சகோதர அன்பை அதிகமதிகமாய்க் காட்டுங்கள்
“கிறிஸ்து . . . உங்கள்மீது அன்பு காட்டியது போலவே நீங்களும் தொடர்ந்து அன்பு காட்டுங்கள்.” —எபே. 5:2.
1. தம்முடைய சீடர்களை அடையாளம் காட்டுகிற முக்கிய அம்சம் எதுவென்று இயேசு குறிப்பிட்டார்?
வீட்டுக்கு வீடு ஊழியம் யெகோவாவின் சாட்சிகளுக்கு அடையாளமாக இருக்கிற முக்கிய அம்சமாகும். ஆனாலும், தமது உண்மைச் சீடர்களை அடையாளம் காட்டுவதற்குக் கிறிஸ்து இயேசு வேறொரு அம்சத்தைக் குறிப்பிட்டார்: “நீங்கள் ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்டுங்கள்; நான் உங்கள்மீது அன்பு காட்டியது போலவே நீங்களும் ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்ட வேண்டுமென்ற புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அப்படிப்பட்ட அன்பை ஒருவர்மீது ஒருவர் காட்டினால், நீங்கள் என்னுடைய சீடர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.”—யோவா. 13:34, 35.
2, 3. கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு வருபவர்களைச் சகோதர அன்பு எவ்வாறு ஈர்க்கிறது?
2 உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு மத்தியில் நிலவுகிற அன்பை வேறு எங்கேயும் பார்க்க முடியாது. இரும்பு காந்தத்தினால் ஈர்க்கப்படுவது போலவே யெகோவாவின் ஊழியர்கள் அன்பினால் ஈர்க்கப்படுகிறார்கள், அதே அன்பினால் நல்மனம் படைத்தவர்கள் உண்மை வணக்கத்திடம் ஈர்க்கப்படுகிறார்கள். உதாரணத்திற்கு, கேமரூனில் வசிக்கும் மார்செலீனோவை எடுத்துக்கொள்ளுங்கள்; வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் அவருடைய பார்வை பறிபோனது. ஆனால், சூனியக்காரராக இருப்பதால்தான் அவர் பார்வை இழந்தார் என்ற புரளி ஊர் முழுக்கப் பரவியது. அவருக்கு ஆறுதல் சொல்வதற்குப் பதிலாக அவருடைய சர்ச் பாதிரியும் சர்ச் பிரமுகர்களும் அவரை விலக்கி வைத்துவிட்டார்கள். ஒரு யெகோவாவின் சாட்சி, அவரைச் சபைக் கூட்டங்களுக்கு வரும்படி அழைத்தபோது அங்குள்ளவர்களும் தன்னை ஒதுக்கி வைத்துவிடுவார்கள் என்று நினைத்துத் தயங்கினார்.
3 ராஜ்ய மன்றத்திற்கு வந்தபோதோ மிகுந்த ஆச்சரியம் அடைந்தார். அவரை எல்லாரும் அன்போடு வரவேற்றார்கள். அங்கு கேட்ட பைபிள் போதனைகளிலிருந்து ஆறுதலைப் பெற்றார். அன்றுமுதல் எல்லாக் கூட்டங்களுக்கும் செல்ல ஆரம்பித்தார், ஆன்மீக ரீதியில் நல்ல முன்னேற்றங்களைச் செய்தார், 2006-ல் ஞானஸ்நானம் பெற்றார். இப்போது, தன் குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தாரிடமும் சத்தியத்தைக் குறித்துப் பேசுகிறார், அநேக பைபிள் படிப்புகளை நடத்துகிறார். கடவுளுடைய மக்களிடமிருந்து தனக்குக் கிடைத்த அதே அன்பு தன் பைபிள் மாணாக்கர்களுக்கும் கிடைக்க வேண்டுமென விரும்புகிறார்.
4. “தொடர்ந்து அன்பு காட்டுங்கள்” என்ற பவுலின் அறிவுரைக்கு நாம் ஏன் கீழ்ப்படிய வேண்டும்?
4 சகோதர அன்பு இனிமையானது; என்றாலும், அது தானாகவே வந்துவிடாது. இரவில் குளிர்காய்வதற்காக நெருப்பு மூட்டப்படுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அநேகர் அந்த நெருப்புக்கு அருகே வந்து கதகதப்படைவார்கள். ஆனால், விறகை அவர்கள் போட்டுக்கொண்டே இருக்காவிட்டால் அந்த நெருப்பு அணைந்துவிடும். அதுபோலவே, சபையில் நிலவுகிற அன்பை அந்த நெருப்புக்கு ஒப்பிடலாம்; அது அணைந்துபோகாமல் காக்க நாம் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும். அதை நாம் எப்படிச் செய்யலாம்? அப்போஸ்தலன் பவுல் சொல்கிறார்: “கிறிஸ்து உங்களுக்காகத் தம்மை நறுமணம் வீசுகிற காணிக்கையாகவும் பலியாகவும் கடவுளுக்கு அர்ப்பணித்து, உங்கள்மீது அன்பு காட்டியது போலவே நீங்களும் தொடர்ந்து அன்பு காட்டுங்கள்.” (எபே. 5:2) அப்படியென்றால், நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய முக்கியமான கேள்வி, ‘நான் எவ்வழிகளில் தொடர்ந்து அன்பு காட்டலாம்?’ என்பதே.
“உங்கள் இதயக் கதவை அகலத் திறந்திடுங்கள்”
5, 6. கொரிந்திய கிறிஸ்தவர்கள் தங்களுடைய ‘இதயக் கதவை அகலத் திறக்கும்படி’ பவுல் ஏன் கேட்டுக்கொண்டார்?
5 பூர்வ கொரிந்துவில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “கொரிந்தியரே, நாங்கள் உங்களிடம் ஒளிவுமறைவில்லாமல் பேசியிருக்கிறோம், உங்களுக்காக எங்கள் இதயக் கதவை அகலத் திறந்திருக்கிறோம். எங்களுடைய இதயத்தில் உங்களுக்கு இடமளித்திருக்கிறோம், ஆனால் உங்களுடைய இதயத்தில் எங்களுக்கு இடமளிக்காமல் இருக்கிறீர்கள், இதயங்கனிந்த பாசத்தைக் காட்டாமல் இருக்கிறீர்கள். அதனால், பிள்ளைகளுக்குச் சொல்வதுபோல் சொல்கிறேன், எங்களுக்காக நீங்களும் உங்கள் இதயக் கதவை அகலத் திறந்திடுங்கள்.” (2 கொ. 6:11-13) அன்பெனும் இதயக் கதவை அகலத் திறக்கும்படி பவுல் ஏன் கொரிந்திய கிறிஸ்தவர்களை ஊக்கமூட்டினார்?
6 பூர்வ கொரிந்து சபை எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டதெனக் கவனியுங்கள். பொ.ச. 50-ஆம் ஆண்டு இறுதியில் பவுல் கொரிந்துவுக்கு வந்தார். அவர் அங்கு பிரசங்கிக்க ஆரம்பித்தபோது சிலர் அவரை எதிர்த்தார்கள். என்றாலும், அவர் பிரசங்கிப்பதை நிறுத்திவிடவில்லை. சீக்கிரத்திலேயே அந்த நகரிலிருந்த அநேகர் நற்செய்தியில் விசுவாசம் வைத்தார்கள். பவுல் அங்கேயே “ஒன்றரை வருடம்” தங்கி, அந்தப் புதிய சபையாருக்குக் கற்பித்து அவர்களைப் பலப்படுத்தினார். கொரிந்திய கிறிஸ்தவர்கள்மீது அவருக்கு ஆழமான அன்பு இருந்ததை இது தெளிவாகக் காட்டுகிறது, அல்லவா? (அப். 18:5, 6, 9-11) அவர்களும் பவுல்மீது அன்பையும் மரியாதையையும் காட்ட வேண்டியிருந்தது. என்றாலும், அந்தச் சபையிலிருந்த சிலர் அவர்மீது அன்பு காட்டவில்லை. ஒருவேளை அவர் நேருக்கு நேர் சொன்ன அறிவுரை அவர்களுக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம். (1 கொ. 5:1-5; 6:1-10) அல்லது அங்கிருந்த ‘அருமை அப்போஸ்தலர்கள்’ அவரைப் பற்றிச் சொன்ன அவதூறுகளை அவர்கள் நம்பியிருக்கலாம். (2 கொ. 11:5, 6) ஆனால், தன்னுடைய சகோதர சகோதரிகள் எல்லாரும் தன்மீது உண்மையான அன்பைக் காட்ட வேண்டுமென அவர் விரும்பினார். எனவே, ‘இதயக் கதவை அகலத் திறந்து’ தன்னிடம் நெருங்கி வரும்படி அவர்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்.
7. சகோதர அன்பைக் காட்டுவதில் நாம் எப்படி நம் ‘இதயக் கதவை அகலத் திறக்கலாம்’?
7 நம்மைப் பற்றி என்ன? சகோதர அன்பைக் காட்டுவதில் நாம் எப்படி நம் ‘இதயக் கதவை அகலத் திறக்கலாம்’? ஒத்த வயதினரிடமோ ஒரே பின்னணியைச் சேர்ந்தவர்களிடமோ சகோதர அன்பைக் காட்டுவது நமக்குச் சுலபமாக இருக்கலாம். அல்லது, நமக்குப் பிடித்த பொழுதுபோக்கை விரும்புகிறவர்களோடு அதிக நேரம் செலவழிக்க நாம் விரும்பலாம். ஆனால், நாம் இப்படிச் செய்வது மற்ற கிறிஸ்தவர்களிடமிருந்து நம்மைப் பிரிக்கிறதென்றால், அன்பெனும் ‘இதயக் கதவை அகலத் திறக்க’ வேண்டும் என்றே அர்த்தம். ஆகையால், நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்வது ஞானமாக இருக்கும்: ‘எனக்கு நெருக்கமாக இல்லாத சகோதர சகோதரிகளோடு எப்போதாவது மட்டுமே ஊழியத்திலும் பொழுதுபோக்கிலும் கலந்துகொள்கிறேனா? சபைக்கு வருகிற புதிய ஆட்கள் என்னுடைய நண்பராக ஆவதற்கு முதலில் தகுதி பெறட்டும் என்று நினைத்துக்கொண்டு அவர்களுடன் ஒட்டாமலே இருக்கிறேனா? சிறியவர்கள் பெரியவர்கள் என்று பாகுபாடு பார்க்காமல் எல்லாரிடமும் ராஜ்ய மன்றத்தில் வாழ்த்துச் சொல்கிறேனா?’
8, 9. நம் சகோதர அன்பை அதிகமதிகமாகக் காட்டுவதற்கு ரோமர் 15:7-லுள்ள பவுலின் அறிவுரை நமக்கு எப்படி உதவும்?
8 ஒருவருக்கொருவர் வாழ்த்துச் சொல்லும் விஷயத்தைக் குறித்து ரோமக் கிறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதிய வார்த்தைகள், சக வணக்கத்தாரிடம் சரியான கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ள நமக்கு உதவும். (ரோமர் 15:7-ஐ அடிக்குறிப்புடன் சேர்த்து வாசியுங்கள்.) கிரேக்கில் “வரவேற்பளியுங்கள்” என்ற வார்த்தைக்கு, ஒருவரை ‘அன்போடு ஏற்றுக்கொள்ளுங்கள், உபசரிப்பு காட்டுங்கள், உங்கள் நட்பு வட்டத்திற்குள் சேர்த்துக்கொள்ளுங்கள்’ என்றெல்லாம் அர்த்தம். பைபிள் காலங்களில், உபசரிக்கும் குணமுள்ள ஒருவர் தன் வீட்டுக்கு வருகிற நண்பர்களை மலர்ந்த முகத்துடன் வரவேற்று, தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்துவார். அடையாள அர்த்தத்தில் கிறிஸ்துவும் நம்மை அதுபோலவே வரவேற்றிருக்கிறார். நாமும் நம்முடைய சக வணக்கத்தாரை அவ்வாறே வரவேற்கும்படி அறிவுறுத்தப்படுகிறோம்.
9 முக்கியமாக, நாம் சமீபத்தில் பார்த்திராத அல்லது பேசியிராத சகோதர சகோதரிகளை ராஜ்ய மன்றத்திலோ வேறு இடத்திலோ பார்க்கும்போது அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவர்களுடன் சிறிது நேரமெடுத்துப் பேசலாம், அல்லவா? அடுத்த கூட்டத்தில் மற்றவர்களோடு அதேபோல் நேரம் செலவிடலாம், அல்லவா? இப்படிச் செய்தோமென்றால், சீக்கிரத்திலேயே நம் சபையிலுள்ள எல்லாரிடமும் சுவாரஸ்யமாகப் பேசியிருப்போம். ஒரே நாளில் எல்லாரிடமும் பேச முடியவில்லையே என நினைத்து நாம் ஆதங்கப்பட வேண்டியதில்லை. மற்றவர்களும், நீங்கள் வந்து பேசவில்லையே என்று வருத்தப்படக் கூடாது.
10. சபையிலுள்ள எல்லாருக்குமே என்ன அருமையான வாய்ப்பு இருக்கிறது, அதிலிருந்து நாம் எப்படி முழுமையாகப் பலன் அடையலாம்?
10 மற்றவர்களை வரவேற்பதற்கான முதற்படி அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வதே. இது இனிய உரையாடலுக்கும் நெடுநாளைய நட்புக்கும் வழிவகுக்கலாம். உதாரணமாக, மாநாடுகளில் கலந்துகொள்பவர்கள் முன்பின் தெரியாதவர்களிடம் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு அவர்களோடு பேசுகிறார்கள், அடுத்த மாநாட்டில் அவர்களைச் சந்தித்துப் பேச வேண்டுமென ஆவலோடு காத்திருக்கிறார்கள். பொதுவாக, ராஜ்யமன்ற கட்டுமானப் பணி, நிவாரணப் பணி போன்றவற்றில் சேர்ந்து வேலை செய்கிறவர்கள், ஒருவருடைய நற்பண்புகளை மற்றொருவர் தெரிந்துகொள்வதால், நல்ல நண்பர்களாகிவிடுகிறார்கள். ஆம், யெகோவாவின் அமைப்பில் நெடுநாளைய நட்பை வளர்த்துக்கொள்வதற்கு எத்தனை எத்தனை வாய்ப்புகள்! நம் ‘இதயக் கதவை அகலத் திறந்தோமென்றால்,’ நம் நட்பு வட்டம் பெரிதாகும், அதோடு உண்மை வணக்கத்திடம் நம்மை ஒன்றிணைக்கிற அன்பும் ஆழமாகும்.
மற்றவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்
11. மாற்கு 10:13-16-ல் உள்ளபடி, இயேசு நமக்கு என்ன முன்மாதிரி வைத்தார்?
11 இயேசுவைப் போலவே அணுகத்தக்கவர்களாய் இருப்பதற்கு எல்லாக் கிறிஸ்தவர்களும் கடினமாக முயற்சி எடுக்கலாம். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இயேசுவிடம் கொண்டுவந்தபோது அவர்களைச் சீடர்கள் தடுத்தார்கள்; அப்போது அவர் என்ன செய்தார்? “சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள், அவர்களைத் தடுக்காதீர்கள், இப்படிப்பட்டவர்களே கடவுளுடைய அரசாங்கத்தில் இருப்பார்கள்” என்று சொல்லிவிட்டு, “அந்தச் சிறுபிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு, அவர்கள்மீது கைகளை வைத்து ஆசீர்வதித்தார்.” (மாற். 10:13-16) பெரிய போதகரான இயேசு தங்கள்மீது பொழிந்த அன்பைக் கண்டு அந்தப் பிஞ்சு உள்ளங்கள் எவ்வளவாய்ப் பரவசம் அடைந்திருக்கும்!
12. நாம் மற்றவர்களிடம் பேசுவதற்கு எவை முட்டுக்கட்டையாக இருக்கலாம்?
12 ‘நான் மற்றவர்களுக்காக நேரம் ஒதுக்குகிறேனா, அல்லது எப்போது பார்த்தாலும் அதிக வேலை இருப்பதுபோல் காட்டிக்கொள்கிறேனா?’ என்று ஒவ்வொரு கிறிஸ்தவரும் தன்னையே கேட்டுக்கொள்ள வேண்டும். நாம் செய்கிற சில காரியங்கள் தவறானவையாக இல்லாவிட்டாலும், மற்றவர்கள் நம்மோடு பேசுவதற்கு அவை முட்டுக்கட்டையாகிவிடலாம். உதாரணமாக, மற்றவர்களுக்குமுன் நாம் அடிக்கடி செல்போனைப் பயன்படுத்திக்கொண்டும் இயர்போனில் எதையாவது கேட்டுக்கொண்டும் இருந்தால், அவர்களோடு பேச நமக்கு விருப்பமில்லை என்ற அபிப்பிராயத்தை ஒருவேளை ஏற்படுத்திவிடுவோம். கையடக்க கம்ப்யூட்டரில் (Palm Top) நாம் மூழ்கிப்போயிருப்பதை மற்றவர்கள் பார்த்தால் அவர்களோடு பேச நமக்குப் பிடிக்கவில்லை என்று அவர்கள் முடிவு செய்துவிடலாம். உண்மைதான், “மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு.” ஆனால், நம்மைச் சுற்றி ஆட்கள் இருக்கையில், அது ‘பேசுவதற்கான காலமாக’ இருக்கிறது. (பிர. 3:7) ‘நான் உண்டு என் வேலை உண்டு என்று இருக்கவே எனக்குப் பிடிக்கும்’ எனச் சிலர் சொல்லலாம்; ‘காலை வேளையில் மற்றவர்களிடம் பேசவே எனக்குப் பிடிக்காது’ என வேறு சிலர் சொல்லலாம். என்றாலும், நமக்குப் பேசப் பிடிக்காத சமயங்களில்கூட மற்றவர்களோடு சிநேகப்பான்மையாகப் பேச முயற்சி செய்வது, ‘சொந்த விருப்பங்களை நாடாத’ அன்புக்கு அத்தாட்சி அளிக்கிறது.—1 கொ. 13:5.
13. கிறிஸ்தவ சகோதர சகோதரிகளை எப்படிக் கருத வேண்டுமென தீமோத்தேயுவுக்கு பவுல் ஊக்கமூட்டினார்?
13 சபையிலுள்ள எல்லாருக்கும் மரியாதை காட்டும்படி இளம் தீமோத்தேயுவுக்கு பவுல் ஊக்கமூட்டினார். (1 தீமோத்தேயு 5:1, 2-ஐ வாசியுங்கள்.) நாமும்கூட, வயதில் மூத்த கிறிஸ்தவர்களைத் தாயாகவும் தகப்பனாகவும் கருத வேண்டும்; இளையவர்களை உடன்பிறந்தவர்களாகப் பாவிக்க வேண்டும். இப்படிப்பட்ட மனப்பான்மையைக் காட்டினால் நம்முடைய அன்பான சகோதர சகோதரிகள் நம்மிடம் தாராளமாக வந்து பேசுவார்கள், அன்யோன்யமாக உணருவார்கள்.
14. மற்றவர்களிடம் உற்சாகமூட்டும் விதத்தில் பேசுவதால் வரும் சில நன்மைகள் யாவை?
14 உற்சாகமூட்டும் விதத்தில் மற்றவர்களோடு பேசினோம் என்றால், அவர்கள் ஆன்மீக ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் முன்னேற நாம் உதவுவோம். பெத்தேலில் சேவை செய்யும் ஒரு சகோதரர், தான் அங்கு வந்த புதிதில் அங்கிருந்த மூத்த சகோதரர்கள் வலிய வந்து தன்னிடம் பேசியதை ஆசை ஆசையாக நினைத்துப் பார்க்கிறார். அவர்கள் சொன்ன ஊக்கமூட்டும் வார்த்தைகளிலிருந்து அங்குள்ள சகோதர சகோதரிகளின் அன்பை அவர் புரிந்துகொண்டார். இப்போது அந்தச் சகோதரர்களைப் போலவே தன் சக பெத்தேல் அங்கத்தினர்களிடம் வலியப் போய்ப் பேசி அவர்களை ஊக்கமூட்டுகிறார்.
மனத்தாழ்மை—சமாதானத்தின் சாவி
15. உண்மை வணக்கத்தார் மத்தியில் பிரச்சினைகள் எழலாம் என்பதை எது காட்டுகிறது?
15 பூர்வ பிலிப்பி சபையில் இருந்த எயோதியாள், சிந்திகேயாள் என்ற இரண்டு சகோதரிகளுக்கிடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. (பிலி. 4:2, 3) பவுலுக்கும் பர்னபாவுக்கும் மத்தியில்கூட சூடான வாக்குவாதம் ஏற்பட்டது; அதனால் அவர்கள் இருவரும் தனித்தனியாகப் பிரிந்து சென்றார்கள்; இது பெரும்பாலோருக்குத் தெரியவந்தது. (அப். 15:37-39) உண்மை வணக்கத்தார் மத்தியில் பிரச்சினைகள் எழலாம் என்பதையே இந்தப் பதிவுகள் காட்டுகின்றன. என்றாலும், இதுபோன்ற சண்டை சச்சரவுகளைத் தீர்த்து, மீண்டும் நட்புறவை வளர்த்துக்கொள்ள யெகோவா நமக்கு உதவுகிறார். ஆனால், அவர் நம்மிடமிருந்து ஒன்றை எதிர்பார்க்கிறார்.
16, 17. (அ) மனஸ்தாபங்களைத் தீர்ப்பதற்கு மனத்தாழ்மை எந்தளவு முக்கியம்? (ஆ) ஏசாவை யாக்கோபு சந்தித்த சம்பவம் மனத்தாழ்மையின் முக்கியத்துவத்தை எவ்வாறு எடுத்துக்காட்டுகிறது?
16 நீங்களும் உங்கள் நண்பரும் காரில் ஏறி உட்கார்ந்திருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். காரை ‘ஸ்டார்ட்’ செய்து உங்கள் பயணத்தைத் தொடங்க என்ன தேவை? கார் சாவி தேவை. அதுபோலத்தான், மனஸ்தாபங்களைச் சரிசெய்வதற்கான முயற்சியைத் தொடங்குவதற்கும் ஒரு சாவி தேவை. அந்தச் சாவி, மனத்தாழ்மையே. (யாக்கோபு 4:10-ஐ வாசியுங்கள்.) பைபிள் நியமங்களைக் கடைப்பிடித்து ஒருவருக்கொருவர் மனஸ்தாபங்களைத் தீர்த்துக்கொள்ள மனத்தாழ்மையே உதவுகிறது; இதைப் பின்வரும் உதாரணம் காட்டுகிறது.
17 ஏசா தன்னுடைய தலைமகன் உரிமையை யாக்கோபிடம் இழந்ததால் ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்யத் துணிந்தான். இது நடந்து இருபது வருடங்களுக்குப் பின்பு அவர்கள் இருவரும் சந்திக்க வேண்டிய கட்டம் வந்தது; அதை நினைத்து யாக்கோபு ‘மிகவும் பயந்து, வியாகுலப்பட்டார்.’ ஏசா நிச்சயம் தன்னைக் கொலை செய்துவிடுவான் என்று யாக்கோபு அஞ்சினார். ஆனால், ஏசா வருவதைக் கண்டவுடன் அவன் எதிர்பார்க்காத ஒன்றை யாக்கோபு செய்தார். ‘ஏழு விசை தரைமட்டும் குனிந்து வணங்கினார்.’ பிறகு என்ன நடந்தது? “ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்; இருவரும் அழுதார்கள்.” அங்கே சண்டை வெடிக்கவில்லை. மாறாக, யாக்கோபு காட்டிய மனத்தாழ்மையால் ஏசாவின் மனதிலிருந்த வெறுப்பெல்லாம் கரைந்துபோனது.—ஆதி. 27:41; 32:3-8; 33:3, 4.
18, 19. (அ) ஒரு நபரோடு நமக்கு மனஸ்தாபம் ஏற்பட்டால் பைபிள் அறிவுரைகளைக் கடைப்பிடிக்க முதலில் நாம் ஏன் முயற்சியெடுக்க வேண்டும்? (ஆ) அந்த நபரோடு சமரசமாவதற்கு நாம் ஆரம்பத்தில் எடுக்கும் முயற்சிகள் ஒருவேளை பலன் தராவிட்டாலும் ஏன் நம்பிக்கை இழந்துவிடக் கூடாது?
18 பிரச்சினைகளைத் தீர்க்க பைபிளில் அருமையான ஆலோசனைகள் இருக்கின்றன. (மத். 5:23, 24; 18:15-17; எபே. 4:26, 27)a அந்த ஆலோசனைகளை நாம் கடைப்பிடிக்காவிட்டால் மற்றவர்களோடு சமாதானமாவது கடினம். நாம் மனத்தாழ்மை காட்டாமல் மற்றவர்கள் மனத்தாழ்மை காட்டட்டும் என்று காத்திருப்பது பிரச்சினைக்குத் தீர்வல்ல.
19 ஒரு நபரோடு சமரசமாவதற்கு நாம் ஆரம்பத்தில் எடுக்கும் முயற்சிகள் ஒருவேளை பலன் தராவிட்டாலும் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது. மனக்காயம் ஆற அந்த நபருக்குச் சிறிது காலம் எடுக்கலாம். யோசேப்பின் சகோதரர்களை எடுத்துக்கொள்ளுங்கள், யோசேப்புக்கு அவர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்தார்கள். பல வருடம் கழித்து எகிப்து நாட்டுக்கே பிரதமராய் ஆகியிருந்த அவரைச் சந்தித்தார்கள். கடைசியில், மனம் மாறினார்கள்; செய்த தவறுக்காக யோசேப்பிடம் மன்னிப்புக் கேட்டு மன்றாடினார்கள். யோசேப்பு அவர்களை மன்னித்தார். பிற்பாடு, யாக்கோபின் மகன்கள் யெகோவாவுடைய பெயரைத் தாங்கிய ஒரு பெரிய தேசமானார்கள். (ஆதி. 50:15-21) ஆகவே, நம் சகோதர சகோதரிகளோடு சமாதானத்தைக் காத்துக்கொண்டால் சபையின் ஒற்றுமைக்கும் சந்தோஷத்திற்கும் பங்களிப்போம்.—கொலோசெயர் 3:12-14-ஐ வாசியுங்கள்.
“செயலினாலும் சத்தியத்தினாலும் அன்பு காட்டுவோமாக”
20, 21. அப்போஸ்தலர்களுடைய பாதங்களை இயேசு கழுவியதிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?
20 இயேசு இறப்பதற்கு முந்தின இரவு தம் அப்போஸ்தலர்களிடம் இவ்வாறு சொன்னார்: “நான் உங்களுக்குச் செய்தபடியே நீங்களும் செய்ய வேண்டும் என்பதற்காக உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.” (யோவா. 13:15) அவர் அப்போதுதான் அந்தப் பன்னிரண்டு பேருடைய பாதங்களைக் கழுவியிருந்தார். ஒரு சம்பிரதாயத்திற்காகவோ, ஓர் அன்பான செயலைச் செய்ய வேண்டும் என்பதற்காகவோ இயேசு அப்படிக் கழுவவில்லை. யோவான் இந்தச் சம்பவத்தைப் பற்றி எழுதுவதற்குமுன் இவ்வாறு சொன்னார்: ‘இயேசு உலகத்திலிருந்த தம்முடையவர்கள்மீது அதுவரை அன்பு காட்டியது போலவே முடிவுவரை அன்பு காட்டினார்.’ (யோவா. 13:1) தம் அப்போஸ்தலர்கள்மீது அன்பு வைத்திருந்ததால்தான் ஓர் அடிமை செய்ய வேண்டிய வேலையை இயேசு செய்தார். ஆகவே, அப்போஸ்தலர்களும் ஒருவருக்கொருவர் அன்பான காரியங்களை மனத்தாழ்மையோடு செய்ய வேண்டியிருந்தது. ஆம், உண்மையான சகோதர அன்பு நமக்கு இருந்தால் நம்முடைய கிறிஸ்தவ சகோதர சகோதரிகள்மீது அக்கறை காட்டத் தூண்டப்படுவோம்.
21 கடவுளுடைய மகனான இயேசு, அப்போஸ்தலன் பேதுருவின் பாதங்களையும் கழுவியிருந்தார்; அதற்கான காரணத்தைப் புரிந்திருந்த பேதுரு இவ்வாறு எழுதினார்: “நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து உங்களைச் சுத்தமாக்கியிருப்பதால் வெளிவேஷமற்ற சகோதரப் பாசத்தையும், இருதயப்பூர்வ அன்பையும் ஒருவருக்கொருவர் ஊக்கமாகக் காட்டுங்கள்.” (1 பே. 1:22) அப்போஸ்தலன் யோவானுடைய பாதங்களையும் இயேசு கழுவியிருந்தார்; அதனால் அவரும் இவ்வாறு எழுதினார்: “சிறுபிள்ளைகளே, சொல்லினாலும் நாவினாலும் மட்டுமல்ல, செயலினாலும் சத்தியத்தினாலும் அன்பு காட்டுவோமாக.” (1 யோ. 3:18) ஆகவே, நம்முடைய சகோதர சகோதரிகள்மீது நமக்கிருக்கும் அன்பைச் செயலில் காட்டுவோமாக!
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் என்ற புத்தகத்தில் பக்கங்கள் 144-150-ஐப் பாருங்கள்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• என்னென்ன வழிகளில் நம்முடைய ‘இதயக் கதவை அகலத் திறக்கலாம்’?
• மற்றவர்களோடு நேரம் செலவிட எது நமக்கு உதவும்?
• ஒருவரோடு சமரசமாவதற்கு மனத்தாழ்மை ஏன் அவசியம்?
• நம்முடைய சகோதர சகோதரிகள்மீது அக்கறை காட்ட எது நம்மைத் தூண்ட வேண்டும்?
[பக்கம் 21-ன் படம்]
சக வணக்கத்தாரை அன்போடு வரவேற்று, வாழ்த்துச் சொல்லுங்கள்
[பக்கம் 23-ன் படம்]
மற்றவர்களோடு நேரம் செலவிடக் கிடைக்கும் வாய்ப்பை நழுவவிடாதீர்கள்