யெகோவாவின் பெயருக்குப் புகழ் சேர்த்த யோபு
“யெகோவாவுடைய பெயர் என்றென்றும் புகழப்படுவதாக.”—யோபு 1:21, NW.
1. யோபு புத்தகத்தை யார் எழுதியிருக்கலாம், எப்போது எழுதியிருக்கலாம்?
பார்வோனின் கோபத்திற்கு ஆளான மோசே அவரிடமிருந்து தப்பிக்க எகிப்தைவிட்டு ஓடி மீதியான் தேசத்தில் தஞ்சம் புகுந்தார். அப்போது அவருக்கு சுமார் 40 வயது இருக்கும். (அப். 7:23) அங்கே தங்கியிருந்தபோது அருகிலிருந்த ஊத்ஸ் தேசத்தில் யோபு பட்ட கஷ்டங்களைக் குறித்துக் கேள்விப்பட்டிருப்பார். பல வருடங்கள் உருண்டோடிய பின்பு மோசேயும் இஸ்ரவேல் தேசத்தாரும் தங்களுடைய வனாந்தரப் பயணத்தின் முடிவில் ஊத்ஸ் தேசத்தின் அருகில் வந்தார்கள்; அப்போது யோபுவின் இறுதிக் காலத்தைக் குறித்து மோசே கேள்விப்பட்டிருக்கலாம். யோபு இறந்து சில காலத்திற்குப் பிறகு யோபு புத்தகத்தை மோசே எழுதியதாக யூத பாரம்பரியம் கூறுகிறது.
2. யோபு புத்தகம் இன்றுள்ள கடவுளுடைய ஊழியர்களின் விசுவாசத்தை எவ்விதங்களில் பலப்படுத்துகிறது?
2 யோபு புத்தகம் இன்றுள்ள கடவுளுடைய ஊழியர்களின் விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது. எவ்விதங்களில்? பரலோகத்தில் நடந்த மிகவும் குறிப்பிடத்தக்க சம்பவங்களைப் புரிந்துகொள்வதற்கு இந்தப் புத்தகம் உதவுகிறது. மேலும், கடவுளுடைய உன்னத அரசதிகாரத்தைப் பற்றிய அதிமுக்கியமான விவாதத்தை வலியுறுத்துகிறது. அதுமட்டுமல்ல, இறுதிவரை உத்தமத்தை விட்டு விலகாமல் இருப்பதில் உட்பட்டிருக்கும் விஷயங்களை நமக்குத் தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது; யெகோவா சில சமயங்களில் தமது ஊழியர்கள் கஷ்டப்படும்படி ஏன் அனுமதிக்கிறார் என்பதை நன்கு புரிந்துகொள்ளவும் உதவுகிறது. மேலும், பிசாசாகிய சாத்தானை யெகோவாவின் பரம எதிரியும் மனிதகுலத்தின் விரோதியுமாக இப்புத்தகம் அடையாளம் காட்டுகிறது. யோபுவைப் போன்ற அபூரண மனிதரால் கடும் சோதனைகளின் மத்தியிலும் யெகோவாவுக்கு உண்மையாய் நிலைத்திருக்க முடியும் என்பதையும் காட்டுகிறது. யோபு புத்தகத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள சில சம்பவங்களை நாம் இப்போது விலாவாரியாகச் சிந்திக்கலாம்.
யோபுவும் சாத்தானுடைய சோதனைகளும்
3. யோபுவைப் பற்றி நாம் என்ன அறிந்திருக்கிறோம், அவர் ஏன் சாத்தானின் தாக்குதலுக்கு ஆளானார்?
3 யோபு செல்வந்தராகவும் செல்வாக்குப் பெற்றவராகவும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிய குடும்பத் தலைவராகவும் இருந்தார். அவர் பிரசித்திபெற்ற ஆலோசகராகவும் ஏழைகளின் நண்பராகவும் திகழ்ந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் கடவுளுக்குப் பயந்து நடந்தார். அவர் ‘உத்தமரும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவருமாய் இருந்தார்’ என பைபிள் விவரிக்கிறது. பிசாசாகிய சாத்தானின் தாக்குதலுக்கு யோபு ஆளானதற்குக் காரணம் அவருடைய செல்வமும் செல்வாக்குமல்ல, ஆனால் அவருக்கு இருந்த தேவ பக்தியே.—யோபு 1:1; 29:7-16; 31:1.
4. உத்தமம் என்றால் என்ன?
4 இப்புத்தகத்தின் ஆரம்பப் பகுதி, பரலோகத்தில் யெகோவாவின் சமுகத்தில் தூதர்கள் கூடிவந்த சம்பவத்தைச் சித்தரிக்கிறது. சாத்தானும் அங்கு வந்திருந்தான், அவன் யோபுமீது குற்றம்சாட்டினான். (யோபு 1:6-11-ஐ வாசியுங்கள்.) யோபுவின் சொத்துபத்துக்களைப் பற்றி சாத்தான் குறிப்பிட்டபோதிலும் அவருடைய உத்தமத்துக்கு எதிராகச் சவால்விடுவதிலேயே அவன் குறியாய் இருந்தான். “உத்தமம்” என்ற வார்த்தை குற்றங்குறையில்லாமல் நேர்மையாக, நீதியாக இருப்பதை அர்த்தப்படுத்துகிறது. பைபிள் இந்த வார்த்தையை, இருதயத்திலிருந்து யெகோவாவுக்கு முழுமையான பக்தி காட்டுவதைக் குறிக்கப் பயன்படுத்துகிறது.
5. சாத்தான் யோபுமீது என்ன குற்றம்சுமத்தினான்?
5 யோபு உள்ளப்பூர்வமான அன்பினால் அல்ல சுயநலத்தினாலேயே கடவுளை வழிபடுவதாக சாத்தான் அடித்துக் கூறினான். யெகோவா யோபுவைத் தொடர்ந்து ஆசீர்வதித்துப் பாதுகாத்து வந்தால் மட்டுமே அவருக்கு யோபு உண்மையுள்ளவராக இருப்பார் என்று அவன் குற்றம்சுமத்தினான். அந்தக் குற்றச்சாட்டிற்குப் பதிலளிப்பதற்காக, உத்தமரான யோபுவைத் தாக்க சாத்தானை யெகோவா அனுமதித்தார். அதன் விளைவாக, ஒரே நாளில் தன் கால்நடைகளில் பல திருடப்பட்டதையும் மற்றவை கொல்லப்பட்டதையும், தன்னுடைய வேலைக்காரர்களில் அநேகர் கொலை செய்யப்பட்டதையும், தன்னுடைய பத்து பிள்ளைகளும் இறந்துவிட்டதையும் யோபு கேள்விப்பட்டார். (யோபு 1:13-19) சாத்தானின் தாக்குதல்களால் யோபு தன்னுடைய உத்தமத்தை விட்டுவிட்டாரா? அந்த அவல நிலையிலும் யோபு என்ன சொன்னாரென பைபிள் இவ்வாறு விவரிக்கிறது: “யெகோவா கொடுத்தார், யெகோவா எடுத்தார்; யெகோவாவுடைய பெயர் என்றென்றும் புகழப்படுவதாக.”—யோபு 1:21, NW.
6. (அ) பரலோகத்தில் தூதர்கள் மீண்டும் கூடிவந்தபோது என்ன நடந்தது? (ஆ) யோபுவின் உத்தமத்திற்கு எதிராகச் சாத்தான் சவால்விட்டபோது அவன் யாரையும் மனதில் வைத்திருந்தான்?
6 அதன்பின் பரலோகத்தில் யெகோவாவின் சமுகத்தில் தூதர்கள் மீண்டும் கூடிவந்தபோது சாத்தான் யோபுமீது மறுபடியும் குற்றம்சாட்டினான். “தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும், மனுஷன் கொடுத்துவிடுவான். ஆனாலும் நீர் உம்முடைய கையை நீட்டி, அவன் எலும்பையும் அவன் மாம்சத்தையும் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும்” என்று அவன் கடவுளிடம் சொன்னான். யோபுவை மட்டுமல்ல மற்றவர்களையும் அவன் குற்றம்சாட்டியதைக் கவனியுங்கள். ‘தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும், மனுஷன் கொடுத்துவிடுவான்’ என்று அவன் சொன்னதன் மூலம் யோபுவினுடைய உத்தமத்திற்கு எதிராக மட்டுமல்ல, யெகோவாவை வழிபடுகிற எல்லா ‘மனுஷருடைய’ உத்தமத்திற்கு எதிராகவும் சவால்விட்டான். அதன் பிறகு வேதனைமிக்க வியாதியால் யோபுவைத் தாக்குவதற்குச் சாத்தானைக் கடவுள் அனுமதித்தார். (யோபு 2:1-8) ஆனால், யோபுவுக்கு வந்த சோதனைகள் அத்துடன் முடிந்துவிடவில்லை.
யோபுவின் மனப்பான்மையிலிருந்து பாடம்
7. யோபுவின் மனைவியும் அவரைப் பார்க்க வந்தவர்களும் எப்படி அவரை வார்த்தைகளால் வதைத்தார்கள்?
7 ஆரம்பத்தில் யோபுவுக்கு வந்த சோதனைகளால் அவருடைய மனைவியும் பாதிக்கப்பட்டாள். பிள்ளைச் செல்வத்தையும் பொருள் செல்வத்தையும் பறிகொடுத்தது அவளுடைய மனதைச் சின்னாபின்னமாக்கியிருக்க வேண்டும். வேதனைமிக்க வியாதியால் தன் கணவன் அவதிப்படுவதைப் பார்த்தபோது அவள் நிச்சயம் துடிதுடித்துப் போயிருப்பாள். அதனால், “நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்” என்று யோபுவிடம் சொன்னாள். அதன்பின் எலிப்பாஸ், பில்தாத், சோப்பார் ஆகிய மூவர் ஏதோ ஆறுதல் சொல்லும் பெயரில் யோபுவிடம் வந்தார்கள். உண்மையில் ஆறுதல் சொல்வதற்குப் பதிலாக வஞ்சக வார்த்தைகளால் அவரை நோகடித்தார்கள்; அவர்கள் “தொல்லைத் தரும் தேற்றரவாளர்களாக” (NW) இருந்தார்கள். உதாரணத்திற்கு, யோபுவின் பிள்ளைகள் தவறு செய்ததால்தான் அவர்களுக்கு அந்தக் கதி ஏற்பட்டதென பில்தாத் சொன்னார். முன்பு செய்திருந்த பாவங்களுக்கான தண்டனையையே யோபு அனுபவித்தார் என எலிப்பாஸ் சொன்னார். உத்தமர்களை கடவுள் ஒரு பொருட்டாகக் கருதுகிறாரா என்றும்கூட அவர் சந்தேகம் எழுப்பினார். (யோபு 2:9, 11; 4:8; 8:4; 16:2; 22:2, 3) இப்படி மாறிமாறி அவரை வார்த்தைகளால் வதைத்தபோதிலும் யோபு தன் உத்தமத்தைவிட்டு விலகவில்லை. ‘தேவனைப்பார்க்கிலும் தன்னைத்தான் நீதிமான்’ என யோபு சொல்லிக்கொண்டது தவறுதான். (யோபு 32:2) இருந்தாலும், கடைசிவரை அவர் உண்மையுள்ளவராய் இருந்தார்.
8. இன்று அறிவுரை கொடுப்பவர்களுக்கு எலிகூ எப்படிச் சிறந்த உதாரணமாய் திகழ்கிறார்?
8 அடுத்து, அவரைப் பார்க்க வந்தவர்களில் ஒருவரான எலிகூவைப் பற்றி வாசிக்கிறோம். அவர் முதலில், யோபுவும் அவருடைய மூன்று நண்பர்களும் விவாதித்துக்கொண்டிருந்ததைக் கவனித்துக் கேட்டார். அவர் மற்ற நான்கு பேரையும்விட வயதில் இளையவராக இருந்தபோதிலும், ஞானமாக நடந்துகொண்டார். யோபுவிடம் அவர் மரியாதையோடு பேசினார். யோபுவின் நேர்மையான நடத்தையை மெச்சினார். அதே சமயத்தில், யோபு தன்னிடம் எந்தத் தவறும் இல்லை என்பதை நிரூபிப்பதிலேயே குறியாய் இருந்ததைப் பற்றியும் அவர் எடுத்துச் சொன்னார். அதன் பிறகு, கடவுளை உண்மையோடு சேவிப்பது ஒருபோதும் வீண்போகாது என்ற உறுதியை அவர் யோபுவுக்கு அளித்தார். (யோபு 36:1, 11-ஐ வாசியுங்கள்.) அவர் பொறுமையாக இருந்தார், கவனித்துக் கேட்டார், நல்ல விஷயங்களைப் பாராட்டினார், சிறந்த அறிவுரையைக் கொடுத்தார். இன்று அறிவுரை கொடுப்பவர்கள் எலிகூவின் உதாரணத்தைப் பின்பற்றுவது சாலச் சிறந்தது, அல்லவா?—யோபு 32:6; 33:32.
9. யெகோவா யோபுவுக்கு எப்படி உதவினார்?
9 கடைசியாக யோபுவிடம் பேச வந்தவர் அவரை வியப்பில் ஆழ்த்தினார். ஆம், ‘யெகோவா பெருங்காற்றினின்று யோபுக்குப் பதில் பேசினார்’ என பைபிள் சொல்கிறது. யோபு தன் எண்ணத்தைச் சரிசெய்துகொள்வதற்காக யெகோவா அன்புடனும் அதே சமயத்தில் கண்டிப்புடனும் அவரிடம் அடுத்தடுத்து பல கேள்விகளைக் கேட்டு உதவினார். இப்படி யெகோவா தன்னைத் திருத்தியதை யோபு நல்லபடியாக ஏற்றுக்கொண்டு, “நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன்” என்று கூறினார். யெகோவா யோபுவிடம் பேசிய பிறகு அந்த மூன்று நண்பர்களைக் கடிந்துகொண்டார்; ஏனென்றால், அவர்கள் “உண்மையை” (NW) பேசவில்லை. அவர்களுக்காக யோபு ஜெபம் செய்ய வேண்டியிருந்தது. அப்படி ‘யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவர் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவருக்குத் தந்தருளினார்.’—யோபு 38:1, திருத்திய மொழிபெயர்ப்பு; 40:4; 42:6-10.
யெகோவாமீது நாம் எந்தளவுக்கு அன்பு வைத்திருக்கிறோம்?
10. யெகோவா ஏன் சாத்தானை கண்டுகொள்ளாமல் விட்டுவிடவோ அழித்துவிடவோ இல்லை?
10 யெகோவா இப்பிரபஞ்சத்தைப் படைத்தவர், எல்லாப் படைப்புகளின் பேரரசர். அவர் பிசாசின் சவாலை ஏன் கண்டுகொள்ளாமல் விட்டுவிடவில்லை? சாத்தானைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதோ அவனை அழித்துவிடுவதோ அவன் எழுப்பியிருந்த விவாதத்திற்குப் பதில் அளிக்காது என்பதைக் கடவுள் அறிந்திருந்தார். யோபு யெகோவாவுக்கு உத்தமராய் விளங்கியபோதிலும் தன்னுடைய சொத்துசுகங்களை இழந்தால் உத்தமத்தைவிட்டு விலகிவிடுவார் என சாத்தான் அடித்துக் கூறியிருந்தான். ஆனால், யோபு அந்தச் சோதனைக்கு அடிபணியவில்லை. அடுத்து, எந்தவொரு மனிதனுக்கும் கொடிய வியாதி வந்தால் அவன் கடவுளைவிட்டு விலகிவிடுவான் என்று சாத்தான் சவால்விட்டான். யோபு கொடிய வியாதியாலும் அவதிப்பட்டார்; ஆனாலும், சாத்தானால் அவருடைய உத்தமத்தை முறிக்க முடியவில்லை. ஆகவே, அபூரண மனிதனாக இருந்தபோதிலும் உண்மையாய் விளங்கிய யோபுவின் விஷயத்தில் சாத்தான் பொய்யன் என்பது நிரூபணமானது. யெகோவாவை வணங்கும் மற்றவர்களைப் பற்றி என்ன சொல்லலாம்?
11. சாத்தானுடைய சவாலுக்கு இயேசு எப்படிச் சரியான பதிலடி கொடுத்தார்?
11 சொல்லப்போனால், சாத்தான் என்ன சோதனைகளைக் கொண்டுவந்தாலும் உத்தமமாய் நிலைத்திருக்கிற கடவுளுடைய ஊழியர்கள் ஒவ்வொருவருமே, அந்தக் கொடூரமான விரோதியின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தங்கள் விஷயத்தில் பொய் என்பதை நிரூபிக்கிறார்கள். இயேசு பூமிக்கு வந்தபோது சாத்தானுடைய சவாலுக்குச் சரியான பதிலடி கொடுத்தார். அவர் நம்முடைய முதல் தகப்பனான ஆதாமைப்போல் பரிபூரண மனிதராக இருந்தார். அவர் மரணம் வரையாக உண்மையோடு இருந்ததன் மூலம் சாத்தான் ஒரு பொய்யன் என்றும் அவனுடைய குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய் என்றும் முற்றுமுழுமையாக நிரூபித்தார்.—வெளி. 12:10.
12. யெகோவாவின் ஊழியர் ஒவ்வொருவருக்கும் என்ன வாய்ப்பும் பொறுப்பும் இருக்கிறது?
12 என்றாலும், யெகோவாவின் வணக்கத்தாரைச் சாத்தான் இன்னும் சோதித்துக்கொண்டுதான் இருக்கிறான். நாம் சுயநலத்தினால் அல்லாமல் அன்பினாலேயே யெகோவாவைச் சேவிக்கிறோம் என்பதை நம்முடைய உத்தமத்தின் மூலம் வெளிக்காட்ட நம் ஒவ்வொருவருக்குமே வாய்ப்பும் இருக்கிறது, பொறுப்பும் இருக்கிறது. அந்தப் பொறுப்பை நாம் எப்படிக் கருதுகிறோம்? யெகோவாவுக்கு உத்தமமாக இருப்பதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறோம். நாம் சோதனைகளைச் சகிப்பதற்கு யெகோவா பலத்தைத் தருகிறார்; அதோடு, யோபுவின் விஷயத்தில் பார்த்ததுபோல, நாம் மட்டுக்குமீறி சோதிக்கப்பட அவர் அனுமதிக்க மாட்டார் என்பதை அறிவது நமக்கு ஆறுதல் அளிக்கிறது.—1 கொ. 10:13.
சாத்தான்—துணிகரமிக்க எதிரி, விசுவாசதுரோகி
13. சாத்தானைப் பற்றி யோபு புத்தகம் என்ன தகவல்களை அளிக்கிறது?
13 யெகோவாவை எதிர்த்துச் சவால்விடுவதிலும் மனிதகுலத்தைத் தவறான வழிக்குத் திசைதிருப்புவதிலும் சாத்தான் வகித்த கேவலமான பங்கைப் பற்றி எபிரெய வேதாகமம் விவரிக்கிறது. யெகோவாவை அவன் எதிர்த்ததைப் பற்றிய கூடுதலான தகவலைக் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் அளிக்கிறது; யெகோவாவின் அரசதிகாரமே சரியானதென நிரூபிக்கப்படப் போவதையும் சாத்தான் முற்றிலுமாக அழிக்கப்படப் போவதையும் பற்றி வெளிப்படுத்துதல் புத்தகத்திலிருந்து தெரிந்துகொள்கிறோம். சாத்தானுடைய கலகத்தனமான போக்கைக் குறித்து யோபு புத்தகம் இன்னும் சில தகவல்களை அளிக்கிறது. பரலோகத்தில் தேவதூதர்கள் கூடிவந்த சமயங்களில் சாத்தானும் அங்கு வந்தான்; ஆனால், யெகோவாவைப் புகழுவதற்காக அவன் வரவில்லை. கெட்ட எண்ணத்தோடும் தீய உள்நோக்கத்தோடும்தான் வந்தான். யோபுவைக் குற்றம்சாட்டிவிட்டு, அவரைச் சோதிப்பதற்கு அனுமதி பெற்ற பிறகு, “சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டுப்போனான்.”—யோபு 1:12; 2:7.
14. யோபுவிடம் சாத்தான் எப்படிப்பட்ட மனப்பான்மையைக் காட்டினான்?
14 ஆகவேதான், சாத்தானை மனிதகுலத்தின் ஈவிரக்கமற்ற எதிரி என யோபு புத்தகம் அடையாளம் காட்டுகிறது. பரலோகத்தில் தேவதூதர்கள் கூடிவந்திருந்த இரண்டு சந்தர்ப்பங்களைப் பற்றி யோபு 1:6 மற்றும் 2:1 குறிப்பிடுகின்றன; அந்தச் சந்தர்ப்பங்களுக்கு இடையே எவ்வளவு காலம் சென்றதென பைபிள் குறிப்பிடுவதில்லை. அக்காலப்பகுதியில் யோபு கொடூரமாகச் சோதிக்கப்பட்டார். யோபு உண்மையுள்ளவராக நிரூபித்ததால் யெகோவா சாத்தானிடம், “முகாந்தரமில்லாமல் அவனை நிர்மூலமாக்கும்படி நீ என்னை ஏவினபோதிலும், அவன் இன்னும் தன் உத்தமத்திலே உறுதியாய் நிற்கிறான்” என்று சொல்ல முடிந்தது. ஆனால், தன்னுடைய குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய் என்பதைச் சாத்தான் ஒத்துக்கொள்ளவில்லை. அதற்கு மாறாக, யோபுவை இன்னும் கடுமையாக சோதிப்பதற்கு அனுமதிக்கும்படி அவன் கேட்டான். இவ்வாறு, வசதியாக இருந்த சமயத்திலும் வறுமையில் தவித்த சமயத்திலும் யோபுவைச் சாத்தான் சோதித்தான். இதிலிருந்து, ஏழைகள்மீதும் துயரப்படுவோர்மீதும் சாத்தானுக்கு துளியும் கருணை இல்லை என்பது தெளிவாகிறது. உத்தமர்களை அவன் வெறுக்கிறான். (யோபு 2:3-5) இருந்தாலும், யோபுவின் உண்மைத்தன்மை சாத்தானைப் பொய்யனாக நிரூபித்தது.
15. இன்றுள்ள விசுவாசதுரோகிகளுக்கும் சாத்தானுக்கும் உள்ள ஒற்றுமைகள் யாவை?
15 முதன்முதலில் விசுவாசதுரோகியாக மாறியவன் சாத்தானே. இன்றுள்ள விசுவாசதுரோகிகள் பிசாசின் குணங்களையே வெளிக்காட்டுகிறார்கள். சபையாரிடம், கிறிஸ்தவ மூப்பர்களிடம், அல்லது ஆளும் குழுவினரிடம் சதா குற்றம் கண்டுபிடிக்கும் எண்ணத்தில் அவர்கள் மனம் நஞ்சாகியிருக்கலாம். விசுவாசதுரோகிகள் சிலர், யெகோவா என்ற பெயரைப் பயன்படுத்துவதை எதிர்க்கிறார்கள். அவரைப் பற்றி அறிந்துகொள்வதிலோ அவரைச் சேவிப்பதிலோ அவர்களுக்கு விருப்பம் இல்லை. அவர்களுடைய தகப்பனான சாத்தானைப் போலவே அவர்களும் உத்தமர்களைக் குறிவைக்கிறார்கள். (யோவா. 8:44) அதனால்தான் யெகோவாவின் ஊழியர்கள் அப்படிப்பட்டவர்களோடு எந்தச் சகவாசமும் வைத்துக்கொள்வதில்லை.—2 யோ. 10, 11.
யோபு யெகோவாவின் பெயருக்குப் புகழ் சேர்த்தார்
16. யோபு யெகோவாவிடம் எப்படிப்பட்ட மனப்பான்மையைக் காட்டினார்?
16 யோபு யெகோவாவின் பெயரைப் பயன்படுத்தினார், அதற்குப் புகழ் சேர்த்தார். தன் பிள்ளைகள் இறந்துவிட்ட செய்தியைக் கேட்டு அவர் நொறுங்கிப்போனபோதிலும், கடவுளைப் பற்றி தகாத விதமாய் எதுவும் பேசவில்லை. கடவுள்தான் தன்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துவிட்டாரென யோபு தவறாகச் சொன்னபோதிலும் அவருடைய பெயருக்குப் புகழ் சேர்த்தார். “இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி” என்று அவர் தனது உரையில் சொன்னார்.—யோபு 28:28.
17. உத்தமத்தைக் காத்திட யோபுவுக்கு எது உதவியது?
17 உத்தமத்தைக் காத்திட யோபுவுக்கு எது உதவியது? யோபுவுக்குத் துயரங்கள் வருவதற்கு முன்பே யெகோவாவோடு அவர் நெருங்கிய பந்தத்தை வளர்த்திருந்தார். யெகோவாவிடம் சாத்தான் சவால்விட்டதைப் பற்றி யோபு அறிந்திருந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை; என்றபோதிலும் அவர் உண்மையோடிருக்கத் தீர்மானமாய் இருந்தார். “என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கேன்” என்று அவர் சொன்னார். (யோபு 27:5) யோபு எப்படி யெகோவாவோடு நெருங்கிய பந்தத்தை வளர்த்திருந்தார்? அவர் தனது தூரத்து உறவினர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்களோடு கடவுள் நடந்துகொண்ட விதத்தைப் பற்றி தான் கேட்ட விஷயங்களைத் தன் மனதில் பதித்திருந்தார் என்பதில் சந்தேகமில்லை. அதோடு, யெகோவாவின் படைப்புகளைக் கூர்ந்து கவனித்ததன் மூலம் அவருடைய அநேக குணங்களைத் தெரிந்துகொண்டார்.—யோபு 12:7-9, 13, 16-ஐ வாசியுங்கள்.
18. (அ) யெகோவா மீதுள்ள பக்தியை யோபு எப்படிக் காட்டினார்? (ஆ) யோபுவின் சிறந்த உதாரணத்தை நாம் என்னென்ன வழிகளில் பின்பற்றலாம்?
18 யோபு அறிந்துகொண்ட விஷயங்கள் யெகோவாவைப் பிரியப்படுத்த வேண்டுமென்ற ஆசையை அவருக்குள் தூண்டிவிட்டன. ஒருவேளை, தன்னுடைய குடும்பத்தார் கடவுளுக்குப் பிரியமில்லாத எதையேனும் செய்திருப்பார்கள் அல்லது “தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள்” என நினைத்து அவர் தவறாமல் பலிகளைச் செலுத்தினார். (யோபு 1:5) அவர் கடுமையாகச் சோதிக்கப்பட்டபோதும் யெகோவா செய்த நல்ல காரியங்களைப் பற்றியே பேசினார். (யோபு 10:12) இவ்விஷயங்களில் அவர் எப்பேர்ப்பட்ட சிறந்த உதாரணம்! நாமும்கூட யெகோவாவையும் அவருடைய நோக்கங்களையும் பற்றிய திருத்தமான அறிவை தவறாமல் எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். யெகோவாவுடன் உள்ள பந்தத்தைப் பலப்படுத்தும் நல்ல பழக்கங்களை நாம் கொண்டிருக்க வேண்டும்; அதாவது, பைபிளைப் படிப்பது, கூட்டங்களில் கலந்துகொள்வது, ஜெபம் செய்வது, ஊழியத்தில் ஈடுபடுவது ஆகியவற்றைப் பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல, யெகோவாவின் பெயரைப் புகழ்வதற்கு நம்மாலான அனைத்தையும் செய்ய வேண்டும். யோபுவின் உத்தமத்தன்மை யெகோவாவின் மனதைக் குளிர்வித்ததுபோல், இன்றுள்ள கடவுளுடைய ஊழியர்களின் உத்தமத்தன்மையும் யெகோவாவின் இருதயத்தை மகிழ்விக்கிறது. இந்த விஷயத்தைப் பற்றி அடுத்தக் கட்டுரையில் சிந்திக்கலாம்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• யோபு பிசாசாகிய சாத்தானுடைய தாக்குதலுக்கு ஆளாகக் காரணம் என்ன?
• என்னென்ன சோதனைகளை யோபு சகித்தார், அச்சமயங்களில் அவர் எவ்வாறு நடந்துகொண்டார்?
• யோபுவைப் போல உத்தமத்தில் நிலைத்திருப்பதற்கு எது நமக்கு உதவும்?
• யோபுவின் புத்தகத்திலிருந்து சாத்தானைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
[பக்கம் 4-ன் படம்]
யோபு புத்தகம் கடவுளுடைய உன்னத அரசதிகாரம் பற்றிய விவாதத்தின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது
[பக்கம் 6-ன் படம்]
என்னென்ன சூழ்நிலைகளில் உங்களுடைய உத்தமத்தன்மைக்கு சோதனை வரலாம்?