்கு உதவி தேவைப்படலாம். குடும்பப் பொறுப்புகள் அழுத்திக்கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் ஒழுங்கான பயனியராகச் சேவை செய்வது இப்போதைக்குச் சரியாக இருக்குமா என்பதை உங்கள் நண்பர் உங்களோடு பேசுவார். பயனியராகச் சேவை செய்கையில் உங்களுடைய வேலைப் பளு இன்னும் அதிகமாகும். அதை உங்களால் சமாளிக்க முடியுமா, இல்லையென்றால் அதற்காக வேறு ஏதாவது மாற்றங்களைச் செய்ய முடியுமா என்பதைக் கண்டறிய அவர் உங்களுக்கு உதவுவார். தன் மனைவியால் எந்தளவு செய்ய முடியும் என்பதைக் கண்டறிய கணவர் உதவலாம். எந்த மாதத்தில் அப்படிச் செய்யத் திட்டமிட்டிருக்கிறாரோ, அதற்கு முன்னால் போதுமான ஓய்வு எடுக்கும்படி அவர் சொல்லலாம். அவ்வாறு செய்வது அவருக்குத் தெம்பளிப்பதோடு, ஊழியத்தைச் சந்தோஷமாய்ச் செய்யவும் உதவும்.
உங்களால் எதைச் செய்ய முடியும் என்பதைத் தீர்மானியுங்கள்
வயதாகும்போது அல்லது நோய்வாய்ப்படும்போது நம்மால் யெகோவாவுக்கு அதிகமாகச் சேவைசெய்ய முடியாமல் போகலாம். நீங்கள் ஒரு பெற்றோரா? அப்படியென்றால், பிள்ளைகளைக் கவனிப்பதிலேயே உங்கள் நேரமும் சக்தியும் கரைந்துவிடுவதால், தனிப்பட்ட படிப்பிற்கு சரிவரக் கவனம் செலுத்த முடியவில்லை என்றோ கூட்டங்களிலிருந்து முழுமையாகப் பலன் பெற முடியவில்லை என்றோ கவலைப்படலாம். சில சமயங்களில், செய்ய முடியாததை நினைத்து அதிகமாகக் கவலைப்பட்டு, செய்ய முடிந்ததைச் செய்யாமல் விட்டுவிடுகிறோமா?
ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த லேவியர் ஒருவர் தனக்கிருந்த நிறைவேறாத ஆசையை வெளிப்படுத்தினார். வருடத்தில் இரண்டு வாரங்களுக்கு ஆலயத்தில் சேவை செய்வதற்கான ஒரு விசேஷ வாய்ப்பு அவருக்கு இருந்தது. என்றாலும், பலிபீடத்தின் அருகில் என்றைக்கும் தங்கியிருக்க வேண்டும் என்ற உன்னத ஆசையை அவர் வெளிப்படுத்தினார். (சங். 84:1-3) தனது ஆசை நிறைவேறாமல் போனாலும் திருப்தியோடு இருக்க உண்மையுள்ள இந்த லேவியருக்கு எது உதவியது? ஆலயப் பிராகாரங்களில் செலவழிக்கும் ஒரேவொரு நாள்கூட மிகவும் மதிப்புள்ளது என்பதை அவர் உணர்ந்துகொண்டதுதான். (சங். 84:4, 5, 10) அதேபோல, நம்மால் முடியாததை நினைத்துக் கவலைப்படுவதைவிட, நம்மால் எவற்றைச் செய்ய முடியும் என்பதைப் புரிந்துகொண்டு, அதற்கு நன்றியோடு இருக்க வேண்டும்.
உதாரணமாக, கனடாவைச் சேர்ந்த நெர்லாண்ட் என்ற சகோதரியை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் சக்கர நாற்காலியே கதியென்று கிடந்ததால், ஊழியத்தில் அதிகமாக ஈடுபட முடியவில்லையே என்று கவலைப்பட்டார். என்றாலும், தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டார். பக்கத்திலிருந்த அங்காடியைத் தன்னுடைய தனிப்பட்ட ஊழியப் பிராந்தியமாகக் கருதினார். “அந்த அங்காடியில் போடப்பட்டிருந்த பெஞ்சு அருகே சக்கர நாற்காலியில் அமர்ந்துகொள்வேன். சற்று ஓய்வெடுப்பதற்காக அந்த பெஞ்சில் வந்து உட்காருவோருக்குச் சாட்சி கொடுப்பேன். இது எனக்கு சந்தோஷத்தைத் தருகிறது” என்று அவர் சொல்கிறார். இவ்வாறு ஊழியத்தின் இந்த முக்கியமான அம்சத்தில் ஈடுபடுவது நெர்லாண்டுக்கு அதிக திருப்தியைத் தருகிறது.
தேவைப்பட்டால் மாற்றங்களைச் செய்யுங்கள்
கப்பல் ஒன்றின் பாய்மரத்தின்மீது காற்று வீசுகையில் அது படுவேகமாகப் பயணிக்கலாம். ஆனால், பயங்கரமான புயல் தாக்கும்போது அந்தக் கப்பலில் சுக்கானை இயக்கும் மாலுமி பாய்மரத்தை அதற்கேற்றாற்போல் சரிசெய்தே ஆக வேண்டும். புயலை அவரால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், பாய்மரத்தில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் கப்பலைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். அதேபோல, வாழ்க்கையில் எதிர்ப்படும் புயல் போன்ற சூழ்நிலைகளை நம்மால் பெரும்பாலும் கட்டுப்படுத்த முடியாது. என்றாலும், நம்முடைய சக்தி, அறிவு, மனபலம், உணர்ச்சிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் விதத்தில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம், நம்முடைய வாழ்க்கையை முடிந்தளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். நம்முடைய புதிய சூழ்நிலைகளைக் கவனத்தில் கொள்ளும்போது, கடவுளுடைய சேவையில் நம்மால் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும்.—நீதி. 11:2.
சில உதாரணங்களைக் கவனியுங்கள். உடலில் பலம் இல்லாததுபோல் நாம் உணரும் சமயங்களில், பகல் முழுவதும் ஓய்வொழிச்சல் இன்றி வேலை செய்வதைத் தவிர்த்தால், மாலைக் கூட்டங்களில் கலந்துகொள்ள சக்தி இருக்கும்; நம்முடைய சக விசுவாசிகளோடு நன்கு அளவளாவ முடியும். பிள்ளை சுகமில்லாமல் இருக்கும்போது, ஒரு தாயால் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் கலந்துகொள்ள முடியாமற்போகலாம். அந்தச் சமயத்தில் ஒரு சகோதரியை வீட்டுக்கு வரச்சொல்லலாம்; குழந்தை தூங்கும் சமயத்தில் அவர்கள் தொலைபேசி மூலம் சாட்சி கொடுக்கலாம்.
கூட்டங்களில் சிந்திக்கப்போகும் எல்லா விஷயங்களையும் முன்னதாகவே கருத்தூன்றிப் படிப்பதற்கு உங்கள் சூழ்நிலை அனுமதிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்? உங்களால் எந்தளவுக்குத் தயாரிக்க முடியும் என்பதைத் தீர்மானித்து, அதை முடிந்தளவுக்கு நன்றாகச் செய்யுங்கள். இவ்வாறு, நம்முடைய அப்போதைய இலக்குகளைச் சற்று மாற்றியமைப்பதன் மூலம் உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் இருக்க முடியும்.
நம்முடைய இலக்குகளை மாற்றியமைத்துக்கொள்ள உறுதியான தீர்மானமும் முயற்சியும் தேவை. பிரான்சைச் சேர்ந்த செர்ஸ், ஆன்யெஸ் தம்பதியர் தங்களுடைய திட்டங்களில் பெரிய மாற்றத்தைச் செய்ய வேண்டியிருந்தது. “ஆன்யெஸ் கர்ப்பமாயிருப்பது தெரியவந்ததும், எங்களுடைய மிஷனரி கனவெல்லாம் கலைந்துபோனது” என்கிறார் செர்ஸ். இப்போது அவர், துருதுருப்பான இரு பெண் பிள்ளைகளுக்குத் தகப்பன். தம்பதியராக தங்களுடைய இலக்கை மாற்றிக்கொண்டது எப்படி என்பதை அவர் இவ்வாறு சொல்கிறார்: “வெளிநாட்டிற்குச் சென்று ஊழியம் செய்வதற்கு வாய்ப்பில்லை என்பதால், சொந்த நாட்டிலேயே ‘மிஷனரிகளைப்போல’ ஊழியம் செய்யலாம் என்று தீர்மானித்தோம். ஆகவே, அயல்மொழி பேசும் சபையில் சேர்ந்தோம்.” இந்தப் புதிய இலக்கு அவர்களுக்குப் பலன் தந்ததா? “சபைக்கு நாங்கள் அதிக பயனுள்ளவர்களாய் இருப்பதாக உணருகிறோம்” என்கிறார் செர்ஸ்.
பிரான்சைச் சேர்ந்த ஆடில் என்ற சகோதரிக்கு 70 வயதுக்கு மேலாகிவிட்டது. மூட்டுத் தேய்வின் (osteoarthritis) காரணமாக, அவரால் வெகு நேரம் நிற்க முடியாது. இதனால் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் கலந்துகொள்ள முடியவில்லையே என்று வருந்தினார். என்றாலும், அவர் தளர்ந்துவிடவில்லை. அதற்குப் பதிலாக, தொலைபேசி மூலம் சாட்சி கொடுக்க ஆரம்பித்தார். “இவ்வளவு நன்றாக, சுலபமாகச் செய்ய முடியும் என்று நான் நினைக்கவேயில்லை” என்று அவர் சொல்கிறார். இப்படி மாற்றம் செய்ததன் காரணமாக, அவரால் ஊழியத்தில் முன்புபோல் சுறுசுறுப்பாக ஈடுபட முடிந்தது.
நியாயமான எதிர்பார்ப்புகளால் வரும் ஆசீர்வாதங்கள்
நம்மால் எந்தளவு செய்ய முடியும் என்பதைத் தீர்மானிப்பது பல கவலைகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். சமநிலையான இலக்குகளை வைக்கையில், நமக்கிருக்கும் வரம்புகளின் மத்தியிலும் ஒரு சாதனை உணர்வு ஏற்படும். நாம் செய்வது கொஞ்சமாக இருந்தாலும், நம்மால் செய்ய முடிந்த காரியத்தை நினைத்துச் சந்தோஷப்பட முடியும்.—கலா. 6:4.
நம்மிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் காரியங்களில் நியாயத்தன்மையோடு நடந்துகொண்டால், சக கிறிஸ்தவர்களிடம் அதிக கரிசனையோடு நடந்துகொள்ள ஆரம்பிப்போம். அவர்களால் எவ்வளவு முடியும் என்பதை அறிந்திருப்பதால், அவர்கள் நமக்குச் செய்யும் எதையுமே நன்றியோடு ஏற்றுக்கொள்வோம். நமக்குச் செய்யப்படும் எந்தவொரு உதவிக்கும் நன்றியோடு இருப்பதன் மூலமாக, ஒருவரையொருவர் புரிந்துகொண்டு ஒத்துழைக்கும் மனப்பான்மையை வளர்க்க நாம் உதவுகிறோம். (1 பே. 3:8) அன்புள்ள தகப்பனாகிய யெகோவா நம்முடைய சக்திக்கு மிஞ்சிய எதையும் நம்மிடம் எதிர்பார்ப்பதில்லை என்பதை நினைவில் வையுங்கள். எனவே, நாம் எதார்த்தமான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்து, அடைய முடிந்த இலக்குகளை வைத்திருந்தால், ஆன்மீகக் காரியங்கள் வாயிலாக நமக்கு அதிக திருப்தியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.
[பக்கம் 29-ன் சிறு குறிப்பு]
கடவுளுடைய சேவையில் சந்தோஷத்தையும் திருப்தியையும் காண, நம்முடைய திறமைகளுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்றாற்போல நியாயமான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்க வேண்டும்
[பக்கம் 30-ன் படம்]
நெர்லாண்ட் தன்னால் முடிந்தளவு ஊழியத்தில் ஈடுபட்டு, சந்தோஷம் காண்கிறார்
[பக்கம் 31-ன் படம்]
“பாய்மரத்தை மாற்றியமைக்க” கற்றுக்கொள்ளுங்கள்
[படத்திற்கான நன்றி]
© Wave Royalty Free/age fotostock
[பக்கம் 32-ன் படம்]
செர்ஸ், ஆன்யெஸ் தம்பதியர் புதிய இலக்குகளை வைப்பதன்மூலம் பயனடைந்தனர்