வாசகரின் கேள்வி
அற்புத சுகப்படுத்துதல்கள் எல்லாமே கடவுளுடைய சக்தியால்தான் நடக்கிறதா?
நோய்களைக் குணப்படுத்தும் சக்தி யெகோவா தேவனுக்கு இருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அந்தச் சக்தியை அவர் தம்முடைய வணக்கத்தாருக்குக் கொடுக்க முடியும் என்பதிலும் எவ்வித சந்தேகமும் இல்லை. உதாரணத்திற்கு, அப்போஸ்தலர்களுடைய காலத்தில், அவருடைய சக்தியால் அருளப்பட்ட விசேஷ வரங்களில் அற்புத சுகப்படுத்துதலும் ஒன்றாக இருந்தது. அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “ஏதோவொரு நன்மைக்காகவே ஒவ்வொருவரிலும் கடவுளுடைய சக்தியின் செயல்பாடுகள் வெளிப்படுகின்றன. உதாரணமாக, கடவுளுடைய சக்தியினால் ஒருவருக்கு ஞானத்தோடு பேசுகிற வரமும், . . . அந்த ஒரே சக்தியினால் வேறொருவருக்குக் குணப்படுத்துகிற வரமும், . . . வேறொருவருக்குத் தீர்க்கதரிசனம் சொல்கிற வரமும், . . . வேறொருவருக்கு வேற்றுமொழிகளில் பேசுகிற வரமும் . . . அருளப்படுகிறது.”—1 கொரிந்தியர் 12:4-11.
என்றாலும், கொரிந்தியர்களுக்கு எழுதிய அதே கடிதத்தில், கடவுளுடைய சக்தியால் அருளப்பட்ட அற்புத வரங்கள் ஒரு முடிவுக்கு வருமென்றும் பவுல் குறிப்பிட்டார். “தீர்க்கதரிசனம் சொல்கிற வரமானாலும் ஒழிந்துபோகும், வேற்றுமொழி பேசுகிற வரமானாலும் ஓய்ந்துபோகும்; அறிவென்ற வரமானாலும் அழிந்துபோகும்” என்று அவர் சொன்னார்.—1 கொரிந்தியர் 13:8.
முதல் நூற்றாண்டில், இயேசு கிறிஸ்துவும் அவருடைய சீடர்களும் அற்புத சுகப்படுத்துதல்களைச் செய்தார்கள். கிறிஸ்தவச் சபை ஸ்தாபிக்கப்பட்ட அந்தச் சமயத்தில், சுகப்படுத்துவது போன்ற அற்புத வரங்கள் கடவுளுடைய மகிமைக்கென்று அருளப்பட்டன; அந்தப் புதிய கிறிஸ்தவச் சபைக்கு யெகோவாவின் அங்கீகாரமும் ஆசீர்வாதமும் இருந்ததற்கு அவை அடையாளமாக இருந்தன. ஆனால், அச்சபை முழு வளர்ச்சியடைந்த பிறகு, அந்த விசேஷ வரங்களுக்குப் பதிலாக உறுதியான விசுவாசமும் நம்பிக்கையும் அன்புமே கடவுளுடைய அங்கீகாரத்திற்கு அடையாளமாக ஆயின. (யோவான் 13:35; 1 கொரிந்தியர் 13:13) இவ்வாறு, சுமார் பொ.ச. 100-ஆம் ஆண்டில், கடவுளுடைய அங்கீகாரத்திற்கு அடையாளமாக அற்புத சுகப்படுத்துதல்கள் நடப்பது ஒரு முடிவுக்கு வந்தது.a
ஆனால், ‘இன்றுகூட அற்புத சுகப்படுத்துதல்கள் நடப்பதாகக் கேள்விப்படுகிறேனே, அது எப்படி?’ என்று நீங்கள் கேட்கலாம். உதாரணத்திற்கு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்பட்ட ஒருவரைப் பற்றி ஒரு செய்தித்தாள் அறிக்கை செய்தது. அவருக்குத் தலையிலும், சிறுநீரகங்களிலும், எலும்புகளுக்கு உள்ளேயும்கூட புற்றுநோய்க் கட்டிகள் இருந்தனவாம். அவருடைய எதிர்காலமே இருண்டுவிட்டதாகத் தோன்றிய சமயத்தில், திடீரென ஒரு நாள் கடவுள் அவரிடம் “பேசினாராம்.” அந்த அறிக்கைப்படி, ஒருசில நாட்களில் அவருடைய புற்றுநோய் மாயமாய் மறைந்துவிட்டதாம்.
இப்படிப்பட்ட கதைகளை நீங்கள் கேள்விப்படும்போது, ‘இது நிஜம்தானா? இது உண்மையிலேயே நடந்ததற்கு அதிகாரப்பூர்வ ஆதாரமும் மருத்துவ அத்தாட்சியும் இருக்கிறதா? அப்படியே அவர் குணமடைந்திருந்தாலும், இன்று அற்புத சுகப்படுத்துதல்களாகத் தோன்றுகிற எல்லாமே கடவுளுடைய சக்தியால்தான் செய்யப்படுகிறதென பைபிள் சொல்கிறதா?’ என்றெல்லாம் உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.
அந்தக் கடைசி கேள்விக்கான பதில் மிக முக்கியமானது. ஏனென்றால், இயேசு தம் சீடர்களை இவ்வாறு எச்சரித்தார்: “போலித் தீர்க்கதரிசிகளைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; . . . அந்நாளில் பலர் என்னிடம், ‘கர்த்தாவே, கர்த்தாவே, உங்கள் பெயரில் தீர்க்கதரிசனம் சொன்னோம் அல்லவா, உங்கள் பெயரில் பேய்களைத் துரத்தினோம் அல்லவா, உங்கள் பெயரில் எத்தனையோ அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?’ என்பார்கள்; ஆனால் நான் அவர்களைப் பார்த்து, ‘நீங்கள் யாரென்றே எனக்குத் தெரியாது! அக்கிரமக்காரர்களே, என்னைவிட்டுப் போய்விடுங்கள்’ என்று வெளிப்படையாகச் சொல்வேன்.”—மத்தேயு 7:15, 21-23.
ஆகவே, அற்புத சுகப்படுத்துதல்களாகத் தோன்றுபவை கடவுளுடைய சக்தியால் அல்லாமல் வேறு சக்தியாலும் செய்யப்படலாம் என்பது தெளிவாகத் தெரிகிறது. கடவுளுடைய பெயரில் அற்புதங்கள் செய்வதாகச் சொல்லிக்கொள்கிறவர்களிடம் நாம் ஏமாந்துபோகாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும்? கடவுளைப் பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ள வேண்டும்; கடவுள் கொடுத்திருக்கிற சிந்திக்கும் திறனைப் பயன்படுத்த வேண்டும்; கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறவர்கள் யாரென அடையாளங்காணக் கற்றுக்கொள்ள வேண்டும்.—மத்தேயு 7:16-19; யோவான் 17:3; ரோமர் 12:1, 2. (w09 5/1)
[அடிக்குறிப்பு]
a அப்போஸ்தலர்களின் மரணத்திற்குப் பிறகு, மற்றவர்களுக்கு அற்புத வரங்களைத் தருவது ஒரு முடிவுக்கு வந்தது; அந்த வரங்களைப் பெற்ற எல்லாரும் இறந்துவிட்டதால் கடவுளுடைய சக்தியின் அற்புத வரங்கள் ஒட்டுமொத்தமாக ஒரு முடிவுக்கு வந்தன.