மதம்—என் இஷ்டமா என் பெற்றோரின் இஷ்டமா?
“எந்த மதத்தில் பிறந்தேனோ அந்த மதத்தில்தான் சாகும்வரை இருப்பேன்.” இப்படித்தான், போலந்து நாட்டு மக்களில் அநேகர் யெகோவாவின் சாட்சிகளிடம் சொல்கிறார்கள். இது எதைக் காட்டுகிறது? மதம் என்பது வழிவழியாகக் கடத்தப்படுகிறது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவுவதையே காட்டுகிறது. இதுபோன்ற எண்ணம் உங்கள் பகுதியில் வாழ்பவர்கள் மத்தியிலும் நிலவுகிறதா? இப்படி நினைப்பவர்களுக்கு மதம் என்பது வெறுமனே ஒரு சம்பிரதாயமாக, குடும்பப் பாரம்பரியமாக ஆகிவிடுகிறது. ஆனால் யெகோவாவின் சாட்சிகளுக்குக்கூட, குறிப்பாகப் பெற்றோரிடமிருந்தோ தாத்தா பாட்டியிடமிருந்தோ அருமையான பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொண்ட சாட்சிகளுக்குக்கூட, அப்படிப்பட்ட எண்ணம் வர வாய்ப்பிருக்கிறதா?
தீமோத்தேயுவுக்கு அப்படிப்பட்ட எண்ணம் வரவில்லை. தேவபக்தியுள்ள அவருடைய அம்மாவும் பாட்டியும் “சிசுப்பருவத்திலிருந்தே” பரிசுத்த எழுத்துக்களை அவருக்குக் கற்றுத் தந்திருந்தார்கள்; அதனால், அவர் உண்மையான கடவுளை நேசித்து அவர்மீது நம்பிக்கை வைத்தார். காலப்போக்கில், கிறிஸ்தவ மதம்தான் உண்மையான மதம் என்பதைத் தன் அம்மாவையும் பாட்டியையும் போலவே உறுதியாக நம்பினார். வேதத்திலிருந்து இயேசு கிறிஸ்துவைப் பற்றி ‘பக்குவமாக எடுத்துச் சொல்லப்பட்ட’ விஷயங்களை விடாமல் கடைப்பிடித்துவந்தார். (2 தீ. 1:5; 3:14, 15) ஆகவே, பிள்ளைகள் யெகோவாவின் ஊழியர்களாவதற்குப் பெற்றோர் தங்களால் முடிந்த எல்லா முயற்சிகளையும் எடுத்தாலும், அப்படி ஆவதற்கான ஆசையைப் பிள்ளைகளே சொந்தமாக வளர்த்துக்கொள்ள வேண்டும்.—மாற். 8:34.
எனவே, ஒருவர் யெகோவா மீதுள்ள அன்பினால் தூண்டப்பட்டு அவருக்குச் சேவை செய்யவும், எந்தச் சூழ்நிலையிலும் உத்தமத்தைக் காத்துக்கொள்ளவும் வேண்டுமென்றால், அவரிடம் நியாயங்காட்டிப் பக்குவமாக எடுத்துச்சொல்லப்பட்ட பைபிள் சத்தியங்களை அவராகவே ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான், அவருடைய விசுவாசம் பலமானதாகவும், ஆழமாய் வேரூன்றப்பட்டதாகவும் இருக்கும்.—எபே. 3:17; கொலோ. 2:6, 7.
பிள்ளைகளின் பங்கு
சத்தியத்தில் வளர்க்கப்பட்ட ஆல்பர்ட்a சொல்கிறார்: “யெகோவாவின் சாட்சிகள் கடைப்பிடிக்கிற மதம்தான் உண்மையான மதம் என்பதில் எனக்குத் துளியும் சந்தேகம் இருக்கவில்லை. ஆனால், நான் எப்படி வாழ வேண்டும் என்று அவர்கள் சொல்வதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது.” நீங்கள் ஓர் இளைஞரென்றால் நீங்களும் அவ்வாறு யோசிக்கலாம். அப்படியானால், கடவுள் விரும்புகிற விதத்தில் எப்படி வாழ்வதெனத் தெரிந்துகொண்டு, அவருக்குப் பிரியமானதைச் செய்து சந்தோஷம் காணலாம், அல்லவா? (சங். 40:8) “முதலில் நான் ஜெபம் செய்யத் தொடங்கினேன்” என்கிறார் ஆல்பர்ட். “ஆரம்பத்தில் அது எனக்குக் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் என்னை நானே கட்டாயப்படுத்தி ஜெபம் செய்யத் தொடங்கினேன். சரியானதைச் செய்ய முயற்சி செய்தேனென்றால் கடவுளுடைய பார்வையில் மதிப்புள்ளவனாக இருப்பேன் என்பதைச் சீக்கிரத்திலேயே புரிந்துகொண்டேன். இதனால், தேவையான மாற்றங்களைச் செய்வதற்கான பலத்தைப் பெற்றேன்.” ஆம், யெகோவாவோடு ஒரு நல்ல பந்தத்தை வளர்த்துக்கொண்டால், அவர் எதிர்பார்ப்பதுபோல் வாழ வேண்டும் என்ற ஆசை உங்களுக்குள் வேர்விடும்.—சங். 25:14; யாக். 4:8.
ஒரு விளையாட்டை, ஒருவேளை சதுரங்க விளையாட்டை அல்லது வேறு ஏதாவது விளையாட்டைக் குறித்துச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். அந்த ஆட்டத்தின் விதிமுறைகளை நீங்கள் அறிந்திருக்கவில்லை என்றால், அல்லது சரியாக விளையாடத் தெரியவில்லை என்றால் உங்களுக்கு அந்த ஆட்டத்தில் ஈடுபாடே இருக்காது. ஆனால், அதன் விதிமுறைகளை நன்கு தெரிந்துகொண்டு, அந்த ஆட்டத்தில் கெட்டிக்காரர்களாய் ஆகிவிட்டீர்கள் என்றால் அதை விளையாட நீங்கள் துடிக்க மாட்டீர்களா? அதற்குச் சந்தர்ப்பம் தேட மாட்டீர்களா? கிறிஸ்தவ நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் அதுபோலத்தான். எனவே, கூட்டங்களுக்கு நன்கு தயார் செய்ய முயற்சியெடுங்கள். அவற்றில் ஆர்வத்தோடு பங்குகொள்ளுங்கள். இந்த இள வயதில்கூட நீங்கள் மற்றவர்களை உற்சாகப்படுத்தலாமே!—எபி. 10:24, 25.
ஊழியத்தில் ஈடுபடுவதும் அதுபோலத்தான். இதை மற்றவர்களுடைய தூண்டுதலினால் செய்யாமல் அன்பின் தூண்டுதலினால் செய்ய வேண்டும். ஆகையால், ‘நான் ஏன் யெகோவாவைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல விரும்புகிறேன்? நான் ஏன் அவரை நேசிக்கிறேன்?’ என உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் யெகோவாவை ஓர் அன்புள்ள அப்பாவாக அறிந்திருக்க வேண்டும். அவர் எரேமியா மூலம் இவ்வாறு சொன்னார்: ‘உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைக் கண்டுபிடிப்பீர்கள்.’ (எரே. 29:13, 14) கடவுளை அறிந்துகொள்ள நீங்கள் என்ன செய்ய வேண்டியிருக்கலாம்? “என் மனப்பான்மையை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது” என்கிறார் யாக்கூப். அவர் தொடர்கிறார்: “சிறு வயதிலிருந்தே கூட்டங்களிலும் வெளி ஊழியத்திலும் ஈடுபட்டிருக்கிறேன்; இருந்தாலும், அதைக் கடமைக்கென்று செய்தேன். ஆனால், எப்போது யெகோவாவைப் பற்றி நன்றாக அறிந்துகொண்டு அவரோடு நெருக்கமான பந்தத்தை அனுபவிக்க ஆரம்பித்தேனோ அப்போதுதான் சத்தியத்தில் எனக்கு உண்மையிலேயே ஒரு பிடிப்பு ஏற்பட்டது.”
உங்களைத் தட்டிக்கொடுத்து ஊக்கமளிக்கிற நல்ல நண்பர்கள் நீங்கள் ஊழியத்தில் சந்தோஷம் காணப் பெரும் பங்கு வகிக்கிறார்கள். “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்” என்று நீதிமொழி சொல்கிறது. (நீதி. 13:20) எனவே, ஆன்மீக இலக்குகளை அடைவதற்கு முயற்சி செய்கிறவர்களுடைய நட்பையும், யெகோவாவின் சேவையில் சந்தோஷமாக ஈடுபடுகிறவர்களுடைய நட்பையும் நாடுங்கள். யாலா சொல்கிறாள்: “ஆன்மீகச் சிந்தையுள்ள இளம் சகோதர சகோதரிகளோடு பழகும்போது எனக்கு உற்சாகமாக இருந்தது. அதனால், ஊழியத்தில் தவறாமல் கலந்துகொள்ள ஆரம்பித்தேன், அதுவும் ஆசை ஆசையாக!”
பெற்றோரின் பங்கு
“யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொடுத்ததற்காக நான் என் பெற்றோருக்கு ரொம்பவே நன்றியுள்ளவளாக இருக்கிறேன்” என்றும் சொல்கிறாள் யாலா. ஆம், தீர்மானங்களை எடுக்கும் விஷயத்தில் பிள்ளைகள்மீது பெற்றோர்கள் பலமான செல்வாக்கு செலுத்த முடியும். அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “தகப்பன்மார்களே, . . . யெகோவாவுக்கு ஏற்ற முறையில் [உங்களுடைய பிள்ளைகளை] கண்டித்து, அவருடைய சிந்தையை அவர்களுடைய மனதில் பதிய வைக்கும் விதத்தில் வளர்த்து வாருங்கள்.” (எபே. 6:4) பிள்ளைகளுக்குத் தங்களுடைய சொந்த வழிமுறைகளை அல்ல, யெகோவாவுடைய வழிமுறைகளையே பெற்றோர்கள் கற்பிக்க வேண்டும் என்று இந்தத் தெய்வீக ஆலோசனை தெளிவாகக் காட்டுகிறது. வாழ்க்கையில் உங்களுடைய பிள்ளைகள் எதைச் சாதிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதை அவர்களுடைய சிந்தையில் திணிப்பதற்குப் பதிலாக, யெகோவாவுடைய நோக்கத்திற்கு இசைய வாழ்வதையே இலக்காக வைக்க நீங்கள் அவர்களுக்கு உதவினால் எவ்வளவு அருமையாய் இருக்கும்!
யெகோவாவின் வார்த்தைகளை உங்கள் பிள்ளைகளுடைய மனதில் பதிய வைத்து, ‘வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்கிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவற்றைக் குறித்து அவர்களிடம் பேசலாம்.’ (உபா. 6:6, 7) மூன்று மகன்களின் பெற்றோரான ரிஷார்ட், ஈவா தம்பதியர் சொல்வதாவது: “முழுநேர ஊழியத்தின் பல்வேறு அம்சங்களைக் குறித்து நாங்கள் நிறையப் பேசினோம்.” இதன் பலன்? “எங்கள் மகன்கள் சிறு வயதிலேயே தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சேர விரும்பினார்கள், பிரஸ்தாபிகளாக ஆனார்கள், பின்பு ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று சொந்தமாகவே முடிவு செய்தார்கள். பிற்பாடு, அவர்கள் எல்லாருமே முழுநேர ஊழியத்தில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.”
பெற்றோரின் நல்ல முன்மாதிரி முக்கியமானது. ரிஷார்ட் சொல்கிறார்: “நாங்கள் வீட்டில் ஒருமாதிரி, சபையில் ஒருமாதிரி என்று இரட்டை வாழ்க்கை வாழக் கூடாதெனத் தீர்மானமாய் இருந்தோம்.” எனவே, உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்னிடம் என் பிள்ளைகள் என்ன கவனிக்கிறார்கள்? யெகோவாமீது எனக்கு உண்மையான அன்பு இருப்பதை அவர்கள் பார்க்கிறார்களா? நான் ஜெபம் செய்யும்போதும் தனிப்பட்ட படிப்பில் தவறாமல் ஈடுபடும்போதும் அந்த அன்பைப் பார்க்கிறார்களா? வெளி ஊழியம், பொழுதுபோக்கு, பொருளாதாரக் காரியங்கள் ஆகியவற்றைக் குறித்து எனக்கிருக்கும் மனப்பான்மையை வைத்து அந்த அன்பு எனக்கு இருப்பதை அவர்கள் கவனிக்கிறார்களா? சபையில் உள்ளவர்களைப் பற்றி நான் பேசும் விஷயங்களிலும் எனக்கு அந்த அன்பு இருப்பதைப் பார்க்கிறார்களா?’ (லூக். 6:40) அன்றாட வாழ்க்கையில் நீங்கள் நடந்துகொள்கிற விதத்தைப் பிள்ளைகள் கவனித்துக்கொண்டே இருப்பார்கள்; உங்கள் சொல்லிலும் செயலிலும் கொஞ்சம் முரண்பாடு இருந்தால்கூட அவர்கள் சட்டெனக் கண்டுபிடித்துவிடுவார்கள்.
பிள்ளைகளைக் கண்டித்து வளர்ப்பதும் மிக முக்கியமானது. எனினும், “ஒரு பிள்ளையை அவனுக்கேற்ற விதத்தில் பயிற்றுவி” என்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. (நீதி. 22:6, NW) “நாங்கள் ஒவ்வொரு பிள்ளைக்கும் தனித்தனியாக பைபிள் படிப்பு நடத்தினோம்” என்று ரிஷார்ட், ஈவா தம்பதியர் சொல்கிறார்கள். தங்களுடைய பிள்ளைகளுக்குத் தனித்தனியாக பைபிள் படிப்பு எடுப்பது அவசியமா இல்லையா என்று முடிவு செய்வது பெற்றோர்களின் சொந்தத் தீர்மானம். படிப்பை எப்படி நடத்தினாலும் சரி, ஒவ்வொரு பிள்ளைக்கும் தனிக் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு நீங்கள் வளைந்துகொடுப்பவராகவும் நியாயமானவராகவும் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, சில பாடல்களைக் கேட்கக் கூடாது என்று மட்டுமே சொல்வதற்குப் பதிலாக, எப்படி ஞானமாய்த் தீர்மானமெடுப்பது என்றும், பைபிள் நியமங்கள் எப்படி உட்பட்டுள்ளன என்றும் சொல்லிக்கொடுக்கலாம்.
பிள்ளைகளிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்களென அவர்கள் நன்றாகவே புரிந்துகொள்ளலாம்; உங்கள் விருப்பப்படியே அவர்கள் நடப்பதுபோல் தெரியலாம். இருந்தாலும், நீங்கள் அவர்களுடைய இருதயத்தைத் தொடும் விதத்தில் சொல்லிக்கொடுக்க வேண்டும். “மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர் போலிருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான்” என்பதை நினைவில் வையுங்கள். (நீதி. 20:5) இங்கு சொல்லப்பட்டுள்ள புத்திமானைப் போல் நடந்துகொள்ளுங்கள், பிள்ளைகளுடைய இருதயத்தில் பிரச்சினை இருப்பதற்கான அறிகுறி ஏதாவது தென்படுகிறதா என்று உன்னிப்பாகக் கவனியுங்கள், தென்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுங்கள். அவர்களைக் குறைகூறுவதற்குக் பதிலாக அவர்கள்மீது அக்கறை இருப்பதைக் காட்டுங்கள், பொருத்தமான கேள்விகளைக் கேளுங்கள். ஆனால், கேள்விமேல் கேள்வி கேட்டுத் துளைத்தெடுக்காதீர்கள். நீங்கள் காட்டுகிற உண்மையான அக்கறை அவர்களுடைய இருதயத்தைத் தொடுவதோடு, அவர்களுக்கு உதவ உங்களுக்கு உதவியாக இருக்கும்.
சபையின் பங்கு
சபையிலுள்ள இளைஞர்கள் தங்கள் பெற்றோரிடமிருந்து பெற்ற பைபிள் சத்தியங்களைப் பொன்னெனப் போற்ற கடவுளுடைய ஊழியர்களான நீங்கள் அவர்களுக்கு உதவ முடியுமா? பிள்ளைகளைப் பயிற்றுவிக்கும் தலையாய கடமை பெற்றோருடையதே என்றாலும், சபையிலுள்ள மற்றவர்கள், முக்கியமாக மூப்பர்கள், அவர்களுக்குப் பக்கபலமாய் இருக்கலாம். அதுவும் மத ரீதியில் பிளவுபட்டுள்ள குடும்பத்தாருக்கு உதவுவது மிகமிக முக்கியம்.
இளைஞர்கள் யெகோவாவை நேசிப்பதற்கும், சபைக்குத் தாங்கள்கூடத் தேவையானவர்கள், மதிப்புவாய்ந்தவர்கள் என்று உணருவதற்கும் மூப்பர்கள் என்ன செய்யலாம்? போலந்திலுள்ள ஒரு சபையில் கண்காணியாகச் சேவை செய்யும் மார்யுஷ் சொல்கிறார்: “இளைஞர்களோடு மூப்பர்கள் பேச வேண்டும், பேச வேண்டும், பேச வேண்டும். பிரச்சினைகள் தலைதூக்கும்போது மட்டுமல்ல, மற்ற சந்தர்ப்பங்களிலும், அதாவது ஊழியம் செய்யும்போது, கூட்டங்கள் முடிந்த பிறகு, சாவகாசமாக இருக்கும்போது என எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அவர்களோடு பேச வேண்டும்.” அதுபோன்ற சந்தர்ப்பங்களில், சபையைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டுப்பார்க்கலாம், அல்லவா? இளைஞர்களிடம் இப்படி மனந்திறந்து பேசும்போது சபையோடு நெருக்கமாகவும், அதன் பாகமாகவும் இருப்பதுபோல் அவர்கள் உணருவார்கள்.
நீங்கள் ஒரு மூப்பர் என்றால், உங்கள் சபையிலுள்ள இளைஞர்களோடு நெருங்கிப் பழக முயற்சியெடுத்து வருகிறீர்களா? இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட ஆல்பர்ட் இப்போது மூப்பராகச் சேவை செய்துகொண்டிருந்தாலும், பருவ வயதில் பல்வேறு சோதனைகளைச் சந்தித்திருந்தார். அவர் சொல்கிறார்: “இளைஞனாக இருந்த என்னை மூப்பர்கள் தனிப்பட்ட விதத்தில் சந்தித்து ஊக்கமூட்டுவது அவசியமாக இருந்தது.” மூப்பர்கள், இளைஞர்களுடைய ஆன்மீக நலனுக்காக ஜெபம் செய்வதன் மூலமும் அவர்கள்மீது தனிப்பட்ட அக்கறையைக் காட்டலாம்.—2 தீ. 1:3.
சபைக் காரியங்களில் ஆர்வத்தோடு ஈடுபடுவது இளைஞர்களுக்கு நல்லது. இல்லாவிட்டால், அவர்களுடைய முழு கவனமும் உலகப்பிரகாரமான இலக்குகள்மீது திரும்பிவிடலாம். ஆகவே, பெரியவர்களான நீங்கள் அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்து அவர்களை நண்பர்களாக்கிக்கொள்ள முடியுமா? அவர்களோடு சாவகாசமாகப் பொழுதைக் கழியுங்கள். அந்தச் சமயத்தில் அவர்களுடைய நம்பிக்கையைச் சம்பாதித்துக்கொள்ளுங்கள், நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள். யாலா இவ்வாறு சொல்கிறாள்: “பயனியர் சகோதரி ஒருவர் என்மீது தனிப்பட்ட அக்கறை காட்டினார். முதன்முதலாக நானே விருப்பப்பட்டு ஊழியத்திற்குச் சென்றது அவரோடுதான்.”
உங்களுடைய இஷ்டம்
இளைஞர்களே, உங்களை நீங்களே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்னுடைய இலக்குகள் என்ன? நான் இன்னும் ஞானஸ்நானம் பெறவில்லையென்றால், அதை என் இலக்காக வைத்திருக்கிறேனா?’ யெகோவா மீதுள்ள ஆழ்ந்த அன்பினால்தான் ஞானஸ்நானம் பெற வேண்டுமே தவிர, குடும்பப் பாரம்பரியத்தை விட்டுவிடக் கூடாதென்ற எண்ணத்தினால் அல்ல.
ஆகையால் இளைஞர்களே, யெகோவா உங்கள் உண்மை நண்பராக இருக்கட்டும்! சத்தியம் உங்கள் பொக்கிஷமாக இருக்கட்டும்! தீர்க்கதரிசியான ஏசாயா மூலம் யெகோவா இவ்வாறு சொன்னார்: “திகையாதே, நான் உன் தேவன்.” அவருக்கு நீங்கள் நண்பராக இருக்கும்வரை அவர் உங்கள் கூடவே இருப்பார். உங்களை உண்மையிலேயே பலப்படுத்துவார், ‘தன் நீதியின் வலதுகரத்தினால் உங்களைத் தாங்குவார்.’—ஏசா. 41:10.
[அடிக்குறிப்பு]
a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 4-ன் படம்]
உங்கள் பிள்ளையின் இருதயத்தில் என்ன இருக்கிறதெனப் புரிந்துகொள்ள முயலுங்கள்
[பக்கம் 6-ன் படம்]
ஞானஸ்நானம் பெறுவதற்கு யெகோவா மீதுள்ள ஆழ்ந்த அன்புதான் காரணமாக இருக்க வேண்டும்