கனம்பண்ணுவதில் முந்திக்கொள்கிறீர்களா?
“கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.”—ரோ. 12:10.
1. அநேக இடங்களில் எது அபூர்வமாகிவிட்டது?
சில நாடுகளில், பிள்ளைகள் பெரியவர்களோடு இருக்கும்போது அவர்களுக்கு மரியாதை காட்டுவதற்காக முழங்கால்போட்டுக்கொள்வது வழக்கம். இப்படிச் செய்யும்போது, பெரியவர்களைவிட அவர்கள் உயரமாகத் தெரிவதில்லை. இந்நாடுகளில், பெரியவர்களுக்கு முன் ஒரு பிள்ளை தன் முதுகைத் திருப்பியிருப்பதும்கூட அவமரியாதையாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு கலாச்சாரத்திலும் ஒவ்வொரு விதமாக மரியாதை காட்டப்பட்டாலும், இது மோசேயின் நியாயப்பிரமாணத்தையே நமக்கு நினைப்பூட்டுகிறது. அதில் ஒரு கட்டளையாவது: “நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக.” (லேவி. 19:32) வருத்தகரமாக, அநேக இடங்களில் மற்றவர்களுக்கு மரியாதை காட்டுவதே அபூர்வமாகிவிட்டது. சொல்லப்போனால், எங்கு பார்த்தாலும் அவமரியாதையே சகஜமாகிவிட்டது.
2. நாம் யாரையெல்லாம் கனம்பண்ணும்படி பைபிள் சொல்கிறது?
2 மரியாதை காட்டுவதை மிக முக்கியமான விஷயமாக பைபிள் குறிப்பிடுகிறது. யெகோவாவையும் இயேசுவையும் நாம் கனம்பண்ண வேண்டுமென அது சொல்கிறது. (யோவா. 5:23) குடும்ப அங்கத்தினர்களிடமும் சக விசுவாசிகளிடமும், அதோடு, சபைக்கு வெளியே உள்ள சிலரிடமும் நாம் மரியாதை காட்டும்படியாகக்கூட பைபிள் நமக்குக் கட்டளையிடுகிறது. (ரோ. 12:10; எபே. 6:1, 3; 1 பே. 2:17) அப்படியானால், நாம் யெகோவாவைக் கனம்பண்ணுகிறோம் என்பதைக் காட்டுவதற்கான சில வழிகள் யாவை? நம் சகோதர சகோதரிகளை எவ்விதங்களில் கனம்பண்ணுகிறோம், அதாவது அவர்களுக்கு எவ்விதங்களில் உள்ளப்பூர்வமாக மரியாதை காட்டுகிறோம்? இக்கேள்விகளுக்கும் இதுபோன்ற பிற கேள்விகளுக்கும் பதில்களை இப்போது சிந்திக்கலாம்.
யெகோவாவையும் அவருடைய பெயரையும் கனம்பண்ணுங்கள்
3. யெகோவாவைக் கனம்பண்ணுவதற்கு முக்கியமான ஒரு வழி எது?
3 யெகோவாவைக் கனம்பண்ணுவதற்கு முக்கியமான ஒரு வழி, அவருடைய பெயருக்குத் தகுந்த மரியாதை காட்டுவதாகும். சொல்லப்போனால், நாம் ‘அவருடைய நாமத்திற்காகத் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனமாக’ இருக்கிறோம். (அப். 15:14) சர்வவல்ல கடவுளான யெகோவாவின் பெயரை நாம் தாங்கியிருப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! அதைக் குறித்து மீகா தீர்க்கதரிசி இவ்வாறு சொன்னார்: “சகல ஜனங்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களும் எங்கள் தேவனாகிய கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.” (மீ. 4:5) அந்தப் பெயருக்குக் களங்கம் ஏற்படாத வகையில் வாழ நாம் தினந்தோறும் கடினமாய் முயற்சி செய்தோமானால், ‘யெகோவாவுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு’ நடக்கிறோம் என்று அர்த்தம். ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் நினைப்பூட்டி எழுதியதைப் போலவே, நாம் அறிவிக்கிற நற்செய்திக்கு இசைய வாழவில்லையென்றால், கடவுளுடைய பெயர் ‘தூஷிக்கப்படும்,’ அதாவது அப்பெயருக்கு இழுக்கு ஏற்படும்.—ரோ. 2:21–24.
4. யெகோவாவைப் பற்றி சாட்சிகொடுக்கும் பாக்கியத்தை நீங்கள் எவ்வாறு கருதுகிறீர்கள்?
4 சாட்சிகொடுக்கும் வேலையின் மூலமாகவும் நாம் யெகோவாவைக் கனம்பண்ணுகிறோம். கடந்த காலங்களில், தமக்குச் சாட்சிகளாய் இருப்பதற்கான அரிய வாய்ப்பை இஸ்ரவேல் தேசத்தாருக்கு யெகோவா அளித்திருந்தார்; அவர்களோ, சாட்சிகள் என்ற பெயருக்கேற்ப நடந்துகொள்ளவில்லை. (ஏசா. 43:1–12) அவர்கள் அடிக்கடி யெகோவாவுக்கு எதிராகக் கலகம்செய்து, “அவரை விசனப்படுத்தினார்கள்.” (சங். 78:40) கடைசியில், யெகோவாவின் தயவை முற்றிலும் இழந்தார்கள். ஆனால், இன்று நாம் யெகோவாவைப் பற்றி சாட்சி கொடுப்பதற்கும் அவருடைய பெயரைத் தெரியப்படுத்துவதற்கும் கிடைத்த பாக்கியத்தைப் பொக்கிஷமாய்க் கருதுகிறோம். நாம் அவரை நேசிப்பதாலும் அவருடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டுமென ஏங்குவதாலுமே அவ்வாறு செய்கிறோம். பரம தகப்பனையும் அவருடைய நோக்கங்களையும் பற்றிய உண்மையை நாம் அறிந்தபின், அவற்றை மற்றவர்களுக்கு அறிவிக்காமல் இருக்க முடியுமா, என்ன? அப்போஸ்தலன் பவுல் உணர்ந்த விதமாகவே நாமும் உணருகிறோம்; “அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ” என்று அவர் சொன்னார்.—1 கொ. 9:16.
5. யெகோவாமீது நம்பிக்கை வைப்பதற்கும் அவருக்கு மரியாதை காட்டுவதற்கும் சம்பந்தம் இருப்பது எவ்வாறு?
5 சங்கீதக்காரனாகிய தாவீது கூறினதாவது: “கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்.” (சங். 9:10) பூர்வ காலத்தில் அவருடைய உண்மை ஊழியர்கள் செய்ததைப் போல யெகோவாவை நாம் உண்மையிலேயே அறிந்து, அவருக்கு மதிப்புகொடுப்பது அவரை நம்பியிருக்கிறோம் என்பதைக் காட்டும். இவ்வாறு யெகோவாமீது நம்பிக்கையும் விசுவாசமும் வைப்பது அவரைக் கனம்பண்ணுவதற்கான இன்னுமொரு வழியாகும். யெகோவாமீது நம்பிக்கை வைப்பதற்கும் அவருக்கு மரியாதை காட்டுவதற்கும் சம்பந்தம் இருக்கிறது; இதை பைபிள் எவ்வாறு கூறுகிறது என்பதைக் கவனியுங்கள். பூர்வ இஸ்ரவேலர் யெகோவாமீது நம்பிக்கை வைக்காமற்போனபோது யெகோவா மோசேயிடம் இவ்வாறு கேட்டார்: ‘எதுவரை இம்மக்கள் என்னை இழிவுபடுத்துவார்கள், நான் அவர்களுக்கு அடையாளங்கள் தந்தும் எதுவரை இவர்கள் என்னில் நம்பிக்கை கொள்ளாதிருப்பார்கள்?’ (எண். 14:11, பொது மொழிபெயர்ப்பு) வேறு விதமாகச் சொன்னால், நாம் சோதனைகளைச் சந்திக்கையிலும்கூட, நம்மை ஆதரித்துப் பாதுகாப்பதற்காக யெகோவாமீது நம்பிக்கை வைப்பது, அவருக்கு மரியாதை காட்டுவதை அர்த்தப்படுத்துகிறது.
6. யெகோவாவுக்கு உள்ளப்பூர்வமாக மரியாதை காட்ட எது நம்மைத் தூண்டுகிறது?
6 யெகோவாவுக்குக் காட்டுகிற மரியாதை, ஒருவருடைய இருதயத்திலிருந்து வர வேண்டுமென இயேசு குறிப்பிட்டார். தம்மை உள்ளப்பூர்வமாக வணங்காதவர்களிடம் யெகோவா சொன்னதை இயேசு இவ்வாறு குறிப்பிட்டார்: “இந்த ஜனங்கள் . . . தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது.” (மத். 15:8) ஆம், இதயத்தில் அன்பு இருந்தால்தான் யெகோவாவுக்கு உண்மையான மரியாதை காட்ட முடியும். (1 யோ. 5:3) அதுமட்டுமல்ல, “என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம்பண்ணுவேன்” என யெகோவா கொடுத்த வாக்குறுதியும் நம் நினைவில் இருக்கிறது.—1 சா. 2:30.
கண்காணிகள் மற்றவர்களுக்கு மரியாதை காட்டுகிறார்கள்
7. (அ) பொறுப்பான ஸ்தானத்தில் இருக்கும் சகோதரர்கள் தங்களது கண்காணிப்பில் இருக்கிறவர்களை ஏன் கனம்பண்ண வேண்டும்? (ஆ) சக விசுவாசிகளுக்கு பவுல் எவ்வாறு மரியாதை கொடுத்தார்?
7 “கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் சக கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கூறினார். (ரோ. 12:10) சபையில் முன்னின்று வழிநடத்துகிறவர்கள் தங்கள் கண்காணிப்பிலுள்ள சபையாரைக் கனம்பண்ணுவதில் முன்மாதிரியாக இருக்க வேண்டும்; அதாவது, கனம்பண்ணுவதில் “முந்திக்கொள்ள” வேண்டும். இவ்விஷயத்தில், பொறுப்பான ஸ்தானத்தில் இருப்பவர்கள், பவுல் வைத்த முன்மாதிரியைப் பின்பற்றுவது நல்லது. (1 தெசலோனிக்கேயர் 2:7, 8-ஐ வாசியுங்கள்.) தான் செய்ய விரும்பாத காரியங்களை மற்றவர்கள் செய்யும்படி பவுல் சொல்ல மாட்டாரென்று அவர் சந்தித்த சபைகளிலிருந்த சகோதரர்கள் நன்றாகவே அறிந்திருந்தார்கள். இவ்வாறு, பவுல் சக விசுவாசிகளுக்கு மரியாதை கொடுத்து அவர்களுடைய மரியாதையைச் சம்பாதித்தார். பவுல் சிறந்த முன்மாதிரி வைத்ததால், ‘என்னைப் பின்பற்றுகிறவர்களாய் ஆகுங்கள்’ என்று அவர் கேட்டுக்கொண்டபோது அநேகர் மனப்பூர்வமாய்ப் பின்பற்றியிருப்பார்கள் என நாம் நம்பலாம்.—1 கொ. 4:16.
8. (அ) தம் சீஷர்களுக்கு இயேசு மரியாதை காட்டிய ஒரு முக்கியமான வழி என்ன? (ஆ) இன்று கண்காணிகள் இயேசுவின் முன்மாதிரியை எவ்வாறு பின்பற்றலாம்?
8 பொறுப்பான ஸ்தானத்தில் இருக்கும் ஒரு சகோதரர் தனது கண்காணிப்பில் இருப்போருக்கு மரியாதை காட்டுவதற்கான இன்னொரு வழி, மற்றவர்களிடம் எதையாவது செய்யும்படி கேட்கையில் அல்லது அவர்களுக்கு ஆலோசனை கொடுக்கையில் அதற்கான காரணங்களைச் சொல்வதாகும். இப்படிச் செய்வதன் மூலம் அவர் இயேசுவைப் பின்பற்றுகிறார். உதாரணத்திற்கு, தம் சீஷர்களை அறுப்புக்கு அதிக வேலையாட்களை அனுப்பும்படி ஜெபிக்கச் சொன்னபோது இயேசு அதற்கான காரணத்தையும் சொன்னார். “அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்” என்றார். (மத். 9:37, 38) அவ்வாறே, “விழித்திருங்கள்” என்று தம் சீஷர்களுக்கு அறிவுரை கொடுத்தபோது, அதற்கான காரணத்தையும் அவர் சொன்னார். “உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்” என்றார். (மத். 24:42) பெரும்பாலும், இயேசு தம் சீஷர்கள் என்ன செய்ய வேண்டுமென்று மட்டும் சொல்லாமல், ஏன் செய்ய வேண்டுமென்றும் கூறினார். இவ்வாறு, அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து அவர்களைக் கண்ணியமாய் நடத்தினார். கண்காணிகள் பின்பற்றுவதற்கு எத்தகைய அருமையான உதாரணம்!
யெகோவாவின் அமைப்புக்கும் அதன் வழிநடத்துதலுக்கும் மதிப்புகொடுத்தல்
9. உலகளாவிய கிறிஸ்தவ சபையையும் அதன் பிரதிநிதிகளையும் நாம் கனம்பண்ணுவது யாரைக் கனம்பண்ணுவதைக் குறிக்கிறது? விவரியுங்கள்.
9 யெகோவாவைக் கனம்பண்ணுவதற்கு, உலகளாவிய கிறிஸ்தவ சபையையும் அதன் பிரதிநிதிகளையும்கூட நாம் கனம்பண்ண வேண்டும். உண்மையுள்ள அடிமை வகுப்பார் பைபிளிலிருந்து தருகிற அறிவுரைக்குக் கீழ்ப்படிவது, யெகோவாவின் அமைப்புக்கும் அதன் வழிநடத்துதலுக்கும் நாம் மரியாதை காட்டுவதைக் குறிக்கிறது. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையில், நியமிக்கப்பட்டிருந்த கண்காணிகளுக்கு மரியாதை காட்டாதவர்களைக் கண்டிக்க வேண்டிய தேவை இருந்ததை அப்போஸ்தலன் யோவான் கண்டார். அவர் குறிப்பிட்டதாவது: “சபைக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். ஆனால், சபையில் முதலிடம் பெறத் துடிக்கிற தியோத்திரேப்பு, நாங்கள் சொல்லும் எதையுமே மரியாதையோடு ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவே, நான் அங்கு வந்தால், அவன் செய்கிற காரியங்களையெல்லாம் எடுத்துக் காட்டுவேன். அவன் எங்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசிக்கொண்டு திரிகிறான். அது போதாதென்று, அங்கு வருகிற சகோதரர்களை அவன் மரியாதையோடு வரவேற்பதும் இல்லை; அப்படி வரவேற்க விரும்புகிறவர்களைத் தடுப்பதற்கும் அவர்களைச் சபையிலிருந்து நீக்குவதற்கும் பார்க்கிறான். அன்பானவனே, கெட்டதை அல்ல, நல்லதையே பின்பற்று. நல்லதைச் செய்கிறவன் கடவுளின் பக்கம் இருக்கிறான். கெட்டதைச் செய்கிறவனோ கடவுளைக் கண்டதில்லை.” (3 யோவான் 9–11, NW) இந்தக் கிறிஸ்தவர்கள் கண்காணிகளுக்கு மட்டுமின்றி அவர்களுடைய போதனை மற்றும் வழிநடத்துதலுக்கும்கூட மரியாதை காட்டவில்லை என்பதையே யோவானின் வார்த்தைகள் தெரிவிக்கின்றன. பெருவாரியான கிறிஸ்தவர்கள் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். அப்போஸ்தலர்கள் இருந்த வரையில், முன்னின்று வழிநடத்தியவர்களுக்குச் சகோதரர்கள் உள்ளப்பூர்வமாக மரியாதை காட்டினதாகவே தெரிகிறது.—பிலி. 2:12.
10, 11. சபையில் சிலருக்கு அதிகாரம் அளிக்கப்படுவது ஏன் சரியானதென பைபிளிலிருந்து விளக்குங்கள்.
10 “நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்” என்று இயேசு தம் சீஷர்களுக்குச் சொல்லியிருப்பதால் கிறிஸ்தவ சபையில் கண்காணிகள், மூப்பர்கள் போன்ற ஸ்தானங்களுக்கு அவசியமேயில்லை எனச் சிலர் விவாதித்திருக்கிறார்கள். (மத். 23:8) என்றாலும், கடவுளே சிலருக்கு அதிகாரம் அளித்திருந்தார் என்பதற்கு எபிரெய மற்றும் கிரேக்க வேதாகமம் இரண்டிலுமே எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன. மனிதர் மூலமாக யெகோவா மக்களை வழிநடத்தினார் என்பதற்கு, பூர்வ எபிரெயர்கள் காலத்தில் வாழ்ந்த முற்பிதாக்கள், நியாயாதிபதிகள், ராஜாக்கள் போன்றவர்களின் ஏராளமான உதாரணங்கள் உள்ளன. யெகோவா நியமித்திருந்தவர்களுக்குத் தகுந்த மரியாதை காட்டாதவர்களை அவர் தண்டித்தார்.—2 இரா. 1:2–17; 2:19, 23, 24.
11 அவ்வாறே, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் அப்போஸ்தலர்களின் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்தார்கள். (அப். 2:42) உதாரணமாக, பவுல் தன் சகோதரர்களுக்கு அறிவுரை வழங்கினார். (1 கொ. 16:1; 1 தெ. 4:2) அதே சமயத்தில், தன்னைவிட மேலான ஸ்தானத்திலிருந்த சகோதரர்களுக்கும் அவர் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்தார். (அப். 15:22; கலா. 2:9, 10) ஆம், கிறிஸ்தவ சபையில் செலுத்தப்பட்டுவந்த அதிகாரத்தைக் குறித்து பவுலுக்குச் சரியான கண்ணோட்டம் இருந்தது.
12. பைபிள் உதாரணங்களிலிருந்து கண்காணிப்பு சம்பந்தமாக என்ன இரண்டு விஷயங்களைக் கற்றுக்கொள்கிறோம்?
12 இதிலிருந்து இரண்டு விஷயங்களை நாம் கற்றுக்கொள்கிறோம். முதலாவது, “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பார், ஆளும் குழு வாயிலாக சகோதரர்களைப் பொறுப்பான ஸ்தானங்களில் நியமிப்பது வேதப்பூர்வமானது; இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களைக் கண்காணிப்பதற்கென்று இன்னும் சில சகோதரர்கள் நியமிக்கப்படுவதும் வேதப்பூர்வமானது. (மத். 24:45–47, NW; 1 பே. 5:1–3) இரண்டாவது, நியமிக்கப்பட்ட சகோதரர்கள் உட்பட, நாம் அனைவருமே நமக்கு மேலாகக் கண்காணிகளாய் இருப்பவர்களைக் கனம்பண்ண வேண்டும். அப்படியானால், உலகளாவிய கிறிஸ்தவ சபையில் கண்காணிக்கும் பொறுப்பில் உள்ளவர்களைக் கனம்பண்ணுவதற்கு, நடைமுறையான சில வழிகள் யாவை?
பயணக் கண்காணிகளுக்கு மரியாதை காட்டுதல்
13. இன்றைய கிறிஸ்தவ சபையின் பிரதிநிதிகளுக்கு நாம் எவ்வாறு மரியாதை காட்டலாம்?
13 பவுல் இவ்வாறு கூறினார்: “சகோதரரே, உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணை செய்கிறவர்களாயிருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து, அவர்களுடைய கிரியையினிமித்தம் அவர்களை மிகவும் அன்பாய் எண்ணிக்கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்.” (1 தெ. 5:12, 13) பயணக் கண்காணிகளும் கடினமாய்ப் ‘பிரயாசப்படுகிறவர்களே.’ அதனால், அவர்களை உயர்வாய்க் கருதி ‘மிகவும் அன்புகாட்டுவோமாக.’ இதற்கு ஒரு வழி, அவர்களுடைய ஆலோசனைக்கும் அறிவுரைக்கும் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிவதாகும். அவர்கள் உண்மையுள்ள அடிமை வகுப்பார் தரும் அறிவுரையை நமக்கு அளிக்கும்போது அதற்கு ‘இணங்கிச் செல்லும்படி’ ‘பரத்திலிருந்து வருகிற ஞானம்’ நம்மைத் தூண்டும்.—யாக். 3:17.
14. பயணக் கண்காணிகள்மீது உள்ளப்பூர்வமான மரியாதை வைத்திருப்பதைச் சபையார் எவ்வாறு காட்டுகிறார்கள், அதனால் வரும் பலன் என்ன?
14 நாம் பழக்கமாய்ச் செய்துவருகிற காரியங்களை வேறு விதமாகச் செய்யும்படி அவர் சொன்னால், என்ன செய்வது? சில சமயங்களில், ஆட்சேபம் தெரிவிக்கிற தூண்டுதலைக் கட்டுப்படுத்த வேண்டியிருக்கலாம்; அதாவது, “நாங்கள் அந்த மாதிரி செய்கிறதில்லை,” அல்லது “எங்கள் சபைக்கெல்லாம் இது ஒத்துவராது” என்று சொல்ல வாயெடுப்பதற்குப் பதிலாக, அவர் சொன்னதைச் செய்யப் பிரயாசப்பட வேண்டும். சபை யெகோவாவுக்குச் சொந்தமானது என்பதையும், இயேசுவே அதன் தலைவர் என்பதையும் எப்போதும் ஞாபகத்தில் வைப்பது இதற்கு உதவும். பயணக் கண்காணி அளிக்கிற ஆலோசனையைச் சபையார் மனதார ஏற்றுக்கொண்டு அதன்படி உடனே செயல்பட்டால் அது அவருக்குக் காட்டுகிற உள்ளப்பூர்வமான மரியாதைக்கு அத்தாட்சியாகும். கண்காணியாகிய தீத்து கொரிந்து சபையைச் சந்தித்து ஆலோசனை அளித்தபோது, அதை மதித்து ஏற்றுக்கொண்டதற்காக அந்தச் சகோதரர்களை அப்போஸ்தலன் பவுல் பாராட்டினார். (2 கொ. 7:13–16) அவ்வாறே இன்று நாமும்கூட பயணக் கண்காணிகளின் அறிவுரையை எந்தளவுக்கு மனமுவந்து ஏற்றுக்கொள்கிறோமோ, அந்தளவுக்கு பிரசங்க வேலையில் மகிழ்ச்சி காண்போம்.—2 கொரிந்தியர் 13:11-ஐ வாசியுங்கள்.
“எல்லாரையும் கனம்பண்ணுங்கள்”
15. சக கிறிஸ்தவர்களுக்கு மரியாதை காட்டுவதற்கான சில வழிகள் யாவை?
15 பவுல் இவ்வாறு எழுதினார்: “முதிர்வயதுள்ளவனைக் கடிந்துகொள்ளாமல், அவனைத் தகப்பனைப்போலவும், பாலிய புருஷரைச் சகோதரரைப்போலவும், முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் பாவித்து, புத்திசொல்லு. உத்தம விதவைகளாகிய விதவைகளைக் கனம்பண்ணு.” (1 தீ. 5:1–3) கிறிஸ்தவ சபையில் ஒவ்வொரு அங்கத்தினரையும் கனம்பண்ணும்படியாக பைபிள் நம்மை அறிவுறுத்துகிறது. ஒருவேளை, உங்களுக்கும் சபையிலுள்ள ஒருவருக்கும் இடையில் மனஸ்தாபம் இருந்தால் என்ன செய்வது? அந்த மனஸ்தாபத்தின் காரணமாக, சக கிறிஸ்தவர்களுக்கு மரியாதை காட்ட வேண்டுமென்ற கடமையைச் செய்யாமற் போய்விடுவீர்களா? அல்லது, கடவுளுக்கு ஊழியராய் இருக்கும் அவருடைய ஆன்மீகக் குணங்களைப் புரிந்துகொண்டு உங்கள் மனப்பான்மையை மாற்றிக்கொள்வீர்களா? முக்கியமாய், பொறுப்பான ஸ்தானத்தில் உள்ளவர்கள் சபையாரை எப்போதும் உயர்வாய்க் கருத வேண்டும்; ஒருபோதும் ‘மந்தையை ஆளுகிறவர்களாக’ இருக்கக் கூடாது.’ (1 பே. 5:3) சொல்லப்போனால், உள்ளப்பூர்வமான அன்புக்கு அடையாளமாக இருக்கும் கிறிஸ்தவ சபையில் ஒருவரையொருவர் கனம்பண்ணுவதற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ளன.—யோவான் 13:34, 35-ஐ வாசியுங்கள்.
16, 17. (அ) நாம் சத்தியத்தைச் சொல்கையில் அதைக் கேட்கிறவர்களுக்கு மட்டுமின்றி, அதை எதிர்க்கிறவர்களுக்கும் மரியாதை கொடுப்பது ஏன் முக்கியமானது? (ஆ) நாம் எப்படி ‘எல்லாரையும் கனம்பண்ணுகிறோம்’?
16 சபையில் உள்ளவர்களுக்கு மட்டுமே நாம் மரியாதை காட்டுவதில்லை. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு பவுல் இவ்வாறு எழுதினார்: “ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.” (கலா. 6:10) சக பணியாளர் ஒருவரோ, சக மாணவர் ஒருவரோ நம்மிடம் அநியாயமாய் நடந்துகொள்கையில் இந்த நியமத்தைப் பொருத்துவது கடினமாக இருக்கலாம்தான். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், “பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே” என்ற வசனத்தை நினைத்துக்கொள்ள வேண்டும். (சங். 37:1) பவுல் கொடுத்த அறிவுரையைப் பின்பற்றுவது, சத்தியத்தை எதிர்ப்பவர்களிடமும் நாம் மரியாதையுடன் நடந்துகொள்ள உதவும். அதைப் போலவே, வெளி ஊழியத்தில் ஈடுபடுகையில் நம்மைப்பற்றி தாழ்மையான கண்ணோட்டம் வைத்திருப்பது, எல்லாரிடமும் “சாந்தத்தோடும் வணக்கத்தோடும்,” அதாவது, உள்ளப்பூர்வமான மரியாதையோடும் பேச உதவும். (1 பே. 3:15) நம் தோற்றமும் உடையும்கூட நாம் நற்செய்தியை அறிவிப்பவர்களுக்கு மரியாதை கொடுக்கிறோம் என்பதைக் காட்டும்.
17 சபையிலும் சரி வெளியிலும் சரி, மற்றவர்களோடு பழகும்போது பின்வரும் அறிவுரையைப் பின்பற்ற நாம் கடினமாய் முயல வேண்டும்: “எல்லாரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள்.”—1 பே. 2:17.
உங்கள் பதில்?
நீங்கள் எவ்வாறு தகுந்த மரியாதை காட்டலாம்:
• யெகோவாவுக்கு?
• சபை மூப்பர்களுக்கும் பயணக் கண்காணிகளுக்கும்?
• சபையிலுள்ள ஒவ்வொருவருக்கும்?
• ஊழியத்தில் சந்திப்போருக்கு?
[பக்கம் 23-ன் படம்]
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் ஆளும் குழுவின் கண்காணிப்புக்கு மரியாதை காட்டினார்கள்
[பக்கம் 24-ன் படம்]
உலகெங்குமுள்ள மூப்பர்கள் ஆளும் குழுவால் நியமிக்கப்பட்ட பயணக் கண்காணிகளைக் கனம்பண்ணுகிறார்கள்