“கடல் கீதம்” இடைவெளியை இணைக்கும் பாலம்
எருசலேமிலுள்ள இஸ்ரேல் அருங்காட்சியகத்தில், மே 22, 2007 அன்று எபிரெய சுருளின் ஒரு துண்டுப்பகுதி காட்சிக்கு வைக்கப்பட்டது. இது பொ.ச. ஏழாம் அல்லது எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இதில் யாத்திராகமம் 13:19–16:1-ல் உள்ள பதிவு இருக்கிறது. “கடல் கீதம்” என அழைக்கப்படுகிற பாடலும், அதாவது செங்கடலிலிருந்து அற்புதமாய் விடுவிக்கப்பட்டபோது இஸ்ரவேலர் பாடிய வெற்றிப் பாடலும் இதில் உள்ளது. இது காட்சிக்கு வைக்கப்பட்டது ஏன் குறிப்பிடத்தக்கது?
ஏனெனில், இந்தக் கையெழுத்துப் பிரதி எழுதப்பட்ட காலம் குறிப்பிடத்தக்கது. சவக் கடல் சுருள்கள் பொ.ச.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கும் பொ.ச. முதலாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவை. சுமார் 60 வருடங்களுக்கு முன்பு அவை கண்டெடுக்கப்பட்டன. அதற்கும் முன்னர் பழங்கால எபிரெய கையெழுத்துப் பிரதியாக இருந்தது, பொ.ச. 930-ஐச் சேர்ந்த அலேப்போ சுவடிதான். இடைப்பட்ட பல நூற்றாண்டுகளின்போது எபிரெய கையெழுத்துப் பிரதிகளின் சில துண்டுப்பகுதிகளைத் தவிர வேறு கையெழுத்துப் பிரதிகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
“கடல் கீதம் அடங்கிய கையெழுத்துப் பிரதி, சவக் கடல் சுருள்களுக்கும் . . . அலேப்போ சுவடிக்கும் மத்தியிலுள்ள கால இடைவெளியை இணைக்கிற பாலமாக அமைந்துள்ளது” என்று இஸ்ரேல் அருங்காட்சியகத்தின் இயக்குநரான ஜேம்ஸ் எஸ். ஸ்னைடர் கூறுகிறார். அவருடைய கருத்துப்படி, பழங்காலத்தைச் சேர்ந்த பிற பைபிள் கையெழுத்துப் பிரதிகளைப் போலவே இந்தக் கையெழுத்துப் பிரதியும் “எவ்வித மாற்றங்களும் இல்லாமல் பாதுகாக்கப்பட்டிருப்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறது.”
எகிப்திலுள்ள கெய்ரோவைச் சேர்ந்த ஜெப ஆலயத்தில் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பல கையெழுத்துப் பிரதிகளில் இந்தச் சுருளின் துண்டுப்பகுதியும் ஒன்று என நம்பப்படுகிறது. என்றாலும், எபிரெய கையெழுத்துப் பிரதிகளைச் சுயமாகச் சேகரித்து வந்த ஒருவருக்கு இந்தக் கையெழுத்துப் பிரதியின் அருமை தெரியவில்லை; 1970-களின் இறுதியில் ஒரு வல்லுநரிடம் இதைப் பற்றி விசாரித்த பிறகே இதன் முக்கியத்துவம் அவருக்குப் புரிந்தது. அப்போது, கார்பன் சோதனை முறையில் இது எழுதப்பட்ட காலம் கணிக்கப்பட்டது. அதன் பிறகு, இஸ்ரேல் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும் வரையாக இது ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டது.
இதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டு இஸ்ரேல் அருங்காட்சியகத்திலுள்ள ஷ்ரைன் ஆஃப் த புக்-ன் தலைவரும், சவக் கடல் சுருள்களின் காப்பாளருமான அடால்ஃபோ ராயிட்மன் இவ்வாறு சொல்கிறார்: “பைபிளின் மஸோரெட்டிக் பதிப்பு பல நூற்றாண்டுகளாகவே எவ்வித பிழையுமின்றி திருத்தமாக நகலெடுக்கப்பட்டும் மொழிபெயர்க்கப்பட்டும் வந்திருக்கிறது என்பதைக் கடல் கீதம் அடங்கிய இந்தக் கையெழுத்துப் பிரதி தெளிவுபடுத்துகிறது. கடல் கீதத்தின் தனித்தன்மை வாய்ந்த எழுத்து நடை 7-ஆம், 8-ஆம் நூற்றாண்டுகளில் எப்படி இருந்ததோ அப்படியே இன்றும் மாறாமல் இருப்பதைக் காண்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.”
பைபிள், யெகோவாவுடைய சக்தியினால் அருளப்பட்ட நூலாகும். அது இன்றுவரை பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்றால், அதற்கு முக்கியக் காரணம் அவரே. அதுமட்டுமல்ல, பைபிளை வேதபாரகர் நுட்பமாக நகல் எடுத்தார்கள். ஆகவே, இன்று நாம் பயன்படுத்துகிற பைபிள் நம்பகமானது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]
Courtesy of Israel Museum, Jerusalem