அன்பு காட்ட கிறிஸ்துவின் அன்பு நம்மைத் தூண்டுகிறது
“இயேசு . . . உலகத்திலிருந்த தம்முடையவர்கள்மீது அதுவரை அன்பு காட்டியது போலவே முடிவுவரை அன்பு காட்டினார்.”—யோவா. 13:1.
1, 2. (அ) இயேசு காட்டிய அன்பு எவ்விதத்தில் தலைசிறந்தது? (ஆ) எந்தெந்தச் சூழ்நிலைகளில் அன்பு காட்டுவதைப் பற்றி இந்தக் கட்டுரையில் நாம் சிந்திப்போம்?
அன்பு காட்டுவதில் இயேசு பரிபூரண முன்மாதிரியாகத் திகழ்ந்தார். அவருடைய நடத்தை, பேச்சு, போதனை, தியாக மரணம் என எல்லாவற்றிலுமே அவருடைய அன்பு பளிச்சிட்டது. பூமியில் இருந்தபோது, தம்முடைய வாழ்நாளின் முடிவுவரை மக்கள்மீது அவர் அன்பு காட்டினார்; முக்கியமாகத் தம் சீடர்கள்மீது அன்பு காட்டினார்.
2 அன்பு காட்டுவதில் இயேசு வைத்த முன்மாதிரியே அவருடைய சீடர்கள் பின்பற்றுவதற்குத் தலைசிறந்த முன்மாதிரியாய் இருக்கிறது. அதுபோன்ற அன்பை நம் சகோதர சகோதரிகள் மீதும், மற்றவர்கள் மீதும் காட்டுவதற்கு அது நம்மைத் தூண்டவும் செய்கிறது. தவறு செய்தவர்கள்மீது, அதுவும் படு மோசமான தவறு செய்தவர்கள்மீது, அன்பு காட்டும் விஷயத்தில் இயேசுவிடமிருந்து சபை மூப்பர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதை இந்தக் கட்டுரையில் நாம் சிந்திப்போம். கஷ்டங்கள், பேரழிவுகள், நோய்கள் ஆகியவற்றைச் சந்திக்கிற சகோதர சகோதரிகளுக்கு எவ்விதங்களில் கிறிஸ்தவர்களாகிய நாம் உதவலாம் என்பதையும் சிந்திப்போம்.
3. பேதுரு மிக மோசமான தவறைச் செய்தபோதிலும் இயேசு அவரிடம் எப்படி நடந்துகொண்டார்?
3 இயேசு இறப்பதற்கு முந்தின இரவு, அவருடைய அப்போஸ்தலனான பேதுரு அவரைத் தனக்குத் தெரியாதென மூன்று முறை மறுத்தார். (மாற். 14:66-72) இருந்தபோதிலும், இயேசு முன்னறிவித்தபடியே பேதுரு மனந்திரும்பியபோது இயேசு அவரை மன்னித்தார். அவரிடம் முக்கியமான பொறுப்புகளை ஒப்படைத்தார். (லூக். 22:32; அப். 2:14; 8:14-17; 10:44, 45) மிக மோசமான தவறுகள் செய்தவர்களிடம் இயேசு நடந்துகொண்ட விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
தவறு செய்தவர்களிடம் கிறிஸ்துவின் சிந்தையை வெளிக்காட்டுங்கள்
4. முக்கியமாக எந்தச் சந்தர்ப்பத்தில் கிறிஸ்துவின் சிந்தையை வெளிக்காட்ட வேண்டியிருக்கும்?
4 கிறிஸ்துவின் சிந்தையை நாம் வெளிக்காட்டுவதற்குப் பல சந்தர்ப்பங்கள் வரலாம். அவற்றில் வேதனையூட்டும் ஒரு சந்தர்ப்பம், வீட்டிலோ சபையிலோ யாராவது படு மோசமான தவறைச் செய்துவிடுவதாகும். சாத்தானின் உலகத்திற்கு அழிவு நெருங்கி வந்துகொண்டிருக்கிற இந்தக் கடைசி நாட்களில், இவ்வுலக மனப்பான்மையால் மக்களிடையே ஒழுக்க நெறிகள் இதுவரை இல்லாதளவு சீர்குலைந்து வருவது வருத்தகரமான விஷயம். இந்த உலகின் மோசமான, ஒழுக்கங்கெட்ட சிந்தை, இளைஞர்கள் பெரியவர்கள் என எல்லாரையுமே பாதிக்கிறது; இதன் விளைவாக, சரியான பாதையிலிருந்து அவர்கள் வழிதவறிப்போகிறார்கள். முதல் நூற்றாண்டில்கூட சிலர் வழிதவறிப்போனதால் கிறிஸ்தவ சபையிலிருந்து நீக்கப்பட்டார்கள், மற்றவர்கள் கண்டிக்கப்பட்டார்கள். இன்றும் அவ்வாறே செய்யப்படுகிறது. (1 கொ. 5:11-13; 1 தீ. 5:20) என்றபோதிலும், நியாயவிசாரணை சம்பந்தப்பட்ட காரியங்களைக் கையாளுகிற மூப்பர்கள், தவறு செய்தவர்மீது கிறிஸ்துவைப் போல் அன்பு காட்டுகையில் அது அவர்மீது பலமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
5. தவறு செய்தவர்களிடம் மூப்பர்கள் கிறிஸ்துவின் சிந்தையை எப்படி வெளிக்காட்ட வேண்டும்?
5 இயேசுவைப் போலவே மூப்பர்கள் யெகோவாவின் நீதியான தராதரங்களை எல்லாச் சமயங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது அவர்கள் யெகோவாவைப் போலவே சாந்தத்தையும் கருணையையும் அன்பையும் வெளிக்காட்டுவார்கள். ஒருவர் தான் செய்த தவறை நினைத்து உண்மையிலேயே மனந்திரும்பி, ‘இருதயம் நொறுங்கிப்போனவராக’ ‘மனம் நொந்துபோனவராக’ இருந்தால், ‘அப்படிப்பட்டவரைச் சாந்தமாகச் சரிப்படுத்துவது’ மூப்பர்களுக்குக் கஷ்டமாய் இருக்காது. (சங். 34:18, NW; கலா. 6:1) ஆனால், கொஞ்சமும் அடங்காத, செய்த தவறுக்காகச் சிறிதும் வருந்தாத ஒருவரிடம் மூப்பர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
6. தவறு செய்தவர்களிடம் மூப்பர்கள் எப்படி நடந்துகொள்ளக் கூடாது, ஏன்?
6 தவறு செய்தவர் தனக்குக் கொடுக்கப்பட்ட வேதப்பூர்வ ஆலோசனையை உதறித்தள்ளும்போதோ அடுத்தவர்மீது பழியைச் சுமத்தும்போதோ மூப்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் கோபம் வரலாம். அவர் செய்த தவறால் விளைந்த பாதிப்பின் காரணமாக, அவருடைய செயல்களையும் மனோபாவத்தையும் குறித்து மூப்பர்கள் தங்களுடைய சொந்த அபிப்பிராயங்களைச் சொல்வதற்குத் தூண்டப்படலாம். என்றாலும், கோபப்படுவது ஆபத்தானது; அது, ‘கிறிஸ்துவின் சிந்தையை’ வெளிப்படுத்துவதாக இருக்காது. (1 கொ. 2:16; யாக்கோபு 1:19, 20-ஐ வாசியுங்கள்.) இயேசு தம் காலத்தில் வாழ்ந்தவர்களுக்குத் திட்டவட்டமான எச்சரிப்புகளைக் கொடுத்தார், ஆனால் வெறுப்பைக் காட்டும் வார்த்தைகளையோ புண்படுத்தும் வார்த்தைகளையோ அவர் ஒருபோதும் பயன்படுத்தவில்லை. (1 பே. 2:23) மாறாக, தவறு செய்தவர் மனந்திரும்பி யெகோவாவின் அரவணைப்பை மீண்டும் அனுபவிக்கலாம் என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காண்பித்தார். சொல்லப்போனால், இயேசு இந்த உலகிற்கு வந்ததற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று ‘பாவிகளை மீட்பதாகும்.’—1 தீ. 1:15.
7, 8. நியாயவிசாரணை சம்பந்தப்பட்ட காரியங்களைக் கையாளுகிற மூப்பர்களை எது வழிநடத்த வேண்டும்?
7 சபையால் கண்டிக்கப்பட வேண்டியவர்களை நாம் எப்படிக் கருத வேண்டும் என்பதற்கு இயேசுவின் முன்மாதிரி எவ்வாறு உதவும்? சபையில் நியாயவிசாரணைக் குழுவால் எடுக்கப்படுகிற வேதப்பூர்வ நடவடிக்கை மந்தையைப் பாதுகாக்கும் என்பதையும், கண்டிக்கப்படுகிறவர் மனந்திரும்ப வழிதிறக்கும் என்பதையும் நினைவில் வையுங்கள். (2 கொ. 2:6-8) வருத்தகரமாக, சிலர் மனந்திரும்பாததால் சபைநீக்கம் செய்யப்படுகிறார்கள்; என்றாலும், அவர்களில் அநேகர் பிற்பாடு யெகோவாவிடமும் அவருடைய சபையிடமும் திரும்பி வருவதைப் பார்ப்பது ஊக்கமூட்டுவதாய் இருக்கிறது. மூப்பர்கள் கிறிஸ்துவின் சிந்தையை வெளிக்காட்டும்போது, தவறு செய்தவர் மனம் மாறி காலப்போக்கில் சபையிடம் திரும்பி வருவது அவருக்கு எளிதாக இருக்கலாம். எதிர்காலத்தில், இப்படிப்பட்ட சிலர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேதப்பூர்வ ஆலோசனைகள் அனைத்தையும் ஞாபகத்தில் வைத்திருக்காவிட்டாலும், தன்மானம் பாதிக்காதபடி தங்களை மூப்பர்கள் நடத்தியதையும், தங்களிடம் கிறிஸ்துவைப் போலவே அன்பு காட்டியதையும் நிச்சயம் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்.
8 ஆகவே, மூப்பர்கள் ‘கடவுளுடைய சக்தியினால் பிறப்பிக்கப்படும் குணங்களை,’ முக்கியமாகக் கிறிஸ்து காட்டியது போன்ற அன்பை, வெளிக்காட்ட வேண்டும்; தவறு செய்தவர்கள் வேதப்பூர்வ ஆலோசனையை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்கூட அப்படி வெளிக்காட்ட வேண்டும். (கலா. 5:22, 23) தவறு செய்தவர்களை அவசரப்பட்டு சபைநீக்கம் செய்துவிடக் கூடாது. அவர்கள் யெகோவாவிடம் திரும்பி வரவேண்டுமென்று தாங்கள் விரும்புவதை மூப்பர்கள் வெளிக்காட்ட வேண்டும். தவறு செய்தவர்கள் பிற்பாடு மனந்திரும்பும்போது, அவர்கள் யெகோவாவுக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாய் இருப்பார்கள்; அதோடு, சபைக்குத் திரும்பி வருவதற்கான வழியை எளிதாக்கிய மூப்பர்களுக்கு, அதாவது ‘பரிசுகளாக இருக்கிற மனிதர்களுக்கு,’ நன்றியுள்ளவர்களாய் இருப்பார்கள்.—எபே. 4:8, 11, 12.
முடிவு காலத்தில் கிறிஸ்துவைப் போலவே அன்பு காட்டுதல்
9. சீடர்கள்மீது தமக்கிருந்த அன்பை இயேசு செயலில் காட்டியதற்கு ஓர் உதாரணத்தைத் தருக.
9 இயேசு அன்பைச் செயலில் காட்டிய குறிப்பிடத்தக்க ஒரு சம்பவத்தை லூக்கா பதிவு செய்திருக்கிறார். அழிவைச் சந்திக்கவிருந்த எருசலேம் நகரத்திலிருந்து யாருமே தப்பியோடாதபடி ரோமப் படைவீரர்கள் அதை முற்றுகையிடும் காலம் வருமென இயேசு அறிந்திருந்தார். அதனால் தம் சீடர்களை அன்போடு இவ்வாறு எச்சரித்திருந்தார்: “எருசலேம் படைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கும்போது அதன் அழிவு நெருங்கிவிட்டதென்று அறிந்துகொள்ளுங்கள்.” அதற்காக அவர்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது? தெளிவான, திட்டவட்டமான பின்வரும் அறிவுரைகளை இயேசு முன்கூட்டியே கொடுத்திருந்தார்: “அப்போது, யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பியோட வேண்டும். எருசலேமுக்குள் இருக்கிறவர்கள் வெளியேற வேண்டும்; நாட்டுப்புறங்களில் இருக்கிறவர்களோ எருசலேமுக்குள் நுழையாதிருக்க வேண்டும். ஏனென்றால், முன்பு எழுதப்பட்டவையெல்லாம் நிறைவேறும்படி, அவை நீதியைச் சரிக்கட்டும் நாட்களாக இருக்கும்.” (லூக். 21:20-22) கீழ்ப்படியும் மனப்பான்மை காட்டியவர்கள், பொ.ச. 66-ல் எருசலேம் ரோமப் படைகளால் சூழப்பட்ட பிறகு, இயேசுவின் அறிவுரைகளின்படியே செயல்பட்டார்கள்.
10, 11. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் எருசலேமிலிருந்து தப்பியோடியதைப் பற்றிச் சிந்திப்பது, ‘மிகுந்த உபத்திரவத்திற்கு’ தயாராயிருக்க நமக்கு எப்படி உதவும்?
10 எருசலேமிலிருந்து கிறிஸ்தவர்கள் தப்பியோடிய சமயத்தில் ஒருவருக்கொருவர் அன்பு காட்ட வேண்டியிருந்தது; அதுவும் கிறிஸ்துவைப் போலவே காட்ட வேண்டியிருந்தது. தங்களிடம் இருந்தவற்றை அவர்கள் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டியிருந்தது. எருசலேம் நகரத்தைக் குறித்து இயேசு சொன்ன தீர்க்கதரிசனம் அந்தச் சமயத்தில் நிறைவேறியபோதிலும், பின்பு அது பெரியளவிலும் நிறைவேறவிருந்தது. அவர் இவ்வாறு முன்னறிவித்தார்: “மிகுந்த உபத்திரவம் உண்டாகும்; அப்படிப்பட்ட உபத்திரவம் உலகத்தின் ஆரம்பம்முதல் இதுவரை வந்ததில்லை, அதன் பின்பும் வரப்போவதில்லை.” (மத். 24:17, 18, 21) விரைவில் வரவிருக்கும் ‘மிகுந்த உபத்திரவத்தின்’ சமயத்திலும் சரி அதற்கு முன்பும் சரி, நமக்குக் கஷ்டங்களும் இழப்புகளும் நேரிடலாம். கிறிஸ்துவின் சிந்தையை வெளிக்காட்டுவது அவற்றைச் சமாளிக்க நமக்கு உதவும்.
11 அந்தச் சமயங்களில் கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றி நாம் ஒருவருக்கொருவர் சுயநலமற்ற அன்பைக் காட்ட வேண்டியிருக்கும். இது சம்பந்தமாக பவுல் இவ்வாறு ஆலோசனை கூறினார்: ‘நாம் ஒவ்வொருவரும் சக மனிதர்களுக்கு நன்மை உண்டாகும்படி, அதாவது அவர்களைப் பலப்படுத்தும்படி, அவர்களுக்குப் பிரியமாக நடக்க வேண்டும். கிறிஸ்துவும் தமக்கே பிரியமாக நடக்கவில்லை . . . சகிப்புத்தன்மையையும் ஆறுதலையும் அளிக்கிற கடவுள், கிறிஸ்து இயேசுவுக்கு இருந்த அதே சிந்தையை உங்களுக்கும் அருளுவாராக.’—ரோ. 15:2, 3, 5.
12. எப்படிப்பட்ட அன்பை நாம் இன்று வளர்த்துக்கொள்ள வேண்டும், ஏன்?
12 இயேசுவின் அன்பை ருசித்திருந்த பேதுருவும்கூட கிறிஸ்தவர்களை, “வெளிவேஷமற்ற சகோதரப் பாசத்தை” வளர்க்கும்படியும், ‘சத்தியத்திற்குக் கீழ்ப்படியும்படியும்,’ ‘இருதயப்பூர்வ அன்பை ஒருவருக்கொருவர் ஊக்கமாகக் காட்டும்படியும்’ அறிவுறுத்தினார். (1 பே. 1:22) கிறிஸ்து காட்டிய இப்படிப்பட்ட குணங்களை இன்று நாம் முன்பைவிட அதிகமாக வளர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், கடவுளுடைய மக்கள் எல்லாருக்கும் ஏற்கெனவே அழுத்தங்கள் அதிகரித்துவருகின்றன. சமீப காலமாகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கிற திடீர் வீழ்ச்சி காட்டுகிறபடி, இந்த உலகிலுள்ள எந்தவொரு அமைப்புக்கும் எதுவும் நேரிடலாம்; எனவே, நம்மில் யாருமே அவற்றின்மீது நம்பிக்கை வைக்கக் கூடாது. (1 யோவான் 2:15-17-ஐ வாசியுங்கள்.) மாறாக, இந்தப் பொல்லாத உலகிற்கு முடிவு நெருங்கி வந்துகொண்டிருக்கையில், யெகோவாவிடமும் சக கிறிஸ்தவர்களிடமும் இன்னும் நெருங்கி வர வேண்டும்; கிறிஸ்தவ சபைக்குள் இருப்பவர்களோடு உண்மையான நட்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். பவுல் இவ்வாறு ஆலோசனை கூறினார்: “ஒருவருக்கொருவர் சகோதர அன்பையும் கனிவான பாசத்தையும் காட்டுங்கள்; ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுப்பதில் முந்திக்கொள்ளுங்கள்.” (ரோ. 12:10) இந்தக் குறிப்பை வலியுறுத்தும் விதத்தில் பேதுரு இவ்வாறு சொன்னார்: “எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள்; ஏனென்றால், அன்பு திரளான பாவங்களை மூடும்.”—1 பே. 4:8.
13-15. பேரழிவுகளுக்குப் பின்பு சில சகோதரர்கள் எவ்வழிகளில் கிறிஸ்துவைப் போலவே அன்பு காட்டியிருக்கிறார்கள்?
13 உலகெங்கும் யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்துவைப் போலவே உண்மையான அன்பு காட்டுவதில் பெயர்பெற்று விளங்குகிறார்கள். 2005-ல், ஐக்கிய மாகாணங்களின் தென்பகுதியில் பல இடங்கள் புயல்காற்றினாலும் சூறாவளியினாலும் தாக்கப்பட்டன; அச்சமயத்தில் உதவிக்கரம் நீட்டிய யெகோவாவின் சாட்சிகளுடைய உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இயேசுவின் முன்மாதிரியால் தூண்டப்பட்டு, 20,000-க்கும் மேலான வாலண்டியர்கள் களமிறங்கினார்கள். அவர்களில் அநேகர், கஷ்டத்தில் தவித்த சக கிறிஸ்தவர்களுக்கு உதவுவதற்காக வசதியான வீடுகளையும் நல்ல வேலைகளையும் விட்டுவிட்டு அங்கே சென்றிருந்தார்கள்.
14 உதாரணமாக, ஓர் இடத்தில், புயலினால் 30 அடி உயரத்திற்குச் சீறி எழுந்த கடல் அலை, கிட்டத்தட்ட 80 கிலோமீட்டர் தூரம் ஊருக்குள் பாய்ந்தது. மூன்றில் ஒரு பங்கு வீடுகளும் கட்டிடங்களும் சர்வ நாசமாயின. நிவாரணப் பணியில் ஈடுபடுவதற்காகச் சாட்சிகள் பல்வேறு நாடுகளிலிருந்து வாலண்டியர்களாய் வந்திருந்தார்கள்; கூடவே கட்டுமானப் பொருள்களையும் கருவிகளையும் எடுத்துவந்திருந்தார்கள். அவர்களில் சிலர் கட்டுமானப் பணியில் கைதேர்ந்தவர்களாக இருந்தார்கள். எந்த வேலையையும் செய்ய மனமுள்ளவர்களாகவும் இருந்தார்கள். அந்த வாலண்டியர்களில், விதவைகளாயிருந்த அக்கா-தங்கை இருவர் தங்களுடைய பெட்டி படுக்கையையெல்லாம் ஒரு சிறிய டிரக்கில் ஏற்றிக்கொண்டு 3,000 கிலோமீட்டர் தூரத்திற்கும் மேலாகப் பயணம் செய்தார்கள். அவர்களில் ஒரு சகோதரி அந்த இடத்திலேயே தங்கிவிட்டார்; அவர் உள்ளூர் நிவாரணக் குழுவுக்கு இன்னமும் உதவி செய்துவருகிறார், ஒழுங்கான பயனியராகவும் சேவை செய்துவருகிறார்.
15 பாதிக்கப்பட்ட அந்த இடத்தில், சாட்சிகளுடைய வீடுகள் உட்பட 5,600-க்கும் அதிகமான வீடுகள் மீண்டும் கட்டப்பட்டன அல்லது பழுதுபார்க்கப்பட்டன. தங்கள்மீது சகோதரர்கள் அடைமழையாய்ப் பொழிந்த அன்பைக் கண்டு அங்கிருந்த சாட்சிகள் எப்படி உணர்ந்தார்கள்? சகோதரி ஒருவரின் வீடு நாசமாகிவிட்டதால், அவர் ஒரு சிறிய டிரெய்லருக்குள் தஞ்சம் புகுந்திருந்தார்; அதன் கூரை ஒழுகியது, அதிலிருந்த அடுப்பு உடைந்திருந்தது. சகோதரர்கள் அந்தச் சகோதரிக்கு ஓர் எளிமையான, ஆனால் சௌகரியமான ஒரு வீட்டைக் கட்டிக்கொடுத்தார்கள். புதிதாகக் கட்டப்பட்டிருந்த தன்னுடைய அழகான வீட்டைப் பார்த்த அந்தச் சகோதரிக்கு, யெகோவாமீதும் சகோதரர்கள்மீதும் நன்றி பொங்கியது, அவர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். சூறாவளி தாக்கப்பட்ட வேறுபல இடங்களில், சாட்சிகளுக்குப் புதிதாக வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்ட பிறகும் அவர்கள் தற்காலிகக் குடியிருப்புகளிலேயே ஒரு வருடத்திற்கோ அதற்கும் மேலாகவோ தங்கியிருந்தார்கள். எதற்காக? நிவாரணப் பணியாளர்கள் அவற்றில் தங்கிக்கொள்வதற்காக. கிறிஸ்துவின் சிந்தையை வெளிக்காட்டிய இவர்களுடைய உதாரணம் எப்பேர்ப்பட்டது!
நோயுற்றவர்கள்மீது கிறிஸ்துவைப் போலவே அன்பு காட்டுதல்
16, 17. நோயுற்றவர்களிடம் நாம் எவ்வழிகளில் கிறிஸ்துவின் சிந்தையை வெளிக்காட்டலாம்?
16 இதுபோன்ற படு பயங்கரமான இயற்கைப் பேரழிவுகளின் சீற்றத்துக்கு நாம் எல்லாருமே ஆளாகியிருக்க மாட்டோம்; ஆனால், நாம் எல்லாருமே நோயால் பாதிக்கப்படுகிறோம். நோயுற்றவர்கள்மீது இயேசு காட்டிய அன்பு நமக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறது. அவருக்கு அன்பு இருந்ததால்தான் அவர்களைக் கண்டு மனதுருகினார். தம்மிடம் அழைத்துவரப்பட்ட “எல்லா நோயாளிகளையும் குணப்படுத்தினார்.”—மத். 8:16; 14:14.
17 இன்று, இயேசுவைப் போலவே அற்புத குணமளிக்கும் சக்தி கிறிஸ்தவர்களிடம் இல்லை. ஆனால், நோயுற்றவர்கள்மீது அவர்கள் அவரைப் போலவே இரக்கம் காட்டுகிறார்கள். அதை எப்படிக் காட்டுகிறார்கள்? அதற்கு ஓர் அத்தாட்சியாக, மூப்பர்கள் நோயுற்ற சகோதர சகோதரிகளுக்கு உதவ சில ஏற்பாடுகளைச் செய்து அவை ஒழுங்காக நடைபெறுகின்றனவா எனப் பார்த்துக்கொள்கிறார்கள்; மத்தேயு 25:39, 40-ல் உள்ள நியமத்திற்கிசைய அவ்வாறு செய்கிறார்கள்.a (வசனத்தை வாசியுங்கள்.)
18. ஒரு சகோதரிமீது இரண்டு சகோதரிகள் எப்படி உண்மையான அன்பைக் காட்டினார்கள், அதனால் கிடைத்த பலன்கள் என்ன?
18 ஒருவர் மூப்பராக இருந்தால்தான் மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதில்லை. சார்லின் என்ற 44 வயது சகோதரியின் அனுபவத்தை எடுத்துக்கொள்வோம். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் பத்து நாள்தான் உயிரோடிருப்பார் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். இந்நிலையில், அந்தச் சகோதரிக்கும், அவரை இராப்பகலாகக் கவனித்துவந்த அவருடைய அன்புக் கணவருக்கும் உதவி தேவைப்பட்டதைப் புரிந்துகொண்டு, ஷாரன், நிக்கோலெட் என்ற இரண்டு சகோதரிகள் மனமுவந்து அவர்களுக்கு உதவிசெய்தார்கள். சார்லின் மரணப்படுக்கையில் அவதிப்பட்ட நாட்களெல்லாம் அவர் பக்கத்திலேயே இருந்து கவனித்துக்கொண்டார்கள். பத்து நாள் என்பது ஆறு வாரங்களுக்கு நீடித்தது, என்றாலும் கடைசிவரை அந்தச் சகோதரிகள் தங்களுடைய அன்பை வெளிக்காட்டினார்கள். “ஒருவர் சாகப்போகிறார் என்று தெரியவரும்போது அதைத் தாங்கிக்கொள்ளவே முடியாது. ஆனாலும், யெகோவா எங்களுக்குப் பலத்தைத் தந்தார். இந்த அனுபவத்தால் நாங்கள் யெகோவாவோடும் நெருங்கி வந்தோம், ஒருவரோடு ஒருவரும் நெருங்கி வந்தோம்” என்று ஷாரன் சொல்கிறார். சார்லினின் கணவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “இந்த இரண்டு சகோதரிகளும் செய்த அன்பான உதவிகளை ஒருநாளும் நான் மறக்க மாட்டேன். அவர்களுடைய நல்ல மனதும், நம்பிக்கையான மனப்பான்மையுமே என் அருமை மனைவி நிம்மதியாகக் கண்மூட உதவியது; அதுமட்டுமல்ல, உடல் ரீதியிலும், உணர்ச்சி ரீதியிலும் இடிந்துபோயிருந்த எனக்கு உண்மையிலேயே தெம்பூட்டியது. அவர்களுக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவர்கள் செய்த தியாகங்கள் யெகோவாமீது எனக்கிருந்த விசுவாசத்தைப் பலப்படுத்தின, உலகெங்குமுள்ள நம் சகோதர சகோதரிகள்மீது எனக்கிருந்த அன்பையும் பலப்படுத்தின.”
19, 20. (அ) கிறிஸ்துவின் சிந்தையில் உட்பட்டுள்ள என்ன ஐந்து அம்சங்களைப் பற்றி நாம் கலந்தாலோசித்தோம்? (ஆ) என்ன செய்ய நீங்கள் தீர்மானமாய் இருக்கிறீர்கள்?
19 இயேசுவின் சிந்தையில் உட்பட்டுள்ள ஐந்து அம்சங்களைப் பற்றி இந்த மூன்று கட்டுரைகளில் நாம் கலந்தாலோசித்தோம்; அதோடு, அவரைப் போலவே எப்படிச் சிந்திக்க வேண்டும், எப்படிச் செயல்பட வேண்டும் என்பதைக் கலந்தாலோசித்தோம். ஆகையால், இயேசுவைப் போலவே நாம் “சாந்தமும் மனத்தாழ்மையுமாக” நடந்துகொள்வோமாக. (மத். 11:29) மற்றவர்களுடைய குற்றங்குறைகள் நமக்கு வெளிப்படையாகத் தெரிகிறபோதிலும் அவர்களிடம் கருணையோடு நடந்துகொள்வோமாக. அதுமட்டுமல்ல எந்தப் பிரச்சினை வந்தாலும், யெகோவா நம்மிடமிருந்து எதிர்பார்க்கிற எல்லாக் காரியங்களிலும் தைரியமாய்க் கீழ்ப்படிவோமாக.
20 கடைசியாக, கிறிஸ்து எப்படி “முடிவுவரை” அன்பு காட்டினாரோ அப்படியே நாமும் எல்லாச் சகோதரர்கள்மீதும் அன்பு காட்ட வேண்டும். அப்படிப்பட்ட அன்புதான், நாம் இயேசுவின் உண்மையான சீடர்கள் என்பதற்கு அடையாளம். (யோவா. 13:1, 34, 35) ஆகவே, “தொடர்ந்து சகோதர அன்பைக் காட்டுங்கள்,” ஆம், தயங்காமல் காட்டுங்கள்! (எபி. 13:1) யெகோவாவுக்குப் புகழ் சேர்ப்பதற்காகவும் மற்றவர்களுக்கு உதவுவதற்காகவும் உங்கள் வாழ்க்கையை அர்ப்பணியுங்கள்! உங்களுடைய உள்ளப்பூர்வமான முயற்சிகளை யெகோவா நிச்சயம் ஆசீர்வதிப்பார்.
[அடிக்குறிப்பு]
a “‘குளிர்காய்ந்து பசியாறுங்கள்,’ என்று சொல்லுவதைவிட அதிகம் செய்யுங்கள்” என்ற தலைப்பிலுள்ள கட்டுரையை ஜூலை 1, 1987 தேதியிட்ட காவற்கோபுரத்தில் காண்க.
உங்களால் விளக்க முடியுமா?
• தவறு செய்தவர்களிடம் மூப்பர்கள் கிறிஸ்துவின் சிந்தையை எப்படி வெளிக்காட்டலாம்?
• இந்த முடிவு காலத்தில் கிறிஸ்துவைப் போலவே அன்பு காட்டுவது ஏன் மிகவும் முக்கியம்?
• நோயுற்றவர்கள்மீது கிறிஸ்துவைப் போலவே நாம் எப்படி அன்பு காட்டலாம்?
[பக்கம் 17-ன் படம்]
தவறு செய்தவர்கள் யெகோவாவிடம் திரும்பி வரவேண்டுமென்று மூப்பர்கள் விரும்புகிறார்கள்
[பக்கம் 18-ன் படம்]
எருசலேமிலிருந்து தப்பியோடிய கிறிஸ்தவர்கள் இயேசுவின் சிந்தையை எப்படி வெளிக்காட்டினார்கள்?
[பக்கம் 19-ன் படம்]
யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்துவைப் போலவே உண்மையான அன்பைக் காட்டுவதில் பெயர்பெற்று விளங்குகிறார்கள்