மந்தையைவிட்டுப் பிரிந்துபோனவர்களுக்கு உதவுங்கள்
“காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள்.” —லூக். 15:6.
1. இயேசு எவ்வாறு தாம் ஓர் அன்பான மேய்ப்பர் என்பதைக் காட்டியிருக்கிறார்?
யெகோவாவின் ஒரே பேறான மகன் இயேசு கிறிஸ்து, ‘ஆடுகளுடைய பெரிய மேய்ப்பர்’ என அழைக்கப்படுகிறார். (எபி. 13:20) ஒரு மேய்ப்பராக அவர் வருவார் என்று வேத வசனங்கள் முன்கூட்டியே அறிவித்தன; அவர், இஸ்ரவேலரில் ‘காணாமற்போன ஆடுகளை’ கண்டுபிடிக்க பெருமுயற்சி எடுத்த ஒப்பற்ற மேய்ப்பர் என்றும் அவை காட்டின. (மத். 2:1–6, NW; 15:24) அதுமட்டுமல்ல, ஒரு மேய்ப்பன் தன் ஆடுகளைப் பாதுகாக்கத் தன் உயிரையே கொடுக்க முன்வருவதுபோல, இயேசுவும் ஆடுகளைப் போன்றோரை மீட்பதற்காகத் தம் உயிரையே பலியாகக் கொடுத்தார்.—யோவா. 10:11, 15; 1 யோ. 2:1, 2.
2. என்ன காரணங்களால் கிறிஸ்தவர்கள் சிலர் செயலற்றவர்களாகியிருக்கலாம்?
2 இயேசுவின் பலியை உயர்வாய்க் கருதி கடவுளுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்த சிலர், இப்போது கிறிஸ்தவ சபையோடு கூட்டுறவு கொள்ளாதிருப்பது வருத்தமான விஷயம். மனத்தளர்வு, உடல்நலப் பிரச்சினைகள், அல்லது வேறுபல காரணங்களால் ஆன்மீகக் காரியங்களில் அவர்களுடைய ஆர்வம் குறைந்து, அவர்கள் செயலற்றவர்களாகியிருக்கலாம். என்றாலும், கடவுளுடைய மந்தையின் பாகமாக இருந்தால் மட்டுமே, சங்கீதம் 23-ல் தாவீது குறிப்பிட்ட சமாதானத்தையும் சந்தோஷத்தையும் அவர்கள் அனுபவிக்க முடியும். எடுத்துக்காட்டாக, “யெகோவா என் மேய்ப்பராய் இருக்கிறார். எனக்கு எதிலும் குறை இருக்காது” என அவர் பாடினார். (சங். 23:1, NW) கடவுளுடைய மந்தைக்குள் இருப்போருக்கு ஆன்மீக ரீதியில் எந்தக் குறையும் இருப்பதில்லை; மந்தையைவிட்டுப் பிரிந்துபோனவர்களுடைய நிலையோ வேறு. யார் அவர்களுக்கு உதவலாம்? எப்படி உதவலாம்? சொல்லப்போனால், அவர்கள் மீண்டும் மந்தைக்குள் வருவதற்கு என்னென்ன செய்யலாம்?
யார் உதவலாம்?
3. கடவுளுடைய ஆடுகளில் காணாமற்போனவர்களை மீட்டுக்கொண்டு வர என்ன தேவையென இயேசு எடுத்துக்காட்டினார்?
3 கடவுளுடைய ஆடுகளில் காணாமற்போனவர்களை மீட்டுக்கொண்டுவர உள்ளப்பூர்வமான முயற்சி தேவை. (சங். 100:3) இதை எடுத்துக்காட்டி இயேசு இவ்வாறு சொன்னார்: “ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று சிதறிப்போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப் போய்ச் சிதறிப்போனதைத் தேடாமலிருப்பானோ? அவன் அதைக் கண்டுபிடித்தால், சிதறிப்போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக் குறித்துச் சந்தோஷப்படுகிறதைப் பார்க்கிலும், அதைக் குறித்து அதிகமாய்ச் சந்தோஷப்படுவான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.” (மத். 18:12–14) அப்படியானால், மந்தையைவிட்டுப் பிரிந்துபோன ஆடுகளைப் போன்றோருக்கு யார் உதவலாம்?
4, 5. கடவுளுடைய மந்தையிடம் மூப்பர்களுக்கு எப்படிப்பட்ட மனப்பான்மை இருக்க வேண்டும்?
4 கிறிஸ்தவ மூப்பர்கள் சிதறிப்போன ஆடுகளுக்கு உதவ வேண்டுமானால், கடவுளுடைய மந்தை என்பது அவருக்கு ஒப்புக்கொடுத்த மக்களின் தொகுதியே என்பதை மனதில்வைக்க வேண்டும்; ஆம், ‘கடவுளுடைய மேய்ச்சலின் ஆடுகளான’ அவர்கள் அவருக்கு மதிப்புவாய்ந்தவர்கள் என்பதை மனதில்வைக்க வேண்டும். (சங். 79:13) அவரது பிரியத்திற்குரிய அந்த ஆடுகளுக்குக் கண்ணும் கருத்துமான கவனிப்பு தேவை; ஆகவே, அன்புள்ள மேய்ப்பர்கள் அந்த ஆடுகள் ஒவ்வொன்றின் மீதும் அக்கறை காட்ட வேண்டும். மேய்ப்பு சந்திப்பு செய்வது, அதாவது நட்புடன் அவர்களைச் சந்தித்துப் பேசுவது, மிகுந்த பயனளிக்கும். மேய்ப்பர்கள் அன்போடு அவர்களை உற்சாகப்படுத்திப் பேசுவது, ஆன்மீக ரீதியில் அவர்களைப் பலப்படுத்தலாம், மந்தையிடம் திரும்பி வருவதற்கான ஆசையையும் தூண்டிவிடலாம்.—1 கொ. 8:1.
5 கடவுளுடைய மந்தையை மேய்ப்பவர்கள், சிதறிப்போனவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு வேண்டிய உதவியை அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். மேய்ப்பர்களுக்குரிய பொறுப்புகளைப் பற்றி பூர்வ எபேசுவிலிருந்த மூப்பர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு நினைப்பூட்டினார்: “உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே [“தம் மகனுடைய இரத்தத்தினாலே,” NW] சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள் [“கவனம் செலுத்துங்கள்,” NW].” (அப். 20:28) அவ்வாறே, பரலோக நம்பிக்கையுடைய மூப்பர்களுக்கு அப்போஸ்தலன் பேதுருவும் இவ்வாறு அறிவுரை அளித்தார்: “உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்பு செய்யுங்கள்.”—1 பே. 5:1–3.
6. முக்கியமாக இன்று, கடவுளுடைய ஆடுகளுக்கு மேய்ப்பர்களின் கவனிப்பு ஏன் தேவை?
6 கிறிஸ்தவ மேய்ப்பர்கள் ‘நல்ல மேய்ப்பரான’ இயேசுவைப் பின்பற்றுவது அவசியம். (யோவா. 10:11) கடவுளுடைய ஆடுகள்மீது அவருக்கு மிகுந்த அக்கறை இருந்தது; ஆகவேதான், அந்த ஆடுகளைக் கவனிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, “என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக” என்று சீமோன் பேதுருவிடம் சொன்னார். (யோவான் 21:15–17-ஐ வாசியுங்கள்.) அப்படிப்பட்ட அக்கறை முக்கியமாக இன்று யெகோவாவின் ஆடுகளுக்குத் தேவைப்படுகிறது; ஏனென்றால், அவருக்கு ஒப்புக்கொடுத்தவர்களுடைய உத்தமத்தன்மையை முறிக்கப் பிசாசு படுதீவிரமாகச் செயல்படுகிறான்; அவர்களுடைய பலவீனங்களைத் தனக்குச் சாதகமாக்கியும், இவ்வுலகத்தின் கவர்ச்சிகளைப் பயன்படுத்தியும் அவர்களைப் பாவ வழியில் கொண்டுசெல்ல முயலுகிறான். (1 யோ. 2:15–17; 5:19) அவன் விரிக்கும் வலையில் குறிப்பாகச் செயலற்ற பிரஸ்தாபிகள் எளிதில் சிக்கிவிட வாய்ப்புண்டு. ஆகவே, அவர்கள் ‘கடவுளுடைய சக்தியின் வழியில் நடப்பதற்கு’ உதவி தேவை. (கலா. 5:16–21, 25, NW) அப்படிப்பட்ட ஆடுகளுக்கு உதவ, ஜெபத்தோடு கடவுளைச் சார்ந்திருப்பதும், அவருடைய சக்தியின் வழிநடத்துதலை நாடுவதும், அவருடைய வார்த்தையைத் திறம்பட பயன்படுத்துவதும் அவசியம்.—நீதி. 3:5, 6; லூக். 11:13; எபி. 4:12.
7. மூப்பர்கள் தங்கள் கவனிப்பிலுள்ள ஆடுகளை மேய்க்க வேண்டியது எந்தளவு முக்கியமானது?
7 பூர்வ இஸ்ரவேலில் ஆடு மேய்ப்பவர்கள் தங்களுடைய மந்தையை வழிநடத்துவதற்கு ஒரு நீண்ட வளைகோலைப் பயன்படுத்தினார்கள். ஆடுகள், தொழுவத்திற்குள் போகும்போதும் சரி வெளியே வரும்போதும் சரி, ‘கோலுக்குக் கீழாக’ செல்லும்; இப்படிச் செல்லும்போது மேய்ப்பர்களால் ஆடுகளை எண்ண முடியும். (லேவி. 27:32; மீ. 2:12; 7:14) அவ்வாறே, கிறிஸ்தவ மேய்ப்பர்களும் தங்கள் கவனிப்பிலுள்ள கடவுளுடைய ஆடுகளை அறிந்திருப்பதும் எப்போதும் அவர்களுடைய சூழ்நிலைகளைத் தெரிந்திருப்பதும் அவசியம். (நீதிமொழிகள் 27:23-ஐ ஒப்பிடுங்கள்.) ஆகவே, மூப்பர் குழு கலந்தாலோசிக்கிற முக்கிய விஷயங்களில் ஒன்று மேய்ப்பு வேலை ஆகும். பிரிந்துபோன ஆடுகளுக்கு உதவுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது இதில் அடங்கும். தம் ஆடுகளைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றுக்குத் தேவையான உதவி அளிக்கப்போவதாக யெகோவாவே சொல்லியிருக்கிறார். (எசே. 34:11) ஆகவே, பிரிந்துபோன ஆடுகள் மீண்டும் மந்தையோடு சேர்ந்துகொள்வதற்கு மூப்பர்களும் இதுபோல் முயற்சி எடுக்கையில் கடவுள் சந்தோஷப்படுகிறார்.
8. ஆடுகளுக்கு மூப்பர்கள் எவ்விதங்களில் தனிப்பட்ட கவனம் செலுத்தலாம்?
8 வியாதிப்பட்டிருக்கிற கிறிஸ்தவரை ஒரு மூப்பர் போய்ச் சந்திக்கும்போது, அவர் சந்தோஷப்படுவார், உற்சாகமும் பெறுவார். ஆன்மீக ரீதியில் வியாதிப்பட்டிருக்கிற கிறிஸ்தவரை ஒரு மூப்பர் போய்ச் சந்தித்து உதவும்போதும் அந்தக் கிறிஸ்தவர் அவ்விதமாகவே உணருவார். அவருக்கு அந்த மூப்பர் பல விதங்களில் உதவலாம்; உதாரணத்திற்கு, சில வசனங்களை வாசித்துக் காட்டலாம், ஒரு கட்டுரையைக் கலந்தாலோசிக்கலாம், கூட்டங்களில் கற்றுக்கொண்ட முக்கியக் குறிப்புகளைப் பகிர்ந்துகொள்ளலாம், அவரோடு சேர்ந்து ஜெபிக்கலாம். அதோடு, அவர் சபைக் கூட்டங்களுக்கு மீண்டும் வந்தால் சபையார் எவ்வளவு சந்தோஷப்படுவார்கள் என்று எடுத்துச் சொல்லலாம். (2 கொ. 1:3–7; யாக். 5:13–15) ஒருமுறை அவரைச் சந்தித்தாலோ, அவருக்கு ஃபோன் செய்தாலோ, கடிதம் எழுதினாலோகூட அவர் பெரிதும் நன்மை அடையலாம்! இவ்வாறு, மந்தையிலிருந்து தவறிப்போன ஓர் ஆட்டிற்குத் தனிப்பட்ட விதமாக உதவுவது பரிவுள்ள அந்தக் கிறிஸ்தவ மேய்ப்பரின் சந்தோஷத்தையும் கூட்டும்.
கூட்டு முயற்சி
9, 10. சிதறிப்போன ஓர் ஆட்டின்மீது மூப்பர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் அக்கறை காட்ட வேண்டுமென நீங்கள் ஏன் சொல்வீர்கள்?
9 நாம் பல வேலைகளில் மூழ்கிவிடுவதாலும், கொடிய காலத்தில் வாழ்ந்துவருவதாலும், சக கிறிஸ்தவர் ஒருவர் சபையிலிருந்து மெதுமெதுவாக விலகிச் செல்வதை ஒருவேளை கவனிக்காமல் இருக்கலாம். (எபி. 2:1) ஆனால், யெகோவாவுக்கு அவருடைய ஆடுகள் மதிப்புவாய்ந்தவை. மனித உடலின் உறுப்புகள் ஒவ்வொன்றும் எந்தளவு மதிப்புமிக்கதோ அந்தளவு அவருடைய ஆடுகள் ஒவ்வொன்றும் மதிப்புமிக்கது. எனவே, நாம் எல்லாருமே நம் சகோதரர்கள்மீது கரிசனையாக இருந்து, ஒருவருக்கொருவர் உள்ளப்பூர்வமாக அக்கறை காட்ட வேண்டும். (1 கொ. 12:25) நீங்கள் எப்படி?
10 சிதறிப்போன ஆடுகளைத் தேடிக் கண்டுபிடித்து உதவும் பொறுப்பு முக்கியமாக மூப்பர்களுக்குத்தான் இருக்கிறதென்றாலும், சபையிலுள்ள மற்றவர்களும் இவ்விஷயத்தில் அக்கறை காட்டலாம். ஆம், நாமும் மூப்பர்களோடு ஒத்துழைக்கலாம். மந்தைக்குள் மீண்டும் வரவேண்டிய சகோதர சகோதரிகளுக்கு நம்மால் உற்சாகமும் ஆன்மீக உதவியும் அளிக்க முடியும், அளிக்கவும் வேண்டும். எப்படி அளிக்கலாம்?
11, 12. ஆன்மீக உதவி தேவைப்படுவோருக்கு உதவும் அரிய வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால், என்ன செய்வீர்கள்?
11 சில சந்தர்ப்பங்களில், செயலற்றவர்கள் உதவிபெற விரும்பினால், அவர்களுக்கு பைபிள் படிப்பு நடத்த அனுபவமுள்ள பிரஸ்தாபிகளை மூப்பர்கள் ஏற்பாடு செய்யலாம். “ஆதியில் [அவர்கள்] கொண்டிருந்த அன்பை” தூண்டிவிடுவதற்காகவே இதுபோன்ற முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. (வெளி. 2:1, 4) கூட்டங்களுக்கு வராமலிருந்த காலத்தில் அவர்களால் தெரிந்துகொள்ள முடியாமற்போன விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது அவர்கள் ஆன்மீக ரீதியில் உற்சாகம்பெற்று பலப்படுத்தப்படுவார்கள்.
12 ஆன்மீக உதவி தேவைப்படுகிற செயலற்ற ஒரு பிரஸ்தாபிக்கு உதவும்படி மூப்பர்கள் உங்களிடம் கேட்டால், உங்களை வழிநடத்தும்படியும் உங்களுடைய முயற்சிகளை ஆசீர்வதிக்கும்படியும் யெகோவாவிடம் ஜெபியுங்கள். சொல்லப்போனால், ‘உங்கள் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவியுங்கள்; அப்பொழுது உங்கள் யோசனைகள் உறுதிப்படும்.’ (நீதி. 16:3) அவருக்கு என்னென்ன பைபிள் வசனங்களைக் காட்டலாம் என்றும் அவருடைய விசுவாசத்தைப் பலப்படுத்த என்னென்ன குறிப்புகளைச் சொல்லலாம் என்றும் நன்றாக யோசியுங்கள். பின்வருமாறு சொன்ன அப்போஸ்தலன் பவுலின் மிகச் சிறந்த முன்மாதிரியைச் சிந்தித்துப் பாருங்கள்: “உங்களைப் பார்க்க வேண்டுமென்றும், உங்களுக்கு ஆன்மீக அன்பளிப்பைக் கொடுத்து உங்களைப் பலப்படுத்த வேண்டுமென்றும் ஏங்குகிறேன்; சொல்லப்போனால், உங்களுடைய விசுவாசத்தின் மூலம் நானும் என்னுடைய விசுவாசத்தின் மூலம் நீங்களும், ஒருவருக்கொருவர் ஊக்கம்பெற வேண்டுமென்று ஏங்குகிறேன்.” (ரோ. 1:11, 12, NW) ரோமில் இருந்த கிறிஸ்தவர்கள் விசுவாசத்தில் பலப்படுவதற்காக அவர்களைப் பார்த்து ஆன்மீக அன்பளிப்பைக் கொடுப்பதற்கு பவுல் ஏங்கினார். ஒருவருக்கொருவர் ஊக்கம் பெறுவதையும் அவர் ஆவலோடு எதிர்பார்த்தார். கடவுளுடைய மந்தையிலிருந்து பிரிந்துசென்ற ஆடுகளுக்கு உதவுகையில் நமக்கும் இதே மனப்பான்மை இருக்க வேண்டும், அல்லவா?
13. செயலற்ற ஒரு பிரஸ்தாபியிடம் நீங்கள் என்னென்ன விஷயங்களைப் பேசலாம்?
13 செயலற்ற பிரஸ்தாபிக்குப் படிப்பு நடத்துகையில், “உங்களுக்குச் சத்தியம் எப்படிக் கிடைத்தது?” என்று நீங்கள் கேட்கலாம். முன்பு பெற்ற சந்தோஷத்தை எல்லாம் நினைத்துப்பார்க்க அவருக்கு உதவலாம்; கூட்டங்களிலும், ஊழியத்திலும், மாநாடுகளிலும் அவருக்குக் கிடைத்த இனிய அனுபவங்களைச் சொல்லும்படி அவரிடம் கேட்கலாம். நீங்களும் அவரும் சேர்ந்து ஊழியம் செய்திருந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களை அவருக்கு ஞாபகப்படுத்தலாம். யெகோவாவுடன் நெருங்கியிருப்பதால் நீங்கள் அனுபவிக்கிற சந்தோஷத்தையும் அவரோடு பகிர்ந்துகொள்ளலாம். (யாக். 4:8) கடவுள் தம்முடைய மக்களான நமக்குத் தருகிற எல்லாவற்றுக்காகவும், முக்கியமாய் உபத்திரவங்களின்போது தருகிற ஆறுதலுக்காகவும் நம்பிக்கைக்காகவும், எந்தளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறீர்கள் என்பதைச் சொல்லலாம்.—ரோ. 15:4; 2 கொ. 1:3, 4.
14, 15. செயலற்றவர்கள் முன்பு அனுபவித்த என்ன ஆசீர்வாதங்களை அவர்களுக்கு நினைப்பூட்டுவது பிரயோஜனமாய் இருக்கும்?
14 செயலற்ற பிரஸ்தாபி சபையோடு நெருங்கிய கூட்டுறவு வைத்திருந்தபோது பெற்ற ஆசீர்வாதங்களில் சிலவற்றை அவருக்கு ஞாபகப்படுத்துவது பிரயோஜனமாய் இருக்கும். உதாரணத்திற்கு, கடவுளுடைய வார்த்தையையும் அவருடைய நோக்கங்களையும் பற்றி அதிகமதிகமாய்த் தெரிந்துகொள்ளும் ஆசீர்வாதத்தை அவர் பெற்றிருந்தார். (நீதி. 4:18) ‘கடவுளுடைய சக்தியின் வழியில்’ (NW) அவர் நடந்தபோது, பாவம் செய்வதற்கான தூண்டுதல்களைச் சமாளிப்பது அவருக்குச் சுலபமாக இருந்தது. (கலா. 5:22–26) இவ்வாறு பெற்ற சுத்தமான மனசாட்சியின் காரணமாக, அவரால் யெகோவாவிடம் ஜெபம் செய்யவும், ‘இருதயங்களையும் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும் தேவ சமாதானத்தை’ அனுபவிக்கவும் முடிந்தது. (பிலி. 4:6, 7) இவற்றையெல்லாம் நீங்கள் மனதில் வையுங்கள், அவரிடம் உள்ளப்பூர்வமான அக்கறை காட்டுங்கள், உங்களுடைய ஆன்மீக சகோதரனாகவோ சகோதரியாகவோ இருக்கிற அவரை அன்போடு உற்சாகப்படுத்தி அவர் மந்தைக்குத் திரும்பிவர எப்பாடுபட்டாவது உதவுங்கள்.—பிலிப்பியர் 2:4-ஐ வாசியுங்கள்.
15 நீங்கள் மேய்ப்பு சந்திப்பு செய்யப்போகும் ஒரு மூப்பரா? அப்படியானால், முதன்முதலாகச் சத்தியத்தைக் கற்றுக்கொண்ட சமயத்தை நினைத்துப்பார்க்கும்படி செயலற்றுப்போன ஒரு தம்பதியரை நீங்கள் உற்சாகப்படுத்தலாம். அந்தச் சத்தியம் அவர்களுக்கு எத்தனை அருமையானதாய், நடைமுறையானதாய், திருப்தியளிப்பதாய், ஆன்மீக ரீதியில் விடுதலையளிப்பதாய் இருந்தது! (யோவா. 8:32) யெகோவாவையும், அவரது அன்பையும், அவரது உன்னத நோக்கங்களையும் பற்றி கற்றுக்கொண்டபோது அவர்களுடைய இருதயம் எந்தளவு நன்றியால் பூரித்தது! (லூக்கா 24:32-ஐ ஒப்பிடுங்கள்.) யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்கள் அவரோடு நெருங்கிய பந்தத்தை அனுபவிப்பதையும் ஜெபத்தில் அவரோடு பேசும் பாக்கியத்தைப் பெற்றிருப்பதையும் பற்றி அவர்களுக்கு நினைப்பூட்டுங்கள். ‘நித்தியானந்த தேவனாகிய யெகோவாவுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி’ மீண்டும் செயல்பட அவர்களை உள்ளார்வத்துடன் உற்சாகப்படுத்துங்கள்.—1 தீ. 1:11.
தொடர்ந்து அன்பு காட்டுங்கள்
16. ஆன்மீக உதவியளிக்க எடுக்கப்படும் முயற்சிகள் உண்மையிலேயே பயனளிக்கும் என்பதற்கு ஓர் உதாரணம் தருக.
16 இதுவரை நாம் சிந்தித்த அறிவுரைகள் உண்மையிலேயே பயனளிக்குமா? நிச்சயமாக! உதாரணத்திற்கு, 12 வயதில் பிரஸ்தாபியான ஓர் இளைஞரை எடுத்துக்கொள்ளுங்கள். 15 வயதில் அவர் செயலற்றவராகிவிட்டார். ஆனால், பிற்பாடு கடவுளுடைய மந்தையோடு சேர்ந்துகொண்டார்; அதுமட்டுமல்ல, 30 வருடங்களுக்கு மேலாக முழுநேர ஊழியம் செய்துவருகிறார். ஒரு கிறிஸ்தவ மூப்பர் செய்த உதவிதான் அவர் மறுபடியும் மந்தைக்குத் திரும்பிவரப் பெரிதும் கைகொடுத்தது. தனக்குக் கிடைத்த ஆன்மீக உதவிக்காக அவர் எந்தளவு நன்றியுள்ளவராக இருக்கிறார்!
17, 18. கடவுளுடைய மந்தையைவிட்டுப் பிரிந்துபோன ஒருவருக்கு உதவுகையில் என்னென்ன குணங்களை நீங்கள் காட்ட வேண்டியிருக்கும்?
17 செயலற்றவர்கள் சபைக்குள் திரும்பி வர உதவுவதற்குக் கிறிஸ்தவர்களைத் தூண்டுவது அன்புதான். இயேசு தம் சீஷர்களைக் குறித்து இவ்வாறு சொன்னார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (யோவா. 13:34, 35) ஆம், அன்பே உண்மைக் கிறிஸ்தவர்களின் அடையாளம். அப்படியிருக்க, ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவர்கள் ஒருவேளை செயலற்றவர்களாகிவிடுகையிலும் இந்த அன்பை நாம் காட்ட வேண்டும், அல்லவா? ஆம், கண்டிப்பாக! அதே சமயத்தில், அவர்களுக்குத் தேவையான உதவியை அளிப்பதற்கு மற்ற கிறிஸ்தவ குணங்களையும் காட்ட வேண்டும்.
18 கடவுளுடைய மந்தையைவிட்டுப் பிரிந்துபோன ஒருவருக்கு உதவுகையில் என்னென்ன குணங்களை நீங்கள் காட்ட வேண்டியிருக்கும்? அன்போடுகூட, இரக்கம், தயவு, சாந்தம், நீடிய பொறுமை ஆகிய குணங்களையும் காட்ட வேண்டியிருக்கும். சூழ்நிலைகளைப் பொறுத்து நீங்கள் மன்னிக்கும் குணத்தையும் காட்ட வேண்டியிருக்கும். பவுல் இவ்வாறு எழுதினார்: “நீங்கள் . . . உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.”—கொலோ. 3:12–14.
19. கடவுளுடைய ஆடுகள் மீண்டும் மந்தைக்குள் வர உதவுவதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சி ஏன் வீண்போகாது?
19 கடவுளுடைய மந்தையிலிருந்து சிலர் பிரிந்துபோவதற்கான காரணங்களை அடுத்த கட்டுரையில் சிந்திப்போம். அவருடைய மந்தைக்குள் திரும்பி வருவோருக்கு எப்படிப்பட்ட வரவேற்பு காத்திருக்கிறது என்பதையும் சிந்திப்போம். அந்தக் கட்டுரையைப் படிக்கும்போதும் இந்தக் கட்டுரையை ஆழ்ந்து சிந்திக்கும்போதும் ஒரு விஷயத்தைக் குறித்து நீங்கள் உறுதியாய் இருக்கலாம்; கடவுளுடைய ஆடுகள் மீண்டும் அவருடைய மந்தைக்குள் வர உதவுவதற்கு நீங்கள் எடுக்கும் எந்த முயற்சியும் வீண்போகாது! இந்த உலகில் அநேகர் பணத்தையும் பொருளையும் சேர்ப்பதற்கே தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவிடுகிறார்கள்; ஆனால், இந்த உலகிலுள்ள அத்தனை பணம்பொருளையும்விட ஒரேவொரு உயிர் அதிக மதிப்புள்ளது! காணாமற்போன ஆட்டைப் பற்றிய உவமையில் இயேசு இதையே வலியுறுத்தினார். (மத். 18:12–14) இதை நீங்கள் எப்போதும் நினைவில் வைத்து, யெகோவாவுக்குப் பிரியமான ஆடுகள் மீண்டும் மந்தைக்குள் வர உதவுவதற்கு உள்ளார்வத்தோடும் அவசர உணர்வோடும் முயற்சி செய்வீர்களாக!
என்ன பதில் சொல்வீர்கள்?
• மந்தையிலிருந்து பிரிந்துபோன ஆடுகள் சம்பந்தமாக கிறிஸ்தவ மேய்ப்பர்கள் என்ன செய்யக் கடமைப்பட்டிருக்கிறார்கள்?
• இப்போது சபையோடு கூட்டுறவு கொள்ளாதவர்களுக்கு நீங்கள் எப்படி உதவலாம்?
• கடவுளுடைய மந்தையைவிட்டுப் பிரிந்துபோனவர்களுக்கு உதவுகையில் என்னென்ன குணங்களை நீங்கள் காட்ட வேண்டியிருக்கும்?
[பக்கம் 10-ன் படம்]
கடவுளுடைய மந்தையிலிருந்து பிரிந்துபோனவர்களுக்கு உதவ கிறிஸ்தவ மேய்ப்பர்கள் அன்போடு முயற்சி எடுக்கிறார்கள்