உங்களுடைய முன்னேற்றம் எல்லாருக்கும் தெரியட்டும்
“இவற்றைக் குறித்து ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிரு; இவற்றிலேயே மூழ்கியிரு; அப்போதுதான் உன்னுடைய முன்னேற்றம் எல்லாருக்கும் தெரியவரும்.”—1 தீ. 4:15.
1, 2. இளம் பருவத்தில் தீமோத்தேயு என்ன செய்தார், சுமார் 20 வயதிலே அவருடைய சேவையில் என்ன மாற்றம் ஏற்பட்டது?
இன்றைய துருக்கியில்தான் அன்றைய ரோம மாகாணமாகிய கலாத்தியா அமைந்திருந்தது. தீமோத்தேயு சிறுவனாக இருந்தபோது அங்கே வசித்துவந்தார். இயேசு இறந்த சில வருடங்களில் கிறிஸ்தவ சபைகள் பல அங்கே ஸ்தாபிக்கப்பட்டன. அந்தக் கால கட்டத்தில் இளம் தீமோத்தேயுவும் அவருடைய அம்மாவும் பாட்டியும் கிறிஸ்தவர்களாக மாறி, அங்கிருந்த ஒரு சபையில் அங்கத்தினர்களாக இருந்தார்கள். (2 தீ. 1:5; 3:14, 15) இளம் தீமோத்தேயு தனக்கு நன்கு பழக்கப்பட்ட இடத்தில் கிறிஸ்தவ சேவையைச் சந்தோஷமாகச் செய்துவந்தார். சீக்கிரத்தில், அவருடைய சேவையில் ஒரு மாற்றம் நிகழவிருந்தது.
2 அப்போஸ்தலன் பவுல் கலாத்தியாவுக்கு இரண்டாவது முறை விஜயம் செய்தபோது அந்த மாற்றம் நிகழ்ந்தது. அச்சமயம் தீமோத்தேயுவுக்குச் சுமார் 19, 20 வயது இருந்திருக்கலாம். பவுல் லீஸ்திராவுக்கு வந்தபோது, தீமோத்தேயுவைப் பற்றி லீஸ்திராவிலும் இக்கோனியாவிலும் இருந்த ‘சகோதரர்கள் உயர்வாகப் பேசினார்கள்.’ (அப். 16:2) அப்படியானால், தீமோத்தேயு அதிக முதிர்ச்சியுள்ளவராக இருந்திருக்க வேண்டும். ஆகவே, கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலால், பவுலும் மூப்பர் குழுவினரும் தங்களுடைய கைகளை தீமோத்தேயுவின் மீது வைத்து, ஒரு விசேஷ வேலைக்காக அவரை நியமித்தார்கள்.—1 தீ. 4:14; 2 தீ. 1:6.
3. என்ன எதிர்பாராத நியமிப்பு தீமோத்தேயுவுக்குக் கிடைத்தது?
3 தனக்கு இப்படியொரு நியமிப்பு கிடைக்குமென்று தீமோத்தேயு சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார். அப்போஸ்தலன் பவுலுக்கே பயணத் தோழராக நியமிக்கப்பட்டிருந்தார்! (அப். 16:3) அவர் எந்தளவு ஆச்சரியமும் ஆனந்தமும் அடைந்திருப்பார் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள்! அதுமுதல் பல வருடங்களுக்கு அவர் பவுலோடும், சில சமயங்களில் மற்றவர்களோடும் பயணம் செய்யவிருந்தார். அச்சமயங்களில், அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் கொடுத்த பல்வேறு பொறுப்புகளை நிறைவேற்றவிருந்தார். இப்படி, பவுலும் தீமோத்தேயுவும் பயண வேலையில் ஈடுபட்டதால் சகோதரர்கள் ஆன்மீக ரீதியில் மிகவும் பலமடைந்தார்கள். (அப்போஸ்தலர் 16:4, 5-ஐ வாசியுங்கள்.) எனவே, தீமோத்தேயு இப்படி ஆன்மீக முன்னேற்றம் செய்ததால் கிறிஸ்தவர்கள் பலர் அவரைப் பற்றி நன்றாக அறிந்துகொண்டார்கள். ஏறக்குறைய பத்து வருடங்கள் தீமோத்தேயுவோடு ஊழியம் செய்த பிறகு அப்போஸ்தலன் பவுல் பிலிப்பியருக்கு இவ்வாறு எழுதினார்: ‘உங்களுக்குரிய காரியங்களை அக்கறையோடு கவனிப்பதற்கு தீமோத்தேயுவைப் போன்ற மனமுள்ளவர் வேறு யாரும் என்னோடு இல்லை. . . . தீமோத்தேயுவைப் பற்றி உங்களுக்கே தெரியும், தகப்பனோடு சேர்ந்து பிள்ளை உழைப்பதுபோல் நற்செய்தியை அறிவிப்பதில் என்னோடு சேர்ந்து அவர் கடினமாக உழைத்திருக்கிறார்.’—பிலி. 2:20-22.
4. (அ) என்ன முக்கியமான பொறுப்பு தீமோத்தேயுவிடம் ஒப்படைக்கப்பட்டது? (ஆ) 1 தீமோத்தேயு 4:15-ல் உள்ள பவுலின் வார்த்தைகளை வாசிக்கையில் என்ன கேள்விகள் எழுகின்றன?
4 பிலிப்பியருக்குக் கடிதம் எழுதிய சமயத்தில், பவுல் ஒரு முக்கியமான பொறுப்பை தீமோத்தேயுவிடம் ஒப்படைத்தார்; மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் நியமிக்கிற பொறுப்பே அது. (1 தீ. 3:1; 5:22) தீமோத்தேயு நம்பிக்கைக்குப் பாத்திரமான கிறிஸ்தவக் கண்காணியாய் ஆகியிருந்தார் என்பதை இது காட்டுகிறது, அல்லவா? என்றாலும், ‘அவருடைய முன்னேற்றத்தை எல்லாருக்கும் தெரியச்செய்யும்படி’ தீமோத்தேயுவை பவுல் அதே கடிதத்தில் அறிவுறுத்தினார். (1 தீ. 4:15) ஆனால், தீமோத்தேயு ஏற்கெனவே அதிக முதிர்ச்சியுள்ளவராக நடந்திருந்தார், அல்லவா? அப்படியானால், பவுல் எந்த அர்த்தத்தில் அவ்வாறு சொன்னார், அதிலிருந்து நாம் எப்படிப் பயன் அடையலாம்?
ஆன்மீகப் பண்புகளை வெளிக்காட்டுங்கள்
5, 6. எபேசு சபையின் ஆன்மீகத் தூய்மைக்கு என்ன அச்சுறுத்தல் ஏற்பட்டது, சபையைப் பாதுகாக்க தீமோத்தேயு என்ன செய்ய வேண்டியிருந்தது?
5 இப்போது, 1 தீமோத்தேயு 4:15-ன் சூழமைவைச் சிந்திப்போம். (1 தீமோத்தேயு 4:11-16-ஐ வாசியுங்கள்.) பவுல் இதை எழுதுவதற்கு முன்பு, தீமோத்தேயுவை எபேசுவிலேயே இருக்கும்படி சொல்லிவிட்டு, மக்கெதோனியாவுக்குச் சென்றிருந்தார். ஆனால், அவர் ஏன் தீமோத்தேயுவை அங்கேயே இருக்கச் சொன்னார்? அங்கிருந்த சிலர் பொய்ப் போதனைகளைக் கற்பித்துச் சபைக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தி வந்தார்கள். அந்தச் சபையின் ஆன்மீகத் தூய்மையைக் காக்கும்படி தீமோத்தேயுவுக்கு பவுல் சொன்னார். அதற்கு தீமோத்தேயு என்ன செய்ய வேண்டியிருந்தது? ஒரு காரியம், மற்றவர்களுக்கு ஒரு நல்ல முன்மாதிரியாகத் திகழ வேண்டியிருந்தது.
6 “பேச்சிலும் நடத்தையிலும் அன்பிலும் விசுவாசத்திலும் ஒழுக்கத்திலும் உண்மையுள்ளவர்களுக்கு நீ முன்மாதிரியாக விளங்கு” என்று தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதினார். “இவற்றைக் குறித்து ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிரு; இவற்றிலேயே மூழ்கியிரு; அப்போதுதான் உன்னுடைய முன்னேற்றம் எல்லாருக்கும் தெரியவரும்” என்றும் அவர் எழுதினார். (1 தீ. 4:12, 15) முக்கியப் பொறுப்புகளை வகிப்பதன் மூலம் தீமோத்தேயு முன்னேற்றத்தைக் காட்ட வேண்டுமென்று பவுல் அர்த்தப்படுத்தவில்லை; மாறாக, ஆன்மீகப் பண்புகளை வளர்த்துக்கொள்வதன் மூலம் முன்னேற்றத்தைக் காட்ட வேண்டுமென்றே அர்த்தப்படுத்தினார். இப்படிப்பட்ட முன்னேற்றத்தைத்தான் கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் வெளிக்காட்ட வேண்டும்.
7. சபையிலுள்ள எல்லாரும் என்ன செய்ய வேண்டும்?
7 தீமோத்தேயுவின் காலத்தில் இருந்ததைப் போலவே இன்று சபையில் சகோதரர்களுக்குப் பல்வேறு பொறுப்புகள் இருக்கின்றன. சில சகோதரர்கள் மூப்பர்களாகவோ உதவி ஊழியர்களாகவோ சேவை செய்கிறார்கள். வேறு சில சகோதரர்கள் பயனியர்களாகச் சேவை செய்கிறார்கள். இன்னும் சிலர் பயண வேலையிலோ பெத்தேல் சேவையிலோ மிஷனரி சேவையிலோ இருக்கிறார்கள். மூப்பர்கள் கற்பிக்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள்; உதாரணமாக, மாநாடுகளில் பேச்சு கொடுக்கிறார்கள். என்றாலும், ஆண்கள் மட்டுமல்ல, பெண்கள், பிள்ளைகள் எனக் கிறிஸ்தவர்கள் எல்லாருமே ஆன்மீக முன்னேற்றம் செய்ய வேண்டும். (மத். 5:16) தீமோத்தேயுவைப் போலவே இன்று விசேஷ பொறுப்புகளை வகிப்பவர்களும்கூட ஆன்மீகப் பண்புகளை வெளிக்காட்ட வேண்டும்.
முன்மாதிரி—பேச்சில்
8. நம்முடைய பேச்சு நம் வணக்கத்தின் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது?
8 தீமோத்தேயு முன்மாதிரியாகத் திகழ வேண்டியிருந்த ஓர் அம்சம், அவருடைய பேச்சு. இந்த விஷயத்தில் நாம் எப்படி முன்னேற்றத்தை வெளிக்காட்டலாம்? நம்முடைய பேச்சு நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதைக் காட்டுகிறது. “இருதயத்தில் நிறைந்திருப்பதையே வாய் பேசுகிறது” என இயேசு சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. (மத். 12:34) நம்முடைய பேச்சு நம் வணக்கத்தின்மீது ஏற்படுத்துகிற தாக்கத்தைப் பற்றி இயேசுவின் ஒன்றுவிட்ட தம்பி யாக்கோபும் குறிப்பிட்டார்; “தகுந்த முறையில் கடவுளை வணங்குவதாக நினைத்துக்கொண்டிருக்கிற ஒருவன் தன் நாவை அடக்காமல் தன் இருதயத்தை ஏமாற்றிக்கொண்டிருந்தால், அவனுடைய வணக்க முறை வீணானதாக இருக்கும்” என்று அவர் எழுதினார்.—யாக். 1:26.
9. நம்முடைய பேச்சில் நாம் எவ்வாறு முன்மாதிரியாக இருக்க வேண்டும்?
9 ஆன்மீக ரீதியில் நாம் எந்தளவு முன்னேறியிருக்கிறோம் என்பதை நம் பேச்சு ஓரளவு வெளிப்படுத்தும். எனவே, முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவர்கள் கண்ணியமற்ற, குறைகாண்கிற, புண்படுத்துகிற விதத்தில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்; அதே சமயம் பலப்படுத்துகிற, ஆறுதலளிக்கிற, தேற்றுகிற, ஊக்கமூட்டுகிற விதத்தில் பேசுவதற்குக் கடினமாய் முயல வேண்டும். (நீதி. 12:18; எபே. 4:29; 1 தீ. 6:3-5, 20) கடவுளுடைய உயர்ந்த நெறிமுறைகளைப் பற்றியும், அவற்றின்படி நாம் வாழ விரும்புவதற்கான காரணத்தைப் பற்றியும் தைரியமாய்ப் பேசுவது நம்முடைய தேவபக்தியை வெளிக்காட்டும். (ரோ. 1:15, 16) பேச்சுத் திறனை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதை நல்மனமுள்ளவர்கள் நிச்சயமாகக் கவனிப்பார்கள்; அவர்கள் ஒருவேளை நம் முன்மாதிரியைப் பின்பற்றுவார்கள்.—பிலி. 4:8, 9.
முன்மாதிரி—நடத்தையில், ஒழுக்கத்தில்
10. நம் ஆன்மீக முன்னேற்றத்திற்கு வெளிவேஷமற்ற விசுவாசம் ஏன் அத்தியாவசியம்?
10 ஒரு கிறிஸ்தவர் பேச்சில் மட்டுமே நல்ல முன்மாதிரியாக இருந்தால் போதாது. நடத்தையிலும் முன்மாதிரியாக இருக்க வேண்டும். அவருடைய பேச்சு ஒரு விதமாகவும் செயல் ஒரு விதமாகவும் இருந்தால், அவர் வெளிவேஷக்காரராகவே இருப்பார். பரிசேயர்களுடைய வெளிவேஷத்தையும் அதனால் ஏற்பட்ட மோசமான விளைவுகளையும் பவுல் நன்றாகவே அறிந்திருந்தார். எனவே, கபடதாரிகளையும் வேடதாரிகளையும் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி தீமோத்தேயுவை அவர் மீண்டும் மீண்டும் எச்சரித்தார். (1 தீ. 1:5; 4:1, 2) ஆனால், தீமோத்தேயு வெளிவேஷக்காரராய் இருக்கவில்லை. அவருக்கு பவுல் இரண்டாவது முறையாகக் கடிதம் எழுதியபோது, “வெளிவேஷமற்ற உன் விசுவாசம் என் ஞாபகத்திற்கு வருகிறது” எனக் குறிப்பிட்டார். (2 தீ. 1:5) என்றாலும், தீமோத்தேயு தான் ஓர் உண்மையான கிறிஸ்தவர் என்பதை வெளிக்காட்ட வேண்டியிருந்தது. நடத்தையில் அவர் முன்மாதிரியாகத் திகழ வேண்டியிருந்தது.
11. செல்வத்தைக் குறித்து தீமோத்தேயுவுக்கு பவுல் என்ன எழுதினார்?
11 தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதிய இரண்டு கடிதங்களிலும் நடத்தை சம்பந்தமாகப் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். உதாரணத்திற்கு, செல்வத்தை நாடித் தேட வேண்டாமெனக் கூறினார். “பண ஆசை எல்லா விதமான தீமைக்கும் வேராக இருக்கிறது; சிலர் இந்த ஆசையை வளர்த்துக்கொண்டு, விசுவாசத்தைவிட்டு விலகி, பலவித வேதனைகளால் தங்களையே ஊடுருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்” என்று அவர் எழுதினார். (1 தீ. 6:10) பண ஆசையுள்ள கிறிஸ்தவர்கள் ஆன்மீக ரீதியில் தாங்கள் பலவீனமாக இருப்பதைக் காட்டுகிறார்கள். ஆனால், “உண்ண உணவும் உடுத்த உடையும் இருக்க இடமும்” இருந்தாலே போதுமென்று வாழ்கிற கிறிஸ்தவர்கள் ஆன்மீக முன்னேற்றத்தைக் காட்டுகிறார்கள்.—1 தீ. 6:6-8; பிலி. 4:11-13.
12. அன்றாட வாழ்க்கையில் நம் முன்னேற்றம் எல்லாருக்கும் எப்படித் தெரியவரும்?
12 கிறிஸ்தவப் பெண்கள், ‘நேர்த்தியான உடையினாலும் அடக்கத்தினாலும் தெளிந்த புத்தியினாலும் தங்களை அலங்கரித்துக்கொள்வது’ மிக முக்கியம் என்பதை தீமோத்தேயுவுக்கு பவுல் தெரிவித்தார். (1 தீ. 2:9) ஆடை அலங்கார விஷயத்திலும், வாழ்க்கையின் பிற அம்சங்களிலும் அடக்கத்தோடும் தெளிந்த புத்தியோடும் இருக்கிற பெண்கள் மிகச் சிறந்த முன்மாதிரி வைக்கிறார்கள். (1 தீ. 3:11) இந்த நியதி கிறிஸ்தவ ஆண்களுக்கும் பொருந்துகிறது. கண்காணிகள், ‘பழக்கவழக்கங்களில் மிதமிஞ்சிப்போகாதவர்களாகவும், தெளிந்த புத்தியுள்ளவர்களாகவும், ஒழுங்குள்ளவர்களாகவும்’ இருக்க வேண்டுமென்று பவுல் அறிவுறுத்தினார். (1 தீ. 3:2) அன்றாட வாழ்க்கையில் இந்தப் பண்புகளைக் காட்டும்போது, நம் முன்னேற்றம் எல்லாருக்கும் தெரியவரும்.
13. தீமோத்தேயுவைப் போல், ஒழுக்கத்தில் நாம் எப்படி முன்மாதிரிகளாகத் திகழலாம்?
13 அடுத்து, தீமோத்தேயு ஒழுக்க விஷயத்தில் முன்மாதிரியாகத் திகழ வேண்டுமென்று பவுல் அறிவுறுத்தினார். ‘ஒழுக்கம்’ என பவுல் சொன்னபோது, பாலியல் காரியங்களையே அர்த்தப்படுத்தினார். பெண்களோடு பழகும் விஷயத்தில் மற்றவர்களுடைய பழிச்சொல்லுக்கு ஆளாகாமல் கவனமாக நடந்துகொள்ளும்படி அவர் சொன்னார். “வயதான பெண்களைத் தாய்கள் போலவும், இளம் பெண்களைத் தூய உள்ளத்தோடு தங்கைகள் போலவும்” நடத்தும்படி கூறினார். (1 தீ. 4:12; 5:2) ஒரு கிறிஸ்தவர் ஒழுக்கங்கெட்ட செயல்களில் ரகசியமாக ஈடுபட்டாலும் அது கடவுளுக்கு வெட்டவெளிச்சமாகத் தெரியும்; காலப்போக்கில் மற்றவர்களுக்கும் தெரியவரும். அதேபோல், ஒரு கிறிஸ்தவருடைய நற்செயல்களும் எல்லாருக்கும் தெரியவரும். (1 தீ. 5:24, 25) ஆகையால், சபையிலுள்ள எல்லாருமே நடத்தையிலும் ஒழுக்கத்திலும் முன்னேற்றத்தை வெளிக்காட்ட வேண்டியது அவசியம்.
அன்பு, விசுவாசம்—அவசியம்
14. ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவதன் அவசியத்தைக் கடவுளுடைய வார்த்தை எவ்வாறு வலியுறுத்துகிறது?
14 உண்மைக் கிறிஸ்தவர்களின் முக்கியப் பண்பு அன்பே. இதைத்தான் இயேசு தம் சீடர்களிடம் கூறினார்: ‘நீங்கள் ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்டினால், நீங்கள் என்னுடைய சீடர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.’ (யோவா. 13:35) நாம் எப்படி அன்பு காட்டலாம்? ‘அன்பினால் ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ளும்படியும்,’ ‘ஒருவருக்கொருவர் கருணையும் கரிசனையும் காட்டும்படியும், ஒருவரையொருவர் தாராளமாக மன்னிக்கும்படியும்,’ ஒருவரையொருவர் உபசரிக்கும்படியும் கடவுளுடைய வார்த்தை நம்மை ஊக்கப்படுத்துகிறது. (எபே. 4:2, 32; எபி. 13:1, 2) “ஒருவருக்கொருவர் சகோதர அன்பையும் கனிவான பாசத்தையும் காட்டுங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார்.—ரோ. 12:10.
15. கிறிஸ்தவர்கள் எல்லாரும், முக்கியமாகக் கண்காணிகள், அன்பு காட்டுவது ஏன் அவசியம்?
15 சக கிறிஸ்தவர்களிடம் தீமோத்தேயு அன்பில்லாமல் கடுகடுப்பாக நடந்திருந்தால், ஒரு போதகராகவும் கண்காணியாகவும் அவர் செய்துவந்த நற்செயல்களெல்லாம் வீணாய்ப் போயிருக்கும். (1 கொரிந்தியர் 13:1-3-ஐ வாசியுங்கள்.) மறுபட்சத்தில், சகோதரர்களிடம் தீமோத்தேயு காட்டிய உண்மையான பாசமும், உபசரிப்பும், அவர்களுக்காகச் செய்த நற்செயல்களும் நிச்சயமாகவே அவருடைய ஆன்மீக முன்னேற்றத்திற்கு அத்தாட்சி அளித்தன. அதனால்தான், தீமோத்தேயு அன்பு காட்டுவதில் முன்மாதிரியாகத் திகழ வேண்டுமென்று பவுல் தனது கடிதத்தில் சிறப்பித்துக் காட்டியது பொருத்தமாக இருந்தது.
16. தீமோத்தேயு விசுவாசத்தில் ஏன் உறுதியாக இருக்க வேண்டியிருந்தது?
16 தீமோத்தேயு எபேசுவில் தங்கியிருந்தபோது அவருடைய விசுவாசத்திற்குச் சோதனை வந்தது. சிலர் பொய்க் கோட்பாடுகளைச் சபையில் கற்பித்துவந்தார்கள். வேறு சிலர் ‘கட்டுக்கதைகளையும்,’ சபையாரின் விசுவாசத்திற்கு எவ்விதத்திலும் பிரயோஜனமில்லாத வீண் கருத்துகளையும் பரப்பிவந்தார்கள். (1 தீமோத்தேயு 1:3, 4-ஐ வாசியுங்கள்.) அப்படிப்பட்டவர்களை, ‘தலைக்கனம் பிடித்தவர்கள், எதையும் புரிந்துகொள்ளாதவர்கள், விவாதங்களிலும் சொற்போர்களிலும் வெறித்தனமாய் ஈடுபடுகிறவர்கள்’ என்றெல்லாம் பவுல் விவரித்தார். (1 தீ. 6:3, 4) சபைக்குள் ஊடுருவிய தீய கருத்துகள் தன் மனதைக் கறைபடுத்த தீமோத்தேயு இடமளித்தாரா? இல்லவே இல்லை! ஏனென்றால், ‘விசுவாசத்திற்காகச் சிறந்த போராட்டத்தைப் போராடு’ என்றும், ‘பரிசுத்தமானவற்றுக்கு விரோதமான வீண் பேச்சுகளுக்கும், “அறிவு” என்று தவறாக அழைக்கப்படுகிற முரண்பட்ட கருத்துகளுக்கும் விலகியிரு’ என்றும் பவுல் அவருக்கு அறிவுரை கூறியிருந்தார். (1 தீ. 6:12, 20, 21) பவுலின் அறிவுரைப்படி தீமோத்தேயு நடந்திருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.—1 கொ. 10:12.
17. இன்று நம்முடைய விசுவாசத்திற்கு எவ்வாறு சோதனை வரலாம்?
17 “பிற்காலத்தில் சிலர் பேய்களிடமிருந்து வருகிற வஞ்சனையான செய்திகளுக்கும் போதனைகளுக்கும் கவனம் செலுத்தி, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்” என்று தீமோத்தேயுவுக்கு பவுல் சொல்லியிருந்தார். (1 தீ. 4:1) இன்றும்கூட, சபையில் பொறுப்பு வகிக்கிற சகோதரர்கள் உட்பட எல்லாருமே தீமோத்தேயுவைப் போல் விசுவாசத்தில் பலமாக, திடமாக இருக்க வேண்டும். எனவே, விசுவாசதுரோகத்தை உறுதியாக எதிர்த்துநிற்பதன் மூலமும், அதை ஒதுக்கித்தள்ள உடனடியாகச் செயல்படுவதன் மூலமும் நம்முடைய முன்னேற்றத்தை வெளிக்காட்டலாம், விசுவாசத்தில் முன்மாதிரியாகத் திகழலாம்.
முன்னேற்றத்தை வெளிக்காட்ட கடினமாக முயலுங்கள்
18, 19. (அ) உங்களுடைய ஆன்மீக முன்னேற்றம் எவ்வாறு எல்லாருக்கும் தெரியவரும்? (ஆ) அடுத்த கட்டுரையில் எதைச் சிந்திப்போம்?
18 ஓர் உண்மைக் கிறிஸ்தவருடைய தோற்றமோ, திறமைகளோ, ஸ்தானமோ அவருடைய ஆன்மீக முன்னேற்றத்தை வெளிக்காட்டுவதில்லை. சபையில் அவர் வெகு காலம் சேவை செய்திருப்பதும் அதை வெளிக்காட்டுவதில்லை. சிந்தனையிலும் பேச்சிலும் நடத்தையிலும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதே நம்முடைய உண்மையான ஆன்மீக முன்னேற்றத்தை வெளிக்காட்டும். (ரோ. 16:19) உறுதியான விசுவாசத்தை வளர்க்கும்படியும், ஒருவருக்கொருவர் அன்பு காட்டும்படியும் பைபிள் சொல்கிற கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். நம்முடைய முன்னேற்றம் எல்லாருக்கும் தெரியவரும்படி, தீமோத்தேயுவுக்கு பவுல் கூறிய வார்த்தைகளைக் குறித்து ஆழ்ந்து சிந்தித்து, அவற்றிலேயே மூழ்கியிருப்போமாக!
19 நம்முடைய ஆன்மீக முன்னேற்றத்தை வெளிக்காட்டுகிற மற்றொரு பண்பு சந்தோஷம்; இது கடவுளுடைய சக்தியினால் பிறப்பிக்கப்படுகிற குணங்களில் ஒன்றாகும். (கலா. 5:22, 23) தொல்லை நிறைந்த காலங்களிலும் சந்தோஷத்தைத் தொலைத்துவிடாமல் இருப்பது எப்படியென்று அடுத்த கட்டுரையில் சிந்திப்போம்.
உங்கள் பதில்?
• நம்முடைய பேச்சிலிருந்து மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன தெரிந்துகொள்வார்கள்?
• நடத்தையிலும் ஒழுக்கத்திலும் நம்முடைய ஆன்மீக முன்னேற்றத்தை எப்படி வெளிக்காட்டலாம்?
• கிறிஸ்தவர்கள் ஏன் அன்பிலும் விசுவாசத்திலும் முன்மாதிரியாகத் திகழ வேண்டும்?
[பக்கம் 11-ன் படம்]
இளம் தீமோத்தேயு அதிக முதிர்ச்சியைக் காட்டினார்
[பக்கம் 13-ன் படங்கள்]
உங்களுடைய ஆன்மீக முன்னேற்றம் மற்றவர்களுக்குத் தெரிகிறதா?