அன்பற்ற உலகில் நட்பைக் காத்துக்கொள்ளுதல்
“நீங்கள் ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்ட வேண்டும் என்பதற்காக இவற்றைக் கட்டளையிடுகிறேன்.”—யோவா. 15:17.
1. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் தங்களுக்கிடையே இருந்த நெருக்கமான நட்பை ஏன் காத்துக்கொள்ள வேண்டியிருந்தது?
உண்மையுள்ள தம் சீடர்கள் ஒருவருக்கொருவர் நண்பர்களாக நிலைத்திருக்க வேண்டுமென இயேசு தம்முடைய கடைசி இரவன்று அறிவுறுத்தினார். அவர்கள் ஒருவர்மீது ஒருவர் காட்டுகிற அன்பே அவர்களைத் தம்முடைய சீடர்களாக அடையாளம் காண்பிக்குமெனச் சில மணிநேரங்களுக்கு முன்புதான் அவர் சொல்லியிருந்தார். (யோவா. 13:35) எனவே, வரவிருந்த சோதனைகளில் சகித்து நிற்பதற்கும், தங்களுக்குச் சீக்கிரத்தில் நியமிக்கப்படவிருந்த வேலையைச் செய்து முடிப்பதற்கும் அவர்கள் தங்களுக்கிடையே இருந்த நெருக்கமான நட்பைக் காத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஆம், கடவுளோடும் ஒருவரோடு ஒருவரும் வைத்திருந்த முறிக்க முடியாத பந்தத்திற்கு முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் பெயர்பெற்று விளங்கினார்கள்.
2. (அ) நாம் என்ன செய்யத் தீர்மானமாய் இருக்கிறோம், ஏன்? (ஆ) என்ன கேள்விகளை இப்போது சிந்திப்போம்?
2 இன்று நாம், அந்தக் கிறிஸ்தவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றும் ஓர் உலகளாவிய அமைப்பின் பாகமாக இருப்பது எப்பேர்ப்பட்ட ஆனந்தம்! ஆகவே, ஒருவர்மீது ஒருவர் உண்மையான அன்பைக் காட்டும்படி இயேசு கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படியத் தீர்மானமாய் இருக்கிறோம். என்றாலும், இந்தக் கடைசி நாட்களில் பொதுவாக மக்கள் நம்பிக்கைத் துரோகிகளாகவும், பந்தபாசமற்றவர்களாகவுமே இருக்கிறார்கள். (2 தீ. 3:1-3) அவர்களுடைய நட்பு பெரும்பாலும் மேலோட்டமானதாக, சுயநலமிக்கதாக இருக்கிறது. நம்முடைய நட்பு அப்படிப்பட்டதாக இருக்கக் கூடாது, அப்போதுதான் நாம் உண்மைக் கிறிஸ்தவர்கள் என்பதற்கு அத்தாட்சி அளிப்போம். ஆகவே, பின்வரும் கேள்விகளை இப்போது சிந்திப்போம்: நல்ல நட்புக்கு அஸ்திவாரம் என்ன? நல்ல நண்பர்களை எப்படிச் சம்பாதிக்கலாம்? ஒருவரிடமுள்ள நட்பை நாம் எப்போது முறித்துக்கொள்ள வேண்டும்? நல்ல நட்பை நாம் எப்படிக் காத்துக்கொள்ளலாம்?
நல்ல நட்புக்கு அஸ்திவாரம் என்ன?
3, 4. ஆழமான நட்புக்கு அஸ்திவாரம் என்ன, ஏன்?
3 ஆழமான நட்புக்கு அஸ்திவாரம் யெகோவா மீதுள்ள அன்பே. ‘தனி மனிதன் ஒருவனை எவனாவது வீழ்த்தப் பார்த்தால் இருவர் சேர்ந்து அவனை எதிர்த்துநிற்க முடியும்; முப்புரிக் கயிற்றைச் சீக்கிரமாய் அறுக்க முடியாது’ என்று சாலொமோன் ராஜா எழுதினார். (பிர. 4:12, NW) நட்பெனும் கயிற்றில் யெகோவா மூன்றாவது இழையாக இருக்கும்போது, அந்த நட்பு என்றுமே முறியாது.
4 உண்மைதான், யெகோவாவை நேசிக்காதவர்களால்கூட இனிமையான நட்பைச் சம்பாதித்துக்கொள்ள முடியும். ஆனால், யெகோவாவை நேசிக்கிறவர்கள் நண்பர்களாக இருக்கும்போது அவர்களுடைய நட்பு அசைக்க முடியாததாக இருக்கும். உண்மை நண்பர்கள் இருவருக்கிடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டுவிட்டால், யெகோவாவுக்குப் பிரியமான விதத்திலே அவர்கள் ஒருவரையொருவர் நடத்துவார்கள். சத்தியத்தை எதிர்ப்பவர்கள், உண்மைக் கிறிஸ்தவர்களுக்கிடையே உள்ள நட்பை முறிக்க முயன்றால் தங்களுக்குத் தோல்விதான் மிஞ்சும் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். யெகோவாவின் ஊழியர்கள் சாவதற்குக்கூடத் துணிவார்களே தவிர, எதிரிகளிடம் ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்க மாட்டார்கள்; யெகோவாவின் சாட்சிகளுடைய சரித்திரம் இதைக் காட்டுகிறது.—1 யோவான் 3:16-ஐ வாசியுங்கள்.
5. ரூத், நகோமியின் நட்பு நீடித்து நிலைத்ததற்குக் காரணம் என்ன?
5 யெகோவாவை நேசிக்கிறவர்களோடு மட்டும்தான் மிக இனிமையான நட்பை நம்மால் அனுபவிக்க முடியும். ரூத், நகோமியின் உதாரணத்தைச் சிந்தித்துப் பாருங்கள். நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்களைப் பற்றிய மனதைத் தொடும் பைபிள் பதிவுகளில் இவர்களைப் பற்றிய பதிவும் ஒன்று. இவர்களுடைய நட்பு நீடித்து நிலைத்ததற்குக் காரணம் என்னவாக இருந்தது? இதற்கான பதிலை நகோமியிடம் ரூத் சொன்ன பின்வரும் வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன: ‘உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன். . . . மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், யெகோவா அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்.’ (ரூத் 1:16, 17) ஆம், ரூத், நகோமி இருவருக்குமே யெகோவாமீது ஆழமான அன்பு இருந்தது; இந்த அன்புதான் ஒருவரையொருவர் அன்பாக நடத்த அவர்களைத் தூண்டியது. இதன் காரணமாக, இந்த இரு பெண்களையும் யெகோவா ஆசீர்வதித்தார்.
நல்ல நண்பர்களைச் சம்பாதிப்பது எப்படி?
6-8. (அ) நீடித்து நிலைக்கும் நட்புக்கு எது அவசியம்? (ஆ) நண்பர்களைச் சம்பாதிப்பதற்கு நீங்கள் எப்படி முன்முயற்சி எடுக்கலாம்?
6 நல்ல நட்பு எதேச்சையாக உருவாகிவிடாது என்பதையே ரூத், நகோமியின் உதாரணம் காட்டுகிறது. நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் யெகோவாமீது அன்பு இருப்பதுதான் அதற்கு அஸ்திவாரம். ஆனால், அந்த நட்பு நீடித்து நிலைக்க வேண்டுமானால் கடின உழைப்பும் சுய தியாகமும் அவசியம். கிறிஸ்தவக் குடும்பங்களில், உடன்பிறந்தவர்களும்கூட ஒருவருக்கொருவர் நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்வதற்குக் கடினமாய் முயற்சியெடுக்க வேண்டும். அப்படியானால், நீங்கள் எப்படி நல்ல நண்பர்களைச் சம்பாதிக்கலாம்?
7 முன்முயற்சி எடுங்கள். தன் நண்பர்களாயிருந்த ரோமச் சபையாருக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதிய கடிதத்தில், “உபசரிப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டார். (ரோ. 12:13) ஒரு காரியத்தைத் தவறாமல் செய்துவந்தால்தான் அதைப் பழக்கமாக்கிக்கொள்ள முடியும். அவ்வாறே, மற்றவர்களுக்காக நீங்கள் சிறுசிறு விஷயங்களைத் தவறாமல் செய்துகொண்டே இருந்தால்தான் உபசரிப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ள முடியும். உங்களுக்குப் பதிலாக மற்றவர்கள் உபசரிக்கும் குணத்தைப் பழக்கமாக்கிக்கொள்ள முடியாது. (நீதிமொழிகள் 3:27-ஐ வாசியுங்கள்.) உபசரிக்கும் குணத்தைக் காட்டுவதற்கான ஒரு வழி, சபையிலுள்ள வெவ்வேறு சகோதர சகோதரிகளை எளிய உணவுக்கு அழைப்பதாகும். அப்படியானால், உபசரிப்பதை உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையின் பாகமாக ஆக்கிக்கொள்ள முடியுமா?
8 சபையில் நண்பர்களைச் சம்பாதிப்பதற்கு முன்முயற்சி எடுப்பதற்கான மற்றொரு வழி, அவர்களை உங்களோடு ஊழியத்திற்கு அழைப்பதாகும். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் அவர்கள் யெகோவாமீது தங்களுக்கிருக்கும் அன்பைப் பற்றி வீட்டுக்காரரிடம் இருதயப்பூர்வமாகப் பேசும்போது, அவர்களோடு நெருங்கிய நட்பை வளர்த்துக்கொள்ள நீங்கள் கட்டாயம் தூண்டப்படுவீர்கள்.
9, 10. எந்த விஷயத்தில் பவுல் நமக்கு முன்மாதிரியாக இருக்கிறார், நாம் அவரை எவ்வாறு பின்பற்றலாம்?
9 உங்கள் இதயக் கதவை அகலத் திறந்திடுங்கள். (2 கொரிந்தியர் 6:12, 13-ஐ வாசியுங்கள்.) ‘எனக்கு ஏற்ற நண்பர்கள் சபையில் ஒருவர்கூட இல்லை’ என எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? இன்னின்னாரைத்தான் நண்பர்களாய் ஆக்கிக்கொள்ள வேண்டுமென நீங்களாகவே சில வரம்புகளை ஏற்படுத்திக்கொள்வது அதற்குக் காரணமாக இருக்குமோ? இதயக் கதவை அகலத் திறந்து நிறையப் பேரிடம் பாசத்தைக் காட்டுவதில் அப்போஸ்தலன் பவுல் நமக்கு ஒரு நல்ல முன்மாதிரி. யூதரல்லாதவர்களிடம் நெருங்கிய நட்பை வளர்த்துக்கொள்வது பற்றி அவர் ஒரு காலத்தில் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார். என்றாலும் அவர் “புறதேசத்தாருக்கு . . . ஓர் அப்போஸ்தலனாக” ஆனார்.—ரோ. 11:13.
10 அதோடு, தன் வயதை ஒத்தவர்களிடம் மட்டுமே அவர் நட்பை வளர்த்துக்கொள்ளவில்லை. உதாரணமாக, அவருக்கும் தீமோத்தேயுவுக்கும் இடையே நிறைய வயது வித்தியாசம் இருந்தது, இருவரும் வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள், என்றபோதிலும் அவர்கள் நெருங்கிய நண்பர்களானார்கள். இன்று, இளைஞர் பலர் அவர்களைவிட வயதில் மூத்த சகோதர சகோதரிகளிடம் வளர்த்திருக்கிற நட்பைப் பொக்கிஷமாகப் போற்றுகிறார்கள். இதைப் பற்றி சுமார் 20 வயது வனஸ்ஸா இவ்வாறு சொல்கிறாள்: “50 வயதைத் தாண்டிய ஒரு சகோதரி என்னுடைய பெஸ்ட் ஃபிரெண்டாக இருக்கிறார். என் வயதிலுள்ள ஃபிரெண்ட்ஸிடம் எதையெல்லாம் பேசுவேனோ அதையெல்லாம் அவரிடம் பேசுவேன். அவரும் என்மீது ரொம்பவே அக்கறை காட்டுவார்.” இப்படிப்பட்ட நட்பு எவ்வாறு மலர்கிறது? “இந்த நட்பு தானாக என்னைத் தேடி வரவில்லை, நானே முயற்சியெடுத்துச் சம்பாதித்தது” என்று வனஸ்ஸா சொல்கிறாள். வயது வரம்பின்றி எல்லாரோடும் நட்பை வளர்த்துக்கொள்ள நீங்கள் மனமுள்ளவர்களாக இருக்கிறீர்களா? நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்காக யெகோவா நிச்சயம் உங்களை ஆசீர்வதிப்பார்.
11. யோனத்தான், தாவீதின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
11 பற்றுமாறாமல் இருங்கள். “உண்மையான நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான்; துன்ப காலத்தில் உடன்பிறந்தவன்போல் உதவுவான்” என்று சாலொமோன் எழுதினார். (நீதி. 17:17, NW) இந்த வரிகளை எழுதியபோது, தன்னுடைய தகப்பனான தாவீதுக்கும் யோனத்தானுக்கும் இடையே இருந்த இனிய நட்புதான் ஒருவேளை அவருடைய மனதிற்கு வந்திருக்கும். (1 சா. 18:1) இஸ்ரவேலின் ராஜாவான சவுல் தன் மகன் யோனத்தானையே தனக்குப்பின் ராஜாவாக்க வேண்டுமென விரும்பினார். ஆனால், தாவீதைத்தான் யெகோவா ராஜாவாகத் தேர்ந்தெடுத்திருந்தார் என்பதை அறிந்த யோனத்தான், அதை மனதார ஏற்றுக்கொண்டார். சவுலைப் போல் தாவீதுமேல் அவர் வயிற்றெரிச்சல் கொள்ளவில்லை. எல்லாரும் தாவீதைப் புகழ்ந்ததைக் கண்டு, பொறாமையில் வெந்துபோகவும் இல்லை; தாவீதைப் பற்றி சவுல் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லியபோது அதை உடனே நம்பிவிடவும் இல்லை. (1 சா. 20:24-34) நாம் யோனத்தானைப் போல் இருக்கிறோமா? நம்முடைய நண்பர்கள் சபையில் ஏதேனும் நியமிப்புகளைப் பெறும்போது, அதைக் கண்டு சந்தோஷப்படுகிறோமா? அவர்கள் கஷ்டப்படும்போது அவர்களுக்கு ஆறுதலாக, பக்கபலமாக இருக்கிறோமா? நம்முடைய நண்பரைப் பற்றி யாராவது மோசமான புரளியைக் கிளப்பிவிட்டால், அதை உடனே நம்பிவிடுகிறோமா? அல்லது யோனத்தானைப் போல் அவருக்காகப் பரிந்துபேசுகிறோமா?
நட்பை எப்போது முறித்துக்கொள்வது?
12-14. பைபிள் மாணாக்கர் சிலர் என்ன சவாலை எதிர்ப்படுகிறார்கள், அவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்?
12 பைபிள் மாணாக்கர் ஒருவர், வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்ய ஆரம்பிக்கும்போது, தன் நண்பர்களிடம் வைத்திருந்த நட்பைத் தொடருவதா அல்லது முறிப்பதா எனத் தீர்மானிக்கும் ஒரு பெரிய சவாலை எதிர்ப்படலாம். அவர்களுடைய இனிமையான தோழமையை அவர் விரும்பலாம், ஆனால் அவர்கள் பைபிள் நெறிமுறைப்படி வாழாதவர்களாக இருக்கலாம். முன்பு அந்த நண்பர்களோடு அவர் தவறாமல் பொழுதைக் கழித்திருக்கலாம். இப்போதோ, அவர்கள் செய்கிற சில காரியங்கள் தன்னையும் பாதித்துவிடுமென அஞ்சி, அவர்களோடு தொடர்பு வைத்துக்கொள்வதைக் குறைக்க நினைக்கலாம். (1 கொ. 15:33) அதேசமயம், அவர்களோடு பழகாவிட்டால், தான் அவர்களுக்குத் துரோகம் செய்வதாக இருக்குமென நினைக்கலாம்.
13 நீங்கள் இப்படிப்பட்ட சவாலை எதிர்ப்படுகிற பைபிள் மாணாக்கரா? அப்படியானால், வாழ்க்கையில் நீங்கள் நல்ல மாற்றங்களைச் செய்வதைப் பார்த்து ஓர் உண்மையான நண்பர் நிச்சயம் சந்தோஷப்படுவார் என்பதை நினைவில் வையுங்கள். சொல்லப்போனால், அவரும்கூட உங்களோடு சேர்ந்து யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்ள விரும்புவார். போலி நண்பர்களோ, “மோசமான சகதியில் நீங்கள் அவர்களோடு தொடர்ந்து புரளாததால்” ‘உங்களைச் சதா பழித்துப் பேசுவார்கள்.’ (1 பே. 4:3, 4) அப்படிப் பார்த்தால், அவர்கள்தான் உங்களுக்குத் துரோகம் செய்கிறார்கள், நீங்கள் அல்ல.
14 கடவுள்மீது அன்பில்லாத அந்தப் போலி நண்பர்கள் பைபிள் மாணாக்கர்களை ஒதுக்கிவிடும்போது அந்த வெற்றிடத்தைச் சபையிலுள்ளவர்கள் நிரப்பலாம். (கலா. 6:10) சபைக் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்திருக்கிற பைபிள் மாணாக்கர்களைத் தனிப்பட்ட விதத்தில் உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அவர்களோடு நேரம் செலவிட்டு அவர்களை ஊக்கப்படுத்த முடிந்திருக்கிறதா?
15, 16. (அ) நம்முடைய நண்பர் ஒருவர் யெகோவாவுக்குச் சேவை செய்வதை நிறுத்திவிட்டால், நாம் என்ன செய்ய வேண்டும்? (ஆ) கடவுள் மீதுள்ள நம் அன்பை நாம் எப்படி நிரூபிக்கிறோம்?
15 ஆனால், சபையிலுள்ள உங்கள் நண்பர் ஒருவர் யெகோவாவின் நட்பைத் துண்டித்துவிடுகையில், ஒருவேளை சபைநீக்கம் செய்யப்படலாம்; அப்போது என்ன செய்வீர்கள்? உண்மைதான், அத்தகைய சூழ்நிலை மிகவும் வேதனையாக இருக்கலாம். தன் நெருங்கிய தோழி யெகோவாவுக்குச் சேவை செய்வதை நிறுத்திவிட்டபோது தனக்கு எப்படியிருந்தது என ஒரு சகோதரி சொல்கிறார்: “என் மனம் சுக்குநூறாக உடைந்துவிட்டது. என் தோழி சத்தியத்தில் உறுதியாக இருந்தாள் என்று நினைத்திருந்தேன், ஆனால் அவள் அப்படியிருக்கவில்லை. அவள் தன் குடும்பத்தாரைப் பிரியப்படுத்துவதற்குத்தான் யெகோவாவைச் சேவித்துவந்திருக்க வேண்டுமென நினைக்கத் தோன்றியது. இந்தச் சம்பவத்திற்குப் பின்பு, நான் யெகோவாவைச் சேவிப்பதற்கான காரணத்தை யோசிக்க ஆரம்பித்தேன். நல்ல உள்நோக்கத்தோடுதான் அவரைச் சேவித்துவருகிறேனா என்று என்னையே கேட்டுக்கொண்டேன்.” வேதனைமிக்க இந்தச் சூழ்நிலையை அவர் எப்படிச் சமாளித்தார்? “யெகோவாமேல் என் பாரத்தைப் போட்டுவிட்டேன். சபைக்குள் அவர் எனக்கு நண்பர்களைத் தருகிறார் என்பதற்காக மட்டுமே அல்ல, அவருடைய அருமையான குணங்களுக்காகவே அவரை நான் நேசிக்கிறேன் என்பதைக் காட்டத் தீர்மானமாய் இருக்கிறேன்” என்கிறார் அவர்.
16 இந்த உலகத்தின் நண்பர்களாய் இருக்கத் தீர்மானிக்கிறவர்களோடு நம் நட்பைத் தொடர்ந்தால், கடவுளுடைய நண்பர்களாக இருப்போமென நாம் எதிர்பார்க்க முடியாது. இயேசுவின் சீடராகிய யாக்கோபு இவ்வாறு எழுதினார்: “உலக நட்பு கடவுளுக்குப் பகை என்பது உங்களுக்குத் தெரியாதா? ஆகவே, உலகத்திற்கு நண்பனாக இருக்க விரும்புகிற எவனும் கடவுளுக்குப் பகைவனாக ஆகிறான்.” (யாக். 4:4) நாம் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தோமென்றால் ஒரு நண்பருடைய இழப்பைச் சமாளிக்க அவர் நிச்சயம் உதவுவார் என உறுதியோடிருக்கலாம்; இவ்வாறு, யெகோவா மீதுள்ள நம் அன்பை நிரூபிக்கலாம். (சங்கீதம் 18:25-ஐ வாசியுங்கள்.) இதைப் பற்றி முந்தின பாராவில் குறிப்பிடப்பட்ட சகோதரி சுருக்கமாக இவ்வாறு சொல்கிறார்: “யெகோவாவை நேசிக்கும்படியோ நம்மை நேசிக்கும்படியோ நாம் ஒருவரைக் கட்டாயப்படுத்த முடியாது என்பதைத் தெரிந்துகொண்டேன். அது அவரவருடைய விருப்பம்.” அப்படியானால், சபையில் உள்ளவர்களோடு நல்ல நட்பைக் காத்துக்கொள்ள நாம் என்ன செய்யலாம்?
நல்ல நட்பைக் காத்துக்கொள்வது எப்படி?
17. நல்ல நண்பர்கள் ஒருவருக்கொருவர் எப்படிப் பேசுவார்கள்?
17 நல்ல பேச்சுத்தொடர்பு நல்ல நட்புக்கு உயிரூட்டுகிறது. ரூத்-நகோமி, தாவீது-யோனத்தான், பவுல்-தீமோத்தேயு ஆகியோரைப் பற்றிய பைபிள் பதிவுகளை நீங்கள் வாசிக்கும்போது ஒரு விஷயத்தைக் கவனிப்பீர்கள்; அதாவது, நல்ல நண்பர்கள் ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசுவார்கள், அதேசமயம் மரியாதையோடு பேசுவார்கள். மற்றவர்களோடு எப்படிப் பேச வேண்டுமென பவுல் சொல்கிறார்: “உங்கள் பேச்சு எப்போதும் இனிமையாகவும் சுவையாகவும் இருக்க வேண்டும்.” “சபைக்கு வெளியே இருப்பவர்களிடம்” அப்படிப் பேச வேண்டும் என்றே பவுல் இங்கு குறிப்பிட்டார். (கொலோ. 4:5, 6) சபைக்கு வெளியே இருப்பவர்களிடமே அப்படி மதிப்பு மரியாதையோடு பேச வேண்டுமென்றால், சபைக்கு உள்ளே இருக்கிற நம் நண்பர்களிடம் இன்னும் எந்தளவு மதிப்பு மரியாதையோடு பேச வேண்டும்!
18, 19. கிறிஸ்தவ நண்பர் ஒருவர் நமக்கு ஏதாவது புத்திமதி சொன்னால் நாம் அதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும், எபேசுவிலிருந்த மூப்பர்கள் நமக்கு எவ்வாறு முன்மாதிரியாக இருக்கிறார்கள்?
18 நல்ல நண்பர்கள், ஒருவருடைய கருத்துகளை ஒருவர் மதிப்பார்கள்; அதனால், அவர்களிடையே உள்ள பேச்சுத்தொடர்பு இனிமையானதாக, ஒளிவுமறைவில்லாததாக இருக்கும். ஞானியான சாலொமோன் ராஜா இவ்வாறு எழுதினார்: “வாசனைத் தைலமும் நறுமணப் பொருள்களும் இருதயத்தை மகிழ்விக்கும்; அதுபோலவே, ஒருவனுடைய நண்பன் அளிக்கும் புத்திமதி இனிமையானதாக இருக்கும்.” (நீதி. 27:9, NW) உங்கள் நண்பர் ஏதாவது புத்திமதி சொன்னால், நீங்களும் அதை இனிமையானதாகக் கருதுகிறீர்களா? (சங்கீதம் 141:5-ஐ வாசியுங்கள்.) நீங்கள் போகிற போக்கைக் குறித்து உங்கள் நண்பர் வருத்தம் தெரிவித்தால், எப்படி உணருவீர்கள்? உங்கள் மீதுள்ள அன்பினாலும் அக்கறையினாலுமே அவர் அதைச் சொல்கிறார் என்று எடுத்துக்கொள்வீர்களா, அல்லது அவர்மேல் கோபப்படுவீர்களா?
19 எபேசு சபையிலிருந்த மூப்பர்களோடு அப்போஸ்தலன் பவுல் நெருங்கிய நட்பை அனுபவித்திருந்தார். அவர்களில் சிலர் விசுவாசிகளான சமயத்திலிருந்தே அவருக்குத் தெரிந்தவர்களாக இருந்திருக்கலாம். என்றாலும், அவர்களைக் கடைசியாகச் சந்தித்தபோது, அவர்களுக்கு ஒளிவுமறைவில்லாமல் சில புத்திமதிகளை அவர் கொடுத்தார். அவர்கள் அதை எப்படி எடுத்துக்கொண்டார்கள்? அவர்மீது அவர்கள் கோபப்படவில்லை. மாறாக, தங்கள்மேல் அவருக்கு இருந்த அக்கறையை மதித்தார்கள், அவரை மீண்டும் பார்க்க முடியாதென்ற கவலையில் அழவும் செய்தார்கள்.—அப். 20:17, 29, 30, 36-38.
20. ஓர் அன்பான நண்பர் என்ன செய்வார்?
20 நல்ல நண்பர்கள் தங்களுக்குக் கொடுக்கப்படுகிற ஞானமான புத்திமதிகளை ஏற்றுக்கொள்வார்கள், தாங்களும் மற்றவர்களுக்குப் புத்திமதி அளிப்பார்கள். உண்மைதான், நாம் எப்போது ‘மற்றவர்களுடைய [தனிப்பட்ட] விஷயத்தில் தலையிடாமல் இருக்க’ வேண்டும் என்பதைப் பகுத்துணருவது அவசியம். (1 தெ. 4:11) அதேசமயம், ‘நாம் ஒவ்வொருவரும் நம்மைக் குறித்துக் கடவுளிடம் கணக்குக் கொடுக்க’ வேண்டும் என்பதையும் மனதில் வைப்பது அவசியம். (ரோ. 14:12) ஆனாலும், தேவை ஏற்படும்போது ஓர் அன்பான நண்பர் யெகோவாவின் நெறிகளைப் பற்றித் தன்னுடைய நண்பருக்குக் கனிவாக நினைப்பூட்டுவார். (1 கொ. 7:39) உதாரணத்திற்கு, மணமாகாத உங்கள் நண்பர், சத்தியத்தில் இல்லாத ஒருவரைக் காதலிப்பது உங்களுக்குத் தெரியவருகிறது; அப்போது என்ன செய்வீர்கள்? புத்திமதி சொன்னால் எங்கே தன் நட்பைத் துண்டித்துக்கொள்வாரோ எனப் பயந்து எதுவும் சொல்லாமலேயே இருந்துவிடுவீர்களா? நீங்கள் சொல்கிற புத்திமதியை அவர் அசட்டை செய்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள்; அப்போது என்ன செய்வீர்கள்? ஒரு நல்ல நண்பர், தவறான வழியில் செல்கிற தன் நண்பருக்கு உதவுவதற்காக அன்புள்ள மூப்பர்களின் வழிநடத்துதலை நாடுவார். இந்தப் படியை எடுக்கத் தைரியம் வேண்டும். என்றாலும், யெகோவா மீதுள்ள அன்பை அடித்தளமாகக் கொண்ட நட்புக்கு எந்தவொரு நிரந்தர பாதிப்பும் ஏற்பட்டுவிடாது.
21. சில சமயம் நாம் எல்லாருமே என்ன செய்துவிடுவோம், ஆனால் சபையாரிடம் நாம் நெருக்கமான நட்பைக் காத்துக்கொள்வது ஏன் முக்கியம்?
21 கொலோசெயர் 3:13, 14-ஐ வாசியுங்கள். சிலசமயம், நம் நண்பர்களுக்கு ‘ஏதாவது மனக்குறை’ ஏற்படுகிற விதத்தில் நாம் நடந்துவிடுவோம், அவர்களும்கூட நமக்கு எரிச்சலூட்டுகிற விதத்தில் நடந்துவிடுவார்கள். “நாம் எல்லாரும் பலமுறை தவறு செய்கிறோம்” என யாக்கோபும்கூட எழுதினார். (யாக். 3:2) என்றாலும், நாம் ஒருவருக்கு எதிராக ஒருவர் எத்தனை முறை தவறு செய்கிறோம் என்பதை வைத்தல்ல, ஆனால் அந்தத் தவறுகளை எந்தளவு முழுமையாக மன்னிக்கிறோம் என்பதை வைத்தே நம்முடைய நட்பு உண்மையானதா இல்லையா எனச் சொல்ல முடியும். அப்படியானால், ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசி, மனதார மன்னிப்பதன் மூலம் நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்வது எவ்வளவு முக்கியம்! நாம் இப்படிப்பட்ட அன்பைக் காட்டினால், அது ‘எல்லாரையும் பரிபூரணமாகப் பிணைக்கிற அன்பாக’ இருக்கும்.
உங்கள் பதில் என்ன?
• நல்ல நண்பர்களை நாம் எப்படிச் சம்பாதிக்கலாம்?
• ஒரு நட்பை எப்போது முறித்துக்கொள்ள வேண்டும்?
• நெருக்கமான நட்பைக் காத்துக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?
[பக்கம் 18-ன் படம்]
ரூத், நகோமியின் நட்பு நீடித்து நிலைக்க எது காரணமாக இருந்தது?
[பக்கம் 19-ன் படம்]
உபசரிப்பதை நீங்கள் பழக்கமாக்கிக்கொள்கிறீர்களா?