குடும்ப வழிபாடு தப்பிப்பிழைக்க அத்தியாவசியம்!
‘கடவுளின் மகா நாளில் நடக்கப்போகும் போர்’ எந்தளவு பயங்கரமானதாய் இருக்குமென்று கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்! (வெளி. 16:14) அந்தப் போர்க் காட்சியை மீகா தீர்க்கதரிசி தத்ரூபமாய்ச் சித்தரித்தார்: ‘மெழுகு அக்கினிக்கு முன்பாக உருகுவது போலவும், மலைகளிலிருந்து பாயும் தண்ணீர் தரையைப் பிளப்பது போலவும், பர்வதங்கள் உருகி, பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும்.’ (மீ. 1:4) யெகோவாவை வணங்காதவர்களுக்கு அச்சமயத்தில் என்ன ஆகும்? கடவுளுடைய வார்த்தை சொல்கிறது: ‘அக்காலத்திலே பூமியின் ஒருமுனை துவங்கி பூமியின் மறுமுனைமட்டும் யெகோவாவால் கொலையுண்டவர்கள் கிடப்பார்கள்.’—எரே. 25:33.
விவரம் தெரிந்த பிள்ளைகளை உடைய குடும்பத் தலைவர்களும் ஒற்றைப் பெற்றோர்களும் இதுபோன்ற எச்சரிப்புகளை மனதில் கொண்டு, ‘என் பிள்ளைகள் அர்மகெதோனில் தப்பிப்பிழைப்பார்களா?’ எனத் தங்களையே கேட்டுக்கொள்ள வேண்டும். உங்கள் பிள்ளைகள் அவர்களுடைய வயதுக்குத் தக்கபடி ஆன்மீக ரீதியில் விழிப்புள்ளவர்களாகவும் பலமுள்ளவர்களாகவும் இருந்தால் கட்டாயம் தப்பிப்பிழைப்பார்கள் என பைபிள் உறுதியளிக்கிறது.—மத். 24:21.
குடும்ப வழிபாட்டிற்கென்று நேரம் ஒதுக்குவதன் அவசியம்
உங்கள் பிள்ளைகளை, ‘யெகோவாவுக்கு ஏற்ற முறையில் கண்டித்து, அவருடைய சிந்தையை அவர்களுடைய மனதில் பதிய வைக்கும் விதத்தில்’ வளர்க்க உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள். (எபே. 6:4) அதற்கு அவர்களோடு சேர்ந்து பைபிளைப் படிப்பது மிகமிக அவசியம். பிலிப்பியிலிருந்த கிறிஸ்தவர்களைப் போலவே உங்கள் பிள்ளைகளும் இருக்க வேண்டும்; அந்தக் கிறிஸ்தவர்கள் யெகோவாவுக்கு மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததால் பவுல் அவர்களை இவ்வாறு பாராட்டினார்: “என் அன்புக் கண்மணிகளே, நீங்கள் எப்போதும் கீழ்ப்படிந்து வந்திருக்கிறீர்கள்; நான் உங்களோடு இருந்த சமயத்தில் மட்டுமல்ல, உங்களோடு இல்லாத இந்தச் சமயத்திலும் அதிகமாகக் கீழ்ப்படிந்து வருகிறீர்கள்; அதனால், பயத்துடனும் நடுக்கத்துடனும் உங்களுடைய மீட்புக்காக உழைத்து வாருங்கள்.”—பிலி. 2:12.
நீங்கள் இல்லாத சமயத்திலும்கூட உங்கள் பிள்ளைகள் யெகோவாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிகிறார்களா? ஒருவேளை, பள்ளியில் இருக்கும்போது கீழ்ப்படிகிறார்களா? யெகோவாவின் சட்டங்கள் எந்தளவு ஞானமானவை என்பதை மதித்துணர்ந்து அவற்றுக்குக் கீழ்ப்படிய, அதுவும் நீங்கள் இல்லாதபோது கீழ்ப்படிய, அவர்களுக்கு எப்படி உதவலாம்?
குடும்ப வழிபாடு இதற்குப் பெரிதும் உதவும். உங்கள் பிள்ளையின் விசுவாசத்தை அது பலப்படுத்தும். ஆகவே, பலன்தரும் குடும்ப பைபிள் படிப்பை நடத்த உதவுகிற மூன்று முக்கியக் காரியங்களை இப்போது சிந்திப்போம்.
தவறாமல் நடத்துங்கள்
கடவுளுடைய மகன்களான தேவதூதர்கள் “ஒருநாள்” அவருடைய சந்நிதிக்கு அழைக்கப்பட்டார்களென பைபிள் சொல்கிறது. (யோபு 1:6) இங்கு, “ஒருநாள்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருப்பது மூலமொழியில் குறிப்பிட்ட வேளைகளில் என்ற அர்த்தத்தைத் தருகிறது. நீங்களும் உங்கள் பிள்ளைகளோடு குடும்ப வழிபாட்டில் ஈடுபடுவதற்கென்று குறிப்பிட்ட நாளையும் நேரத்தையும் ஒதுக்கியிருக்கிறீர்களா? ஒருவேளை, எதிர்பாரா சூழ்நிலை காரணமாக அந்த நேரத்தில் குடும்பப் படிப்பை நடத்த முடியாமற்போனால் அதற்குப் பதிலாக வேறொரு நேரத்தை முன்கூட்டியே ஒதுக்கியிருக்கிறீர்களா?
குடும்பப் படிப்பை நாம் ஆரம்பத்தில் தவறாமல் நடத்திவிட்டு, போகப்போக நேரம் கிடைக்கும்போது மட்டுமே படிப்பதென்று ஆகிவிடக் கூடாது. நினைவிருக்கட்டும், உங்கள் பிள்ளைகள்தான் உங்களுடைய முக்கியமான பைபிள் மாணாக்கர்கள். அவர்களைச் சாத்தான் குறி வைத்திருக்கிறான்! (1 பே. 5:8) பொன்னான குடும்ப வழிபாட்டு நேரத்தை, டிவி பார்ப்பதற்கோ அனாவசியமான வேறு காரியங்களுக்கோ நீங்கள் செலவிட்டால், சாத்தான் வெற்றி பெற்றுவிடுவான்.—எபே. 5:15, 16; 6:12; பிலி. 1:10.
பிரயோஜனமான விதத்தில் நடத்துங்கள்
குடும்ப வழிபாடு என்பது வெறுமனே அறிவை வளர்த்துக்கொள்வதற்காக நடத்தப்படுகிற ஒன்றல்ல. எனவே, கடினமாக முயற்சி எடுத்து அதைப் பிரயோஜனமான விதத்தில் நடத்துங்கள். எப்படி? சில நாட்களுக்குள் அல்லது சில வாரங்களுக்குள் உங்கள் பிள்ளை எதிர்ப்படப்போகிற சூழ்நிலையைச் சமாளிக்க அவனு(ளு)க்கு உதவும் விஷயங்களைக் கலந்தாலோசியுங்கள். உதாரணத்திற்கு, வெளி ஊழியத்தில் எப்படிப் பேசலாமென்று ஒத்திகை பாருங்கள். பொதுவாக, பிள்ளைகள் நன்றாகச் செய்கிற காரியங்களைச் செய்யச் சொன்னால் அவற்றை ரொம்பவே சந்தோஷமாகச் செய்வார்கள். ஊழியத்தில் சந்திப்பவர்களிடம் எப்படிப் பேசுவது, எதிர்ப்புகளை எப்படிச் சமாளிப்பது என்பதையெல்லாம் அவர்களோடு ஒத்திகை பார்த்தீர்களென்றால், பிரசங்க வேலையின் வெவ்வேறு அம்சங்களில் அவர்கள் அதிக தன்னம்பிக்கையோடு பங்குகொள்வார்கள்.—2 தீ. 2:15.
சகாக்களின் அழுத்தத்தைச் சமாளிக்கப் பிள்ளைகளுக்கு உதவுகிற விஷயங்களையும் ஒத்திகை பாருங்கள். அவற்றைப் பற்றி மனந்திறந்து பேச அவர்களுக்கு வாய்ப்பளியுங்கள். அவர்கள் என்ன சவால்களை எதிர்ப்படுகிறார்கள், எங்கு இருக்கும்போது அவற்றை எதிர்ப்படுகிறார்கள், அவற்றுக்கு இணங்கிவிட்டால் என்ன நடக்கும், இணங்காவிட்டால் என்ன நடக்கும் என்றெல்லாம் அவர்களிடம் கேளுங்கள். அந்தச் சவால்களை எப்படிச் சாதுரியமாகச் சமாளிக்கலாம் என்று உங்கள் குடும்ப வழிபாட்டுச் சமயத்தில் அவ்வப்போது நடித்துப் பார்க்கலாம், அல்லவா?
ஆன்மீக இலக்குகளை வைப்பதால் வரும் பலன்களை வலியுறுத்த பெற்றோர்களுக்குக் குடும்ப வழிபாடு வாய்ப்பளிக்கிறது. இந்த விஷயத்தில், உண்மை ஊழியர்களைப் பற்றி நம் பத்திரிகைகளில் வெளிவரும் அனுபவங்கள் பெரிதும் கைகொடுக்கும்; யெகோவாவின் வணக்கத்திற்கு முதலிடம் கொடுப்பதுதான் மிகச் சிறந்தது என்பதை உங்கள் பிள்ளைகள் புரிந்துகொள்வதற்கு அவை உதவும்.
ஆனால் ஓர் எச்சரிக்கை: நல்லெண்ணமுள்ள பெற்றோர் சிலர், எதிர்காலத்தில் தங்களுடைய பிள்ளைகள் என்னவாய் ஆக வேண்டுமெனத் தாங்கள் விரும்புகிறார்களோ அதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், தற்போது அவர்கள் செய்துவருகிற காரியங்களுக்குப் பாராட்டுத் தெரிவிப்பதில்லை. உண்மைதான், பெத்தேல் சேவை, மிஷனரி சேவை என்ற அருமையான இலக்குகளை வைப்பதற்குப் பிள்ளைகளை ஊக்கப்படுத்துவது நல்லது என்றாலும், உங்களுடைய எதிர்பார்ப்புகளை அவர்களுக்குள் திணித்து, அவர்களை எரிச்சலடையச் செய்யாதீர்கள், சோர்ந்துபோகச் செய்யாதீர்கள். (கொலோ. 3:21) உங்கள் பிள்ளைகள் அவர்களாகவே விருப்பப்பட்டுத்தான் யெகோவாமீது அன்பு காட்ட வேண்டுமே தவிர, நீங்கள் விருப்பப்படுகிறீர்கள் என்பதற்காக அல்ல என்பதை எப்போதும் மனதில் வையுங்கள். (மத். 22:37) ஆகையால், அவர்கள் தற்போது நன்றாகச் செய்து வரும் காரியங்களுக்காக அவர்களைப் பாராட்டுங்கள்; அவர்கள் செய்யாத காரியங்களுக்காக அவர்களிடம் குறைபட்டுக் கொண்டிருக்காதீர்கள். யெகோவா செய்துவரும் எல்லாவற்றுக்காகவும் முதலில் நீங்கள் போற்றுதலை வளர்த்துக்கொள்ளுங்கள். அப்போதுதான், உங்கள் பிள்ளையின் இருதயம் போற்றுதலால் நிரம்பி வழியும்.
சுவாரஸ்யமாய் நடத்துங்கள்
குடும்ப வழிபாடு நல்ல பலனைத் தருவதற்கு, அதைச் சுவாரஸ்யமாயும் நடத்த வேண்டும். இதை நீங்கள் எப்படிச் செய்யலாம்? யெகோவாவின் சாட்சிகளால் தயாரிக்கப்பட்ட நாடகங்களின் ஆடியோ பதிவு ஒன்றைக் கேட்கலாம்; அல்லது வீடியோ பதிவு ஒன்றைப் பார்க்கலாம்; பின்னர் அதைக் குறித்துக் கலந்துபேசலாம். அல்லது, பைபிளில் ஒரு பகுதியைக் குடும்பமாகச் சேர்ந்து வாசிக்கலாம்; அந்தப் பகுதியில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒவ்வொருவரை நியமிக்கலாம்.
காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளில் குடும்பமாகக் கலந்தாலோசிப்பதற்குத் தகுந்த அம்சங்கள் உள்ளன. உதாரணமாக, விழித்தெழு! பத்திரிகையில், பக்கம் 31-ல் வருகிற “எப்படி பதில் அளிப்பீர்கள்?” என்ற அம்சத்தை நீங்கள் பயன்படுத்தலாம். காவற்கோபுர பத்திரிகையின் பொது இதழிலுள்ள “இளம் வாசகருக்கு” என்ற அம்சத்தையோ, “பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்” என்ற அம்சத்தையோ பயன்படுத்தலாம்.
விழித்தெழு! பத்திரிகையில் “இளைஞர் கேட்கின்றனர்” என்ற தலைப்பில் வருகிற கட்டுரைகள் டீனேஜ் பிள்ளைகளுடைய பெற்றோருக்கு மிகவும் பிரயோஜனமாய் இருக்கும். இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் தொகுதி 1 என்ற புத்தகமும் பிரயோஜனமாய் இருக்கும். இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்தும்போது, ஒவ்வொரு அதிகாரத்தின் முடிவிலுமுள்ள “கலந்துபேசுவதற்கான கேள்விகள்” என்ற பெட்டியை மறந்துவிடாதீர்கள். அவை மறுபார்வைக்கான கேள்விகள் மட்டுமே அல்ல. குடும்பப் படிப்பின்போது சில சமயங்களில் அந்தக் கேள்விகளை அடிப்படையாக வைத்தே கலந்தாலோசிக்கலாம்.
குடும்பப் படிப்பு நேரம், கேள்விமேல் கேள்வி கேட்டுத் துளைத்தெடுக்கிற நேரமல்ல என்பதை மனதில் வையுங்கள். உதாரணமாக, குடும்பப் படிப்பில் கலந்தாலோசிக்கப்படுகிற விஷயங்களைக் குறித்துப் பிள்ளைகள் எப்படி உணருகிறார்கள் என்றும், அவற்றைத் தங்கள் வாழ்க்கையில் எப்படிக் கடைப்பிடிப்பார்கள் என்றும் தங்கள் டைரியில் எழுதி வைக்கும்படி பெற்றோர்கள் அவர்களை ஊக்கப்படுத்தலாம். என்றாலும், அவர்கள் எழுதி வைத்திருப்பதைச் சத்தமாக வாசிக்கும்படி கட்டாயப்படுத்தாதீர்கள். அப்படிச் செய்தால், தங்களுடைய உண்மையான உணர்வுகளை அவர்கள் எழுதாமல் போய்விடலாம். அதேசமயம், அவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள நீங்கள் அதைப் படித்துப் பார்க்காதீர்கள்.
உங்கள் குடும்பப் படிப்பைத் தவறாமலும், பிரயோஜனமாகவும் சுவாரஸ்யமாகவும் நடத்தினீர்கள் என்றால், யெகோவா உங்களுடைய முயற்சிகளை அபரிமிதமாக ஆசீர்வதிப்பார். உங்களுடைய பாசத்துக்கும் நேசத்துக்கும் உரியவர்களோடு நீங்கள் செலவிடும் இந்த விசேஷ நேரம் அவர்கள் ஆன்மீக ரீதியில் விழிப்புள்ளவர்களாகவும் பலமுள்ளவர்களாகவும் இருப்பதற்குப் பெரிதும் கைகொடுக்கும்.
[பக்கம் 31-ன் பெட்டி]
புதுப்புது விதங்களில் நடத்துங்கள்
“நானும் என் கணவரும் எங்கள் மகள்களோடு சேர்ந்து குடும்பப் படிப்பைப் படித்துக்கொண்டிருந்த சமயத்தில், சபைக் கூட்டத்திற்குத் தயாரிக்க வேண்டிய ஒரு பகுதியைக் கலந்தாலோசித்துவிட்டு, அதிலிருந்து கற்றுக்கொண்ட விஷயத்தைப் படமாக வரையும்படி அவர்களிடம் சொன்னோம். சிலசமயம், பைபிள் சம்பவங்களை நாடகமாக நடித்துப் பார்ப்போம் அல்லது வெளி ஊழியத்தில் எப்படிப் பேசுவதென்று ஒத்திகை பார்ப்போம். எங்கள் மகள்களுடைய வயதுக்கு ஏற்றாற்போல் படிப்பைச் சுவாரஸ்யமாகவும், ஆக்கப்பூர்வமாகவும், அதே சமயத்தில் ஜாலியாகவும் நடத்தினோம்.”—ஜெ. எம்., அமெரிக்கா.
“பூர்வ காலங்களில் பைபிள் சுருள்கள் எப்படியிருக்கும் என்பதை என்னுடைய பைபிள் மாணாக்கரின் மகனுக்குப் புரிய வைப்பதற்காக ஏசாயா புத்தகத்தை, அதன் அதிகார எண்களும் வசன எண்களும் இல்லாமல் பேப்பரில் பிரின்ட் எடுத்தோம். அந்த பேப்பர்களையெல்லாம் ஒன்றோடொன்று இணைத்து, அதன் இரு ஓரங்களையும் இரு குழல்களோடு பொருத்தினோம். பின்பு அந்தப் பையன், நாசரேத்திலிருந்த ஜெபக்கூடத்தில் இயேசு செய்ததைப் போலவே செய்துபார்க்க முயன்றான். அதாவது, லூக்கா 4:16-21-லுள்ள பதிவு சொல்கிறபடி, இயேசு தம்மிடம் கொடுக்கப்பட்ட ‘ஏசாயா தீர்க்கதரிசியின் சுருளை விரித்து,’ தாம் வாசிக்க நினைத்த பகுதியைக் கண்டுபிடித்து அதிலிருந்து வாசித்தது போலவே செய்துபார்க்க முயன்றான். (ஏசா. 61:1, 2) நாங்கள் தயாரித்துக் கொடுத்திருந்த அந்தப் பெரிய சுருளிலிருந்து அந்தப் பையனால் ஏசாயா 61-ஆம் அதிகாரத்தைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. சுருள்களைப் பயன்படுத்துவது இயேசுவுக்குக் கைவந்த கலையாக இருந்ததைப் புரிந்துகொண்ட அவன், ‘அடேயப்பா. . . இயேசு உண்மையிலேயே கிரேட்!’ என்று ஆச்சரியப்பட்டுச் சொன்னான்.”—ஒய். டி., ஜப்பான்.
[பக்கம் 30-ன் படம்]
சகாக்களின் அழுத்தத்தை எப்படிச் சமாளிக்கலாமென ஒத்திகை பார்ப்பது உங்கள் பிள்ளைகளுக்கு உதவும்
[பக்கம் 31-ன் படம்]
குடும்ப வழிபாட்டைச் சுவாரஸ்யமாய் நடத்துவதற்குக் கடினமாக முயற்சி எடுங்கள்