உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w09 7/1 பக். 18-21
  • உங்களை அன்புடன் அழைக்கிறோம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களை அன்புடன் அழைக்கிறோம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ‘ஜனங்களைக் கூட்டுங்கள்’
  • பைபிள் சார்ந்த பேச்சு
  • காவற்கோபுர படிப்பு
  • சபை பைபிள் படிப்பு
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளி
  • ஊழியக் கூட்டம்
  • பொது மக்களின் கருத்து
  • உங்களை வரவேற்கிறோம்
  • “அன்பு காட்டுவதற்கும் நல்ல செயல்கள் செய்வதற்கும்” உற்சாகப்படுத்துகிற கூட்டங்கள்
    யெகோவாவின் விருப்பத்தைச் செய்யும் அமைப்பு
  • வணக்கத்துக்காக ஒன்றுகூடி வருதல்
    கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது!
  • அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஏவப்படுவதற்காகக் கூட்டங்கள்
    கடவுளுடைய சித்தத்தைச் செய்தல்
  • கேள்விப் பெட்டி
    நம் ராஜ்ய ஊழியம்—2007
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
w09 7/1 பக். 18-21

உங்களை அன்புடன் அழைக்கிறோம்

யெகோவாவின் சாட்சிகள் கூடிவருகிற இடங்களுக்கு ராஜ்ய மன்றங்கள் என்று பெயர். அப்படிப்பட்ட ஒரு மன்றத்தின் வழியாக நீங்கள் போயிருக்கலாம், உள்ளே என்னதான் நடக்கிறதென நீங்கள் யோசித்திருக்கலாம். அங்கு ஒவ்வொரு வாரமும் நடக்கிற கூட்டங்களில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அங்குச் செல்கிற எல்லாரும் அன்புடன் வரவேற்கப்படுகிறார்கள்.

என்றாலும், உங்கள் மனதில் சில கேள்விகள் இருக்கலாம். யெகோவாவின் சாட்சிகள் ஏன் கூடிவருகிறார்கள்? அவர்களுடைய கூட்டங்களில் என்ன நடக்கிறது? இந்தக் கூட்டங்களைப் பற்றி யெகோவாவின் சாட்சிகளாக இல்லாதவர்கள் என்ன சொல்கிறார்கள்?

‘ஜனங்களைக் கூட்டுங்கள்’

பண்டைய காலம் முதற்கொண்டே, கடவுளை வழிபடவும் அவரைப் பற்றிக் கற்றுக்கொள்ளவும் ஜனங்கள் ஒன்றாகக் கூடிவந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 3,500 ஆண்டுகளுக்கு முன்பாக இஸ்ரவேல் மக்களிடம் இவ்வாறு சொல்லப்பட்டது: ‘புருஷர்களும் ஸ்திரீகளும் பிள்ளைகளும் உங்கள் வாசல்களிலிருக்கும் அந்நியர்களும் கேட்டு, கற்றுக்கொண்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் [அதாவது, யெகோவாவுக்குப்] பயந்து, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கும்படிக்கு . . . ஜனத்தைக் கூட்டுங்கள்.’ (உபாகமம் 31:12, 13) இவ்வாறு, இஸ்ரவேலிலிருந்த பெரியோரும்சரி சிறியோரும்சரி, யெகோவா தேவனை வழிபடவும் அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கவும் கற்பிக்கப்பட்டார்கள்.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்தவ சபை உருவானபோதும், கூட்டங்கள் நடத்தப்படுவது உண்மை வழிபாட்டின் முக்கிய அம்சமாகவே இருந்தது. அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “அன்பு காட்டவும் நற்செயல்கள் செய்யவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பி, ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காண்பிப்போமாக; சபைக் கூட்டங்களைச் சிலர் வழக்கமாகத் தவறவிடுவதுபோல் நாமும் தவறவிடாமல், ஒன்றுகூடிவந்து ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவோமாக.” (எபிரெயர் 10:24, 25) குடும்பத்தார் ஒன்றாகச் சேர்ந்து நேரத்தைச் செலவிடும்போது அவர்களுக்கு மத்தியில் பாசப்பிணைப்பு பலப்படுகிறது; அதே விதமாக, கடவுளுக்குச் சேவை செய்ய விரும்புகிறவர்கள் அவரை வழிபட ஒன்றுகூடி வரும்போது அவர்கள் மத்தியிலும் பாசப்பிணைப்பு பலப்படுகிறது.

பைபிளில் காணப்படும் மேற்கண்ட உதாரணங்களுக்கு இசைவாக, யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய ராஜ்ய மன்றங்களில் வாரம் இருமுறை கூடிவருகிறார்கள். அவர்களுடைய கூட்டங்கள், பைபிள் நியமங்களைப் புரிந்துகொள்ளவும், மதித்துணரவும், கடைப்பிடிக்கவும் உதவுகின்றன. பெரும்பாலும், உலகெங்கிலும் ஒரே விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன; ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு குறிப்பிட்ட நோக்கம் உண்டு. இந்தக் கூட்டங்களுக்கு முன்பும் பின்பும், எல்லாரும் உற்சாகமாகப் பேசி மகிழ்வதால் ‘ஒருவருக்கொருவர் ஊக்கம்பெறுகிறார்கள்.’ (ரோமர் 1:12) இந்தக் கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் என்ன நடக்கிறது?

பைபிள் சார்ந்த பேச்சு

பெரும்பாலோர் இந்தப் பேச்சில்தான் முதன்முதலாகக் கலந்துகொள்கிறார்கள். பொது மக்களுக்காகவே தயாரித்தளிக்கப்படும் இந்தப் பேச்சு பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் கொடுக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்துவும் பொது மக்களுக்குப் பல முறை பேச்சுக் கொடுத்தார். அவற்றில் மிகப் பிரபலமானது மலைப்பிரசங்கம். (மத்தேயு 5:1; 7:28, 29) அப்போஸ்தலன் பவுலும் அத்தேனே நகர மக்களுக்குமுன் பேச்சுக் கொடுத்தார். (அப்போஸ்தலர் 17:22-34) அதே மாதிரியைப் பின்பற்றி இன்றும், யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்கள் ஒன்றில் பொது மக்களுக்காகவே பேச்சுக் கொடுக்கப்படுகிறது. சிலர் இக்கூட்டத்திற்குத்தான் முதல் தடவையாக வருகிறார்கள்.

இந்தக் கூட்டம், யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள் என்ற புத்தகத்திலுள்ள ஒரு பாடலுடன் ஆரம்பமாகிறது.a முடிந்தவர்கள் எழுந்து நின்று இந்தப் பாடலைப் பாடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சுருக்கமான ஜெபத்திற்குப் பிறகு, திறமையான ஒரு பேச்சாளர் 30 நிமிடங்களுக்குப் பேச்சுக் கொடுக்கிறார். (“பொது மக்களுக்கு நடைமுறைப் பயனளிக்கும் பேச்சுகள்” என்ற தலைப்பிலுள்ள பெட்டியைப் பாருங்கள்.) அவருடைய பேச்சு, முழுக்க முழுக்க பைபிளைச் சார்ந்ததாகவே இருக்கிறது. பேச்சில் அவர் குறிப்பிடும் வசனங்களை பைபிளில் எடுத்துப் பார்க்கும்படி கூடிவந்திருப்பவர்களிடம் அவர் அடிக்கடி சொல்கிறார்; அவர் அவற்றை வாசிக்கும்போது அவர்களுடைய பைபிளில் அவற்றைக் கவனிக்கும்படியும் சொல்கிறார். ஆகையால், உங்கள் பைபிளை நீங்கள் எடுத்து வரலாம்; அல்லது, கூட்டம் ஆரம்பிப்பதற்குமுன் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரிடம் பைபிளைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்.

பொது மக்களுக்கு நடைமுறைப் பயனளிக்கும் பேச்சுகள்

பைபிள் அடிப்படையிலான பேச்சுகள் 170-க்கும் அதிகமான தலைப்புகளில் கொடுக்கப்படுகின்றன; இதோ, அவற்றில் சில:

  • மனிதரின் ஆரம்பம்—நீங்கள் என்ன நம்புகிறீர்கள் என்பது முக்கியமா?

  • பாலுறவையும் திருமணத்தையும் பற்றிய கடவுளின் கருத்து

  • பூமியைப் பாழாக்குவது தெய்வீக தண்டனையைக் கொண்டுவருகிறது

  • வாழ்க்கையின் கவலைகளைச் சமாளித்தல்

  • இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா?

காவற்கோபுர படிப்பு

யெகோவாவின் சாட்சிகளுடைய பெரும்பாலான சபைகளில், பொது மக்களுக்கான பேச்சுக்குப் பிறகு காவற்கோபுர படிப்பு நடைபெறுகிறது. இந்தப் படிப்பின்போது பைபிளிலுள்ள ஒரு விஷயத்தின் பேரில் ஒரு மணிநேரத்திற்குக் கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு நடக்கிறது. பவுலின் காலத்தில் வாழ்ந்த பெரோயா நகரத்தாரைப் பின்பற்றுவதற்குக் கூடிவந்திருப்போர் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள்; அந்த நகரத்தார், ‘கடவுளுடைய வார்த்தைகளை மிகுந்த ஆர்வத்துடன் கேட்டு, அவையெல்லாம் சரிதானா என்று தினந்தோறும் வேதவசனங்களைக் கவனமாக ஆராய்ந்து பார்த்தார்கள்.’—அப்போஸ்தலர் 17:11.

இந்தக் காவற்கோபுர படிப்பு ஒரு பாட்டுடன் ஆரம்பிக்கப்படுகிறது. படிப்பு நடத்துபவர் கேட்கிற கேள்விகளும் கலந்தாலோசிக்கிற விஷயங்களும் இந்தப் பத்திரிகையின் மற்றொரு வெளியீடான படிப்பு இதழில் உள்ளன. இந்தப் படிப்பு இதழை யெகோவாவின் சாட்சிகள் ஒருவரிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். சமீபத்தில் கலந்தாலோசிக்கப்பட்ட விஷயங்களில் சில: “பெற்றோரே—உங்கள் பிள்ளைகளை அன்புடன் பயிற்றுவியுங்கள்,” “ஒருவருக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்,” “துன்பத்திற்கெல்லாம் முடிவு விரைவில்!” இந்தப் படிப்பு, கேள்வி-பதில் முறையில் நடத்தப்பட்டாலும் எல்லாருமே பதில் சொல்ல வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. முன்கூட்டியே அந்தக் கட்டுரையையும் அதிலுள்ள வசனங்களையும் வாசித்து, அவற்றைக் குறித்து ஆழ்ந்து யோசித்தவர்கள் பொதுவாகப் பதில் சொல்கிறார்கள். பாட்டு, ஜெபத்துடன் இந்தக் கூட்டம் முடிவடைகிறது.—மத்தேயு 26:30; எபேசியர் 5:19.

சபை பைபிள் படிப்பு

மூன்று பகுதிகளாக 1 மணிநேரம் 45 நிமிடங்களுக்கு நடைபெறும் ஒரு நிகழ்ச்சிக்காக யெகோவாவின் சாட்சிகள் வாரத்தில் மற்றொரு நாள் சாயங்கால வேளையில் கூடிவருகிறார்கள். அதன் முதல் பகுதி, சபை பைபிள் படிப்பு; இது 25 நிமிடங்களுக்கு நடைபெறுகிறது. இது, பைபிளிலுள்ள விஷயங்களை நன்கு புரிந்துகொள்ளவும் எண்ணங்களையும் மனப்பான்மைகளையும் சரிசெய்துகொள்ளவும் இயேசு கற்பித்தபடி வாழவும் கூடிவருபவர்களுக்கு உதவுகிறது. (2 தீமோத்தேயு 3:16, 17) காவற்கோபுர படிப்பைப் போலவே இந்தக் கூட்டத்திலும் பைபிளிலுள்ள ஒரு விஷயத்தின் பேரில் கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு நடைபெறுகிறது. இதிலும் விருப்பப்பட்டவர்கள் பதில் சொல்கிறார்கள். பொதுவாக இந்தப் படிப்பிற்கு, யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்ட ஒரு புத்தகமோ சிற்றேடோ பயன்படுத்தப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் ஏன் பைபிள் சார்ந்த பிரசுரம் பயன்படுத்தப்படுகிறது? பண்டைய காலங்களில், கடவுளுடைய வார்த்தையை வாசிப்பது மட்டுமே போதுமானதாய் இருக்கவில்லை. அதை ‘தீர்க்கமாக [அதாவது, தெளிவாக] வாசித்து, அர்த்தஞ்சொல்லி, வாசித்ததை . . . விளங்கப்பண்ணுவது’ அவசியமாய் இருந்தது. (நெகேமியா 8:8) சமீப காலங்களில், ஏசாயா, தானியேல், வெளிப்படுத்துதல் ஆகிய பைபிள் புத்தகங்களை விளக்கும் பிரசுரங்கள் இந்தப் படிப்பில் கலந்தாலோசிக்கப்பட்டதால் கூடிவந்தவர்கள் அவற்றை நன்கு புரிந்துகொள்ள முடிந்தது.

தேவராஜ்ய ஊழியப் பள்ளி

சபை பைபிள் படிப்புக்குப் பிறகு தேவராஜ்ய ஊழியப் பள்ளி நடைபெறுகிறது. 30 நிமிடங்களுக்கு நடைபெறும் இந்தப் பகுதி, “கற்பிக்கும் கலையை” வளர்த்துக்கொள்ள கிறிஸ்தவர்களுக்கு உதவும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. (2 தீமோத்தேயு 4:2) உதாரணத்திற்கு, உங்கள் பிள்ளையோ நண்பரோ உங்களிடம் கடவுளைப் பற்றி அல்லது பைபிளைப் பற்றிக் கேட்ட கேள்விக்குச் சரியாகப் பதிலளிக்க முடியாமல் எப்போதாவது திண்டாடியிருக்கிறீர்களா? கடினமான கேள்விகளுக்கு பைபிளிலிருந்து நீங்கள் எப்படித் திருப்தியான பதிலை அளிக்கலாம் என்பதைத் தேவராஜ்ய ஊழியப் பள்ளி உங்களுக்குக் கற்பிக்கும். அப்போது, ஏசாயா என்ற தீர்க்கதரிசி சொன்னதுபோல், “இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்” என்று நீங்களும் சொல்லலாம்.—ஏசாயா 50:4.

இந்தத் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் முதலாவதாக, பைபிளின் ஒரு பகுதியிலிருந்து முக்கியக் குறிப்புகள் எடுத்துச் சொல்லப்படுகின்றன; அந்தப் பகுதியை முன்கூட்டியே வாசித்து வரும்படி கூடிவருபவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முக்கியக் குறிப்புகள் எடுத்துச் சொல்லப்பட்ட பிறகு, அந்த பைபிள் பகுதியில் தங்களுக்குப் பயனுள்ளதாய் இருந்த குறிப்புகளைச் சுருக்கமாகச் சொல்லும்படி பேச்சாளர் கூடிவந்திருப்பவர்களிடம் கேட்கிறார். இந்தக் கலந்தாலோசிப்புக்குப் பிறகு, இந்தப் பள்ளியில் சேர்ந்திருக்கிற மாணாக்கர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட பேச்சுகளைக் கொடுக்கிறார்கள்.

பைபிளின் ஒரு பகுதியை மேடையிலிருந்து வாசித்துக் காட்டும்படியோ பைபிளிலுள்ள ஏதேனும் விஷயத்தை ஒருவருக்கு எப்படிக் கற்பிக்கலாமென நடித்துக் காட்டும்படியோ மாணாக்கர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒவ்வொரு பேச்சுக்குப் பிறகும் அனுபவமுள்ள ஆலோசகர், அந்த மாணாக்கருடைய பேச்சில் கவனித்த விஷயங்களைப் பாராட்டுகிறார்; தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள் பாடப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள குறிப்புகளின் அடிப்படையில் அவ்வாறு பாராட்டுகிறார். பிற்பாடு, மாணாக்கர் எதிலாவது முன்னேற்றம் செய்ய வேண்டியிருந்தால் அதைத் தனிப்பட்ட முறையில் அவரிடம் சொல்கிறார்.

விறுவிறுவென நடைபெறும் இந்தப் பகுதி மாணாக்கருக்கு மட்டுமல்ல, வாசிப்பதிலும் பேசுவதிலும் கற்பிப்பதிலும் முன்னேற்றம் செய்ய விரும்புகிற ஒவ்வொருவருக்கும் உதவுகிறது. இந்தத் தேவராஜ்ய ஊழியப் பள்ளிக்கு முடிவாகவும் ஊழியக் கூட்டத்தின் ஆரம்பமாகவும் பைபிள் வசனத்தின் அடிப்படையில் ஒரு பாட்டு பாடப்படுகிறது.

ஊழியக் கூட்டம்

இந்த நிகழ்ச்சியின் கடைசிப் பகுதிதான் ஊழியக் கூட்டம். இதில் பேச்சுகள், நடிப்புகள், பேட்டிகள், கலந்தாலோசிப்புகள் ஆகியவை இடம்பெறுகின்றன; இவற்றின் உதவியால், கூடிவந்திருப்போர் பைபிள் சத்தியத்தை மற்றவர்களுக்கு நன்கு போதிக்கக் கற்றுக்கொள்கிறார்கள். கடவுளுடைய செய்தியை அறிவிக்க இயேசு தம்முடைய சீடர்களை அனுப்புவதற்கு முன்பு அவர்களை ஒன்றுகூட்டி விரிவான அறிவுரைகளைக் கொடுத்தார். (லூக்கா 10:1-16) இவ்வாறு அந்த வேலைக்கு அவர்கள் முழுமையாய்த் தயார்படுத்தப்பட்டதால் உற்சாகமளிக்கும் பல அனுபவங்களைப் பெற்றார்கள். ஊழியத்திற்குப் பிறகு அவர்கள் இயேசுவிடம் திரும்பி வந்து அந்த அனுபவங்களைச் சொன்னார்கள். (லூக்கா 10:17) அவற்றைத் தங்களுக்குள்ளும் பகிர்ந்துகொண்டார்கள்.—அப்போஸ்தலர் 4:23; 15:4.

இந்த ஊழியக் கூட்டம் 35 நிமிடங்களுக்கு நடைபெறுகிறது; இக்கூட்டத்திற்கான நிகழ்ச்சிநிரல், நம் ராஜ்ய ஊழியம் என்ற மாதாந்தர வெளியீட்டில் கொடுக்கப்படுகிறது. சமீப காலத்தில், “குடும்பமாக யெகோவாவைத் துதியுங்கள்,” “நாம் ஏன் திரும்பத் திரும்ப சந்திக்கிறோம்,” “ஊழியத்தில் கிறிஸ்துவைப் பின்பற்றுங்கள்” போன்ற பொருள்கள் சிந்திக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியின் முடிவில் ஒரு பாட்டு பாடப்படுகிறது; நியமிக்கப்பட்ட ஒருவர் அதன் பிறகு ஜெபம் செய்கிறார்.

பொது மக்களின் கருத்து

யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்குச் செல்கிற எல்லாரும் அன்போடு வரவேற்கப்படுகிறார்கள். உதாரணத்திற்கு, ஆன்ட்ரூ என்பவர் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் கேள்விப்பட்டிருந்தார். ஆனால், அவர் முதன்முதலாகக் கூட்டத்திற்குச் சென்றபோது தனக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து மலைத்துவிட்டார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “அங்கு போனது அருமையான அனுபவம். அங்கிருந்தவர்கள் என்னிடம் அன்போடு பழகியதையும் என்மீது அக்கறை காட்டியதையும் பார்த்து வியந்துபோனேன்.” கனடாவைச் சேர்ந்த ஆஷல் என்ற டீனேஜ் பெண்ணும் இதை ஆமோதிக்கிறாள். “கூட்டத்தில் சொல்லப்பட்ட விஷயங்களைக் கேட்கக் கேட்க ஆர்வமாய் இருந்தது. புரிந்துகொள்ளவும் எளிதாக இருந்தது” என்று அவள் சொல்கிறாள்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த யோசே, பயங்கர முரடன் என்ற பெயரெடுத்திருந்தார். ஆனாலும், அவர் ராஜ்ய மன்றத்தில் நடந்த ஒரு கூட்டத்திற்கு அழைக்கப்பட்டார். “நான் எப்படிப்பட்டவன் என்று தெரிந்தும் ராஜ்ய மன்றத்தில் இருந்தவர்கள் என்னை அன்போடு வரவேற்றார்கள்” என்கிறார் அவர். ஜப்பான் நாட்டில் வசிக்கும் ஆட்சுஷி இவ்வாறு கூறுகிறார்: “உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், முதன்முதலாக யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டத்திற்குப் போனபோது ஏதோ சம்பந்தமில்லாத ஆட்களோடு உட்கார்ந்திருப்பதுபோல் உணர்ந்தேன். ஆனாலும், எல்லாரையும் போல அவர்களும் சாதாரண ஜனங்கள்தான் என்பதைப் புரிந்துகொண்டேன். அவர்கள் என்னிடம் நன்கு பேசிப் பழகியதால் என் சங்கோஜம் போய்விட்டது.”

உங்களை வரவேற்கிறோம்

ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொள்வது மிகவும் பயனுள்ளதாய் இருக்கும் என்பதை மேற்குறிப்பிடப்பட்ட அனுபவங்கள் காட்டுகின்றன. அங்கு நீங்கள் கடவுளைப் பற்றிக் கற்றுக்கொள்வீர்கள்; அதோடு, அங்கு பைபிளிலிருந்து அளிக்கப்படும் போதனையின் மூலம் யெகோவா தேவன் உங்களுக்குப் “பிரயோஜனமாயிருக்கிறதை” கற்றுத் தருவார்.—ஏசாயா 48:17.

யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களில் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை, அவற்றில் இலவசமாகக் கலந்துகொள்ளலாம். ஆகவே, உங்கள் பகுதியிலுள்ள ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் கூட்டத்திற்குச் செல்ல நீங்கள் விரும்புகிறீர்களா? உங்களை அன்புடன் அழைக்கிறோம். (w09 2/1)

a இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லாப் பிரசுரங்களும் யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்டவை.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்