“எப்போதும் கடவுளுடைய அன்புக்குப் பாத்திரமானவர்களாக இருங்கள்”
“எப்போதும் கடவுளுடைய அன்புக்குப் பாத்திரமானவர்களாக இருங்கள். அதேசமயத்தில், முடிவில்லா வாழ்வுக்கு வழிநடத்துகிற நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் இரக்கத்திற்காக ஆவலோடு காத்திருங்கள்.”—யூதா 21.
1, 2. யெகோவா எப்படி நம்மீது அன்பைப் பொழிந்திருக்கிறார், நாம் எப்படி நடந்துகொண்டாலும் சரி, அவருடைய அன்புக்குப் பாத்திரமானவர்களாய் இருப்போமென ஏன் சொல்ல முடியாது?
யெகோவா தேவன் எண்ணற்ற விதங்களில் நம்மீது அன்பைப் பொழிந்திருக்கிறார். என்றாலும், மீட்பு பலியே யெகோவா பொழிந்திருக்கும் அன்புக்கு மாபெரும் அத்தாட்சி என்பதில் சந்தேகமில்லை. மனிதகுலத்தின் மீது அவர் அளவற்ற அன்பு கொண்டுள்ளதால் நமக்காக உயிர் துறக்க தமது அருமை மகனையே பூமிக்கு அனுப்பினார். (யோவா. 3:16) நாம் சாகாமல் என்றென்றும் வாழ... அவருடைய அன்பை என்றென்றும் பெற... அவர் விரும்புவதால் இதைச் செய்தார்!
2 அப்படியென்றால், நாம் எப்படி நடந்துகொண்டாலும் சரி, யெகோவாவின் அன்புக்குப் பாத்திரராய் இருப்போமென அர்த்தமாகுமா? இல்லை. யூதா 21-ல் நமக்கு இந்தப் புத்திமதி கொடுக்கப்பட்டுள்ளது: “எப்போதும் கடவுளுடைய அன்புக்குப் பாத்திரமானவர்களாக இருங்கள். அதேசமயத்தில், முடிவில்லா வாழ்வுக்கு வழிநடத்துகிற நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் இரக்கத்திற்காக ஆவலோடு காத்திருங்கள்.” “எப்போதும் கடவுளுடைய அன்புக்குப் பாத்திரமானவர்களாக இருங்கள்” என்ற வார்த்தைகள் நம் பங்கில் முயற்சி தேவை என்பதைக் காட்டுகின்றன. அப்படியானால், கடவுளுடைய அன்பில் நிலைத்திருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
கடவுளுடைய அன்பில் நிலைத்திருப்பது எப்படி?
3. பரலோகத் தகப்பனுடைய அன்பில் நிலைத்திருக்க தமக்கு எது அவசியமென இயேசு சொன்னார்?
3 இயேசு இறப்பதற்கு முந்திய இரவன்று அவர் சொன்ன வார்த்தைகளிலேயே இதற்குரிய பதிலைக் காணலாம். “நான் என் தகப்பனுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து அவருடைய அன்பில் நிலைத்திருப்பது போலவே நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்” என்று அவர் சொன்னார். (யோவா. 15:10) பரலோகத் தகப்பனிடம் நற்பெயரைச் சம்பாதிப்பதற்கு அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பது அவசியம் என்பதை இயேசு அறிந்திருந்தார். கடவுளுடைய பரிபூரண மகனே அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டியிருந்தால், நம்மைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?
4, 5. (அ) யெகோவாவை நேசிக்கிறோம் என்பதைக் காட்டுவதற்கு முக்கியமான வழி எது? (ஆ) யெகோவாவின் கட்டளைகளுக்கு எப்படிக் கீழ்ப்படிவது என்றெண்ணி நாம் ஏன் மலைத்துநிற்க வேண்டிய அவசியமில்லை?
4 முக்கியமாக, யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் நாம் அவரை நேசிக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம். அதைத்தான் அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு தெரிவித்தார்: “நாம் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதே அவர்மீது அன்பு காட்டுவதாகும்; அவருடைய கட்டளைகள் பாரமானவை அல்ல.” (1 யோ. 5:3) ஆனால், கீழ்ப்படிதல் என்ற வார்த்தையைக் கேட்டாலே இன்று உலகிலுள்ள பெரும்பாலோருக்குக் கசக்கிறது. இருந்தாலும், “அவருடைய கட்டளைகள் பாரமானவை அல்ல” என்று சொல்லப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். நம்மால் முடியாத ஒன்றை யெகோவா நம்மிடம் செய்யச் சொல்வதில்லை.
5 உதாரணமாக, தூக்க முடியாத ஒன்றைத் தூக்கச் சொல்லி உங்கள் உயிர் நண்பரிடம் கேட்பீர்களா? நிச்சயமாகவே மாட்டீர்கள்! யெகோவா நம்மைவிட மிகமிக கனிவானவர், நம்முடைய வரம்புகளை நன்றாகப் புரிந்திருப்பவர்; “நாம் மண்ணென்று [அவர்] நினைவுகூருகிறார்” என பைபிள் கூறுகிறது. (சங். 103:14) நம்முடைய சக்திக்கு மிஞ்சிய எதையும் அவர் நம்மிடம் கேட்கவே மாட்டார். ஆகவே, யெகோவாவின் கட்டளைகளுக்கு எப்படிக் கீழ்ப்படிவது என்றெண்ணி நாம் மலைத்துநிற்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, நாம் உண்மையிலேயே பரலோகத் தகப்பனை நேசிக்கிறோம்... அவருடைய அன்பில் நிலைத்திருக்க விரும்புகிறோம்... என்பதைக் காட்டுவதற்கு ஓர் அரிய வாய்ப்பாகக் கருதியே அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறோம்.
யெகோவா தந்த விசேஷப் பரிசு
6, 7. (அ) மனசாட்சி என்றால் என்ன? (ஆ) கடவுளுடைய அன்பில் நிலைத்திருக்க மனசாட்சி எப்படி உதவும் என்பதை உதாரணத்துடன் விளக்குங்கள்.
6 தொல்லை நிறைந்த இந்த உலகில், நாம் அன்றாடம் பல தீர்மானங்கள் எடுக்க வேண்டியிருக்கிறது; அப்படிப்பட்ட தீர்மானங்களுக்கும் கடவுளுக்குக் கீழ்ப்படிவதற்கும் சம்பந்தமிருக்கிறது. நாம் எடுக்கிற தீர்மானங்கள் கடவுளுக்குப் பிரியமானவையா, இல்லையா என்பதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்? இதற்கு யெகோவா தந்துள்ள ஒரு பரிசு நமக்குப் பெரிதும் உதவும். அதுவே மனசாட்சி. மனசாட்சி என்றால் என்ன? நம்மை நாமே எடைபோட்டுப் பார்க்க உதவும் ஒரு விசேஷத் திறமையாகும். அது, நமக்குள்ளே ஒரு நீதிபதியைப் போல செயல்படுகிறது. நாம் செய்யப்போகும் தீர்மானத்தை அல்லது செய்துவிட்ட செயலைச் சிந்தித்துப் பார்க்க உதவுகிறது; அதோடு, நாம் எடுக்கும் தீர்மானம் சரியா தவறா, நல்லதா கெட்டதா எனச் சீர்தூக்கிப் பார்க்கவும் உதவுகிறது.—ரோமர் 2:14, 15-ஐ வாசியுங்கள்.
7 மனசாட்சியை நாம் எப்படிச் சரியாகப் பயன்படுத்தலாம்? ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். பரந்துவிரிந்த ஒரு பாலைவனத்தில் ஒருவர் பயணம் செய்கிறார். சாலையோ, அறிவிப்புப் பலகையோ எதுவும் இல்லை, யாராவது நடந்துசென்ற கால் தடமும் இல்லை. என்றாலும், தான் போக வேண்டிய இடத்தை நோக்கி அவர் போகிறார். எப்படி? அவரிடம் திசைகாட்டி இருக்கிறது. திசைகாட்டி என்பது நான்கு முக்கிய திசைகள் குறிக்கப்பட்ட ஒரு கருவி; அதின் நடுவிலுள்ள காந்த முள் எப்போதும் வட திசையையே காட்டும். அந்தப் பயணியிடம் திசைகாட்டி இல்லையென்றால், அவர் திக்குத் தெரியாமல் அலைந்துகொண்டிருப்பார். அதுபோலவே, மனிதனிடம் மனசாட்சி இல்லையென்றால், வாழ்க்கையில் சரியான, நீதிநெறி வழுவாத தீர்மானங்களை எடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துப்போய்விடுவான்.
8, 9. (அ) நம் மனசாட்சிக்கு இருக்கும் வரம்பை நாம் ஏன் மனதில் வைக்க வேண்டும்? (ஆ) நம் மனசாட்சி நமக்கு உண்மையிலேயே பிரயோஜனமாய் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
8 ஆனால் திசைகாட்டியைப் போல, நம் மனசாட்சியும் வரம்பு உள்ளதுதான். அந்தப் பயணி தன் திசைகாட்டிக்கு அருகில் ஒரு காந்தத்தை வைத்தால், அது வட திசையைக் காட்டாமல் வேறு திசையைக் காட்டும். அதுபோல, நம் இருதயத்தின் ஆசைகள் நம்மை ஆட்டிப்படைக்க நாம் அனுமதித்தால் என்ன நடக்கும்? தன்னல ஆசைகள் நம் மனசாட்சியைத் தவறான பாதையில் வழிநடத்தலாம். “எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது” என்று பைபிள் நம்மை எச்சரிக்கிறது. (எரே. 17:9; நீதி. 4:23) மீண்டும் அந்தப் பயணியின் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்; அவரிடம் துல்லியமான, தெளிவான வரைபடம் இல்லையென்றால், திசைகாட்டியால் எந்தப் பிரயோஜனமும் இருக்காது. அதேபோல, பைபிளிலுள்ள நம்பகமான அறிவுரைகளை, என்றும் மாறாத அறிவுரைகளை நாம் சார்ந்திராவிட்டால் மனசாட்சி இருந்தும் நமக்குப் பிரயோஜனம் இருக்காது. (சங். 119:105) இந்த உலகிலுள்ள அநேகர் இருதயத்தின் ஆசைகளுக்கு அளவுக்குமீறி முக்கியத்துவம் கொடுத்துவிட்டு பைபிளிலுள்ள நெறிமுறைகளை ஒதுக்கித் தள்ளுகிறார்கள் என்பது வருத்தத்திற்குரிய விஷயம். (எபேசியர் 4:17-19-ஐ வாசியுங்கள்.) அதனால்தான், மனசாட்சி இருந்தும்கூட பலர் படுபயங்கரமான காரியங்களைச் செய்கிறார்கள்.—1 தீ. 4:2.
9 இவர்களைப் போல இருக்கக்கூடாது என்பதில் நாம் உறுதியாயிருக்க வேண்டும். அதோடு, நம் மனசாட்சிக்குக் கடவுளுடைய வார்த்தையைப் புகட்டி அதைப் பயிற்றுவிக்க வேண்டும்; அப்போதுதான் அது நமக்கு உண்மையிலேயே பிரயோஜனமாக இருக்கும். தன்னல ஆசைகள் நம்மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கக் கூடாது; மாறாக, பைபிளின்படி பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அதுமட்டுமல்ல, நம் அன்புக்குரிய சகோதர சகோதரிகளின் மனசாட்சியையும் நாம் மதிக்க வேண்டும். சிலருடைய மனசாட்சி சில காரியங்களைச் செய்ய அனுமதிக்காது என்பதை மனதில் வைத்து, அப்படிப்பட்டவர்களுக்கு இடறல் உண்டாக்காதிருக்க எப்போதும் கவனமாய் இருக்க வேண்டும்.—1 கொ. 8:12; 2 கொ. 4:2; 1 பே. 3:16.
10. வாழ்க்கையின் எந்த மூன்று அம்சங்களை இப்போது நாம் சிந்திப்போம்?
10 யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் அவரை நாம் நேசிக்கிறோம் என்பதைக் காட்டுவதற்கான மூன்று அம்சங்களை இப்போது சிந்திக்கலாம். இந்த ஒவ்வொரு அம்சத்திலும் மனசாட்சிக்கு முக்கிய பங்கு உண்டு; ஆனால், மனசாட்சி நம்மைச் சரியாக வழிநடத்த வேண்டுமானால், முதலாவதாக அதை கடவுளுடைய நெறிமுறைகளுக்கு இசைவாக வழிநடத்த வேண்டும். யெகோவாவுக்கு கீழ்ப்படிவதன் மூலம் அவரை நேசிக்கிறோம் என்பதைக் காட்டுவதற்கான மூன்று அம்சங்கள் இவையே: (1) யெகோவா நேசிக்கிறவர்களை நாம் நேசிக்க வேண்டும், (2) அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மரியாதை காட்ட வேண்டும், (3) கடவுளுடைய பார்வையில் சுத்தமாயிருக்க வேண்டும்.
யெகோவா நேசிக்கிறவர்களை நேசியுங்கள்
11. யெகோவா நேசிக்கிறவர்களை நாம் ஏன் நேசிக்க வேண்டும்?
11 முதலாவதாக, யெகோவா நேசிக்கிறவர்களை நாம் நேசிக்க வேண்டும். சகவாசம் கொள்ளும் விஷயத்தில், மனிதர்களாகிய நாம் ஸ்பான்ஞைப் போல இருக்கிறோம். நம்மைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் அப்படியே உறிஞ்சிக்கொள்கிறோம். அபூரண மனிதர்களாகிய நமக்கு சகவாசம் ஆபத்தாகவோ ஆதரவாகவோ இருக்கலாம் என்பதை நம் படைப்பாளர் அறிந்திருக்கிறார். அதனால்தான், “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்” என்ற ஞானமுள்ள அறிவுரையை அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார். (நீதி. 13:20; 1 கொ. 15:33) நாம் யாருமே ‘நாசமடைய’ விரும்பமாட்டோம். ஒவ்வொருவரும் ‘ஞானமடையவே’ விரும்புவோம். எல்லையில்லா ஞானமுள்ள யெகோவா தேவனை யாராலும் இன்னும் அதிக ஞானமுள்ளவராக்கவும் முடியாது, அவரைக் கெட்டவராக்கவும் முடியாது. இருந்தாலும், சகவாசத்தைப் பொறுத்ததில், அவரே நமக்கு அருமையான முன்மாதிரி. இதை யோசித்துப் பாருங்கள்: அபூரண மனிதர்களில் எப்படிப்பட்டவர்களை யெகோவா தமது நண்பர்களாகத் தேர்ந்தெடுக்கிறார்?
12. எப்படிப்பட்டவர்களை யெகோவா தமது நண்பர்களாகத் தேர்ந்தெடுக்கிறார்?
12 இஸ்ரவேலின் மூதாதையான ஆபிரகாமை “என் சிநேகிதன்” என்று யெகோவா சொன்னார். (ஏசா. 41:8) விசுவாசம் காட்டுவதில், நீதியைக் கடைப்பிடிப்பதில், கீழ்ப்படிந்து நடப்பதில் அவர் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தார். ஆம், அவர் விசுவாசமுள்ள மனிதராக இருந்தார்! (யாக். 2:21-23) இப்படிப்பட்டவர்களையே யெகோவா தமது நண்பராகத் தேர்ந்தெடுத்தார். இன்றும்கூட அப்படித்தான் செய்கிறார். யெகோவாவே அப்படிப்பட்ட நண்பர்களைத் தேர்ந்தெடுக்கிறார் என்றால் நாமும் அப்படிச் செய்வது முக்கியம், அல்லவா? ஞானமடைவதற்கு ஞானமுள்ளவர்களோடு நடப்பது முக்கியம், அல்லவா?
13. நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில், நல்ல தீர்மானமெடுக்க எது நமக்கு உதவும்?
13 நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் நல்ல தீர்மானம் எடுக்க எது உங்களுக்கு உதவும்? பைபிளிலுள்ள உதாரணங்களைப் படிப்பது உங்களுக்கு உதவும். ரூத்-நகோமி, தாவீது-யோனத்தான், தீமோத்தேயு-பவுல் ஆகியோருக்கு இடையே நிலவிய நட்பைப் பற்றிப் படித்துப் பாருங்கள். (ரூத் 1:16, 17; 1 சா. 23:16-18; பிலி. 2:19-22) அவர்கள் அனைவரும் யெகோவாவை உண்மையாய் நேசித்ததே அவர்களுடைய நட்பு மலர் வாடாமல் இருந்ததற்கு முக்கிய காரணம். உங்களைப் போல் யெகோவாவை நேசிக்கிற நண்பர்களை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? கிறிஸ்தவ சபையில் இப்படிப்பட்ட நண்பர்கள் உங்களுக்கு ஏராளமாகக் கிடைப்பார்கள் என்பது உறுதி. இப்படிப்பட்ட நண்பர்கள், யெகோவாவுக்குப் பிடிக்காத காரியத்தைச் செய்யும்படி உங்களைத் தூண்டமாட்டார்கள். மாறாக, யெகோவாவுக்குக் கீழ்ப்படியவும், ஆன்மீக ரீதியில் வளரவும், கடவுளுடைய சக்திக்கென்று விதைக்கவும் உங்களுக்கு உதவுவார்கள். (கலாத்தியர் 6:7, 8-ஐ வாசியுங்கள்.) அதோடு, கடவுளுடைய அன்பில் நிலைத்திருக்கவும் உதவுவார்கள்.
அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மரியாதை காட்டுங்கள்
14. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மரியாதை காட்டுவது கஷ்டமாக இருப்பதற்குக் காரணங்கள் யாவை?
14 யெகோவாவை நாம் நேசிக்கிறோம் என்பதைக் காட்டுவதற்கு இரண்டாவது வழி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மரியாதை காட்டுவதே. ஆனால், சில சமயங்களில் இது ஏன் நமக்கு கஷ்டமாக இருக்கிறது? ஒரு காரணம் என்னவென்றால், அதிகாரத்தில் உள்ளவர்கள் அபூரணராக இருக்கிறார்கள். அதோடு, நாமும் அபூரணராக இருக்கிறோம். ஆம், அதிகாரத்தை எதிர்க்கும் போக்கு நம் இரத்தத்தில் கலந்திருப்பதால் இந்த பலவீனத்தை எதிர்த்து போராட வேண்டியுள்ளது.
15, 16. (அ) தம் மக்களை கவனிக்கும் பொறுப்பை யெகோவா யாருக்கு அளித்திருக்கிறாரோ அவர்களுக்கு மரியாதை காட்டுவது ஏன் முக்கியம்? (ஆ) இஸ்ரவேலர் மோசேயை எதிர்த்ததை யெகோவா எப்படிக் கருதினார், அதிலிருந்து என்ன முக்கிய பாடத்தை நாம் கற்றுக்கொள்ளலாம்?
15 ‘அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மரியாதை காட்டுவது நமக்குத்தான் அவ்வளவு கஷ்டமாக இருக்கிறதே, பின்பு ஏன் அதை நாம் செய்ய வேண்டும்?’ என்று நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம். இதற்கான பதிலில் கடவுளுடைய அரசாட்சி சம்பந்தப்பட்ட விவாதம் உட்பட்டுள்ளது. உங்களுடைய பேரரசராக, ஆட்சியாளராக யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்? யெகோவாவை நம் பேரரசராகத் தேர்ந்தெடுத்தால், அவருடைய அதிகாரத்திற்கு மரியாதை காட்ட வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால், அவரை நம் ஆட்சியாளர் என்று உண்மையிலேயே சொல்ல முடியுமா? பொதுவாக, அபூரண மனிதர்கள் மூலமாகவே யெகோவா தம் அதிகாரத்தை செலுத்துகிறார்; தம் மக்களைக் கவனிக்கும் பொறுப்பை அவர்களிடமே ஒப்படைத்திருக்கிறார். இவர்களை நாம் எதிர்த்தால், யெகோவா நம் செயல்களை எப்படிக் கருதுவார்?—1 தெசலோனிக்கேயர் 5:12, 13-ஐ வாசியுங்கள்.
16 உதாரணமாக, இஸ்ரவேலர் மோசேக்கு விரோதமாக முறுமுறுத்து அவரை எதிர்த்தபோது, தம்மை எதிர்த்ததாகவே யெகோவா உணர்ந்தார். (எண். 14:26, 27) யெகோவா மாறவில்லை. அதிகாரத்தில் அவரால் நியமிக்கப்பட்டவர்களை நாம் எதிர்த்தால் அது அவரையே எதிர்ப்பதற்குச் சமமாகும்!
17. சபையில் பொறுப்பு வகிக்கும் சகோதரர்களிடம் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
17 கிறிஸ்தவ சபையில் பொறுப்பு வகிக்கும் சகோதரர்களிடம் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென அப்போஸ்தலன் பவுல் தெரிவித்தார். “உங்களைத் தலைமைதாங்கி நடத்துகிறவர்கள் உங்களைக் குறித்துக் கணக்குக் கொடுக்க வேண்டியிருப்பதால் உங்களைக் காத்து வருகிறார்கள்; ஆகவே, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து, அடிபணிந்து நடங்கள்; அப்போது, அவர்கள் இதைத் துக்கத்தோடு செய்யாமல் சந்தோஷத்தோடு செய்வார்கள்; அவர்கள் இதைத் துக்கத்தோடு செய்தால் நீங்கள்தான் பாதிக்கப்படுவீர்கள்” என்று அவர் எழுதினார். (எபி. 13:17) ஆம், கீழ்ப்படிந்து, அடிபணிந்து நடக்க நம் பங்கில் கடும் முயற்சி தேவை. என்றாலும், கடவுளுடைய அன்பில் நிலைத்திருக்கவே நாம் பாடுபடுகிறோம் என்பதை மனதில் கொள்ளுங்கள். அதற்காக நாம் எடுக்கும் எந்த முயற்சியும் தகுந்ததல்லவா?
யெகோவாவின் பார்வையில் சுத்தமாய் இருங்கள்
18. நாம் ஏன் சுத்தமாய் இருக்க வேண்டுமென கடவுள் எதிர்பார்க்கிறார்?
18 யெகோவாவை நாம் நேசிக்கிறோம் என்பதைக் காட்டுவதற்கு மூன்றாவது வழி அவருடைய பார்வையில் சுத்தமாய் இருக்க முயற்சி செய்வதே. பிள்ளைகள் எப்போதும் சுத்தமாய் இருப்பதற்காக பெற்றோர் பாடுபடுகிறார்கள். ஏன்? ஏனென்றால், பிள்ளையின் ஆரோக்கியத்துக்கும் நலனுக்கும் சுத்தம் ரொம்ப அவசியம். அதோடு, பிள்ளை சுத்தமாய் இருந்தால், அந்த குடும்பத்துக்கு நல்ல பெயரைக் கொண்டுவரும்; பெற்றோர் அந்தப் பிள்ளையை எந்தளவு கண்ணும் கருத்துமாய் வளர்க்கிறார்கள் என்பதையும் காட்டும். அதே காரணங்களுக்காகத்தான், யெகோவாவும் நம்மைச் சுத்தமாய் இருக்கச் சொல்கிறார். நம் ஆரோக்கியத்திற்கு சுத்தம் அவசியம் என்பதை அவர் அறிந்திருக்கிறார். அதோடு, நாம் சுத்தமாய் இருந்தால், அவருக்குப் புகழ் சேரும் என்பதையும் அறிந்திருக்கிறார். இது மிகவும் முக்கியமான விஷயம்; ஏனென்றால், கறைபடிந்த இவ்வுலகில் மற்றவர்களிலிருந்து நாம் வித்தியாசமாய் இருப்பதைப் பார்த்து, நாம் வணங்கும் கடவுளிடம் ஆட்கள் கவர்ந்திழுக்கப்படலாம்.
19. உடல் சுத்தம் முக்கியமென நமக்கு எப்படித் தெரியும்?
19 எந்தெந்த அம்சங்களில் நாம் சுத்தமாய் இருக்க வேண்டும்? சொல்லப்போனால், வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் நாம் சுத்தமாய் இருக்க வேண்டும். பூர்வ இஸ்ரவேலில், உடல் சுத்தம் மிகவும் அவசியம் என்பதை யெகோவா தம் மக்களுக்கு வலியுறுத்தினார். (லேவி. 15:31) கழிவுகளை அகற்றுவது, பண்டபாத்திரங்களைச் சுத்தம் செய்வது, கை கால் கழுவுவது, துணிமணிகளைத் துவைப்பது போன்றவை சம்பந்தமாக திருச்சட்டத்தில் விதிமுறைகள் இருந்தன. (யாத். 30:17-21; லேவி. 11:32; எண். 19:17-20; உபா. 23:13, 14) தங்கள் கடவுளான யெகோவா பரிசுத்தமானவர், அதாவது “சுத்தமானவர்,” “தூய்மையானவர்,” “புனிதமானவர்” என்பது இதன்மூலம் இஸ்ரவேலருக்கு நினைப்பூட்டப்பட்டது. பரிசுத்தமுள்ள கடவுளை வழிபடுகிறவர்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.—லேவியராகமம் 11:44, 45-ஐ வாசியுங்கள்.
20. எந்தெந்த வழிகளில் நாம் சுத்தமாய் இருக்க வேண்டும்?
20 அப்படியானால், நாம் உடலில் மட்டுமல்ல உள்ளத்திலும் சுத்தமாயிருக்க வேண்டும். ஆம், மனதைச் சுத்தமாய் வைத்திருக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். இந்த உலகம் ஒழுக்கக்கேட்டில் உழன்றாலும், நாம் யெகோவாவின் ஒழுக்க நெறிகளை உண்மையாய்ப் பின்பற்றுவோம். மிக முக்கியமாக, நம் வழிபாட்டில் சுத்தமாய் இருக்க கவனம் செலுத்துவோம்; அதாவது நம்முடைய வழிபாடு பொய் மதத்தினால் கறைபடாதபடி பார்த்துக்கொள்வோம். ஏசாயா 52:11-ல் கடவுள் தரும் எச்சரிப்பை எப்போதும் மனதில் வைத்திருப்போம். “புறப்படுங்கள், புறப்படுங்கள், அவ்விடம்விட்டுப் போங்கள்; அசுத்தமானதைத் தொடாதிருங்கள்; . . . அதின் நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள்” என்று அது சொல்கிறது. இன்று பொய் மதத்துடன் எவ்வித சம்பந்தமும் வைத்துக்கொள்ளாமல் இருப்பதன் மூலம் ஆன்மீக ரீதியில் நாம் சுத்தமாய் இருக்கிறோம். அதனால்தான், இன்றைய உலகில் பிரபலமாய் இருக்கிற பொய்மத பண்டிகைகளையும் கொண்டாட்டங்களையும் நாம் தவிர்க்கிறோம். சுத்தமாய் இருப்பது சவாலான விஷயம்தான். ஆனால், அப்படிச் செய்யவே யெகோவாவின் மக்கள் கடும் முயற்சி எடுக்கிறார்கள்; ஏனென்றால், கடவுளுடைய அன்பில் நிலைத்திருக்க அது முக்கியம்.
21. கடவுளுடைய அன்பில் நிலைத்திருப்போம் என்பதில் நாம் எப்படி உறுதியாய் இருக்கலாம்?
21 நாம் என்றென்றும் யெகோவாவின் அன்பில் நிலைத்திருக்க வேண்டுமென அவர் விரும்புகிறார். ஆனால், நாம் ஒவ்வொருவரும் கடவுளுடைய அன்பில் நிலைத்திருக்க நம்மாலான அனைத்தையும் செய்ய வேண்டும். அதற்காக, இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும்; யெகோவாமீது நாம் வைத்திருக்கும் அன்பை அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் காட்ட வேண்டும். அப்படிச் செய்தால், ‘நம் எஜமானராகிய கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் காட்டுகிற அன்பிலிருந்து எதுவும் நம்மைப் பிரிக்க முடியாது’ என்பதில் உறுதியாய் இருக்கலாம்.—ரோ. 8:38, 39.
உங்கள் பதில்?
• கடவுளுடைய அன்பில் நிலைத்திருக்க நம் மனசாட்சி எப்படி உதவும்?
• யெகோவா நேசிக்கிறவர்களை நாம் ஏன் நேசிக்க வேண்டும்?
• அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மரியாதை காட்டுவது ஏன் முக்கியம்?
• கடவுளுடைய மக்களுக்கு சுத்தம் ஏன் முக்கியம்?
[பக்கம் 20-ன் பெட்டி/படம்]
நன்னடத்தையை வளர்க்க உதவும் நூல்
‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்.’ 2008/2009-ல் நடைபெற்ற மாவட்ட மாநாட்டு நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட புத்தகத்தின் (224 பக்கங்களைக் கொண்டது) தலைப்புதான் இது. இப்புதிய புத்தகம் எதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது? யெகோவாவின் நெறிமுறைகளைக் கற்றுக்கொண்டு அவற்றை நேசிப்பதற்காக இப்புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, கிறிஸ்தவ நடத்தையின் மீது இப்புத்தகம் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது. யெகோவாவின் நெறிமுறைகளைப் பின்பற்றி நடப்பதே மிகச் சிறந்த வழி, முடிவில்லா வாழ்வு என்பதை ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’ புத்தகம் நம் மனதில் ஆழமாய் பதியச் செய்யும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, யெகோவாவுக்குக் கீழ்ப்படிவது பாரமானதல்ல என்பதைப் புரிந்துகொள்ளும் விதத்தில் இப்புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. நாம் யெகோவாவை எவ்வளவாய் நேசிக்கிறோம் என்பதைக் காட்டுவதற்கு ஒரு வழி கீழ்ப்படிதல். ஆகவே, ‘யெகோவாவுக்கு நான் ஏன் கீழ்ப்படிய வேண்டும்?’ எனக் கேட்டுக்கொள்வதற்கு இப்புத்தகம் நம்மை உந்துவிக்கும்.
யெகோவாவின் அன்பிலிருந்து விலகும் சோக முடிவுக்கு ஒருவர் வருவதற்குக் காரணம் பெரும்பாலும் நடத்தையே, கோட்பாடு அல்ல. அப்படியானால், நம் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்கும் யெகோவாவின் சட்டங்களையும் நியமங்களையும் நேசிக்கவும் அவற்றை மதிக்கவும் கற்றுக்கொள்வது எவ்வளவு முக்கியம்! சரியானதைச் செய்வதில் உறுதியுடன் இருக்க. . . சாத்தானை பொய்யன் என நிரூபிக்க. . . மிக முக்கியமாக, கடவுளுடைய அன்பில் நிலைத்திருக்க, யெகோவாவின் உலகளாவிய மக்களுக்கு இந்தப் புதிய பிரசுரம் கைகொடுக்கும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.—யூதா 21.
[பக்கம் 18-ன் படம்]
“நான் என் தகப்பனுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து அவருடைய அன்பில் நிலைத்திருப்பது போலவே நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்”