வயதான ஊழியர்களை யெகோவா அன்போடு கவனித்துக்கொள்கிறார்
“உங்கள் கிரியையையும் . . . தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே.”—எபி. 6:10.
1, 2. (அ) நரை முடியுள்ள ஒருவரைப் பார்க்கும்போது எது உங்கள் நினைவுக்கு வரலாம்? (ஆ) முதிர்வயதுள்ள கிறிஸ்தவர்களை யெகோவா எவ்வாறு கருதுகிறார்?
சபையில் நரை முடியுள்ள முதியவர்களை நீங்கள் பார்க்கும்போது தானியேல் புத்தகத்திலுள்ள ஒரு பதிவு உங்கள் நினைவுக்கு வருகிறதா? தானியேலுக்குக் கொடுத்த ஒரு தரிசனத்தில் யெகோவா தேவன் தம்மை நரை முடியுள்ளவராகச் சித்தரித்தார். அதை தானியேல் இவ்வாறு எழுதினார்: “நான் பார்த்துக்கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது; நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்; அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போலவும், அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப்போல துப்புரவாகவும் இருந்தது.”—தானி. 7:9.
2 சுத்தமான பஞ்சு வெள்ளை நிறத்தில்தான் இருக்கும். எனவே, வெள்ளை முடியும், “நீண்ட ஆயுசுள்ளவர்” என்ற பட்டப்பெயரும் கடவுள் வயதிலும் ஞானத்திலும் பெரியவர் என்பதை உணர்த்துகின்றன. அதோடு, ஆழ்ந்த மரியாதையைப் பெறத் தகுதியுள்ளவர் என்பதையும் காட்டுகின்றன. அப்படியானால், நீண்ட ஆயுசுள்ளவரான யெகோவா உண்மையுள்ள முதியவர்களை எவ்வாறு கருதுகிறார்? “நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிரானது மகிமையான கிரீடம்” என்று கடவுளுடைய வார்த்தை கூறுகிறது. (நீதி. 16:31) ஆம், உண்மையுள்ள ஒரு கிறிஸ்தவரின் முடி நரைக்கும்போது அந்த முதிர்ச்சியான தோற்றம் கடவுளின் பார்வைக்கு அழகாக இருக்கிறது. வயதான சகோதர சகோதரிகளை யெகோவா பார்க்கும் விதமாகவே நீங்களும் பார்க்கிறீர்களா?
அவர்கள் மதிப்புமிக்கவர்கள்—ஏன்?
3. வயதான சகோதர சகோதரிகள் ஏன் மதிப்புமிக்கவர்கள்?
3 அப்படிப்பட்ட முதிர்வயதுள்ள அன்பான ஊழியர்களில் யெகோவாவின் சாட்சிகளின் ஆளும் குழுவினர், முன்னாளைய இந்நாளைய பயணக் கண்காணிகள், பக்திவைராக்கியமுள்ள பயனியர்கள், நம் சபையிலிருக்கும் முதிர்ச்சி வாய்ந்த சகோதர சகோதரிகள் ஆகியோரும் உள்ளனர். பல ஆண்டுகளாக நற்செய்தியைப் பக்திவைராக்கியமாக அறிவித்துவரும் சிலரை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவர்களுடைய நல்ல முன்மாதிரி இளைஞர்களை ஊக்கப்படுத்தியிருக்கலாம், அவர்களைச் செதுக்கிச் சீராக்கியிருக்கலாம். வயதான சகோதர சகோதரிகளில் சிலர் பாரமான பொறுப்புகளைச் சுமந்திருக்கிறார்கள், நற்செய்தியின் காரணமாக துன்புறுத்தலைச் சகித்திருக்கிறார்கள். ராஜ்ய வேலைக்காக அவர்கள் செய்த, செய்துவருகிற சேவையை யெகோவாவும் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பாரும் உயர்வாய்க் கருதுகிறார்கள்.—மத். 24:45, NW.
4. முதிர்வயதுள்ள கிறிஸ்தவர்களுக்கு நாம் ஏன் மரியாதை காட்ட வேண்டும், அவர்களுக்காக ஏன் ஜெபம் செய்ய வேண்டும்?
4 உண்மையுள்ள இதுபோன்ற முதியவர்கள் மற்ற ஊழியர்களின் நன்றியையும் மரியாதையையும் பெறுவதற்குத் தகுதியானவர்களாக இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், நியாயப்பிரமாணச் சட்டம் முதியோருக்குக் கரிசனையும் மரியாதையும் காட்டுவதை யெகோவாவுக்குப் பயப்படுகிற பயத்தோடு இணைத்துப் பேசுகிறது. (லேவி. 19:32) உண்மையுள்ள இவர்கள் அன்போடு செய்யும் சேவைக்காக நாம் கடவுளுக்கு நன்றி சொல்லி, எப்போதும் ஜெபம் செய்ய வேண்டும். இளையோரும் முதியோருமான தனது அன்பான சக ஊழியர்களுக்காக அப்போஸ்தலன் பவுல் ஜெபம் செய்தார்.—1 தெசலோனிக்கேயர் 1:2, 4-ஐ வாசியுங்கள்.
5. வயதான ஊழியர்களோடு பழகுவதால் நாம் எவ்வாறு பயனடையலாம்?
5 மேலுமாக, வயதான சகோதர சகோதரிகளோடு பழகுவதால் சபையிலுள்ள அனைவரும் பயனடைய முடியும். படிப்புப் பழக்கம், அனுபவம், கவனித்த விஷயங்கள் ஆகியவற்றின் மூலம் பெற்ற அறிவெனும் பொக்கிஷம் யெகோவாவின் உண்மையுள்ள இந்த ஊழியர்களிடம் உள்ளது. பொறுமையாயிருப்பதற்கும் மற்றவர்களின் இடத்தில் தங்களை வைத்துப் பார்ப்பதற்கும் இவர்கள் கற்றிருக்கிறார்கள். தாங்கள் கற்றுக்கொண்டவற்றை இளம் தலைமுறையினருக்குச் சொல்லித்தருகையில், அது இவர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தையும் திருப்தியையும் அளிக்கிறது. (சங். 71:18) இளைஞர்களே, நீங்களும் ஞானமுள்ளவர்களாக இருந்து, ஆழமான கிணற்றிலுள்ள தண்ணீரை மொண்டெடுப்பதுபோல இவர்களுடைய அறிவெனும் பொக்கிஷத்திலிருந்து பயனடையுங்கள்.—நீதி. 20:5.
6. முதியவர்களை நீங்கள் உண்மையிலேயே அருமையானவர்களாகக் கருதுவதை எப்படிக் காட்டலாம்?
6 வயதானவர்களை யெகோவா அருமையானவர்களாகக் கருதுவதுபோல நீங்களும் கருதுகிறீர்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்களா? இதற்கு ஒரு வழி, அவர்கள் உண்மைத்தன்மையோடு நிலைத்திருப்பதால் அவர்களை நீங்கள் எவ்வளவாய் நேசிக்கிறீர்கள், அவர்களுடைய கருத்துகளை எவ்வளவாய் மதிக்கிறீர்கள் என்பதைச் சொல்வதாகும். மேலுமாக, அவர்களிடமிருந்து நீங்கள் கற்றவற்றை வாழ்க்கையில் கடைப்பிடிக்கும்போது உண்மையிலேயே அவர்களை மதிப்பதைக் காட்டுகிறீர்கள். வயதான அநேக சகோதர சகோதரிகள், உண்மையுள்ள முதியவர்களிடமிருந்து தாங்கள் பெற்ற அறிவுரைகளையும் அவற்றின்படி செயல்பட்டபோது வாழ்நாள் முழுவதும் கிடைத்த நன்மைகளையும் நினைத்துப் பார்க்கிறார்கள்.a
நடைமுறையான வழிகளில் கரிசனை காட்டுங்கள்
7. முதியவர்களைக் கவனித்துக்கொள்ளும் முக்கியப் பொறுப்பு யாருக்கு இருப்பதாக யெகோவா கூறுகிறார்?
7 முதியவர்களைக் கவனித்துக்கொள்ளும் முக்கியப் பொறுப்பு அவர்களுடைய குடும்பத்தாருக்கு இருப்பதாக கடவுள் சொல்கிறார். (1 தீமோத்தேயு 5:4, 8-ஐ வாசியுங்கள்.) முதியவர்களுக்குச் செய்யவேண்டிய கடமையைக் குடும்பத்தார் செய்யும்போது, அவர்கள் தம்மைப்போலவே முதியவர்களிடம் அக்கறை காட்டுவதால் யெகோவா சந்தோஷப்படுகிறார். இப்படிக் குடும்பத்தார் செய்யும் முயற்சிகளுக்காகவும் தியாகங்களுக்காகவும் கடவுள் அவர்களை ஆதரித்து ஆசீர்வதிக்கிறார்.b
8. வயதான சகோதர சகோதரிகளிடம் சபையார் ஏன் அக்கறை காட்ட வேண்டும்?
8 சில சமயம், உண்மையுள்ள இந்த முதியவர்களின் குடும்பத்தார் சத்தியத்தில் இல்லாமலோ அவர்களைக் கவனித்துக்கொள்ளும் விருப்பம் இல்லாமலோ இருக்கலாம். அந்தச் சூழ்நிலைகளில் சபையில் உள்ளவர்கள் அவர்களுக்கு உதவும்போது யெகோவா சந்தோஷப்படுகிறார். (1 தீ. 5:3, 5, 9, 10) இதன்மூலம் முதியவர்களிடம் ‘இரக்கமுள்ளவர்களும், சகோதர சிநேகமுள்ளவர்களும், மனஉருக்கமுள்ளவர்களுமாக’ இருப்பதைச் சபையார் காட்டுகிறார்கள். (1 பே. 3:8) சபையிலுள்ள முதியோரிடம் அவர்கள் காட்டுகிற அக்கறையை பவுல் நன்றாக விளக்குகிறார். மனித உடல் உறுப்புகளில் ஒன்று துன்பப்பட்டால் “மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து துன்புறும்” என்று அவர் சொல்கிறார். (1 கொ. 12:26, பொது மொழிபெயர்ப்பு) நடைமுறையான வழிகளில் முதியவர்களுக்குக் கரிசனை காட்டுவது பவுலின் இந்த அறிவுரையிலுள்ள நியமத்தை நாம் கடைப்பிடிப்பதைத் தெளிவாக்குகிறது: “ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.”—கலா. 6:2.
9. முதிர்வயதில் ஒருவர் என்னென்ன பாரங்களைச் சுமக்க நேரிடுகிறது?
9 முதியவர்கள் என்னென்ன பாரங்களைச் சுமக்கிறார்கள்? அவர்களில் அநேகர் சீக்கிரத்தில் களைப்படைந்துவிடுகிறார்கள். மருத்துவரிடம் செல்வது, வீட்டைச் சுத்தம் செய்வது, சமைப்பது, பிற வெளி வேலைகள் ஆகிய அடிப்படைக் காரியங்களைச் செய்வதே அவர்களுக்குச் சிரமமாய் இருப்பதாக நினைக்கலாம். வயதாகையில் பசியும் தாகமும் குறைந்துபோவதால் தங்களுக்குத் தேவையானதைவிடக் குறைவாகச் சாப்பிட்டாலே அல்லது குடித்தாலே போதும் என்று அவர்கள் நினைக்கலாம். அதேபோல ஆன்மீகக் காரியங்களிலும் அவர்கள் இவ்வாறு உணரலாம். பார்க்கும் திறனும் கேட்கும் திறனும் குறைவதால் வாசிப்பதும் கூட்டங்களில் கவனிப்பதும் அவர்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். கூட்டங்களுக்குச் செல்லத் தயாராவதே அவர்களுக்குப் பெரும் வேலையாக இருக்கலாம். இவ்வாறு அவதிப்படுகிற முதியவர்களுக்கு மற்றவர்கள் எப்படி உதவலாம்?
நீங்கள் எப்படி உதவலாம்?
10. முதியவர்கள் நடைமுறையான உதவி பெறுவதற்கு மூப்பர்கள் என்ன செய்யலாம்?
10 அநேக சபைகளில் முதியவர்களை மிக நன்றாகக் கவனித்துக்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கடைக்குச் செல்வது, சமைப்பது, சுத்தம் செய்வது ஆகிய வேலைகளில் அன்பான சகோதர சகோதரிகள் அவர்களுக்கு உதவுகிறார்கள். படிப்பதற்கும், கூட்டங்களுக்குத் தயாராவதற்கும், ஊழியத்தில் தவறாமல் கலந்துகொள்வதற்கும் அவர்கள் உதவுகிறார்கள். இளைஞர்கள் அவர்களைத் தங்களோடு வாகனத்தில் அழைத்துச் செல்கிறார்கள். அவர்கள் கூட்டங்களுக்குச் செல்ல முடியாத நிலையில் இருந்தால், தொலைபேசி மூலம் பேச்சுகளைக் கேட்க ஏற்பாடு செய்கிறார்கள் அல்லது அவற்றைப் பதிவு செய்து கொடுக்கிறார்கள். முடிந்தவரை சபையிலுள்ள முதியவர்களின் தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்கு மூப்பர்கள் நடைமுறையான ஏற்பாடுகளைச் செய்கிறார்கள்.c
11. ஒரு குடும்பத்தார் வயதான சகோதரர் ஒருவருக்கு உதவியதை விளக்குங்கள்.
11 தனிப்பட்ட கிறிஸ்தவர்களும் வயதானவர்களை உபசரித்து தாராள மனப்பான்மையைக் காட்டலாம். ஒரு முதியவரின் மனைவி இறந்த பிறகு, மனைவியின் ஓய்வூதியமின்றி அவரால் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் போனது. அவரும் அவருடைய மனைவியும் ஒரு குடும்பத்திற்கு பைபிள்படிப்பு நடத்தியிருந்தார்கள். தாய், தந்தை, இரண்டு இளவயது பெண் பிள்ளைகள் ஆகியோர் அடங்கிய அந்தக் குடும்பத்தார் ஒரு பெரிய வீட்டில் குடியிருந்தார்கள். அவர்கள் இந்த முதியவர் தங்குவதற்குத் தங்கள் வீட்டில் இரண்டு அறைகளை ஒதுக்கிக் கொடுத்தார்கள். அவர் 15 வருடங்களாக அவர்களோடு இருந்தார். அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து சாப்பிட்டார்கள், சந்தோஷமாகப் பொழுதைக் கழித்தார்கள், சகோதர அன்பைப் பகிர்ந்துகொண்டார்கள். அந்த இளம் பிள்ளைகள் அவருடைய விசுவாசத்திலிருந்தும் அனுபவத்திலிருந்தும் பெரிதும் பயனடைந்தார்கள். சந்தோஷமான கூட்டுறவினால் அவரும் நன்மையடைந்தார். இந்தச் சகோதரர் 89 வயதில் இறக்கும்வரை அவர்களோடு இருந்தார். அவரோடு பழகியதால் பெற்ற ஏராளமான ஆசீர்வாதங்களுக்காக இன்றும் அந்தக் குடும்பத்தார் கடவுளுக்கு நன்றி சொல்கிறார்கள். அவர்கள், இயேசு கிறிஸ்துவின் சீஷராக இருந்த அவருக்கு உதவியதால் அதற்குரிய “பலனை அடையாமற்” போகவில்லை.—மத். 10:42.d
12. வயதான சகோதர சகோதரிகளுக்குக் கரிசனைகாட்ட நீங்கள் என்ன செய்யலாம்?
12 வயதான ஒருவருக்கு இந்தக் குடும்பத்தார் உதவியதைப்போல உங்களால் உதவ முடியாமல் இருக்கலாம்; ஆனால், வயதான ஒருவரைக் கூட்டங்களுக்கும் ஊழியத்திற்கும் அழைத்துச் செல்ல முடியும் அல்லவா? மேலும், அவர்களை உங்கள் வீட்டிற்கு அழைக்கலாம்; சிற்றுலா செல்கையில் அவர்களையும் அழைத்துச் செல்லலாம். நீங்களும் அவர்கள் வீட்டிற்குச் செல்லலாம்; முக்கியமாக, அவர்கள் வியாதியாயிருக்கும்போதோ வீட்டிலேயே அடைபட்டுக்கிடக்கும்போதோ செல்லலாம். அதுமட்டுமல்ல, நீங்கள் எப்பொழுதும் அவர்களை முதிர்ச்சி வாய்ந்தவர்களாக நடத்தலாம், நடத்தவும் வேண்டும். வயதானவர்களுக்கு யோசித்துச் செயல்படும் திறன் இருக்கும்வரை அவர்களைப் பாதிக்கும் தீர்மானங்களை எடுக்கும் எல்லாச் சமயங்களிலும் அவர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்படிச் செயல்பட முடியாத நிலையில் இருந்தாலும்கூட அவர்களை நாம் மதித்து நடக்கிறோமா என்பதை அவர்களால் உணர்ந்துகொள்ள முடியும்.
உங்கள் சேவையை யெகோவா மறக்கமாட்டார்
13. வயதான சகோதர சகோதரிகளின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுப்பது ஏன் முக்கியம்?
13 வயதானவர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுப்பது முக்கியமாகும். இளமைத் துடிப்போடு ஆரோக்கியமாக இருந்தபோது செய்த அனைத்தையும் இப்பொழுது செய்யமுடியவில்லையே என நினைத்து அவர்கள் மிகவும் வருத்தப்படுவது சகஜம்தான். உதாரணமாக, ஒரு சகோதரி சுமார் 50 வருடங்களாக யெகோவாவுக்குச் சுறுசுறுப்பாகச் சேவை செய்தார்; ஒழுங்கான பயனியராகவும் இருந்தார். பிற்பாடு அவர் வியாதியால் பலவீனமடைந்துவிட்டதால் கூட்டங்களில் கலந்துகொள்வதே அவருக்குப் பெரும்பாடாகிவிட்டது. முன்புபோல் தன்னால் ஊழியத்தில் ஈடுபட முடியவில்லையே என நினைத்தபோது அவரால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தலையைத் தாழ்த்தி, கண்ணீர் மல்க, “நான் எதற்கும் பிரயோஜனமில்லாமல் போய்விட்டேனே” என்று சொன்னார்.
14. சங்கீதங்களிலிருந்து என்ன ஊக்கமூட்டுதலை வயதான ஊழியர்கள் பெறலாம்?
14 நீங்கள் வயதானவராக இருந்தால், இதுபோல நீங்களும் மனமுடைந்து போயிருக்கிறீர்களா? அல்லது, யெகோவா உங்களைக் கைவிட்டிருக்கலாம் என எப்பொழுதாவது நினைத்திருக்கிறீர்களா? சங்கீதக்காரன் தன்னுடைய முதிர்வயதில் இவ்வாறு உணர்ந்திருக்கலாம். “முதிர்ந்த வயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும். . . . முதிர் வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக” என்று அவர் யெகோவாவிடம் கெஞ்சினார். (சங். 71:9, 18) நிச்சயமாக, இந்தச் சங்கீதக்காரனை யெகோவா கைவிடவில்லை; அதுபோல, உங்களையும் அவர் கைவிடமாட்டார். இன்னொரு சங்கீதத்தில் தாவீது கடவுள்மேல் உள்ள தன் நம்பிக்கையை இவ்வாறு வெளிக்காட்டினார்: “ஆண்டவர் ஸ்தோத்திரத்திற்குரியவர், அவர் தினந்தினம் நமது பாரங்களைச் சுமக்கிறார்; அவரே நமது ரட்சிப்பின் கடவுள்” (சங். 68:19, திருத்திய மொழிபெயர்ப்பு) நீங்கள் வயதான உண்மையுள்ள கிறிஸ்தவராயிருந்தால் யெகோவா உங்களோடு இருக்கிறார் என்றும் தினந்தினம் உங்களை அவர் பராமரிப்பார் என்றும் நிச்சயமாயிருங்கள்.
15. நம்பிக்கையான மனநிலையை வளர்த்துக்கொள்ள வயதானவர்களுக்கு எது உதவும்?
15 யெகோவாவின் வயதான ஊழியர்களான நீங்கள் கடவுளுடைய மகிமைக்காகச் செய்த, செய்து வருகிற அனைத்தையும் அவர் மறக்க மாட்டார். “உங்கள் கிரியையையும் . . . தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே” என்று பைபிள் சொல்கிறது. (எபி. 6:10) ஆகவே, ‘எனக்கு வயதாகிவிட்டது, இனி என்னால் யெகோவாவுக்கு எந்தப் பிரயோஜனமுமில்லை’ என்று தவறாக நினைப்பதைத் தவிருங்கள். மனதுக்குச் சோர்வூட்டுகிற, நம்பிக்கையைக் குலைக்கிற விஷயங்களை யோசிப்பதற்குப் பதிலாக நம்பிக்கையூட்டும் விஷயங்களை யோசியுங்கள். எதிர்கால நம்பிக்கையையும் உங்களுக்குக் கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்களையும் நினைத்துச் சந்தோஷப்படுங்கள். நமக்கு ‘வளமான எதிர்காலமும் நம்பிக்கையும்’ இருக்கிறது. நமது படைப்பாளர் இவற்றைத் தருவதாக உறுதியளித்திருக்கிறார். (எரே. 29:11, 12, பொ.மொ; அப். 17:31; 1 தீ. 6:19) எனவே, உங்களுடைய நம்பிக்கையைக் குறித்து எப்பொழுதும் சிந்தித்துக்கொண்டிருங்கள். மனதளவில் நீங்கள் இளைஞரென்று நினையுங்கள்; கூட்டங்களில் நீங்கள் கலந்துகொள்வதை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்.e
16. வயதான சகோதரர் ஒருவர் மூப்பராகச் சேவை செய்ய வேண்டாமென ஏன் நினைத்தார்; ஆனால், மூப்பர்கள் அவரை எவ்வாறு ஊக்கப்படுத்தினார்கள்?
16 யோஹான் என்ற 80 வயது சகோதரருடைய உதாரணத்தைக் கவனியுங்கள். தற்போது முடியாமலிருக்கும் அவருடைய மனைவி ஸானியை முழுநேரமும் அவர் கவனித்துக்கொள்கிறார்.f யோஹான் கூட்டங்களுக்கும் ஊழியத்திற்கும் செல்வதற்காக சகோதரிகள் மாற்றி மாற்றி ஸானியைக் கவனித்துக்கொள்கிறார்கள். என்றாலும், சமீபத்தில் யோஹான் மிகவும் மனமொடிந்துபோனதால், இனி மூப்பராகச் சேவை செய்ய வேண்டாமென நினைக்க ஆரம்பித்தார். “நானெல்லாம் மூப்பராக இருந்து என்ன பயன்? சபைக்குப் பிரயோஜனமாக எதுவும் செய்வதில்லையே” என்று கண்ணீர் பொங்க அவர் சொன்னார். அவருடைய அனுபவமும், யோசித்து முடிவெடுக்கும் திறமையும் மதிப்புமிக்கவை எனச் சொல்லி சக மூப்பர்கள் அவருக்குத் தெம்பூட்டினார்கள். சபையில் அவர் பங்கேற்பது கொஞ்சமாக இருந்தாலும் தொடர்ந்து மூப்பராகச் சேவை செய்யும்படி ஊக்கப்படுத்தினார்கள். அவர் மிகவும் உற்சாகமடைந்து மூப்பராகத் தொடர்ந்து சேவை செய்துவருகிறார், சபைக்கு ஆசீர்வாதமாகவும் இருக்கிறார்.
யெகோவா உண்மையிலேயே பராமரிக்கிறார்
17. வயதான கிறிஸ்தவர்களுக்கு பைபிள் என்ன உறுதியை அளிக்கிறது?
17 முதிர்வயது, அதனால் வரும் பிரச்சினைகள் இவற்றின் மத்தியிலும் வயதானவர்கள் தொடர்ந்து யெகோவாவின் சேவையில் பலன் தருகிறவர்களாக இருக்கிறார்கள் என பைபிள் தெளிவாகச் சொல்கிறது. “கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் . . . முதிர்வயதிலும் கனிதந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்” என்று சங்கீதக்காரன் சொன்னார். (சங். 92:13, 15) அப்போஸ்தலன் பவுலும்கூட ஏதோவொரு உடல் உபாதையால் கஷ்டப்பட்டிருக்கலாம். ஆனால், அவருடைய ‘புறம்பான மனுஷன் அழிந்தாலும் அவர் சோர்ந்து போகவில்லை.’—2 கொரிந்தியர் 4:16–18-ஐ வாசியுங்கள்.
18. வயதான ஊழியர்களுக்கும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் மற்றவர்களுடைய உதவி ஏன் தேவை?
18 வயதானவர்கள் தொடர்ந்து ‘கனி தருகிறார்கள்’ என்பதற்கு இன்றைக்கும் அநேக உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால், அவர்களைப் பராமரிப்பதற்குக் குடும்பத்தார் இருந்தாலும், வியாதியும் வயோதிகமும் அவர்களைச் சோர்வடையச் செய்யலாம். பராமரிப்பவர்களும்கூட களைப்படைந்து போகலாம். வயதானவர்களுக்காகவும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்காகவும் தங்களுடைய அன்பைச் செயலில் காட்டும் பாக்கியமும் பொறுப்பும் சபையாருக்கு இருக்கிறது. (கலா. 6:10) அப்படி நாம் உதவுவதன் மூலம், “குளிர்காய்ந்து பசியாறுங்கள்” என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் நடைமுறையாகவும் உதவுகிறோம்.—யாக். 2:15–17.
19. வயதான உண்மை ஊழியர்கள் எதிர்காலத்தைக் குறித்து ஏன் நம்பிக்கையோடு இருக்கலாம்?
19 வயதாகும்போது ஒரு கிறிஸ்தவரால் முன்புபோல் அதிகமாகச் சேவை செய்ய முடியாமல் போகலாம்; ஆனால், தம்முடைய உண்மை ஊழியர்கள்மீது யெகோவா வைத்திருக்கும் அன்பு குறையாது. மாறாக, அவர்கள் அனைவருமே அவருடைய பார்வையில் மதிப்புள்ளவர்கள்; அவர்களை அவர் கைவிடவே மாட்டார். (சங். 37:28; ஏசா. 46:4) வயதான காலம் முழுவதிலும் யெகோவா அவர்களைப் பராமரித்து வழிநடத்துவார்.—சங். 48:14.
[அடிக்குறிப்புகள்]
a ஜூன் 1, 2007 தேதியிட்ட காவற்கோபுரத்தில் உள்ள “இளையோருக்கு வரப்பிரசாதமாயுள்ள முதியோர்” என்ற கட்டுரையைக் காண்க.
b குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் புத்தகத்தில் “நம் வயதான பெற்றோரைக் கனம்பண்ணுதல்” என்ற தலைப்பிலுள்ள அதிகாரம் 15-ஐக் காண்க.
c சில நாடுகளில், முதியவர்கள் அரசாங்கத்திலிருந்து சலுகை பெற உதவுவதையும் இது குறிக்கலாம். ஜூன் 1, 2006 தேதியிட்ட காவற்கோபுரத்தில் உள்ள “முதியோரிடம் கடவுள் அக்கறை காட்டுகிறார்” என்ற கட்டுரையைக் காண்க.
d செப்டம்பர் 1, 2003 தேதியிட்ட காவற்கோபுரத்தில் உள்ள “யெகோவா எப்போதும் நம்மை கவனித்துக் கொள்கிறார்” என்ற கட்டுரையைக் காண்க.
e மார்ச் 15, 1993, ஆங்கில காவற்கோபுரத்தில் உள்ள “நரைமயிரின் மகிமை” என்ற கட்டுரையைக் காண்க.
f பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
உங்கள் பதில் என்ன?
• உண்மையுள்ள வயதான ஊழியர்களை நீங்கள் ஏன் மதிப்புமிக்கவர்களாகக் கருதுகிறீர்கள்?
• வயதான ஊழியர்களிடம் நாம் எவ்வாறு கரிசனை காட்டலாம்?
• வயதான சகோதர சகோதரிகள் நம்பிக்கையான மனநிலையோடிருக்க எது உதவும்?
[பக்கம் 18-ன் படங்கள்]
வயதானவர்களை சபையார் மிகவும் மதிப்புள்ளவர்களாகக் கருதுகிறார்கள்