உங்கள் விடுதலைக்காக யெகோவா செய்த ஏற்பாட்டை மதித்துணருகிறீர்களா?
“இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா போற்றப்படுவாராக; ஏனென்றால், அவர் தம் மக்கள்மீது கவனத்தைத் திருப்பி, அவர்களுக்கு விடுதலை அளித்திருக்கிறார்.”—லூக். 1:68.
1, 2. நம்முடைய இக்கட்டான சூழ்நிலையை விவரிக்க ஓர் உதாரணம் தருக, என்ன கேள்விகளை இப்போது நாம் சிந்திப்போம்?
நீங்கள் ஒரு மருத்துவமனையில் நோயாளியாகப் படுத்திருப்பதுபோல் கற்பனை செய்துகொள்ளுங்கள். உங்களுக்கு வந்திருக்கிற நோய் ஓர் உயிர்க்கொல்லி நோய்; இதுவரை அதற்கு மருந்தே கண்டுபிடிக்கப்படவில்லை. உங்கள் வார்டில் உள்ள எல்லாரும் அதே நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஒரு மருத்துவர் முழுமூச்சாய் ஈடுபட்டு வருவதாக நீங்கள் கேள்விப்படுகிறீர்கள். அவருடைய ஆராய்ச்சி எந்த நிலையில் இருக்கிறது எனத் தெரிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறீர்கள். திடீரென்று ஒருநாள் அந்த நோய்க்குரிய மருந்தை அவர் கண்டுபிடித்துவிட்டதாகக் கேள்விப்படுகிறீர்கள்! அதற்காக அவர் எத்தனையோ தியாகங்களைச் செய்திருப்பதாக அறியவருகிறீர்கள். அவரைப் பற்றி எப்படி உணருவீர்கள்? மரணப் பிடியிலிருந்து உங்களையும் மற்றவர்களையும் விடுவித்த அந்த மனிதர்மீது உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் பொங்கி வரும், அல்லவா?
2 இது வெறும் ஒரு கற்பனைக் கதைதானே என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் உண்மையில் நாம் எல்லாருமே இப்படிப்பட்ட நிலையில்தான் இருக்கிறோம். சொல்லப்போனால், இதைவிட மோசமான நிலையில்தான் இருக்கிறோம். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து நம்மை யாராவது காப்பாற்றினால்தான் நாம் பிழைப்போம். (ரோமர் 7:24-ஐ வாசியுங்கள்.) நம்மை விடுவிப்பதற்காக யெகோவா செய்திருக்கும் தியாகங்களுக்கு அளவே இல்லை. அவருடைய மகனும்கூடக் குறிப்பிடத்தக்க தியாகங்களைச் செய்திருக்கிறார். இது சம்பந்தமாக நான்கு முக்கியக் கேள்விகளை இப்போது சிந்திப்போம். நமக்கு ஏன் விடுதலை தேவை? நம்மை விடுவிக்க இயேசு எந்தளவுக்குத் தியாகம் செய்ய வேண்டியிருந்தது? யெகோவா எந்தளவுக்குத் தியாகம் செய்ய வேண்டியிருந்தது? நம் விடுதலைக்காக யெகோவா செய்திருக்கும் ஏற்பாட்டை நாம் எப்படி மதித்துணரலாம்?
நமக்கு ஏன் விடுதலை தேவை
3. பாவத்தைக் கொள்ளைநோயோடு ஒப்பிடுவது எப்படிப் பொருத்தமாக இருக்கிறது?
3 1918-ல் உலகை உலுக்கிய ஸ்பானிஷ் காய்ச்சல்தான் இதுவரை மனித சரித்திரத்திலேயே படுபயங்கரமான கொள்ளை நோய் என்று சமீபத்திய கணக்கெடுப்பு காட்டுகிறது. அந்த நோய் லட்சக்கணக்கான உயிர்களைக் குடித்திருக்கிறது. மற்ற நோய்களும் ஒருவிதத்தில் மிகக் கொடியவையே. அவை அரிதாகவே மக்களைத் தாக்கினாலும் அவர்களில் பெரும்பாலோரைக் கொன்றுவிடுகின்றன.a இப்படிப்பட்ட கொள்ளைநோயோடு பாவத்தை ஒப்பிடுவது அதன் பாதிப்பைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது. ரோமர் 5:12-ல் சொல்லப்பட்டிருப்பதைச் சற்று நினைவுபடுத்திப் பாருங்கள்: “ஒரே மனிதனால் பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது; இவ்வாறு, எல்லா மனிதர்களும் பாவம் செய்ததால் மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது.” அபூரண மனிதர்களான நாம் எல்லாருமே பாவிகள் என்பதால் நாம் எல்லாருமே பாவம் என்ற கொள்ளைநோயால் பாதிக்கப்படுகிறோம். (ரோமர் 3:23-ஐ வாசியுங்கள்.) இந்த நோயால் எத்தனை பேர் உயிரிழக்கிறார்கள்? “எல்லா மனிதர்களும்” இறக்கிறார்கள் என்று பவுல் எழுதினார்.
4. யெகோவாவின் பார்வையில் மனிதர்களுடைய வாழ்நாள் காலம் எப்படி இருக்கிறது, ஆனால், அநேகர் அதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?
4 பாவத்தையும் மரணத்தையும் அநேகர் இப்படி ஒப்பிட்டுப் பார்ப்பதே இல்லை. அகால மரணம் நேரிடுவதை நினைத்துத்தான் அவர்கள் கவலைப்படுகிறார்களே தவிர, வயதாகி சாவதை “இயற்கை” மரணம் என்று சகஜமாக எடுத்துக்கொள்கிறார்கள். அதோடு, மனிதர்களைக் கடவுள் என்ன நோக்கத்துடன் படைத்தார் என்றே அவர்களுக்குத் தெரிவதில்லை. யெகோவா நினைத்திருந்ததைவிட நம்முடைய வாழ்நாள் காலம் மிக மிகக் குறுகியதாக இருக்கிறது. சொல்லப்போனால், யெகோவாவின் பார்வையில் யாருமே முழுமையாக ‘ஒரு நாள்’ கூட உயிர் வாழ்ந்ததில்லை. (2 பே. 3:8) அதனால்தான், நம்முடைய வாழ்நாள் காலம் வாடிப்போகிற புல்லுக்கு ஒப்பாகவும், வெளிவிடப்படுகிற மூச்சுக் காற்றுக்கு ஒப்பாகவும் இருப்பதாகக் கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. (சங். 39:5; 1 பே. 1:24) இந்த உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது. ஏன்? நம்மைத் தாக்குகிற “நோய்” எந்தளவு கொடூரமானது என்பதைப் புரிந்துகொண்டால்தான் அதற்கான “மருந்து,” அதாவது நமக்குக் கிடைக்கப்போகும் விடுதலை, எந்தளவு முக்கியமானது என்பதை நன்றாக மதித்துணர்வோம்.
5. பாவத்தினால் நாம் ஒவ்வொருவருமே எதை இழந்திருக்கிறோம்?
5 நமக்குப் பாவம் எந்தளவு நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டால்தான் அது எந்தளவு கொடூரமானது என்றும், நம்மை எந்தளவு பாதிக்கிறது என்றும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். இது முதலில் நமக்குக் கடினமாகத் தோன்றலாம், ஏனெனில், பாவத்தின் காரணமாக நாம் இதுவரை அனுபவிக்காத ஒன்றை இழந்திருக்கிறோம். ஆரம்பத்தில் ஆதாமும் ஏவாளும் பரிபூரண வாழ்க்கையைப் பெற்றிருந்தார்கள். உடலளவிலும் மனதளவிலும் அவர்கள் பரிபூரணமாய் இருந்ததால் தங்களுடைய சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் செயல்களையும் அவர்களால் கட்டுப்படுத்த முடிந்தது. இவ்வாறு எப்போதும் யெகோவாவின் ஊழியர்களாக இருந்து, அற்புதமான குணங்களை மேன்மேலும் வளர்த்துக்கொள்ள வாய்ப்பிருந்தது. அப்படியிருந்தும், இந்தப் பரிபூரண வாழ்க்கை என்ற அரும்பெரும் பரிசை அவர்கள் துச்சமாக நினைத்துத் தூக்கி எறிந்துவிட்டார்கள். தெரிந்தே யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்து, தாங்களும் தங்களுடைய சந்ததியினரும் அனுபவிக்கவிருந்த ஒப்பற்ற வாழ்க்கையை, தங்களுக்காக யெகோவா கொடுக்கவிருந்த அரிய வாழ்க்கையை இழந்துவிட்டார்கள். (ஆதி. 3:16-19) அதோடு, பாவம் என்ற பயங்கரமான “நோயை” தங்கள்மீது வருவித்துக்கொண்டார்கள், நமக்கும் கடத்திவிட்டார்கள். தவறுசெய்த அவர்களுக்கு யெகோவா தக்க தண்டனை கொடுத்தார். என்றாலும், விடுதலைக்கான நம்பிக்கையை நமக்கு அளித்தார்.—சங். 103:10.
இயேசு எந்தளவுக்குத் தியாகம் செய்ய வேண்டியிருந்தது
6, 7. (அ) நம்மை விடுவிக்க மிகப் பெரிய தியாகத்தைச் செய்ய வேண்டியிருக்கும் என்பதை யெகோவா ஆரம்பத்தில் எப்படித் தெரிவித்தார்? (ஆ) ஆபேலும், கோத்திரத் தலைவர்களும் செலுத்திய பலிகளிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?
6 ஆதாம் ஏவாளின் சந்ததியினரை விடுவிக்க மிகப் பெரிய தியாகத்தைச் செய்ய வேண்டியிருக்கும் என்பதை யெகோவா அறிந்திருந்தார். அந்தத் தியாகத்தில் என்ன உட்பட்டிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள ஆதியாகமம் 3:15-ல் உள்ள தீர்க்கதரிசனம் நமக்கு உதவுகிறது. அதன்படி, நம்மைக் காப்பாற்றுவதற்காக யெகோவா ஒரு ‘வித்துவை,’ அதாவது ஒரு மீட்பரை அளிப்பார்; அவர் ஒருநாள் சாத்தானை முற்றிலுமாய் அழித்துவிடுவார். என்றாலும், அதற்குமுன் அடையாள அர்த்தத்தில் அந்த மீட்பருடைய குதிங்கால் நசுக்கப்பட்டு, அவர் தாங்கமுடியாத வேதனையை அனுபவிப்பார். ஒருவருடைய குதிங்கால் நசுக்கப்படும்போது அவருக்கு மிகுந்த வலி உண்டாகும், அவரால் சரியாக நடக்கவோ வேலை செய்யவோ முடியாது. ஆனால், இந்தத் தீர்க்கதரிசனத்தில் அது எதை அர்த்தப்படுத்துகிறது? யெகோவாவினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் எதைச் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது?
7 மனிதர்களைப் பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்காக அந்த மீட்பர் பாவநிவாரணம் அளிக்க வேண்டியிருக்கும்; இது, பாவத்தின் பாதிப்புகளை அகற்றி, மனிதர்கள் கடவுளோடு சமாதான உறவுக்குள் வருவதற்கான ஒரு வழியாக இருக்கும். அதற்காக என்ன செய்ய வேண்டியிருக்கும்? ஒரு பலி செலுத்தப்பட வேண்டியிருக்குமென்பது ஆரம்பத்திலேயே தெரியவந்தது. எப்படியெனில், தேவ பயமுள்ள மனிதர்களின் பட்டியலில் முதல் நபரான ஆபேல் யெகோவாவுக்கு மிருக பலிகளைச் செலுத்தி அவருடைய அங்கீகாரத்தைப் பெற்றார். அந்த வரிசையில் வந்த நோவா, ஆபிரகாம், யாக்கோபு, யோபு போன்ற கோத்திரத் தலைவர்களும் அவரைப் போலவே மிருக பலிகளைச் செலுத்திக் கடவுளின் உள்ளத்தைக் குளிரச்செய்தார்கள். (ஆதி. 4:4; 8:20, 21; 22:13; 31:54; யோபு 1:5) பல நூற்றாண்டுகளுக்குப் பின், மோசேயின் மூலமாகக் கொடுக்கப்பட்ட திருச்சட்டமும் பலிகளைக் குறித்து நிறைய விஷயங்களைத் தெரிவித்தது.
8. பாவநிவாரண நாளில் தலைமைக் குரு என்ன செய்தார்?
8 திருச்சட்டத்தின்படி செலுத்தப்பட்ட மிக முக்கியமான பலிகளில் ஒன்று, வருடத்தில் ஒரு நாள் செலுத்தப்பட்ட பாவநிவாரண பலியாகும். அந்த நாளில், தலைமைக் குரு முறைப்படி அடையாள அர்த்தமுள்ள சில காரியங்களைச் செய்துவந்தார். பாவநிவாரணம் அளிப்பதற்காக யெகோவாவுக்கு அவர் பலிகளைச் செலுத்தினார். முதலில், குருமார்களுக்காகவும், பின்னர் மற்றவர்களுக்காகவும் பலிகளைச் செலுத்தினார். கூடாரத்திலும் சரி ஆலயத்திலும் சரி, மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் அந்தத் தலைமைக் குருவால் மட்டுமே செல்ல முடிந்தது, அதுவும் வருடத்தில் ஒரு நாள் மட்டுமே செல்ல முடிந்தது. அச்சமயத்தில், அவர் மிருக பலியின் இரத்தத்தை ஒப்பந்தப் பெட்டிக்கு முன் தெளித்தார். பரிசுத்தமான அந்தப் பெட்டிக்கு மேலே சில சமயங்களில் பிரகாசமான ஒரு மேகம் தோன்றியது; அது யெகோவாவின் பிரசன்னத்தைக் குறித்தது.—யாத். 25:22; லேவி. 16:1-30.
9. (அ) பாவநிவாரண நாளன்று தலைமைக் குரு யாருக்கு அடையாளமாக இருந்தார், அவர் செலுத்திய பலிகள் எதைச் சுட்டிக்காட்டின? (ஆ) மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் தலைமைக் குரு சென்றது எதைச் சுட்டிக்காட்டியது?
9 தலைமைக் குரு செய்துவந்த ஒவ்வொரு செயலும் அடையாள அர்த்தத்தில் எதைக் குறித்ததென்று அப்போஸ்தலன் பவுல் கடவுளுடைய தூண்டுதலால் வெளிப்படுத்தினார். அந்தத் தலைமைக் குரு மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்ததாகவும், அவர் செலுத்திய பலிகள் கிறிஸ்துவின் தியாக மரணத்தைக் குறித்ததாகவும் அவர் விளக்கினார். (எபி. 9:11-14) அந்தப் பரிபூரண பலி இரு வகுப்பாருக்கும், அதாவது கிறிஸ்துவோடு சேர்ந்து பரலோகத்தில் குருமார்களாகச் சேவைசெய்யும் 1,44,000 பேருக்கும், ‘வேறே ஆடுகளுக்கும்,’ நிஜமான பாவநிவாரணத்தை அளிக்கவிருந்தது. (யோவா. 10:16) தலைமைக் குரு மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் சென்றது, இயேசு தம்முடைய மீட்புப் பலியின் மதிப்பை யெகோவாவிடம் சமர்ப்பிப்பதற்காகப் பரலோகத்திற்குள் சென்றதைச் சுட்டிக்காட்டியது.—எபி. 9:24, 25.
10. மேசியாவுக்கு என்னவெல்லாம் நடக்குமென பைபிளிலுள்ள தீர்க்கதரிசனங்கள் காட்டுகின்றன?
10 தெளிவாகவே, ஆதாம் ஏவாளின் சந்ததியினர் விடுவிக்கப்படுவதற்கு மிகப் பெரிய தியாகம் செய்யப்பட வேண்டியிருந்தது. ஆம், மேசியா தம்முடைய உயிரையே பலியாகச் செலுத்த வேண்டியிருந்தது! இந்த விஷயத்தை எபிரெய வேதாகமத்தில் வரும் தீர்க்கதரிசிகள் திட்டவட்டமாகக் கூறினார்கள். உதாரணத்திற்கு, ‘அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்காக’ “பிரபுவாகிய மேசியா” “சங்கரிக்கப்படுவார்,” அதாவது கொலை செய்யப்படுவார் என தானியேல் தீர்க்கதரிசி தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டார். (தானி. 9:24-26) அபூரண மனிதர்களின் பாவங்களைச் சுமந்து தீர்ப்பதற்காக மேசியா புறக்கணிக்கப்படுவார், துன்புறுத்தப்படுவார், கொலை செய்யப்படுவார் என ஏசாயா தீர்க்கதரிசி முன்னறிவித்தார்.—ஏசா. 53:4, 5, 7.
11. நம்மை விடுவிப்பதற்காகத் தம்மையே பலியாகக் கொடுக்க யெகோவாவின் மகன் எவ்வாறு முன்வந்தார்?
11 நம்மை விடுவிப்பதற்காகத் தாம் எந்தளவுக்குத் தியாகம் செய்ய வேண்டியிருக்கும் என்பதைக் கடவுளின் ஒரே மகன் பூமிக்கு வருவதற்கு முன்பே அறிந்திருந்தார். அவர் கடும் சித்திரவதைக்கு ஆளாகி மரணத்தைத் தழுவ வேண்டியிருந்தது. இந்த விஷயங்களை அவருடைய தகப்பன் அவரிடம் தெரிவித்தபோது அவர் மறுக்கவுமில்லை, எதிர்க்கவுமில்லை. மாறாக, தம்முடைய தகப்பன் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தார். (ஏசா. 50:4-6) பூமியில் இருந்தபோதும் தம்முடைய தகப்பனின் சித்தத்தைக் கீழ்ப்படிதலோடு நிறைவேற்றினார். ஏன்? ஒரு காரணத்தை அவர் இவ்வாறு சொன்னார்: “தகப்பன்மீது நான் அன்பு வைத்திருக்கிறேன்.” இன்னொரு காரணத்தை இவ்வாறு சொன்னார்: “ஒருவன் தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுக்கிற அன்பைவிட மேலான அன்பு வேறு இல்லை.” (யோவா. 14:31; 15:13) ஆகவே, யெகோவாவின் மகன் காட்டிய அன்பு நம் விடுதலைக்கு மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. தம்முடைய பரிபூரண மனித உயிரைத் தியாகம் செய்ய வேண்டியிருந்தபோதிலும், அவர் அதை நம்முடைய விடுதலைக்காக மனப்பூர்வமாய்த் தியாகம் செய்தார்.
நம்மை விடுவிக்க யெகோவா எந்தளவுக்குத் தியாகம் செய்ய வேண்டியிருந்தது
12. மீட்புவிலையை அளிப்பது யாருடைய சித்தமாக இருந்தது, ஏன் அதை அவர் அளித்தார்?
12 மனிதர்களை விடுவிப்பதற்காக மீட்புவிலையை அளிக்கத் தீர்மானித்தவர் இயேசு அல்ல, யெகோவாதான். சொல்லப்போனால், இந்த விதத்தில் விடுதலை அளிக்க வேண்டும் என்பது யெகோவாவுடைய சித்தத்தின் முக்கிய அம்சமாக இருந்தது. எருசலேம் ஆலயத்தில் பலி செலுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட பலிபீடம் யெகோவாவின் சித்தத்தையே குறித்ததாக அப்போஸ்தலன் பவுல் சுட்டிக்காட்டினார். (எபி. 10:10) ஆகவே, கிறிஸ்துவுடைய பலியின் மூலமாக நமக்குக் கிடைக்கும் விடுதலைக்காக நாம் யெகோவாவுக்கே முதலில் நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும். (லூக். 1:68) யெகோவாவின் பரிபூரண சித்தத்தையும் மனிதர்கள்மீது அவருக்குள்ள மாபெரும் அன்பையும் அந்தப் பலி வெளிக்காட்டுகிறது.—யோவான் 3:16-ஐ வாசியுங்கள்.
13, 14. யெகோவா நமக்காகச் செய்திருக்கும் ஏற்பாட்டை மதித்துணர ஆபிரகாமுடைய அனுபவம் நமக்கு எப்படி உதவுகிறது?
13 இவ்வாறு மனிதர்கள்மீது தம் அன்பை வெளிக்காட்ட யெகோவா எந்தளவுக்குத் தியாகம் செய்ய வேண்டியிருந்தது? இதை நம்மால் அவ்வளவு சுலபமாகப் புரிந்துகொள்ள முடியாது. இருந்தாலும், பைபிளிலுள்ள ஒரு சம்பவம் இதை ஓரளவு புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது. விசுவாசமிக்க ஆபிரகாமால் நினைத்தே பார்க்க முடியாத ஒன்றைச் செய்யும்படி யெகோவா அவரிடம் சொன்னார், அதாவது அவருடைய மகனான ஈசாக்கைப் பலியாகக் கொடுக்கும்படி சொன்னார். ஆபிரகாம் தன் மகனை உயிருக்கு உயிராய் நேசித்தார். அதனால்தான், ஆபிரகாமின் மகனை, ‘உன் ஏக சுதனும் உன் நேச குமாரனுமாகிய ஈசாக்கு’ என்று யெகோவா குறிப்பிட்டார். (ஆதி. 22:2) ஆனால், ஈசாக்கின் மீது வைத்திருந்த அன்பைவிட யெகோவாவின் சித்தத்தைச் செய்வதே மிக முக்கியமானது என்பதை ஆபிரகாம் உணர்ந்தார். யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து அவர் சொன்னபடியே செய்யப்போனார். என்றாலும், அப்படிச் செய்ய அவரை யெகோவா அனுமதிக்கவில்லை; அதுபோன்ற ஒரு காரியத்தை யெகோவாவே ஒரு நாள் செய்யவிருந்தபோதிலும் அவரை அனுமதிக்கவில்லை. ஈசாக்கைப் பலி செலுத்த முற்பட்ட சமயத்தில் யெகோவா ஒரு தூதரை அனுப்பி அவரைத் தடுத்துவிட்டார். உயிர்த்தெழுதலின் மூலமாக மட்டுமே தன் வாலிப மகனை மீண்டும் உயிரோடு பார்க்க முடியும் என்றும், அந்த உயிர்த்தெழுதலை யெகோவா நிச்சயமாகச் செய்வார் என்றும் ஆபிரகாம் நம்பியதால் இந்தக் கடும் சோதனையில் யெகோவாவுக்குக் கீழ்ப்படியத் தீர்மானமாய் இருந்தார். அதனால்தான், ஆபிரகாம் ‘அடையாள அர்த்தத்தில்’ ஈசாக்கை உயிரோடு திரும்பப் பெற்றுக்கொண்டதாக பவுல் குறிப்பிட்டார்.—எபி. 11:19.
14 தன் மகனைப் பலி செலுத்த ஏற்பாடுகளைச் செய்தபோது ஆபிரகாமின் நெஞ்சம் எப்படிக் கனத்திருக்கும் என்பதைச் சற்றுக் கற்பனை செய்து பாருங்கள்! யெகோவா தம்முடைய ‘அன்பு மகனை’ பலியாகச் செலுத்தியபோது எப்படி உணர்ந்திருப்பார் என்பதைப் புரிந்துகொள்ள ஒரு விதத்தில் ஆபிரகாமுடைய அனுபவம் உதவுகிறது. (மத். 3:17) என்றாலும், யெகோவாவின் நெஞ்சம் அதைவிட ரொம்பவே கனத்திருக்கும்! ஏனென்றால், அவரும் அவருடைய மகனும் யுகாயுகங்களுக்கு ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் மகிழ்ச்சியாக இருந்தார்கள். அந்த நேச மகன் ‘கைதேர்ந்த வேலையாளாக’ தம் தகப்பனோடு சேர்ந்து சந்தோஷமாக வேலை செய்துவந்தார்; “வார்த்தை” என்று அழைக்கப்பட்ட அவர் தம் தகப்பனின் சார்பாகப் பேசும் பிரதிநிதியாக இருந்தார். (நீதி. 8:22, 30, 31; NW; யோவா. 1:1) தமது மகன் சித்திரவதை செய்யப்பட்டபோது, கேலிகிண்டலுக்கு ஆளானபோது, ஒரு குற்றவாளியாகக் கொலை செய்யப்பட்டபோது யெகோவா பட்ட வேதனையை நம்மால் விவரிக்கவே முடியாது. ஆம், நமக்கு விடுதலை அளிக்க யெகோவா செய்திருக்கும் தியாகம் கொஞ்சநஞ்சமல்ல! அப்படியென்றால், யெகோவா செய்திருக்கும் ஏற்பாட்டை நாம் எப்படி மதித்துணரலாம்?
நம்முடைய விடுதலையை எப்படி மதித்துணரலாம்?
15. இயேசு எப்படி நிரந்தர பாவநிவாரணத்தை நமக்காக அளித்தார், இதனால் என்ன நன்மைகள் விளைந்தன?
15 இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டு பரலோகத்திற்குச் சென்ற பின்பு நிரந்தர பாவநிவாரணத்தை நமக்காக அளித்தார். உயிருக்குயிராய் நேசித்த தகப்பனோடு அவர் மீண்டும் ஒன்றுசேர்ந்தபோது தம்முடைய பலியின் மதிப்பை அவரிடம் சமர்ப்பித்தார். அதனால் அளவற்ற நன்மைகள் விளைந்தன. முதலில், கிறிஸ்துவோடு பரலோகத்தில் இருக்கப்போகும் அவருடைய சகோதரர்களின் பாவங்களும், பின்னர் இந்த ‘முழு உலகத்தின் பாவங்களும்’ முழுமையாக மன்னிக்கப்பட வழி பிறந்தது. அதோடு, இன்று யாரெல்லாம் தங்கள் பாவங்களை நினைத்து உள்ளப்பூர்வமாக மனந்திரும்பி கிறிஸ்துவின் உண்மைச் சீடர்களாய் ஆகிறார்களோ அவர்கள் அனைவரும் யெகோவாவோடு நெருக்கமான பந்தத்தை அனுபவிக்கிறார்கள். (1 யோ. 2:2) நீங்கள் அனுபவிக்கிறீர்களா?
16. நம்மை விடுவிப்பதற்காக யெகோவா செய்திருக்கும் ஏற்பாட்டிற்கு நாம் நன்றிக்கடன் பட்டிருப்பதை உதாரணத்தோடு விளக்குங்கள்.
16 இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சிந்தித்த உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். அந்த நோய்க்கு மருந்து கண்டுபிடித்த மருத்துவர் உங்கள் வார்டுக்கு வந்து, ‘நான் தருகிற மருந்து மாத்திரைகளையெல்லாம் வேளாவேளைக்குச் சாப்பிட்டு, நான் சொல்வதுபோல் செய்துவந்தால் நீங்கள் பூரணமாகக் குணமாகிவிடுவீர்கள்’ என்று சொல்வதாக வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், அந்த வார்டில் உள்ள நோயாளிகளில் பெரும்பாலோர், ‘இவர் சொல்கிற மாதிரியெல்லாம் செய்வது ரொம்பக் கஷ்டம்; என்னால் முடியாது!’ என்று சொல்லி மறுத்துவிட்டால், நீங்களும் அவர்களைப் போலவே சொல்லிவிடுவீர்களா? அதுவும், அந்த மருந்தால் நிச்சயம் குணமாவீர்கள் என்று தெரிந்த பின்பும் அப்படிச் சொல்வீர்களா? கட்டாயம் சொல்ல மாட்டீர்கள்! மாறாக, அந்த மருத்துவருக்குக் கோடி நன்றி சொல்வீர்கள்; அதுமட்டுமல்ல, அவர் சொன்னதை அப்படியே கடைப்பிடிப்பீர்கள், மற்றவர்களையும் அப்படிச் செய்துபார்க்கச் சொல்வீர்கள். அப்படியானால், யெகோவா தம் மகனுடைய மீட்புப் பலியின் மூலமாக நம்மை விடுவித்திருக்கும் ஏற்பாட்டிற்கு நாம் ஒவ்வொருவருமே அவருக்கு இன்னும் எந்தளவு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்!—ரோமர் 6:17, 18-ஐ வாசியுங்கள்.
17. உங்களை விடுவிக்க யெகோவா செய்திருக்கும் ஏற்பாட்டிற்கு நீங்கள் எவ்வழிகளில் நன்றியுணர்வைக் காட்டலாம்?
17 பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை விடுவிக்க யெகோவாவும் அவருடைய மகனும் செய்த தியாகங்களுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருந்தால் அதை நிச்சயம் வெளிக்காட்டுவோம். (1 யோ. 5:3) பாவம் செய்வதற்கான தூண்டுதலை அறவே வெறுத்து ஒதுக்குவோம். வேண்டுமென்றே பாவம் செய்து இரட்டை வாழ்க்கை வாழ மாட்டோம். அப்படிச் செய்வது, மீட்புவிலையை அலட்சியம் செய்வதாக இருக்கும். ஆகவே, கடவுளுடைய பார்வையில் சுத்தமாய் இருப்பதற்குக் கடினமாக உழைப்பதன் மூலம் நம்முடைய நன்றியுணர்வைக் காட்டுவோம். (2 பே. 3:14) விடுதலை சம்பந்தமாக நமக்கிருக்கும் அருமையான நம்பிக்கையைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்வதன் மூலமும் அதைக் காட்டுவோம். இதனால், அவர்களும்கூட யெகோவாவின் பார்வையில் சுத்தமாக இருக்கவும், என்றென்றுமாக வாழும் நம்பிக்கையைப் பெறவும் வழிவகுப்போம். (1 தீ. 4:16) எனவே, யெகோவாவையும் அவருடைய மகனையும் புகழ்வதற்காக நம் நேரத்தையும் சக்தியையும் எவ்வளவு செலவிட்டாலும் தகும்! (மாற். 12:28-30) இதைச் சற்று நினைத்துப் பாருங்கள்: பாவம் என்ற நோயிலிருந்து நாம் ஒரு நாள் பூரணமாய்க் குணமடைந்து விடுவோம். கடவுள் விரும்பியதைப் போலவே நாம் என்றென்றும் பரிபூரணராய் வாழ்வோம். நம்மை விடுவிப்பதற்காக யெகோவா செய்திருக்கும் ஏற்பாட்டினாலேயே இதெல்லாம் சாத்தியமாகியுள்ளது!—ரோ. 8:21.
[அடிக்குறிப்பு]
a ஸ்பானிஷ் காய்ச்சல் தாக்கியபோது அன்றைய ஜனத்தொகையில் 20 முதல் 50 சதவீதத்தினர் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அவர்களில் கிட்டத்தட்ட 1 முதல் 10 சதவீதத்தினர் அந்த வைரஸுக்குப் பலியாகியிருப்பதாகத் தெரிகிறது. ஆனால், எபோலா என்ற வைரஸ் அரிதாகவே தாக்கினாலும், அதனால் பாதிக்கப்பட்டவர்களில் ஏறக்குறைய 90 சதவீதத்தினர் உயிரிழந்திருக்கிறார்கள்.
உங்கள் பதில்?
• உங்களுக்கு ஏன் விடுதலை அவசியம் தேவை?
• இயேசு செய்திருக்கும் தியாகம் உங்களுக்கு என்ன நன்மைகளை அளிக்கிறது?
• யெகோவா அளித்துள்ள மீட்புவிலை எனும் பரிசைக் குறித்து நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?
• உங்கள் விடுதலைக்காக யெகோவா செய்திருக்கும் ஏற்பாட்டிற்குக் கைமாறாக என்ன செய்யத் தூண்டப்படுகிறீர்கள்?
[பக்கம் 27-ன் படம்]
பாவநிவாரண நாளன்று இஸ்ரவேலரின் தலைமைக் குரு மேசியாவுக்கு அடையாளமாய் இருந்தார்
[பக்கம் 28-ன் படம்]
ஆபிரகாம் மனமுவந்து தன் மகனைப் பலியாகச் செலுத்த முன்வந்த சம்பவம், யெகோவாவின் மிகப் பெரிய தியாகத்தைக் குறித்து நிறைய விஷயங்களை வெளிப்படுத்துகிறது