தெய்வீகக் கல்வியே ஒப்பற்ற செல்வம்
“உண்மையில், . . . கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே ஒப்பற்ற செல்வம் என்பதால், மற்ற எல்லாவற்றையும் நஷ்டமென்று கருதுகிறேன்.”—பிலி. 3:8.
1, 2. கிறிஸ்தவர்கள் சிலர் எதைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள், ஏன்?
ராபர்ட் சிறுவயதிலிருந்தே படிப்பில் படுசுட்டி! அவனுக்கு எட்டு வயதாக இருந்தபோது, அவனுடைய ஆசிரியைகளில் ஒருவர் அவனுடைய வீட்டிற்குச் சென்றிருந்தார். எந்தத் துறையிலும் அவனால் சாதிக்க முடியும் என்று சொல்லி ஊக்கமளித்தார். ‘நிச்சயம் ஒருநாள் நான் உன்னை ஒரு டாக்டராகப் பார்ப்பேன்!’ என்று நம்பிக்கை தெரிவித்தார். பிற்பாடு, மேல்நிலைப் பள்ளித் தேர்வில் ராபர்ட் அதிக மதிப்பெண் வாங்கி சாதனை படைத்தான்; அதனால், அவனுடைய நாட்டில் பெயர்பெற்று விளங்கிய பல்கலைக்கழங்களில் சேருவதற்கான வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது. ஆனால், அந்த ‘அரிய’ வாய்ப்பை உதறிவிட்டு, தான் வைத்த இலக்கின்படியே அவன் ஓர் ஒழுங்கான பயனியர் ஆனான்.
2 ராபர்ட்டுக்குக் கிடைத்ததைப் போலவே கிட்டத்தட்ட எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் இந்த உலகத்தில் ‘வெற்றி’ பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. சிலர், ஆன்மீக இலக்குகளை அடைவதற்காக, அத்தகைய வாய்ப்புகளை முழுமையாய்ப் பயன்படுத்தாதிருக்கிறார்கள். (1 கொ. 7:29-31) இப்படிப்பட்டவர்கள் பிரசங்க வேலையில் முழுமூச்சுடன் ஈடுபடுவதற்குக் காரணம் என்ன? யெகோவாமீது அவர்களுக்கு இருக்கும் அன்பு முக்கியக் காரணமாய் இருப்பதோடு, அவர் புகட்டும் கல்வியை அவர்கள் ஒப்பற்ற செல்வமாகக் கருதுவதும் காரணமாய் இருக்கிறது. ஒருவேளை உங்களுக்குச் சத்தியம் கிடைக்கவில்லை என்றால் உங்கள் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதைச் சமீபத்தில் யோசித்ததுண்டா? யெகோவாவினால் கற்பிக்கப்பட்டிருப்பதால் கிடைத்திருக்கிற நிகரற்ற ஆசீர்வாதங்கள் சிலவற்றை யோசித்துப் பார்ப்பது, நற்செய்தியின் மீது தொடர்ந்து போற்றுதலை வளர்க்க உதவும்; அதைப் பக்திவைராக்கியத்துடன் மற்றவர்களுக்கு அறிவிக்கவும் உதவும்.
கடவுளால் கற்பிக்கப்படுவது மாபெரும் பாக்கியம்
3. அபூரண மனிதர்களுக்குக் கற்பிக்க யெகோவா மனமுள்ளவராக இருக்கிறாரென நாம் ஏன் நிச்சயமாயிருக்கலாம்?
3 அபூரண மனிதர்களுக்குக் கற்பிக்க யெகோவா மனமுள்ளவராக இருப்பது அவருடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது. பரலோக வாழ்க்கைக்கு நியமிக்கப்பட்டவர்களைப் பற்றி ஏசாயா 54:13 தீர்க்கதரிசனமாக இவ்வாறு சொல்கிறது: ‘உன் பிள்ளைகளெல்லாரும் யெகோவாவால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.’ இந்த வார்த்தைகள் கிறிஸ்துவின் ‘வேறே ஆடுகளுக்கும்’ பொருந்துகிறது. (யோவா. 10:16) நம்முடைய நாளில் நிறைவேறிக்கொண்டிருக்கிற ஒரு தீர்க்கதரிசனத்திலிருந்து இது தெளிவாகத் தெரிகிறது. எல்லாத் தேசத்து மக்களும் உண்மை வணக்கத்திடம் திரண்டு வருகிற காட்சியை ஏசாயா ஒரு தரிசனத்தில் கண்டார். அதை இவ்வாறு விவரித்தார்: ‘திரளான ஜனங்கள் புறப்பட்டுவந்து, நாம் யெகோவாவின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குக் கற்பிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்.’ (ஏசா. 2:1-3) கடவுளால் கற்பிக்கப்படுவது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!
4. தம்மால் கற்பிக்கப்படுகிறவர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருக்க வேண்டுமென யெகோவா எதிர்பார்க்கிறார்?
4 தெய்வீகக் கல்வியைப் பெற நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்? முக்கியமாய், நாம் சாந்தமும் மனத்தாழ்மையும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். ‘யெகோவா நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; . . . சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்’ எனச் சங்கீதக்காரனான தாவீது எழுதினார். (சங். 25:8, 9) இயேசுவும் ஜெபத்தில் இவ்வாறு தெரிவித்தார்: “தகப்பனே, பரலோகத்திற்கும் பூமிக்கும் எஜமானரே, அனைவர் முன்பாகவும் நான் உங்களைப் புகழ்கிறேன்; ஏனென்றால், இந்த விஷயங்களை ஞானிகளுக்கும் அறிவாளிகளுக்கும் மறைத்து குழந்தைகளுக்கு வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.” (லூக். 10:21) ‘தாழ்மையுள்ளவர்களுக்கு அளவற்ற கருணையை அருளுகிற’ இப்படிப்பட்ட கடவுளிடம் நீங்கள் ஈர்க்கப்படுகிறீர்கள், அல்லவா?—1 பே. 5:5.
5. கடவுளைப் பற்றிய அறிவை எவற்றின் மூலமாக மட்டுமே நாம் பெற்றிருக்கிறோம்?
5 யெகோவாவின் ஊழியர்களான நாம், சொந்தத் திறமையினாலும் ஞானத்தினாலும்தான் சத்தியத்தைக் கண்டுபிடித்தோமா? இல்லவே இல்லை! உண்மையில், நம்முடைய சொந்த முயற்சியால் கடவுளைப் பற்றி நாம் அறிந்திருக்கவே முடியாது. இயேசு இவ்வாறு சொன்னார்: “என்னை அனுப்பிய தகப்பன் ஒருவனை ஈர்க்காவிட்டால் எவனும் என்னிடம் வர முடியாது.” (யோவா. 6:44) ‘எல்லாத் தேசங்களையும் சேர்ந்த பொக்கிஷமானவர்களை,’ அதாவது செம்மறியாடு போன்ற ஆட்களை, பிரசங்க வேலையின் மூலமாகவும், தம்முடைய சக்தியின் மூலமாகவும் யெகோவா ஈர்த்துவருகிறார். (ஆகா. 2:7, NW) யெகோவா தமது மகனிடம் ஈர்த்திருக்கிற ஆட்களில் நீங்களும் ஒருவராக இருப்பதற்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறீர்கள், அல்லவா?—எரேமியா 9:23, 24-ஐ வாசியுங்கள்.
வாழ்க்கையைச் செதுக்கிச் சீராக்குவதற்கான வல்லமை
6. ‘யெகோவாவை அறிகிற அறிவு’ மக்கள்மீது என்ன அபாரமான மாற்றங்களை ஏற்படுத்தலாம்?
6 மனிதர்களுடைய சுபாவத்தில் தற்போது ஏற்பட்டுவருகிற மாற்றங்களைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசனம் தத்ரூபமாகச் சித்தரித்தது. முன்பு ஆக்ரோஷமானவர்களாக இருந்தவர்கள், சாந்தமானவர்களாக மாறியிருக்கிறார்கள். (ஏசாயா 11:6-9-ஐ வாசியுங்கள்.) இனம், தேசம், ஜாதி, கலாச்சாரம் போன்ற வேற்றுமைகள் காரணமாக ஒருவரையொருவர் பகைத்துக்கொண்டிருந்தவர்கள் தற்போது ஒற்றுமையாக வாழக் கற்றிருக்கிறார்கள். ஒருவிதத்தில், “தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாக” மாற்றியிருக்கிறார்கள். (ஏசா. 2:4) இந்த அபாரமான மாற்றங்களுக்குக் காரணம் என்ன? ‘யெகோவாவை அறிகிற அறிவை’ அவர்கள் பெற்றிருக்கிறார்கள், அதைத் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்திருக்கிறார்கள். கடவுளுடைய ஊழியர்கள் அபூரணர்களாக இருக்கிறபோதிலும், உண்மையில் அவர்கள் அனைவரும் சர்வதேச சகோதரத்துவத்தின் பாகமாக இருக்கிறார்கள். நற்செய்திக்கு உலகெங்கும் கிடைத்துவருகிற வரவேற்பும், அந்த நற்செய்தியினால் விளைந்திருக்கிற நல்ல பலன்களும் தெய்வீகக் கல்வி நிச்சயமாகவே ஒப்பற்ற செல்வம் என்பதற்குச் சான்றளிக்கின்றன.—மத். 11:19.
7, 8. (அ) “ஆழமாக வேரூன்றிய” என்ன சில காரியங்களைத் தகர்த்தெறிய தெய்வீகக் கல்வி மக்களுக்கு உதவுகிறது? (ஆ) தெய்வீகக் கல்வி யெகோவாவுக்குப் புகழ்சேர்க்கிறது என்பதை எது காட்டுகிறது?
7 கடவுளுடைய மக்கள் செய்கிற வேலையை அப்போஸ்தலன் பவுல் ஓர் ஆன்மீகப் போருக்கு ஒப்பிட்டுப் பேசினார். “எங்களுடைய போராயுதங்கள் இந்த உலகத்தார் பயன்படுத்துவதைப் போன்ற போராயுதங்கள் அல்ல; ஆனால், அவை கடவுளால் கொடுக்கப்பட்டவை; ஆழமாக வேரூன்றியவற்றைத் தகர்த்தெறிவதற்கு வல்லமை பெற்றவை. தவறான யோசனைகளையும், கடவுளைப் பற்றிய அறிவுக்கு எதிராகத் தலைதூக்குகிற மேட்டிமையான எல்லாவற்றையும் நாங்கள் தகர்த்தெறிந்து வருகிறோம்” என்று அவர் எழுதினார். (2 கொ. 10:4, 5) “ஆழமாக வேரூன்றிய” என்னென்ன சில காரியங்களிலிருந்து தெய்வீகக் கல்வி மக்களை விடுவிக்கிறது? பொய்ப் போதனைகள், மூட நம்பிக்கைகள், மனித தத்துவங்கள் போன்ற காரியங்களிலிருந்து மக்களை அது விடுவிக்கிறது. (கொலோ. 2:8) கெட்ட பழக்கவழக்கங்களை விட்டொழிக்கவும் தெய்வீகக் குணங்களை வளர்க்கவும் மக்களுக்கு உதவுகிறது. (1 கொ. 6:9-11) அதுமட்டுமல்ல, குடும்ப வாழ்க்கையை மேம்படுத்துகிறது. நம்பிக்கை இழந்தவர்களுக்கு வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தைக் கற்பிக்கிறது; அதன்மீது ஒரு பிடிப்பை ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட கல்விதான் இன்று எல்லாருக்குமே தேவை.
8 யெகோவாவின் உதவியோடு மக்கள் வளர்த்துக்கொள்கிற குணங்களில் ஒன்று, நேர்மை. (எபி. 13:18) இதற்கு உதாரணமாக ஓர் அனுபவத்தைக் கவனியுங்கள்: இந்தியாவில் வசிக்கிற ஒரு பெண் பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டார், காலப்போக்கில் ஞானஸ்நானம் பெறாத பிரஸ்தாபியானார். ஒருநாள், ராஜ்யமன்றக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்; அப்போது, பஸ் ஸ்டான்ட் அருகே ஒரு தங்கச் சங்கிலி கீழே கிடப்பதைப் பார்த்தார்; அதன் மதிப்பு சுமார் நாற்பதாயிரம் ரூபாய். அவர் ஏழையாக இருந்தபோதிலும், அந்தச் சங்கிலியைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அங்கிருந்த போலீஸ் அதிகாரியால் தன் கண்களையே நம்ப முடியவில்லை! பிற்பாடு, மற்றொரு அதிகாரி அந்தப் பிரஸ்தாபியிடம், “இந்தச் சங்கிலியை நீங்களே வைத்துக்கொள்ள வேண்டுமென ஏன் உங்களுக்குத் தோன்றவில்லை?” என்று கேட்டார். அதற்கு அவர், “பைபிள்தான் காரணம். நேர்மையாக நடந்துகொள்ள அதுதான் எனக்கு உதவியது” என்றார். அவர் சொன்ன பதில் அந்த அதிகாரியின் மனதைத் தொட்டது; உடனே அவர், அந்தப் பிரஸ்தாபியுடன் வந்திருந்த கிறிஸ்தவ மூப்பரைப் பார்த்து, “இந்த மாநிலத்தில் சுமார் 3 கோடியே எண்பது லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்களில் இந்தப் பெண்ணைப் போல் பத்துப் பேரை மாற்றினீர்கள் என்றால்கூட, அது மிகப் பெரிய சாதனையாக இருக்கும்!” என்று சொல்லிப் பாராட்டினார். தெய்வீகக் கல்வி லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையை இப்படிச் செதுக்கிச் சீராக்கியிருப்பதைப் பார்க்கும்போது, யெகோவாவுக்குப் புகழ்சேர்க்க நம் நெஞ்சம் துடிக்கிறது, அல்லவா?
9. மக்களால் தங்கள் வாழ்க்கையில் எப்படி மாபெரும் மாற்றங்களைச் செய்ய முடிந்திருக்கிறது?
9 மாற்றும் வல்லமை படைத்த கடவுளுடைய வார்த்தையும், அவருடைய சக்தியுமே வாழ்க்கையில் மாபெரும் மாற்றங்களைச் செய்ய மக்களுக்கு உதவுகின்றன. (ரோ. 12:2; கலா. 5:22, 23) கொலோசெயர் 3:10 இவ்வாறு சொல்கிறது: “கடவுள் அருளுகிற புதிய சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள்; அதாவது, திருத்தமான அறிவின் மூலம் உங்கள் சுபாவத்தைக் கடவுளுடைய சாயலுக்கு ஏற்ப தொடர்ந்து புதிதாக்குங்கள்.” ஒரு நபருடைய சுய ரூபத்தை வெளிப்படுத்துகிற வல்லமை கடவுளுடைய வார்த்தைக்கு இருக்கிறது; அதோடு, அந்த நபர் சிந்திக்கிற விதத்தையும், சில காரியங்களின்மீது அவருக்கிருக்கிற அபிப்பிராயத்தையும் மாற்றிவிடுகிற வல்லமை அதற்கு இருக்கிறது. (எபிரெயர் 4:12-ஐ வாசியுங்கள்.) ஆகவே, ஒரு நபர் பைபிளிலுள்ள திருத்தமான அறிவைப் பெற்றுக்கொண்டு, யெகோவாவின் நீதியான நெறிகளுக்கு இசைவாக வாழ்வதன் மூலம் கடவுளுடைய நண்பராய் ஆகலாம், என்றென்றும் வாழ்கிற நம்பிக்கையையும் பெறலாம்.
எதிர்காலத்திற்காகத் தயாராதல்
10. (அ) ஏன் யெகோவாவால் மட்டுமே நம்மை எதிர்காலத்திற்காகத் தயார்ப்படுத்த முடியும்? (ஆ) சீக்கிரத்தில் பூமி முழுவதிலும் என்ன மாற்றங்கள் நிகழவிருக்கின்றன?
10 எதிர்காலத்தில் நடக்கப்போவதை யெகோவா அறிந்திருப்பதால், அதற்காக நம்மைத் தயார்ப்படுத்த அவர் ஒருவரால் மட்டுமே முடியும். மனிதகுலத்தின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டுமென்று தீர்மானிப்பவர் அவரே. (ஏசா. 46:9, 10) ‘யெகோவாவுடைய பெரிய நாள் சமீபித்திருக்கிறது’ என பைபிள் தீர்க்கதரிசனம் சொல்கிறது. (செப். 1:14) அந்த நாளின்போது, நீதிமொழிகள் 11:4-ல் சொல்லப்பட்டுள்ள பின்வரும் வார்த்தைகள் கண்டிப்பாக நிறைவேறும்: “கோபாக்கினை நாளில் ஐசுவரியம் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும்.” எனவே, சாத்தானுடைய உலகத்தை யெகோவா நியாயந்தீர்க்கப்போகிற சமயத்தில், நமக்கு அவருடைய அங்கீகாரம் இருக்கிறதா இல்லையா என்பதுதான் முக்கியமே தவிர நம்மிடம் பணம் இருக்கிறதா இல்லையா என்பது முக்கியமல்ல. சொல்லப்போனால், மக்கள் அந்தச் சமயத்தில் “தங்கள் வெள்ளியைத் தெருக்களில் எறிந்துவிடுவார்கள்; அவர்களுடைய பொன் வேண்டாவெறுப்பாயிருக்கும்” என எசேக்கியேல் 7:19 கூறுகிறது. இதை முன்கூட்டியே அறிந்திருப்பது ஞானமாக நடக்க நமக்கு உதவும்.
11. எதிர்காலத்திற்காக நம்மைத் தயார்ப்படுத்த தெய்வீகக் கல்வி நமக்கு உதவுகிற ஒரு வழி என்ன?
11 விரைவில் வரவிருக்கிற யெகோவாவின் நாளுக்காக நம்மைத் தயார்ப்படுத்த தெய்வீகக் கல்வி பிரத்தியேகமான ஒரு வழியில் நமக்கு உதவுகிறது; அதாவது, வாழ்க்கையில் முக்கியமானவற்றுக்கு முதலிடம் கொடுக்க உதவுகிறது. தீமோத்தேயுவுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “இந்த உலகத்தில் செல்வந்தர்களாக இருக்கிறவர்கள் மேட்டிமையாக நடந்துகொள்ளக் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிடு; நிலையற்ற செல்வங்கள்மீது நம்பிக்கை வைக்காமல், . . . கடவுள் மீதே நம்பிக்கை வைக்க வேண்டுமென்றும் கட்டளையிடு.” நாம் செல்வந்தர்களாக இல்லாவிட்டாலும், கடவுள் கொடுத்த இந்த அறிவுரையிலிருந்து பயனடையலாம். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? பொருட்செல்வங்களைக் குவிக்கிறவர்களாக இல்லாமல், “நன்மை செய்கிறவர்களாகவும், நற்செயல்களில் செல்வந்தர்களாகவும்” இருப்பதற்குக் கடும் முயற்சியெடுக்க வேண்டும். ‘எதிர்காலத்திற்கென்று நல்ல அஸ்திவாரத்தை அமைத்துக்கொள்ள’ நம் வாழ்க்கையில் ஆன்மீகக் காரியங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். (1 தீ. 6:17-19) இப்படிப்பட்ட சுய தியாக வாழ்க்கைப் பாணி, நடைமுறை ஞானத்திற்கு அத்தாட்சி அளிக்கிறது. ஏனென்றால் இயேசுவின் வார்த்தைப்படி, “ஒருவர் இந்த உலகத்திலுள்ள எல்லாவற்றையும் சம்பாதித்தாலும் தன் உயிரை இழந்துபோனால் என்ன பிரயோஜனம்?” (மத். 16:26, 27) ஆகவே, யெகோவாவின் நாள் படுவேகமாக வந்துகொண்டிருப்பதால் நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘பொக்கிஷங்களை நான் எங்கே சேர்த்து வைக்கிறேன்? நான் கடவுளுக்கு அடிமையாக இருக்கிறேனா, செல்வத்திற்கு அடிமையாக இருக்கிறேனா?’—மத். 6:19, 20, 24.
12. சிலர் நம்முடைய ஊழியத்தைக் கீழ்த்தரமாகப் பார்த்தாலும், நாம் ஏன் மனந்தளர்ந்துவிடக் கூடாது?
12 பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள “நற்செயல்களில்” மிகமிக முக்கியமானது, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கித்து, சீடர்களை உருவாக்குவதாகும்; அது ஓர் உயிர்காக்கிற வேலை. (மத். 24:14; 28:19, 20) ஆனால், முதல் நூற்றாண்டில் நடந்ததைப் போலவே, நாம் செய்கிற இந்த வேலையைச் சிலர் கீழ்த்தரமாகப் பார்க்கலாம். (1 கொரிந்தியர் 1:18-21-ஐ வாசியுங்கள்.) அவர்கள் அப்படிப் பார்க்கிறார்கள் என்பதற்காக, நம்முடைய செய்தியின் மதிப்பு குறைந்துவிடாது. அதோடு, முடிவு வருவதற்கு முன்பே அந்தச் செய்தியில் விசுவாசம் வைக்க ஒவ்வொருவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டியதன் முக்கியத்துவமும் குறைந்துவிடாது. (ரோ. 10:13, 14) இவ்வாறு தெய்வீகக் கல்வியிலிருந்து பயனடைய மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது, ஏராளமான ஆசீர்வாதங்களை நாம் பெற்றுக்கொள்வோம்.
தியாகங்கள் செய்ததால் ஆசீர்வாதங்கள்
13. அப்போஸ்தலன் பவுல் நற்செய்தியை முன்னிட்டு என்ன தியாகங்களைச் செய்தார்?
13 அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவராவதற்குமுன், யூத மதத்தில் சிறந்து விளங்குவதற்காகப் பயிற்சி பெற்றுவந்தார். அவருக்கு ஏறக்குறைய 13 வயதாக இருந்தபோது, திருச்சட்டப் போதகரான கமாலியேலிடம் கல்வி பயில்வதற்காகத் தன் சொந்த ஊரான தர்சுவைவிட்டு எருசலேமுக்குச் சென்றார். (அப். 22:3) காலப்போக்கில் அவர் பிரபலமடைய ஆரம்பித்தார்; அவர் அப்படியே வாழ்க்கையைத் தொடர்ந்திருந்தால் யூத மதத்தில் பெரும் புள்ளியாக ஆகியிருப்பார். (கலா. 1:13, 14) ஆனால், அவர் நற்செய்தியை ஏற்றுக்கொண்டு பிரசங்க வேலையில் ஈடுபட ஆரம்பித்தபோது, அவற்றையெல்லாம் உதறித்தள்ளினார். அப்படிப்பட்ட தீர்மானத்தை எடுத்ததற்காக பவுல் வருத்தப்பட்டாரா? இல்லை. “உண்மையில், என் எஜமானராகிய கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே ஒப்பற்ற செல்வம் என்பதால், மற்ற எல்லாவற்றையும் நஷ்டமென்று கருதுகிறேன். அவருக்காக எல்லா நஷ்டத்தையும் ஏற்றிருக்கிறேன்; கிறிஸ்துவை நான் லாபமாக்கிக்கொண்டு அவரோடு ஒன்றுபட்டிருப்பதற்காக அவற்றையெல்லாம் வெறும் குப்பையாகக் கருதுகிறேன்” என்றே சொன்னார்.—பிலி. 3:8.
14, 15. “கடவுளுடைய சக வேலையாட்களாக” என்ன ஆசீர்வாதங்களை நாம் அனுபவிக்கிறோம்?
14 கிறிஸ்தவர்களாகிய நாம் இன்று பவுலைப் போலவே நற்செய்தியை முன்னிட்டு நிறையத் தியாகங்களைச் செய்கிறோம். (மாற். 10:29, 30) நாம் செய்த தியாகங்களை நினைத்து இப்போது வருத்தப்படுகிறோமா? ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட ராபர்ட் சொல்வதாவது: “எனக்குத் துளிகூட வருத்தமில்லை. முழுநேர ஊழியம் எனக்குச் சந்தோஷத்தையும் திருப்தியையும் அளித்திருக்கிறது; ‘யெகோவா எவ்வளவு நல்லவர் என்பதை ருசித்துப் பார்க்க’ உதவியிருக்கிறது. ஆன்மீக இலக்குகளை அடைவதற்காக எப்போதெல்லாம் பொருளாதார ரீதியில் தியாகங்கள் செய்தேனோ அப்போதெல்லாம் நான் தியாகம் செய்ததற்கும் அதிகமாகவே யெகோவா என்னை ஆசீர்வதித்திருக்கிறார். அப்படிப் பார்த்தால், உண்மையில் நான் எதையுமே தியாகம் செய்யவில்லை என்றுதான் சொல்வேன். அவரிடமிருந்து பெற்றுக்கொண்டதுதான் அதிகம்!” ராபர்ட்டைப் போலவே பலரும் உணருகிறார்கள்.—சங். 34:8; நீதி. 10:22.
15 பிரசங்க வேலையிலும் கற்பிக்கும் வேலையிலும் நீங்கள் ஈடுபட்டு வந்திருந்தீர்களென்றால், யெகோவா எவ்வளவு நல்லவர் என்பதை ருசித்துப் பார்க்க உங்களுக்கும் நிச்சயமாகவே நிறைய வாய்ப்புகள் கிடைத்திருக்கும். நற்செய்தியை அறிவித்துக்கொண்டிருக்கும்போது, அவருடைய சக்தி உங்களுக்கு உதவியதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? நற்செய்திக்குச் செவிசாய்ப்பவர்களுடைய இருதயத்தை யெகோவா திறக்கும்போது, அவர்களுடைய கண்கள் பிரகாசிப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? (அப். 16:14) ஊழியத்தில் தடைகளை மேற்கொள்ள யெகோவா உங்களுக்கு உதவி செய்திருக்கிறாரா, ஒருவேளை இன்னும் அதிகமாக ஊழியத்தில் ஈடுபட வாய்ப்பளித்திருக்கிறாரா? கஷ்ட காலங்களின்போது உங்களுக்குப் பக்கபலமாக இருந்திருக்கிறாரா? நீங்கள் பலவீனமாக உணர்ந்தபோது உங்களுக்குப் பலமளித்து, தொடர்ந்து தம்முடைய சேவையில் நிலைத்திருக்க உதவியிருக்கிறாரா? (பிலி. 4:13) ஊழியத்தில் யெகோவாவின் உதவியை இவ்வாறு தனிப்பட்ட விதத்தில் அனுபவிக்கும்போது, அவர் நமக்கு இன்னும் நிஜமானவராக ஆகிறார், அவரோடு நாம் இன்னும் நெருக்கமாக உணருகிறோம். (ஏசா. 41:10) தெய்வீகக் கல்விபுகட்டும் இந்தப் பிரமாண்டமான வேலையில் “கடவுளுடைய சக வேலையாட்களாக” இருப்பது எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம்!—1 கொ. 3:9.
16. தெய்வீகக் கல்வி சம்பந்தமாக நீங்கள் எடுக்கிற முயற்சிகளையும், செய்கிற தியாகங்களையும் பற்றி எப்படி உணருகிறீர்கள்?
16 அநேகர், தாங்கள் சாவதற்குள் எதையாவது சாதித்துவிட வேண்டுமெனத் துடிக்கிறார்கள். ஆனால், இந்த உலகத்தில் செய்யப்படுகிற அபாரமான சாதனைகளும்கூட மக்களின் நினைவிலிருந்து நீங்கிவிடுகின்றன. ஆனால், யெகோவா தம்முடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவதற்காகச் செய்துவருகிற நவீனநாளைய சாதனைகளெல்லாம் யெகோவாவின் சாட்சிகளுடைய சரித்திரத்தில் நீங்கா இடத்தைப் பிடித்துவிடும். (நீதி. 10:7; எபி. 6:10) எனவே, என்றென்றும் நினைவில் நிற்கப்போகிற தெய்வீகக் கல்விபுகட்டும் இந்த வேலையில் ஈடுபடுவதைப் பொக்கிஷமாய்ப் போற்றுவோமாக!
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
• தம்மால் கற்பிக்கப்படுகிறவர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருக்க வேண்டுமென யெகோவா எதிர்பார்க்கிறார்?
• தெய்வீகக் கல்வி எப்படி மக்களுடைய வாழ்க்கையைச் செதுக்கிச் சீராக்குகிறது?
• தெய்வீகக் கல்வியிலிருந்து பயனடைய மற்றவர்களுக்கு உதவும்போது, நாம் எவ்விதங்களில் ஆசீர்வதிக்கப்படுகிறோம்?
[பக்கம் 23-ன் படக்குறிப்பு]
யெகோவாவினால் கற்பிக்கப்படுகிறவர்கள் சர்வதேச சகோதரத்துவத்தின் பாகமாக இருக்கிறார்கள்
[பக்கம் 24-ன் படக்குறிப்பு]
“கடவுளுடைய சக வேலையாட்களாக” இருப்பது எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம்!