சபையில் உங்கள் பங்கைப் பொக்கிஷமாய்ப் போற்றுங்கள்
“கடவுள் தமக்குப் பிரியமானபடியே ஒவ்வொரு உறுப்பையும் உடலில் வைத்திருக்கிறார்.” —1 கொ. 12:18.
1, 2. (அ) சபையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பங்கு இருப்பதை எது காட்டுகிறது? (ஆ) இந்தக் கட்டுரையில் என்ன கேள்விகள் சிந்திக்கப்படும்?
சபை என்பது யெகோவா தம் மக்களுக்கு ஆன்மீக ஊட்டத்தையும், வழிநடத்துதலையும் அளிக்கிற ஓர் ஏற்பாடாகும்; பூர்வ இஸ்ரவேலருடைய காலத்திலிருந்தே இந்த ஏற்பாடு இருந்து வந்திருக்கிறது. உதாரணமாக, இஸ்ரவேலர் ஆயி பட்டணத்தை வீழ்த்திய பின்பு, ‘நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்டுள்ள ஆசீர்வாதமும் சாபமுமாகிய சகல வார்த்தைகளையும் யோசுவா வாசித்தார். . . . இஸ்ரவேலின் முழுச் சபைக்கும் . . . முன்பாக ஒரு வார்த்தையும் விடாமல் வாசித்தார்’ என்ற வசனத்தில் சபை என்ற வார்த்தையைக் கவனிக்கிறோம்.—யோசு. 8:34, 35.
2 முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவ சபையின் அங்கத்தினர்களை, ‘கடவுளுடைய வீட்டார்’ என்றும், ‘சத்தியத்தின் தூணும் ஆதாரமுமானவர்கள்’ என்றும் மூப்பரான தீமோத்தேயுவிடம் அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (1 தீ. 3:15) இன்று கடவுளுடைய ‘வீட்டாராய்’ இருப்பவர்கள் யார்? உலகளாவிய சகோதரத்துவத்தின் பாகமாய் இருக்கிற உண்மைக் கிறிஸ்தவர்களே. கொரிந்தியர்களுக்கு எழுதிய முதல் கடிதத்தின் 12-ஆம் அதிகாரத்தில் பவுல் கிறிஸ்தவ சபையை மனித உடலுக்கு ஒப்பிட்டுப் பேசினார். அதன் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு வேலையைச் செய்தாலும் எல்லா உறுப்புகளுமே அத்தியாவசியமானவை என அவர் குறிப்பிட்டார். “கடவுள் தமக்குப் பிரியமானபடியே ஒவ்வொரு உறுப்பையும் உடலில் வைத்திருக்கிறார்” என்றும், “உடல் உறுப்புகளில் நமக்கு மதிப்பற்றதாகத் தோன்றுகிற உறுப்புகளுக்கே நாம் மிகுந்த மதிப்புக் கொடுக்கிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார். (1 கொ. 12:18, 23) ஆகவே, கிறிஸ்தவ சபையில் ஒருவர் வகிக்கிற பங்கு இன்னொருவர் வகிக்கிற பங்கைக் காட்டிலும் உயர்வானதோ தாழ்வானதோ கிடையாது. ஆனால் அது வெறுமனே வித்தியாசமானது, அவ்வளவுதான். அப்படியானால், சபையில் நமக்குரிய பங்கை நாம் எவ்வாறு கண்டடையலாம்? அதை எவ்வாறு பொக்கிஷமாய்ப் போற்றலாம்? என்ன காரணங்களால் சபையில் நமது பங்கு வேறுபடுகிறது? ‘நம்முடைய முன்னேற்றம் எல்லாருக்கும் தெரியவருகிற’ விதத்தில் நாம் எவ்வாறு நடந்துகொள்ளலாம்?—1 தீ. 4:15.
நம் பங்கைப் பொக்கிஷமாய்ப் போற்றுவது எப்படி?
3. சபையில் நமக்குரிய பங்கைக் கண்டடைவதற்கும், நாம் அதைப் பொக்கிஷமாய்ப் போற்றுவதைக் காட்டுவதற்கும் ஒரு வழி என்ன?
3 சபையில் நமக்குரிய பங்கைக் கண்டடைவதற்கும், அதைப் பொக்கிஷமாய்ப் போற்றுவதைக் காட்டுவதற்கும் ஒரு வழி, “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” வகுப்பாருக்கும், அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்கிற ஆளும் குழுவினருக்கும் முழு ஒத்துழைப்பு தருவதாகும். (மத்தேயு 24:45-47-ஐ வாசியுங்கள்.) அடிமை வகுப்பார் அளிக்கும் அறிவுரைகளுக்கு நாம் எந்தளவு கீழ்ப்படிகிறோம் என்பதை நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு, கடந்த பல வருடங்களாக ஆடை அலங்கார விஷயத்திலும், பொழுதுபோக்கு விஷயத்திலும், இன்டர்நெட்டைப் பயன்படுத்துகிற விஷயத்திலும் தெளிவான அறிவுரைகளை நாம் பெற்று வந்திருக்கிறோம். ஆன்மீக ரீதியில் பாதுகாக்கப்படுவதற்காக அந்த அருமையான அறிவுரைகளை நாம் கவனமாய்ப் பின்பற்றியிருக்கிறோமா? குடும்ப வழிபாட்டிற்கென்று தவறாமல் நேரம் ஒதுக்குவது பற்றி அவர்கள் கொடுத்திருக்கும் அறிவுரைக்குக் கீழ்ப்படிந்து வந்திருக்கிறோமா? வாரத்தில் ஒரு சாயங்கால வேளையை அதற்கென்று ஒதுக்கியிருக்கிறோமா? நாம் திருமணமாகாத நபராக இருந்தால் அந்த நேரத்தைத் தனிப்பட்ட விதமாக பைபிளைக் கருத்தூன்றிப் படிக்க பயன்படுத்துகிறோமா? அடிமை வகுப்பார் தருகிற ஆலோசனைகளைப் பின்பற்றினால், யெகோவா நம்மைத் தனிப்பட்டவர்களாகவும் ஆசீர்வதிப்பார், குடும்பமாகவும் ஆசீர்வதிப்பார்.
4. தனிப்பட்ட விஷயங்களில் நாம் தெரிவுகளைச் செய்யும்போது எதை மனதில் வைக்க வேண்டும்?
4 பொழுதுபோக்கு, ஆடை, அலங்காரம் போன்ற விஷயங்களெல்லாம் அவரவர் விருப்பம் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், தன்னையே கடவுளுக்கு அர்ப்பணித்த ஒரு கிறிஸ்தவர், அதுவும் சபையில் தனது பங்கைப் பொக்கிஷமாய்ப் போற்றுகிற கிறிஸ்தவர், தன்னுடைய விருப்பங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துத் தீர்மானம் எடுப்பது சரியல்ல. மாறாக, யெகோவாவின் கண்ணோட்டத்திற்கே முக்கியத்துவம் கொடுத்துத் தீர்மானம் எடுக்க வேண்டும்; அவருடைய கண்ணோட்டம் பைபிளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதிலுள்ள செய்தி ‘நம் கால்களுக்குத் தீபமும் நம் பாதைக்கு வெளிச்சமுமாய் இருக்க’ வேண்டும். (சங். 119:105) அதோடு, தனிப்பட்ட விஷயங்களில் நாம் செய்கிற தெரிவுகள், சபைக்கு வெளியே மற்றும் உள்ளே இருப்பவர்களையும் நம் ஊழியத்தையும் எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதை மனதில் வைத்துத் தீர்மானம் எடுக்க வேண்டும்.—2 கொரிந்தியர் 6:3, 4-ஐ வாசியுங்கள்.
5. சுதந்திரமாய்ச் செயல்படும் சிந்தை நமக்கு வந்துவிடாதபடி நாம் ஏன் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்?
5 “கீழ்ப்படியாதவர்களிடம் தற்போது செயல்படுகிற சிந்தை” காற்றுபோல் எங்கும் பரவியிருக்கிறது. (எபே. 2:2) இந்தச் சிந்தை நம்மைத் தொற்றிக்கொண்டால், யெகோவாவின் அமைப்பிலிருந்து நமக்கு வழிநடத்துதல் எதுவும் தேவையில்லை என நினைத்துவிடுவோம். ‘அப்போஸ்தலன் யோவான் சொன்ன எதையுமே மரியாதையோடு ஏற்றுக்கொள்ளாத’ தியோத்திரேப்புவைப் போல் நாம் இருக்கக் கூடாது. (3 யோ. 9, 10) சுதந்திரமாகச் செயல்படும் சிந்தையை வளர்த்துக்கொள்ளாதபடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நம்மை வழிநடத்த யெகோவா இன்று பயன்படுத்தி வருகிற அமைப்பை நம்முடைய வார்த்தையினாலோ செயலினாலோ அவமதித்துவிடாதபடி கவனமாய் இருக்க வேண்டும். (எண். 16:1-3) அதோடு, அடிமை வகுப்பாருடன் ஒத்துழைக்க நமக்கிருக்கும் பாக்கியத்தைப் பொக்கிஷமாய்ப் போற்ற வேண்டும். நம்முடைய சபையில் முன்னின்று வழிநடத்துகிற சகோதரர்களுக்குக் கீழ்ப்படிந்து, அடிபணிந்து நடக்க நாம் கடுமையாய் முயற்சி செய்ய வேண்டும்.—எபிரெயர் 13:7, 17-ஐ வாசியுங்கள்.
6. நம்முடைய தனிப்பட்ட சூழ்நிலைகளை நாம் ஏன் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்?
6 சபையில் நமக்கிருக்கும் பங்கைப் பொக்கிஷமாகப் போற்றுவதைக் காட்டுவதற்கான இன்னொரு வழி, நம்முடைய தனிப்பட்ட சூழ்நிலைகளை நன்றாகச் சீர்தூக்கிப் பார்த்து நம் ‘ஊழியத்தை மகிமைப்படுத்துவதற்கும்’ யெகோவாவுக்குப் புகழ் சேர்ப்பதற்கும் நம்மாலான அனைத்தையுமே செய்வதாகும். (ரோ. 11:13) சிலர் ஒழுங்கான பயனியர்களாகச் சேவை செய்கிறார்கள். வேறு சிலர், மிஷனரிகளாக, பயணக் கண்காணிகளாக, உலகெங்குமுள்ள பெத்தேல் அங்கத்தினர்களாக விசேஷ முழுநேர ஊழியத்தில் ஈடுபடுகிறார்கள். அநேக சகோதர சகோதரிகள் ராஜ்ய மன்றக் கட்டுமானப் பணியில் உதவுகிறார்கள். யெகோவாவின் மக்களில் திரளானோர், தங்கள் குடும்பத்தின் ஆன்மீகத் தேவைகளை மிகச் சிறந்த விதத்தில் கவனித்துக்கொள்கிறார்கள்; அதோடு, ஒவ்வொரு வாரமும் ஊழியத்தில் முழுமையாக ஈடுபடுகிறார்கள். (கொலோசெயர் 3:23, 24-ஐ வாசியுங்கள்.) இப்படி, கடவுளுடைய சேவையில் நம்மையே மனமுவந்து அளித்து, முழுமூச்சோடு அவருக்குச் சேவை செய்யும்போது, அவருடைய சபையில் நமக்கு எப்போதுமே ஒரு பங்கிருக்கும் என்பதில் நாம் நிச்சயமாய் இருக்கலாம்.
சபையில் நம் பங்கு வேறுபடுவதற்கான காரணங்கள்
7. நம்முடைய சூழ்நிலையைப் பொறுத்து சபையில் நமக்கிருக்கும் பங்கு எவ்வாறு வேறுபடலாம் என்பதை விளக்குங்கள்.
7 நம்முடைய சூழ்நிலைகளைக் கவனமாக அலசி ஆராய்வது முக்கியம்; ஏனென்றால், சபையில் நமக்கிருக்கும் பங்கை அவை ஓரளவு தீர்மானிக்கின்றன. உதாரணத்திற்கு, சபையில் ஒரு சகோதரர் வகிக்கிற பங்கும் ஒரு சகோதரி வகிக்கிற பங்கும் சில விதங்களில் வேறுபடுகின்றன. வயது, ஆரோக்கியம் போன்ற காரணங்களும்கூட யெகோவாவுக்கு நாம் செய்கிற சேவையைப் பாதிக்கின்றன. “வாலிபரின் அலங்காரம் அவர்கள் பராக்கிரமம் [அதாவது, பலம்]; முதிர்வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை” என்று நீதிமொழிகள் 20:29 குறிப்பிடுகிறது. வாலிபர்கள் இளமைத் துடிப்போடு இருப்பதால் சபைக்கு அதிகளவில் தங்களுடைய உடல் உழைப்பைத் தர முடியும். மறுபட்சத்தில், முதியவர்கள் ஞானமும் அனுபவமும் பெற்றிருப்பதால் சபைக்கு மிகவும் பயனுள்ளவர்களாய் இருக்க முடியும். என்றாலும், யெகோவாவின் அளவற்ற கருணையால்தான் அவரது அமைப்பில் நம்மால் எதையுமே செய்ய முடிகிறது என்பதை நாம் மனதில் வைக்க வேண்டும்.—அப். 14:26; ரோ. 12:6-8.
8. சபையில் நாம் வகிக்கும் பங்கு, நம் விருப்பத்தைப் பொறுத்து எவ்வாறு வேறுபடலாம்?
8 சபையில் நாம் வகிக்கும் பங்கைப் பாதிக்கிற இன்னொரு காரணத்தை பின்வரும் ஓர் உதாரணம் தெளிவாகக் காட்டுகிறது. ஓர் அக்கா தங்கை உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்திருக்கிறார்கள். இருவரது சூழ்நிலைகளும் ஒன்றுபோல் இருக்கின்றன. அவர்கள் இருவருமே பள்ளிப் படிப்பை முடித்தபின் ஒழுங்கான பயனியர் ஊழியத்தில் ஈடுபடும்படி அவர்களுடைய பெற்றோர் முடிந்தளவு ஊக்கமூட்டியிருக்கிறார்கள். பள்ளிப் படிப்பை முடித்தபின் அவர்களில் ஒருத்தி பயனியர் சேவையை ஆரம்பிக்கிறாள்; ஆனால், இன்னொருத்தி வேலைக்குப் போக ஆரம்பிக்கிறாள். இவ்விருவரும் வித்தியாசமான தீர்மானம் எடுப்பதற்குக் காரணம் என்ன? சொந்த விருப்பமே! தங்களுக்கு என்ன விருப்பமோ அதைத்தான் இந்த இரண்டு சகோதரிகளும் செய்தார்கள். நம்மில் பெரும்பாலோருடைய விஷயத்திலும் இதுவே உண்மை. கடவுளுடைய சேவையில் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதை நாம் உள்ளப்பூர்வமாய்ச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஊழியத்தில் நாம் தற்போது செய்துவருவதைக் காட்டிலும் அதிகத்தைச் செய்ய முடியுமா? அதற்காக நம் சூழ்நிலைகளில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தாலும் அப்படிச் செய்வோமா?—2 கொ. 9:7.
9, 10. யெகோவாவின் சேவையில் அதிகத்தைச் செய்ய நமக்குள் தூண்டுதல் இல்லாவிட்டால் நாம் என்ன செய்ய வேண்டும்?
9 யெகோவாவின் சேவையில் அதிகத்தைச் செய்வதற்கான தூண்டுதல் இல்லாமல், சபையில் நாம் ஏதோ பேருக்குப் பிரஸ்தாபியாக இருக்கிறோம் என்றால் என்ன செய்வது? பிலிப்பியருக்கு எழுதிய கடிதத்தில் பவுல் இவ்வாறு குறிப்பிட்டார்: “உங்களை மனமுவந்து செயல்பட வைப்பதற்காகக் கடவுள்தான் தமக்குப் பிரியமானபடி உங்களிடையே செயல்பட்டு வருகிறார்.” உண்மைதான், நாம் மனமுவந்து செயல்படும்படி, அதாவது விருப்பப்பட்டுச் செயல்படும்படி, கடவுளால் நம்மீது செல்வாக்கு செலுத்த முடியும்.—பிலி. 2:13; 4:13.
10 அப்படியானால், ‘யெகோவாவே, உங்களுக்குப் பிரியமானபடி என்னைச் செயல்பட வையுங்கள்’ என்று நாம் அவரிடம் கேட்க வேண்டும், அல்லவா? பூர்வ இஸ்ரவேல் ராஜாவான தாவீது அதைத்தான் செய்தார். அவர் இவ்வாறு ஜெபித்தார்: ‘யெகோவாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, எனக்குப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.’ (சங். 25:4, 5) தமக்குப் பிரியமான விதத்தில் நம்மைச் செயல்பட வைக்கும்படி நாமும் யெகோவாவிடம் ஜெபம் செய்யலாம். நாம் யெகோவாவுக்கும் அவருடைய மகனுக்கும் விருப்பமான காரியங்களைச் செய்யும்போது அவர்கள் இருவரும் எந்தளவு சந்தோஷப்படுவார்கள் என்பதை நினைத்துப் பார்த்தோமென்றால், நம் இருதயத்தில் நன்றியுணர்வு பொங்கியெழும். (மத். 26:6-10; லூக். 21:1-4) யெகோவாவின் சேவையில் அதிகத்தைச் செய்வதற்கான விருப்பத்தைத் தரும்படி அவரிடம் கெஞ்சிக் கேட்க அந்த நன்றியுணர்வு நம் உள்ளத்தைத் தூண்டலாம். நாம் எப்படிப்பட்ட மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்பதற்கு ஏசாயா தீர்க்கதரிசி முன்மாதிரி வைத்திருக்கிறார். “யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான்”? என்று யெகோவா கேட்டபோது, “இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என்று அவர் மனப்பூர்வமாகச் சொன்னார்.—ஏசா. 6:8.
அதிகத்தைச் செய்வது எப்படி?
11. (அ) சகோதரர்கள், சபைப் பொறுப்புகளை ஏற்பதற்கான தகுதிகளை ஏன் வளர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது? (ஆ) ஊழியப் பொறுப்புக்குத் தகுதிபெற சகோதரர்கள் என்ன செய்யலாம்?
11 கடந்த 2008 ஊழிய ஆண்டின்போது, உலகம் முழுவதிலும் 2,89,678 பேர் ஞானஸ்நானம் பெற்றார்கள்; அப்படியானால், அவர்களை முன்னின்று வழிநடத்த சகோதரர்கள் இன்னும் தேவைப்படுகிறார்கள் என்பது தெளிவு. இதை மனதில் வைத்து ஒரு சகோதரர் என்ன செய்ய வேண்டும்? உதவி ஊழியர்கள் மற்றும் மூப்பர்களுக்கான வேதப்பூர்வ தகுதிகளை வளர்த்துக்கொள்ள அவர் கடினமாய் உழைக்க வேண்டும். (1 தீ. 3:1-10, 12, 13; தீத். 1:5-9) ஒரு சகோதரர் வேதப்பூர்வ தகுதிகளை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்? ஊழியத்தில் மும்முரமாக ஈடுபடுவதன் மூலம், சபை வேலைகளைப் பொறுப்பாய் நிறைவேற்றுவதன் மூலம், கூட்டங்களில் தரமான பதில்களைச் சொல்வதன் மூலம், சக விசுவாசிகள்மீது தனிப்பட்ட அக்கறை காட்டுவதன் மூலம் வேதப்பூர்வ தகுதிகளை வளர்த்துக்கொள்ளலாம். இவ்வாறு, சபையில் தனக்கிருக்கும் பங்கைப் பொக்கிஷமாய்ப் போற்றுகிறார் என்பதை அவர் வெளிக்கட்டுகிறார்.
12. இளைஞர்கள் சத்தியத்தின் மீது தங்களுக்குள்ள பக்திவைராக்கியத்தை எவ்வாறு வெளிக்காட்டலாம்?
12 சபையில் இன்னும் அதிகத்தைச் செய்வதற்கு இளம் சகோதரர்கள், முக்கியமாகப் பருவவயது சகோதரர்கள் என்ன செய்யலாம்? வேதவசனங்களைப் பற்றிய அறிவைப் பெறுவதன் மூலம் “ஞானத்தையும் ஆன்மீகப் புரிந்துகொள்ளுதலையும்” வளர்த்துக்கொள்ள அவர்கள் உழைக்கலாம். (கொலோ. 1:9) கடவுளுடைய வார்த்தையைக் கருத்தூன்றிப் படிப்பதும், சபைக் கூட்டங்களில் உற்சாகமாய்க் கலந்துகொள்வதும் அதிகத்தைச் செய்ய அவர்களுக்குக் கைகொடுக்கலாம். ‘ஊழியம் செய்வதற்கான வாய்ப்பு என்ற பெரிய கதவின்’ வழியே நுழைவதற்கு, அதாவது முழுநேர ஊழியத்தின் வெவ்வேறு அம்சங்களில் ஈடுபடுவதற்கு, தகுதி பெறவும் அவர்கள் உழைக்கலாம். (1 கொ. 16:9) யெகோவாவின் சேவையை வாழ்க்கைப் பணியாக மேற்கொள்வது உண்மையான திருப்தியையும் அபரிமிதமான ஆசீர்வாதத்தையும் அள்ளித்தரும்.—பிரசங்கி 12:1-ஐ வாசியுங்கள்.
13, 14. சபையில் தங்களுக்கிருக்கும் பங்கைப் பொக்கிஷமாய்ப் போற்றுவதைச் சகோதரிகள் எவ்வழிகளில் வெளிக்காட்டலாம்?
13 சங்கீதம் 68:11-ல் (NW) உள்ள தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தில் தங்களுக்குப் பங்கு இருக்கிறதென்பதைச் சகோதரிகள் வெளிக்காட்டுகிறார்கள், அதை அவர்கள் பொக்கிஷமாகப் போற்றுகிறார்கள். அந்த வசனம் இவ்வாறு வாசிக்கிறது: ‘யெகோவா தாமே கட்டளை கொடுக்கிறார்; நற்செய்தியை அறிவிக்கிற பெண்களின் கூட்டம் மிகுதி.’ சபையில் தாங்கள் வகிக்கும் பங்கிற்காகச் சகோதரிகள் நன்றி காட்டுவதற்கு மிகச் சிறந்த ஒரு வழி, சீடராக்கும் வேலையில் ஈடுபடுவதாகும். (மத்தேயு 28:19, 20) ஆகவே, ஊழியத்தில் முழுமையாகப் பங்குகொள்வதன் மூலமும், அந்த வேலைக்காக மனமுவந்து தியாகங்கள் செய்வதன் மூலமும் சபையில் தங்களுக்கிருக்கிற பங்கைப் பொக்கிஷமாய்ப் போற்றுவதைச் சகோதரிகள் வெளிக்காட்டலாம்.
14 தீத்துவுக்கு பவுல் எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்: ‘முதிர் வயதான பெண்கள் பயபக்தியுடன் நடக்கிறவர்களாகவும், . . . நல்லதைக் கற்பிக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான், இளம் பெண்கள் தங்களுடைய கணவர்மீதும் பிள்ளைகள்மீதும் அன்புள்ளவர்களாகவும், தெளிந்த புத்தியுள்ளவர்களாகவும், கற்புள்ளவர்களாகவும், வீட்டு வேலைகள் செய்கிறவர்களாகவும், நல்லவர்களாகவும், தங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடக்கிறவர்களாகவும் இருக்கும்படி அவர்களால் புத்திசொல்ல முடியும்; கடவுளுடைய வார்த்தையும் பழிப்பேச்சுக்கு உள்ளாகாது.’ (தீத்து 2:3-5) முதிர்ச்சியுள்ள சகோதரிகளால் சபைக்கு எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம்! தலைமைதாங்கி நடத்துகிற சகோதரர்களுக்கு மதிப்பு மரியாதை காட்டுவதன் மூலமும் ஆடை, அலங்காரம், பொழுதுபோக்கு ஆகியவற்றில் ஞானமாகத் தீர்மானம் எடுப்பதன் மூலமும் மற்றவர்களுக்கு அவர்கள் சிறந்த முன்மாதிரியாய் இருக்கிறார்கள். இவ்வாறு, சபையில் தங்களுக்கிருக்கிற பங்கைப் பொக்கிஷமாய்ப் போற்றுகிறார்கள்.
15. தனிமை உணர்வைச் சமாளிக்க மணமாகாத சகோதரிகள் என்ன செய்யலாம்?
15 சபையில் தங்களுக்கிருக்கும் பங்கை நிறைவேற்றுவது மணமாகாத சகோதரிகளுக்குச் சில சமயங்களில் கஷ்டமாய் இருக்கலாம். இப்படி உணர்ந்த ஒரு சகோதரி, “என்னை அவ்வப்போது தனிமை உணர்வு வாட்டுகிறது” எனக் கூறுகிறார். அதை அவர் எவ்வாறு சமாளிக்கிறார்? அவரே சொல்கிறார்: “சபையில் என் பங்கை நிறைவேற்ற ஜெபமும் படிப்பும் உதவுகின்றன. அப்படிப் படிப்பதன் மூலம், யெகோவாவின் பார்வையில் நான் எப்படிப்பட்டவள் என்பதைத் தெரிந்துகொள்கிறேன். சபையிலுள்ள மற்றவர்களுக்கு உதவியாய் இருக்க முயலுகிறேன். இவ்வாறு செய்வது சதா என்னைப் பற்றியே யோசிக்காதிருக்க எனக்கு உதவுகிறது.” சங்கீதம் 32:8-ன்படி, யெகோவா தாவீதிடம், “உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” என்று கூறினார். ஆம், தமது ஊழியர்கள் அனைவர்மீதும் யெகோவா தனிப்பட்ட அக்கறை காட்டுகிறார், மணமாகாத சகோதரிகள் உட்பட! சபையில் தங்களுக்கிருக்கிற பங்கை நிறைவேற்ற அவர்கள் எல்லாருக்கும் அவர் உதவி செய்வார்.
உங்களுக்கிருக்கும் பங்கைப் பாதுகாத்திடுங்கள்!
16, 17. (அ) தமது அமைப்பின் பாகமாக இருக்கும்படி யெகோவா விடுத்திருக்கும் அழைப்பை ஏற்றுக்கொள்வது ஏன் மிகச் சிறந்த தீர்மானமாய் இருக்கிறது? (ஆ) யெகோவாவின் அமைப்பில் நமக்கிருக்கும் பங்கை நாம் எவ்வாறு பாதுகாத்திடலாம்?
16 யெகோவா தம் ஊழியர்கள் ஒவ்வொருவரையும் தம்மிடம் அன்போடு ஈர்த்திருக்கிறார். இயேசு சொன்னார்: “என்னை அனுப்பிய தகப்பன் ஒருவனை ஈர்க்காவிட்டால் எவனும் என்னிடம் வர முடியாது.” (யோவா. 6:44) கோடிக்கணக்கான மக்களிலிருந்து யெகோவா நம் ஒவ்வொருவரையும் ஈர்த்து தமது அமைப்பின் பாகமாக இருக்கும்படி அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டது நாம் செய்த தீர்மானங்களிலேயே மிகச் சிறந்த தீர்மானமாகும். இதுவே நம் வாழ்க்கைக்கு நோக்கத்தையும் அர்த்தத்தையும் கொடுத்திருக்கிறது. சபையில் நமக்கிருக்கும் பங்கை நினைத்து நாம் எவ்வளவாய் மகிழ்ச்சி அடைகிறோம்! திருப்தி அடைகிறோம்!
17 ‘யெகோவாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தை . . . வாஞ்சிக்கிறேன். என் கால் செம்மையான இடத்திலே நிற்கிறது; சபைகளிலே நான் யெகோவாவைத் துதிப்பேன்’ என்று சங்கீதக்காரன் கூறினார். (சங். 26:8, 12) உண்மைக் கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் தமது அமைப்பில் ஒரு பங்கைத் தந்திருக்கிறார். ஆகவே, தேவராஜ்ய வழிநடத்துதலின்படி தொடர்ந்து நடப்பதன் மூலமும், கடவுளுடைய சேவையில் சுறுசுறுப்பாக இயங்குவதன் மூலமும் யெகோவாவின் ஏற்பாட்டில் நமக்கிருக்கும் அந்த ஒப்பற்ற பங்கை நாம் பாதுகாத்திடலாம்.
நினைவிருக்கிறதா?
• சபையில் அனைவருக்குமே ஒரு பங்கு இருக்கிறதெனப் புரிந்துகொள்வது ஏன் நியாயமானது?
• கடவுளுடைய அமைப்பில் நமக்கிருக்கும் பங்கைப் பொக்கிஷமாய்ப் போற்றுவதை நாம் எப்படிக் காட்டுகிறோம்?
• என்ன காரணங்களால் சபையில் நமக்கிருக்கும் பங்கு வேறுபடுகிறது?
• இளைஞர்களும் முதியவர்களும் கடவுளுடைய ஏற்பாட்டில் தங்களுக்கிருக்கும் பங்கைப் பொக்கிஷமாய்ப் போற்றுவதை எவ்வாறு காட்டலாம்?
[பக்கம் 16-ன் படங்கள்]
சகோதரர்கள் சபைப் பொறுப்புகளுக்கு எவ்வாறு தகுதிபெறலாம்?
[பக்கம் 17-ன் படங்கள்]
சபையில் தங்களுக்கிருக்கும் பங்கைப் பொக்கிஷமாய்ப் போற்றுவதைச் சகோதரிகள் எவ்வாறு காட்டலாம்?