பூமியில் முடிவில்லா வாழ்வு கடவுள் தந்துள்ள நம்பிக்கை
‘நம்பிக்கையோடே அந்தச் சிருஷ்டியானது . . . மாயைக்குக் கீழ்ப்படுத்தப்பட்டிருக்கிறது.’ —ரோ. 8:20, 21, BSI.
1, 2. (அ) முடிவில்லா வாழ்வு பூமியில் கிடைக்குமென்ற நம்பிக்கை நமக்கிருப்பது ஏன் முக்கியமானது? (ஆ) அநேகர் ஏன் இதை நம்புவதில்லை?
யாருமே இனி வயதாகி சாக மாட்டார்கள், என்றென்றும் இந்தப் பூமியில் வாழப்போகிறார்கள் என்ற விஷயத்தை முதன்முதலாகத் தெரிந்துகொண்டபோது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்? ஒருவேளை சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போயிருப்பீர்கள். (யோவா. 17:3; வெளி. 21:3, 4) பைபிளில் கொடுக்கப்பட்ட அந்த நம்பிக்கையைப் பற்றி மற்றவர்களிடம் ஆர்வம்பொங்கச் சொல்லியிருப்பீர்கள். உண்மையில், மனிதர்களுக்கு முடிவில்லா வாழ்வு கிடைக்குமென்ற நம்பிக்கை நாம் பிரசங்கிக்கிற நற்செய்தியின் ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது. வாழ்க்கையின்மீது நமக்குள்ள கண்ணோட்டத்தையே அது மாற்றியமைக்கிறது.
2 முடிவில்லா வாழ்வு பூமியில் கிடைக்குமென்ற நம்பிக்கையைப் பெரும்பாலான கிறிஸ்தவ சர்ச்சுகள் புறக்கணித்திருக்கின்றன. ஆத்துமா சாகும் என்று பைபிள் கற்பிக்கிறது; ஆனால், அது சாகாதென்றும், மனிதன் இறந்த பின்பு ஆவியுலகத்தில் வாழ்கிறான் என்றும் அந்த சர்ச்சுகள் கற்பிக்கின்றன. (எசே. 18:20) அதனால்தான், முடிவில்லா வாழ்வு பூமியில் கிடைக்குமென்று அநேகர் நம்புவதில்லை. எனவே, நம் மனதில் பின்வரும் கேள்விகள் எழலாம்: பைபிள் உண்மையிலேயே இந்த நம்பிக்கையை ஆதரிக்கிறதா? அப்படியென்றால், கடவுள் இதைப் பற்றி முதன்முதலாக மனிதர்களிடம் எப்போது சொன்னார்?
‘நம்பிக்கையோடே . . . மாயைக்குக் கீழ்ப்படுத்தப்பட்டிருத்தல்’
3. மனிதர்களை யெகோவா என்ன நோக்கத்தோடு படைத்தார் என்பது மனித சரித்திரத்தின் ஆரம்பத்திலேயே எப்படி வெளிப்படுத்தப்பட்டது?
3 மனிதர்களை என்ன நோக்கத்தோடு யெகோவா படைத்தார் என்பது மனித சரித்திரத்தின் ஆரம்பத்திலேயே வெளிப்படுத்தப்பட்டது. ஆதாம் கீழ்ப்பட்டிருந்தால் அவன் என்றென்றும் உயிர்வாழ்வான் என்று கடவுள் தெளிவாகத் தெரிவித்தார். (ஆதி. 2:9, 17; 3:22) பரிபூரண மனிதனாகிய ஆதாம் அபூரண மனிதனாய் ஆகிவிட்டதைப் பற்றி அவனுடைய சந்ததியில் அடுத்தடுத்து வந்தவர்கள் நிச்சயம் அறிந்திருப்பார்கள்; அதற்கான சில அத்தாட்சிகளையும் அவர்கள் கண்டிருப்பார்கள். அதாவது, ஏதேன் தோட்டத்தின் நுழைவாசல் அடைக்கப்பட்டிருப்பதையும், மனிதர்கள் வயதாகி செத்துப்போவதையும் கண்டிருப்பார்கள். (ஆதி. 3:23, 24) வருடங்கள் செல்லச் செல்ல, மனிதனின் வாழ்நாள் காலம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்தது. ஆதாம் 930 வருடம் வாழ்ந்தான். பெருவெள்ளத்திலிருந்து தப்பிப்பிழைத்த சேம் 600 வருடம் உயிர்வாழ்ந்தார். அவருடைய மகன் அர்பக்சாத் 438 வருடம் வாழ்ந்தார். ஆபிரகாமின் தகப்பன் தேராகு 205 வருடம் வாழ்ந்தார். ஆபிரகாம் 175 வருடம் உயிரோடு இருந்தார், அவருடைய மகன் ஈசாக்கு 180 வருடமும், பேரன் யாக்கோபு 147 வருடமும் உயிர்வாழ்ந்தார்கள். (ஆதி. 5:5; 11:10-13, 32; 25:7; 35:28; 47:28) இப்படி அவர்களுடைய வாழ்நாள் குறைந்து வந்ததால் முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்கான வாய்ப்பு இனி தங்களுக்குக் கிடைக்காது என்ற முடிவுக்கு அநேகர் வந்திருப்பார்கள். ஆனால், அது மீண்டும் கிடைக்குமென்று நம்ப அவர்களுக்குக் காரணம் இருந்ததா?
4. ஆதாம் இழந்த ஆசீர்வாதங்களைக் கடவுள் மீண்டும் தருவார் என்பதை உண்மை ஊழியர்கள் எதை வைத்து நம்பினார்கள்?
4 ‘நம்பிக்கையோடே அந்த [மனித] சிருஷ்டியானது . . . மாயைக்குக் கீழ்ப்படுத்தப்பட்டிருக்கிறது.’ (ரோ. 8:20, 21, BSI) எந்த நம்பிக்கையோடே? ஒரு “வித்து,” அதாவது ஒரு சந்ததி, தோன்றி ‘சர்ப்பத்தின் தலையை நசுக்கும்’ என்ற நம்பிக்கையை பைபிளிலுள்ள முதல் தீர்க்கதரிசனம் குறிப்பிட்டது. (ஆதியாகமம் 3:1-5, 15-ஐ வாசியுங்கள்.) அந்தச் சந்ததி பற்றிய வாக்குறுதியை அடிப்படையாக வைத்தே மனிதகுலத்திற்கான தம் நோக்கத்தைக் கடவுள் எப்படியாவது நிறைவேற்றுவாரென உண்மையுள்ளோர் நம்பினார்கள். ஆதாம் இழந்த ஆசீர்வாதங்களைக் கடவுள் மீண்டும் தருவார் என இந்த வாக்குறுதியை வைத்துத்தான் ஆபேல், நோவா போன்றோர் நம்பினார்கள். ‘வித்தின் குதிங்கால் நசுக்கப்படுவதில்’ இரத்தம் சிந்துவது உட்பட்டிருக்கும் என்பதை அவர்கள் புரிந்திருப்பார்கள்.—ஆதி. 4:4; 8:20; எபி. 11:4.
5. ஆபிரகாமுக்கு உயிர்த்தெழுதலில் நம்பிக்கை இருந்ததை எது காட்டுகிறது?
5 இப்போது ஆபிரகாமைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். அவர் சோதிக்கப்பட்டபோது தன் ஒரே மகனான “ஈசாக்கைப் பலி செலுத்தும் அளவுக்குச் சென்றார்.” (எபி. 11:17) அவர் ஏன் தன் ஒரே மகனைப் பலியாகக் கொடுக்க முன்வந்தார்? (எபிரெயர் 11:19-ஐ வாசியுங்கள்.) ஏனென்றால், அவருக்கு உயிர்த்தெழுதலில் நம்பிக்கை இருந்தது! அவ்வாறு நம்புவதற்குக் காரணங்களும் இருந்தன. வயதான காலத்தில் ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் பிள்ளை பிறப்பிக்கிற சக்தியை யெகோவா புதுப்பித்திருந்தார். (ஆதி. 18:10-14; 21:1-3; ரோ. 4:19-21) அதோடு, ‘ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்’ என்று ஆபிரகாமுக்கு யெகோவா வாக்குறுதியும் அளித்திருந்தார். (ஆதி. 21:12) எனவே, கடவுள் நிச்சயம் ஈசாக்கை உயிர்த்தெழுப்புவார் என்று நம்ப ஆபிரகாமுக்குப் பலமான காரணங்கள் இருந்தன.
6, 7. (அ) ஆபிரகாமோடு யெகோவா என்ன ஒப்பந்தத்தைச் செய்தார்? (ஆ) ஆபிரகாமுக்கு யெகோவா கொடுத்த வாக்குறுதி மனிதகுலத்திற்கு என்ன நம்பிக்கையை அளித்தது?
6 ஆபிரகாமுக்கு அசைக்க முடியாத விசுவாசம் இருந்ததால்தான் ‘சந்ததியை’ குறித்த ஒப்பந்தத்தை யெகோவா அவரோடு செய்தார். (ஆதியாகமம் 22:18-ஐ வாசியுங்கள்.) அந்த ‘சந்ததியின்’ முக்கியப் பாகம் இயேசு கிறிஸ்துவே. (கலா. 3:16) ஆபிரகாமிடம் யெகோவா இவ்வாறு வாக்குறுதி அளித்தார்: “உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன்.” (ஆதி. 22:17) அதன் எண்ணிக்கை ஆபிரகாமுக்குத் தெரிந்திருக்கவில்லை. என்றாலும், பிற்பாடு அந்த எண்ணிக்கை வெளிப்படுத்தப்பட்டது. இயேசு கிறிஸ்துவும் அவரோடு ஆட்சி செய்யப்போகிற 1,44,000 பேரும் அந்த ‘சந்ததியின்’ பாகமாக இருக்கிறார்கள். (கலா. 3:29; வெளி. 7:4; 14:1) அந்த மேசியானிய அரசாங்கத்தின் மூலமாகவே “பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்.”
7 தன்னிடம் யெகோவா செய்த ஒப்பந்தத்தின் முழு அர்த்தத்தையும் ஆபிரகாம் புரிந்திருக்க வாய்ப்பில்லை. என்றாலும், “உறுதியான அஸ்திவாரங்கள் உள்ள நகரத்திற்காக அவர் காத்திருந்தார்” என பைபிள் சொல்கிறது. (எபி. 11:10) அந்த நகரம் கடவுளுடைய அரசாங்கமே. இந்த அரசாங்கத்தின் மூலம் பூமியில் கிடைக்கப்போகிற ஆசீர்வாதங்களையும் முடிவில்லா வாழ்வையும் பெறுவதற்கு, ஆபிரகாம் மீண்டும் உயிர்வாழ வேண்டும். இது உயிர்த்தெழுதலின் மூலமே சாத்தியம்! அவ்வாறே, அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பவர்களும் சரி உயிர்த்தெழுப்பப்படுகிறவர்களும் சரி, முடிவில்லா வாழ்வை அனுபவிக்க முடியும்.—வெளி. 7:9, 14; 20:12-14.
‘கடவுளுடைய சக்தி என்னைப் பேசும்படி உந்துவிக்கிறது’
8, 9. யோபு புத்தகம் ஒரேவொரு மனிதன் அனுபவித்த சோதனைகளைப் பற்றி மட்டுமே விளக்குகிற புத்தகமல்ல என நாம் ஏன் சொல்லலாம்?
8 ஆபிரகாமின் கொள்ளுப் பேரனான யோசேப்பு வாழ்ந்த காலத்திற்கும், தீர்க்கதரிசியான மோசே வாழ்ந்த காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் யோபு என்பவர் வாழ்ந்துவந்தார். பைபிளிலுள்ள யோபு என்ற புத்தகத்தை மோசே எழுதியதாகத் தெரிகிறது; அந்தப் புத்தகம், யோபு ஏன் கஷ்டங்களை அனுபவித்தார் என்பதையும், பிறகு அவருக்கு என்ன நடந்தது என்பதையும் விளக்குகிறது. என்றாலும், ஒரேவொரு மனிதன் அனுபவித்த சோதனைகளைப் பற்றி மட்டுமே அது விளக்குவதில்லை; சர்வலோகத்திலுள்ள அனைவரையும் பாதிக்கிற விஷயங்களைப் பற்றி அது விளக்குகிறது. யெகோவா எவ்வாறு நீதியான விதத்தில் ஆட்சி செலுத்துகிறார் என்பதை ஆழமாகப் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவுகிறது; அதோடு, கடவுளுடைய பூமிக்குரிய ஊழியர்கள் அனைவருடைய உத்தமத்தன்மையும் எதிர்கால வாழ்க்கையும் ஏதேனில் எழுந்த விவாதத்தில் உட்பட்டுள்ளன என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த விவாதத்தைக் குறித்து யோபுவுக்குத் தெரிந்திருக்கவில்லை; என்றாலும், அவர் உத்தமத்திலிருந்து விலகிவிட்டதாக அவருடைய மூன்று நண்பர்களும் அவரை நினைக்க வைக்க முயன்றபோது, அதற்கு அவர் துளியும் இடங்கொடுக்கவில்லை. (யோபு 27:5) இந்த விஷயம் நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்த வேண்டும்; அதோடு, நம்மாலும் உத்தமத்தைக் காத்துக்கொண்டு யெகோவாவின் பேரரசாட்சியை ஆதரிக்க முடியும் என்ற நம்பிக்கையை அளிக்க வேண்டும்.
9 யோபுவுக்கு உதவி செய்வதாக நினைத்து உபத்திரவம் கொடுத்த மூன்று நண்பர்களும் பேசி முடித்த பிறகு ‘பரகெயேலின் மகன் எலிகூ எனும் பூசியன் பேச ஆரம்பித்தார்.’ எலிகூவைப் பேச வைத்தது எது? ‘வார்த்தைகள் எனக்குள் நிறைந்திருக்கின்றன; கடவுளுடைய சக்தி என்னைப் பேசும்படி உந்துவிக்கிறது’ என்று அவரே சொன்னார். (யோபு 32:5, 6, 18, NW) கடவுளுடைய சக்தியினால் தூண்டப்பட்டு எலிகூ சொன்ன விஷயங்கள், பிற்பாடு யோபுவின் வாழ்க்கையில் நிறைவேறியபோதிலும், அவருடைய வார்த்தைகள் மற்றவர்களுக்கும் அர்த்தம் பொதிந்தவையாக இருக்கின்றன. உத்தமத்தைக் காத்துக்கொள்கிற அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கின்றன.
10. யெகோவா, சிலசமயம் ஒருவரிடம் சொல்கிற செய்தி முழு மனிதகுலத்திற்குமே பொருந்துவதாக இருக்கும் என்பதை எது காட்டுகிறது?
10 யெகோவா, சிலசமயம் ஒருவரிடம் சொல்கிற செய்தி முழு மனிதகுலத்திற்குமே பொருந்துவதாக இருக்கும். இதைப் புரிந்துகொள்ள தானியேல் புத்தகத்திலுள்ள ஒரு தீர்க்கதரிசனம் நமக்கு உதவுகிறது. பாபிலோனிய ராஜாவான நேபுகாத்நேச்சார் ஒரு பெரிய மரம் வெட்டப்படுவதைப் போல் கனவு காண்டார். (தானி. 4:10-27) அந்தக் கனவு நேபுகாத்நேச்சாரின் விஷயத்தில் நிறைவேறியபோதிலும், அது மிகப் பெரிய அளவிலும் நிறைவேறவிருந்தது. அதாவது, தாவீது ராஜாவின் வம்சத்தில் வரும் ஒருவரால் இந்தப் பூமியில் மீண்டும் கடவுளுடைய ஆட்சி நிலைநாட்டப்படவிருந்தது; பொ.ச.மு. 607-லிருந்து 2,520 வருடங்கள் கடந்த பிறகு அது நிலைநாட்டப்படவிருந்தது.a பூமியின்மீது ஆட்சி செலுத்த கடவுளுக்கு இருக்கிற அரசதிகாரம், 1914-ல் இயேசு கிறிஸ்து பரலோக ராஜாவாக ஆனபோது ஒரு புதிய கோணத்தில் செயல்பட ஆரம்பித்தது. கீழ்ப்படிதலுள்ள மனிதர்களுடைய நம்பிக்கைகளையெல்லாம் கடவுளுடைய அரசாங்கம் விரைவில் நிறைவேற்றப்போவதைச் சற்றுக் கற்பனை செய்து பாருங்கள்!
“அவன் படுகுழிக்குப் போய்விடாதபடி காப்பாற்று”
11. எலிகூவின் வார்த்தைகள் கடவுளைக் குறித்து எதைச் சுட்டிக்காட்டின?
11 யோபுவுக்கு எலிகூ பதில் சொன்ன சமயத்தில் ‘ஒரு தூதரை, ஒரு பிரதிநிதியை,’ பற்றிக் குறிப்பிட்டார்; ‘மனிதன் குற்றமற்றவனாக இருப்பது எப்படியெனத் தெரியப்படுத்துகிற அந்தத் தூதர் ஆயிரத்தில் ஒருவரானவர்.’ ‘மனிதனிடத்தில் பிரியமாயிருக்கும்படி அந்தத் தூதர் கடவுளிடம் மன்றாடினால்’ என்ன நடக்கும்? எலிகூ அதற்குப் பதில் சொல்கிறார்: “அப்போது, அவர் [கடவுள்] மனிதனிடத்தில் தயவுகாட்டி, ‘அவன் படுகுழிக்குப் போய்விடாதபடி காப்பாற்று! அவனுக்குரிய மீட்புவிலை எனக்குக் கிடைத்துவிட்டது! அவனுடைய உடல் இளமையில் இருந்ததைவிட இளமையாக மாறட்டும், இளமைத் துடிப்புமிக்க நாட்களுக்கு அவன் திரும்பட்டும்’ என்று சொல்வார்.” (யோபு 33:23-26, NW) மனந்திரும்புகிற மனிதர்களின் சார்பாக ஒரு ‘மீட்புவிலையை’ ஏற்றுக்கொள்ள கடவுள் மனமுள்ளவராய் இருக்கிறார் என்பதையே இந்த வார்த்தைகள் சுட்டிக்காட்டின.—யோபு 33:24, NW.
12. எலிகூவின் வார்த்தைகள் மனிதகுலத்திற்கு என்ன நம்பிக்கையை அளிக்கின்றன?
12 தீர்க்கதரிசிகள் தாங்கள் எழுதிய எல்லா விஷயங்களின் அர்த்தத்தையும் எப்படி முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லையோ, அதுபோலவே எலிகூவும் மீட்புவிலையின் அர்த்தத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் இருந்திருக்கலாம். (தானி. 12:8; 1 பே. 1:10-12) இருந்தாலும், கடவுள் என்றாவது ஒருநாள் மீட்புவிலையை ஏற்றுக்கொண்டு மனிதகுலத்தை முதுமையிலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவிப்பார் என்ற நம்பிக்கையை எலிகூவின் வார்த்தைகள் வெளிக்காட்டின. ஆம், முடிவில்லா வாழ்வு என்ற அருமையான எதிர்பார்ப்பை அளித்தன. இவற்றோடுகூட, உயிர்த்தெழுதல் நடைபெறுமென்றும் யோபு புத்தகம் காட்டுகிறது.—யோபு 14:14, 15.
13. எலிகூவின் வார்த்தைகள் கிறிஸ்தவர்களுக்கு எந்த விதத்தில் அர்த்தம் பொதிந்தவையாக இருக்கின்றன?
13 இந்தப் பொல்லாத உலகத்தின் அழிவிலிருந்து தப்பிப்பிழைக்கும் நம்பிக்கையுடைய லட்சக்கணக்கான கிறிஸ்தவர்களுக்கும்கூட எலிகூவின் வார்த்தைகள் அர்த்தம் பொதிந்தவையாக இருக்கின்றன. அப்படித் தப்பிப்பிழைப்பவர்களில் வயதானவர்கள் மீண்டும் இளமைத் துடிப்புமிக்கவர்களாக ஆவார்கள். (வெளி. 7:9, 10, 14-17) உயிர்த்தெழுந்து வருபவர்கள் வாலிப வயதில் எப்படி இருந்தார்களோ அதுபோலவே இருப்பதைப் பார்க்கப்போகிற நம்பிக்கை, உண்மையுள்ள ஊழியர்களுக்கு அளவில்லா ஆனந்தத்தை அளித்துவருகிறது. ஆனாலும், கிறிஸ்துவின் மீட்புபலியில் விசுவாசம் வைப்பதன் மூலமே பரலோக நம்பிக்கை உள்ளவர்களுக்குப் பரலோகத்தில் அழிவில்லா வாழ்வும், ‘வேறே ஆடுகளுக்கு’ பூமியில் முடிவில்லா வாழ்வும் கிடைக்கும்.—யோவா. 10:16; ரோ. 6:23.
பூமியிலிராதபடி மரணம் ஜெயமாக விழுங்கப்படும்
14. இஸ்ரவேலர்கள் முடிவில்லா வாழ்வுக்கான நம்பிக்கையைப் பெறுவதற்குத் திருச்சட்டத்தைவிட மேலான ஒன்று தேவைப்பட்டது என்பதை எது காட்டுகிறது?
14 ஆபிரகாமின் சந்ததியினர், யெகோவாவோடு ஓர் ஒப்பந்த உறவுக்குள் வந்தபோது ஒரு தனி தேசமாக ஆனார்கள். அந்தச் சமயத்தில் யெகோவா இவ்வாறு சொன்னார்: ‘என் நியமங்களையும் ஆணைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றுக்கேற்பச் செயல்படுவோர் அவற்றால் வாழ்வு பெறுவர்.’ (லேவி. 18:5, பொது மொழிபெயர்ப்பு.) என்றாலும், திருச்சட்டத்தின் பரிபூரண நெறிகளுக்கு இசைவாக இஸ்ரவேலர்களால் வாழ முடியாமற்போனதால், அந்தச் சட்டத்தாலேயே அவர்கள் கண்டனம் செய்யப்பட்டார்கள்; அந்தக் கண்டனத் தீர்ப்பிலிருந்து அவர்கள் விடுதலை பெற அதைவிட மேலான ஒன்று தேவைப்பட்டது.—கலாத்தியர் 3:13-ஐ வாசியுங்கள்.
15. என்ன எதிர்கால ஆசீர்வாதத்தைக் குறித்து எழுதும்படி தாவீது தூண்டுதலைப் பெற்றார்?
15 மோசே இறந்தபின், பைபிளின் மற்ற எழுத்தாளர்களுக்கும் யெகோவா தூண்டுதலை அளித்து, முடிவில்லா வாழ்வுக்கான நம்பிக்கையைப் பற்றி எழுதும்படி செய்தார். (சங். 21:4; 37:29) உதாரணத்திற்கு, சங்கீதக்காரனாகிய தாவீது சீயோனில் வசித்த உண்மை வணக்கத்தாருக்கு இடையே இருந்த ஒற்றுமையைக் குறித்து இயற்றிய ஒரு சங்கீதத்தின் முடிவில் இவ்வாறு சொன்னார்: ‘நித்தியகால வாழ்வு எனும் ஆசீர்வாதம் அங்கே கிடைப்பதற்கு யெகோவா கட்டளையிட்டார்.’—சங். 133:3, NW.
16. சகல ஜனங்களுக்கும் எப்படிப்பட்ட எதிர்காலம் கிடைக்குமென்று ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் யெகோவா வாக்குறுதி அளித்தார்?
16 பூமியில் கிடைக்கும் முடிவில்லா வாழ்வைப் பற்றித் தீர்க்கதரிசனம் உரைக்கும்படி ஏசாயாவுக்கு யெகோவா தூண்டுதலை அளித்தார். (ஏசாயா 25:7, 8-ஐ வாசியுங்கள்.) இந்தத் தீர்க்கதரிசனத்தின்படி, பாவமும் மரணமும் மூச்சுத்திணற வைக்கிற “மூடலை” போல, அதாவது கெட்டியான போர்வையைப் போல, மனிதகுலத்தை மூடியிருக்கிறது. அந்தப் பாவமும் மரணமும் “பூமியிலிராதபடி” ஜெயமாக விழுங்கப்படுமென்று, அதாவது நீக்கப்படுமென்று, யெகோவா சகல ஜனங்களுக்கும் உறுதியளிக்கிறார்.
17. முடிவில்லா வாழ்வுக்கு வழிதிறந்து வைப்பதற்காக மேசியா எதைப் போல் செயல்படுவாரென ஏசாயா முன்னறிவித்தார்?
17 மோசேயின் திருச்சட்டத்தில், போக்காடாகிய வெள்ளாட்டுக்கடா பற்றி என்ன சொல்லப்பட்டிருந்தது என்பதையும் சிந்தித்துப் பாருங்கள். வருடந்தோறும் பாவநிவாரண நாளன்று ஆலயத் தலைமைக் குரு, ‘அந்த ஆட்டின் தலைமேல் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதன்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, . . . அதை வனாந்தரத்துக்கு அனுப்பிவிடுவார். அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு, வனாந்தரத்திற்குப் போய்விடும்.’ (லேவி. 16:7-10, 21, 22) மேசியாவின் வருகை பற்றி ஏசாயா முன்னுரைத்தபோது, ‘பாடுகளையும்’ (நோய்களையும்), ‘துக்கங்களையும்,’ ‘அநேகருடைய பாவங்களையும்’ போக்காட்டைப் போல் அவர் சுமந்து சென்று, முடிவில்லா வாழ்வுக்கு வழிதிறந்து வைப்பார் எனக் குறிப்பிட்டார்.—ஏசாயா 53:4-6, 12-ஐ வாசியுங்கள்.
18, 19. ஏசாயா 26:19-லும், தானியேல் 12:13-லும் என்ன நம்பிக்கை சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ளது?
18 ஏசாயாவின் மூலமாக யெகோவா தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலர்களிடம் இவ்வாறு சொன்னார்: ‘இறந்த உங்களுடைய மக்கள் உயிர்பெறுவார்கள்; அவர்களுடைய சடலங்கள் மீண்டும் எழுந்திருக்கும்; மண்ணிலே தங்கியிருக்கிறவர்களே, விழித்துக் கெம்பீரியுங்கள்; உம்முடைய பனி, பூண்டுகளின்மேல் பெய்யும் பனிபோல் இருக்கும்; மரித்தோரைப் பூமி புறப்படப்பண்ணும்.’ (ஏசா. 26:19; NW) ஆகவே, உயிர்த்தெழுதல் மற்றும் முடிவில்லா வாழ்வு பற்றிய நம்பிக்கையை எபிரெய வேதாகமம் தெளிவாகக் குறிப்பிடுகிறது. உதாரணத்திற்கு, தானியேல் கிட்டத்தட்ட 100 வயதை எட்டியபோது யெகோவா அவருக்கு இவ்வாறு உறுதியளித்தார்: ‘நீ இளைப்பாறிக்கொண்டிருப்பாய், நாட்களின் முடிவிலே உனக்குரிய பங்கைப் பெற்றுக்கொள்ள எழுந்திருப்பாய்.’—தானி. 12:13, NW.
19 உயிர்த்தெழுதல் நம்பிக்கை இருந்ததால்தான், இறந்துபோன தன் சகோதரனைக் குறித்து இயேசுவிடம் மார்த்தாள் இவ்வாறு சொன்னாள்: “கடைசி நாளில் உயிர்த்தெழுதல் நடைபெறும்போது அவன் எழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன்.” (யோவா. 11:24) இந்த நம்பிக்கையை, இயேசுவின் போதனைகளும் அவருடைய சீடர்கள் எழுதிய வேதாகமப் புத்தகங்களும் மாற்றிவிட்டனவா? மனிதர்களுக்கு முடிவில்லா வாழ்வு பூமியில் கிடைக்குமென்ற நம்பிக்கையை யெகோவா இன்னமும் கொடுக்கிறாரா? இந்தக் கேள்விகளுக்கான பதிலை அடுத்த கட்டுரையில் நாம் சிந்திப்போம்.
[அடிக்குறிப்பு]
a தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்! புத்தகத்தில் அதிகாரம் 6-ஐப் பாருங்கள்.
உங்களால் விளக்க முடியுமா?
• மனித சிருஷ்டி எந்த நம்பிக்கையின் அடிப்படையில் ‘மாயைக்குக் கீழ்ப்படுத்தப்பட்டது’?
• ஆபிரகாமுக்கு உயிர்த்தெழுதலில் நம்பிக்கை இருந்ததை எது காட்டுகிறது?
• யோபுவிடம் எலிகூ சொன்ன வார்த்தைகள் மனிதகுலத்திற்கு என்ன நம்பிக்கையை அளிக்கின்றன?
• உயிர்த்தெழுதல் மற்றும் முடிவில்லா வாழ்வு பற்றிய நம்பிக்கையை எபிரெய வேதாகமம் எவ்வாறு சிறப்பித்துக் காட்டுகிறது?
[பக்கம் 5-ன் படம்]
முதுமையிலிருந்தும் மரணத்திலிருந்தும் மனிதகுலம் விடுவிக்கப்படும் என்று யோபுவிடம் எலிகூ சொன்ன வார்த்தைகள் நம்பிக்கை அளிக்கின்றன
[பக்கம் 6-ன் படம்]
‘தானியேல் தனக்குரிய பங்கைப் பெற்றுக்கொள்ள நாட்களின் முடிவிலே எழுந்திருப்பார்’ என்று அவருக்கு உறுதியளிக்கப்பட்டது