கிறிஸ்தவக் குடும்பங்களே, இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்!
‘நீங்கள் [கிறிஸ்துவுடைய] அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றி வரும்படி அவர் உங்களுக்கு ஒரு முன்மாதிரியை வைத்துவிட்டுப் போனார்.’—1 பே. 2:21.
1. (அ) படைப்பு வேலையில் கடவுளுடைய மகன் என்ன பங்கு வகித்தார்? (ஆ) மனிதகுலத்தை இயேசு எந்தளவுக்கு நேசித்தார்?
கடவுள் வானத்தையும் பூமியையும் உண்டாக்கியபோது, அவருடைய முதல் மகன் ‘கைதேர்ந்த வேலையாளாக’ அவர் கூடவே இருந்தார். கடவுளாகிய யெகோவா சகலவித மிருகங்களையும் தாவரங்களையும் பூமியில் உருவாக்கியபோது அந்த மகன் அவரோடு ஒத்துழைத்தார்; அதோடு, அவரது சாயலிலும் ரூபத்திலும் படைக்கப்பட்ட மனிதர்களுக்காக ஒரு பூஞ்சோலையை உருவாக்கியபோதும் அந்த மகன் அவரோடு ஒத்துழைத்தார். அந்த மகன்தான் இயேசு எனப் பிற்பாடு அறியப்பட்டார்; அவர் மனிதகுலத்தை உயிருக்கு உயிராய் நேசித்தார். ‘மனிதர்கள்மீது அலாதிப் பிரியம் வைத்திருந்தார்.’—நீதி. 8:27-31; NW; ஆதி. 1:26, 27.
2. (அ) அபூரண மனிதர்களுக்கு உதவ யெகோவா எவற்றை அளித்தார்? (ஆ) வாழ்க்கையின் எந்த அம்சத்திற்கான வழிநடத்துதல் பைபிளில் இருக்கிறது?
2 முதல் மனித ஜோடி பாவம் செய்தபின், மனிதகுலத்தை அந்தப் பாவத்திலிருந்து மீட்க வேண்டுமென்பது யெகோவாவுடைய நோக்கத்தில் முக்கிய அம்சமானது. அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, கிறிஸ்துவை மீட்புபலியாய் யெகோவா அளித்தார். (ரோ. 5:8) அதோடு, வழிவழியாய் வந்த அபூரணத்தின் மத்தியிலும் மனிதர்கள் வாழ்க்கையில் வெற்றிகாண்பதற்காகத் தம்முடைய வார்த்தையாகிய பைபிளையும் அளித்தார். (சங். 119:105) அன்பில் பின்னிப்பிணைந்த சந்தோஷமான குடும்பங்களை உருவாக்குவதற்கான வழிநடத்துதல் அதில் இருக்கிறது. திருமணத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, கணவன் “தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்” என்று ஆதியாகமம் சொல்கிறது.—ஆதி. 2:24.
3. (அ) திருமணத்தைக் குறித்து இயேசு என்ன கற்பித்தார்? (ஆ) இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிச் சிந்திப்போம்?
3 இயேசு பூமியிலிருந்தபோது, திருமணம் நிரந்தர பந்தமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். திருமணத்தை முறிக்க அல்லது குடும்ப சந்தோஷத்தைக் குலைக்கக் காரணமான மனப்பான்மையையும் நடத்தையையும் தவிர்ப்பதற்கு உதவுகிற சில நியமங்களைக் கற்பித்தார். (மத். 5:27-37; 7:12) சந்தோஷமும் திருப்தியும் நிறைந்த வாழ்க்கை வாழ கணவன், மனைவி, பெற்றோர், பிள்ளைகள் என எல்லாருக்கும், அவருடைய போதனைகளும் முன்மாதிரியும் எப்படி உதவுமென இந்தக் கட்டுரையில் கலந்தாலோசிப்போம்.
கணவன்—தன் மனைவிக்கு மதிப்புக் கொடுக்கும் விஷயத்தில்
4. இயேசுவுக்கும் கிறிஸ்தவக் கணவர்களுக்கும் இடையே உள்ள ஓர் ஒப்புமை என்ன?
4 இயேசுவைக் கடவுள் சபைக்குத் தலையாக நியமித்திருப்பதுபோல் கணவனைக் குடும்பத்திற்குத் தலையாக நியமித்திருக்கிறார். அப்போஸ்தலன் பவுல் இப்படிச் சொன்னார்: “கிறிஸ்து சபைக்குத் தலையாக இருப்பதுபோல், கணவனும் மனைவிக்குத் தலையாக இருக்கிறான்; கிறிஸ்து தம் உடலாகிய சபையின் மீட்பராக இருக்கிறார். கணவர்களே, சபைக்காகக் கிறிஸ்து தம்மையே அர்ப்பணிக்கும் அளவுக்கு அதன்மீது அன்பு காட்டியதுபோல் நீங்களும் உங்கள் மனைவிமீது தொடர்ந்து அன்பு காட்டுங்கள்.” (எபே. 5:23, 25) இயேசு தம்முடைய சீடர்களை நடத்திய விதம், கிறிஸ்தவக் கணவர்கள் தங்களுடைய மனைவியை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு மாதிரியாக இருக்கிறது. கடவுளிடமிருந்து தாம் பெற்றிருந்த அதிகாரத்தை இயேசு பயன்படுத்திய விதங்கள் சிலவற்றை இப்போது நாம் சிந்திப்போம்.
5. சீடர்கள்மீது அதிகாரத்தைப் பயன்படுத்தும் விஷயத்தில் இயேசு என்ன முன்மாதிரி வைத்தார்?
5 இயேசு, ‘சாந்தமும் மனத்தாழ்மையும்’ உள்ளவராக இருந்தார். (மத். 11:29) தக்க நேரத்தில் தக்க நடவடிக்கை எடுப்பவராகவும் இருந்தார். ஒருபோதும் அவர் தம்முடைய பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கவில்லை. (மாற். 6:34; யோவா. 2:14-17) தம் சீடர்களுக்கு அன்போடு ஆலோசனை வழங்கினார்; தேவைப்பட்டபோது, மீண்டும் மீண்டும் ஆலோசனை வழங்கினார். (மத். 20:21-28; மாற். 9:33-37; லூக். 22:24-27) ஆனாலும், அவர்களைத் தரக்குறைவாக நடத்தவில்லை, மற்றவர்கள்முன் கூனிக்குறுக வைக்கவில்லை; ஒதுக்கிவிட்டதாக அவர்களை உணரச் செய்யவில்லை. தாம் கற்பித்தவற்றைக் கடைப்பிடிக்க முடியாதவர்கள் என்பதுபோல் அவர்களை நினைக்க வைக்கவில்லை. மாறாக, அவர்களைப் பாராட்டினார், ஊக்கப்படுத்தினார். (லூக். 10:17-21) இப்படி அவர் தம் சீடர்களை அன்போடும் கரிசனையோடும் நடத்தி, அவர்களுடைய நன்மதிப்பைச் சம்பாதித்தார்.
6. (அ) இயேசு தமது சீடர்களை நடத்திய விதத்திலிருந்து கணவர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆ) கணவர்கள் என்ன செய்யும்படி பேதுரு ஆலோசனை கூறினார்?
6 கிறிஸ்தவத் தலைமைத்துவம் என்பது சர்வாதிகாரிபோல் நடந்துகொள்வதை அல்ல, மதிப்பு மரியாதையையும் சுயநலமற்ற அன்பையும் காட்டுவதையே அர்த்தப்படுத்துகிறது; இதை இயேசுவின் முன்மாதிரியிலிருந்து கணவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். கணவர்கள் அவரைப் பின்பற்றி, தங்கள் மனைவியை அன்பாக நடத்தும்படியும், ‘அவளுக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பைக் கொடுக்கும்படியும்’ அப்போஸ்தலன் பேதுரு ஆலோசனை கூறினார். (1 பேதுரு 3:7-ஐ வாசியுங்கள்.) அப்படியானால், கடவுள் கொடுத்திருக்கிற அதிகாரத்தைப் பயன்படுத்துகிற அதே சமயத்தில் மனைவிக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பைக் கணவர்கள் எப்படிக் கொடுக்கலாம்?
7. கணவர்கள் தங்களுடைய மனைவிக்கு எவ்வாறு மதிப்புக் காட்டலாம்? விளக்குங்கள்.
7 ஒரு கணவர் தன் மனைவிக்கு எவ்விதத்தில் மதிப்புக் காட்டலாம்? அதற்கு ஒருவழி, குடும்பத்தில் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதற்குமுன் அவளுடைய கருத்துகளையும் உணர்வுகளையும் மனதில்கொள்வதாகும். வேறொரு இடத்திற்குக் குடிமாறிச் செல்வது, வேறொரு வேலை பார்ப்பது போன்ற பெரிய விஷயங்களானாலும் சரி, விடுமுறைக்கு எங்கே செல்வது, சிக்கனமாக எப்படிக் குடும்பம் நடத்துவது போன்ற சிறிய விஷயங்களானாலும் சரி, அவளுடைய கருத்துகளைக் கேட்டறிய வேண்டும். இப்படி எடுக்கப்படுகிற தீர்மானங்கள் முழு குடும்பத்தையுமே பாதிக்கும் என்பதால், மனைவியின் அபிப்பிராயத்தைக் கேட்பது நல்லது; அது அன்பான செயலும்கூட. அப்படிச் செய்யும்போது அவரால் எல்லாருடைய உணர்ச்சிகளுக்கும் மதிப்புக் கொடுத்து நியாயமாகத் தீர்மானமெடுக்க முடியும்; கணவர் இப்படியெல்லாம் செய்தால் அவருக்கு ஆதரவளிப்பது மனைவிக்குச் சுலபமாக இருக்கும். (நீதி. 15:22) மனைவிக்கு மதிப்புக் காட்டுகிற கிறிஸ்தவக் கணவர்கள் தங்களுடைய மனைவியின் அன்பையும், மதிப்பு மரியாதையையும் சம்பாதிப்பார்கள்; அதைவிட முக்கியமாக, யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெறுவார்கள்.—எபே. 5:28, 29.
மனைவி—தன் கணவனுக்கு ஆழ்ந்த மரியாதை காட்டும் விஷயத்தில்
8. ஏவாளின் கெட்ட முன்மாதிரியை இன்றைய மனைவிகள் ஏன் பின்பற்றக் கூடாது?
8 அதிகாரத்திற்கு அடிபணிந்து நடக்கும் விஷயத்தில் கிறிஸ்தவ மனைவிகளுக்கு இயேசு ஒரு பரிபூரண முன்மாதிரியாகத் திகழ்கிறார். அதிகாரத்தைக் குறித்து அவருக்கு இருந்த கண்ணோட்டத்திற்கும், முதல் மனிதனுடைய மனைவியாகிய ஏவாளுக்கு இருந்த மனப்பான்மைக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம்! இன்றைய மனைவிகள் பின்பற்றத்தக்க நல்ல முன்மாதிரியை அவள் வைக்கவில்லை. ஆதாமை அவளுக்குத் தலைவனாக யெகோவா நியமித்திருந்தார்; அவன் வழியாகவே அவர் கட்டளைகளைக் கொடுத்துவந்தார். ஆனாலும், தன் கணவனுடைய அதிகாரத்தை ஏவாள் மதிக்கவில்லை. அவன் தனக்குத் தெரிவித்திருந்த கட்டளையை மீறி நடந்தாள். (ஆதி. 2:16, 17; 3:3; 1 கொ. 11:3) அவள் ஏமாற்றப்பட்டது என்னவோ உண்மைதான்; என்றாலும், ‘கடவுள் அறிந்திருக்கிற’ விஷயத்தைச் சொல்வதாக உரிமைபாராட்டிய குரலை நம்புவதா வேண்டாமா என்று தன் கணவனிடம் அவள் கேட்டுத் தெரிந்துகொண்டிருக்க வேண்டும்! அதை விட்டுவிட்டு, அதிகப்பிரசங்கித்தனமாக நடந்துகொண்டாள்.—ஆதி. 3:5, 6; 1 தீ. 2:14.
9. அடிபணிந்து நடக்கிற விஷயத்தில் இயேசு என்ன முன்மாதிரி வைக்கிறார்?
9 அதற்கு நேர்மாறாக, இயேசு தம்முடைய தலையாக இருக்கிறவருக்கு அடிபணிந்து நடந்தார்; இந்த விஷயத்தில் பரிபூரண முன்மாதிரியை வைத்தார். அவர் காட்டிய மனப்பான்மையும் வாழ்ந்த விதமும், அவர் “கடவுளுடைய ஸ்தானத்தைப் பறித்துக்கொள்ளவோ அவருக்குச் சமமாயிருக்கவோ நினைக்கவில்லை” என்பதைக் காண்பித்தது. ஆம், “தமக்கிருந்த எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓர் அடிமையைப் போலானார்.” (பிலி. 2:5-7) இன்று, அவர் அரியணையில் அரசராக அமர்ந்திருக்கிறபோதிலும், அதே மனப்பான்மையைத்தான் காட்டுகிறார். எல்லாக் காரியங்களிலும் தம் தகப்பனுக்கு அடிபணிந்து நடக்கிறார், அவருடைய தலைமைத்துவத்தை ஆதரிக்கிறார்.—மத். 20:23; யோவா. 5:30; 1 கொ. 15:28.
10. தன் கணவனின் தலைமைத்துவத்திற்கு ஒரு மனைவி எப்படி ஆதரவளிக்கலாம்?
10 ஒரு கிறிஸ்தவ மனைவி இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, தன் கணவனுடைய தலைமைத்துவத்திற்கு ஆதரவளிப்பாள். (1 பேதுரு 2:21; 3:1, 2-ஐ வாசியுங்கள்.) எந்தச் சந்தர்ப்பத்தில் அவள் ஆதரவளிக்கலாம் என்பதற்கு ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். அவளுடைய மகன் ஏதோவொரு காரியத்தில் ஈடுபடுவதற்குமுன் அவளுடைய அனுமதியைக் கேட்கிறான். அந்தக் காரியத்தைப் பற்றித் தன் கணவனுடன் ஏற்கெனவே கலந்துபேசியிருக்கவில்லை என்பதால், தன் மகனிடம், “அப்பா என்ன சொன்னார்?” என்றே அவள் கேட்க வேண்டும். அவரிடம் அவன் அனுமதி கேட்டிருக்காவிட்டால், எதையும் தீர்மானிப்பதற்குமுன், அவள் தன் கணவனிடம் பேச வேண்டும். பிள்ளைகள் கண்ணெதிரே ஒரு கிறிஸ்தவ மனைவி தன் கணவனிடம் எதிர்த்துப் பேசவோ, மறுத்துப் பேசவோ கூடாது. ஏதோவொரு விஷயத்தில் தன் கணவனோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அதைக் குறித்து அவரிடம் தனியாகப் பேச வேண்டும்.—எபே. 6:4.
பெற்றோர்களுக்கு இயேசுவின் முன்மாதிரி
11. பெற்றோர்களுக்கு இயேசு என்ன முன்மாதிரி வைத்தார்?
11 இயேசுவுக்கு மனைவி மக்கள் இருக்கவில்லை, ஆனாலும், கிறிஸ்தவப் பெற்றோர்களுக்கு அவர் தலைசிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார். எப்படி? தம் சீடர்களுக்கு அன்போடும் பொறுமையோடும் கற்பித்தார்; தம் சொல்லிலும் செயலிலும் அவ்வாறு கற்பித்தார். அவர்களுக்கு ஒரு வேலையைக் கொடுக்கும்போது அதை முதலில் அவரே செய்துகாட்டினார். (லூக். 8:1) சீடர்களைக் குறித்து அவருக்கு இருந்த மனப்பான்மையும் அவர்களை அவர் நடத்திய விதமும், அவர்கள் ஒருவரையொருவர் எப்படி நடத்த வேண்டுமென்று கற்பித்தன.—யோவான் 13:14-17-ஐ வாசியுங்கள்.
12, 13. பிள்ளைகளைத் தேவபக்தியுள்ளவர்களாய் வளர்ப்பதற்குப் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?
12 பொதுவாக, தங்கள் பெற்றோர் என்ன செய்கிறார்களோ, அது நல்லதோ கெட்டதோ, அதைத்தான் பிள்ளைகளும் செய்வார்கள். ஆகையால் பெற்றோர்களே, உங்களை நீங்களே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘டிவி பார்ப்பதற்கும், பொழுதுபோக்கில் ஈடுபடுவதற்கும் நாம் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம்? ஆனால், பைபிள் படிப்பதற்கும் வெளி ஊழியத்தில் ஈடுபடுவதற்கும் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம்? இதைக் கவனிக்கிற பிள்ளைகள் என்ன முடிவுக்கு வருவார்கள்? குடும்பமாக எதற்கு முதலிடம் கொடுக்கிறோம்? உண்மை வணக்கத்திற்கு முதலிடம் கொடுப்பதில் பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருக்கிறோமா?’ பெற்றோர்கள் கடவுளுடைய சட்டங்களை முதலாவது தங்கள் இருதயத்தில் பதித்துக்கொண்டால்தான் பிள்ளைகளைத் தேவபக்தியுள்ளவர்களாய் வளர்க்க முடியும்.—உபா. 6:6.
13 அன்றாடக் காரியங்களில் பைபிள் நியமங்களைக் கடைப்பிடிப்பதற்காகப் பெற்றோர் எடுக்கிற கடுமையான முயற்சிகள் பிள்ளைகளுடைய கண்களில் படாமல்போகாது. பெற்றோர் சொல்லுக்கு மதிப்புக் கொடுக்க அவர்கள் தூண்டப்படுவார்கள். ஆனால், சொல்வது ஒன்று செய்வது ஒன்று என இருந்தால், பைபிள் நியமங்களெல்லாம் அந்தளவு முக்கியமல்ல என்றும், அவை நடைமுறைக்கு ஒத்துவராது என்றும் அவர்கள் முடிவு செய்துவிடுவார்கள். இதன் விளைவாக, உலக அழுத்தங்களை எதிர்ப்படும்போது பெரும்பாலும் துவண்டுவிடுவார்கள்.
14, 15. பிள்ளைகள் மனதில் பெற்றோர் என்ன மனப்பான்மையை வளர்க்க வேண்டும், இதை அவர்கள் செய்வதற்கு ஒரு வழி என்ன?
14 பிள்ளைகளுக்கு உணவு, உடை, இருப்பிடம் முதலியவற்றை அளித்துப் பராமரித்தால் மட்டுமே போதாது என்பதைக் கிறிஸ்தவப் பெற்றோர் அறிந்திருக்கிறார்கள். ஆகையால், பொருட்செல்வங்களை அடைவதற்கான இலக்குகளை மட்டும் நாடும்படி அவர்களுக்குக் கற்பிப்பது ரொம்பவே ஞானமற்ற செயலாகும். (பிர. 7:12) ஆன்மீகக் காரியங்களுக்கு முதலிடம் கொடுக்க இயேசு தமது சீடர்களுக்குக் கற்பித்தார். (மத். 6:33) ஆகையால் இயேசுவைப் போலவே, ஆன்மீக இலக்குகளை நாடுவதற்கான ஆவலைப் பிள்ளைகளுடைய மனதில் வளர்க்க கிறிஸ்தவப் பெற்றோர்களும் கடுமையாக முயற்சி செய்ய வேண்டும்.
15 இதைச் செய்வதற்கு ஒரு வழி, முழுநேர ஊழியர்களுடைய தோழமையைத் தங்கள் பிள்ளைகள் அனுபவிப்பதற்கு முடிந்தளவு எல்லா ஏற்பாடுகளையும் செய்வதாகும். பயனியர்களோடு, அல்லது வட்டாரக் கண்காணி மற்றும் அவரது மனைவியோடு பழகுவது பருவவயதுப் பிள்ளைகளுக்கு எவ்வளவாய் ஊக்கமளிக்கும்! வீட்டிற்கு வருகிற மிஷனரிகள், பெத்தேல் ஊழியர்கள், சர்வதேசக் கட்டுமானப் பணியாளர்கள் ஆகியோர் யெகோவாவின் சேவையில் அனுபவிக்கும் சந்தோஷங்களை உற்சாகமாய் அவர்களிடம் சொல்வார்கள். அப்படிச் சொல்வதற்குச் சுவாரஸ்யமான அனுபவங்கள் கண்டிப்பாகவே அவர்களிடம் இருக்கும். அவர்களது சுயநலமற்ற சேவை, உங்களுடைய பிள்ளைகள் ஞானமான தீர்மானங்கள் எடுப்பதற்கும், ஆன்மீக இலக்குகளை வைப்பதற்கும் பெருமளவு கைகொடுக்கும்; அதோடு, தங்கள் சொந்தக் காலில் நின்று முழுநேர ஊழியம் செய்வதற்கேற்ற கல்வியைத் தேர்ந்தெடுப்பதற்குக் கைகொடுக்கும்.
பிள்ளைகளே, இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்ற எது உதவும்?
16. தமது பூமிக்குரிய பெற்றோருக்கும் சரி, பரலோகத் தகப்பனுக்கும் சரி, இயேசு எப்படி மதிப்புக் காட்டினார்?
16 பிள்ளைகளே, உங்களுக்கும்கூட இயேசு மிகச் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார். யோசேப்பு மற்றும் மரியாளின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்த அவர், அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடந்துவந்தார். (லூக்கா 2:51-ஐ வாசியுங்கள்.) அவர்கள் அபூரணர்களாய் இருந்தபோதிலும், தம்மை வளர்க்கிற பொறுப்பைக் கடவுள் அவர்களுக்குக் கொடுத்திருந்தார் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. ஆகவே, அவர்களுக்கு மதிப்புக் காட்ட வேண்டுமென்று அறிந்திருந்தார். (உபா. 5:16; மத். 15:4) வளர்ந்து ஆளான பிறகும்கூட, தம் பரலோகத் தகப்பனுக்குப் பிரியமான காரியங்களையே செய்துவந்தார். அப்படிச் செய்வதற்கு, சோதனைகளை அவர் எதிர்த்துநிற்க வேண்டியிருந்தது. (மத். 4:1-10) இளைஞர்களே, சில சமயம் உங்கள் கீழ்ப்படிதலுக்குச் சோதனைகள் வரலாம். அத்தகைய சந்தர்ப்பங்களில், இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்ற எது உங்களுக்கு உதவும்?
17, 18. (அ) பள்ளியில் எப்படிப்பட்ட பிரச்சினைகளை இளைஞர்கள் எதிர்ப்படுகிறார்கள்? (ஆ) எதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டால், இளைஞர்கள் சோதனைகளை எதிர்த்துநிற்க முடியும்?
17 ஒருவேளை, உங்களுடைய சக மாணவர்கள் பெரும்பாலோர் பைபிள் நெறிமுறைகளுக்குத் துளியும் மதிப்புக் காட்டாதவர்களாக இருக்கலாம். தவறான காரியங்களில் உங்களை ஈடுபட வைப்பதற்காக முயற்சி செய்யலாம்; நீங்கள் மறுப்புத் தெரிவிக்கும்போது உங்களைக் கேலிகிண்டல் செய்யலாம். அப்படித் தவறான காரியங்களில் ஈடுபட மறுத்ததற்காக உங்களுக்கு ஏதாவது பட்டப்பெயர் வைத்திருக்கிறார்களா? அதுபோன்ற சந்தர்ப்பங்களில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? பயந்துபோய், அவர்கள் சொல்வதைச் செய்தீர்களென்றால், உங்கள் பெற்றோரையும் யெகோவாவையும் வேதனைப்படுத்துகிறவர்களாய் இருப்பீர்கள். இப்படி, சக மாணவர்கள் போகிற போக்கிலேயே போனால் உங்கள் நிலைமை என்னவாகுமென நினைத்துப் பாருங்கள். ஒருவேளை பயனியராகவோ, உதவி ஊழியராகவோ, பெத்தேல் ஊழியராகவோ சேவை செய்ய வேண்டுமென உங்களுக்கு இலக்கு இருக்கிறதென்று வைத்துக்கொள்ளுங்கள், அல்லது பிரஸ்தாபிகள் அதிகம் தேவைப்படுகிற இடங்களுக்குச் செல்ல இலக்கு இருக்கிறதென்று வைத்துக்கொள்ளுங்கள். கெட்ட நண்பர்களோடு சகவாசம் வைத்திருந்தால், இப்படிப்பட்ட இலக்குகளை உங்களால் எட்ட முடியுமா?
18 கிறிஸ்தவச் சபையிலுள்ள இளைஞர்களே, உங்கள் விசுவாசத்தைச் சோதிக்கிற சூழ்நிலைகளை எதிர்ப்படுகிறீர்களா? அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் எப்படி நடந்துகொள்கிறீர்கள்? உங்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் இயேசுவைச் சற்று நினைத்துப் பாருங்கள். அவர் சோதனைகளுக்கு இணங்கிவிடவில்லை, சரியென்று தெரிந்த காரியங்களில் உறுதியாக நின்றார். இதை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக்கொண்டால், சக மாணவர்களிடமிருந்து தொல்லையை எதிர்ப்படும்போது, ‘தெரிந்தே தப்பு செய்ய மாட்டேன்’ என்று அவர்களிடம் அழுத்தம்திருத்தமாகச் சொல்வீர்கள். ஆகவே, இயேசுவைப் போல, காலமெல்லாம் யெகோவாவுக்குச் சந்தோஷமாகச் சேவை செய்வதிலும், அவருக்குக் கீழ்ப்படிதலைக் காட்டுவதிலுமே குறியாயிருங்கள்.—எபி. 12:2.
சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு. . .
19. சந்தோஷமான வாழ்க்கைக்கு என்ன வழி?
19 மனிதர்கள் மிகச் சிறப்பாக வாழ வேண்டும் என்றே நம் கடவுளாகிய யெகோவாவும் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவும் விரும்புகிறார்கள். நாம் அபூரணர்களாக இருந்தாலும் நம்மால் ஓரளவு சந்தோஷமாக வாழ முடியும். (ஏசா. 48:17, 18; மத். 5:3) சந்தோஷமான வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்கிற சத்தியங்களை இயேசு தம் சீடர்களுக்குக் கற்பித்தார்; ஆனால், அத்துடன் அவர் நிறுத்திக்கொள்ளவில்லை; மிகச் சிறப்பான வாழ்க்கை வாழ்வது எப்படியென்றும் கற்பித்தார். கற்பித்ததோடு, தமது மனப்பான்மையிலும் வாழ்க்கை முறையிலும் சமநிலை காட்டி முன்மாதிரி வைத்தார். அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றினால் நாம் ஒவ்வொருவருமே நன்மை அடையலாம், குடும்பத்தில் நம்முடைய பங்கு என்னவாக இருந்தாலும் சரி! ஆகையால் கணவர்களே, மனைவிகளே, பெற்றோர்களே, பிள்ளைகளே, இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்! இயேசு கற்பித்தவற்றைக் கடைப்பிடிப்பதும், அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுவதுமே சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு மிகச் சிறந்த வழியாகும்.
உங்கள் பதில்?
• கடவுள் கொடுத்திருக்கும் அதிகாரத்தைக் கணவர்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?
• இயேசுவின் முன்மாதிரியை ஒரு மனைவி எப்படிப் பின்பற்றலாம்?
• இயேசு தம் சீடர்களை நடத்திய விதத்திலிருந்து பெற்றோர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
• இயேசுவின் முன்மாதிரியிலிருந்து இளைஞர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
[பக்கம் 8-ன் படம்]
குடும்பத்தில் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதற்குமுன் அன்பான கணவன் என்ன செய்வார்?
[பக்கம் 9-ன் படம்]
என்ன சூழ்நிலையில் கணவனின் தலைமைத்துவத்திற்கு மனைவி ஆதரவளிக்கலாம்?
[பக்கம் 10-ன் படம்]
பெற்றோரின் நல்ல பழக்கவழக்கங்களைப் பிள்ளைகள் பின்பற்றுகிறார்கள்