கடவுளுடைய சக்தி உங்களுக்கு அவசியம்
“உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை [அதாவது, சக்தியை] என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.” (சங்கீதம் 51:11) ஒரு பெரிய தவறைச் செய்த பிறகு தாவீது ராஜா ஊக்கமாக செய்த ஜெபம் அது.
தாவீது அநேக முறை கடவுளுடைய சக்தி தன்னைப் பலப்படுத்தியதை உணர்ந்தார். அவருடைய இளவயதில், ராட்சத படை வீரனான கோலியாத்தைத் தோற்கடிக்க அந்தச் சக்தி அவருக்கு உதவியது. (1 சாமுவேல் 17:45-50) இதுவரை எழுதப்பட்டதிலேயே மிக அழகான சங்கீதங்கள் சிலவற்றை எழுதவும்கூட அந்தச் சக்தி அவருக்கு ஆற்றல் அளித்தது. “யெகோவாவின் சக்தியே என்னைப் பேச வைத்தது, அவருடைய வார்த்தை என் நாவில் இருந்தது” என்று தாவீது விளக்கினார்.—2 சாமுவேல் 23:2.
தாவீதைக் கடவுளுடைய சக்தி வழிநடத்தியது என்பதை இயேசு கிறிஸ்துவும்கூட ஒரு சமயம் இவ்வாறு உறுதிப்படுத்தினார்: “‘யெகோவா என் எஜமானரிடம், “நான் உன்னுடைய எதிரிகளை உன் காலடியில் வீழ்த்தும்வரை, நீ என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு” என்றார்’ எனக் கடவுளுடைய சக்தியினால் தூண்டப்பட்டு தாவீது சொன்னார்.” (மாற்கு 12:36; சங்கீதம் 110:1) தாவீது சங்கீதங்களை எழுதியபோது கடவுளுடைய சக்தி அவரை வழிநடத்தியது என்பதை இயேசு அறிந்திருந்தார். கடவுளுடைய அதே சக்தியால் நாமும் உதவி பெற முடியுமா?
“கேட்டுக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும்”
ஒரு சங்கீதத்தை எழுத உங்களுக்கு வாய்ப்பே இல்லாதிருக்கலாம். ஆனால், பிரச்சினைகள் கோலியாத்தைப் போல் மலையளவு வந்து உங்களை அச்சுறுத்தலாம். உதாரணத்திற்கு, இசாபெல்லை எடுத்துக்கொள்வோம்.a இவருடைய கணவர் இவரை அம்போவென விட்டுவிட்டு, ஓர் இளம் பெண்ணோடு போய்விட்டார். இரண்டு பெண் பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்கு எந்தக் காசு பணமும் கொடுக்காததோடு, எக்கச்சக்கமான கடனையும் இவருடைய தலையில் போட்டுவிட்டுப் போய்விட்டார். “அவரை நம்பி நான் மோசம்போய்விட்டேன், தூக்கியெறிகிற குப்பை மாதிரி நான் அவருக்கு வேண்டாதவளாகிவிட்டேன். ஆனாலும், அவர் என்னைவிட்டுப் போன சமயத்திலிருந்து கடவுளுடைய சக்திதான் என்னைக் காப்பாற்றி வந்திருப்பதாக உணருகிறேன்” என்று இவர் சொல்கிறார்.
கடவுளுடைய சக்தி தானாகவே கிடைத்துவிடுமென இசாபெல் நினைத்தாரா? இல்லை, அந்தச் சக்தியைத் தரும்படி இவர் தினமும் கடவுளிடம் வேண்டிக்கொண்டார். எதிர்காலத்தைத் தைரியத்தோடு சந்திக்கவும், தன்னுடைய குழந்தைகளைச் சரிவர கவனித்துக்கொள்ளவும், இழந்துவிட்ட தன்மானத்தைத் திரும்பப் பெறவும் கடவுளுடைய பலம் தனக்குத் தேவை என்பதை இவர் அறிந்திருந்தார். இயேசு சொன்ன பின்வரும் வார்த்தைகளுக்கு இவர் கீழ்ப்படிந்தார்: “கேட்டுக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடிக்கொண்டே இருங்கள், அப்போது கண்டடைவீர்கள்; தட்டிக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குத் திறக்கப்படும்.”—மத்தேயு 7:7.
ரோபர்டோ என்பவருக்கும் கடவுளுடைய சக்தி தேவைப்பட்டது; ஆனால் வேறு காரணங்களுக்காக. அவர் புகையிலைக்கும் கஞ்சாவுக்கும் அடிமைப்பட்டு, அவற்றைச் சதா புகைத்துக்கொண்டிருந்தார். இந்தப் பழக்கத்தை விட்டுவிட அவர் இரண்டு வருடங்கள் போராடினார்; அப்போது நிறைய தடவை மீண்டும் புகைக்க ஆரம்பித்தார். “போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதை நிறுத்தினால் கவலையில் மூழ்க வேண்டியிருக்கும். எந்நேரமும் உடம்பு அவற்றிற்காகத் துடியாய்த் துடித்துக்கொண்டிருக்கும்” என்று அவர் சொல்கிறார்.
“ஆனால், கடவுள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அவருக்குச் சேவை செய்வதற்கு என்னை மாற்றிக்கொள்ளத் தீர்மானித்தேன். நம்பிக்கை தரும் பைபிள் விஷயங்களால் என் மனதை நிரப்ப முயற்சி செய்தேன். பைபிளுக்கு இசைவாக வாழ எனக்குப் பலத்தைத் தரும்படி தினமும் கடவுளிடம் ஊக்கமாய் ஜெபம் செய்தேன். இதையெல்லாம் என்னால் சொந்தமாகச் செய்ய முடியாதென எனக்குத் தெரிந்திருந்தது. முக்கியமாக பழையபடி புகைக்க ஆரம்பித்து மனமுடைந்துபோன சமயத்தில், என் ஜெபங்களுக்கு யெகோவா பதிலளித்த விதத்தைக் கண்ணாரக் காண முடிந்தது. கடவுளுடைய சக்தி எனக்குப் புதுப் பலத்தைத் தந்ததுபோல் உணர்ந்தேன்; அவருடைய சக்தியின் உதவி இல்லாவிட்டால் புகைப் பழக்கத்தை என்னால் நிறுத்தியிருக்கவே முடியாது” என்றும் அவர் சொல்கிறார்.—பிலிப்பியர் 4:6-8.
“கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து” எழும்புவார்கள்
இசாபெல்லையும் ரோபர்டோவையும் போல், யெகோவாவின் சாட்சிகளில் லட்சக்கணக்கானோர் கடவுளுடைய சக்தியின் பலத்தைத் தங்கள் வாழ்க்கையில் உணர்ந்திருக்கிறார்கள். பிரபஞ்சத்தைப் படைப்பதற்கு யெகோவா பயன்படுத்திய அந்தச் சக்தியைப் பெற நீங்கள் விரும்பினால் அது உங்களுக்கும் கிடைக்கும். அந்தச் சக்தியைப் பெற நீங்கள் ஊக்கமாய் வேண்டினால் கடவுள் அதை உங்களுக்கு மனப்பூர்வமாய் கொடுப்பதற்கு ஆவலுள்ளவராக இருக்கிறார். ஆனால், அந்தச் சக்தியை நீங்கள் பெறுவதற்கு, அவரைப் பற்றிய உண்மையைக் கற்றுக்கொள்ளவும், அவருடைய சித்தத்தைச் செய்ய உள்ளப்பூர்வமாய் நாடவும் வேண்டும்.—ஏசாயா 55:6; எபிரெயர் 11:6.
கடவுளுடைய சக்தி தரும் வல்லமையால், அவருக்கு முழுமையாய்ச் சேவை செய்வதற்கும், வாழ்க்கையில் எதிர்ப்படும் எந்தச் சவாலையும் சமாளிப்பதற்கும் நீங்கள் பலத்தைப் பெறலாம். அதைத்தான் பைபிளும் இவ்வாறு உறுதியளிக்கிறது: ‘சோர்ந்துபோகிறவனுக்கு அவர் [யெகோவா] பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். . . . கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள் புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.’—ஏசாயா 40:28-31. (w09-E 10/01)
[அடிக்குறிப்பு]
a சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
[பக்கம் 14-ன் சிறுகுறிப்பு]
‘எனக்குப் பலத்தைத் தரும்படி தினமும் கடவுளிடம் ஊக்கமாய் ஜெபம் செய்தேன். இதையெல்லாம் என்னால் சொந்தமாகச் செய்ய முடியாதென எனக்குத் தெரிந்திருந்தது. என் ஜெபங்களுக்கு அவர் பதிலளித்த விதத்தைக் கண்ணாரக் காண முடிந்தது’
[பக்கம் 15-ன் பெட்டி/படங்கள்]
கடவுளுடைய சக்தியின் செயல்கள்
கடவுள் தம்முடைய சக்தியினால் இந்தப் பூமியையும் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள மற்ற எல்லாவற்றையும் படைத்தார். “கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது. நீர் உம்முடைய ஆவியை [அதாவது, சக்தியை] அனுப்பும்போது, அவைகள் சிருஷ்டிக்கப்படும்” என்று சங்கீதக்காரன் சொன்னார்.—சங்கீதம் 104:24, 30; ஆதியாகமம் 1:2; யோபு 33:4.
கடவுளுடைய சக்தி பைபிளை எழுதும்படி பக்தியுள்ள ஆட்களைத் தூண்டியது. “வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியினால் அருளப்பட்டிருக்கின்றன. . . . பிரயோஜனமுள்ளவையாக இருக்கின்றன” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (2 தீமோத்தேயு 3:16) ‘கடவுளுடைய சக்தியினால் அருளப்பட்டது’ என்பதற்கான கிரேக்க வார்த்தையின் நேர்ப்பெயர்ப்பு ‘கடவுள் ஊதினார்’ என்பதாகும். யெகோவா தம் சக்தியை ஊதியதால், அதாவது பைபிள் எழுத்தாளர்களின் எண்ணங்களை உந்துவித்ததால், அவர்கள் “கடவுளுடைய வார்த்தையை” எழுதினார்கள்.—1 தெசலோனிக்கேயர் 2:13.
கடவுளுடைய சக்தி எதிர்காலத்தைத் துல்லியமாக முன்னறிவிக்க அவருடைய ஊழியர்களுக்கு ஆற்றலை அளித்தது. அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு சொன்னார்: “வேதாகமத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் தனி நபர்களுடைய கருத்துகளின் அடிப்படையில் சொல்லப்படவில்லை . . . ஏனென்றால், மனிதர்கள் ஒருகாலத்திலும் தங்களுடைய விருப்பத்தினால் தீர்க்கதரிசனம் சொல்லவில்லை; கடவுள் அருளிய வார்த்தைகளை அவருடைய சக்தியினால் உந்துவிக்கப்பட்டே சொன்னார்கள்.”—2 பேதுரு 1:20, 21; யோவேல் 2:28.
கடவுளுடைய சக்தி அவருடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதற்கும் அற்புதங்களைச் செய்வதற்கும் தேவையான திறனை இயேசுவுக்கும் விசுவாசமுள்ள மற்றவர்களுக்கும் அளித்தது. இயேசு இவ்வாறு சொன்னார்: “யெகோவாவின் சக்தி என்மேல் இருக்கிறது, ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்க அவர் என்னை நியமித்தார்; சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையும் பார்வையற்றவர்களுக்குப் பார்வையும் கிடைக்குமென்று பிரசங்கிப்பதற்காகவும் . . . அவர் என்னை அனுப்பினார்.”—லூக்கா 4:18, 19; மத்தேயு 12:28.
[பக்கம் 15-ன் பெட்டி/படங்கள்]
கடவுளுடைய சக்தி நமக்கு உதவும் வழிகள்
கடவுளுடைய சக்தி சோதனையை எதிர்த்துப் போராடவும் கெட்ட பழக்கங்களை விட்டொழிக்கவும் உங்களைப் பலப்படுத்தும். அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொன்னார்: “கடவுள் நம்பகமானவர்; உங்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு நீங்கள் சோதிக்கப்பட அவர் அனுமதிக்க மாட்டார்; மாறாக, சோதனையை நீங்கள் சகித்துக்கொள்வதற்கு வழிசெய்வார்.”—1 கொரிந்தியர் 10:13.
கடவுளுடைய சக்தி அவருக்குப் பிரியமான குணங்களை வளர்த்துக்கொள்ள உங்களுக்கு உதவும். “கடவுளுடைய சக்தியினால் பிறப்பிக்கப்படும் குணங்களோ அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, கருணை, நல்மனம், விசுவாசம், சாந்தம், சுயக்கட்டுப்பாடு ஆகியவையே.”—கலாத்தியர் 5:22, 23.
கடவுளுடைய சக்தி சோதனைகளைச் சகிக்க உங்களுக்கு வலிமை அளிக்கும். “என்னைப் பலப்படுத்துகிற கடவுள் மூலமாக எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் உண்டு.”—பிலிப்பியர் 4:13.