சந்தைவெளியில் சாட்சி கொடுத்தல்
முதல் நூற்றாண்டில், அத்தேனே பட்டணத்தில் இருக்கையில் அப்போஸ்தலன் பவுல் தினந்தோறும் சந்தைவெளிக்கு சென்றார். எதற்காக? இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதற்காக. (அப். 17:17) அதுமட்டுமல்ல, அத்தேனே மக்கள் சந்தைவெளியில்தான் பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டார்கள்.
இன்று, ஏறக்குறைய 2,000 வருடங்களுக்குப் பிறகு, யெகோவாவின் மக்களும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய செய்தியை அறிவிப்பதற்காகச் சந்தைவெளிக்குச் செல்கிறார்கள். ஏன்? ஏனென்றால், அங்குதான் ஏராளமானோரை அவர்களால் பார்க்க முடிகிறது. இன்றுள்ள பஜார் அல்லது அங்காடிகளைச் சந்தைவெளிகளாக நாம் எடுத்துக்கொள்ளலாம். யெகோவாவின் சாட்சிகள் சிலர், கடை முதலாளியிடம் அல்லது மானேஜரிடம் அனுமதி பெற்று கடைக்கு முன்பாக மேஜையிலோ, ஸ்டாண்டிலோ பைபிள் பிரசுரங்களைப் பரப்பி வைக்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்ஸியில் பல்பொருள் அங்காடி ஒன்றில் யெகோவாவின் சாட்சிகள் அப்படித்தான் செய்தார்கள். “குடும்ப நெறிகள்—கடைப்பிடிப்பது எப்படி?” என்ற பொருளில் மக்களின் கண்களைக் கவரும் விதத்தில் பைபிள் பிரசுரங்களை அவர்கள் அழகாக அடுக்கி வைத்திருந்தார்கள். இதனால் கிடைத்த பலன்? அந்த ஒரே நாளில், ஆறு மொழிகளில் 153 புத்தகங்களை மக்கள் வாங்கிச் சென்றார்கள்.
பிரசுரத்தைப் பற்றி நம் சகோதரி ஒருவர் விளக்கம் அளித்ததை அங்கு வந்திருந்த ஒரு பெண்மணி காதுகொடுத்துக் கேட்டார். சொந்த வாழ்க்கையிலும் சரி குடும்பத்திலும் சரி, எதைச் செய்தாலும் கடவுளை மனதில் வைத்துச் செய்வது அவசியம் என்பதை அவர் ஒப்புக்கொண்டார். பெரிய போதகரிடம் கற்றுக்கொள், குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம், இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் ஆகிய புத்தகங்களை அவர் பெற்றுச் சென்றார்.
அன்று பிற்பகலில், பக்கத்துக் கடைக்குப் போய்க்கொண்டிருந்த ஒருவரின் கண்ணில் இளைஞர் கேட்கின்றனர் புத்தகம் பட்டது. அவர் அதையே உற்றுப்பார்த்ததை நம் சகோதரி கவனித்தார். “இதில் உங்களுக்குப் பிடித்த புத்தகம் ஏதாவது இருக்கிறதா?” என்று சகோதரி கேட்டார். அவர் தலையசைத்து, இளைஞர் கேட்கின்றனர் புத்தகத்தைச் சுட்டிக்காட்டினார். அவர் அதை எட்டி எடுப்பதற்குள் சகோதரி அந்தப் புத்தகத்தை எடுத்து அவரிடம் கொடுத்தார். அவருக்கு மூன்று பையன்களாம். வாரம் ஒருமுறை அவர்களோடு உட்கார்ந்து பேசுவாராம். முதல் இரண்டு மகன்களும் பருவவயதில் இருக்கிறார்களாம். அந்தப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்த அவர், ‘இதை வைத்துப் பிள்ளைகளிடம் சில விஷயங்களைச் சுலபமாகப் பேசலாம்போல் தெரிகிறதே’ என்றார். நம் சகோதரி, குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தையும் அவருக்குக் காட்டினார்; குடும்பத்தில் கணவன் மனைவியாகத் தீர்மானங்களை எடுப்பதற்கு உதவும் நல்ல ஆலோசனைகள் அதில் இருப்பதாகவும் கூறினார். அவ்வாறு சொன்னதும், அவர் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு அதற்கு நன்கொடையும் அளித்தார். அதோடு, தன்னுடைய வீட்டிற்கு யெகோவாவின் சாட்சிகள் யாராவது வந்து பைபிள் விஷயங்களைப் பேசுவதற்கும் அனுமதி அளித்தார்.
அன்று அங்காடியில் சாட்சி கொடுத்தது அந்தப் பிரஸ்தாபிகளுக்கு எப்படி இருந்தது? “இந்த மாதிரி சாட்சி கொடுத்தது ரொம்ப அருமையாக இருந்தது. மறக்க முடியாத அனுபவம்!” என்றார் ஒரு சகோதரி. “பூமியின் கடைக்கோடி வரைக்கும் நற்செய்தி அறிவிக்கப்படும் என்பதாக யெகோவா சொல்லியிருக்கிறார். இன்றைக்கு, நியூ ஜெர்ஸியில் உள்ள பாராமுஸ்ஸில் வெவ்வேறு மொழி பேசுபவர்களின் இருதயத்தில் நற்செய்தி பதிந்துவிட்டது. இந்த மாதிரி சாட்சிகொடுத்தது அற்புதமாக இருந்தது. இதில் கலந்துகொண்டவர்கள் எல்லாருக்குமே அப்படியொரு சந்தோஷம்! அந்த இடத்தைவிட்டு வருவதற்கே யாருக்கும் மனம் வரவில்லை” என்றார் இன்னொரு சகோதரி.
வெவ்வேறு வழிகளில் நற்செய்தியை அறிவிக்க உங்களால் முடியுமா? உண்மைதான், வீடு வீடாகச் சென்று நற்செய்தியைச் சொல்வதே நாம் பின்பற்றுகிற முக்கியமான வழியாகும். (அப். 20:20) என்றாலும், பஜார் அல்லது அங்காடிகளில் சாட்சி கொடுப்பதைப் பற்றியும் நீங்கள் யோசித்துப் பார்க்கலாம், அல்லவா?