யெகோவாவின் “ஒளிவீசும் கண்கள்” நம்மைச் சோதித்தறிகின்றன
“யெகோவாவின் ஒளிவீசும் கண்கள் [மனிதரை] சோதித்தறிகின்றன.”—சங். 11:4, NW.
ஒருவர் உங்கள்மேல் உண்மையான அக்கறை வைத்திருக்கிறார் என்று எப்படிச் சொல்வீர்கள்? அவரிடம் அபிப்பிராயம் கேட்டால் உள்ளதை உள்ளபடி சொல்வார். உதவி ஏதாவது கேட்டால் உடனடியாகச் செய்வார். அறிவுரை தேவைப்பட்டால் அன்புடன் அளிப்பார். (சங். 141:5; கலா. 6:1) இப்படிப்பட்ட ஆட்களிடம்தானே நீங்கள் நெருங்கிப் பழக விரும்புவீர்கள்! ஆம், யெகோவாவும் அவருடைய மகனும் இப்படிப்பட்டவர்கள்தான். வேறு யாரையும்விட அவர்கள் இரண்டு பேரும் உங்கள்மீது அளவுகடந்த அக்கறை வைத்திருக்கிறார்கள்; அவர்கள் முழுக்க முழுக்க நல்லெண்ணத்தோடுதான் உங்கள்மேல் அக்கறை காட்டுகிறார்கள்; நீங்கள் ‘நித்திய ஜீவனை’ அடைய உதவுகிறார்கள்.—1 தீ. 6:19; வெளி. 3:19.
2 நம்மீது யெகோவா எந்தளவு அக்கறை வைத்திருக்கிறார் என்பதை சங்கீதக்காரன் தாவீது பின்வருமாறு சொன்னார்: “யெகோவாவின் கண்கள் மனிதரைப் பார்க்கின்றன, அவருடைய ஒளிவீசும் கண்கள் அவர்களைச் சோதித்தறிகின்றன.” (சங். 11:4, NW) உண்மைதான், கடவுள் நம்மை வெறுமனே பார்ப்பதில்லை, மாறாக, சோதித்தறிகிறார். “நீர் என் இருதயத்தைப் பரிசோதித்து, இரவிலே அதை விசாரிக்கிறீர், . . . யாருக்கும் எதிராக நான் சூழ்ச்சி செய்யவில்லை என்பதைக் கண்டறிகிறீர்.” (சங். 17:3, NW) ஆம், தன்மீது யெகோவா அளவுகடந்த அக்கறை வைத்திருந்ததை தாவீது நன்றாக அறிந்திருந்தார். தன் இருதயத்தில் கெட்ட எண்ணங்களை வளர்த்தாலோ மற்றவர்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தாலோ நிச்சயமாக யெகோவாவின் மனம் புண்படும் என்பதையும் அவருடைய வெறுப்பைச் சம்பாதிக்க நேரிடும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். யெகோவா தன் கண்முன்னே இருந்ததுபோல் தாவீது உணர்ந்தார்; அவ்வாறே நீங்களும் உணருகிறீர்களா?
யெகோவா இருதயத்தைப் பார்க்கிறார்
3 யெகோவா முக்கியமாக நம் இருதயத்தையே பார்க்கிறார். (சங். 19:14; 26:2) அன்புள்ள அவர், நாம் செய்கிற சிறுசிறு தவறுகளையெல்லாம் பெரிதுபடுத்துவதில்லை. உதாரணத்திற்கு, ஆபிரகாமின் மனைவி சாராளை எடுத்துக்கொள்வோம். அவர் உண்மையை ஒத்துக்கொள்ளாமல் போனபோது அவரைத் தேவதூதர் மென்மையாகவே கண்டித்தார்; ஏனெனில், சாராள் பயந்துபோய், தர்மசங்கடமாக உணர்ந்ததை அவர் புரிந்திருப்பார். (ஆதி. 18:12–15) நம்முடைய முற்பிதாவான யோபுவை எடுத்துக்கொள்வோம். அவர் ‘தேவனைப்பார்க்கிலும் தன்னைத் தான் நீதிமான்’ என்று சொல்லிக்கொண்டபோது யெகோவா அவரை ஆசீர்வதிக்காமல் இருந்துவிடவில்லை. ஏனெனில், சாத்தானால் யோபு பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல என்பதை யெகோவா அறிந்திருந்தார். (யோபு 32:2; 42:12) அவ்வாறே, சாறிபாத் விதவை எலியா தீர்க்கதரிசியிடம் எதார்த்தமாகச் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு யெகோவா கோபப்படவில்லை. தன்னுடைய ஒரே மகனை இழந்துவிட்டு அவள் தவியாய்த் தவித்ததை யெகோவா நன்கு புரிந்திருந்தார்.—1 இரா. 17:8–24.
4 யெகோவா இருதயத்தைச் சோதித்தறிகிறவர் என்பதால், தம்மை வணங்காதவர்களுக்கும்கூட கரிசனை காட்டியிருக்கிறார். கேரார் என்ற பெலிஸ்த பட்டணத்து ராஜாவான அபிமெலேக்கிடம் அவர் எவ்வாறு நடந்துகொண்டார் என்பதைக் கவனியுங்கள். சாராள், ஆபிரகாமின் மனைவியாய் இருந்ததை அறியாத அபிமெலேக்கு அவரை மனைவியாக்கிக்கொள்ள முயன்றான். என்றாலும், அவன் எந்தத் தவறும் செய்துவிடுவதற்கு முன்பே யெகோவா கனவில் வந்து அவனிடம்: “உத்தம இருதயத்தோடே நீ இதைச் செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன்; நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன்; ஆகையால், நீ அவளைத் தொட நான் உனக்கு இடங்கொடுக்கவில்லை. அந்த மனுஷனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு; அவன் ஒரு தீர்க்கதரிசி; நீ பிழைக்கும்படிக்கு அவன் உனக்காக வேண்டுதல் செய்வான்” எனக் கூறினார்.—ஆதி. 20:1–7.
5 யெகோவா நினைத்திருந்தால், பொய்க் கடவுள்களை வணங்கிய அபிமெலேக்கைக் கடுமையாய்த் தண்டித்திருக்கலாம். ஆனால், அவனுடைய மனம் சுத்தமாய் இருந்ததைக் கண்டு அவருக்குக் கருணை காட்டினார். அவன் மன்னிப்பைப் பெற்று, ‘பிழைத்துக்கொள்வதற்கான’ வழியைச் சொன்னார். இப்படிப்பட்ட கடவுளைத்தானே நீங்கள் வழிபட விரும்புவீர்கள்?
6 இயேசு தம்முடைய தந்தையை அச்சுப்பிசகாமல் பின்பற்றினார். தம் சீஷர்களிடமிருந்த நல்ல குணங்களையே அவர் கவனித்தார், அவர்களுடைய குற்றங்குறைகளைத் தாராளமாய் மன்னித்தார். (மாற். 10:35–45; 14:66–72; லூக். 22:31, 32; யோவா. 15:15) இயேசுவின் இந்தச் சுபாவத்தைப் பற்றி யோவான் 3:17 பின்வருமாறு கூறுகிறது: “உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.” ஆம், யெகோவாவும் இயேசுவும் நம்மீது வைத்திருக்கும் அன்பு அளவுகடந்தது, மாறாதது. நாம் என்றென்றும் வாழ வேண்டும் என்று அவர்கள் விரும்புவது இதற்கு அத்தாட்சியாக இருக்கிறது. (யோபு 14:15) இப்படிப்பட்ட அன்பு இருப்பதாலேயே யெகோவா நம்மைச் சோதித்தறிகிறார், நாம் செய்வதையெல்லாம் கவனிக்கிறார், அதற்கேற்ப நியாயந்தீர்க்கிறார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.—1 யோவான் 4:8, 19-ஐ வாசியுங்கள்.
அன்புடன் நம்மைச் சோதித்தறிகிறார்
7 நாம் பாவம் செய்யும்போது கையும் களவுமாய் நம்மைப் பிடிப்பதற்காக யெகோவா ஒரு போலீஸ்காரரைப் போல் பரலோகத்திலிருந்து பார்த்துக்கொண்டிருப்பதாய் நாம் கருத வேண்டியதில்லை. ஆனால், நம்மைச் சதா சந்தேகக் கண்ணோடு பார்த்துக் குறை காண்பவன் சாத்தானே. (வெளி. 12:10) நல்லெண்ணம் படைத்தவர்களைக் கெட்ட எண்ணம் படைத்தவர்களெனப் பழி சுமத்துகிறவனும் அவனே. (யோபு 1:9–11; 2:4, 5) கடவுளைக் குறித்தோ, சங்கீதக்காரன் இவ்வாறு எழுதினார்: ‘யெகோவாவே, நீர் தவறுகளைக் கவனித்திருப்பீரானால், யார் உமக்கு முன் நிற்க முடியும்?’ (சங். 130:3, NW) யாருமே நிற்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும்! (பிர. 7:20) மாறாக, தங்கள் அருமைப் பிள்ளைகளைத் தீங்கிலிருந்து காப்பாற்ற விரும்பும் கரிசனையுள்ள பெற்றோரைப் போலவே யெகோவா நம்மைக் கண்ணும்கருத்துமாய்க் கவனிக்கிறார். நாம் தீங்கில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க நம் குறைபாடுகளையும் பலவீனங்களையும் குறித்து எச்சரிக்கிறார்.—சங். 103:10–14; மத். 26:41.
8 பைபிள் மூலமாகவும் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பார் மூலமாகவும் நமக்கு அறிவுரையும் சிட்சையும் அளித்து யெகோவா தம் அன்பை வெளிக்காட்டுகிறார். (மத். 24:45, NW; எபி. 12:5, 6) கிறிஸ்தவ சபை மற்றும் “மனிதர் வடிவிலான வரங்கள்” வாயிலாகவும் நமக்கு உதவுகிறார். (எபே. 4:8, NW) அதுமட்டுமல்ல, ஓர் அப்பாவைப் போல அவர் அளிக்கிற பயிற்சிக்கு நாம் கீழ்ப்படிவதைப் பொறுத்து மேன்மேலும் நமக்கு உதவுகிறார். இதையே சங்கீதம் 32:8 இவ்வாறு சொல்கிறது: “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.” அப்படியென்றால், நாம் எப்போதும் யெகோவாவுக்கு முன் தாழ்மையுடன் நடந்துகொள்வது எவ்வளவு முக்கியம்!—மத்தேயு 18:4-ஐ வாசியுங்கள்.
9 மறுபட்சத்தில், நாம் ஒருபோதும் பெருமைபிடித்தவர்களாய் ஆகிவிடக் கூடாது, விசுவாசத்தில் ஆட்டம் கண்டுவிடக் கூடாது, ‘பாவத்தின் வஞ்சனைக்கு’ பலியாகிவிடக் கூடாது. (எபி. 3:13; யாக். 4:6) பொதுவாக, ஒரு நபர் தவறான சிந்தனைகளையோ ஆசைகளையோ வளர்த்துக்கொள்ளும்போதுதான் இப்படிப்பட்ட சுபாவங்கள் தலைதூக்குகின்றன. காலப்போக்கில், பைபிளிலிருந்து அளிக்கப்படும் ஆலோசனையைக்கூட ஒதுக்கிவிடும் அளவுக்கு அவர் சென்றுவிடலாம். அதைவிட மோசம் என்னவென்றால், கடவுளுக்கே எதிரியாகுமளவுக்கு அவர் தன்னுடைய கெட்ட எண்ணங்களிலோ செயல்களிலோ ஊறிப்போய்விடலாம்; நினைத்தாலே பயங்கரமாய் இருக்கிறதல்லவா! (நீதி. 1:22–31) இது சம்பந்தமாக, ஆதாம் ஏவாளின் முதல் மகனான காயீனைப் பற்றி இப்போது சிந்திக்கலாம்.
யெகோவா எல்லாவற்றையும் கவனித்து அதற்கேற்பச் செயல்படுகிறார்
10 காயீனும் ஆபேலும் காணிக்கைகளைச் செலுத்தியபோது, யெகோவா அந்தக் காணிக்கைகளை மட்டுமல்லாமல் அவர்களுடைய உள்ளெண்ணத்தையும் கவனித்தார். ஆகவே, விசுவாசத்தோடு ஆபேல் செலுத்திய காணிக்கையை ஏற்றுக்கொண்டார்; காயீனோ அந்தளவு விசுவாசத்தோடு செலுத்தாததால் அவனுடைய காணிக்கையை நிராகரித்தார். (ஆதி. 4:4, 5; எபி. 11:4) இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தன் மனப்பான்மையை மாற்றிக்கொள்ளாமல், தம்பிமீது காயீன் கொதிப்படைந்தான்.—ஆதி. 4:6.
11 காயீன் போகிற போக்கு சரியில்லை என்பதை யெகோவா உணர்ந்து அவனை அன்பாகத் திருத்த முயன்றார். அவன் நல்லது செய்தால் சந்தோஷமாய் இருக்கலாம் எனப் புத்திமதி அளித்தார். காயீனோ தன்னைப் படைத்தவருடைய ஆலோசனையை உதறித்தள்ளி, தம்பியைக் கொன்றுபோட்டான். அதுமட்டுமா, கடவுளிடம் அவன் பதில் சொன்ன விதமும்கூட அவனுடைய இருதயம் எந்தளவு பொல்லாததாய் இருந்தது என்பதைக் காட்டியது. “உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே”? என்று கடவுள் கேட்டதற்கு, “நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ”? என்று அவமரியாதையாகப் பதிலளித்தான். (ஆதி. 4:7–9) இருதயம் எவ்வளவு வஞ்சகமானது, பாருங்கள்! கடவுளிடமிருந்து நேரடியாக வரும் ஆலோசனையையே அது தள்ளிவிடக்கூடும். (எரே. 17:9) எனவே, இப்படிப்பட்ட சம்பவங்களிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டு, தவறான சிந்தனைகளையும் ஆசைகளையும் முளையிலேயே கிள்ளியெறிவோமாக. (யாக்கோபு 1:14, 15-ஐ வாசியுங்கள்.) நமக்கு பைபிள் ஆலோசனை ஏதாவது கிடைத்தால் அதை நன்றியோடு ஏற்றுக்கொண்டு, அதை யெகோவாவின் அன்புக்கு அத்தாட்சியாகக் கருதுவோமாக.
மறைவான பாவங்கள் உண்டோ?
12 தாங்கள் செய்கிற தவறை யாரும் பார்க்கவில்லை என்றால், தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று சிலர் நினைக்கலாம். (சங். 19:12) சொல்லப்போனால், மறைவான பாவம் என்று எதுவுமே இல்லை. ‘சகலமும் அவருடைய [கடவுளுடைய] கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.’ (எபி. 4:13) யெகோவா நம் உள்ளத்தின் ஆழத்தில் இருப்பதைச் சோதித்தறிகிற நியாயாதிபதி. எனவே, நீதி வழுவாத விதத்தில் அவர் தண்டனை அளிக்கிறார். அவர், “இரக்கமும், கிருபையும், நீடியசாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்.” மனந்திரும்பாமல் யாராவது ‘மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்தாலோ,’ மற்றவர்களுக்கு எதிராக நயவஞ்சகமாய்ச் சூழ்ச்சி செய்தாலோ, ‘தண்டனைக்குத் தப்பவிடமாட்டார்.’ (யாத். 34:6, 7; பொது மொழிபெயர்ப்பு; எபி. 10:26) ஆகான், அனனியா, சப்பீராள் ஆகியோரை யெகோவா நியாயந்தீர்த்த விதத்திலிருந்து இது தெரிகிறது.
13 ஆகான், கடவுளுடைய கட்டளைக்கு முற்றிலும் விரோதமாகச் செயல்பட்டான்; எரிகோ பட்டணத்தைக் கைப்பற்றியபோது ஆகான் அதன் கொள்ளைப் பொருள்கள் சிலவற்றை எடுத்து, தன் கூடாரத்தில் ஒளித்துவைத்தான். அவன் குடும்பத்தாரும் அதற்கு உடந்தையாய் இருந்ததாகத் தெரிகிறது. அவன் செய்த குற்றம் வெளிச்சத்துக்கு வந்தபோது, தான் மகா பெரிய குற்றம் செய்திருந்ததை உணர்ந்து, ‘நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்’ என்று கூறினான். (யோசு. 7:20) காயீனைப் போலவே ஆகானும் உள்ளத்தில் கெட்ட எண்ணத்தை வளர்த்திருந்தான். அவன் செய்த பாவத்திற்குப் பேராசையே முக்கியக் காரணமாய் இருந்தது; இதனால் அவன் ஒரு மோசடிப் பேர்வழியானான். எரிகோ பட்டணத்துக் கொள்ளைப் பொருள்கள் யெகோவாவுக்கே சொந்தம் என்பதால் அவன் கடவுளிடமிருந்தே திருடினதுபோல் ஆகிவிட்டது. அதன் விளைவு? அவனுடைய உயிரும் பறிபோனது, அவன் குடும்பத்தாருடைய உயிரும் பறிபோனது.—யோசு. 7:25.
14 அனனியாவும் அவன் மனைவி சப்பீராளும், எருசலேமிலிருந்த பூர்வ கிறிஸ்தவ சபையின் அங்கத்தினர்களாக இருந்தனர். பொ.ச. 33, பெந்தெகொஸ்தே தினத்தைத் தொடர்ந்து, புதிய கிறிஸ்தவர்களின் அத்தியாவசியத் தேவைகளைக் கவனிப்பதற்காக நிதி திரட்டப்பட்டது; இந்தக் கிறிஸ்தவர்கள் தொலைதூர தேசங்களிலிருந்து எருசலேமுக்கு வந்து அங்கேயே தங்கிவிட்டவர்கள். அவ்வாறு திரட்டப்பட்ட நிதி அனைத்தும் மனமுவந்து கொடுக்கப்பட்டவை. அனனியா தன்னுடைய நிலத்தை விற்று அதில் ஒரு பங்கை மட்டும் நன்கொடையாக அளித்தான். என்றாலும், அவன் மனைவி அறிய, முழு தொகையையும் கொடுத்துவிட்டதுபோல் அப்போஸ்தலர்களிடம் நடித்தான். சபையார் தங்களை மெச்சிப் பேச வேண்டுமென அந்தத் தம்பதியர் ஆசைப்பட்டார்கள். அது ஒரு வஞ்சகச் செயலாகவே இருந்தது. அவர்களுடைய பித்தலாட்டத்தை அப்போஸ்தலன் பேதுருவுக்கு அற்புதமான விதத்தில் யெகோவா வெளிப்படுத்திவிட்டார். அதைக்குறித்து அனனியாவை பேதுரு தட்டிக்கேட்கவே, அவன் கீழே விழுந்து இறந்துவிட்டான். சற்றுப் பின்னர் சப்பீராளும் அவ்வாறே இறந்துவிட்டாள்.—அப். 5:1–11.
15 அனனியாவும் சப்பீராளும் இந்தப் பொய்யை எதேச்சையாகச் சொல்லவில்லை. அப்போஸ்தலர்களை ஏமாற்றுவதற்காகத் திட்டம் போட்டுச் சொன்னார்கள். அதைவிடக் கொடுமை என்னவென்றால், அவர்கள் ‘பரிசுத்த ஆவியினிடத்திலும் . . . தேவனிடத்திலும் பொய் சொன்னார்கள்.’ யெகோவா வஞ்சகரிடமிருந்து சபையை எப்படியும் காப்பாற்றுவார் என்பதையே அவர் எடுத்த நடவடிக்கை தெளிவாய்க் காட்டுகிறது. ஆம், ‘ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுவது பயங்கரமாயிருக்கும்’!—எபி. 10:31.
எப்போதும் உத்தமமாய் நடந்துகொள்ளுங்கள்
16 நாம் யெகோவாவின் தயவை இழந்துவிட வேண்டும் என்பதற்காகத் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து சாத்தான் நம்மைக் கெடுக்க முயலுகிறான். (வெளி. 12:12, 17) பிசாசின் தீய எண்ணங்களே இந்த உலகில் நிறைந்திருக்கின்றன; பாலியல் முறைகேடும் வன்முறையுமே எங்கும் மலிந்துகிடக்கின்றன. இப்போதெல்லாம் கம்ப்யூட்டரிலும் சரி எலக்ட்ரானிக் சாதனங்களிலும் சரி, ஆபாசக் காட்சிகளை வெகு சுலபமாகப் பார்க்க முடிகிறது. சாத்தானின் இப்படிப்பட்ட மாயவலையில் நாம் விழுந்து விடாதிருப்போமாக. மாறாக, “உத்தமமான வழியிலே விவேகமாய் நடப்பேன்; . . . என் வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன்” என்று சங்கீதக்காரனான தாவீது சொன்னதையே நாமும் சொல்வோமாக.—சங். 101:2.
17 முற்காலத்தில் யெகோவா படு மோசமான பாவங்களையும் வஞ்சகமான செயல்களையும் சில சந்தர்ப்பங்களில் அற்புதமான விதத்தில் வெளிப்படுத்தியது உண்மைதான்; ஆனால், இன்று அப்படிச் செய்வதில்லை. இருந்தாலும், அவர் எல்லாவற்றையும் பார்க்கிறார். உரிய நேரத்தில், தமக்கே உரிய வழியில், மறைவான பாவங்களை வெளிப்படுத்துவார். “சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்,” அதாவது, பிற்பாடு வெளிப்படும் என்று பவுல் சொன்னார். (1 தீ. 5:24) கெட்ட செயல்களை யெகோவா வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதற்கான காரணம் அவருடைய அன்பே. அவர் சபையை நேசிக்கிறார், அது பரிசுத்தமாய் இருக்க வேண்டுமென விரும்புகிறார். அதுமட்டுமல்ல, பாவம் செய்தவர்கள் இப்போது உண்மையிலேயே மனந்திரும்புகையில் அவர்களுக்கு இரக்கம் காட்டுகிறார். (நீதி. 28:13) எனவே, நம் இருதயத்தைக் கெடுத்துப்போடும் எவ்வித சிந்தனைக்கும் இடங்கொடுக்காமல், கடவுளுக்கு முன்பாக உத்தம இருதயத்துடன் இருக்கக் கடினமாய் உழைப்போமாக.
உத்தம இருதயத்தோடு இருப்போமாக
18 தாவீது ராஜா தன்னுடைய மகன் சாலொமோனிடம், “நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்” என்று கூறினார். (1 நா. 28:9) தன் மகன் கடவுளை நம்பினால் மட்டும் போதாது என்று தாவீது நினைத்தார். தம்முடைய ஊழியர்கள்மீது யெகோவா எந்தளவு அக்கறை வைத்திருக்கிறார் என்பதற்கு அவர் நன்றியுள்ளவராய் இருக்க வேண்டுமென தாவீது விரும்பினார். நீங்களும் அவ்வாறே உணருகிறீர்களா?
19 நல்மனமுள்ளவர்கள் தம்மிடம் நெருங்கி வருவார்கள் என்றும், தம்முடைய இனிய குணங்களால் கவர்ந்திழுக்கப்படுவார்கள் என்றும் யெகோவா அறிந்திருக்கிறார். எனவேதான், நாம் அவரைப் பற்றி கற்றுக்கொண்டு, அவருடைய அருமையான சுபாவத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறார். அப்படியானால், நாம் என்ன செய்ய வேண்டும்? அவருடைய வார்த்தையைப் படிக்க வேண்டும்; அவருடைய ஆசீர்வாதத்தை நம் வாழ்க்கையில் ருசிக்க வேண்டும்.—நீதி. 10:22; யோவா. 14:9.
20 கடவுள் தந்த புத்தகமாகிய பைபிளைத் தினமும் பிரியத்தோடு வாசிக்கிறீர்களா? அதிலுள்ள விஷயங்களை வாழ்க்கையில் கடைப்பிடிக்க உதவுமாறு ஜெபிக்கிறீர்களா? அதன் நியமங்களின்படி வாழ்வதன் முக்கியத்துவத்தை உணருகிறீர்களா? (சங்கீதம் 19:7–11-ஐ வாசியுங்கள்.) இப்படிச் செய்வது, யெகோவா மீதுள்ள உங்கள் விசுவாசம் பலப்படுவதற்கும் அன்பு அதிகரிப்பதற்கும் துணைபுரியும். யெகோவாவும் உங்களிடம் இன்னுமதிகமாய் நெருங்கி வருவார்; சொல்லப்போனால், கைபிடித்து நடந்து வருவதைப் போன்று எப்போதும் உங்கள் கூடவே இருப்பார். (ஏசா. 42:6; யாக். 4:8) ஆம், ஜீவனுக்கு வழிநடத்தும் இடுக்கமான பாதையில் நீங்கள் நடக்கும்போது யெகோவா உங்களை ஆன்மீக ரீதியில் பாதுகாத்து, ஆசீர்வதிப்பார்; உங்கள்மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை இதன்மூலம் காட்டுவார்.—சங். 91:1, 2; மத். 7:13, 14.
உங்கள் பதில்?
• யெகோவா நம்மை ஏன் சோதித்தறிகிறார்?
• சிலர் ஏன் கடவுளின் விரோதிகளாய் ஆனார்கள்?
• யெகோவா நம் கண்முன்னே இருப்பதுபோல் உணர்ந்தால் நாம் என்ன செய்வோம்?
• நாம் எவ்வாறு கடவுளுக்கு முன்பாக உத்தம இருதயத்தோடு இருக்கலாம்?
[கேள்விகள்]
1. எப்படிப்பட்டவர்களோடு நாம் நெருங்கிப் பழக விரும்புவோம்?
2. யெகோவா தம் ஊழியர்களிடம் எந்தளவு அக்கறை வைத்திருக்கிறார்?
3. நம்முடைய குற்றங்குறைகளை யெகோவா பெரிதுபடுத்துவதில்லை என எப்படிச் சொல்லலாம்?
4, 5. அபிமெலேக்கிற்கு யெகோவா எவ்வாறு கருணை காட்டினார்?
6. எவ்விதங்களில் இயேசு தம் தந்தையைப் பின்பற்றினார்?
7. என்ன நோக்கத்தோடு யெகோவா நம்மைச் சோதித்தறிகிறார்?
8. யெகோவா தம் ஊழியர்களுக்கு எவ்வாறு சிட்சையும் அறிவுரையும் அளிக்கிறார்?
9. நாம் எப்படிப்பட்ட சுபாவங்களைத் தவிர்க்க வேண்டும், ஏன்?
10. யெகோவா ஏன் காயீனின் காணிக்கையை நிராகரித்தார், அப்போது அவன் எப்படி நடந்துகொண்டான்?
11. காயீனின் இருதயம் எப்படி வஞ்சகமானதாய் இருந்தது, இதிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்?
12. தவறு செய்கிறவர்களை யெகோவா என்ன செய்கிறார்?
13. ஆகான் செய்த குற்றத்திற்கு அவனுடைய தவறான எண்ணமே காரணமென்று எப்படிச் சொல்லலாம்?
14, 15. அனனியாவும் சப்பீராளும் கடவுளுடைய கோபத்துக்கு ஆளானது ஏன், இதிலிருந்து நமக்கு என்ன பாடம்?
16. (அ) கடவுளுடைய மக்களைக் கெடுக்க சாத்தான் எப்படி முயலுகிறான்? (ஆ) நீங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள மக்களைக் கெடுக்க சாத்தான் என்னென்ன முறைகளைப் பயன்படுத்துகிறான்?
17. (அ) மறைவான பாவங்களை யெகோவா எப்படியும் வெளிச்சத்துக்குக் கொண்டுவருவது ஏன்? (ஆ) நாம் என்ன செய்வதற்கு உறுதியாய் இருக்க வேண்டும்?
18. கடவுள்மீது தன் மகனுக்கு எப்படிப்பட்ட உணர்வு இருக்க வேண்டுமென்று தாவீது விரும்பினார்?
19, 20. சங்கீதம் 19:7–11 சொல்கிறபடி, கடவுளிடம் நெருங்கிவர தாவீதுக்கு எது உதவியது, நாம் எவ்வாறு தாவீதைப் போல் நடந்துகொள்ளலாம்?
[பக்கம் 4-ன் படம்]
கரிசனையுள்ள ஓர் அப்பாவைப் போல யெகோவா நம்மை எப்படிக் கவனிக்கிறார்?
[பக்கம் 5-ன் படம்]
அனனியாவின் உதாரணத்திலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்?
[பக்கம் 6-ன் படம்]
யெகோவாவை உத்தம இருதயத்தோடு தொடர்ந்து சேவிக்க நமக்கு எது உதவும்?