1 பைபிளில் முழு நம்பிக்கை வையுங்கள்
“வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியினால் அருளப்பட்டிருக்கின்றன. அவை கற்பிப்பதற்கும், கடிந்துகொள்வதற்கும், காரியங்களைச் சரிசெய்வதற்கும் . . . பிரயோஜனமுள்ளவையாக இருக்கின்றன.”—2 தீமோத்தேயு 3:16.
சவால் என்ன? ‘பைபிள் மனிதர்களால் எழுதப்பட்ட புத்தகம்தானே’ என்று அநேகர் நினைக்கிறார்கள். அதிலுள்ள சரித்திரப் பதிவுகள் உண்மையானவை அல்ல எனச் சிலர் சொல்கிறார்கள். மற்றவர்கள், பைபிளிலுள்ள அறிவுரைகள் நடைமுறைக்கு ஒத்துவராதவை என்றும் இக்காலத்திற்குப் பொருந்தாதவை என்றும் சொல்கிறார்கள்.
சவாலைச் சமாளிப்பது எப்படி? பொதுவாக, பைபிளின் நம்பகத்தன்மையையும் பயனையும் குறித்துக் கேள்வி எழுப்புகிறவர்கள் தாங்களாக அதை ஆராய்ந்து பார்த்ததே கிடையாது. மற்றவர்கள் சொல்வதைத்தான் திருப்பிச் சொல்கிறார்கள். ஆனால், பைபிள் இப்படி எச்சரிக்கிறது: “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.”—நீதிமொழிகள் 14:15.
மற்றவர்கள் சொல்வதைக் கண்மூடித்தனமாக நம்பிவிடுவதற்குப் பதிலாக, முதல் நூற்றாண்டில் பெரோயா என்ற நகரில் (இன்றைய வட கிரீஸில்) வாழ்ந்த கிறிஸ்தவர்களின் உதாரணத்தை நாம் ஏன் பின்பற்றக் கூடாது? மற்றவர்கள் சொன்னதை அவர்கள் அப்படியே நம்பிவிடவில்லை. மாறாக, ‘அவையெல்லாம் சரிதானா என்று தினந்தோறும் வேதவசனங்களைக் கவனமாக ஆராய்ந்து பார்ப்பதில்’ பெயர்போனவர்களாக இருந்தார்கள். (அப்போஸ்தலர் 17:11) பைபிள் கடவுளுடைய சக்தியால் எழுதப்பட்ட புத்தகமென நீங்கள் ஏன் நம்பலாம் என்பதற்கு இரண்டு காரணங்களை இப்போது சுருக்கமாகச் சிந்திக்கலாம்.
பைபிளின் சரித்திரப் பதிவுகள் உண்மையானவை. பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்கள் உண்மையில் வாழ்ந்தார்களா, அப்படிப்பட்ட இடங்கள் உண்மையில் இருந்தனவா எனச் சந்தேகவாதிகள் பல வருடங்களாகக் கேள்வியெழுப்பி வருகிறார்கள். என்றாலும், அவ்வாறு கேள்வியெழுப்புவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லையென்றும் பைபிள் பதிவு நம்பகமானதென்றும் அத்தாட்சிகள் திரும்பத் திரும்ப நிரூபித்திருக்கின்றன.
உதாரணத்திற்கு, ஏசாயா 20:1-ல் குறிப்பிடப்பட்டுள்ள அசீரிய ராஜாவான சர்கோன் உண்மையில் வாழ்ந்தாரா என்று அறிஞர்கள் ஒருசமயம் சந்தேகப்பட்டார்கள். ஆனால், 1840-ல் அந்த ராஜாவின் அரண்மனை புதைபொருள் ஆராய்ச்சியாளர்களின் கண்களில் சிக்கியது. இப்போது, சர்கோன் என்பவர் அசீரிய ராஜாக்களில் ஒருவர் என்பது எல்லாரும் அறிந்த உண்மையாக இருக்கிறது.
இயேசுவைக் கொலை செய்யும்படி கட்டளையிட்ட ரோம ஆளுநரான பொந்தியு பிலாத்து நிஜமாகவே வாழ்ந்தவரா என்ற சந்தேகமும் ஒருகாலத்தில் விமர்சகர்களுக்கு இருந்தது. (மத்தேயு 27:1, 22-24) ஆனால், 1961-ல் இஸ்ரேலிலுள்ள செசரியா நகருக்கு அருகே, பிலாத்துவின் பெயரும் பதவியும் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
பைபிளின் சரித்திரப் பதிவுகள் உண்மையானவை என்பதைக் குறித்து யு.எஸ். நியூஸ் & உவர்ல்ட் ரிப்போர்ட்டின் அக்டோபர் 25, 1999 இதழ் இவ்வாறு குறிப்பிட்டது: “பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் உள்ள முக்கியமான சரித்திரப் பதிவுகள் உண்மையென நவீனகால புதைபொருள் ஆராய்ச்சி அசாராணமான விதங்களில் நிரூபித்திருக்கிறது; இஸ்ரவேலரின் மூதாதையர், எகிப்திலிருந்து விடுதலைப் பயணம், தாவீதின் முடியாட்சி, இயேசுவின் காலத்தில் வாழ்க்கை என பைபிள் குறிப்பிடும் முக்கிய விவரங்களை அது ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறது.” பைபிளில் விசுவாசம் வைப்பதற்குப் புதைபொருள் கண்டுபிடிப்புகள் அவசியம் இல்லைதான்; ஆனாலும், கடவுளுடைய சக்தியால் எழுதப்பட்ட ஒரு புத்தகம் சரித்திர விவரங்களை இப்படித் துல்லியமாகக் குறிப்பிட வேண்டும் என்றுதானே நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்?
பைபிள் தரும் ஞானமான அறிவுரைகள் எல்லாப் பின்னணிகளைச் சேர்ந்தவர்களுக்கும் நடைமுறையில் பயனளிக்கின்றன. நுண்கிருமிகளைப் பற்றியும் அவற்றால் நோய்கள் பரவுவதைப் பற்றியும் மனிதன் கண்டுபிடிப்பதற்குப் பல காலத்திற்கு முன்பே, பைபிள் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் கடைப்பிடிக்கும்படி அறிவுரைகள் கொடுத்தது; அவை நம் காலத்திற்கும் பொருந்துகின்றன. (லேவியராகமம் 11:32-40; உபாகமம் 23:12, 13) குடும்பத்தில் ஒருவரையொருவர் எப்படி நடத்த வேண்டுமென பைபிள் சொல்லும் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். (எபேசியர் 5:28–6:4) பைபிளிலுள்ள நியமங்களின்படி வாழ்கிறவர்கள் பொறுப்பான பணியாளர்களாக அல்லது நியாயமான முதலாளிகளாக ஆகிறார்கள். (எபேசியர் 4:28; 6:5-9) பைபிள் நியமங்களைக் கடைப்பிடிப்பது மனநலத்திற்கும் பிரயோஜனம் அளிக்கிறது. (நீதிமொழிகள் 14:30; எபேசியர் 4:31, 32; கொலோசெயர் 3:8-10) நம் படைப்பாளரிடமிருந்து இப்படிப்பட்ட நடைமுறையான ஆலோசனைகளைத்தானே நாம் எதிர்பார்ப்போம்?
வெகுமதி என்ன? பைபிளில் பொதிந்துள்ள ஞானம், பேதையையும் ஞானியாக்கும். (சங்கீதம் 19:7) அதோடு, பைபிள்மீது நமக்கு முழு நம்பிக்கை வந்துவிட்டால், பலமான விசுவாசத்தைப் பெறுவதற்கான அடுத்த படியை எடுக்க அது நமக்குப் பெரிதும் உதவும்; ஆம், வேறெந்த புத்தகத்தையும்விட அதிகமாக உதவும். (w09 5/1)
கூடுதலான தகவலுக்கு, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில் “பைபிள்—கடவுள் தந்த புத்தகம்” என்ற இரண்டாம் அதிகாரத்தைப் பாருங்கள்.a
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.