இயேசுவைப் பின்பற்றி கடவுள் விரும்பும் விதத்தில் வழிபடுங்கள்
கடவுள் தம்மை வழிபடும்படி “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்த” மக்களுக்கு அன்புடன் அழைப்பு விடுக்கிறார். (வெளி. 7:9, 10; 15:3, 4) இந்த அழைப்பை ஏற்றுக்கொள்பவர்களால் ‘யெகோவாவின் இனிமையைக் காண’ முடிகிறது. (சங். 27:4, NW; 90:17, NW) சங்கீதக்காரனைப் போல அவர்களும் தங்களுடைய குரலை உயர்த்தி, “நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம்” என்று சொல்லி கடவுளைப் புகழ்கிறார்கள்.—சங். 95:6.
கடவுள் பார்வையில் ஒப்பற்ற வழிபாடு
இயேசு கணக்கிலடங்கா காலமாய்த் தம் தகப்பனுடன் பரலோகத்தில் வாழ்ந்திருந்ததால் அவருடைய எண்ணங்களையும் நியமங்களையும் நெறிமுறைகளையும் அத்துப்படியாக அறிந்திருந்தார். ஆகவே, முழு நம்பிக்கையோடு உண்மை வழிபாட்டிற்கான வழியை அவரால் காட்ட முடிந்தது. “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்று அவர் சொன்னார்.—யோவா. 1:14; 14:6.
தம் தகப்பனுக்குத் தாழ்மையோடு கீழ்ப்பட்டிருப்பதில் இயேசு தலைசிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தார். “நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன்” என்று அவர் கூறினார். ‘பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறேன்’ என்றும் அவர் கூறினார். (யோவா. 8:28, 29) எவ்விதங்களில் அவர் தம் தகப்பனுக்குப் பிரியமாக நடந்தார்?
முதலாவது, அவர் கடவுளுக்குத் தம்மை முழுமையாக அர்ப்பணித்திருந்தார். கடவுளை வழிபடுவதற்கு அடிப்படையே அதுதான். அவர் தம் தகப்பனுக்குக் கீழ்ப்படிந்திருந்தார், அவருடைய சித்தத்தைச் செய்தார். இதற்காக மிகப் பெரிய தியாகம் செய்ய வேண்டியிருந்தாலும், தம் தகப்பன் மீதுள்ள பற்றினால் அவ்வாறு செய்தார். (பிலி. 2:7, 8) வழிபாட்டில் இயேசுவுக்கு முக்கியமாயிருந்த மற்றொரு அம்சம், சீஷராக்கும் வேலை. அந்த வேலையில் அவர் தவறாமல் ஈடுபட்டார். அவர் அந்தளவு ஈடுபட்டதால் அவரை விசுவாசித்தவர்களும் சரி மற்றவர்களும் சரி, போதகர் என்றே அவரை அழைத்தார்கள். (மத். 22:23, 24; யோவா. 3:2) அதுமட்டுமல்ல, அவர் மற்றவர்களுக்காகத் தம் நேரத்தையும் சக்தியையும் செலவிட்டார். அவர் சுயதியாக மனப்பான்மையுள்ளவராய் இருந்ததால் தமக்காக அதிக நேரம் செலவிடவில்லை; மாறாக, மற்றவர்களுக்கு ஊழியம் செய்வதையே பெரிதாகக் கருதினார். (மத். 14:13, 14; 20:28) அவர் பிரசங்கிப்பதற்கு அதிக நேரம் செலவிட்ட போதிலும், தம் பரலோகத் தகப்பனோடு ஜெபத்தில் பேசுவதற்கும் நேரம் ஒதுக்கினார். (லூக். 6:12) ஆம், இயேசுவின் வழிபாடு கடவுளுடைய பார்வையில் ஒப்பற்றதாய் இருந்தது!
கடவுளுக்குப் பிரியமாய் நடப்பதில் போராட்டம்
தம் மகனுடைய நன்னடத்தையைக் கவனித்த யெகோவா அவர்மீது பிரியமாயிருப்பதாகக் கூறினார். (மத். 17:5) அதே சமயத்தில், இயேசு உண்மையோடு வாழ்ந்து வந்ததைப் பிசாசாகிய சாத்தானும் கவனித்தான். ஆகவே, இயேசு சாத்தானுடைய முக்கியக் குறியிலக்காக ஆனார். ஏன்? ஏனெனில், இயேசுவைத் தவிர எந்தவொரு மனிதனுமே கடவுளுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து அவர் விரும்பும் விதமாக அவரை வழிபடவில்லை. அதனால், துதிக்குத் தகுதியுள்ளவரான யெகோவாவை வழிபட விடாமல் இயேசுவைத் தடுக்கப் பிசாசு விரும்பினான்.—வெளி. 4:11.
ஆகவே, வசீகரமான ஒன்றைக் காட்டிச் சாத்தான் அவரைச் சோதிக்க முயன்றான். அவரை ‘மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்தான்.’ அதன் பிறகு, ‘நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்’ என்று சொன்னான். அதற்கு இயேசுவின் பதில் என்ன? “அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே” என்று கூறினார். (மத். 4:8–10) எப்படிப்பட்ட நன்மை கிடைப்பதாக இருந்தாலும் சரி, சாத்தானுக்குத் தலைவணங்குவது விக்கிரக வழிபாடாய் இருக்கும் என்பதை இயேசு உணர்ந்தார். யெகோவாவைத் தவிர வேறு எவரையுமே வழிபட அவர் விரும்பவில்லை.
ஒருவேளை, நம்மிடம் இந்த உலக ராஜ்யங்களையும் அவற்றின் மகிமையையும் காட்டி, தன்னை வணங்கினால் இவற்றையெல்லாம் தருவதாகச் சாத்தான் சொல்லப்போவதில்லை. ஆனாலும், நல்மனமுள்ள கிறிஸ்தவர்கள் கடவுளை வழிபடுவதைத் தடுக்க அவன் வேறு ஏதாவது விதத்தில் முயன்றுகொண்டுதான் இருக்கிறான். நாம் வேறு எவரையாவது அல்லது எதையாவது வழிபட வேண்டுமென்றே அவன் விரும்புகிறான்.—2 கொ. 4:4.
கிறிஸ்து இயேசு தம்முடைய மரணம் வரையில் உண்மையுள்ளவராய் நிலைத்திருந்தார். கடவுளுக்குத் தொடர்ந்து உத்தமராய் இருந்ததன் மூலம், இயேசு எந்தவொரு மனிதனும் செய்திராதளவுக்கு யெகோவாவை மகிமைப்படுத்தினார். இன்று, உண்மைக் கிறிஸ்தவர்களாய் இருக்கிற நாம் படைப்பாளரை வழிபடுவதற்கு முதலிடம் கொடுப்பதன் மூலம் இயேசுவின் அதே வாழ்க்கை முறையைப் பின்பற்ற முயலுகிறோம். உண்மையில், கடவுளோடு நாம் வைத்திருக்கிற பந்தமே நம்முடைய மிகப் பெரிய சொத்தாகும்.
ஆசீர்வாதங்களை அள்ளித்தரும் சரியான வழிபாடு
கடவுள் பார்வையில் ‘மாசில்லாததும் சுத்தமானதுமாய்’ இருக்கிற வழிபாட்டில் ஈடுபடும்போது அநேக ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன. (யாக். 1:27) உதாரணமாக, ‘தற்பிரியரும் பணப்பிரியரும் வீம்புக்காரரும்’ ‘நன்மையை விரும்பாதவர்களும்’ (NW) அதிகமதிகமாய்க் காணப்படுகிற காலத்தில் நாம் வாழ்கிறோம். (2 தீ. 3:1–5) என்றாலும், கடவுளுடைய வீட்டில், சுத்தமான, நல்ல ஆட்களுடன் பழகுவதற்கான வாய்ப்பை நாம் பெற்றிருக்கிறோம். இவர்கள் கடவுளை வழிபடுவதற்காக அவருடைய உயர்ந்த நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க முயலுபவர்கள். இது நம் மனதுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது, அல்லவா?
இந்த உலகத்தால் கறைபடாதபடி பார்த்துக்கொள்வதால், நம் மனசாட்சியைச் சுத்தமாக வைத்துக்கொள்ள முடிவது மற்றொரு ஆசீர்வாதமாகும். கடவுளுடைய நீதியான நியமங்களைக் கடைப்பிடித்து, கடவுளுடைய சட்டங்களோடு முரண்படாத அரசாங்கச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் சுத்தமான மனசாட்சியைக் காத்துக்கொள்ள நாம் விரும்புகிறோம்.—மாற். 12:17; அப். 5:27–29.
முழு ஆத்துமாவோடு கடவுளை வழிபடுவதால் இன்னொரு ஆசீர்வாதமும் கிடைக்கிறது. அதாவது, நம்முடைய விருப்பத்திற்கு முதலிடம் தராமல் கடவுளுடைய விருப்பத்திற்கு முதலிடம் தரும்போது நம்முடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாயும் நிறைவானதாயும் ஆகிறது. “புசிப்போம், குடிப்போம், நாளைக்குச் சாவோம்” என்று சொல்வதற்குப் பதிலாக, பரதீஸ் பூமியில் என்றென்றும் வாழும் உறுதியான நம்பிக்கையை நாம் பெற்றிருக்கிறோம்.—1 கொ. 15:32.
யெகோவாவின் முன்னிலையில் சுத்தமாக நிலைத்திருப்பவர்கள் ‘மிகுந்த உபத்திரவத்திலிருந்து’ தப்பிப் பிழைப்பார்கள் என வெளிப்படுத்துதல் புத்தகம் சுட்டிக்காட்டுகிறது. “சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் தமது கூடாரத்தை இவர்கள்மீது விரிப்பார்” (NW) என அங்கு சொல்லப்படுகிறது. (வெளி. 7:13–15) சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பவர் யெகோவா தேவனே; அவர்தான் இப்பிரபஞ்சத்திலேயே மிகவும் மகிமைபொருந்தியவர். அவர் தமது கூடாரத்திற்குள் உங்களை அழைத்து எந்தத் தீங்கும் ஏற்படாதபடி உங்களைப் பாதுகாப்பதை எண்ணிப்பார்ப்பது எவ்வளவு ஆனந்தமாய் இருக்கிறது! இப்போதும்கூட ஓரளவுக்கு அவருடைய பாதுகாப்பையும் அரவணைப்பையும் நம்மால் அனுபவிக்க முடியும்.
அதுமட்டுமா, கடவுள் விரும்புகிறபடி அவரை வழிபடுகிற அனைவரும் ‘ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்தப்படுவதாக’ பைபிள் குறிப்பிடுகிறது. புத்துணர்வு தரும் இந்த ஊற்றுகள், நாம் நித்திய வாழ்வைப் பெறுவதற்காக யெகோவா அளிக்கிற அனைத்து ஏற்பாடுகளையும் குறிக்கின்றன. ஆம், கிறிஸ்துவின் மீட்கும் பலியின் மூலம், “தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்.” (வெளி. 7:17) மனிதர் மீண்டும் பரிபூரண நிலையை அடைய உதவி பெறுவர்; பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கை உடையோருக்கு அது அளவில்லா ஆனந்தத்தைத் தரும். இப்போதும்கூட, கடவுளைச் சந்தோஷமாய் வழிபடுவோர் யெகோவாவுக்கு தங்களுடைய இதயப்பூர்வமான போற்றுதலை மகிழ்ச்சிபொங்க தெரிவிக்கிறார்கள். அதோடு, பரலோகத்திலிருந்து பின்வருமாறு பாடுகிறவர்களோடு சேர்ந்து இவர்களும் யெகோவாவை வழிபடுகிறார்கள். “சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின.”—வெளி. 15:3, 4.
[பக்கம் 27-ன் படம்]
எதைக் காட்டி நம் வழிபாட்டைப் பெற சாத்தான் முயலுகிறான்?