உங்கள் ஜெபங்களுக்கு மெருகூட்ட பைபிளைப் படியுங்கள்
‘யெகோவாவே, உமது அடியானின் ஜெபத்தை . . . உமது செவிகள் கவனித்திருப்பதாக.’ —நெ. 1:11.
1, 2. பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள ஜெபங்கள் சிலவற்றைக் கலந்தாலோசிப்பது ஏன் பயனுள்ளது?
ஜெபமும் பைபிள் படிப்பும் உண்மை வணக்கத்தின் மிக முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. (1 தெ. 5:17; 2 தீ. 3:16, 17) பைபிள் ஒரு ஜெப புத்தகமல்ல; என்றாலும், அதில் ஏராளமான ஜெபங்கள் அடங்கியுள்ளன. அவற்றில் பல, சங்கீத புத்தகத்தில் காணப்படுகின்றன.
2 நீங்கள் பைபிளை வாசிக்கும்போதும் அதைக் கருத்தூன்றிப் படிக்கும்போதும், உங்களுடைய சூழ்நிலைக்குப் பொருத்தமான சில ஜெபங்களைக் காண்பீர்கள். பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள ஜெபங்கள் உங்கள் ஜெபங்களுக்கு மெருகூட்ட உதவும். கடவுளுக்குப் பிரியமான ஜெபங்களைச் செய்த நபர்களிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? அவர்கள் செய்த ஜெபங்களிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
கடவுளுடைய வழிநடத்துதலை நாடுங்கள், அதன்படி நடந்திடுங்கள்
3, 4. ஆபிரகாமின் ஊழியக்காரனுக்கு என்ன வேலை கொடுக்கப்பட்டது, அவருடைய ஜெபத்திற்கு யெகோவா அளித்த பதிலிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
3 பைபிளைப் படிக்கும்போது, கடவுளுடைய வழிநடத்துதலுக்காக எப்போதும் ஜெபம் செய்ய வேண்டுமென்பதைத் தெரிந்துகொள்வீர்கள். ஆபிரகாமின் மூத்த ஊழியக்காரனுடைய—ஒருவேளை எலியேசருடைய—உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஈசாக்குக்கு ஏற்ற, தேவபயமுள்ள ஒரு பெண்ணைத் தேடும்படி அவரை மெசொப்பொத்தாமியாவுக்கு ஆபிரகாம் அனுப்பி வைத்தார். எலியேசர், அங்கு போய்ச்சேர்ந்தபோது ஒரு கிணற்றருகே பெண்கள் தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்ததைப் பார்த்தார். அப்போது யெகோவாவிடம் இவ்வாறு ஜெபம் செய்தார்: ‘“குடிப்பதற்கு உன் குடத்தைச் சாய்ப்பாயாக” என்று நான் சொல்லும்போது: “குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன்” என்றும் சொல்கிற பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும்.’—ஆதி. 24:12-14.
4 எலியேசர் செய்த ஜெபத்திற்குப் பதில் கிடைத்தது; ரெபெக்காள் அவருடைய ஒட்டகங்களுக்குத் தண்ணீர் வார்த்தாள்! சீக்கிரத்திலேயே, அவரோடு கானானுக்குப் புறப்பட்டுச் சென்று ஈசாக்கின் அருமை மனைவியானாள். இன்று நீங்கள் செய்கிற ஜெபத்திற்கு அதுபோன்ற விசேஷ அடையாளத்தை யெகோவா தருவாரென எதிர்பார்க்க முடியாதுதான். என்றாலும், நீங்கள் அவரிடம் ஜெபம் செய்து, அவருடைய சக்தி வழிநடத்துகிறபடி வாழத் தீர்மானமாய் இருந்தீர்களென்றால் நிச்சயம் அவர் உங்களுக்கு உதவுவார்.—கலா. 5:18.
கவலையைத் தணிக்க ஜெபம் உதவுகிறது
5, 6. யாக்கோபின் ஜெபத்தில் என்ன விஷயம் குறிப்பிடத்தக்கது?
5 ஜெபம் நம்முடைய கவலையைத் தணிக்கலாம். யாக்கோபின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இதை நிரூபிக்கிறது. தன் சகோதரனான ஏசா தனக்கு ஏதாவது தீங்கு செய்துவிடலாம் எனப் பயந்து யாக்கோபு இவ்வாறு ஜெபித்தார்: ‘யெகோவாவே, அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, . . . என் சகோதரனாகிய ஏசாவின் கைக்கு என்னைத் தப்புவியும், அவன் வந்து என்னையும் பிள்ளைகளையும் தாய்மார்களையும் முறிய அடிப்பான் என்று அவனுக்கு நான் பயந்திருக்கிறேன். தேவரீரோ: “நான் உனக்கு மெய்யாகவே நன்மை செய்து, உன் சந்ததியை எண்ணி முடியாத கடற்கரை மணலைப் போல மிகவும் பெருகப்பண்ணுவேன்” என்று சொன்னீரே.’—ஆதி. 32:9-12.
6 யாக்கோபு இப்படி ஜெபம் செய்ததோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்தார்; யெகோவா அந்த ஜெபத்திற்குப் பதிலளித்தார். ஆம், ஏசாவும் யாக்கோபும் சமரசமானார்கள். (ஆதி. 33:1-4) யாக்கோபு செய்த அந்த ஜெபத்தைக் கவனமாக வாசித்தீர்களென்றால், அவர் கடவுளிடம் உதவிகேட்டு மன்றாடியதை மட்டுமல்ல சந்ததி பற்றிய வாக்குறுதியில் நம்பிக்கை தெரிவித்ததையும், கடவுளுடைய தயவுக்கு நன்றி சொன்னதையும் தெரிந்துகொள்வீர்கள். யாக்கோபுக்கு இருந்ததைப் போல் உங்களுக்கும் ‘உள்ளே பயங்கள்’ இருக்கின்றனவா? (2 கொ. 7:5) அப்படியானால், ஜெபங்கள் உங்களுடைய கவலையைத் தணிக்கக்கூடும் என்பதை யாக்கோபின் மன்றாட்டு உங்களுக்கு நினைப்பூட்டலாம். ஆனாலும், உங்களுடைய ஜெபங்களில் வேண்டுகோள்கள் மட்டுமின்றி விசுவாசத்தை வெளிக்காட்டுகிற சொற்றொடர்களும் இடம்பெற வேண்டும்.
ஞானத்திற்காக ஜெபம் செய்யுங்கள்
7. யெகோவாவின் வழிகளைப் பற்றிய அறிவைத் தனக்கு அளிக்கும்படி மோசே ஏன் ஜெபித்தார்?
7 யெகோவாவைப் பிரியப்படுத்த வேண்டுமென்ற ஆசை, ஞானத்திற்காக ஜெபிப்பதற்கு உங்களைத் தூண்ட வேண்டும். அவருடைய வழிகளைத் தெரிந்துகொள்ள உதவும்படி மோசே ஜெபம் செய்தார். “தேவரீர் [யெகோவா] இந்த ஜனங்களை [எகிப்திலிருந்து] அழைத்துக்கொண்டு போ என்று சொன்னீர்; . . . உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்” என்று அவர் கெஞ்சினார். (யாத். 33:12, 13) அந்த ஜெபத்திற்கு யெகோவா பதிலளித்தார்; தம்முடைய வழிகளைப் பற்றித் தெளிவாகப் புரிந்துகொள்ள மோசேக்கு அறிவை அளித்தார். அவருடைய மக்களை வழிநடத்த மோசேக்கு அந்த அறிவு தேவைப்பட்டது.
8. ஒன்று இராஜாக்கள் 3:7-14-ஐத் தியானிப்பதிலிருந்து நீங்கள் எவ்வாறு நன்மை அடையலாம்?
8 தாவீதும்கூட இவ்வாறு ஜெபித்தார்: ‘யெகோவாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்.’ (சங். 25:4) தாவீதின் மகனான சாலொமோன், இஸ்ரவேல் தேசத்தின் ராஜாவாகத் தனக்கு இருந்த பொறுப்புகளைச் சரிவரக் கையாளுவதற்கு ஞானம் கேட்டு யெகோவாவிடம் கெஞ்சினார். சாலொமோனின் ஜெபம் யெகோவாவுக்குப் பிரியமாய் இருந்தது. சாலொமோன் கேட்டுக்கொண்டபடியே அவர் ஞானத்தை அளித்தார். அதோடு, ஐசுவரியத்தையும் மகிமையையும்கூட அளித்தார். (1 இராஜாக்கள் 3:7-14-ஐ வாசியுங்கள்.) மலைப்பாகத் தோன்றுகிற ஊழியப் பொறுப்புகளை நீங்கள் பெறுகையில், ஞானத்திற்காக ஜெபியுங்கள்; மனத்தாழ்மையைக் காட்டுங்கள். அப்போதுதான், அந்தப் பொறுப்புகளை அன்பான விதத்திலும் சரியான விதத்திலும் செய்வதற்குத் தேவைப்படுகிற அறிவையும் ஞானத்தையும் கடவுள் உங்களுக்கு அளிப்பார்.
இருதயப்பூர்வமாக ஜெபியுங்கள்
9, 10. சாலொமோன் தன் ஜெபத்தில் இருதயம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதன் முக்கியத்துவம் என்னவென்று நினைக்கிறீர்கள்?
9 கடவுள் நம் ஜெபங்களுக்குப் பதிலளிக்க வேண்டுமானால் அவற்றை இருதயப்பூர்வமாகச் செய்ய வேண்டும். சாலொமோன் செய்த இருதயப்பூர்வ ஜெபம், 1 இராஜாக்கள் 8-ஆம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஜெபத்தை அவர் பொ.ச.மு. 1026-ல், யெகோவாவின் ஆலய அர்ப்பண விழாவின்போது திரளான மக்களுக்குமுன் செய்தார். ஒப்பந்தப் பெட்டி மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் வைக்கப்பட்ட பிறகு, யெகோவாவுடைய மேகம் அந்த ஆலயத்தை நிரப்பியபோது, சாலொமோன் அவரைப் புகழ்ந்தார்.
10 சாலொமோனின் ஜெபத்தைப் படித்துப் பாருங்கள், அதில் இருதயத்தைப் பற்றி அவர் சொல்கிற வசனங்களைக் கவனியுங்கள். ஒரு நபருடைய இருதயத்தை யெகோவா மட்டுமே அறிந்திருக்கிறார் என்று சாலொமோன் சொன்னார். (1 இரா. 8:38-40) பாவம் செய்த ஒருவர், ‘முழு இருதயத்தோடு கடவுளிடத்தில் திரும்பினால்’ அவர் மன்னிக்கப்படுவாரென அதே ஜெபம் காட்டுகிறது. அதோடு, கடவுளுடைய மக்கள் சத்துருக்களால் சிறைபிடிக்கப்படுகையில் அவர்கள் முழு இருதயத்தோடு ஜெபம் செய்தால், அந்த ஜெபத்தைக் கடவுள் கேட்பார் எனவும் காட்டுகிறது. (1 இரா. 8:48, 58, 61) அப்படியானால், நீங்களும் இருதயப்பூர்வமாக ஜெபம் செய்ய வேண்டும்.
சங்கீத புத்தகம் உங்களுடைய ஜெபங்களுக்கு எவ்வாறு மெருகூட்டலாம்
11, 12. லேவியர் ஒருவர் ஜெபத்தில் தெரிவித்த வார்த்தையிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
11 சங்கீத புத்தகத்தைப் படிப்பது உங்கள் ஜெபங்களுக்கு மெருகூட்டலாம்; அதோடு, கடவுள் பதிலளிக்கும்வரை காத்திருக்க உங்களுக்கு உதவலாம். உதாரணமாக, நாடுகடத்தப்பட்ட லேவியர் ஒருவர் காட்டிய பொறுமையைக் கவனியுங்கள். சில காலம் யெகோவாவின் ஆலயத்திற்கு அவரால் போக முடியாதபோதிலும், இவ்வாறு பாடினார்: “என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.”—சங். 42:5, 11; 43:5.
12 அந்த லேவியரிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? கடவுளுடைய நீதியின்படி நடந்ததன் காரணமாக நீங்கள் சிறிது காலத்திற்குச் சிறையில் அடைக்கப்பட்டு, ராஜ்ய மன்றத்தில் சக விசுவாசிகளோடு கூடிவர முடியாதிருந்தால், உங்களுக்காகக் கடவுள் நடவடிக்கை எடுக்கும்வரை பொறுமையோடு காத்திருங்கள். (சங். 37:5) கடவுளுடைய சேவையில் முன்பு நீங்கள் அனுபவித்த சந்தோஷங்களைக் குறித்துத் தியானியுங்கள், சகிப்புத்தன்மைக்காக ஜெபம் செய்யுங்கள், அதேசமயம், அவருடைய மக்களோடு மீண்டும் ஒன்றுசேரும்வரை ‘தேவனை நோக்கிக் காத்திருங்கள்.’
விசுவாசத்தோடு ஜெபம் செய்யுங்கள்
13. யாக்கோபு 1:5-8-க்கு இசைய நீங்கள் ஏன் விசுவாசத்தோடு ஜெபம் செய்ய வேண்டும்?
13 நீங்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் சரி, எப்போதுமே விசுவாசத்தோடு ஜெபம் செய்யுங்கள். உங்களுடைய உத்தமத்திற்குச் சோதனை வரும்போது, சீடராகிய யாக்கோபின் ஆலோசனையைக் கடைப்பிடியுங்கள். யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள்; சோதனைகளைச் சமாளிக்கத் தேவையான ஞானத்தை அவர் உங்களுக்குத் தருவாரா மாட்டாரா என்று துளியும் சந்தேகப்படாதீர்கள். (யாக்கோபு 1:5-8-ஐ வாசியுங்கள்.) நீங்கள் எதிர்ப்படுகிற சோதனைகளைக் கடவுள் அறிந்திருக்கிறார்; தமது சக்தியின் மூலமாக உங்களை வழிநடத்தி ஆறுதல்படுத்த அவரால் முடியும். “கொஞ்சம்கூடச் சந்தேகப்படாமல்” முழு விசுவாசத்தோடு உங்கள் இருதயத்திலுள்ள பாரத்தை அவர்மீது வைத்துவிடுங்கள்; அவருடைய சக்தியின் வழிநடத்துதலையும் அவருடைய வார்த்தையின் ஆலோசனையையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.
14, 15. அன்னாள் ஜெபம் செய்ததோடு விசுவாசத்துடன் நடந்துகொண்டார் என்று ஏன் சொல்லலாம்?
14 லேவியரான எல்க்கானாவின் முதல் மனைவி அன்னாள் ஜெபம் செய்ததோடு விசுவாசத்துடன் நடந்துகொண்டார். பல பிள்ளைகளைப் பெற்ற இரண்டாவது மனைவி பெனின்னாளின் குத்தலான பேச்சுக்கு அவர் ஆளானார். தனக்கு ஒரு மகன் பிறந்தால் அவனை அவருக்கே அளிப்பதாக ஆசரிப்புக் கூடாரத்திலே அவர் யெகோவாவிடம் பொருத்தனை செய்தார். அப்படி ஜெபிக்கையில் அவருடைய உதடுகள் அசைந்ததைப் பார்த்த தலைமைக் குருவான ஏலி, அன்னாள் குடித்து வெறித்திருப்பதாக நினைத்துக்கொண்டார். உண்மையை அறிந்துகொண்டதும், “நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக” என்று கூறினார். தனது ஜெபத்திற்கு எப்படிப்பட்ட பதில் கிடைக்குமென்று அன்னாளுக்குத் திட்டவட்டமாகத் தெரியாதபோதிலும், யெகோவா நிச்சயம் பதிலளிப்பாரென அவர் விசுவாசித்தார். ‘அதன்பின் அவர் துக்க முகமாயிருக்கவில்லை,’ ஆம், சோகமாகவோ வருத்தமாகவோ இருக்கவில்லை.—1 சா. 1:9-18.
15 பிறகு அன்னாளுக்கு சாமுவேல் என்ற ஆண்குழந்தை பிறந்தது; பிள்ளை பால்மறந்த பின்பு, அவனை ஆசரிப்புக் கூடாரத்தில் யெகோவாவுக்குப் பரிசுத்த வேலை செய்வதற்காக அன்னாள் அர்ப்பணித்தார். (1 சா. 1:19-28) அச்சமயம் அன்னாள் செய்த ஜெபத்தைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்தீர்களென்றால், அது உங்களுடைய ஜெபங்களுக்கு மெருகூட்ட உதவும்; அதோடு, மனதை வாட்டிவதைக்கிற கவலையைக்கூட விசுவாசமிக்க ஜெபத்தால் மேற்கொள்ள முடியும் என்பதைப் புரிந்துகொள்ளவும் அது உதவும்.—1 சா. 2:1-10.
16, 17. நெகேமியா ஜெபம் செய்ததோடு விசுவாசத்துடன் நடந்துகொண்டதால் என்ன நிகழ்ந்தது?
16 பொ.ச.மு. ஐந்தாவது நூற்றாண்டில் வாழ்ந்த நீதிமானான நெகேமியா ஜெபம் செய்ததோடு விசுவாசத்துடன் நடந்துகொண்டார். ‘யெகோவாவே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்பட வேண்டும் என்று விரும்புகிற உமது ஊழியர்களின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைகூடி வரப்பண்ணி, இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணியருளும்’ என்று அவர் கெஞ்சினார். ‘இந்த மனுஷன்’ என்று அவர் யாரைக் குறிப்பிட்டார்? பெர்சிய ராஜாவான அர்தசஷ்டாவைக் குறிப்பிட்டார்; அந்த ராஜாவிடம் அவர் பானபாத்திரக்காரனாகப் பணிபுரிந்தார்.—நெ. 1:11.
17 பாபிலோனியச் சிறையிருப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட யூதர்கள் அனுபவித்த ‘மகா தீங்கையும் நிந்தையையும், எருசலேமின் மதில் இடிக்கப்பட்டதையும்’ கேள்விப்பட்ட பிறகு நெகேமியா பல நாட்களுக்கு விசுவாசத்தோடு ஜெபம் செய்தார். (நெ. 1:3, 4) அந்த ஜெபத்திற்கு, அவர் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே பதில் கிடைத்தது; ஆம், எருசலேமின் மதிலைத் திரும்பக் கட்டுவதற்காக அங்கு செல்ல நெகேமியாவுக்கு ராஜா அனுமதி அளித்தார். (நெ. 2:1-8) சீக்கிரத்திலேயே அந்த மதில் திரும்பக் கட்டப்பட்டது. நெகேமியா உண்மை வணக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஜெபம் செய்ததாலும், விசுவாசத்தோடு ஜெபம் செய்ததாலும் அதற்குப் பதில் கிடைத்தது. நீங்களும் அவ்வாறே ஜெபம் செய்கிறீர்களா?
புகழ்வதற்கும் நன்றி சொல்வதற்கும் மறக்காதீர்கள்
18, 19. யெகோவாவின் ஊழியர்கள் என்ன காரணங்களுக்காக அவரைப் புகழ வேண்டும், அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்?
18 ஜெபத்தில், யெகோவாவைப் புகழ்வதற்கும் அவருக்கு நன்றி சொல்வதற்கும் மறக்காதீர்கள். அப்படிச் செய்வதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன! உதாரணமாக, யெகோவாவின் அரசாட்சியைப் பற்றிப் புகழ்ந்து பாட தாவீது ஆவலாய் இருந்தார். (சங்கீதம் 145:10-13-ஐ வாசியுங்கள்.) யெகோவாவுடைய அரசாங்கத்தைப் பற்றி அறிவிக்கிற பாக்கியத்தை நீங்கள் மதித்துணருகிறீர்கள் என்பதை உங்கள் ஜெபங்கள் காட்டுகின்றனவா? கிறிஸ்தவக் கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்குமான உங்கள் நன்றியுணர்வை இருதயப்பூர்வ ஜெபங்களில் தெரிவிப்பதற்கும் சங்கீதக்காரர்களின் வார்த்தைகள் உங்களுக்கு உதவலாம்.—சங். 27:4; 122:1.
19 கடவுளோடு உங்களுக்கிருக்கிற அருமையான பந்தத்திற்கான நன்றியுணர்வு, இவ்வாறு இருதயப்பூர்வமாக ஜெபிக்க உங்களைத் தூண்டலாம்: ‘யெகோவாவே, ஜனங்களுக்குள்ளே உம்மைப் புகழ்வேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன். உமது கிருபை வானபரியந்தமும், உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது. தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.’ (சங். 57:9-11) இருதயத்திற்கு இதமூட்டும் எப்பேர்ப்பட்ட வார்த்தைகள் இவை! சங்கீத புத்தகத்தில் காணப்படுகிற இப்படிப்பட்ட வார்த்தைகள் உங்களுடைய ஜெபங்களுக்கு மெருகூட்டும் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள், அல்லவா?
பயபக்தியோடு வேண்டிக்கொள்ளுங்கள்
20. கடவுள்மீது தனக்கிருந்த பயபக்தியை மரியாள் எவ்வாறு தெரிவித்தார்?
20 கடவுள்மீது உங்களுக்கிருக்கும் பயபக்தி உங்கள் ஜெபங்களில் தெளிவாகத் தெரிய வேண்டும். மேசியாவின் தாயாகப்போவதைக் குறித்துக் கேள்விப்பட்டதும் மரியாள் பக்திப் பரவசத்துடன் சொன்ன வார்த்தைகள், சாமுவேலை அன்னாள் அர்ப்பணித்தபோது சொன்ன வார்த்தைகளைப் போலவே இருந்தன. கடவுள்மீது மரியாளுக்கு இருந்த பயபக்தி அவர் சொன்ன பின்வரும் வார்த்தைகளில் பளிச்சிடுகிறது: “யெகோவாவை நான் போற்றிப் புகழ்கிறேன்; என் மீட்பராகிய கடவுளை நினைத்து என் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது.” (லூக். 1:46, 47) தேவபயமுள்ள மரியாள் மேசியாவின் தாயாக இருப்பதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஆச்சரியமே இல்லை! அவர் பயன்படுத்தியதைப் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி உங்களுடைய ஜெபங்களுக்கு மெருகூட்ட முடியுமா?
21. இயேசுவின் ஜெபங்கள் எவ்வாறு பயபக்தியையும் விசுவாசத்தையும் வெளிக்காட்டின?
21 இயேசு முழு விசுவாசத்துடனும் பயபக்தியுடனும் ஜெபம் செய்தார். உதாரணமாக, லாசருவை உயிர்த்தெழுப்புவதற்கு முன், ‘அவர் வானத்தை நோக்கி, “தகப்பனே, என் ஜெபத்தைக் கேட்டதற்காக உங்களுக்கு நன்றி சொல்கிறேன். நீங்கள் எப்போதுமே என் ஜெபத்தைக் கேட்பீர்கள் என்று எனக்குத் தெரியும்”’ என்று சொன்னார். (யோவா. 11:41, 42) இப்படிப்பட்ட பயபக்தியையும் விசுவாசத்தையும் உங்களுடைய ஜெபங்கள் காட்டுகின்றனவா? இயேசுவின் பயபக்திமிக்க மாதிரி ஜெபத்தைக் கருத்தூன்றிப் படியுங்கள்; அப்படிப் படிக்கும்போது, யெகோவாவின் பெயர் பரிசுத்தமாவதும், அவருடைய அரசாங்கம் வருவதும், அவருடைய சித்தம் செய்யப்படுவதும் அதில் முக்கிய அம்சங்களாக இருப்பதைக் கவனிப்பீர்கள். (மத். 6:9, 10) அப்படியானால், யெகோவாவின் அரசாங்கம் வருவதிலும், அவருடைய சித்தம் செய்யப்படுவதிலும், அவருடைய புனிதமான பெயர் பரிசுத்தப்படுவதிலும் அதிக ஆர்வமாய் இருக்கிறீர்கள் என்பதை உங்களுடைய ஜெபங்கள் காட்டுகின்றனவா? காட்ட வேண்டும்.
22. நற்செய்தியை அறிவிப்பதற்கு யெகோவா தைரியத்தைத் தருவாரென்று நீங்கள் ஏன் நிச்சயமாக இருக்கலாம்?
22 யெகோவாவின் ஊழியர்கள் துன்புறுத்தலையோ சோதனைகளையோ எதிர்ப்படுவதால், அவருக்குச் சேவை செய்யத் தைரியம் கேட்டு வேண்டுதல் செய்கிறார்கள். ‘இயேசுவின் பெயரில் கற்பிக்கக் கூடாதென்று’ ஜெபக்கூடத் தலைவர்கள் பேதுருவுக்கும் யோவானுக்கும் கட்டளையிட்டபோது, அதற்குக் கீழ்ப்படிய அவர்கள் தைரியமாக மறுத்தார்கள். (அப். 4:18-20) நடந்த சம்பவத்தைத் தாங்கள் விடுதலையான பிறகு சக விசுவாசிகளிடம் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட அவர்களெல்லாரும் கடவுளுடைய வார்த்தையைத் தைரியமாகப் பிரசங்கிக்க உதவும்படி அவரிடம் விண்ணப்பம் செய்தார்கள். அந்த ஜெபத்திற்குப் பதில் கிடைத்தபோது, அவர்கள் எந்தளவு பரவசம் அடைந்திருப்பார்கள்! அவர்கள் ‘கடவுளுடைய சக்தியினால் நிரப்பப்பட்டு அவருடைய வார்த்தையைத் தைரியமாகப் பேச ஆரம்பித்தார்கள்.’ (அப்போஸ்தலர் 4:24-31-ஐ வாசியுங்கள்.) இதன் பலனாகத் திரளான மக்கள் யெகோவாவின் வணக்கத்தாராய் ஆனார்கள். ஆகவே, நற்செய்தியைத் தைரியமாக அறிவிப்பதற்கும்கூட ஜெபம் உங்களைப் பலப்படுத்தும்.
உங்கள் ஜெபங்களுக்குத் தொடர்ந்து மெருகூட்டுங்கள்
23, 24. (அ) பைபிளைப் படிப்பது உங்கள் ஜெபங்களுக்கு எப்படி மெருகூட்டும் என்பதைக் காட்டுகிற வேறு உதாரணங்களைக் குறிப்பிடுங்கள். (ஆ) உங்கள் ஜெபங்களுக்கு மெருகூட்ட நீங்கள் என்ன செய்வீர்கள்?
23 பைபிளை வாசிப்பதும் கருத்தூன்றிப் படிப்பதும் உங்கள் ஜெபங்களுக்கு மெருகூட்டும்; இதற்கு இன்னும் எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம். எடுத்துக்காட்டாக, யோனாவைப் போலவே நீங்களும் உங்களுடைய ஜெபத்தில், ‘மீட்பு யெகோவாவுக்குரியது’ என்பதை மனதார ஒப்புக்கொள்ளலாம். (யோனா 2:1-10; NW) மோசமான பாவத்தைச் செய்ததால் மனம் குறுகுறுத்து மூப்பர்களுடைய உதவியை நாடியிருக்கிறீர்கள் என்றால், தாவீது தன் ஜெபத்தில் தெரிவித்த வார்த்தைகளை உங்களுடைய தனிப்பட்ட ஜெபங்களில் பயன்படுத்தி நீங்கள் மன்னிப்பு கேட்கலாம். (சங். 51:1-12) சில சமயம் எரேமியாவைப் போலவே ஜெபத்தில் நீங்கள் யெகோவாவைப் புகழலாம். (எரே. 32:16-19) திருமணம் செய்துகொள்ள நினைத்திருக்கிறீர்கள் என்றால், எஸ்றா புத்தகத்தின் 9-ஆம் அதிகாரத்திலுள்ள ஜெபத்தைக் கருத்தூன்றிப் படியுங்கள்; ‘நம் எஜமானரைப் பின்பற்றுகிற ஒருவரையே திருமணம் செய்துகொள்ள வேண்டும்’ என்ற கட்டளைக்குக் கீழ்ப்படிவதற்கான உங்கள் தீர்மானத்தை அது பலப்படுத்தலாம்.—1 கொ. 7:39; எஸ்றா 9:6, 10-15.
24 பைபிளைத் தொடர்ந்து வாசித்துக்கொண்டும், கருத்தூன்றிப் படித்துக்கொண்டும், ஆராய்ந்துகொண்டும் இருங்கள். உங்கள் ஜெபங்களில் என்னென்ன குறிப்புகளைச் சொல்லலாம் எனத் தேடிப்பாருங்கள். நன்றியும் புகழும் கலந்த உங்கள் ஜெபங்களிலும், மன்றாட்டுகளிலும் அவற்றைச் சேர்த்துக்கொள்ளுங்கள். பைபிள் படிப்பின் மூலமாக இவ்வாறு உங்கள் ஜெபங்களுக்கு மெருகூட்டினீர்கள் என்றால், யெகோவாவோடு முன்னொருபோதும் இல்லாதளவுக்கு நெருக்கமான பந்தத்தை அனுபவிப்பீர்கள்.
உங்கள் பதில்?
• நாம் ஏன் கடவுளுடைய வழிநடத்துதலை நாடி அதைப் பின்பற்ற வேண்டும்?
• ஞானத்திற்காக ஜெபம் செய்ய எது நம்மைத் தூண்ட வேண்டும்?
• சங்கீத புத்தகம் நம் ஜெபங்களுக்கு எப்படி மெருகூட்டும்?
• நாம் ஏன் விசுவாசத்தோடும் பயபக்தியோடும் ஜெபம் செய்ய வேண்டும்?
[பக்கம் 8-ன் படம்]
கடவுளுடைய வழிநடத்துதலுக்காக ஆபிரகாமின் ஊழியக்காரன் ஜெபம் செய்தார். நீங்களும் செய்கிறீர்களா?
[பக்கம் 10-ன் படம்]
குடும்ப வழிபாடு உங்கள் ஜெபங்களுக்கு மெருகூட்டும்