நீங்கள் எப்படித் தளராமல் ஊழியம் செய்யலாம்?
நீங்கள் மிகவும் தளர்ந்துபோய் ஊழியத்திற்குப் போவதையே விட்டுவிடலாமென எப்போதாவது நினைத்தது உண்டா? கடும் எதிர்ப்பினால், கவலையினால், சுகவீனத்தினால், சகாக்களின் தொல்லையினால், அல்லது மக்கள் ஆர்வம் காட்டாததினால் நாம் ஊழியத்தில் தளர்ந்து போகலாம். ஆனால், இயேசுவின் உதாரணத்தைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவர் “தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு” மிகக் கடுமையான சோதனைகளையும் சகித்தார். (எபி. 12:2) யெகோவாவுக்கு எதிராகச் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யென தாம் நிரூபிப்பது அவரது இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறதென அறிந்திருந்தார்.—நீதி. 27:11.
நீங்களும் ஊழியத்தில் சகித்திருப்பதன் மூலம் யெகோவாவின் இருதயத்தைச் சந்தோஷப்படுத்த முடியும். ஆனால், சில பிரச்சினைகளின் காரணமாக ஊழியம் செய்ய சக்தியே இல்லாததுபோல் நீங்கள் உணர்ந்தால் என்ன செய்யலாம்? முதிர் வயதில் உடல்நலம் சரியில்லாமல் கஷ்டப்படுகிற கிறிஸ்டீனா இவ்வாறு சொல்கிறார்: “நான் அடிக்கடி களைப்பாகவும் சோர்வாகவும் இருப்பது உண்டு. எனக்கு வயதாகிவிட்டதால் உடல் பலவீனமாக இருக்கிறது, ஒவ்வொரு நாளையும் எப்படி ஓட்டுவதென்ற கவலை என்னை வாட்டுகிறது, ஆகவே ஊழியத்திலும் சிலசமயம் ஆர்வம் குறைந்துவிடுகிறது.” இப்படிப்பட்ட பிரச்சினைகளின் மத்தியிலும் நீங்கள் எப்படி ஊக்கந்தளராமல் ஊழியம் செய்யலாம்?
தீர்க்கதரிசிகளைப் பின்பற்றுங்கள்
பூர்வ தீர்க்கதரிசிகளுக்கு இருந்த அதே மனப்பான்மையுடன் இருக்க முயலுவது தளராமல் ஊழியம் செய்ய உண்மையுள்ள ராஜ்ய பிரஸ்தாபிகளுக்கு உதவும். உதாரணத்திற்கு, எரேமியாவை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு தீர்க்கதரிசியாகச் சேவை செய்ய அவர் அழைக்கப்பட்டபோது முதலில் தயங்கினார். இருந்தாலும், அந்தக் கஷ்டமான வேலையை 40 வருடங்களுக்கும் மேலாகத் தளராமல் செய்தார்; கடவுள்மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கக் கற்றுக்கொண்டதாலேயே அவரால் அப்படிச் செய்ய முடிந்தது.—எரே. 1:6; 20:7-11.
எரேமியாவின் உதாரணத்திலிருந்து ஊக்கம்பெற்ற ஹென்ரிக் சொல்வதைக் கவனியுங்கள்: “நான் 70 வருடங்களுக்கு மேலாக ஊழியம் செய்து வருகிறேன்; மக்கள் ஆர்வம் காட்டாததாலும், எதிர்ப்பு தெரிவித்ததாலும் சிலசமயங்களில் சோர்ந்துபோயிருக்கிறேன். ஆனால், அந்தச் சந்தர்ப்பங்களில் நான் எரேமியாவின் உதாரணத்தை நினைத்துப் பார்ப்பேன்; யெகோவாமீது அவருக்கு இருந்த அன்பும் அவரோடு இருந்த நெருங்கிய பந்தமும்தான் தொடர்ந்து தீர்க்கதரிசனம் சொல்ல அவருக்குத் தேவையான பலத்தைத் தந்தது.” (எரே. 1:17) எரேமியாவின் உதாரணத்திலிருந்து உற்சாகமடைந்த மற்றொருவர் ராஃபல். அவர் இவ்வாறு சொல்கிறார்: “எரேமியா தன்னைப் பற்றியும் தன் உணர்ச்சிகளைப் பற்றியுமே நினைத்துக் கொண்டிருக்காமல் கடவுள்மீது சார்ந்திருந்தார். பெரும்பாலான மக்கள் அவரை எதிர்த்தபோதிலும் அவர் பயமில்லாமல் தொடர்ந்து சேவை செய்தார். அதை எப்போதும் மனதில் வைத்திருக்க முயலுகிறேன்.”
ஏசாயா தீர்க்கதரிசியின் உதாரணமும், தளராமல் ஊழியம் செய்ய அநேகருக்கு உதவுகிறது. அவருடைய தேசத்தார் அவர் சொல்வதைக் கேட்க மாட்டார்களென கடவுள் குறிப்பிட்டார். ‘நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி, அவர்கள் காதுகளை மந்தப்படுத்து’ என்று யெகோவா சொன்னார். அப்படியென்றால், ஏசாயாவின் ஊழியத்திற்குத் தோல்விதான் காத்திருந்ததா? இல்லை, கடவுளுடைய பார்வையில் அது தோல்வி அடையவே இல்லை. தீர்க்கதரிசியாகச் சேவை செய்யும்படி ஏசாயா அழைக்கப்பட்டபோது, “இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என்றார். (ஏசா. 6:8-10) அந்த வேலையை அவர் விடாமல் செய்தார். பிரசங்கிக்கிற பொறுப்பை நீங்களும் அவரைப் போலவே நிறைவேற்றுகிறீர்களா?
மக்கள் ஆர்வம் காட்டாவிட்டாலும் ஏசாயாவைப் போல் நாம் ஊக்கம் தளராமல் பிரசங்கிக்க வேண்டுமென்றால், அவர்கள் நம்மிடம் மோசமாக நடந்துகொண்டதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. ராஃபல் எந்த விதத்தில் சோர்வைச் சமாளிக்கிறார் எனக் கேளுங்கள்: “மக்கள் கடுகடுப்பாகப் பேசியதைப் பற்றி நான் நினைத்துப் பார்ப்பதில்லை. அவர்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்வதற்கு உரிமை இருக்கிறது.” ஆன்னா என்பவர் இவ்வாறு சொல்கிறார்: “என் மனதிற்கு சங்கடமளிக்கிற அல்லது சோர்வளிக்கிற ஏதாவது நடந்திருந்தால் அதைப் பற்றி யோசிக்காமல் இருக்க முயற்சி செய்கிறேன். ஜெபம் செய்வதும் வெளி ஊழியத்திற்குப் போகும்முன் தினவசனத்தைப் படிப்பதுமே அதற்கு உதவி செய்கின்றன. அதனால், எப்படிப்பட்ட வேண்டாத யோசனைகளும் சட்டென மறைந்துவிடுகின்றன.”
எசேக்கியேல் தீர்க்கதரிசி, பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டிருந்த பிடிவாதமான யூதர்கள் மத்தியில் சேவை செய்தார். (எசே. 2:6) அவர் கடவுளுடைய செய்திகளை மக்களிடம் சொல்லாமல் இருந்திருந்தால், அதனால் பொல்லாதவன் ஒருவன் அந்த எச்சரிப்பைக் கேட்க வாய்ப்பில்லாமல் இறந்துபோயிருந்தால், அவர்தான் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியிருந்திருக்கும். ‘அவன் இரத்தப்பழியை உன் கையிலே கேட்பேன்’ என்று யெகோவா எசேக்கியேலிடம் சொல்லியிருந்தார்.—எசே. 3:17, 18.
எசேக்கியேலின் கண்ணோட்டத்தையே கொண்டிருக்க முயற்சி செய்யும் ஹென்ரிக் இப்படிச் சொல்கிறார்: “எல்லா மனிதருடைய இரத்தப்பழிக்கும் நீங்கியிருக்க நான் விரும்புகிறேன். விலைமதிப்புள்ள அவர்களுடைய உயிர் ஆபத்தில் இருக்கிறது.” (அப். 20:26, 27) அதேபோல் ஸ்பிக்நியூ என்பவரும் இவ்வாறு சொல்கிறார்: “எசேக்கியேல், மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்படாமல் தன் பொறுப்பை நிறைவேற்ற வேண்டியிருந்தது. பிரசங்க வேலையை கடவுளுடைய கண்ணோட்டத்தில் பார்க்க இது எனக்கு உதவுகிறது.”
நீங்கள் தனியாக இல்லை
பிரசங்க ஊழியம் செய்யும்போது நாம் தனியாக இருப்பதில்லை. அப்போஸ்தலன் பவுலைப் போல், “நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்” என்று நாம் சொல்லலாம். (1 கொ. 3:9) அடிக்கடி சோர்வடைவதாக ஒப்புக்கொள்ளும் கிறிஸ்டீனா இப்படிச் சொல்கிறார்: “பலம் தரும்படி நான் யெகோவாவிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டே இருக்கிறேன், அவர் ஒருபோதும் என்னைக் கைவிடுவதில்லை.” ஆம், தொடர்ந்து ஊழியம் செய்ய நமக்குக் கடவுளுடைய சக்தியின் ஆதரவு தேவை!—சக. 4:6.
நாம் வெளி ஊழியத்தில் கலந்துகொள்ளும்போது, கடவுளுடைய சக்தி அதன் ‘கனியை,’ அதாவது அது பிறப்பிக்கும் குணங்களை வெளிக்காட்ட நமக்கு உதவும். (கலா. 5:22, 23) அந்தக் குணங்களோ, எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தளராமல் பிரசங்க வேலையில் ஈடுபட நமக்கு உதவும். ஹென்ரிக் இவ்வாறு சொல்கிறார்: “வெளி ஊழியம் செய்வது நல்ல நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ள உதவியாக இருக்கிறது. பொறுமையோடும் கரிசனையோடும் நடந்துகொள்ளவும் விடாமுயற்சி செய்யவும் நான் கற்றுக்கொள்கிறேன்.” ஆகவே, பல்வேறு தடைகளின் மத்தியிலும் நீங்கள் தளராமல் ஊழியம் செய்தால் கடவுளுடைய சக்தி பிறப்பிக்கும் குணங்களைப் பல மடங்கு அதிகமாக வளர்த்துக்கொள்ள முடியும்.
இந்த விசேஷமான வேலையை வழிநடத்த யெகோவா தம் தூதர்களைப் பயன்படுத்துகிறார். (வெளி. 14:6) அப்படிப்பட்ட தேவதூதர்கள் ‘பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவும்’ இருப்பதாக பைபிள் காட்டுகிறது. (வெளி. 5:11) இயேசுவின் வழிநடத்துதலின்கீழ் அந்தத் தேவதூதர்கள், பூமியிலுள்ள கடவுளுடைய ஊழியர்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். நீங்கள் ஊழியம் செய்யும்போதெல்லாம் இதை மனதில் வைக்கிறீர்களா?
“ஊழியத்தில் தேவதூதர்கள் நம்மோடு இருக்கிறார்கள் என்பதை நினைக்க நினைக்க எனக்கு உற்சாகமாக இருக்கிறது” என்று ஆன்னா சொல்கிறார். “யெகோவாவின் தலைமையிலும் இயேசுவின் தலைமையிலும் தேவதூதர்கள் அளிக்கிற உதவியை நான் உயர்வாய் மதிக்கிறேன்” என்றும் சொல்கிறார். ஆம், உண்மையுள்ள தேவதூதர்களுடன் சேர்ந்து ஊழியம் செய்வது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!
மற்ற பிரஸ்தாபிகளுடன் சேர்ந்து ஊழியம் செய்வது எப்படி உதவும்? உண்மையுள்ள சாட்சிகள் ஏராளமானோருடன் பழகும் அரிய வாய்ப்பு நமக்கு இருக்கிறது. “இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் தன் சினேகிதனுடைய முகத்தைக் கருக்கிடுகிறான்” என்ற நீதிமொழி உண்மையென்பதை நீங்கள் அனுபவத்தில் பார்த்திருப்பீர்கள்.—நீதி. 27:17.
மற்றவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்யும்போது, அவர்கள் எப்படித் திறம்பட பிரசங்கிக்கிறார்கள் என்பதைக் கவனித்துக் கற்றுக்கொள்ள நமக்கு அருமையான வாய்ப்பு கிடைக்கிறது. எல்ஸ்பீட்டா இவ்வாறு சொல்கிறார்: “வெவ்வேறு பிரஸ்தாபிகளோடு ஊழியம் செய்யும்போது, சக விசுவாசிகளிடமும் ஊழியத்தில் சந்திக்கிற மக்களிடமும் அன்புகாட்ட எனக்கு வாய்ப்பு கிடைக்கிறது.” ஆகவே, வெவ்வேறு பிரஸ்தாபிகளோடு ஊழியம் செய்ய முயலுங்கள். அப்போது உங்கள் ஊழியம் சுவாரஸ்யமானதாக இருக்கும்.
உங்களை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள்
ஊழியத்தில் நம் ஆர்வம் குறையாதிருப்பதற்கு, நாம் நன்கு திட்டமிட வேண்டும், தனிப்பட்ட படிப்பைத் தவறாமல் செய்ய வேண்டும், போதிய ஓய்வெடுக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் சொன்னால், ஆன்மீக ரீதியிலும் உடல் ரீதியிலும் நம்மைநாமே கவனித்துக்கொள்ள வேண்டும்.
“ஊக்கத்துடன் உழைப்பவரின் திட்டங்கள் கண்டிப்பாக நன்மை தரும்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 21:5, NW) 88 வயதான ஸிக்மன்ட் இவ்வாறு கூறுகிறார்: “ஊழியத்தை நன்கு திட்டமிட்டு செய்வது நல்ல பலனைத் தருகிறது. ஊழியத்திற்குப் போதிய நேரம் இருக்கும் விதத்திலேயே நான் மற்ற காரியங்களைச் செய்கிறேன்.”
பைபிள் வசனங்களை அத்துப்படியாகத் தெரிந்து வைப்பது, நமக்குத் தேவையான பலத்தைத் தந்து, நன்றாக ஊழியம் செய்ய உதவுகிறது. தொடர்ந்து நடமாட நாம் வேளாவேளைக்கு உணவு அருந்துவது எப்படி அவசியமோ அப்படித்தான் தொடர்ந்து பிரசங்க வேலை செய்ய நாம் வேளாவேளைக்கு ஆன்மீக உணவு அருந்துவதும் அவசியம். தினமும் கடவுளுடைய வார்த்தையைப் படித்து ‘ஏற்றவேளையிலே கிடைக்கும் போஜனத்தைச்’ சாப்பிடுவது, ஊழியம் செய்யத் தேவையான சக்தியை நமக்குக் கொடுக்கும்.—மத். 24:45-47.
ஊழியத்தை இன்னும் நன்றாகச் செய்வதற்காக எல்ஸ்பீட்டா தன் வாழ்க்கையில் முக்கியமான சில மாற்றங்களைச் செய்தார். “டிவி பார்க்கும் நேரத்தை ரொம்பவே குறைத்துவிட்டேன்; அதனால் ஊழியத்திற்குத் தயார்செய்ய அதிக நேரம் கிடைக்கிறது. சாயங்காலந்தோறும் பைபிளை வாசிக்கும்போது, அன்று ஊழியத்தில் நான் சந்தித்த மக்களைப் பற்றி யோசித்துப் பார்ப்பேன். அவர்களுக்கு உதவும் வசனங்களையும் கட்டுரைகளையும் தேடியெடுப்பேன்” என்று அவர் சொல்கிறார்.
போதுமான அளவிற்கு ஓய்வெடுப்பது எப்போதும் சுறுசுறுப்போடு இருக்கவும் ஊழியத்தில் முழுமையாக ஈடுபடவும் உங்களுக்கு உதவும். அதற்கு மாறாக, பொழுதுபோக்கில் அதிக நேரத்தைக் கழித்தால் உங்கள் ஊழியத்தின் தரம் குறைந்துவிடும். பக்திவைராக்கியத்தோடு ஊழியம் செய்யும் ஆன்ட்ரெஜ் இவ்வாறு சொல்கிறார்: “சரியாக ஓய்வெடுக்கவில்லை என்றால் ரொம்பவே களைத்துப்போய் விடுவோம். மனச்சோர்வு தலைதூக்க அதுவே போதும். அதைத் தவிர்க்கத்தான் நான் முழு முயற்சி எடுக்கிறேன்.”—பிர. 4:6, NW.
நாம் எவ்வளவுதான் ஊக்கமாக முயற்சி எடுத்தாலும் வெகு சிலரே நற்செய்தியை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், யெகோவா நாம் செய்யும் ஊழியத்தை ஒருபோதும் மறக்க மாட்டார். (எபி. 6:10) அநேகர் நம்மிடம் பேச விரும்புவதில்லை என்றாலும், நாம் வந்து போனதைப் பற்றி பிற்பாடு பேசிக்கொள்ளலாம். அதன் விளைவு, எசேக்கியேலைக் குறித்து நாம் இவ்வாறு வாசிக்கிறபடி இருக்கலாம்: ‘தங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசி உண்டென்கிறதை [மக்கள்] அறிந்துகொள்வார்கள்.’ (எசே. 2:5) ஊழியம் செய்வது அவ்வளவு சுலபமல்ல என்பது உண்மைதான்; ஆனால், ஊழியத்தினால் நாம் பல நன்மைகளைப் பெறுகிறோம், நம் செய்தியை ஏற்றுக்கொள்கிறவர்களும் பல நன்மைகளைப் பெறுவார்கள்.
“ஊழியத்தில் கலந்துகொள்வதால் புதிய சுபாவத்தை வளர்த்துக்கொள்ள முடிகிறது, கடவுள்மீதும் மற்றவர்கள்மீதும் அன்பு காட்ட முடிகிறது” என்று ஸிக்மன்ட் சொல்கிறார். “உயிர்காக்கும் இந்த வேலையில் பங்குகொள்வது ஒரு பாக்கியம். இந்த வேலை இனி இந்தளவுக்கு ஒருபோதும் நடக்காது, இதே போன்ற சூழ்நிலைகளிலும் இனி ஒருபோதும் நடக்காது” என்று ஆன்ட்ரெஜ் சொல்கிறார். இன்று தளராமல் ஊழியம் செய்தால் நீங்களும் ஏராளமான ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள்.—2 கொ. 4:1, 2.
[பக்கம் 31-ன் படங்கள்]
நம்முடைய ஆன்மீகத் தேவைகளையும் சரீரத் தேவைகளையும் கவனித்துக்கொள்வது தளராமல் ஊழியம் செய்ய உதவும்