பரிசின்மீது கண்களைப் பதிய வையுங்கள்
“பரிசைப் பெறுகிற லட்சியத்தோடு ஓடுகிறேன்.”—பிலி. 3:14, NW.
1. அப்போஸ்தலன் பவுலுக்குமுன் வைக்கப்பட்டிருந்த பரிசு என்ன?
தர்சு பட்டணத்து சவுல் என அறியப்பட்ட அப்போஸ்தலன் பவுல் அந்தஸ்தான குடும்பத்தைச் சேர்ந்தவர். நியாயப்பிரமாண சட்டத்தின் பிரபல போதகரான கமாலியேலிடம் தன் முன்னோர்களின் மதத்தைப் பற்றி கற்றுவந்தவர். (அப். 22:3) பவுலுக்கு நல்ல வேலையும் வசதி வாய்ப்பும் காத்திருந்தது. ஆனால், பவுல் தன் மதத்தை விட்டுவிட்டு ஒரு கிறிஸ்தவராக மாறினார். அவர் தனக்குமுன் வைக்கப்பட்டிருந்த முடிவில்லா வாழ்வு என்னும் பரிசைப் பெற ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்; அதாவது, பூங்காவன பூமியை ஆட்சி செய்யப்போகும் கடவுளுடைய பரலோக அரசாங்கத்தில் சாவாமையுள்ள ராஜாவாகவும் ஆசாரியராகவும் சேவை செய்யக் காத்திருந்தார்.—மத். 6:10; வெளி. 7:4; 20:6.
2, 3. பரலோக வாழ்வு என்ற பரிசை பவுல் எந்தளவுக்கு உயர்வாய்க் கருதினார்?
2 அந்தப் பரிசை பவுல் எந்தளவுக்கு உயர்வாய்க் கருதினார் என்பதை அவருடைய பின்வரும் வார்த்தைகள் காட்டுகின்றன: “எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.” (பிலி. 3:7, 8, 11) பதவி, பணம், வேலை, அந்தஸ்து போன்றவற்றைத்தான் பெரும்பாலானவர்கள் முக்கியமானவையாய்க் கருதுகிறார்கள்; ஆனால் பவுல், மனிதரைக் குறித்த யெகோவாவின் நோக்கத்தைப் பற்றிக் கற்றுக்கொண்ட பின்பு இவற்றையெல்லாம் குப்பையாக எண்ணினார்.
3 அதுமுதல், யெகோவாவையும் கிறிஸ்துவையும் பற்றிய மதிப்புவாய்ந்த உண்மைகளை அறிந்துகொள்வது மட்டுமே பவுலுக்கு முக்கியமானதாக இருந்தது; அப்படி அறிந்துகொள்வதைப் பற்றி இயேசு இவ்வாறு கடவுளிடம் சொன்னார்: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.” (யோவா. 17:3) நித்திய ஜீவனை, அதாவது முடிவில்லா வாழ்வை, பெறுவதற்குப் பவுல் மிகவும் விரும்பினார் என்பதை பிலிப்பியர் 3:14-ல் (NW) உள்ள அவருடைய வார்த்தைகள் காட்டுகின்றன; அதில், “கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் விடுக்கும் பரலோக அழைப்பாகிய பரிசைப் பெறுகிற லட்சியத்தோடு ஓடுகிறேன்” என்று அவர் சொல்லியிருக்கிறார். ஆம், கடவுளுடைய அரசாங்கத்தின் பாகமாகி, பரலோகத்தில் முடிவில்லா வாழ்வைப் பெறும் பரிசின்மீதே அவர் தன் கண்களைப் பதிய வைத்திருந்தார்.
பூமியில் என்றென்றும் வாழ்தல்
4, 5. இன்று கடவுளுடைய சித்தத்தைச் செய்யும் லட்சக்கணக்கானோருக்கு முன்பாக என்ன பரிசு வைக்கப்பட்டுள்ளது?
4 கடவுளுடைய சித்தத்தைச் செய்கிற பெரும்பாலோர், கடவுள் கொண்டுவரப்போகும் புதிய உலகத்தில் முடிவில்லா வாழ்வைப் பரிசாகப் பெறுவார்கள்; அதற்காக அவர்கள் எடுக்கும் எல்லா முயற்சியும் தகுந்ததே. (சங். 37:11, 29) இந்த நம்பிக்கை நிச்சயம் கைகூடுமென்ற உறுதியை இயேசு அளித்தார். “சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்” என்று அவர் சொன்னார். (மத். 5:5) இந்தப் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வோரில் இயேசுவே பிரதானமானவர் என சங்கீதம் 2:8 சுட்டிக்காட்டுகிறது; அவருடன் 1,44,000 பேர் பரலோகத்தில் ஆட்சி செய்வார்கள். (தானி. 7:13, 14, 21, 27) பூமியில் வாழப்போகும் செம்மறியாட்டைப் போன்றவர்கள் ‘உலகம் உண்டானதுமுதல் அவர்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற’ ராஜ்யத்தின் பூமிக்குரிய பகுதியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள். (மத். 25:34, 46) இதெல்லாம் கண்டிப்பாக நடக்குமென்ற உத்தரவாதம் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது; ஏனென்றால், இந்த வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கும் கடவுள் ‘பொய்யுரையாதவர்.’ (தீத். 1:3) யோசுவாவைப் போலவே நாமும் கடவுளுடைய வாக்குறுதிகள் நிறைவேறும் என்பதில் நம்பிக்கையோடு இருக்கலாம்; அவர் இஸ்ரவேலரிடம் இவ்வாறு சொன்னார்: “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை . . . அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை.”—யோசு. 23:14.
5 கடவுளுடைய புதிய உலகத்தில் கிடைக்கப்போகும் வாழ்க்கை, இன்றுள்ள விரக்தியான வாழ்க்கையைப் போல் இருக்காது. அது முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்; ஆம், போர், குற்றச்செயல், வறுமை, அநீதி, வியாதி, மரணம் போன்ற எதுவுமே இருக்காது. எல்லாரும் பூரண ஆரோக்கியத்தோடு, பூங்காவன பூமியில் வாழ்வார்கள். நம்முடைய ஆசைக் கனவுகளையெல்லாம் மிஞ்சிவிடும் அளவுக்கு வாழ்க்கை சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கும். சொல்லப்போனால், புதிய உலகத்தில் ஒவ்வொரு நாளும் மனமகிழ்ச்சியான நாளாக இருக்கும். அது எப்பேர்ப்பட்ட அருமையான பரிசு!
6, 7. (அ) கடவுளுடைய புதிய உலகத்தில் என்ன அற்புதங்கள் நடக்குமென இயேசு காட்டினார்? (ஆ) இறந்தவர்களுக்கும்கூட எப்படிப் புது வாழ்வு கொடுக்கப்படும்?
6 இயேசு பூமியில் இருந்தபோது, கடவுளுடைய சக்தியினால் வல்லமை பெற்று, புதிய உலகத்தில் பூமியெங்கும் என்னென்ன அற்புதங்கள் நடக்கும் என்பதைச் செய்து காட்டினார். உதாரணத்திற்கு, 38 வருடங்களாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவனை நடக்கும்படி அவர் சொன்னதும் அவன் எழுந்து நடந்ததாக பைபிள் சொல்கிறது. (யோவான் 5:5-9-ஐ வாசியுங்கள்.) இன்னொரு சந்தர்ப்பத்தில், ‘பிறவிக்குருடனாக’ இருந்த ஒருவனைப் பார்த்தபோது, அவனைக் குணப்படுத்தினார். குணப்படுத்தியவர் யாரென பிற்பாடு அவனிடம் கேட்கப்பட்டபோது, “பிறவிக்குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தானென்று உலகமுண்டானது முதல் கேள்விப்பட்டதில்லையே. அவர் தேவனிடத்திலிருந்து வராதிருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே” என்றான். (யோவா. 9:1, 6, 7, 32, 33) கடவுள் கொடுத்த வல்லமையால்தான் இயேசு இவை எல்லாவற்றையும் செய்தார். அவர் எங்கெல்லாம் சென்றாரோ அங்கெல்லாம், “சொஸ்தமடைய வேண்டுமென்றிருந்தவர்களைச் சொஸ்தப்படுத்தினார்.”—லூக். 9:11.
7 இயேசு நோயாளிகளையும் முடவர்களையும் குணப்படுத்தியதோடு, இறந்தவர்களையும் உயிர்த்தெழுப்பினார். உதாரணத்திற்கு, 12 வயதிலிருந்த ஒரு சிறுமி இறந்தபோது, அவளுடைய பெற்றோர் மீள முடியாத துயரத்தில் இருந்தார்கள். ஆனால் இயேசு, “சிறுபெண்ணே எழுந்திரு” என்று சொன்னார். உடனே அந்தச் சிறுமி எழுந்து நடந்தாள்! அவளுடைய பெற்றோருக்கும் அங்கிருந்த மற்றவர்களுக்கும் எப்படி இருந்திருக்குமென உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? (மாற்கு 5:38-42-ஐ வாசியுங்கள்.) கடவுளுடைய புதிய உலகத்தில் “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று” சொல்லப்பட்டிருக்கிறது; அப்படிக் கோடிக்கணக்கானவர்கள் உயிர்த்தெழுப்பப்படும்போது ‘மிகுந்த ஆச்சரியமும்’ சந்தோஷமும் உண்டாகும். (அப். 24:15; யோவா. 5:28, 29) அதுமுதல், என்றென்றும் வாழ்வதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கொடுக்கப்படும்; வேறு வார்த்தைகளில் சொன்னால், அவர்களுக்குப் புது வாழ்வு கொடுக்கப்படும்.
8, 9. (அ) கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியில், ஆதாமிடமிருந்து சுதந்தரிக்கப்பட்ட பாவத்திற்கு என்னவாகும்? (ஆ) மரித்தோர் எதன் அடிப்படையில் நியாயந்தீர்க்கப்படுவார்கள்?
8 உயிர்த்தெழுப்பப்படுகிறவர்கள் மறுபடியும் தங்களுக்குக் கிடைக்கிற வாழ்வைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். அவர்கள் இறப்பதற்குமுன் செய்த பாவங்களுக்காகத் தண்டிக்கப்பட மாட்டார்கள். (ரோ. 6:7) கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியில் அவருடைய மீட்புப் பலிக்குரிய நன்மைகள் அளிக்கப்படும்போது, கீழ்ப்படிதலுள்ள குடிமக்கள் படிப்படியாகப் பரிபூரணத்தை அடைவார்கள்; இறுதியில், ஆதாமுடைய பாவத்தின் எல்லா விளைவுகளிலிருந்தும் முழுமையாக விடுபடுவார்கள். (ரோ. 8:20) யெகோவா ‘மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்துவிடுவார்.’ (ஏசா. 25:8) அப்போது, ‘புஸ்தகங்கள் திறக்கப்படும்’ என்றும் கடவுளுடைய வார்த்தை சொல்கிறது; அதாவது, அப்போது வாழப்போகிறவர்களுக்குப் புதிய விஷயங்கள் வெளிப்படுத்தப்படும். (வெளி. 20:12) பூமி பூங்காவனமாக மாறுகையில், “பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.”—ஏசா. 26:9.
9 உயிர்த்தெழுப்பப்படுகிறவர்கள் ஆதாமிடமிருந்து சுதந்தரித்த பாவத்தின் அடிப்படையில் நியாயந்தீர்க்கப்பட மாட்டார்கள்; ஆனால், அவர்கள் செய்யப்போகும் செயல்களின் அடிப்படையில் நியாயந்தீர்க்கப்படுவார்கள். “அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக [அதாவது, உயிர்த்தெழுப்பப்பட்ட பின்பு செய்யும் கிரியைகளுக்குத்தக்கதாக] நியாயத்தீர்ப்படைந்தார்கள்” என்று வெளிப்படுத்துதல் 20:12 சொல்கிறது. யெகோவாவின் நீதிக்கும் இரக்கத்துக்கும் அன்புக்கும் எப்பேர்ப்பட்ட அருமையான எடுத்துக்காட்டு! இந்தப் பொல்லாத உலகத்தில் அவர்கள் அனுபவித்த வேதனைகள் ‘இனி நினைக்கப்படாது, மனதிலே தோன்றாது.’ (ஏசா. 65:17) பயனளிக்கும் புதுப் புதுத் தகவல்களைப் பெறப்போவதாலும், நல்ல நல்ல காரியங்களை அனுபவிக்கப்போவதாலும், முன்பு பட்ட பாடுகளை நினைத்து அவர்கள் வேதனைப்பட மாட்டார்கள். அந்தக் கசப்பான அனுபவங்கள் அவர்களுடைய நினைவைவிட்டே நீங்கிவிட்டிருக்கும். (வெளி. 21:4) அர்மகெதோனில் தப்பிப்பிழைக்கப்போகிற ‘திரள் கூட்டத்தாரும்’ இதே ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள்.—வெளி. 7:9, 10, 14.
10. (அ) கடவுளுடைய புதிய உலகத்தில் வாழ்க்கை எப்படியிருக்கும்? (ஆ) பரிசின்மீது உங்கள் கண்களைப் பதிய வைக்க நீங்கள் என்ன செய்யலாம்?
10 கடவுளுடைய புதிய உலகத்தில், வியாதியோ மரணமோ மக்களை அண்டவே அண்டாது. ‘வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்ல மாட்டார்கள்.’ (ஏசா. 33:24) புது பூமியில் வாழ்கிறவர்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் பூரண ஆரோக்கியத்தோடு எழுந்திருப்பார்கள்; இன்னொரு அருமையான நாளைக் காணும் பூரிப்பில் கண்விழிப்பார்கள். மனநிறைவான வேலை செய்யப்போவதையும், தங்கள் நலனில் மிகுந்த அக்கறையுள்ளவர்களோடு ஒன்றுகூடி மகிழப்போவதையும் ஆசையோடு எதிர்பார்ப்பார்கள். அப்படிப்பட்ட வாழ்க்கையை ஓர் அற்புதப் பரிசு என அழைப்பது தகும், அல்லவா? நீங்கள் உங்கள் பைபிளைத் திறந்து ஏசாயா 33:24-லும் 35:5-7-லும் உள்ள தீர்க்கதரிசனங்களை ஏன் வாசித்துப் பார்க்கக் கூடாது? நீங்கள் புதிய உலகத்தில் இருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். அப்படிச் செய்வது, அந்தப் பரிசின்மீது கண்களைப் பதிய வைக்க உங்களுக்கு உதவும்.
பரிசு நம் மனதைவிட்டு நீங்கினால்
11. சாலொமோனின் ஆட்சிக்காலம் எப்படி நல்ல விதத்தில் ஆரம்பமானதென விவரியுங்கள்.
11 பரிசு என்னவென்று தெரிந்த பிறகு அதன்மீது நம்முடைய கண்களைப் பதிய வைப்பதற்கு நாம் கடினமாய் உழைக்க வேண்டும்; இல்லாவிட்டால் அது நம் மனதைவிட்டே நீங்கிவிடும். உதாரணத்திற்கு, சாலொமோன் பூர்வ இஸ்ரவேலின் ராஜாவாக ஆனபோது, மக்களுக்கு நீதியான தீர்ப்பு வழங்க தனக்கு அறிவும் ஞானமும் தரும்படி கடவுளிடம் மனத்தாழ்மையோடு ஜெபம் செய்தார். (1 இராஜாக்கள் 3:6-12-ஐ வாசியுங்கள்.) ஆகவே, “தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும்” கொடுத்தார். சொல்லப்போனால், “சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தையும் எகிப்தியரின் சகல ஞானத்தையும் பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது.”—1 இரா. 4:29-32.
12. இஸ்ரவேலில் ராஜாவாக ஆகவிருந்தவர்களுக்கு யெகோவா என்ன எச்சரிப்பு கொடுத்தார்?
12 ஆனால், ராஜாவாகும் எவரும் ‘அநேக குதிரைகளைத் தனக்குச் சம்பாதிக்கக்கூடாது’ என்றும், ‘தன் இருதயம் பின்வாங்கிப் போகாதபடி அநேகம் ஸ்திரீகளோடு’ வாழக் கூடாது என்றும் யெகோவா முன்னரே எச்சரித்திருந்தார். (உபா. 17:14-17) ஏனென்றால், ராஜா தனக்கென்று அநேக குதிரைகளை வைத்திருந்தால், தன் நாட்டைப் பாதுகாக்க தனது ராணுவ பலத்தின்மீதே சார்ந்திருப்பார்; பாதுகாப்பளிக்கிறவரான யெகோவாமீது சார்ந்திருக்க மாட்டார். அதோடு, ராஜா அநேக பெண்களோடு வாழ்வது விபரீதத்தில்தான் முடியும்; ஏனென்றால், அந்தப் பெண்களில் சிலர் பொய் வணக்கத்தில் ஈடுபடுகிற புறதேசத்தாராக இருக்கலாம், அதனால் உண்மைக் கடவுளான யெகோவாவின் வணக்கத்திலிருந்து ராஜாவை விலகச் செய்துவிடலாம்.
13. சாலொமோன் எப்படி கடவுளுடைய எச்சரிப்புகளை அசட்டை செய்தார்?
13 சாலொமோன் இந்த எச்சரிப்புகளை அசட்டை செய்தார். ராஜாக்கள் என்ன செய்யக் கூடாதென்று யெகோவா திட்டவட்டமாகச் சொல்லியிருந்தாரோ அதையே செய்தார். அவர் ஆயிரக்கணக்கான குதிரைகளையும் குதிரை வீரர்களையும் சம்பாதித்திருந்தார். (1 இரா. 4:26) அதோடு, 700 மனைவிகளையும் 300 வைப்பாட்டிகளையும் வைத்திருந்தார்; அவர்களில் அநேகர் புறதேசங்களைச் சேர்ந்த வேற்று மதத்தவர்கள். அவர்கள் “அவன் இருதயத்தை அந்நிய தேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள். அதினால் அவனுடைய இருதயம் . . . தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை.” சாலொமோனும் தன் மனைவிகளைப் போலவே அருவருக்கத்தக்க பொய் வணக்கத்தில் ஈடுபட்டார். ஆகவே, ‘ராஜ்யபாரத்தை சாலொமோனிடமிருந்து பிடுங்கப்போவதாக’ யெகோவா சொன்னார்.—1 இரா. 11:1-6, 11.
14. சாலொமோனும் இஸ்ரவேல் தேசமும் கீழ்ப்படியாமல் போனதால் என்ன நடந்தது?
14 அதுமுதல், உண்மைக் கடவுளைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரும்பெரும் பாக்கியத்தின்மேல் சாலொமோன் தன் கண்களைப் பதிய வைக்கவில்லை. அதற்குப் பதிலாக, அவர் பொய் வணக்கத்தில் மூழ்கிவிட்டார். காலப்போக்கில், முழு தேசமும் விசுவாசதுரோகத்தில் ஈடுபட்டு, பொ.ச.மு. 607-ல் அழிந்துபோனது. பிற்பாடு யூதர்கள் உண்மை வணக்கத்தை மீண்டும் ஸ்தாபித்தபோதிலும், பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு இயேசு இவ்வாறு சொன்னார்: “தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.” அவர் சொன்னபடியே நடந்தது. “இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்” என்று அவர் கூறினார். (மத். 21:43; 23:37, 38) விசுவாசதுரோகத்தின் காரணமாக அந்தத் தேசம் உண்மைக் கடவுளைப் பிரதிநிதித்துவம் செய்யும் பெரிய பாக்கியத்தை இழந்துபோனது. பொ.ச. 70-ல் ரோமச் சேனைகள் எருசலேமையும் அதன் ஆலயத்தையும் நாசமாக்கின; எஞ்சியிருந்த யூதர்கள் பலர் அடிமைகளாகக் கொண்டுபோகப்பட்டார்கள்.
15. அதிமுக்கியமான காரியத்தின்மீது கண்களைப் பதிய வைக்கத் தவறிய சிலர் யார்?
15 இயேசுவின் 12 அப்போஸ்தலரில் ஒருவன் யூதாஸ் காரியோத்து. அவன் இயேசுவின் தலைசிறந்த போதனைகளை நேரில் கேட்டவன்; கடவுளுடைய சக்தியின் உதவியால் அவர் செய்த அற்புதங்களையும் கண்ணாரக் கண்டவன். என்றபோதிலும், அவன் தன் இருதயத்தைக் காத்துக்கொள்ளவில்லை. இயேசுவுக்கும் அவருடைய 12 அப்போஸ்தலருக்கும் சொந்தமான பணப்பெட்டி அவனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆனால், ‘அவன் திருடனாக இருந்தான்; பணப்பெட்டி அவனிடம் இருந்ததால், அதில் போடப்பட்ட பணத்தை அவன் எடுத்துக்கொள்வது வழக்கம்.’ (யோவா. 12:6, NW) அவன் மிகுந்த பேராசை பிடித்தவனாக இருந்ததால், வெளிவேஷக்காரர்களான பிரதான ஆசாரியர்களோடு சேர்ந்து சதிசெய்து, 30 வெள்ளிக்காசுகளுக்கு இயேசுவைக் காட்டிக்கொடுக்கச் சம்மதித்தான். (மத். 26:14-16) இன்னொரு உதாரணம், அப்போஸ்தலன் பவுலின் கூட்டாளியான தேமா. அவனும் தன் இருதயத்தைக் காத்துக்கொள்ளவில்லை. ‘தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து போய்விட்டான்’ என்று பவுல் குறிப்பிட்டார்.—2 தீ. 4:10; நீதிமொழிகள் 4:23-ஐ வாசியுங்கள்.
நம் ஒவ்வொருவருக்கும் பாடம்
16, 17. (அ) நம் எதிரிக்கு எந்தளவு செல்வாக்கு இருக்கிறது? (ஆ) சாத்தானுடைய எவ்வித தாக்குதலையும் எதிர்த்து நிற்க நமக்கு எது உதவும்?
16 கடவுளுடைய ஊழியர்கள் அனைவரும் பைபிளிலுள்ள இந்த உதாரணங்களை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்; ஏனென்றால், “இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது” என்று நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. (1 கொ. 10:11) இந்தப் பொல்லாத உலகத்தின் கடைசி நாட்களில் நாம் இன்று வாழ்கிறோம்.—2 தீ. 3:1, 13.
17 ‘இப்பிரபஞ்சத்தின் தேவனான’ பிசாசாகிய சாத்தான் ‘தனக்குக் கொஞ்சக்கால மாத்திரம் உண்டென்று’ அறிந்திருக்கிறான். (2 கொ. 4:4; வெளி. 12:12) யெகோவாவின் ஊழியர்களைத் தன்வசப்படுத்தி கிறிஸ்தவ நியமங்களை மீறும்படி செய்வதில் அவன் குறியாக இருக்கிறான். இந்த உலகம் அவன் கையில் இருக்கிறது; அதன் மீடியாவும் அவன் செல்வாக்கின்கீழ் இருக்கிறது. ஆனால், யெகோவாவின் மக்களிடம் அதைவிட வல்லமைவாய்ந்த ஒன்று இருக்கிறது; அதுதான் “இயல்புக்கு மிஞ்சிய சக்தி.” (2 கொ. 4:7, NW) கடவுள் அளிக்கும் இந்தச் சக்தியின்மீது நாம் சார்ந்திருந்தால் சாத்தானுடைய எவ்விதத் தாக்குதலையும் எதிர்த்து நிற்க முடியும். ஆகவே, யெகோவா ‘தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பார்’ என்ற நம்பிக்கையுடன் விடாமல் ஜெபம் செய்யும்படி உற்சாகப்படுத்தப்படுகிறோம்.—லூக். 11:13.
18. இந்த உலகத்தை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
18 சாத்தானுடைய முழு உலகமும் சீக்கிரத்தில் அழிந்துபோய்விடும் என்றும் உண்மைக் கிறிஸ்தவர்கள் தப்பிப்பார்கள் என்றும் அறிந்திருப்பது நமக்குத் தெம்பளிக்கிறது. “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.” (1 யோ. 2:17) இதைக் கருத்தில் கொள்ளும்போது, யெகோவாவுடன் உள்ள உறவைவிட அதிக மதிப்புள்ள ஒன்று இந்த உலகத்தில் இருப்பதாக அவருடைய ஊழியர்களில் ஒருவர் நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்! சாத்தானின் கையிலுள்ள இந்த உலகம், மூழ்கிக்கொண்டிருக்கிற கப்பலைப்போல் இருக்கிறது. யெகோவா உண்மையுள்ள தம் ஊழியர்களுக்கு, கிறிஸ்தவ சபையை ‘உயிர்காக்கும் படகாக’ கொடுத்திருக்கிறார். அவர்கள் புதிய உலகத்தை நோக்கிப் பயணிக்கையில் பின்வரும் வாக்குறுதி நிறைவேறுமென்ற நம்பிக்கையோடு இருக்கலாம்: “பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.” (சங். 37:9) ஆகவே, இந்த அருமையான பரிசின்மீது உங்கள் கண்களைப் பதிய வையுங்கள்!
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• பவுல் தனக்குமுன் வைக்கப்பட்டிருந்த பரிசைக் குறித்து எவ்வாறு உணர்ந்தார்?
• பூமியில் என்றென்றும் வாழப்போகிறவர்கள் எதன் அடிப்படையில் நியாயந்தீர்க்கப்படுவார்கள்?
• இப்போது நீங்கள் என்ன செய்வது ஞானமானது?
[பக்கம் 12, 13-ன் படம்]
பைபிள் பதிவுகளை வாசிக்கும்போது, நீங்கள் முடிவில்லா வாழ்வு என்ற பரிசைப் பெறுவதாகக் கற்பனை செய்ய முடிகிறதா?