பூமியில் முடிவில்லா வாழ்வு புதைந்துபோன நம்பிக்கை கண்டெடுக்கப்பட்டது
“தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வை . . . அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம்.”—தானி. 12:4.
1, 2. இந்தக் கட்டுரையில் என்ன கேள்விகள் சிந்திக்கப்படும்?
பூஞ்சோலையான பூமியில் மனிதர்கள் என்றென்றும் வாழ்வார்கள் என்ற வேதப்பூர்வ நம்பிக்கைக்கான அத்தாட்சியை இன்று லட்சக்கணக்கானோர் தெளிவாகப் புரிந்திருக்கிறார்கள். (வெளி. 7:9, 17) மனிதனைக் கடவுள் சில காலம் மட்டும் வாழ்வதற்காகப் படைக்காமல், என்றென்றும் வாழ்வதற்காகவே படைத்ததாக மனித சரித்திரத்தின் ஆரம்பத்திலேயே அவர் வெளிப்படுத்தினார்.—ஆதி. 1:26-28.
2 ஆதாம் இழந்த பரிபூரணத்தன்மையை மனிதர்கள் மீண்டும் பெறுவார்கள் என்பது இஸ்ரவேலரின் நம்பிக்கையாய் இருந்தது. பூஞ்சோலையான பூமியில் மனிதர்களுக்கு முடிவில்லா வாழ்வைக் கடவுள் எப்படித் தருவார் என்பது கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்திலும்கூட விளக்கப்பட்டுள்ளது. அப்படியானால், மனிதர்களுக்கான அந்த நம்பிக்கை எப்படிப் புதைந்துபோனது? அது எப்படிக் கண்டெடுக்கப்பட்டு லட்சக்கணக்கானோருக்குத் தெரியவந்தது?
அந்த நம்பிக்கை எப்படி மறைக்கப்பட்டது?
3. மனிதர்களுக்குப் பூமியில் முடிவில்லா வாழ்வு கிடைக்குமென்ற நம்பிக்கை மறைக்கப்பட்டிருந்ததைக் குறித்து நாம் ஏன் ஆச்சரியப்பட வேண்டியதில்லை?
3 தம்முடைய போதனைகளைப் போலித் தீர்க்கதரிசிகள் திரித்துக் கூறுவார்கள் என்றும், அதனால் பெரும்பாலோர் ஏமாற்றப்படுவார்கள் என்றும் இயேசு முன்னறிவித்தார். (மத். 24:11) “உங்கள் மத்தியிலும் போலிப் போதகர்கள் தோன்றுவார்கள்” என்று கிறிஸ்தவர்களை அப்போஸ்தலன் பேதுரு எச்சரித்தார். (2 பே. 2:1) அப்போஸ்தலன் பவுலும் இவ்வாறு எச்சரித்தார்: “ஒரு காலம் வரும்; அப்போது, பயனளிக்கும் போதனைகளை [மக்கள்] பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்; ஆனால், தங்கள் காதுகளுக்கு இனிமையாகத் தொனிக்கும் விஷயங்களைக் கேட்பதற்காக, தங்கள் விருப்பத்திற்கேற்ப தங்களுக்கென்று போதகர்களைத் திரட்டிக்கொள்வார்கள்.” (2 தீ. 4:3, 4) மக்களை இவ்வாறு ஏமாற்றுவதில் திரைக்குப் பின்னாலிருந்து செயல்படுபவன் சாத்தானே; அவன்தான் போலிக் கிறிஸ்தவத்தைப் பயன்படுத்தி, மனிதர்களுக்காகவும் பூமிக்காகவும் கடவுள் வைத்திருக்கிற அருமையான நோக்கம் பற்றிய உண்மையை மறைத்திருக்கிறான்.—2 கொரிந்தியர் 4:3, 4-ஐ வாசியுங்கள்.
4. விசுவாசதுரோக மதத்தலைவர்கள், மனிதர்களுக்கான என்ன நம்பிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள்?
4 கடவுளுடைய பரலோக அரசாங்கம் மனித அரசாங்கங்களையெல்லாம் நொறுக்கி நிர்மூலமாக்கும் என்று வேதவசனங்கள் விளக்குகின்றன. (தானி. 2:44) அதோடு, கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின்போது சாத்தான் அதலபாதாளத்திற்குள் அடைக்கப்பட்டிருப்பான், இறந்தோர் உயிர்த்தெழுப்பப்படுவார்கள், மனிதர்கள் பூமியில் மீண்டும் பரிபூரண நிலைக்குக் கொண்டுவரப்படுவார்கள் என்றும் விளக்குகின்றன. (வெளி. 20:1-3, 6, 12; 21:1-4) என்றபோதிலும், விசுவாசதுரோகிகளான கிறிஸ்தவமண்டல மதத்தலைவர்கள் வேறு கருத்துகளை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, மூன்றாம் நூற்றாண்டின்போது அலெக்ஸாண்டிரியாவில் இறையியல் வல்லுநராக இருந்த ஆரஜனை எடுத்துக்கொள்வோம்; ஆயிர வருட ஆட்சியின்போது மனிதர்களுக்குப் பூமியில் ஆசீர்வாதங்கள் கிடைக்குமென்ற நம்பிக்கையை ஆதரித்த ஆட்களை அவர் கண்டனம் செய்தார். ஹிப்போ நகரில் கத்தோலிக்க இறையியல் வல்லுநராய் இருந்த அகஸ்டின் (பொ.ச. 354-430) ‘ஆயிர வருட ஆட்சி வரப்போவதே இல்லை என்ற கருத்தை ஆதரித்தார்’ என த கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா கூறுகிறது.a
5, 6. ஆரஜனும் அகஸ்டினும், ஆயிர வருட ஆட்சி பற்றிய நம்பிக்கையை ஏற்றுக்கொள்ள ஏன் மறுத்தார்கள்?
5 ஆயிர வருட ஆட்சி பற்றிய நம்பிக்கையை ஆரஜனும் அகஸ்டினும் ஏன் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள்? ஆரஜன், அலெக்ஸாண்டிரியாவைச் சேர்ந்த கிளமென்ட் என்பவரின் மாணாக்கராக இருந்தவர்; இந்த கிளமென்ட், ஆத்துமா அழியாது என்ற பிளேட்டோவின் தத்துவத்தை ஏற்றுக்கொண்டவர். இந்தக் கருத்துகளால் பெரிதும் செல்வாக்கு செலுத்தப்பட்ட ஆரஜன், “ஆத்துமா அழியாது என்ற பிளேட்டோவின் கருத்தைக் கிறிஸ்தவக் கோட்பாட்டிற்குள் புகுத்தினார்” என இறையியல் வல்லுநரான வெர்னர் யேகா குறிப்பிடுகிறார். இதனால்தான், ஆயிர வருட ஆட்சியின் ஆசீர்வாதங்கள் பூமியில் அல்ல, பரலோகத்திலேயே பொழியப்படும் என்பதாக ஆரஜன் கற்பிக்க ஆரம்பித்தார்.
6 அகஸ்டின் தனது 33-ஆம் வயதில் “கிறிஸ்தவராக” ஆனதற்கு முன்பு, நியோபிளேட்டோனியக் கோட்பாட்டை, அதாவது மூன்றாம் நூற்றாண்டில் பிளாட்டினஸ் என்பவரால் திருத்தியமைக்கப்பட்ட பிளேட்டோவின் கோட்பாட்டை, கடைப்பிடித்து வந்தார். அகஸ்டின் கிறிஸ்தவராக ஆன பின்பும் அவருடைய சிந்தனையெல்லாம் நியோபிளேட்டோனியக் கோட்பாட்டிலேயே ஊறிப்போயிருந்தது. “புதிய ஏற்பாட்டிலுள்ள போதனைகளையும் பிளேட்டோவின் கோட்பாடுகளையும் ஒன்றிணைத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் இவர்தான்” என்று த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா குறிப்பிடுகிறது. வெளிப்படுத்துதல் 20-ஆம் அதிகாரத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள ஆயிர வருட ஆட்சி “வெறும் ஓர் உருவகக் கதையே” என அகஸ்டின் விளக்கியதாக த கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது. அதோடு, “இந்த விளக்கம் . . . அடுத்தடுத்து வந்த மேற்கத்திய இறையியல் வல்லுநர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது; ஆகவே, ஆயிர வருட ஆட்சிக்கான ஆரம்ப விளக்கத்தை ஆதரிப்பதற்கு ஆள் இல்லாமற்போனது” என்று அது குறிப்பிடுகிறது.
7. எந்தப் பொய்க் கோட்பாடு பூமியில் முடிவில்லா வாழ்வு கிடைக்குமென்ற நம்பிக்கையை மனிதர்களிடையே அற்றுப்போகச் செய்திருக்கிறது, எவ்வாறு?
7 மனிதர்களுக்குப் பூமியில் முடிவில்லா வாழ்வு கிடைக்கப்போகிறதென்ற நம்பிக்கை அற்றுப்போனதற்குக் காரணம், பூர்வ பாபிலோனில் பிரபலமாகி உலகெங்கும் பரவிய ஒரு கருத்தே! ஆம், மனித உடலுக்குள் அழியாத ஆத்துமா குடியிருக்கிறது என்ற கருத்தே! அந்தக் கருத்தைக் கிறிஸ்தவமண்டலம் ஏற்றுக்கொண்டது; அச்சமயத்தில், இறையியல் வல்லுநர்கள் பரலோக நம்பிக்கையை ஆதரிக்கிற வசனங்களைத் திரித்துக் கூறி, நல்லவர்கள் எல்லாருமே பரலோகத்திற்குப் போவார்கள் எனக் கற்பித்தார்கள். இந்தக் கருத்தின்படி, மனிதர்கள் பூமியில் தற்காலிகமாகவே வாழ்கிறார்கள், அதாவது பரலோக வாழ்க்கைக்கு அவர்கள் தகுதியானவர்களா எனச் சோதிக்கப்படுவதற்காகவே பூமியில் வாழ்கிறார்கள். பூமியில் முடிவில்லா வாழ்வு கிடைக்குமென்ற யூதர்களின் ஆரம்ப நம்பிக்கையும் அவ்வாறே திரிக்கப்பட்டுப்போனது. ஆத்துமா அழியாதென்ற கிரேக்க கருத்தை யூதர்கள் படிப்படியாக ஏற்றுக்கொண்டதால், பூமியில் முடிவில்லா வாழ்வு கிடைக்குமென்ற அவர்களுடைய ஆரம்ப நம்பிக்கை மங்கிப்போனது. இந்தக் கருத்துக்கும் மனிதனை பைபிள் சித்தரிக்கிற விதத்திற்கும் எவ்வளவு வித்தியாசம்! மனிதன் ஓர் ஆவி அல்ல, ஆனால் இரத்தமும் சதையுமுள்ள உடலைக் கொண்டவன். யெகோவா முதல் மனிதனிடம், “நீ மண்ணாயிருக்கிறாய்” என்றார். (ஆதி. 3:19) மனிதனின் நிரந்தர வீடு பரலோகமல்ல, பூமியே!—சங்கீதம் 104:5; 115:16-ஐ வாசியுங்கள்.
இருட்டில் பிரகாசிக்கிற சத்திய ஒளி
8. மனிதர்களுக்கான நம்பிக்கை பற்றி 1600-களில் வாழ்ந்த அறிஞர்கள் சிலர் என்ன சொன்னார்கள்?
8 முடிவில்லா வாழ்வு பூமியில் கிடைக்குமென்ற நம்பிக்கையைப் பெரும்பாலான சர்ச்சுகள் கற்பிக்காதபோதிலும், இந்த உண்மையைச் சாத்தானால் முற்றிலுமாகக் குழிதோண்டிப் புதைக்க முடியவில்லை. பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர், பைபிளைக் கவனமாக வாசித்த சிலர் சத்தியத்தின் ஒளிக்கீற்றுகளைக் கண்டார்கள்; ஆம், மனிதர்கள் மீண்டும் பரிபூரண நிலையை எப்படி அடைவார்கள் என்பது பற்றிய சில அம்சங்களைப் படிப்படியாகப் புரிந்துகொண்டார்கள். (சங். 97:11; மத். 7:13, 14; 13:37-39) 17-ஆம் நூற்றாண்டுக்குள், பைபிள் மொழிபெயர்க்கப்பட்டு அச்சடிக்கப்பட்டதன் காரணமாக அது இன்னும் அதிக மக்களின் கைகளைச் சென்றெட்டியது. ஆதாமினால், மனிதர்கள் “பூஞ்சோலை பூமியையும், முடிவில்லா வாழ்வையும் இழந்தார்கள்”; அப்படியென்றால் கிறிஸ்துவினால் “அவர்கள் அனைவரும் பூமியிலே உயிர்ப்பிக்கப்படுவார்கள்; இல்லாவிட்டால், இப்படி ஒப்பிட்டுப் பேசுவது சரியாக இருக்காது” என ஓர் அறிஞர் 1651-ல் எழுதினார். (1 கொரிந்தியர் 15:21, 22-ஐ வாசியுங்கள்.) பிரசித்திபெற்ற ஆங்கிலக் கவிஞர்களில் ஒருவரான ஜான் மில்டன் (1608-1674) பாரடைஸ் லாஸ்ட் என்ற புத்தகத்தையும், அதன் இரண்டாம் பாகமான பாரடைஸ் ரீகெய்ன்ட் புத்தகத்தையும் எழுதினார். பூஞ்சோலை பூமியில் உண்மையுள்ளோர் பெறப்போகிற ஆசீர்வாதத்தைப் பற்றி அவர் அந்தப் புத்தகங்களில் குறிப்பிட்டார். மில்டன் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை பைபிள் ஆராய்ச்சிக்காகவே அர்ப்பணித்திருந்தபோதிலும், கிறிஸ்துவின் பிரசன்னம்வரை பைபிள் சத்தியங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது என்பதை அறிந்திருந்தார்.
9, 10. (அ) மனிதர்களுக்கான நம்பிக்கை குறித்து ஐஸக் நியூட்டன் என்ன எழுதினார்? (ஆ) கிறிஸ்துவின் பிரசன்னம் வெகு காலம் கழித்துதான் வருமென்று அவர் நினைத்ததற்குக் காரணம் என்ன?
9 பிரசித்திபெற்ற கணித மேதையான சர் ஐஸக் நியூட்டனும் (1642-1727) பைபிளில் மிகுந்த ஆர்வம் காட்டினார். பரிசுத்தவான்கள் பரலோகத்தில் வாழ்வதற்காக உயிர்த்தெழுப்பப்பட்டு, மனித கண்களுக்குப் புலப்படாத விதத்தில் கிறிஸ்துவோடு ஆட்சிசெய்வார்கள் என அவர் புரிந்துகொண்டார். (வெளி. 5:9, 10) அந்த அரசாங்கத்தின் குடிமக்களைக் குறித்து அவர் இவ்வாறு எழுதினார்: “நியாயத்தீர்ப்பு நாளுக்குப் பின்பு பூமியில் மனிதர்கள் தொடர்ந்து வாழ்வார்கள்; 1000 வருடங்களுக்கு மட்டுமல்ல, என்றென்றும் வாழ்வார்கள்.”
10 பல நூற்றாண்டுகளுக்குப் பின்புதான் கிறிஸ்துவின் பிரசன்னம் துவங்குமென்று நியூட்டன் நினைத்தார். இதைக் குறித்துச் சரித்திர ஆசிரியரான ஸ்டீவன் ஸ்நாபெலன் இவ்வாறு கூறினார்: “நியூட்டன் வாழ்ந்த காலத்தில் திரித்துவப் பொய்க் கோட்பாடு அத்தனை ஆழமாக வேரூன்றியிருந்தது; அதனாலேயே கடவுளுடைய அரசாங்கம் அதன் ஆட்சியை ஆரம்பிக்க இப்போதைக்கு வாய்ப்பே இல்லை என அவர் உறுதியாக நினைத்தார்.” நற்செய்தி இன்னமும் மறைக்கப்பட்டே இருந்தது. அதை எந்தவொரு கிறிஸ்தவத் தொகுதியும் பிரசங்கிக்கவில்லை என்பதை நியூட்டனும் கண்டார். அவர் இவ்வாறு எழுதினார்: “தானியேல் தீர்க்கதரிசனத்தையும் [வெளிப்படுத்துதல் பதிவிலுள்ள] யோவான் தீர்க்கதரிசனத்தையும் முடிவு காலம்வரை புரிந்துகொள்ள முடியாது.” அவர் மேலும் இவ்வாறு குறிப்பிட்டார்: “‘அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம்’ என்று தானியேல் சொன்னார். ஏனென்றால், மிகுந்த உபத்திரவத்திற்கு முன்பும், இந்தப் பொல்லாத உலகத்தின் முடிவுக்கு முன்பும் எல்லாத் தேசத்தாருக்கும் நற்செய்தி பிரசங்கிக்கப்பட வேண்டும். மிகுந்த உபத்திரவம் வருவதற்கு முன்பு நற்செய்தி பிரசங்கிக்கப்படாவிட்டால், குருத்தோலைகளைப் பிடித்திருக்கும் திரளான மக்களின் எண்ணிக்கை எண்ண முடியாதளவுக்கு அதிகரிக்க வாய்ப்பில்லையே!”—தானி. 12:4; மத். 24:14; வெளி. 7:9, 10.
11. மில்டன் மற்றும் நியூட்டனின் காலத்தில், மனிதர்களுக்கான நம்பிக்கை பெரும்பாலோருக்கு ஏன் மறைத்தே வைக்கப்பட்டிருந்தது?
11 மில்டன் மற்றும் நியூட்டனின் காலத்தில், சர்ச்சின் அதிகாரப்பூர்வமான கோட்பாடுகளுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவிப்பது ஆபத்தானதாய் இருந்தது. ஆகவே, அவர்கள் எழுதிய பைபிள் ஆராய்ச்சிப் புத்தகங்களில் பல அவர்களுடைய மரணம்வரை வெளியிடப்படாமலேயே இருந்தன. 16-ஆம் நூற்றாண்டின் சீர்திருத்தங்கள் ஆத்துமா அழியாது என்ற பொய்க் கோட்பாட்டைச் சீர்திருத்தவில்லை. அதோடு, பிரபல புராட்டஸ்டண்ட் சர்ச்சுகள் அகஸ்டின் சொன்ன கருத்தையே போதித்துவந்தன; அதாவது, ஆயிர வருட ஆட்சி எதிர்காலத்தில் வரப்போவதில்லை, அது கடந்த காலத்திலேயே முடிந்துவிட்டது என்று போதித்துவந்தன. ஆனால், முடிவுகாலத்தில் அறிவு பெருகியதா?
‘மெய் அறிவு பெருகிப்போம்’
12. மெய் அறிவு எப்போது பெருக இருந்தது?
12 ‘முடிவு காலத்தில்’ ஒரு நல்ல காரியம் நடக்குமென்று தானியேல் முன்னறிவித்தார். (தானியேல் 12:3, 4, 9, 10-ஐ வாசியுங்கள்.) “அச்சமயத்திலே, நீதிமான்கள் . . . சூரியனைப் போல் பிரகாசிப்பார்கள்” என்று இயேசு குறிப்பிட்டார். (மத். 13:43) முடிவு காலத்தில் மெய் அறிவு எவ்வாறு பெருகியது? முடிவு காலத்தின் தொடக்கமான 1914-ஆம் ஆண்டுக்கு முன்பு பல பத்தாண்டுகளாக நிகழ்ந்த முக்கியச் சம்பவங்கள் சிலவற்றைக் கவனியுங்கள்.
13. பரிபூரணத்தன்மையை மனிதர்கள் மீண்டும் பெறுவது பற்றிய விஷயத்தைக் குறித்து சார்ல்ஸ் டேஸ் ரஸல் என்ன எழுதினார்?
13 பைபிளிலுள்ள ‘பயனளிக்கும் வார்த்தைகளை’ புரிந்துகொள்ள 1800-களின் பிற்பகுதியின்போது பலர் உள்ளப்பூர்வமாக முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். (2 தீ. 1:13) அவர்களில் ஒருவர்தான் சார்ல்ஸ் டேஸ் ரஸல். 1870-ல் அவரும், சத்தியத்தைத் தேடிய இன்னும் சிலரும் பைபிளைப் படிக்க ஒரு தொகுதியாகக் கூடிவந்தார்கள். பரிபூரணத்தன்மையை மனிதர்கள் மீண்டும் பெறுவது பற்றிய விஷயத்தைக் குறித்து 1872-ல் ஆராய்ச்சி செய்தார்கள். ரஸல் பின்னர் இவ்வாறு எழுதினார்: “சோதிக்கப்பட்டுவரும் சர்ச்சுக்கு [பரலோக நம்பிக்கை உள்ளோருக்கு] கிடைக்கப்போகிற ஆசீர்வாதத்திற்கும் உலகத்திலுள்ள உண்மையுள்ளோருக்குக் கிடைக்கப்போகிற ஆசீர்வாதத்திற்கும் இடையே இருக்கிற வித்தியாசத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள அதுவரை நாங்கள் தவறிவிட்டோம்.” உலகத்திலுள்ள அந்த உண்மையுள்ளோர், “மனிதர்களின் மூதாதையும் தலைவனுமான ஆதாம், ஏதேன் தோட்டத்தில் இருந்தபோது பெற்றிருந்த பரிபூரணத்தன்மையை மீண்டும் பெற்றுக்கொள்வார்கள்” என்று அவர் மேலும் கூறினார். தனது பைபிள் ஆராய்ச்சியில் மற்றவர்களின் உதவி தனக்குக் கிடைத்ததாக ரஸல் குறிப்பிட்டார். யார் அவர்கள்?
14. (அ) அப்போஸ்தலர் 3:21-ஐ ஹென்ரி டண் எவ்வாறு புரிந்துகொண்டார்? (ஆ) பூமியில் என்றென்றும் வாழப்போகிறவர்கள் யார் என்று டண் விளக்கினார்?
14 அவர்களில் ஹென்ரி டண் என்பவரும் ஒருவர். ‘பூர்வ காலத்தில் பரிசுத்த தீர்க்கதரிசிகள் மூலம் அனைத்தும் புதுப்பிக்கப்படுவது சம்பந்தமாகக் கடவுள் சொன்னதை’ பற்றி அவர் எழுதியிருந்தார். (அப். 3:21) கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சிக் காலத்தில் அனைத்தும் புதுப்பிக்கப்படும்போது பூமியில் வாழும் மனிதர்கள் பரிபூரண நிலைக்கு உயர்த்தப்படுவார்கள் என்பதை டண் அறிந்திருந்தார். பூமியில் என்றென்றும் வாழப்போகிறவர்கள் யார் என்ற கேள்விக்கு, அதுவும் அநேகரின் மனதைக் குடைந்த கேள்விக்கு, பதிலைக் கண்டுபிடிக்கவும் டண் ஆராய்ச்சி செய்தார். லட்சக்கணக்கானோர் உயிர்த்தெழுப்பப்படுவார்கள், சத்தியத்தைக் கற்றுக்கொள்வார்கள், கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைப்பதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என்றெல்லாம் டண் விளக்கினார்.
15. உயிர்த்தெழுதல் குறித்து ஜார்ஜ் ஸ்டார்ஸ் எதைப் புரிந்துகொண்டார்?
15 ஜார்ஜ் ஸ்டார்ஸ் என்பவரும், அநீதிமான்கள் உயிர்த்தெழுப்பப்பட்டு, முடிவில்லா வாழ்வைப் பெற வாய்ப்பளிக்கப்படுவார்கள் என்பதை 1870-ல் புரிந்துகொண்டார். உயிர்த்தெழுப்பப்படுகிற ஒரு ‘பாவி’ அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால், அவர் “‘நூறு வயதுள்ளவராக’ இருந்தாலும் மரித்துவிடுவார்” என்ற விஷயத்தையும் அவர் புரிந்துகொண்டார். (ஏசா. 65:20) நியு யார்க்கிலுள்ள புருக்லினில் வசித்த அவர், பைபிள் எக்ஸாமினர் என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார்.
16. பைபிள் மாணாக்கர்களைக் கிறிஸ்தவமண்டலத்திலிருந்து வேறுபடுத்தியது எது?
16 நற்செய்தியை உலகெங்கும் அறிவிப்பதற்கான சமயம் வந்துவிட்டதென்று வேதவசனங்களிலிருந்து ரஸல் புரிந்துகொண்டார். ஆகவே, ஜயன்ஸ் உவாட்ச் டவர் அண்ட் ஹெரல்ட் ஆஃப் கிரைஸ்ட்ஸ் பிரசன்ஸ் (தற்போது, காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது) என்ற பத்திரிகையை 1879-ல் பிரசுரிக்க ஆரம்பித்தார். அதற்கு முன்பு, மனிதர்களுக்கான நம்பிக்கை பற்றிய சத்தியத்தை வெகு சிலரே புரிந்திருந்தார்கள்; அதன் பிறகோ, காவற்கோபுர பத்திரிகையைப் பன்னாட்டு பைபிள் மாணாக்கர்கள், தொகுதி தொகுதியாகப் படித்துச் சத்தியத்தைப் புரிந்துகொண்டார்கள். பரலோகத்திற்குச் சிலர் மட்டும் செல்வார்கள், ஆனால் லட்சக்கணக்கானோர் பூமியில் பரிபூரண மனிதர்களாக வாழ்வார்கள் என்ற நம்பிக்கையே பைபிள் மாணாக்கர்களைப் பெரும்பாலான கிறிஸ்தவமண்டலப் பிரிவினரிலிருந்து வேறுபடுத்தியது.
17. மெய் அறிவு எப்படிப் பெருகியது?
17 முன்னறிவிக்கப்பட்ட ‘முடிவுகாலம்’ 1914-ல் ஆரம்பமானது. மனிதர்களுக்கான நம்பிக்கையைப் பற்றிய மெய் அறிவு பெருகியதா? (தானி. 12:4) 1913-க்குள் ரஸலின் சொற்பொழிவுகள், 2,000 செய்தித்தாள்களில் பிரசுரமாயின; அவற்றை வாசித்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 50 லட்சம். கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியைச் சித்தரித்த படக்காட்சிகளும் ஸ்லைடுகளும் அடங்கிய “ஃபோட்டோ டிராமா ஆஃப் கிரியேஷன்” என்ற நிகழ்ச்சியை 1914-ஆம் ஆண்டின் இறுதிக்குள் மூன்று கண்டங்களில் 90 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்திருந்தார்கள். “இப்பொழுது வாழும் லட்சக்கணக்கானோர் இனி மரிக்கவே மாட்டார்கள்” என்ற பேச்சு 1918-லிருந்து 1925-வரை 30-க்கும் அதிகமான மொழிகளில் உலகெங்கும் கொடுக்கப்பட்டது; பூமியில் முடிவில்லா வாழ்வு கிடைக்குமென்ற நம்பிக்கையைப் பற்றி அந்தப் பேச்சில் விளக்கப்பட்டது. பூமியில் என்றென்றும் வாழ்கிற நம்பிக்கையுடையோர் ஞானஸ்நானம் பெற வேண்டுமென்று 1934-க்குள் யெகோவாவின் சாட்சிகள் புரிந்துகொண்டார்கள். இதனால், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியைப் புதுத்தெம்போடும் வைராக்கியத்தோடும் அவர்கள் பிரசங்கிக்க ஆரம்பித்தார்கள். பூமியில் என்றென்றும் வாழ்கிற இந்த நம்பிக்கையை அளித்ததற்காக இன்றும்கூட லட்சக்கணக்கானோர் யெகோவாவுக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறார்கள்.
“மகிமையான விடுதலை” விரைவில்!
18, 19. எதிர்காலத்தில் வாழ்க்கை எப்படி இருக்குமென்று ஏசாயா 65:21-25-ல் முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது?
18 கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்ட ஏசாயா தீர்க்கதரிசி, நீதிமான்கள் பூமியில் அனுபவிக்கப்போகிற அருமையான வாழ்க்கையைப் பற்றி எழுதினார். (ஏசாயா 65:21-25-ஐ வாசியுங்கள்.) அவர் இந்த வார்த்தைகளைச் சுமார் 2,700 வருடங்களுக்கு முன்பு எழுதினார், அப்போது இருந்த சில மரங்கள் இந்நாள்வரை பட்டுப்போகாமல் இருக்கின்றன. அந்த மரங்களைப் போல நீங்களும் அத்தனை வருடங்களுக்கு ஆரோக்கியமாய் வாழ்வதாக உங்களால் கற்பனை செய்துபார்க்க முடிகிறதா?
19 வாழ்க்கை என்பது தொட்டிலில் ஆரம்பித்து சுடுகாட்டில் முடிவடைகிற ஒரு குறுகிய பயணமாய் இனி இருக்கப்போவதில்லை; மாறாக, வீடுகளைக் கட்டுவதற்கும், செடிகொடிகளை நடுவதற்கும், புதுப்புது விஷயங்களைக் கற்பதற்கும் எண்ணற்ற வாய்ப்புகளை அள்ளி வழங்குகிற நித்தியகாலப் பயணமாய் இருக்கப்போகிறது. அச்சமயத்தில், உங்களுக்கு எத்தனை எத்தனை நண்பர்கள் கிடைக்கப்போகிறார்கள் என்று சற்று யோசித்துப் பாருங்கள்! அவர்களோடு அனுபவிக்கப்போகும் இனிய தோழமை காலங்காலமாய்த் தொடர்ந்துகொண்டே இருக்கப்போகிறது. அந்தச் சமயத்தில், “கடவுளுடைய பிள்ளைகளுக்கு” பூமியில் எப்பேர்ப்பட்ட “மகிமையான விடுதலை” கிடைக்கப்போகிறது!—ரோ. 8:21.
[அடிக்குறிப்பு]
a கடவுளுடைய அரசாங்கத்தின் ஆயிர வருட ஆட்சி இனிதான் வரவேண்டும் என்றல்ல, அது கத்தோலிக்க சர்ச் நிறுவப்பட்ட சமயம் முதற்கொண்டே ஆரம்பமாகிவிட்டது என அகஸ்டின் உரிமைபாராட்டினார்.
உங்களால் விளக்க முடியுமா?
• மனிதர்களுக்குப் பூமியில் முடிவில்லா வாழ்வு கிடைக்குமென்ற நம்பிக்கை எப்படி மறைக்கப்பட்டது?
• பைபிளைப் படித்த சிலர் 1600-களில் எதைப் புரிந்துகொண்டார்கள்?
• 1914-ஆம் ஆண்டு நெருங்க நெருங்க, மனிதர்களுக்கான நிஜ நம்பிக்கை எப்படித் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது?
• பூமிக்குரிய வாழ்வைப் பற்றிய அறிவு எவ்வாறு பெருகியிருக்கிறது?
[பக்கம் 13-ன் படங்கள்]
பூமியில் முடிவில்லா வாழ்வு உண்டு என்ற நம்பிக்கையைப் பற்றிக் கவிஞர் ஜான் மில்டனும் (இடது) கணித மேதை ஐஸக் நியூட்டனும் (வலது) அறிந்திருந்தார்கள்
[பக்கம் 15-ன் படங்கள்]
மனிதர்களுக்கான நிஜ நம்பிக்கையை உலகெங்கும் அறிவிப்பதற்கான சமயம் வந்துவிட்டதென்று ஆரம்பகால பைபிள் மாணாக்கர்கள் வேதவசனங்களிலிருந்து புரிந்துகொண்டார்கள்